வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தமிழகத்தில் மீளுயிர்க்கும் காங்கிரஸ் - ஒரு பைனாகுலர் பார்வை!


அது 2004-ம் ஆண்டு. பாராளுமன்றத்தேர்தல். குஜராத்தின் 'மோடி'யாட்டங்களால் நடுநிலைவாதிகளுக்கும் மனிதம் விரும்புவோர்க்கும் ஒரு பதைப்பு இருந்த காலகட்டம். மதச்சாக்கடையை சந்தனமாக்கி 'மணக்குது' என்று சொன்ன பாரதீய ஜனதா கட்சி மீண்டும் அரியணை ஏறிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பும் ஆதங்கமும் எனக்கும் இருந்தது.

குஜராத்தின் கவிச்சி வீச்சத்துக்கு இடையிலும் கவிதை மணம் நுகர்ந்த 'பண்பாளர்' வாஜ்பாயின் முகமூடி(உபயம்: கோவிந்தாச்சார்யா)யையும் மீறி காங்கிரஸ் மீண்டும் தனது அரியணைக்கான போட்டியில் 'தம்' கட்டி ஓடுவதற்கு அனைத்து சமரசங்களுடனும் தயாராயிருந்தது. மக்கள் காங்கிரஸை மட்டும் நம்பாமல் கம்யூனிஸ்ட்டுகளையும் காவலுக்கு வைத்தனர் 62 பாராளுமன்ற இடங்களை வழங்கி! "The Red Sweap" என்று வர்ணித்திருந்தது இந்தியா டுடே.

அது நடந்து ஆறாண்டுகள் முடிந்துவிட்டன. இந்தியாவின் பூகோள மற்றும் அரசியல் நிலையைக் கூர்ந்து கவனிப்போர் ஒரு விஷயத்தை நன்கு உணரலாம். காங்கிரஸ் ஆண்ட இந்த காலகட்டத்தில் இந்திய அரசியல் ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டியுள்ளதை!

இந்தியாவின் தலைப்பகுதியான காஷ்மீரில் அம்மக்களின் விடுதலைப் போராட்டம் ஓர் உச்சநிலையை அடைந்து கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாய் முக்குக்கு முக்கு, தெருவுக்குத் தெரு ராணுவம் என்ற நிலையில் மூச்சடைத்து போயிருந்தனர் காஷ்மீரிகள். ரோஜாப்பூ போன்ற காஷ்மீரப் பெண்கள் ராணுவத்தின் கோரக் கரங்களால் கசக்கி நுகரப்பட்ட வலி தேசத்தின் மற்ற பாகங்களுக்குத் தெரிந்துவிடாமலிருக்க 'கிரிக்கெட்' தேசப்பற்றும், 'கார்கில்' தேசப்பற்றும் பரப்பப் பட்டது. மக்களும் 'ரங் தே பஸந்தி'யிலும் 'லகானி'லும் ஊற்றப்பட்ட குடங்குடமான கண்ணீரில் மூழ்கி முக்குளித்து ஆனந்தித்தனர்.

இன்னொருபுறம் வடகிழக்கு மாகாணங்களிலும் 'அனுமன் வால் தீ' போல போராட்ட உணர்வு மெல்லமெல்லப் பற்றிக் கொண்டே பரவத் துவங்கியுள்ளது. ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தைப் புதுப்பித்து எரியும் நெருப்பை எச்சில் துப்பி அணைக்க முயல்கிறது டெல்லி தர்பார்!

வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாக 'வேதாந்தா'க்கள் வீசிய தூபப்புகையில் சாமியாடத் தொடங்கிய 'சிதம்பர'ங்கள் தண்டகாரண்யத்தில் தலையை நுழைக்க, கடிக்காமல் இருக்க பழங்குடி மக்கள் சர்க்கஸ் சிங்கமா என்ன? மாவோயிஸ்ட்டுக்களாய் அவதாரம் எடுத்துள்ளனர் ஆதிவாசி மக்கள்! 7500 கோடிகளை 'ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்'டுக்காய் ஒதுக்கியுள்ளது இந்திய அரசு. பசுமையை வேட்டையாடவாம்!

இந்தச் சூழலை மனதில் நிறுத்தி தமிழக அரசியலை உற்று நோக்கினால் புரியும் காங்கிரஸ் தமிழகத்தில் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மர்மம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கப்பல் தரைதட்டிப் போய் ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாகின்றது. எப்படியெல்லாமோ வளைந்து நெளிந்து திராவிடக் கட்சிகளின் தோளின்மீதேறி சவாரி செய்தாலும் நசுங்கிய சொம்பு நசுங்கியது தானே!

திராவிடக் கட்சிகளின் ஆடம்பர அலங்கார மற்றும் சுயநல அரசியலை அலசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல!

தலைவலியாய்க் காஷ்மீர்! பக்கவாதமாய் மணிப்பூரும், நாகாலாந்தும்! பைபாஸ் சர்ஜரி செய்தால்  Deadh on Table(DOT) என்ற நிலையில் இதயநோயாய்த் தண்டகாரண்யம்!

தவிர்த்துப் பார்த்தால் சாதிகளுக்குள்ளும், அறியாமைக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கும் உத்திரப் பிரதேசம் முதலான இந்தி பெல்ட் மாகாணங்கள் அவற்றிலிருந்து வெளிவரவே இன்னும் அரைநூற்றாண்டுகாலம் பிடிக்கும்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திரம் தேசிய நீரோட்டத்திற்குள் பத்திரமாகவே இருக்கின்றது. கர்நாடகம் பாரதிய ஜனதாவின் அகண்டபாரத அண்டாவுக்குள் தலையை நுழைத்துவிட்டது. கேரளமோ கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என இரண்டு 'தேசிய'க்கட்சிகள் மட்டுமே இசைநாற்காலி விளையாடும் இடமாகவே உள்ளது. எனவே இம்மூன்று மாகாணங்களிலும் 'தேசிய'கீதம் நன்றாகவே ஒலித்துக் கொண்டிருக்கின்றது

ஆனால் தமிழகம்?!

2008 துவங்கி இன்றுவரையில் ஓர் எரிமலை தமிழக மக்கள் மனதில் குமுறிக் கொண்டே இருக்கின்றது. தாம் வஞ்சிக்கப்பட்ட உணர்வு அவர்கள் உள்ளத்தில் நீறுபூத்த நெருப்பாய் இருக்கின்றது. வெறுமனே காசுக்கு ஓட்டு விற்பவர்கள் என்று மக்களை ஏளனப் படுத்திக் கொண்டிருக்கும் அறிவு விற்பன்னர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவில்லை. சர்க்கஸில் நடனமாடி வயிறு நிறைக்கும் நிலையில் இருந்தாலும் புலியும் சிங்கமும் காட்டை தம் நினைவில் இருந்து அழித்து விடுவதில்லை. எப்படி படித்த நடுத்தர வர்க்கம் அடிமைத் தனத்தை கசப்பாய் விழுங்கி ஜீரணிக்க சமரசப் படுத்திக் கொண்டுள்ளதோ அதேபோன்ற நிலையில்தான் ஓட்டு விற்றாவது தற்காலிகமாய் ஆசுவாசப் படுத்திக் கொள்கிறது அடித்தட்டு வர்க்கம்.

தென்னிந்தியாவின் மற்றப் பகுதிகளில் பத்திரமாய் இருக்கும் 'தேசியம்' தமிழ்நாட்டில் மட்டும் தன் இருப்பு எந்த நேரத்திலும் தரையோடு தேய்க்கப் படலாம் என்று உணர்ந்தே இருக்கின்றது.

ஏற்கனவே உள்ளுக்குள் புதைந்திருந்த கலகக்குரலை துயிலெழுப்பி விட்டுள்ளது ஈழத்தமிழரின் தீனக்குரல். இப்போது தும்பை விட்டால் பின் வாலைப் பிடிப்பது எவ்வளவு சாத்தியம் என்ற ஐயப்பாட்டில்தான் காங்கிரஸ் தனது மாயவலையை மெல்ல விரிக்கத் துவங்கியுள்ளது.

ராகுல் காந்திக்கு வார்டு காங்கிரஸில் துவங்கி வட்டார காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்தில் என்ன நடக்கும் என்ற விவரம் துல்லியமாகத் தெரியும் என்கிறார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா. இது எப்படி சாத்தியம்? ஒருவேளை மாநில உளவுத்துறையைக் கருணாநிதி கைமாற்றி விட்டாரோ?! இல்லை 'அம்மா'வின் சிபாரிசில் யாராவது கேரளத்து ஜோசியப் பணிக்கர் ராகுலின் மந்திராலோசனைச் சபையில் சேர்ந்துவிட்டாரோ?!

இது மிகத் தெளிவான நூல்பிசகாத ஒரு திட்டம். அங்குலம் அங்குலமாய் நகர்த்தப்படும் கோயில்தேர்போல மிக மெதுவாய் செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டால் இந்திய தேசியத்துக்கு வரும் ஆபத்தில் பாதி காணாமல் போய்விடும். எனவே தமிழகத்தில் ஆட்சி என்பது வெறுமனே காங்கிரஸின் கனவு மட்டுமல்ல. அது ஏகாதிபத்திய தேசியத்தை விதந்தோதுவோரும், தேசிய முதலாளிகளும் காணும் கனவின் தொடர்ச்சி.

அந்தத் தொடர்ச்சியின் வளர்ச்சிப்போக்கில் திராவிடக் கட்சிகளிடன் சரிக்குப் பாதியாய் சட்டசபை சீட்டுக்களை பேரம்பேசத் தொடங்கியிருக்கின்றது காங்கிரஸ். "நீ அரிசி கொண்டு வா.. நான் உமி கொண்டு வருகிறேன்... இருவரும் ஊதி ஊதித் தின்னலாம்" என்ற பழமொழி யாருக்காவது நினைவுக்கு வருகின்றதா?

சகுனிகள் ஜெயிக்கலாம்... தற்காலிகமாக! சாணக்கியன்கள் வெல்லலாம் தந்திரமாக! இருந்தும் என்றும் அணைந்துவிடாது... தாடிக் கிழவன் பற்றவைத்துப் போன தன்மான நெருப்பு!!!

பின்குறிப்பு: நீ என்ன இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரியா என்று நண்பர்கள் என்னைக் கேட்கலாம். நிச்சயம் அல்லன்! ஆனால் மக்களை ஒடுக்கித் தான், அவர்களின் பிணங்களின் மீதுதான் தேசியக் கொடி பறக்கவேண்டும் என்பதை என்னால் ஏற்க இயலாது. மணிப்பூரிலும் தண்டகாரண்யத்திலும் போராடிக் கொண்டிருப்போர் இந்தியாவை உடைக்க வேண்டும் என்றல்ல; தமது மானத்தோடு கூடிய வாழ்வுரிமையைத் தக்கவைத்து அல்லது மீளப்பெற்றுக் கொள்ளவே போராடிக் கொண்டிருக்கின்றனர்! தேசிய ஒருமைப்பாடு பற்றிய விவாதப் புள்ளியை மட்டுமே நான் இங்கு தொட்டுச் செல்கிறேன்; வரையறையை அல்ல! பயணம் தொடரலாம் புரிதல் இருந்தால்....

7 பேரு கிடா வெட்டுறாங்க:

சௌந்தர் சொன்னது…

இந்திய தேசியத்துக்கு வரும் ஆபத்தில் பாதி காணாமல் போய்விடும். எனவே தமிழகத்தில் ஆட்சி என்பது வெறுமனே காங்கிரஸின் கனவு மட்டுமல்ல.///

இவர்களை ஆட்சிக்கு வர விட கூடாது இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கும்....

சௌந்தர் சொன்னது…

கேரளத்து ஜோசியப் பணிக்கர் ராகுலின் மந்திராலோசனைச் சபையில் சேர்ந்துவிட்டாரோ?!//


இது சூப்பர் தல....

Unknown சொன்னது…

தமிழகத்தில் காங்கிரசா.? மொதல்ல அவிங்கள ஒத்துமையா இருப்பாங்களா..?
தனித்தனி ஆட்களாக் கோஷ்டி சண்டையில் ஈடுபடும் புண்ணாக்குகள் ..

அடுத்த தேசிய தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இன்றி தொங்கு பாராளுமன்றமே அமையும் ...

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

கங்கிராட்ஸ், காங்கிரஸ் பற்றிய அரசியல் பார்வைபதிவிற்கு ,

அரசியல் கணக்கு இப்போதெல்லாம் குதிரைபேரம்..

வாக்குசாவடியிலும்,நம்பிக்கை ஒட்டு எண்ணிக்கையிலும். எல்லாமனங்களிலும் நேர்மை இல்லை. இதுவே பழகிய பின்னர் குற்றமனபாங்கின்றி தன் விருப்பம்போல் வாக்களிப்பான் குடியானவன். காங்கிரஸ் தனக்கு தமிழ்நாட்டில் என்ன நிலையான செல்வாக்கு என உளவறிக்கை கேட்டது.அதில் அவர்களுக்கு நிலையான ஏறத்தாழ 13 சதவீத வாக்குகள் இருப்பதை அறிந்தது. இந்த விகிதம் இப்போது குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஏது எப்படியோ., அவர் அப்பாவின் மரணத்திற்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என என்று முதற்காரணம் மறந்து ராகுல் சொல்வது போல, உண்மை வலி உள்ள தமிழர்க்கும் சில கணக்குகள் உண்டு.

Bibiliobibuli சொன்னது…

//ஏது எப்படியோ., அவர் அப்பாவின் மரணத்திற்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என என்று முதற்காரணம் மறந்து ராகுல் சொல்வது போல, உண்மை வலி உள்ள தமிழர்க்கும் சில கணக்குகள் உண்டு.//

மூன்றே வரிகளில் சிறப்பாய் சொன்னீர்கள். இன்னும் எத்தனை காலம் தான் இதையே சொல்லிச்சொல்லி ஓர் இனவழிப்பை ஞாயப்படுத்துவார்கள்? மனட்சாட்சியற்றவர்கள்.

vinthaimanithan சொன்னது…

உண்மையில் ஈழத்தின் இனவழிப்புக்கு ராஜீவ் மரணம் மட்டுமே காரணமா? இந்தியாவின் ஏகாதிபத்தியப் பேராசையும், அதன் பின்னே நிற்கும் தேசிய முதலாளிகளின் வியாபார விஸ்தரிப்புக் கனவுகளுமே அடிப்படைக்காரணமென்று நான் கருதுகிறேன்.

ஹ்ஹ்ம்ம்...

இயலாமையின் கொந்தளிப்பும் எரிச்சலும் எத்தனை காலம்தான் அடங்கியிருக்கும்? வெடிக்கும்போது தெரியும் வினை விதைத்தவன் கதி!

பெயரில்லா சொன்னது…

ரஜீவிற்காகத் தமிழினமே இரக்கமில்லாமல் காங்கிரசால் பலிக்கடாவாக்கப் பட்டுப் பச்சிளங்குழந்தைகளும் பரிதாபமாகக் கொல்லப் பட்டுள்ளனர்.இதை எந்த மானமுள்ளத் தமிழனும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டான். நாளை தேசியம் என்று கூறித் தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் இதே கதி தான் என்பதை உணர்வதுதான் சிலருக்குப் பிடி பட வில்லை.தமிழன் என்று மார் தட்டிவிட்டு ஈழத்தமிழினத்தை அழிய விட்ட அத்தனைத் தமிழ்நாட்டுத் "தலைவர்"களும் புது டில்லியின்முன் வெறும் விட்டில் பூச்சில்கள்.புதிய தலைமை உருவாகும்,அது புது டில்லிக்குக் காவடி தூக்கும் கயவர்களாக இருக்காது.புது டில்லியையேக் கட்டுப் படுத்தும் தன்மானத் தமிழினமாக இருக்கும்.

Related Posts with Thumbnails