புதன், 18 ஆகஸ்ட், 2010

தேன்கசியும் வாழ்க்கை....

நான் மனந்தளரவில்லை, நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கைதான்... என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள்; அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும், எந்தத் துயரம் நேர்ந்தாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் - அதுதான் வாழ்க்கை; அதுதான் மகத்தான சவால்.
            - "மரணவீட்டின் குறிப்புகள்" நூலில் தஸ்தாயெவ்ஸ்கி

இரா துவங்கி நான்கு மணிநேரங்கழித்து மின்சார ரயிலில் இருந்து இறங்கி என் புறாக்கூண்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்; வியர்வையில் சொதசொதத்து நைந்துபோயிருக்கும் என் உள்ளாடைகளுக்கும் எனக்கும் ஆறு வித்தியாசங்களைப் பட்டியல் போட்ட படி... காலையில் செல்லும்போது பாட்டுப்பாடிப் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமி எதிர்த்த தேநீர்க்கடையில் வாங்கிய தேநீரில் நனைக்கப்பட்ட ஒரு பன்னைத் தனக்கும் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த தன் தம்பிப்பாப்பாவுக்கும், காலருகே வாலாட்டிக் கொண்டிருந்த அந்தத் தெருநாய்க்கும் பங்குவைத்தபடி . எந்த இழையில் அறுந்துவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது அவளது வாழ்வின் மீதான அன்பும் நம்பிக்கையும்?

அதேபோல இன்னுமொரு இராப்போது. வெளியே மெலிதாய்த் தூறல்கள்.கும்மென்று கிளம்பிய மண்வாசனை பசுவின் மடிமுட்டிப் பாலருந்தியபின் துள்ளிவரும் கன்றின் கழுத்தைக்கட்டி முகத்தில் முத்தும்போது நாசிதுளைக்கும் பால்வாசனையை நினைவில் எழுப்பியபடி... உதிர்ந்துகொண்டிருக்கும் முன்மண்டை முடிகள் கரைந்துகொண்டிருக்கும் இளமையைக் கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் காட்டிக் கொண்டே இருக்கும் வலிதவிர்க்க மாதமிருமுறை தவறாமல் செல்லும் 'அவள்' வீடு. 'எல்லாம்' முடித்து ஆயாசமாய்த் தோள்சாய்ந்துப் பின் எழுகையில் பர்ஸ் பிரித்துக் கொடுக்க, வழக்கம்போல அவற்றில் சில தாள்பிரித்து ஒரு உறையிலிட்டு "மறந்துடாம நீயே அனுப்பிருய்யா"... என்றோ ஒருமுறை 'உதவி தேவை'யை எழுத்துக்கூட்டிப் பார்த்து இன்னும் அனுப்பப்படக் காத்திருக்கும் எங்கோ இருக்கும் ஏழைச் சிறுவனின் கல்விக்கட்டணம். எது 'அவளை'யும் அந்தச் சிறுவனையும் இணைத்த பிணைப்பு?

மற்றுமோர் மதியவேளை. எச்சமாய் இருக்க பிரியப்படாமல் இருந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு அருகிலிருந்த பூங்காவில் மரங்களுக்குத் துணையாய்ப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தபோது ... 'எனக்கு ஏதாச்சும் போடுப்பா'... தண்ணீர் குடித்தாவது சாந்தப்படுத்தலாம் என்று எழுகையில் "இந்தாப்பா தம்பி! சாப்டுட்டு போ! மறுக்கா வாரப்ப துட்டு குடு" ரோட்டுக்கடை மீனாக்காவின் குரல்...
எது அவளது கைச்சோற்றை என் வயிறுவரை நீட்டியது?

செவிகள் மட்டும்தான் இசை உணருமா என்ன? வயிற்றுக்கும் கேட்கும் உணவின் சங்கீதம்!

உலகெங்கிலும் மௌனமாய் வழிந்துகொண்டிருக்கிறது அன்பின் இசை!

'செவியுள்ளவன் கேட்கக் கடவது!' என்று புன்னகைக்கிறார் மீட்பர்!

காதுகளைக் கழற்றிவீசிவிட்டு, கைகளில் ஆயுதங்களும், கண்களில் கயமையும் சுமந்து திரியும் மனிதர்களும், கொஞ்சம் அன்புக்கும், எஞ்சும் மனிதத்துக்கும் ஏங்கும் ஜீவன்களுக்காய் அணைத்துக்கொள்ள கரம் விரித்துக் காத்திருக்கும் புனிதர்களும் கலந்துதான் இருக்கிறார்கள் உலகத்தில்!

நடக்கும் போராட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்... நம்மையும், நம் கை சார்ந்திருக்கும் மனைவி, மக்களையும் பசிதீர்த்து நாளைய விடியலுக்காய்ப் பத்திரப்படுத்த...

இடையில் எதிர்ப்படுகின்றன மோதி அறையப்படும் கதவுகள்; முகத்தில் உமிழப்படும் எச்சில்கள்; ஏளனமாய் சுழிக்கப்படும் சில உதடுகள்; நடுமுதுகில் பாய்ச்சப்படும் சில துரோக அரிவாள்கள்; கொப்பளிக்கும் குருதியின் சூடு பட்டுவிடாமல் சற்றே விலகிச் செல்லும் சில உறவுகள்;  வாசல்காட்டி நீண்டு நிற்கும் சில கரங்கள்; 'அவனவனுக்கு ஆயிரம் வேல! போவியா.." சில அலட்சியங்கள்... இன்னும்.. இன்னும்...

இவற்றோடுகூடவே... இதமாய் மிதந்துவந்து பின்னங்கழுத்தின் முடிகோதும் சில புன்னகைகளும்... "நல்லதா நடக்கும்பா!" தோள்தடவி சுகமளிக்கும் சில விரல்களும்.... "ஏங்க எப்பவுமே பேயறஞ்ச மாதிரியே இருக்கீங்க?" முந்தானை எடுத்து முகம்துடைத்து தம்வலி மறைத்து நம்வலி சுமக்கும் மனைவிமார்களின் மென்மைகளும்...

கருணையின் கனம் தாங்க இயலாமல் யாருக்கேனும் பகிர்ந்தளிக்க எதிர்பார்த்திருக்கும் எத்தனையோ மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

நாம் செய்யவேண்டியதெல்லாம் நம்மிடம் இருந்து எடுத்துக் கொடுக்க சிறிது அன்பு.... கொஞ்சம் ஆறுதல்கள்... இன்னும் மிச்சமிருக்கிறது எதிர்காலம் என்ற நம்பிக்கைகள்... ஏதிலா மானுடர் நமக்குக் கீழேயும் இருந்து எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

"எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது"


பூக்களும்,புன்னகையும் நமக்கு மட்டுமல்ல; யாவருக்கும்தான்! துயரமும், கண்ணீரும் சுமப்பது எல்லாத் தோள்களுந்தான்!

நாளையும் விடியும்... இதே பொழுதுகள் இன்னுமொருமுறை சுழன்றுவரும்... பெறுவதும் தருவதுமாய் மாறிமாறி வர்ணம் காட்டும் காலமெனும் கண்ணாடி...என்றும் வற்றிவிடாத மனிதம் இன்று மட்டுமென்ன குறைந்தா போய்விடப் போகிறது?

நமக்கென்று இருக்கும் மனிதர்களை நாடி நம் கால்களின் பயணம் நீண்டுகொண்டே இருக்கும்!

எங்கோ மெலிதாய் இசைத்துச் செல்கிறான் ஒரு தெருப்பாடகன் 'எமிலி டிக்கின்ஸனின்' வரிகளை...

If I can stop one heart from breaking
I shall not live in vain

If I can ease one life the aching
               or cool one pain
               or help one fainting Robin
               undo his nest again
I shall not live in vain.

                                                ஒரு இதயம் உடையாமல் நிறுத்த முடிந்தால்
                                                நான் வாழ்வது வீணல்ல
                                               ஒரு உயிரின் தவிப்பையோ
                                               ஒரு வலியையோ குறைக்க முடிந்தால்
                                               நான் வாழ்வது வீணல்ல
                                               ஏன், சோர்ந்துவிழும் ராபின் பறவையை
                                              கூட்டுக்கு மீட்க உதவினாலே
                                               நான் வாழ்வது வீணல்ல.

12 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

வருடங்களுக்குமுன் நான் இந்தபார்வையின் நேர்கோணத்தில் நானிருந்தேன்.. ஒற்றை நம்பிக்கைகொண்டு அப்போது தேர்ந்த பாதை என்னை வதைத்தபோது, சாலையோர வாழக்கை தேர்வர்களும், தினக்கூலிகளும்., ஈழ நிகழ்வுகளும் வாழ்வின் இன்னொரு திசைக்கு நகர உதவியது..

நான் யார் என்ற புரிதல்தான் வாழ்வை நகர்த்தும்..

சாய தோள் தேடாதீர்கள் .. சுயமாய் நில்லுங்கள் .. முடிந்தால் உங்கள் தோளைக் கொடுங்கள்..

நான் நேசிக்கும் எழுத்து.. வணங்குகிறேன் தம்பி ...

Prapa சொன்னது…

இந்த பச்சை புள்ளையின் பதிவுகளை பார்க்காமல் இருந்து , இந்த பிஞ்சு நெஞ்சை உடைசிடாதீங்க,,, வாங்க வந்து பாருங்க... வந்தால் சொக்கா, பிக்கா எல்லாம் தருவான்.. ஹீ ஹீ..

Anbu சொன்னது…

வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கைதான்...

நாம் வாழ்வது வீணல்ல....

நேசமித்ரன் சொன்னது…

ம்ம்ம்!

vasu balaji சொன்னது…

வணக்கம் சார்.:). அருமை எமிலியின் வரிகளோடு.

Bibiliobibuli சொன்னது…

இந்தப் பதிவு சார்ந்ததல்ல இந்தப் பதில். நீங்கள் கேட்ட, நான் ஏன் இன்னமும் சொந்தமாக தளம் வைத்து எழுதவில்லை, என்ற கேள்விக்குப் பதில். நீங்கள் குறிப்பிட்டது போல் "வாழ்க்கைச்சூழல்" என்றால், எனக்கு ஆர்வம், அக்கறை, தேவை இதில் எது ஒன்று இருந்திருந்தாலும் அந்த வாழ்க்கைச் சூழலை ஒரு கரை கண்டிருப்பேன். In this case, it is "ME". I am not motivated to do it. ஆனால், அந்த motivation உங்களிடமிருந்து எனக்கு வருவது சந்தோசம். முயற்சிசெய்கிறேன். நான் எந்த முயற்சியும் இன்றி இருந்துவிட்டு வாழ்க்கைச் சூழலை பழி சொல்ல எனக்கு இஷ்டமில்லை. :)

தவிர, என் வாசிப்பு பழக்கம் என்பது என்னை, என் சிந்தனையை செப்பனிட, தன்னம்பிக்கையை வளர்க்க என்று ஆரம்பித்தது. நீங்கள் சொல்லும் போது தான் புரிகிறது என் வாசிப்பின் பிரதிபலிப்பு எழுத்துமூலம் மற்றவர்களையும் சென்றடைகிறது என்பது. Thanks brother.

//நான் யார் என்ற புரிதல்தான் வாழ்வை நகர்த்தும்..// செந்தில் சொன்ன இந்த வரிகள் தான் இந்த பதிவிற்குறிய என் பதில்.

parthasarathy சொன்னது…

நண்பா
நீ கிட்டத்தட்ட ஒரு ஆசிரியன் , எனக்கு தூக்கம் வந்துவிட்டது உன் வரிகளை படித்ததில்
அவ்வளவு நிம்மதி தருகிறது , ஒரு ரூபாய் ரேசன் அரிசி போல
நீ கிட்டத்தட்ட ஒரு நடிகை , எனக்கு மோகம் வந்துவிட்டது உன் வரிகளை வாசித்ததில்
அவ்வளவு இன்பம் தருகிறது , நித்யானந்தா வாழ்விழும, ஒரு அர்த்தம் உள்ளது போல
நீ கிட்டத்தட்ட ஒரு வெங்காயம் , எனக்கு கண்ணீர் வருகிறது உன் வரிகளை வாசித்ததில்
அவ்வளவு சோகம் தருகிறது , உரிய உரிய வரும் டிவி சீரியல் போல
நீ கிட்டத்தட்ட ஒரு கவர்மென்ட் , எனக்கு நம்பிக்கை வருகிறது உன் வரிகளை சுவாசித்ததில்
அவ்வளவு மெத்தனம் வருகிறது , வெட்டியாய் திரிவதற்கு அரசு வழங்கும் தினம் 100 ரூபாய் போல

கண்ணதாசன் என்ற பைத்தியக்காரன் எழுதினான் " உனக்கும் கீழே உள்ளவர் கோடி , நினைத்து நீயும் நிம்மதி தேடு என்று " எப்படி மேலே வருவது என்று சொல்பவன் புரட்சிக்காரன் , எப்படி நிம்மதியாக இருப்பப்பது என்பவன் சோம்பேறி

நீங்கள் கண்ணதாசனின் வாரிசோ ?

நீங்கள் பார்த்த அனைவரும் (பிச்சைக்காரி, மீனாக்கா) முன்னேற முயல்கிறார்கள் , நீங்கள் எழுதியதை படித்தால் அவர்கள் கூட நிம்மதி அடைந்து அப்படியே வாழ்வார்கள் ( அர்த்தத்துடன் )

மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் தஸ்தாயெவ்ஸ்கி,'எமிலி டிக்கின்ஸனின் என சிபாரிசுக்கு ஆள் சேர்க்கிறீர்கள் ,எவ்வளவோ நல்லா தத்துவ தமிழர்களும் இந்தியர்களும் இருக்க , அவர்களை வாய்தாவிர்க்கு அழைப்பது உங்களை தனிப்படுத்தவில்லை ! எழுத்தாளர் என்றால் சில ஆங்கில அல்லது வெளி நாட்டவர்களின் புத்தகத்தை தொட்டு பார்த்தே ஆகா வேண்டுமோ ?

இப்பிடியே வாழ்ந்துவிட்டுப்போ என்று சொல்வதற்கு , எடுத்துக்காட்டு அதுவும் கவிதை நடையில் !

இதை நான் உங்களிடம் எதிர் பார்க்கவில்லை

பெயரில்லா சொன்னது…

"ஏங்க எப்பவுமே பேயறஞ்ச மாதிரியே இருக்கீங்க?" முந்தானை எடுத்து முகம்துடைத்து தம்வலி மறைத்து நம்வலி சுமக்கும் மனைவிமார்களின் மென்மைகளும்...

niloufer சொன்னது…

"ஏங்க எப்பவுமே பேயறஞ்ச மாதிரியே இருக்கீங்க?" முந்தானை எடுத்து முகம்துடைத்து தம்வலி மறைத்து நம்வலி சுமக்கும் மனைவிமார்களின் மென்மைகளும்....aanmaarthamaana unarvugalin velippaadu pakkuvappatta vaarthaigal thangal ezhuthin moolam piradhibalikkinradhu paaraatukkal.

vasan சொன்னது…

வாழ்வ‌து ஒருமுறை, வாழ்வோம் எல்லோருமாய்.

நிலாமதி சொன்னது…

பிறருக்காக வாழ்ந்து பாருங்கள் அதில் ஒரு அர்த்தம் தெரியும்.

ஜோதிஜி சொன்னது…

மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் தஸ்தாயெவ்ஸ்கி,'எமிலி டிக்கின்ஸனின் என சிபாரிசுக்கு ஆள் சேர்க்கிறீர்கள் ,எவ்வளவோ நல்லா தத்துவ தமிழர்களும் இந்தியர்களும் இருக்க , அவர்களை வாய்தாவிர்க்கு அழைப்பது உங்களை தனிப்படுத்தவில்லை ! எழுத்தாளர் என்றால் சில ஆங்கில அல்லது வெளி நாட்டவர்களின் புத்தகத்தை தொட்டு பார்த்தே ஆகா வேண்டுமோ ?

என்னுடைய நீண்ட நாள் ஆதங்கத்தை பார்த்தசாரதி தெளிவா சொல்லியிருக்கிறார்.

நல்ல பதிவு ஒன்னு ரொம்பநாளைக்குப் பிறகு உருப்படியா எழுதியாச்சு. அடுத்து ராக்கோழி கணக்கா கூகுள் பஸ்ஸில் இருந்துட்டு அப்புறம் ஒரு குத்தாட்ட பதிவா?

Related Posts with Thumbnails