செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

கடவுளும் நானும்...."நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதுமென் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
கோகழி ஆண்ட குறுமனிதன் தாள் வாழ்க,
வாழ்க நமச்சிவாய எனும் நாமம் வாழ்கவே!"

எங்கோ கொஞ்சம் தொலைவிலிருந்து தேவாரப் பண்ணிசையும் அதைத்தொடர்ந்த காண்டாமணியோசையும் என் செவிகளை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. ஏதோ ஓர் உணர்வில் நெஞ்சம் ஒரு பனிக்கட்டியாய் உருகிக் கொண்டிருக்கின்றது.

இறை என்பது மனிதர்க்கு எவ்வளவு பெரிய பற்றுகோல்! சுற்றிலும் இருக்கும் மனிதர்கள் மனம் மட்டும் தூரமாய்ப் போயிருக்க, வாழ்வின் பிடிப்பிழந்து காற்றிலாடும் பறவையின் உதிர்ந்துபோன ஒற்றைச் சிறகாய்த் திசைகளை இழந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு இறை என்பதே இறுதிப் புகலிடமாய் இருக்கின்றது என்பதை யாரால் மறுக்கவியலும்?!

"வானத்துப் பறவைகளைப் பாருங்கள்! அவை விதைப்பதுமில்லை! அறுவடை செய்வதுமில்லை" என்று ஏசுபிரானும்

"சும்மா இருக்கும் சுகம் ஒன்று அறியேன் பராபரமே" என்று தாயுமானவரும்

"செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே!"

என்று அருணகிரியாரும் உரைக்கும் 'சும்மா இருக்கும் சுகம்' வாய்த்தால் ஒருவேளை இறை என்பது தேவையற்றுப் போகுமோ?!

இறைத் தேடல் என்பதை நோக்கி எண்ணற்ற வழிகளில் பயணப்பட்டது மானுடம். ஆம்! அது ஒரு காட்டாறு போல! பல்வேறு கிளைகளாய்ப் பல்கிப் பெருகி வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு திசைகளில் பயணப்பட்டு இறுதியில் இறை என்ற சமுத்திரத்தின் தரிசனம் காணத்துடித்தது!

இறைத்தேடல் உலகின் தத்துவமரபை இருபெருங்கூறுகளாகப் பிரித்தது. மேற்கத்திய சிந்தனை மரபு என்றும், கீழைத்தேய சிந்தனை மரபு என்றும் பிரிந்தபின் அவற்றிலிருந்து கிளைத்தன எத்தனையோ கிளைநதிகள்!

தத்துவத்தேடல் தன் போக்கில் கிழக்கு, மேற்கு என்கிற ஆடைகளைந்து கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற புத்தாடை புனைந்துகொண்டது.

"இறையால் ஆனது எல்லாம்!" என்றது கருத்துமுதல்வாதம்!

"பரப்பிரம்மம் ஒன்றில்லை! பருப்பொருளே பிரபஞ்சம்!" என்ற திசையில் செழித்துவந்த பொருண்முதல்வாதம் தன் பயணத்தின் ஒரு பாய்ச்சலாய் வந்தடைந்தது இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற சிந்தனைப் புரட்சிக்கு!

ஆம்! மார்க்ஸ் என்ற மகத்தான மானுடனின் சிந்தனைக்குள் விழுந்து விருட்சமாய் வெளிவந்த இயக்கவியல் பொருள்முதல்வாதம் பொதுவுடைமைப் பூபாளம் பாடியது. அதில் உறக்கம் கலைந்தெழுந்த உலகப் பாட்டாளிவர்க்கத்தின் கரங்களால் புரட்டிப் போடப்பட்ட பூமிப் பந்தின் வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொலிகிறது இந்த வாசகம்:

"பூமிக்குள்தான் சுவர்க்கம் இருக்கிறது! பொன்னான வாழ்க்கை இருக்கிறது! மானுடத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வும், மானுடத்தின் சுகவாழ்வும், இல்லாத இறையின்கண் இல்லை தோழர்களே! சாவியை இருட்டுக்குள் தொலைத்துவிட்டு வெளிச்சம் இருக்குமிடத்தில் தேடும் முல்லாவின் வாரிசாய் இருக்காதீர்! சமூகத்தின் இயக்கத்திலும், இயக்கவியல் விதிகளுக்குள்ளும் இருக்கும் புதிர்களை விடுவித்தால் இறை என்ற கருத்தாக்கம் இறந்துபோகும்!"

"தேநீர் வழிந்து கொண்டிருக்கிறது! கோப்பையைக் காலி செய்!" என்ற ஜென்னின் வாசகத்துக்குப் புதிய பொருளைப் புரிந்துகொண்டு இறை இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு விடையாய் நானும் தற்போது NCBH ஆல் வெளியிடப் பட்ட பழைய சோவியத் நூலான " இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?" என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

என் இறை கூடிய சீக்கிரம் இறந்துபோகும் என்றே தற்போது நம்புகிறேன்.

எனவே கொஞ்சகாலம் கழித்து இந்தப் பதிவின் இரண்டாம் பாகத்தை எழுதவேண்டும் என்ற அவாவுடன், என்னை இந்தத் தொடர்பதிவுக்கழைத்த இனிய நண்பர் சௌந்தருக்கு நன்றிகூறி தற்காலிகமாக விலகிச் செல்கிறேன்.         

9 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இறை தேடல் என்பது உயிர்களின் அடிப்படை உணர்வு... இறைவனைத் தேடுவதும் அப்படியே..
ஆனால் மக்களை திசை திருப்பி,அவர்களின் அறியாமையை, பயத்தை பயன்படுத்தி காசு பார்க்கும் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது...

கடவுளை உனக்குள் தேடு என்றுதான் பெருமக்கள் சொல்லி சென்றிருக்கின்றனர்..

எல்லோராலும் கடவுள்தன்மையை அடைய முடியும்.. ஒரு போதும் கடவுளாக முடியாது....

dheva சொன்னது…

தம்பி......

நேரே வந்திட்டே இருந்தீங்க.. டக்குன்னு பக்கது சந்துல பூந்துட்ட மாதிரி உணர்றேன்...அதன் பொருள் முதல்வாதம் சொன்னீங்கல்ல..அத சொன்னேன்...

இரண்டாம் பகத்தில் முட்டுச் சந்தில் இருந்து கண்டிப்பா திரும்பி வருவீங்கன்னு நம்புறேன்....!

சிவபுராணம் சொல்லி ஆரம்பிச்சு இருக்கீங்க...சிவன்(ம்) உங்களை விட்டுடுமா என்ன?

கருத்து தாண்டிய ஒரு விசயம் என்னன... கோர்வையான.. சொல்லும் வீச்சு....உண்மையிலேயே கட்டிப்பிடிச்சு பாரட்டுனும் போல இருந்துச்சு தம்பி!

சௌந்தர் சொன்னது…

சாவியை இருட்டுக்குள் தொலைத்துவிட்டு வெளிச்சம் இருக்குமிடத்தில் தேடும் முல்லாவின் வாரிசாய் இருக்காதீர்!//

வரிகள் எல்லாம் புதுமைய இருக்கிறது இந்த பதிவை படித்தால் ஓரு தெளிவு கிடைக்கும்....

ஜெய்லானி சொன்னது…

:-))

LK சொன்னது…

vithyaasamana pathivu

...........enthisai.......... சொன்னது…

நட்பே., வணக்கம்.

சிறப்பாய் தொடர்கிறது உங்கள் பயணம்...

வாழ்த்துகள் என்றென்றும்.காமத்திலிருந்து கடவுள் இது பிரிக்க முடியாத இயக்கம்.


நேற்றுவரை காமத்தின்.,காதலின்.. பக்கங்களில் உங்கள் பதிவுகள் ஆழமானவை;

இப்போதைய கடவுளும் மிகவும் அர்த்தமானது.கடைசி இரு பத்திகள் தவிர்க்கவேண்டியது..
ஏனெனில்.,அது உங்கள் அற்புத கட்டுரையை ஒரு நாட்குறிப்பு மாதிரி ஆக்கிவிடக்கூடாது.

மங்குனி அமைசர் சொன்னது…

உள்ளேன் ஐயா

விந்தைமனிதன் சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில்

எல்லாம் கடந்து உள்நிற்பவன் என்ற வரியின் சுருக்கம் தானே அண்ணா கடவுள்!

@dheva

தேடல் அதன் போக்கில் என்னை இழுத்துச் செல்கின்றது. நதியில் மிதக்கும் துரும்பாய் நான்... அவ்வளவே!

@சௌந்தர்

நன்றி சௌந்தர்

@ஜெய்லானி

என்னாது இது.. வில்லத்தனமா சிரிச்சுகிட்டு... வில்லத் தனமாவுல்ல இருக்கு

@LK

என்ன வித்தியாசம்னு சொல்லுங்களேன் தல

@...........enthisai..........

நன்றி வக்கீல் சார்
கட்டுரைய அற்புதம்னு வேற சொல்லி உசுப்பி விட்டுட்டிய.... ம்ம்ம் .. இனிமே ரொம்ப யோசிச்சி எளுதவேண்டியதுதான்!

@மங்குனி அமைசர்

யோவ் மங்குணி.. அது என்ன அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போற பளக்கம்? சின்னப்புள்ளதனமாயில்ல!

என்னது நானு யாரா? சொன்னது…

///"செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே!"

என்று அருணகிரியாரும் உரைக்கும் 'சும்மா இருக்கும் சுகம்' வாய்த்தால் ஒருவேளை இறை என்பது தேவையற்றுப் போகுமோ?!///

இது புரியாமல் தான், மனிதர்களுக்குள் எத்தனை எத்தனை சணடைகள், பிரிவுகள்!! உங்கள் எழுத்து அருமையாக இருக்கிறது.

கடவுளை பற்றிய தேடலில் "பொருள்முதல்வாதத்தோடு" மட்டுமே முடிந்து விடும் விஷயம் அல்ல அது! மனிதன் தன் நிலையிலிருந்து இன்னமும் மேலே உயர்ந்து செல்லும் வழி இருக்கிறது என்பதை தான் பல மகான்கள் வாழ்ந்து காட்டிவிட்டு சென்றுள்ளனர்.

அது வரை சோற்று பருக்கைக்காக அள்ளாடும் பரிதாப நிலையில் இருக்க வேண்டியது, மனிதனுக்கு விதிக்கபட்டுள்ள சாபம்.

Related Posts with Thumbnails