ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

யாருக்குச் சொந்தம் ரோஜாக்களின் தேசம்? - காஷ்மீர் பற்றிய ஒரு பறவைப்பார்வை

என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?
- காசி ஆனந்தன்


மீண்டும் பற்றியெரிகிறது காஷ்மீர். இம்முறை தெருக்களில் இறங்கிப் போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்லர். காஷ்மீர மக்கள். சிறார்களும் இளைஞர்களும் யுவதிகளும் முதியோரும் என பால்வேறுபாடின்றி, வயது வேறுபாடின்றி எல்லோரும் வீதிகளில்.... கொப்பளிக்கும் கோபமும், குருதியும் ஒன்றாய்க் கலந்து காஷ்மீரத்தெருக்களில் ஓடுகிறது.

அவர்களின் கோரிக்கை என்ன? அதன் நியாயம் என்ன?

அதற்குமுன் நம் கவனத்திற்காக சிறு தகவல்கள்:

1) நடப்பு 2010-2011 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் ராணுவ பட்ஜெட் மட்டும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ரூபாய். கடந்த 2006-2007 ஆம் நிதியாண்டின் ராணுவ பட்ஜெட்டைவிட 13 சதவீதம் அதிகம். உலக அளவில் பத்தாவது மிகப்பெரிய ராணுவபட்ஜெட் இந்தியாவினுடையது.  (நன்றி தினமலர்)

2) ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 6 சதம்கூட கல்விக்காக ஒதுக்க முடியாத இந்திய அரசு, உயர்கல்வித்துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பந்திபரிமாறுகின்றது. நிதிநெருக்கடி!!!

3) "இந்தியாவில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் நிதியில்லை என்று சொல்வது ஆதாரமற்ற, வடிகட்டின முழுப் பொய்'' - என்கிறார் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியல்மேதை அமார்த்தியா சென்.

4) இன்னொரு அதிர்ச்சி:
நடப்பாண்டின் பட்ஜெட்டில் மொத்த வரவு ரூபாய் 8,27,000 கோடி
மொத்த செலவு ரூபாய் 45,09,000 கோடி.
இதில் இந்த ஆண்டு வாங்கி இந்த ஆண்டே திருப்பிக் கட்டவேண்டிய கடன்களின் மொத்தம் 33,80,000 கோடி ரூபாய்.
ஆக உண்மையான செலவு ரூபாய் 11,09,000 கோடி மட்டும். ( நன்றி துக்ளக்)

ஏன் வந்தது இவ்வளவு கடன்? ராணுவத்தின் பெரும்பகுதி ஆற்றலும் செலவும் எங்கே செல்கின்றன?

5) 1947-ல் நடந்த முதலாம் இந்தோ-பாக் போர், 1962-ல் நடந்த இந்தோ-சீனப்போர், 1965-ல் நடந்த இரண்டாம் இந்தோ-பாக் போர், 1971-ல் நடந்த பங்களாதேசப்பிரிவினையை வெளிக்காரணம் காட்டி நடந்த மூன்றாம் இந்தோ-பாக் போர், 1999-ல் நடந்த கார்கில் யுத்தம் அனைத்தின் பிண்ணனியில் இருப்பது எது?

கேள்விகள் விதம்விதம்! விடை ஒரே விதம்!! காஷ்மீர்!


ரோஜாக்களின் தேசமாக இருந்த காஷ்மீர் மண் குருதியில் சிவக்கவும், ராணுவத்துக்கு மட்டுமே மிக முக்கியம் கொடுத்து மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் இந்திய,பாகிஸ்தானிய அரசுகள் தவிக்கவும் காரணமான ஒரே பெயர் காஷ்மீர்!

தேசபக்தி முகமூடிகளைக் கழட்டிவைத்துவிட்டுக் கொஞ்சம் காஷ்மீர்ப் பிரச்சினையின் மூலத்தை ஆராய்வோமா?

1947. ஆகஸ்டு மாதம் சுதந்திரம் அடைந்த நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றுதான் தலையிலடித்துச் சத்தியம் செய்கின்றன நம் வரலாற்று ஏடுகள்.ஆனால் அப்போது சுதந்திரம் பெற்ற ஐநூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள்?

அவைத் தங்கள் விருப்பம்போல இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளலாம் அல்லது விரும்பினால் தனித்தியங்கலாம்! எலிவளையானாலும் தனிவளைதான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற சிற்றரசுகளில் காஷ்மீரும் ஒன்று. தாங்கள் சுதந்திரமான தேசத்துக்குரியவர்கள் என்ற எண்ணம் காஷ்மீரிகளுக்கு இருந்தது. ஆனால் விழுங்கக்காத்திருக்கும் வல்லூறுகளுக்கு மத்தியில் சின்னப்புறாக்கள் எவ்வளவுநாட்கள் தாக்குப்பிடிக்க முடியும்? பஸ்தூன் பழங்குடியினரைக் கேடயமாக வைத்து காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் புகுந்தபோது தாக்குப்பிடிக்க இயலாத காஷ்மீர் அரசின் மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடுகிறார்; நெருப்புக்குப் பயந்து எண்ணெய்ச்சட்டிக்குள் விழுந்த கதை அவருக்குத் தெரியாதுபோலும்!

"இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிடமுடியாது;காஷ்மீரை எங்களுடன் இணைத்துவிட்டால் இந்தியா உங்களுக்குத்தேவையான எல்லா ராணுவ உதவிகளையும் செய்யும்" என்று வலைவிரித்தார் வல்லபாய் பட்டேல். பூனை கைக்குள் அகப்படுவதைவிட கூண்டுக்குள் இருப்பது மேல் என்ற முடிவுக்கு வந்த ஹரிசிங்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இந்த ஒப்பந்தம் (Instrument of Accession) கஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு, வெளியுறவு போன்ற சில துறைகளைத்தவிர்த்து ஏனைய அனைத்தும் காஷ்மீர் அரசின் வசமே இருக்கும். போர் முடிந்தவுடன் ஐ.நா சபையின் மேற்பார்வையில் ஓட்டெடுப்பு நடத்தி  காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதா, அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா, அல்லது தனித்தியங்குவதா என்பதை காஷ்மீர மக்களே முடிவு செய்வார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது.

ஜூன் 16.1952ல் இந்திய பாராளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு உரையாற்றுகிறார்:

"முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு ”நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை” என காஷ்மீர் மக்கள் கூறுவார்களானால், எங்களுக்கு அது வருத்தமாக இருப்பினும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே உள்ளோம். நாங்கள் அவர்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பப்போவதில்லை”
காஷ்மீரில் நுழைந்த இந்தியப்படைக்கும் பாகிஸ்தான் படைக்குமான போரில் மூன்றில் இரு பங்கு நிலப்பகுதி இந்தியாவின் வசமும், எஞ்சிய பகுதி பாகிஸ்தானின் கைக்கும் போனது.


காஷ்மீர் இணைப்பிற்கென்று இந்திய அரசியல்சாசனத்தில் இணைக்கப்பட்ட பிரிவு எண் 370 காஷ்மீர் தனக்கென ஒரு அரசியல்சாசனத்தை இயற்றிக்கொள்ள வகைசெய்ததும் இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.

இயல்பாகவே காஷ்மீரின் முஸ்லிம் மக்களும், இந்துக்களும் தங்கள் கலாச்சாரத்திலும் குணாம்சங்களிலும் பாகிஸ்தானிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வேறுபட்டிருந்தனர். காஷ்மீர் முஸ்லிம்கள் சூஃபி பிரிவைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானின் முஸ்லிம்களோ ஷியா மற்றும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் தனித்தியங்கவே விரும்பினர்.

இப்படி தந்திரமான முறையில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீர்மக்கள்தான் இன்று தெருக்களில் இறங்கிப் போராடுகின்றனர் இடைக்காலத்தில் தன் பங்குக்குப் பாகிஸ்தானும் அங்கு தீவிரவாதத்தை வளர்த்துவிடுவதற்கான எல்லா திருவிளையாடல்களையும் செவ்வனே செய்தது.

இதுவரையில் காஷ்மீரில் ராணுவத்திற்கும், தீவிரவாதத்துக்கும் இடையிலான சடுகுடுப் போட்டியில் ஏறத்தாழ ஒருலட்சம் அப்பாவி மக்களும், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், அதே அளவிலான ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பெண்கள் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் பாலியல் இரையாகினர்.

இன்றைய நிலையில் காஷ்மீரில் நிலைகொண்டிருக்கும் ராணுவத்தின் எண்ணிக்கை ஏறத்தாழ நான்குலட்சம்.

மனித உரிமைகள் அநியாயமாக மீறப்படுகின்றன. அடிப்படைத்தேவைகளுக்கான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒவ்வொருநாள் வாழ்க்கையும் காஷ்மீர மக்களுக்கு ஒரு யுகத்தைப் போன்று கழிகிறது. இன்று நம் உயிரையும் கற்பையும் சிதைக்கப்போவது தீவிரவாதிகளா, ராணுவமா என்று பூவா, தலையா போட்டுக்கொண்டே கழிகிறது சராசரி காஷ்மீரியின் தினம்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அரசுகளுமே காஷ்மீர்ப் பிரச்சினையைப்பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தும்போது காஷ்மீரிகளின் தரப்பைச் சேர்த்துக் கொள்வதே இல்லை. ஒரு அழகிய பெண்ணைத் தம் வசமாக்க இரு ஆண்கள் சண்டை போடும்போது அந்தப்பெண்ணின் கருத்தை யாரும் கேட்காவிட்டால் அதற்கு என்ன பொருள்? அந்தப்பெண் ஒரு மனிதஜீவி அல்ல; வெறும் அடிமை என்று எண்ணுவதாகத்தானே அர்த்தம்? அதுதான் நடக்கிறது காஷ்மீரில்.


உலகெங்கிலும் நடக்கும் ஒவ்வொரு உரிமைப்போராட்டத்தையும் ஆதரிக்கவேண்டியதும் கரம்நீட்ட வேண்டியதும் மனிதநேயத்தோடு வாழ நினைக்கும் ஒவ்வொருவரின் கடமையாகும். அது நம் தொப்புள்கொடி உறவான ஈழமாயினும் சரி; எங்கோ துருக்கியிலும், பாலஸ்தீனத்திலும் நடக்கும் விடுதலைப்போராயினும் சரி; காஷ்மீராயினும், வடகிழக்கு மாகாணங்களாயினும் சரி!

இந்திய ஐக்கியம் என்பது மக்கள் மனதில் கட்டப்பட்டிருக்க வேண்டும்; வெறும் புவியியல் எல்லைக்கோடுகளில் அல்ல என்பதே உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனின் ஆசை.
காஷ்மீர மக்களை ராணுவத்தால் அடக்க நினைப்பதைவிட, "தாங்கள் இந்தியர்" என்ற பெருமிதம் அவர்களுக்குள் இயல்பாகவே ஊற்றெடுக்கும் வகையில் இந்திய அரசு தமது வழிமுறைகளை மாற்றிக்கொண்டால் அதை யார் எதிர்க்கப்போகிறார்கள்?

ஈழத்துக்கவிஞன் சித்தாந்தனின் ‘தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்’ என்ற கவிதை ஈழமக்களுக்கு மட்டுமல்ல காஷ்மீரிகளுக்கும் பொருந்தும்

“…
முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன
....”

19 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நல்ல பார்வை .. இன்னும் விரிவாக இதனைப் பார்க்க வேண்டும்.. பொருளாதார பலமும்.. அரசியல் பலமும் சேர்ந்துகொண்டு மக்களை திசை திருப்ப எல்லா அரசுகளுக்கும் இப்படியொரு தேவை இருக்கிறது... ஒரு ஊர் வாழ நான்கு பேரை பலி கொடுத்தால் தப்பில்லை எனும் தப்பான கொள்கையை கையில் வைத்துக் கொண்டு ஊரையே கொளுத்துகின்றனர்...

காஷ்மீர் மட்டுமன்றி மொத்த இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுத்துவிட்டு அமெரிக்க போன்று ஒருங்கிணைந்த இந்தியாவாக மாறுவதுதான் தீர்வு ... ஒரு நாள் மாறும் ...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் .....

கும்மி சொன்னது…

பாடநூல்களை மட்டும் படித்து, அதுதான் வரலாறு என்று நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களைத் தெளிவு பெற வைக்கும் நல்ல முயற்சி.

இதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காஷ்மீர மக்கள், வீதியில் இறங்கி போராட பெருமளவில் முன்வரவில்லை. அதுதான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும், தேசபக்தி வியாபாரிகளுக்கும் பெரிதும் துணை நின்றது. இப்பொழுது கல்லும் ஆயுதம் என்று மக்கள் வீதியில் இறங்கியிருப்பது போராட்டத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே, கலையகம் தளத்தில் கல்லும் ஆயுதம் என்னும் தலைப்பில் ஒரு பதிவு வந்திருந்தது.
http://kalaiy.blogspot.com/2010/07/blog-post_807.html


வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களைப் பற்றியும் ஒரு பறவைப் பார்வை பதிவினை இடுங்கள்.

நன்றி!

♠ யெஸ்.பாலபாரதி ♠ சொன்னது…

//ஒரு அழகிய பெண்ணைத் தம் வசமாக்க இரு ஆண்கள் சண்டை போடும்போது அந்தப்பெண்ணின் கருத்தை யாரும் கேட்காவிட்டால் அதற்கு என்ன பொருள்? அந்தப்பெண் ஒரு மனிதஜீவி அல்ல; வெறும் அடிமை என்று எண்ணுவதாகத்தானே அர்த்தம்? அதுதான் நடக்கிறது காஷ்மீரில்.
//


இதை ரசித்தேன். :))

வாழ்த்துகள்.

ஹேமா சொன்னது…

சொல்லப்பட்ட வார்த்தைகள் மனதை மீட்டுகிறது மனிதரே !

ராஜவம்சம் சொன்னது…

நடுநிலையோடு எழுதியதற்க்கு நன்றி நண்பரே.

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

இதைப்பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள் விந்தை மனிதா, காஷ்மீரில் மட்டும் இல்லை இந்த உலகெங்கிலும் ராணுவ வல்லூறுகளின் வேட்டை தொடர்கிறது. உண்மையான மக்கள் போராட்டங்களை ஆதரிக்க வேண்டியது நமது கடமை.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

50க்கு வாழ்த்துக்கள்

Rathi சொன்னது…

Creative writers are conscience keepers of humanity என்று தமிழ் நெட் செய்தித்தளத்தில் படித்தது ஏனோ நினைவுக்கு வருகிறது. கவிதைகளில் உணர்வுகளையும், தரவுகள் மற்றும் ஜவஹர் லால் நேருவில் வார்த்தைகளில் காஷ்மீரிகளின் பக்கமுள்ள நியாயத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்.

அடிக்கடி நான் எனக்குள் சிரித்துக்கொள்ளும் விடயம் எங்களைப்போன்ற ஒடுக்கப்படுபவர்கள் யாராவது உலகத்தலைவர்கள் எங்கள் உரிமைகள் அல்லது அவலங்கள் பற்றி இரண்டு வார்த்தைகள் வாய்தடுமாறிப் பேசியது போல் பேசினாலும் அதையே ஓர் நம்பிக்கை இழையாய் பிடித்துக்கொண்டு தொங்குகிறோம் என்பது தான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் சிறந்த உதாரணங்கள் Hilary Clinton, David Miliband, Gordon Weiss etc. இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் பதவியில் இருக்கும் பொது அதிகம் எதையும் செய்வதில்லை. ஓய்வுபெற்று பொழுது போகாமல் அல்லது மனட்சாட்சி உறுத்தும் போது அது பற்றி புத்தகம் எழுதுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வு மட்டும் தசாப்தங்களாக அடக்குமுறையில் சிக்கி விடியாமலே......!!

dheva சொன்னது…

அருமையான பார்வை......

இந்திய தேசத்தில் இந்தியன் என்ற முகமூடியை நமக்கு மாட்டி விட்டு தேசபக்தி என்ற மாயையில் அட்டூழியங்கள் செய்து வரும் இந்திய அரசின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வரும் காலம் வெகு தூரமில்லை தோழர்.....

ஜெய் ஹிந்த் என்று சொன்ன தமிழனின் கருவறுக்கப்ப்ட்ட வரலாற்றையும் தனது ராணுவ சட்டையில் நட்சத்திரமாய் குத்திக் கொண்டு இருக்கும் வல்லரசுக்கனவு இராணுவத்தின் அட்டூழியங்கள் காஷ்மீரில் நடத்தும் பகிங்கர...அத்து மீறல்களை சொல்லில் அடக்க முடியாது. மக்களின் விருப்பமும் இந்திய காங்கிரசாரின் ஏகாதிபத்திய மனோபாவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது.

இந்திய தேசபக்தி என்பதையெல்லாம் நடு நிலையற்ற நடுவண் அரசு குழி தோண்டி புதைத்து ரொம்ப நாளாகி விட்டது.......! வேண்டுமானால் அர்ஜுனும், விஜயகாந்தும் படத்தில் காட்டடும் பொய்யான ஒரு தேசபக்தியை....


காஷ்மீரின் வலி நிஜம்தான்....ஆனால் என் இனத்தை அழித்ததை எம்மால் எப்படி மறக்கமுடியும் தோழர்?

dheva சொன்னது…

50வது பதிவா தம்பி....அடிச்சி தூள் கிளப்பு...வாழ்த்துக்கள் !

பெயரில்லா சொன்னது…

Apologies for not typing in "Tamil"..

An excellent post...Good job...

The whole Indian history taught in schools is totally bogus.

The Gandhian Myth: The congress has successfully created an image that Ghandhi single handedly fought for Indian freedom..The single reason that we got freedom after 2nd world war is because Britain was heavily damaged after the war and they left all the colonies they had. Along with us countless countries got freedom.

Bhagat singh and Bose are branded as extremists. India signed an agreement with britain that they would hand over Bose if he returns alive..what a shame..

India rigged 1951 kashmir general election...The reason for all the chaos afterwards, just because Nehru did not want to give up his home town to another country..

The ghandhi affiliation of nehru family and all the gimmicks and forgery of converting feros khan into ferros ghandhi..

The sole reason that we learnt to accept curruption and our lack of fighting spirit comes from the so called non-violence as a means of victory. I support non-violence, but that was not the reason how we got freedom.

I can't help laughing when some one talks about Indian freedom struggle and patriotism..

Jai Hind..my god I get goose bumps!!!

நியோ சொன்னது…

வணக்கங்கள் தோழர் !

விரிவான அலசல்கள் கொண்ட காத்திரமான கட்டுரை.நன்றி தோழர்! இந்திய அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து காஷ்மீர் மக்கள் விடுதலை அடையும் நாள் வந்தே தீரும் தோழர்!

தோழர் கே ஆர் பி யின் தளத்தில் நீங்கள் எனக்களித்த நம்பிக்கை வரிகள் இன்னமும் ஊக்கப்படுத்திக் கொண்டு இருக்கின்றன தோழர் ! என்ன தவம் நான் செய்தனை ! இரண்டொரு நாளில் உங்களுக்கு அலை பேசுகிறேன். உடனே தொடர்பு கொள்ளாமைக்கு கோபம் கொள்ள வேண்டாம் தோழர் !

நியோ சொன்னது…

ஐம்பதற்கு வணக்கங்கள். இந்த மாதத்தில் உங்களுக்கு வந்திருக்கும் படைப்பு வேகம் தொடருமானால் (தொடரும் ) விரைவில் சதம் நிச்சயம் .... காத்திருக்கிறோம் தோழர் ...

சிங்கக்குட்டி சொன்னது…

இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம் அரசியலால் அழிகிறது :-(

Joe சொன்னது…

அருமையான இடுகை.

விரிவாக, தெளிவாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

Kumar சொன்னது…

//இந்திய தேசபக்தி என்பதையெல்லாம் நடு நிலையற்ற நடுவண் அரசு குழி தோண்டி புதைத்து ரொம்ப நாளாகி விட்டது.......!//

உண்மை, தேவா.... முழுமையாக ஒத்துபோகிறேன்

vasan சொன்னது…

அரை ச‌த‌ம், வாழ்த்துக்க‌ள் ராஜாராம‌ன்.

பாண்ட‌வ‌ர், கெள‌ர‌வ‌ர் ச‌ண்டையால் பார‌த‌மே அழிந்த‌து போல்,
நேரு, ஷேக் அப்துல்லா வாரிசுக‌ள் ம‌ட்டுமே க‌ட‌ந்த‌ அறுப‌தாண்டுக‌ளாக‌
ந‌ட‌த்தும் கூத்தின் உச்ச‌ம் இது. ஒருவாறு அட‌ங்கி இருந்த‌ தேன் கூட்டை (காஷ்மீர்)
1989 டிச‌ம்ப‌ர் 08 ல், முக்தி முக‌ம‌து சைய‌து (வி.பி.சிங் ஆட்சியில் மத்திய‌ உள்துறை அமைச்ச‌ர்)
ம‌கள் ருபியாவை JKLF தீவிர‌வாதிக‌ள் க‌ட‌த்த, ஐந்து தீவிர‌வாதிக‌ளை (முதன்ம‌ந்திரி ஒம‌ரின் எதிர்ப்பை மீறி) விடுத‌லை செய‌து த‌லையெழுத்தை மாற்றின‌ர். அதுவ‌ரை வெறும் பேச்சாய், ப‌க‌ல் க‌ன‌வாயிருந்த‌ த‌னிநாட்டு போராட்டம் கைக‌ளுக்கு வர‌லாம் என்ற‌ நம்பிக்கையை இச்செய‌ல் வ‌ள‌ர்த்தெடுத்த‌து. இந்திய‌ வ‌ல்ல‌ர‌சு வேட‌ம், இந்த‌ இமால‌ய த‌வ‌றால் க‌லைந்து உல‌க‌த்திட‌ம் குறிப்பாய் பாக் ம‌ற்றும் காஷ்மீர‌ ம‌க்க‌ளிட‌ம் மெல்ல‌ர‌சாய் (SOFT STATஏ) வலுவிழ‌ந்த‌து கோமாளியான‌து.
வ‌ருவ‌தை க‌ணிக்க‌த் தெரியாத சுய‌ந‌ல‌ அர‌சிய‌ல்வாதிக‌ளால் சொர்க்க‌ பூமி, புதைபூமிக‌ளாக‌
மாற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. வாழ்க‌ அர‌சிய‌ல், வீழ்க‌ ம‌க்க‌ள்.

சசிகுமார் சொன்னது…

தெளிவான விளக்கங்கள் அருமையான கட்டுரை விந்தை மனிதா என் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது. இந்த பதிவை பரிந்துரை செய்த கும்மி அவர்களுக்கு நன்றி

Related Posts with Thumbnails