செவ்வாய், 19 ஏப்ரல், 2011

நாய்வாய் எச்சில்


தனித்த வெய்யிற்பொழுதில்
கருகிப்போன புற்களை
மென்று தீர்க்கிறது பசு...

காசுகள் குலுங்கா
திருவோட்டுடன்
காலணிகள் தேவையற்ற
கட்டைக்கால் பிச்சைக்காரன்
பசிமரத்த வயிற்றோடு...

வலியைப் பிடுங்கிப்போடும்
பிரயத்தனத்தில்
நாய்வாய் எச்சிலாய்
வழிகிறதென் காதல்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கொங்கை முகங்குழைய... (வயதுவந்தோர் மட்டும்)



காமம்...! ஒற்றை வார்த்தையைச் சுற்றிச் சுழல்கிறது ஒழுக்கம்சார் உலகம்! காமம் என்பது வெறும் நுகர்வாய் மாற்றப்பட எதிர்விளைவாய் வெடிக்கின்றன பண்பாட்டு குண்டுகள். ஒரு பூவின் மலர்ச்சியாய் இயல்பாய் இருக்கப்பட வேண்டியது செயற்கையாய் ஊதிப் பெருக்கப்பட்டு வாழ்வின் கணந்தோறும் நிறைத்து மூச்சுமுட்ட வைக்கின்றது.

காமம் என்ற சொல் மனதில் காட்சிப்படுத்தப்படுகையில் பல திசைகளில் பாயத்துவங்குகின்றது நினைவெனும் காட்டுக்குதிரை!

காமத்திலிருந்துதான் கடவுளுக்கான பயணம் துவங்குகிறது என்கிறார் ஓஷோ. காமத்தைக் குட்டையாக்கித் தேக்கிவைக்கப்பட்ட கற்பனைகள் அழுகி நாற்றமெடுக்க சாக்கடையாய் வாழப் பழகிவிட்ட நாமோ அவரை வெறும் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம். திராவிடர்களின் ஆதிக் கலாச்சார மரபிலிருந்துதான் காமம்சார்ந்த தாந்த்ரீக விஷயங்களை உள்ளடக்கி அதர்வணவேதம் படைக்கப் பட்டது.

தந்த்ரா என்று ஒரு ரகசிய மார்க்கம் பௌத்தத்தின் ஒரு பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டது. காமத்திலிருந்து கடவுளுக்குச் செல்லும் பயணத்தின் தேடல்களை உள்ளடக்கிய தந்த்ரா இன்றும் பலரால் வியாபார நோக்கமாக மாற்றப்பட்டு வெறும் காமநுகர்வினை வர்ணக் காகிதங்களில் கட்டித் தரும் காமதேனுவாகிவிட்டது.

"Chastity is nothing but lack of opportunity" என்று வேடிக்கையாய் சொல்வார் பெர்னாட்ஷா.காமம் தவறென்று கற்பிக்கப்பட்டு பாலியல் வறட்சிக்குள் தள்ளப்பட்ட சமூகம், ரகசியமாய் "ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று புதிய வேதம் பாடிக் கொண்டிருக்கின்றது.

காமம்பாடும் இலக்கியங்களும், காமம் சொட்டும் கலைக் கோயிலகளும் செழித்திருந்த காலம் போய் கழிவறைக் கிறுக்கல்களே இலக்கியமாய்க் கற்பிதம் செய்யப்படுகின்றது.

எனக்கு ஒரு கதை நினைவிலாடுகின்றது;

ஒரு துறவியும் அவரது சீடனும் ஆற்றைக் கடக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளை. ஆற்றிலோ வெள்ளம் தலைக்குமேலே போகின்றது. நீந்திக் கடக்கலாம் என்று முடிவெடுக்கும்போது ஒரு இளம்பெண்ணின் குரல். துறவியைப்பார்த்து அவள் சொல்கிறாள் "சுவாமி! எனக்கு நீந்தத் தெரியாது. தயைசெய்து என்னையும் அக்கரை சேர்ப்பீர்களா?" அக்கரை சேர்க்கிறேன் பேர்வழி என்று  இளம்பெண்கள்மீது அக்கறை காட்டும் இக்காலத் துறவி அல்ல அவர்; நிஜமாகவே அவர் துறவி! சற்று யோசித்தவர் சரி எனச் சொல்லி அவளையும் சுமந்துகொண்டு நீந்தி அக்கரையில் இறக்கிவிட்டு வழியனுப்புகிறார்.

சிறிதுதூரம் சீடன் மௌனமாகக் குருவைத் தொடர்கிறான். பின் மெதுவாய்த் தயங்கித் தயங்கிக் கேட்கிறான் "குருவே! தாங்களோ துறவி! தாங்கள் ஒரு இளம்பெண்ணை சுமந்து வந்தது சரியா?" என்று.

மெல்லப் புன்னகைத்த குரு சொல்கிறார் " நான் அவளை அப்போதே இறக்கிவிட்டேனே? நீ இன்னுமா சுமந்து வருகிறாய்?!" என்று.

இப்படித்தான் நாமும் கணந்தோறும் காமத்தைக் கற்பனையில் சுமந்து திரிகிறோம்.

காமத்தை இயல்பாய் அதன் அழகு மிளிரப் பாடிய தமிழ் இலக்கியங்கள் கணக்கிலடங்கா.

பெரும்பாலோர் ஆணின் காமத்தை செய்வினையாகவும் (active), பெண்ணின் காமத்தை செயப்பாட்டுவினை(passive) ஆகவுமே வர்ணிக்கையில் புகழேந்திப்புலவர் நளவெண்பாவில் தமயந்தியின் காமத்தை செய்வினை (active) யாக வர்ணிக்கிறார்:

நளன் மிகப்பெரும் வீரன்! இருளைக் கிழித்துப்பாயும் மின்னல்போலப் பாய்ந்துசெல்லும் வேலைக் கொண்டவன்! போர்க்களத்தில் வீரமாய்க் களமாடும் நளனின் விம்மித்து அகன்ற மார்புகளின் மீது வனப்புமிக்க கொங்கைகளை மோதி கண்கள் தனது கூந்தலின்மேலும், நளனின் உயிர்மீதும், நீண்டு விரிந்துபோய்த் தன் செவிமீதும் அலைமோதக் காதல் பெருக்கிக் கலவிச் சண்டை செய்கின்றாளாம் தமயந்தி!

"குழைமேலுங் கோமான் உயிர்மேலுங் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள – இழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்
வல்லோடுங் கொங்கை மடுத்து."


அடுத்த பாடல் இன்னும் அழகு! என் மனதில் என்றும் நீங்காத ஒரு பாடல்!

நளனுடைய படை யானைப்படை. களங்களில் மிகுந்த பிளிறல் சத்தங்களோடு போரிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும். ஆனால் நளனுடைய அதிகாரமெல்லாம் போர்க்களங்களில் மட்டும்தான். பள்ளியறையில் நடக்கும் போரில் தமயந்தியின் போர்க்கருவிகளே ஆட்சி செய்கின்றனவாம். என்ன மாதிரியான கருவிகள்?! குங்குமமும், சந்தனமும் குழைத்துப் பூசப்பட்ட வளமையான கொங்கைகள்! காதுவரை நீண்டு பார்வையிலேயே காதலனை விழுங்கிச் செரித்துப்போடும் கண்கள்! அவளது வளையல்கள் எழுப்பும் கிண்கிணி நாதம்தான் இங்கு போர்முரசு!

பகைவர்களை எப்போதும் கொல்லும் யானைப்படைவேந்தனோடான கலவிப்போரில் அவனுடைய மார்புகளோடு மோதி அவளின் கொங்கைகள் குழைகின்றன! காரிருளாய் அவிழ்ந்து கலைந்து விரிகிறது அவள் கூந்தல்! போர்முரசாய் ஒலிக்கின்றன அவளது வளையல்கள்! காமத்தில் சிவந்த அவளது கண்கள் நீண்டு அலைபாய்கின்றன!

"கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கயற்கண் ஓடிச் செவிதடவி – அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து."


செயற்கையாய்க் குப்பிகளில் அடைக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் போன்றதல்ல காமம்! அது ஒளி புக முடியாக் காட்டுக்குள் பூத்திருக்கும் ஒற்றைப்பூ! நுகரத் தேவை, நீண்டு நெடிதான தேடல்....! துடைத்துவிட்டுத் தூக்கியெறியும் காகிதமல்ல... எல்லாம் ஒடுங்கிப் போய் மனம் அசைவற்றுப் போகும் உள்ளொளிப் பயணம்! "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்பது கடவுளுக்கல்ல.... காமத்திற்கே பொருந்தும்.

தென்றலின் மென்மையாய்த் துவங்கும் காமத்தின் பயணம் சூறைக்காற்றாய் மாறி சாத்திரக் கட்டுகளை சாய்க்கவேண்டும். பொருதிய உடல்களில் மூச்சு மட்டுமே மெல்ல ஓடிக் கொண்டிருக்க வேண்டும். மூடிய இமைகளுக்குள்ளிருந்து வழிய வேண்டும் காதலின் வெள்ளத்தில் முங்கு நீச்சல் அடித்துக் கரையேறிய நிறைவு! அணைத்திருக்கும் கரங்களுக்குள் ஒருவருக்கொருவர் உயிர் ஒடுங்கிக் கொள்ளவேண்டும்.

முத்தமிட்டுத் தீராமல் மோதிக்கொண்டே இருக்கும் கடலலைபோல் நானும் தேடிக்கொண்டே இருக்கின்றேன் நான் உள்ளொடுங்கும் தருணங்களை!

எத்தனை தேக்கியும் விழிகளுக்குத் தப்பிக் கொண்டே இருக்கின்றது குருடன் கண்ட சிற்பமாய்! கழுத்தறுபட்ட ஆட்டினின்று கொப்புளிக்கும் குருதியாய்ப் பொங்கிக் கொண்டே இருக்கின்றது தீராக்காமம்!

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

அஸ்வத்தாமாக்கள் சாவதில்லை!

அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற்றாமையின் சுவாலையும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.




'துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. நான் தனியனானேன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உபயோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குருஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனும் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?'



அது குருஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் படுகளம். எங்கும் மரண ஓலம் மட்டுமே எஞ்சி இருந்தது. குருஷேத்திரம் எனப்படும் ஸமந்தபஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குளக்கரையில் துரியோதனன் வீழ்ந்துகிடந்தான். ராஜ்யக் கனவுகள் கலைந்து மரணத்தில் சாயை கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் கவியத் துவங்கி இருந்தது. துரியனின் உதடுகள் வெடித்துக் கிடந்தன. இமைகள் கிறங்கி இருந்தன. துரியனின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியனின் உதடுகளில் தடவினான்.



"துரியா! என் அரசே! என் தோழனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்டளை இடு" பதற்றத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.



துரியன் மெல்ல இமை திறந்தான்.



"அஸ்வத்தாமா! எல்லாரும் மாண்டார்களா? என் பந்துமித்திரர் எவரேனும் எஞ்சி இருக்கிறார்களா? தர்மத்தின் பக்கம் நின்று என் ராஜ்யம் காக்க நான் முன்னெடுத்த போர் முடிந்ததா? குந்தியின் புத்திரர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபாரத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர்த்திருக்கிறேன்?"



"இல்லை துரியா! இன்னும் யுத்தம் பாக்கி இருக்கின்றது. உன் கட்டளைக்காகத்தான் காத்திருக்கிறேன். ஒரு சொல்... பாண்டவரின் வம்சத்தை வேரறுத்து வருகிறேன். இந்த யுத்தத்தின் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைகள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!"



துரியன் முகத்தில் உயிரின் மலர்ச்சி துளிர்த்தது. சற்றே உடலை அசைத்து எழுந்தான். பிளக்கப்பட்ட தொடையின் வாதையில் அவன் முகத்தில் வேதனையின் ரேகைகள். தன் குருதி கலந்த குளத்து நீரள்ளி அஸ்வத்தாமனின் கைகளில் தெளித்தான். "இக்கணம் முதல் கௌரவசேனையின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா. வஞ்சம் முடித்து வா! உன் வரவுக்காய் என் மூச்சு காத்துக் கொண்டிருக்கும்"



அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான்.



இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொள்கிறது. அது தன் கர்ப்பப்பையில் எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்கிறது. அதன் கதகதப்பில் அனைத்தும் துயில் கொள்கின்றன. ஆனால் நிராசையின், துயரத்தின், தனிமையின், துரோகத்தின் தகிப்பை, வெக்கையை உணர்ந்தவர் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்கள் இமைகள் மூடா நெடுங்கதவமாகி இரவை விழுங்கிச் செரித்துவிட முயன்றுகொண்டே இருக்கின்றன. அவர்களின் துக்கம் பெரும் ஓலமாகி தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது.



அஸ்வத்தாமன் அந்த இரவில் விழித்திருந்தான். பாண்டவர் பாசறையில் புகுந்தான். எதிர்த்தவர், உறங்கியவர் என வேறுபாடற்று இருக்க இமைகளை மூடிக்கொண்டே தன் ஆயுதங்களைப் பிரயோகித்தான். எங்கும் எழுந்த மரணஓலம் அவனை உன்மத்தனாக்கி இருந்தது. மானுடத்தின் ஆதிச் சுவையான வன்முறையை, குருதிச் சுவையை அவன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு தலை வீழும்போதும் அவன் கரங்களுக்குள் புதிய ஜீவன் பாய்ந்தது. அவன் புலன்களனைத்தும் பரிபூரண விழிப்பில் இருந்தன. அவை மரணத்தின் விளையாட்டை உணர்ந்து கிளர்ந்தன.



அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நடத்திய வேட்டை குரூரமாக இருந்தது.



'அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ...'



அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலைகள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண்ட அஸ்வத்தாமா காற்றினும் கடிதாய் விரைந்தான்.



"துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலைகளைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித்தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசியில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!"



பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற்றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட்டுகின்றன. இறுதிப்புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புலன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக்கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய்விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடுங்குகிறான்.



துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழுத்து வருகின்றது.



"மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்களின் தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்றுவருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட்டாயே!"



வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல்லை.



அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். 'பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?' மடங்கி அழத் தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ணன்.



"அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன்னும் ஏன் வஞ்சத்தோடு திரிகிறாய்! நீ பிராமணன்... கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும் பார்... மகாபாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிராசையும், தனிமையும், துரோகமும் பீடிக்கப்பட்டோர்! அதோ பார்! ஏகலைவனை... உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கும் பித்தனாய்த் திரிந்து கொண்டிருப்பதை... இன்னும்... இன்னும் துக்கத்தாலும், துரோகத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனைபேர்... அம்பை தொடங்கி,சிகண்டியும், அரவானும், கர்ணனும்... இதோ உத்தரை முடிய... வேண்டாம் அஸ்வத்தாமா... உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கிவைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்துவிடும்."



அஸ்வத்தாமா கைகூப்பினான். "இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத்தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ்வத்தாமா இறந்தான் என்று பொய்யுரைத்து குருத் துரோகத்தின்மூலம் என் தந்தையைக் கொன்றார்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமகனான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபாணியான கர்ணனைக் கொன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரியனை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்... இன்னும் பாரதயுத்தமெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சிசெய்து வந்திருக்கின்றது. கிருஷ்ணா! இனி நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். நான் போகிறேன் கிருஷ்ணா! இன்னும் சொல்கிறேன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் இறப்பதில்லை. அவர் கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. அதன் ஒலியில் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத்துக்கும் கதவடைத்துப் போடட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்"



அஸ்வத்தாமா காற்றோடு கரைந்துபோனான். யுகாந்திரங்களைத் தாண்டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ்சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான்.



அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவில்லை!

வியாழன், 14 ஏப்ரல், 2011

சதுரங்கராணி



நானும் நீயும்
சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தோம்
நெடுங்காலமாகவே
வெள்ளைக்காய்கள் எப்போதும்
உனதாகவே...
சீறிப்பாயும் ராணிக்காயினை
உபயோகப்படுத்த
எப்போதும்
தெரிவதில்லை எனக்கு
குறுக்கில் பாயும் பிஷப் காய்கள்
உன் விரல்களில்...

உன் ஒவ்வொரு முத்தத்திலும்
வெட்டுப்பட்டனர் சிப்பாய் தொடங்கி
ரூக் வரை

நீ செக் சொன்னபோது
உறைந்துபோன
எனது காலத்தின்
உள்ளிருந்து
எழுதிக் கொண்டிருக்கிறேன்
இந்தக்கவிதையினை

கடந்து செல்கிறாய்
மெல்லிய புன்னகையுடன்
சதுரங்கங்களின் ராணியென!

களங்களை இழக்கலாம்; யுத்தத்தை அல்ல!



ஒருவழியாக முடிந்தேவிட்டது பதினான்காவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள். இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும் நம்மை ஆளப்போவது நரிகளா இல்லை ஓநாய்களா என்று தெரிந்துகொள்ள! இந்த சட்டப்பேரவைத்தேர்தலின் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் சரி. அடுத்த ஐந்தாண்டுகளில் உண்மையான இன உணர்வும், மொழிப்பற்றும் கொண்டவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய ஒரு கண்ணோட்டம் :

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்று ஒரு பழமொழி உண்டு. தமிழுணர்வாளர்கள் பல்வேறு திசைகளில் சிதறிக்கிடப்பதை துரோகிகளும் எதிரிகளும் தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டனர். அனைத்துத் தமிழுணர்வாளர்களாலும் மதிக்கப்படும் தலைவரான வைகோ இந்தத் தேர்தல் களத்தில் அப்புறப்படுத்தப்பட்டார். ஈழச்சொந்தங்களை அரவணைத்திருக்கவேண்டிய திமுக கட்சி இன்று இனவுணர்வு, சுயமரியாதை எல்லாம் இழந்து எந்த காங்கிரஸை வேரறுக்க அந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ அந்த காங்கிரஸின் பாதாரவிந்தங்களே சரணம் என்று சரணடைந்துவிட்டது. பாலிவினைல் போர்டுகளின் புகைப்படங்களில் மட்டுமே மீசை முறுக்கித்திரியும் திருமாவளவனும் திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸின் முகாமுக்குள் அடைக்கலமாகிவிட்டார்.

பார்ப்பனத்தாரகை ஜெயலலிதா சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் திடீர் 'ஈழத்தாயாக' அவதரித்துப் பார்த்தார். அந்தத் தேர்தலுக்குப்பின் அந்த அவதாரம் பல்லிளித்துப்போனது. ஆனாலும் துரோகிகளை ஒழித்துக்கட்டினால் எதிரிகளுக்கு முகம் கொடுப்பது எளிதாக இருக்கும் என்ற வியூகத்தில் ஒரு பகுதி தமிழுணர்வாளர்கள் இந்தத் தேர்தலிலும் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். "பிரபாகரனைத் தூக்கில் போடு" என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயாவை ஆதரிப்பதுதானா தமிழுணர்வு என்று எதிர்த்தரப்பு கேலிபேசத் தொடங்கியது. தாங்கவியலா மனவலியுடனேயே தமிழுணர்வாளர்கள் திமுகவை வீழ்த்தும் ஆயுதம் ஜெயாதான் என்ற யதார்த்தக்கசப்பை விழுங்கிக்கொண்டு களத்தில் நின்றனர்.

ஆகக்கூடி தேர்தல் தேர் தெருவெல்லாம் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தேவிட்டது. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இனி வழக்கம்போலவே பழைய காட்சிகள் புத்தம்புது ஈஸ்ட்மென் கலரில் மீண்டும் அரங்கேற்றம் செய்யப்படும். மீனவர்கொலைகளும், தமிழர்களின் வாழ்வியல் சூறையாடப்படுதலும் சிந்துபாத்தின் கன்னித்தீவுக்குப் போட்டியாக தினம்தினம் தொடரும். ஆள்வோரின் 'அலகிலாத் திருவிளையாடல்களில்' நாளொரு ஊழலும், பொழுதொரு லஞ்சலாவண்யமும் நடந்தேறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இந்தத் தேர்தலில் தமிழுணர்வு, இனப்பற்று இவற்றை முன்னிறுத்திப் போராடிய தமிழுணர்வாளர்களுடைய பணி இனிதான் துவங்குகின்றது. கலை, பண்பாடு, அன்றாட வாழ்வியல் என எல்லாவகைகளிலும் நம்மைச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் கும்பலுக்கு ஒரு முடிவுரை எழுதும் பணி!

மறுமலர்ச்சி திமுகவானாலும் சரி, 'நாம் தமிழர்' இயக்கமானாலும் சரி, நெடுமாறன், தியாகு, தாமரை, பெரியார் தி.க, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சி, மே பதினேழு இயக்கம் என்று பல்வேறு பெயர்களில் பல்வேறு திசைகளில் பயணப்படும் தமிழுணர்வாளர்கள் இப்போதுமுதல் ஒருங்கிணைக்கப்படவேண்டும்.

இவர்கள் ஒவ்வொரு இயக்கத்தின் கொள்கைகளும், வழிமுறைகளும் முரண்படலாம். தேர்தல் அரசியலில் ஈடுபடும் இயக்கமாக ஒன்று இருக்கும்; தேர்தல் மறுப்பு அரசியல் செய்யும் இயக்கமாக ஒன்று இருக்கும்; பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புரை செய்வதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமாக ஒன்று இருக்கும்; மார்க்சிய அரசியலைப் பேசுவதாக ஒன்று இருக்கும்; பெரியாரையும், மார்க்சையும் இணைத்துச் செயல்படும் இயக்கம் ஒன்று இருக்கும்; இன அழித்தொழிப்புக்கு ஆளான ஈழச் சொந்தங்களின் இழிநிலைக்கு நியாயம் கேட்பதாக ஒன்று இருக்கும்!

ஆறுகள் பிறக்கும் இடமும், நிலமெல்லாம் செழிக்கச்செய்து பயணப்படும் பாதைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் ஒன்று சேர்வது ஒரே கடல்தான். இயக்கங்களின் கொள்கைகளும், நடைமுறைகளும், போராட்டமுறைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இவர்களின் முதலும் முக்கியமுமானதான இலக்கு தமிழர் வாழ்வு, தமிழர் நலன் என்பதாகவே இருக்கின்றது. ஆனால் நெல்லிக்காய் மூட்டையாக சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழுணர்வாளர்களும் ஒரு கூட்டமைப்பின்கீழ இணையவேண்டும். ஒரு இயக்கம் இன்னொன்றுக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லை. ஆனால் பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயல்திட்டம் அமைத்துச் செயல்படவேண்டும்.

இன்றைய நாடாளுமன்ற சனநாயக அரசியலில் தேர்தலின்மூலம் அதிகாரத்துக்கு வருவது என்பது தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது. மக்களின் அங்கீகாரத்துக்கு அதுவே சிறந்த மற்றும் ஒரே வழியாக இருக்கின்றது. எனவே அனைத்துத் தமிழுணர்வாளர்களின் கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் யாராலும் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கவேண்டும்.

தமிழினத்தின்மேல் காலங்காலமாகத் தொடுக்கப்பட்டுவரும் பண்பாட்டு அழிப்புத் தாக்குதலை, இப்போது பார்ப்பனீயத்தோடு சேர்ந்து உலகமயமாக்கலும், ஏகாதிபத்தியங்களும் மிகத்தீவிரமான அளவில் செய்து வருகின்றன. எதிரிகளின் ஒருங்கிணைவு வலுவாக இருக்கின்றது. அதற்கெதிரான விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழனிடமும் ஏற்படுத்தவேண்டும். எமது கலைகளும், வாழ்வியலும், குன்றாத பண்பாட்டுவளங்களும் மீட்டெடுக்கப்பட்டு செழுமைப்படுத்தப்பட வேண்டும்.

நாள்தோறும் நம்முன்னே நிற்கின்றன புதிய புதிய போராட்டங்கள்! எதிர்கொள்ளும் வலிமையும், நட்புச் சக்திகளுடனான ஒருங்கிணைப்பும் இல்லாவிட்டால் நாம் இனிவரப்போகும் காலங்களிலும் 'புல்லுக்கு மட்டுமே நீர்பாய்ச்ச' வேண்டிய பரிதாபகரமான நிலையில் இருப்போம்.

தோழர்களே! இந்தத்தேர்தலில் தமிழுணர்வாளர்களின் போராட்டம் விழலுக்கிறைத்த நீரென மாறலாம்! வெற்றியின் பலன்களை வீணர்கள் ருசிக்கலாம்! ஆனால்...

இரண்டாம் உலகப்போரின்போது வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன வாசகத்தை நான் நினைவுபடுத்துகிறேன்...

"நாம் களங்களை இழக்கலாம்! யுத்தத்தை அல்ல!"

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்



புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்

பதின்பருவச்
சுயமைதுனங்களின் இறுதியில்
எப்போதும்
எட்டிப் பார்க்கும்
துளி கண்ணீர்

"படத்தோட இருவது ரூவா"
"படமில்லாம பத்து ரூவா"
ரோட்டுப் புத்தகங்கள்...
கதைகளின் நீதி
"தவறுக்கு வருந்துகிறேன்"...

"புள்ளிராஜா"க்களின்
பயமுறுத்தல்களிலும்
ஆணுறை வாங்க அச்சத்திலும்
காற்றில் பீய்ச்சப்பட்டு
கழிந்துபோயின கல்லூரிக்காலங்கள்

'வாலிப வயோதிக
அன்பர்களை'த் தேடும்
விடுதி வைத்தியர்களும்

'அது மிகப் புனிதமானது'
கட்டுரைகளின் நாயகர்களும்

காம்புகள் மட்டும் மூடப்பட்ட
"கவர்ச்சி தப்பில்லை" பேட்டிகளும்

கனவுகளின் சன்னல்களைத்
திறப்பதுவும் மூடுவதுமாய்....

பிறிதொருநாள்...

அரையிருட்டின் ஐந்தாம் நிமிட
இறுதியில்
தோன்றியது

இந்தக் கவிதையை எழுத...

புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்...

திங்கள், 11 ஏப்ரல், 2011

வாங்களேன் கொஞ்சம் அரட்டை அடிக்கலாம்...


Merchant of venice


நான் ஒன்றும் நிரம்பப்படித்த மேதாவியோ, படைப்பாற்றல் மிக்க இலக்கியவாதியோ அல்லன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில முத்துச் சிதறல்களைக் கண்டு அவற்றின் மின்னற்கீற்றுகளில் மனதைப் பறிகொடுத்து மயங்கி நிற்கும் எளியவன். எனக்குக் கவிதை பிடிக்கும். காதலியின் முத்தம் போல, கவிதைகளில் கிறங்கப் பிடிக்கும். சின்னச்சின்ன கற்பனைகளில், கவிதைக்கீற்றுகளில் வாழ்வெனும் புதையல் ஒளிந்திருக்கின்றது என்றெண்ணி மகிழப் பிடிக்கும். எனக்குப் பிடித்த, என்னைக் கிறுக்குப் பிடிக்கவைத்த சிற்சில கவிதை வரிகளைப் பகிர்வதுடன் எனது தமிழ்மண நட்சத்திரவாரத்தைத் துவங்கலாம் என்று நினைக்கிறேன்

1) என் எட்டாம் வகுப்புத் தமிழாசிரியர் பக்கிரிசாமி அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது இராமாயணம் பற்றி வேடிக்கையாகச் சொல்வார் "எலேய்! ராமாயணம் ஒண்ணும் பெரிய புண்ணாக்கெல்லாம் இல்ல. அந்தக்காலத்துல பயலுவ நம்மள ஏமாத்த கட்டிவுட்ட கதெதாண்டா அது, சுருக்கமா ரெண்டே வரில சொல்றேம்பாரு ராமாயணக்கதெய... ராமன் பொண்டாட்டிய ராவணன் தூக்கிட்டுப் போனான்; அடிச்சிப்புடிச்சி அனுமாரு கொண்டுவந்தான். அவ்ளோதாண்டா". தீவிர பெரியாரிஸ்ட்டான அவர் வாயில் புகுந்து எழும் புராணப்பாத்திரங்களுக்கு உயிர் மட்டும் இருந்திருந்தால் எத்தனைமுறை வேண்டுமானாலும் 'நாண்டுகிட்டு' செத்துப்போகும்.

கொஞ்சம் விவரம் புரிந்தபிறகு ஒருசில கம்பராமாயணப்பாடல்களைப் படித்தபோது கம்பனில் மயங்கிநின்றேன். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது பொய்மொழியன்று!


"அஞ்சிலே ஒன்று" எனத்துவங்கும் பாட்டில்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்  தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றுவைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் "

பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவின் மைந்தனான அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான விசும்பின் வழியே பஞ்சபூதங்களில் ஒன்றான கடலைத்தாவி, பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாதேவியைக்கண்டு, தென்னிலங்கை நாட்டில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தான். அவன் நம்மைக் காப்பான் என்பது பொருள்.

இந்த வார்த்தைச் சித்துவிளையாட்டு உங்களை மயக்குகிறதா இல்லையா?

இன்னொரு பாடல்! இராம இராவணப்போரின் இறுதிநாள். இராமனது அம்பால் இராவணன் துளைக்கப்பட்டு களத்திலே வீழ்ந்து கிடக்கிறான். இராவணன் மாவீரன். முன்னொரு காலத்தில் அவன் தவம் செய்தபோது சிவன் தன்முன்னே தோன்றவில்லை என்பதற்காக கைலாய மலையையே அப்படியே பெயர்த்து தன் தோள்களில் தூக்கிய பலசாலி. பிறன்மனைமேல் கொண்ட காதலால் வீழ்ந்தவன். அவனை ஊடுருவிச் சென்ற இராமனது அம்பு அவனது உயிரை மட்டும் குடிக்கவில்லையாம்! வேறென்ன செய்கிறது? ஒரு எள் இருக்கின்ற மிகச்சிறிய இடம் கூட மிச்சம் வைக்காமல் அவன் உடலைத் துளைத்திருந்த இராமபாணமானது அவன் உடலின் உட்புகுந்து தேடிப்பார்க்கிறதாம்! எதை? சீதைமேல் அவன்கொண்ட காதல் அவனுக்குள் எங்காவது மிச்சம் இருக்கின்றதா என்று அலசி ஆராய்ந்து பார்க்கிறதாம்!

இப்போது இந்தப்பாடலைப் படித்துப் பாருங்கள்!

"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறோ !
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி "

2) எனக்கும் வாழ்க்கைக்கும் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது ஒரு சூதாட்டம். அவ்வப்போது வெல்வதும், தோற்பதுவுமாக நடக்கும் இந்த ஆட்டத்தின் ருசியில் ஊறிப்போய்க் கிடக்கிறது மனது. சூதாட்டத்தின் ஜோக்கராக என்னையே மாற்றிக் கொள்கிறது வாழ்க்கை சில பொழுதுகளில். எதனைப் பெறுவதற்காக இந்த ஆட்டத்தை நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்? என் எல்லா உடைமைகளையும் பணயம் வைக்கச்சொல்லி என்னைத் தூண்டுவது எது? "ஆட்டக்களத்தில் கேள்விகளுக்கு இடமில்லை. யுத்தம் செய் அல்லது செத்துப்போ" என்று கொக்கரிக்கிறது வாழ்க்கை. நானும் அதையே வேண்டுகிறேன் "வெற்றியின் ருசி தெரியாமல் வெறுமனே மூச்சு விடுவதால் மட்டுமே என் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. எனக்குத் தேவை வெற்றியின்பின் மகுடம் சூட்டும் கரங்களே! கண்ணீர் துடைக்க அல்ல!" என்று யுத்தபேரிகை முழக்குகிறேன்.

மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்! உங்கள் நாடி நரம்புகளில் எதோ ஒரு உத்வேகம் பாய்கிறதல்லவா?

உரியதைக் கொடு
************************

நான் வெற்றி பெற இயலாது
என்பதே
உன் முடிவானால்

வாழ்க்கையே
என்னைத் தோற்கடித்து விடு

திட்டவட்டமாக
யாவரும் அறியும்படி
என் தோல்வியை உரத்துச் சொல்

ஒரு மூட்டைப் பூச்சியை
நசுக்குவது போல
நசுக்கித் தடவு

விழுங்கி
வாயைத் துடைத்துக் கொண்டு போ
உன்னிடம் எனக்கென்ன வருத்தம்?

ஆனால்
தயவு செய்து கொடுக்காதே
ஆறுதல் பரிசுகளை மட்டும்

ஏதோ கிடைத்ததே
என்று போக
இது பிரார்த்தனையல்ல
சண்டை

3) பல வருடங்களுக்கு முன்னர் என் ஆங்கில ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் ஷேக்ஸ்பியரின் 'மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்' நாடகத்தின் ஆங்கிலம், தமிழ் இரண்டு பதிப்புகளையும் கொடுத்து என்னைப் படிக்கச் சொல்லி இருந்தார். தமிழாக்கத்தில் ஒரு கவிதை என்னை கட்டிப்போட்டது.

ஷைலாக் என்னும் வட்டித்தொழில் செய்யும் யூதன் தனது எதிரியான ஆண்டனியோ என்பவன் தனக்குத்தர வேண்டிய தொகைக்குத் தாமதமானதால் வழக்குமன்றம் செல்கிறான். அவனது வாதங்களாக அவன் சொல்லும் வசனம் அது. வில்லன் பாத்திரமாக இருக்கும் ஷைலாக் தனது தரப்பு நியாயங்களைப் பட்டியலிடும்போது ஒரு யூதனாக தான் எவ்வாறெல்லாம் , அவமானப் படுத்தப் படுகிறேன், எவ்வாறெல்லாம் ஒடுக்கப்படுகிறேன் என்று அடுக்குகிறான்:

"நானொரு யூதன். ஒரு யூதனுக்கு கண்கள் இல்லையா? எனக்கும் உம்மைப்போல கைகளும், கால்களும், அங்கங்களும், உணர்ச்சிகளும், விருப்புவெறுப்புகளும், பந்தபாசங்களும் இல்லையா? நீங்கள் உண்ணும் அதே உணவைத்தான் நானும் உண்கிறேன். உங்களைக் காயப்படுத்தும் அதே ஆயுதங்கள் என்னையும் காயப்படுத்தும். உங்களைப்போலவே எனக்கும் நோய்களும் வரும். உங்களைக் குணப்படுத்தும் மருந்து என்னையும் குணப்படுத்தும். உங்களுக்காக வருகின்ற வசந்தகாலமும், கோடையும் எனக்கும் சேர்த்தே வருகின்றன. என் உடலைக் குத்தினால் உம்மைப்போலவே எனக்கும் ரத்தம் கசியும். உம்மைச் சிரிக்கச் செய்பவை என்னையும் சிரிக்கச் செய்யும். நீவிர் விஷம் ஊட்டினால் நான் சாகத்தான் செய்வேன். ஏனெனில் நானும் உம்மைப்போலவே மனிதப்பிறவியே! நீங்கள் எம்மைத் துன்புறுத்தினால் நான் பழிவாங்கக்கூடாதா? நானும் உம்மைப்போல் ஒரு மனிதனே! உமக்குப் பொதுவான எல்லாம் எனக்கும் பொதுவாகவே இருக்கின்றன..." என்று ஷைலாக்கின் வாதங்கள் நீள்கின்றன.

"Hath
not a Jew eyes? hath not a Jew hands, organs,
dimensions, senses, affections, passions? fed with
the same food, hurt with the same weapons, subject
to the same diseases, healed by the same means,
warmed and cooled by the same winter and summer, as
a Christian is? If you prick us, do we not bleed?
if you tickle us, do we not laugh? if you poison
us, do we not die? and if you wrong us, shall we not
revenge? If we are like you in the rest, we will
resemble you in that. If a Jew wrong a Christian,
what is his humility? Revenge. If a Christian
wrong a Jew, what should his sufferance be by
Christian example? Why, revenge. The villany you
teach me, I will execute, and it shall go hard but I
will better the instruction"

அன்று யூத இனம்! இன்று தமிழினம்! இனத்தால், மொழியால் தமிழனாய் இருக்கும் ஒரே பாவத்துக்காக ஈழத்தில் அழிக்கப்படும் தமிழினத்திற்கு இந்த வரிகளைப் பொருத்திப் பாருங்கள்! தானாடாவிட்டாலும் தன் சதையாடவில்லையா நமக்கு? வாழ்வுரிமை அனைத்தும் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட ஓர் இனத்துக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

குறைந்தபட்சம் நம்மால் ஆகக்கூடியது சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலைகளுக்குப் பங்காளியாய் நின்றிருந்த காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து வேரறுப்போம். பதவி சுகத்தில், அதிகாரப் பசியில் , ஆனிப்பொன் மஞ்சத்தில் மல்லாந்திருப்பதற்காய் இன அழித்தொழிப்புக்கு காங்கிரஸின் காலை நக்கித் துணைநின்ற திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!

திங்கள், 4 ஏப்ரல், 2011

நான்...கிரிதரன்! - 1


ட்ரம்மில் அடுத்த லோடு தோல்களை ஏற்றிக் கொண்டிருந்தான் முரளி. சுறுசுறுப்பான பையன். மதியம் ஒரு மணியில் தொடங்கி இரவு மணி இரண்டு ஆகியும் துறுதுறுவென்று வேலை செய்துகொண்டிருக்கிறான். எனக்கு கண்கள் இரண்டும் கோவைப்பழமாகச் சிவந்து எரிந்துகொண்டிருந்தன. தொடர்ந்து முப்பத்தி ஆறு மணி நேரமாக ரூமுக்கே போகாமல் கண்டினியூவஸ் ஷிப்ட். மதியம் தின்ற அரை வேக்காட்டு லெமன் சோறு செரிக்காமல் வயிற்றோடு யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது.

ஓரமாய் வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். கொஞ்சம் என் முன்கதைச் சுருக்கத்தைச் சொல்லி விடுகிறேன்.

அது சென்னையின் ஒதுக்குப்புறமாக குரோம்பேட்டைப் பகுதி நாகல்கேணியில் இருந்த ஒரு சின்ன லெதர் ஃபேக்டரி. பதப்படுத்தப்பட்ட தோல் அதாவது ரா மெட்டீரியலை பர்ச்சேஸ் செய்து அதன் அடுத்தகட்ட ப்ராசஸை மட்டும் எடுத்துச் செய்யும் ஒரு ஜாப் வொர்க் யூனிட். இரவு பகல் இருபத்திநாலு மணிநேரமும் மூன்று ஷிப்டுகளை ஓட்டினால்தான் போட்ட முதல் கைக்குத் திரும்ப வரும். அரசாங்கத்தின் பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டின் கிடுக்கிப்பிடிகளால் தோல்பதனிடும் தொழில் நசித்துப் போய்க் கொண்டிருந்த காலகட்டம்.

நான் கிரிதரன். தஞ்சை மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, முட்டிமோதி ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் லெதர் டெக்னாலஜி படித்துமுடித்து இப்போது ஆயிரத்தி எண்ணூறு ரூபாய் சம்பளத்துக்கு இந்தக் கம்பெனியில் ட்ரெய்னீ டெக்னீஷியனாகச் சேர்ந்து நாற்பத்தியிரண்டு நாள்களாகின்றன.வீட்டில் இருந்து வாங்கிவந்த எட்டாயிரம் ரூபாயை வைத்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்து நானும் என் நண்பனும் தங்கி இருக்கிறோம்.

இருபத்தியிரண்டு வயதில் எனக்கு வாழ்க்கை புரிய ஆரம்பித்திருக்கிறது. எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என் பெற்றோர் எனக்கு வறுமையைக் காட்டியதில்லை. ஓரளவு மதிப்பெண்களுடன் வாணியம்பாடியின் அந்த தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் லெதர் டெக்னாலஜி சேர்ந்தபோது என்னை பயமுறுத்திய இரண்டு விஷயங்கள் ஆங்கிலம், மிக சகஜமாய்ப் பழகும் பெண்கள். இரண்டுமே எனக்குக் கைவரும்போது நான் இறுதியாண்டில்! பிடிவாதன், மூர்க்கன், நினைத்ததை எப்பாடுபட்டாவது அடையவேண்டும் என்ற வெறியுடையவன். ஐந்தரை அடி உயரம், கருப்பு நிறம், லேசான திக்குவாய். இதுதான் நான்.என்னைப்பற்றி இன்னும் நீங்கள் போகப்போகத் தெரிந்து கொள்வீர்கள்.

ஜெனரல் ஷிப்ட் என்றுதான் பேர். எட்டுமணிக்குப் போனால் ரூமுக்குத் திரும்ப இரவு பதினோரு மணியாகிவிடும். மடிப்புக் குலையாத உடுப்புடன் வேலை, பல ஆயிரங்களில் சம்பளம் என்றெல்லாம் கனவுகளோடு எஞ்சினியரிங் காலேஜுக்குள் நுழைந்த நாட்கள் மனதில் புகைபடிந்த பழைய புகைப்படம் போல் ஆகிவிட்டன. கம்பெனிக்குள் நுழைந்தவுடனேயே மாற்று உடுப்புக்களை போட்டுக்கொண்டு அன்றைய லோடினை ட்ரம்மில் ஏற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்யவேண்டும். ட்ரம்மில் ஓட்டுவதற்கான கெமிக்கல்களை செலக்ட் செய்து அவற்றை தனித்தனி பக்கெட்டுகளில் ஊற்றி மிக்ஸ் செய்து ட்ரம்மில் ஏற்றப்பட்ட தோலுடன் கலந்துவிட்டு, அடுத்தடுத்து க்வாலிட்டி கண்ட்ரோலுக்காகக் காத்திருக்கும் தோல்களைப் பார்க்க ஆரம்பித்தால், முடிப்பதற்குள் ட்ரம் ஓடி முடிந்திருக்கும். இறக்கி அவற்றைக் காயவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். மீண்டும் அடுத்த லோடு, அடுத்த ட்ரம், கெமிக்கல்கள்.

நான் படித்த லெதர் டெக்னாலஜி துறையில் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்த காலகட்டம். எப்படியோ முட்டிமோதி இந்த கம்பெனியில் வேலையில் சேர்ந்தாகிவிட்டது. இப்படியே இன்னும் இரண்டு வருடங்களை ஓட்டினால் அடுத்தடுத்து சின்னச்சின்னதாக வளர்ச்சிகள், அடுத்தடுத்த கம்பெனி... முப்பது வயதை நெருங்கும்போது ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்தாயிரத்தைத் தொடும் சம்பளம்... யோசிக்கவே அயர்ச்சியாய் இருந்தது. எத்தனை கனவுகள்! எல்லாம் கசங்கிப்போய் இன்று இந்தக் கம்பெனியில்..... படிப்பதற்காக வாங்கிய மூன்று லட்சம் ரூபாய் கடனும், அதற்கான வட்டியும் நினைவுகளில் வந்துவந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றது

எனக்கு வாய்த்த ஷிப்ட் சூப்பர்வைசர் ஆனந்தன் என்கிற சனியனின் டார்ச்சர் வேறு. தலையில் கருங்கல்லைத் தூக்கிப்போட்டுவிடலாமா என்று தோன்றும். சுமார் இருபது பேர் வேலைபார்க்கும் இந்த கம்பெனியில் அவன் கண்ணுக்கு நான் மட்டும்தான் உறுத்துகிறேன் போல! டிப்ளமோ படித்துவிட்டு சூபர்வைசராக இருக்கும் அவன் வேலைக்கு டிகிரி படித்த நான் சவாலாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்று இல்லைதான். கூடுதலாக இன்னொரு காரணமும்....

பத்மினி!

நாட்டுக்கட்டை, நாட்டுக்கட்டை என்பார்களே, இவளைப்பார்த்தால் அதன் முழு அர்த்தமும் விளங்கும். கருந்தேக்கு மரத்தில் கடைந்தெடுத்த சிற்பம்போல் இருப்பாள். இருபது வயது. கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆகிறது. புருஷன் குடிகாரன். இரண்டு பாட்டில் சாராயம் இருந்தால் பெற்ற தாயாரைக்கூட விற்றுவிடுவான். பத்மினியின் இரவுகள் கண்ணீரில் மிதந்தன.

நான் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த நான்காம் நாளில் பத்மினி என்னை அவளுக்குள் உறிஞ்சிக்கொண்டாள். அவள் தாபத்திற்கு நானா, இல்லை என் காமத்துக்கு அவளா என்று தெரியவில்லை. ஸ்டோர் ரூமிலும், மொட்டைமாடி இரவுகளிலும், அவளது ஒதுக்குப்புறக் குடிசையிலும் முப்பது சொச்சம் நாட்கள் கரைந்து காணாமல் போயின.

சிகரெட்டை காலின்கீழ் நசுக்கி உள்ளே நுழைந்தேன்.

என்னைப் பார்த்தவுடன் ஏதோ எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பத்மினி அருகே வந்தாள்.

ஒரு சின்ன பக்கெட்டில் அந்த லோடுக்குத் தேவையான கெமிக்கல்களை எடுத்து பத்மினியிடம் நீட்டினேன். பக்கெட்டை வாங்குவதற்குப் பதிலாய் புடவை முந்தானை விலகி அருகில் வந்து "என்ன இன்னைக்கு கண்டுக்கவே மாட்டேன்கிறீங்க?" என்று லேசாய் உரசினாள். சட்டென அவளைத் தள்ளி விட்டேன். அவள் முகம் சுருங்கியது. சட்டென அவள் முகம் வாடியதைப் பார்த்து.. “முப்பது மணி நேரம் தொடர்ந்து வேலை பாத்திட்டிருக்கேன்.. புரியாம உரசுறியே.."

"புரிஞ்சிதான் உரசினேன்..." என்று முணுமுணுத்துக்கொண்டே அவள் நகர...
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்

கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து இன்றுவரை எனக்கு இருந்த ஒரே வடிகால் பத்மினிதான். என் கோபம், வெறி, மன அழுத்தம் எல்லாவற்றையும் இவள் உடலில்தான் இறக்கி வைக்கிறேன். அன்புக்கும் பகிர்தலுக்கும் ஏங்கும் ஜீவன். கிடைத்தவுடன் கன்றுக்குட்டிபோல துள்ளிக்குதிக்கிறாள். 'அவளைப்போய்த் திட்டி...ச்சே...'

அடுத்தடுத்து ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்து முடித்து நிமிர்ந்தேன். இன்னும் அரைமணிநேரம் ஓய்வெடுக்கலாம். 'சரி...பத்மினியையாவது சமாதானப்படுத்தலாம்' என்றெண்ணி...

"பத்மினி... எனக்கு டீ எடுத்துட்டு வா" என்றேன்

டீ கொண்டுவந்தவளோடு பேசிச் சிரித்துக் கொண்டே ஊதிக்குடிக்கத் தொடங்கினேன்.

"என்னடி மூஞ்செல்லாம் இன்னிக்கு ரொம்ப பளபளப்பா இருந்திச்சி. புருஷன் செமையா கவனிச்சானோ!" என்று அவளை வம்பிழுத்தேன்.

"அவன் கிழிச்சான். நாலு கிளாஸ் சாராயத்தை எறக்குனா அவனுக்கு எது எங்க இருக்குன்னே தெரியாது... அப்புறம் என்னத்தைப் பண்ணி...."

லோடு ஆர்டருக்கு வெளியே போயிருந்த ஷிப்ட் சூபர்வைசர் ஆனந்தன் உள்ளே நுழைந்தான். பத்மினியை மடக்க முயன்று தோற்றதால் ஏற்கனவே அவனுக்கு இருந்த இயலாமையின் எரிச்சல் இப்போது எங்கள் இருவரையும் சேர்ந்து பார்த்ததில் அவனுக்கு அதிகமாகி இருக்கவேண்டும்

"ஏய் கிரி இங்க வா."

ரூமுக்குள் கூப்பிட்டவனை எரிச்சலாய் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

"எத்தனாவது லோடு ஓடிட்டு இருக்கு"

"மூணாவது லோடு இப்பத்தான் சார் ஏத்தியிருக்கேன். இன்னும் டூ அவர்ஸ் ஆகும்"

"வேலையப் பாக்காம என்ன அவகிட்ட புடுங்கிகிட்டு இருக்கே? எப்ப பாத்தாலும் கைல புடிச்சிக்கிட்டே திரிவியோ?"

எனக்கு சுர்ரென்று ஏறியது. கையில் இருந்த டீ தம்ளரை அவன் முகத்தில் விசிறினேன். சுடச்சுட அலறினான்.

"ங்கோத்தா. சூபர்வைசர்னா அந்த வேலைய மட்டும் புடுங்கு போதும். என் வேலைய நான் ஒழுங்கா செய்யலன்னா அத மட்டும் கேளு. நான் எவகிட்ட படுக்கிறேன், எவகிட்ட இளிக்கிறேன்னு மாமா வேலை பாக்குற வேலையெல்லாம் வேணாம். போடா நீயும் உன் கம்பெனியும்"

சூபர்வைசர் ரூமை விட்டு வெளியே வந்த என்னை பத்மினி திகிலாய்ப் பார்த்தாள். என் பேகை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்.

(பயணம் தொடரும்...)
Related Posts with Thumbnails