திங்கள், 23 ஆகஸ்ட், 2010

பதிவுலகில் நான்...


1 ) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?

விந்தைமனிதன்

2) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?

இல்லை. உண்மையான பெயர் ராஜாராமன். மனிதர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையிலும் விந்தையானவர்கள்தாமே! மனிதர்களின் மனத்தையும், அவர்களது போக்கையும் வேடிக்கை பார்த்தாலே போதும்... வேறேதும் பொழுதுபோக்கு தேவையா என்ன? அதுவே என் புனைப்பெயர் ரகசியம்

3)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ?

சும்மா... எப்போதும் எதையேனும் கிறுக்கிக் கொண்டிருப்பேன். கிறுக்கியது மாடர்ன் ஆர்ட் சித்திரம்போல சிலசமயம் நன்றாகவும் வந்துவிடும். உடனே கையும் மனசும் பரபரக்கும். அடுத்து... அடுத்து என... தேடல்கள் திறந்துவைத்த புதியவாசல் வலையுலகம். இப்போதும் மனம் பரபரக்கின்றது... அடுத்தது என்னவென்று...

4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?

நல்ல சமையலின் வாசம் தூரங்கள் தாண்டியும் எல்லோர் நாசியின் கதவுகளைத் தட்டும்... நாம் செய்யவேண்டியதெல்லாம் சன்னல்களைத் திறந்துவைப்பதே!  நல்ல தலைப்பு வைப்பதும், நன்றாக எழுதப்பட்டுள்ள ஏனைய பதிவர்களின் பதிவில் பின்னூட்டுவதும் மட்டுமே நான் செய்ய முயற்சிக்கும் வேலை. எனது பதிவுகளைப்போலவே என் பின்னூட்டங்களும் ஆத்மார்த்தமாக அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புவேன். சமயங்களில் சாத்தியப்படுவதில்லை

5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
உண்டு. என் வாழ்க்கையையே ஒரு பெரிய கண்ணீர்த்துளியென நான் உணர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் சில பதிவுகளில் அதனை எழுதியிருக்கிறேன். என்னை நெருக்கமாக அறிந்தோர் மட்டும் புரிந்தோராக உள்ளனர்.

6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?

இரண்டுமே இல்லை.வேறு காரணங்கள் சொல்லவேண்டுமெனில்

i) என் எழுத்தின் வீச்சைக் கூர்தீட்டிக் கொள்ள... ஒரு சமூக உறுப்பாய் என் பங்கினை ஆற்ற என்னைத் தயார்படுத்திக் கொள்ளவும்... அடுத்தடுத்த தளங்களை நோக்கி நகரவும்...

ii)ஒரு விஷயத்தைப்பற்றி எழுத வேண்டுமெனில் அதைப்பற்றி நன்கு படிக்கவேண்டும்... எனவே நான் எழுதத் துவங்குமுன் இருந்ததைவிட இப்போது கவனம் செலுத்தி பல திசைகளிலும் படிக்கவேண்டிய கட்டாயத்தை எனக்கு நானே ஏற்படுத்திக் கொள்கிறேன்... என் வலைப்பதிவுமூலம்.

iii) இன்னும்... இன்னும்.. என எனக்கான மனிதர்களைச் சம்பாதிக்க வலையுலகம் நல்லதோர் களமெனக் கருதுகிறேன். சம்பாதித்துமிருக்கிறேன்.

7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?
ஒன்றுமட்டுமே!

8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?

சிலர் எழுத்தைப்பார்த்து "எப்படி இப்படி ஒரு எழுத்து இவர்களுக்கு மட்டும் வாய்க்கிறது?" என்ற பொறாமை லேசாக எழுந்ததுண்டு

கோபம்.... சமூகப் பொறுப்புக்கள் இன்றி கண்டதையும் வாந்தியெடுக்கும் சிலர்மீது

வருத்தம்.... எழுதுவது தாய்த்தமிழில்... இருந்தும் பதிவு நன்றாக வந்துள்ளதா என்பதில் காட்டும் அக்கறையை, எழுத்துப்பிழை இல்லாமல் இருக்கின்றதா என்பதில் சில நண்பர்கள் காட்டுவதில்லை. அவர்கள்மீது...

9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?

வலையுலக நண்பராகத்துவங்கி இன்று என் வாழ்க்கையில் ஒரு கைவிளக்காய்,ஆசானாய், கூடப்பிறக்காத அண்ணனாய், என் வலிக்கு மருந்து தடவும் தோழனாய், என்னால் தவிர்க்க முடியாத மனிதராய் மாறியிருக்கும் என் அண்ணன் கே.ஆர்.பி.செந்தில்தான்.
இவர் இந்தமாதிரி இன்னும் நிறைய பேருக்கு அண்ணனாய் இருப்பதில் எனக்கு பொஸஸிவ்னெஸ் கலந்த வருத்தம் நிச்சயமாய் இருக்கிறது... என்ன செய்வது? வீசும் காற்று எல்லோருக்கும்தானே?


10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?

எனக்கு மாலனின் ஒரு கவிதை நினைவிலாடுகின்றது.

அன்றொருநாள் அப்பாவைக் கேட்டேன்
"என்னாகும் என்வாழ்க்கை?
காற்றுப்போல் சுதந்திரமும்
கவிதைப்போல் தனிக்குணமும்
எப்போதும் உடன்வருமோ
என்னாகும் என்வாழ்க்கை?"
கலைந்த கூந்தலைக் கோதியபடியே
அப்பா சொன்னார் அணைத்துக்கொண்டே...
"கனவுகள் வேண்டாம் பெண்ணே!
நேற்றைக்கு உன்போல் நானும்
நெஞ்சுக்குள் பூச்சுமந்து
நின்றதில் நினைவே மிச்சம்....
எண்ணிப் புள்ளிவைத்து
இழையெடுத்துப் போட்ட கோலம்
வழிப்போக்கர் மிதிக்கலாச்சு
கனவுகள்விற்று அதிலே
வாழ்க்கையை வாங்கியாச்சு"

ஆம். நானும் என் கனவுகளை விற்று அதில் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டிருப்பவன் தான்... இருந்தும் விடாப்பிடியாக ஓடிக்கொண்டிருக்கிறேன்... புதிதாய்ப் பூக்கும் கனவுகளுடன்.... எனக்காய் இருக்கும் மனிதர்களோடு... சக பயணியாய்... இதைத்தான் என் "தேன்கசியும் வாழ்க்கை" என்ற பதிவிலும் வெளிப்படுத்தி இருக்கிறேன்.

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் கலாநேசனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

19 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நன்றி தம்பி ... ஆனா நீங்க புகழும் அளவுக்கு நான் என்னை இன்னும் வளரவில்லை என்றுதான் நினைக்கிறேன் ...

Rathi சொன்னது…

மேன்மேலும் வாழ, வளர, வெல்ல வாழ்த்துக்கள்.

விந்தைமனிதன் சொன்னது…

செந்திலண்ணே! என் உணர்வுகளைச் சொன்னேன்... உண்மை...வெறும் புகழ்ச்சியல்ல! வார்த்தைகளால் வாழ்க்கையைக் கோடிட்டு நிரப்ப நான் என்றும் விரும்பியதில்லை...

சகோதரி ரதி!(அக்கான்னு சொல்லலாமா?) என்னோட முந்தைய பதிவின் பின்னூட்டத்துக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் உங்க இடைவெளி வெறும் ஓரிரு மணித்துளிகள் மட்டும்... உங்க அக்கறை நெகிழவைக்குது! செந்திலண்ணனுக்கு ஃபாலோ பண்ற மாதிரி இனிமேல் உங்களுக்கும் நன்றி கிடையாது!

கலாநேசன் சொன்னது…

//நல்ல சமையலின் வாசம் தூரங்கள் தாண்டியும் எல்லோர் நாசியின் கதவுகளைத் தட்டும்... நாம் செய்யவேண்டியதெல்லாம் சன்னல்களைத் திறந்துவைப்பதே!//

மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.
அழைப்பை ஏற்றமைக்கு நன்றி.

என்னது நானு யாரா? சொன்னது…

///i) என் எழுத்தின் வீச்சைக் கூர்தீட்டிக் கொள்ள... ஒரு சமூக உறுப்பாய் என் பங்கினை ஆற்ற என்னைத் தயார்படுத்திக் கொள்ளவும்... அடுத்தடுத்த தளங்களை நோக்கி நகரவும்...

ii)ஒரு விஷயத்தைப்பற்றி எழுத வேண்டுமெனில் அதைப்பற்றி நன்கு படிக்கவேண்டும்... எனவே நான் எழுதத் துவங்குமுன் இருந்ததைவிட இப்போது கவனம் செலுத்தி பல திசைகளிலும் படிக்கவேண்டிய கட்டாயத்தை எனக்கு நானே ஏற்படுத்திக் கொள்கிறேன்... என் வலைப்பதிவுமூலம்.///

இரண்டு காரணங்களும் மனதை தொடுகின்றன. பதிவுகள் மூலம் சமுகத்துக்கு நல்லது சொல்ல முடியும்னு நம்பறீங்க! அந்த நம்பிக்கை என்னை போன்ற புதியவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

அதிகமாக படித்து, பல விஷய்ங்கள் தெரிந்து கொண்டு, உங்களின் எழுத்தை கூர் தீட்டிய பின் பதிவு இடுகிறீர்கள். உங்களின் தீவிரத்தை இந்த வார்தைகள் காட்டுகிறது.

தொடரட்டும் உங்கள் மக்கள் பணி!

Rathi சொன்னது…

//(அக்கான்னு சொல்லலாமா?//

தாரளமாக.

//இனிமேல் உங்களுக்கும் நன்றி கிடையாது!//

சரி தம்பி:) தொடர்ந்து எழுதுங்கள்.

பத்மா சொன்னது…

நேர்மையான பதில்கள் விந்தை மனிதன் .good

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

அருமையான பதிவு ராஜ ராமன் தொடரட்டும் உங்கள் எழுத்து பணி...

வானம்பாடிகள் சொன்னது…

ராஜாராமன் என்று தெரிந்து கொண்டதில் இன்னும் ஒரு அண்மை. உங்கள் பதிவு மட்டுமல்ல பின்னூட்டமும் ஏதோ ஒன்று கற்றுக் கொடுக்கிறது.

ரமேஷ் சொன்னது…

பொறுப்பாய் பதில் அளித்திருக்கிறீர்கள் ராஜாராமன் வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

இன்னும் இன்னும் நிறைவாக எழுதுங்கள் மனிதரே.வாழ்த்துகள்.

நியோ சொன்னது…

// எனது பதிவுகளைப்போலவே என் பின்னூட்டங்களும் ஆத்மார்த்தமாக அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புவேன் //

தோழர் கே ஆர் பி தளத்தில் எனக்காக நீங்கள் போட்ட பின்னூட்டம் அதற்க்கு சாட்சி ... அன்பில் உருக்கி எடுத்த ஆத்மார்த்த மனிதம் மிளிரும் வரிகள் உங்கள் பின்னூட்டங்கள் ...

//எனக்கான மனிதர்களைச் சம்பாதிக்க வலையுலகம் நல்லதோர் களமெனக் கருதுகிறேன். சம்பாதித்துமிருக்கிறேன்.//

நியோவையும் தான் !!!

//என்ன செய்வது? வீசும் காற்று எல்லோருக்கும்தானே? //

ஆமாம் தோழர் !!!!!!!!!!

பதிவுலகில் உங்கள் பயணம் வழமை போல் சிறப்பாக தொடர தோழனின் அன்பு வாழ்த்துக்கள் !

சௌந்தர் சொன்னது…

நல்ல தெளிவான பதிகள் +கவிதை

ராசராசசோழன் சொன்னது…

ரொம்ப கால தாமதமான கருத்துரையா இருந்தாலும்...நான் விரும்பி சொல்லுகிறேன்...உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்....

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

///நானும் என் கனவுகளை விற்று அதில் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டிருப்பவன் தான்//
பதிவுலகில் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பர் ராஜா ராமன் அவர்களே!!!!!!!

ஜோதிஜி சொன்னது…

சிலர் எழுத்தைப்பார்த்து "எப்படி இப்படி ஒரு எழுத்து இவர்களுக்கு மட்டும் வாய்க்கிறது?"

யாருங்ற ரகஸ்யத்த சொல்லுங்க மனிதா

ஜோதிஜி சொன்னது…

அந்த மாலன் கவிதை எனக்கு பிடித்த கவிதை.

வீடு என்று எதைச் சொல்வீர்? அதை படித்து இருக்கீங்களா?

இதுவும் மாலனின் சூப்பர்.

ஜோதிஜி சொன்னது…

பொதுவா மேடை பேச்சாளர்கள் குட்டிக்கதை முதல் திருக்குள் புறநானூறு வரைக்கும் இடை இடையே பொளந்து கட்டுவாங்க. கேட்க சுவராஸ்மா இருக்கும்.

என்ன வெளியே வந்தா அத்தனையும மற்ந்து போயிடும்.

ஆனால் உங்க பதிவு குட்டி குட்டியா சின்ன விசயங்களை கோர்த்து கவிதை கட்டளை எதார்த்தம் கோபம் ஆதங்கம் அவஸ்த்தை அத்தனையும் பொரியல் போல் தட்டில் கொண்டு வந்து கொட்டும் போது சாப்பிட சுவையாய்த்தான் இருக்கும்

ஆனால் இஞ்சி மொரப்பா சாப்பிட்டே ஆக வேண்டிய அளவிற்கு விசயம் இருந்து தொலைக்கு.

என்ன செய்வது நடிப்பே வாழ்க்கையாய் போன போது எதார்த்த எழுத்துக்கள் கசக்கத்தான் செய்யும்,

வாழ்த்துகள்

ராஜாவா? ராமனா?

வால்பையன் சொன்னது…

//எனது பதிவுகளைப்போலவே என் பின்னூட்டங்களும் ஆத்மார்த்தமாக அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புவேன். சமயங்களில் சாத்தியப்படுவதில்லை//


சேம் ப்ளட்!

Related Posts with Thumbnails