சனி, 31 ஜூலை, 2010

மாற்றுமருத்துவம் ஏமாற்றுவேலையா? - Dr.புரூனோவின் பதிவையொட்டி சில சிந்தனைகள்

நீண்டநாட்களாகவே மாற்றுமருத்துவம் பற்றியும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரச்சூழலில் அதன் அவசியம் பற்றியும் எழுதவேண்டும் என்ற
எண்ணத்தில் இருந்த எனக்கு இன்று மரு.புரூனோ அவர்களின் பதிவைப் பார்த்ததும் உடனடியாக சில கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்பதால் இந்தப் பதிவு...

நான் மாற்றுமருத்துவத்துறையைச் சார்ந்தவனல்லன். எனவே இந்தப் பதிவில் வரும் கருத்துப்பிழைகள் முழுக்க முழுக்க என்னை மட்டுமே சார்ந்தவை என்பதை முதலிலேயே தெளிவுபடுத்துகிறேன்.

மருத்துவர் தனது பதிவில்

//இவ்வளவு நாளாக அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை நாங்கள் குணமாக்குகிறோம் என்று புருடா விட்டு நோயாளிகளிடமிருந்து பணம் பறித்து வந்தவர்களின் நிலை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிறது //

என்று தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்கிறார்.

எத்தனை அலோபதி மருத்துவர்கள் தங்கள் தொழிலில் தார்மீக நியாயங்களை மீறித் தவறு செய்கிறார்கள்? பட்டியலிட்டால் பக்கங்கள் தீராது. அவர்களை உதாரணப்படுத்தி அலோபதி நோய்களைக் குணமாக்கும் என்பது புருடா என்று குற்றம் சாட்டினால் அது எவ்வளவு பெரிய அறியாமையோ அதற்கு சற்றும் குறையாதது நம் மருத்துவரின் குற்றச்சாட்டு.

ஒரு சில லாட்ஜ் வைத்தியர்கள் செய்யும் தவற்றை மிகைப்படுத்தி சொல்லும்போது அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதுதான் நேர்மையானது.

மேற்கண்ட உயர்நீதிமன்றத்தீர்ப்பை சுட்டிக்காட்டியவர் அந்த வழக்கைத் தொடுக்கவேண்டிய சமூக, பொருளாதாரக் காரணிகளையும் அலசி ஆராய்ந்திருக்கலாமே!!!

நிற்க...

மாற்றுமருத்துவம் பற்றிய எனது சில கருத்துக்களுக்கு வருகிறேன்...

மாற்றுமருத்துவம் என்றால் என்ன?

உலகளாவிய அளவில் கோலோச்சும் (ஏன் கோலோச்சுகிறது என்பதை விளக்க வினவு தோழர்கள் போன்றோர்கள் முன்வரவேண்டும்) அலோபதி மருத்துவமுறைக்குப் பதிலீடாக அந்தந்தக் கலாச்சார மற்றும் வாழ்வியல் பிண்ணனிகளோடு பிணைந்திருக்கும் பாரம்பரியமான மருத்துவமுறைகள் (உ-ம்: சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர், ரெய்கி, மலர்மருத்துவம் போன்றவை) மாற்றுமருத்துவமுறைகள் என அழைக்கப் படுகின்றன.

அவற்றின் நம்பகத்தன்மை?

நூற்றாண்டுகளைத் தாண்டியும் தன் செல்வாக்கினை இழந்துவிடாமல் இன்னும் அலோபதியின் தாக்குதல்களை சமாளித்துத் தாக்குப்பிடிக்கும் திறன் ஒன்றுபோதாதா? இருக்கட்டும்...

ஆயுர்வேதத்தின்(ஆயுள்+வேதம்- வாழ்க்கையின் வேதம்) வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பாருங்கள்... இன்றைக்கு நவீன அறிவியல் முறை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே... அந்த காஸ்மெடிக் சர்ஜரி பற்றி புட்டுப் புட்டு வைக்கிறார் ஆயுர்வேதத்தின் மூலவர்களில் ஒருவரான சுஸ்ருதர். ரணசிகிச்சையும் சத்திர சிகிச்சையும் ஆயுர்வேதத்தில் வலிமையாகவே இருக்கின்றன.

தென்னாட்டின் பாரம்பரியமான சித்தவைத்திய மரபின் மூலிகைச் செல்வங்களைத் தானே அலோபதி தன் நவீன சோதனைச் சாலைகளில் பகுப்பாய்வு செய்து தன் சுயக்கண்டுபிடிப்பாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது?? ( இல்லையென்று மறுப்போர்க்கு ஒரு கேள்வி... ஏன் ஆயுர்வேதம் மற்றும் சித்தாவின் முக்கிய மருந்தினங்களாகத் திகழும் வேம்பு, பாகற்காய், மஞ்சள் போன்றவற்றுக்கு திருட்டுத் தனமாக மேலைநாட்டு மருந்தியல் ஆய்வு நிறுவனங்கள் காப்புரிமை பெறுவதில் தீவிரம் காட்டுகின்றன?)

''நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள் எண்: 948)" என்ற குறளின் பொருளை மிக முழுமையாய் நிறைவு செய்யும் வகையில் "நோய்க்கு மருந்தல்ல நோயாளிக்குத் தான் மருந்து" என்று கூறி மருத்துவத் துறையில் பெரும்பாய்ச்சலை நிகத்தியது ஹோமியோபதி.. ஒரே மாதிரியான நோய் பலருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித மருந்து என்ற நடைமுறையிலும் நோயாளியின் உடல், மன மற்றும் சமூகக் கூறுகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சையை மேற்கொள்ளும் ஹோமியோவின் சிறப்புக்களை நானே அனுபவித்துப் பார்த்து வியந்திருக்கிறேன். எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.

மேலும் விரித்துக் கூறப்போனால் இது பெருந்தொடராக எழுதவேண்டிய பதிவாக மாறிவிடும்

ஏன் வேண்டும் மாற்றுமருத்துவம்?

அலோபதி மருத்துவமும், அதுசார்ந்த மருந்தியல் நிறுவனங்களும் நோயாளிகளை வெறும் வாடிக்கையாளர்களாக நுகர்வு பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் அவலம் இன்று தலைவிரித்து ஆடுகின்றது. எப்போது ஒரு மருத்துவன் "தான் முதல் போட்டு நடத்துகிறேன். எனவே தனக்குத் தன் முதலையும்,வட்டியையும் மீட்டாக வேண்டும் ( MBBS சீட்டுக்கு 50-100 லட்சங்களில் நன்கொடை??)" என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறானோ அப்போது அவன் noble profession செய்பவன் என்ற நிலையிலிருந்து profittable profession செய்பவன் என்ற நிலைக்குக் கீழிறங்குகின்றான்.

பொதுவாகவே மக்களை வெறும் நுகர்வோராக மாற்றும் கலாச்சாரச் சீரழிவைத் தடுக்கவேண்டிய அவசியத்தில் தேசம் இருக்கும் நிலையில் மாற்றுமருத்துவமுறைகள் இயல்பாகவே அதைச் செய்து வருகின்றன. உதாரணமாக பசுமைவளர்க்கும் கட்டாயத்தில் உலகம் இருக்கும்போது சித்தவைத்தியமுறையும், ஆயுர்வேதமும் பசுமையான மரஞ்செடி,மூலிகைகளைச் சார்ந்திருப்பதை சுட்டிக்காட்டலாம்.

அதுமட்டுமல்லாமல் அலோபதி மருத்துவம் மனிதனை எந்திரமயமாக- தலையில் பிரச்சினை என்றால் தலைக்குத் தான் மருந்து, சிறுநீரகத்தில் கோளாறு என்றால் அங்கு மட்டும்தான் சிகிச்சை- என்ற அளவில்தான் பார்க்கின்றது. ஆனால் சித்தா, ஆயுர்வேதம்,ஹோமியோ போன்றவை மனிதனை ஒரு முழுமையான உயிர்த்தொகுப்பு என்ற கோணத்தில் அணுகுகின்றன.

மேலும் மூன்றில் இரண்டுபங்கு மக்கள் மூன்றுவேளை உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு வறிய தேசத்தில் பெருமளவில் ஊக்குவிக்கப்படவேண்டியதாய் இருக்கின்றன இம்மாதிரியான மாற்றுமருத்துவமுறைகள்.

இந்த இடத்தில் சீனாவில் கலாச்சாரப்புரட்சி நடந்தபோது மாவோ அறிமுகப் படுத்திய 'வெறுங்கால் வைத்தியர்கள்' (மக்களைத் தேடிச்சென்று பாரம்பரியமுறையில் எளிமையாக வைத்தியம் செய்வது) என்ற திட்டமே சீனாவின் வைத்தியத் தேவையை மிக அதிக அளவில் ஈடுகட்டியது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும் உலகசுகாதார நிறுவனம் (WHO) தனது ஆய்வறிக்கை ஒன்றில் 70 சத நோய்களை சாதாரண மருத்துவ அறிவு இருந்தாலே குணப்படுத்தமுடியும்; அதற்கு 10-ம் வகுப்புக் கல்வித்தகுதி இருந்தாலே போதும் என்று கூறியிருக்கிறது. அதனடிப்படையில் கல்பாக்கத்தைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர் திரு.ராஜரத்தினம் என்பவர் தனது தொண்டமைப்பின் வாயிலாக மேற்கூறிய "வெறுங்கால் வைத்தியர்கள்" போன்றதொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வெற்றிகண்டிருக்கிறார் என்பதையும் உற்றுநோக்கவேண்டும்.

என்ன செய்யவேண்டும்?

1) மாற்றுமருத்துவமுறைகளைப் பற்றிய மிகப்பெரும் ஆராய்ச்சிகளை அரசும் மக்கள் நலன்சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் முன்னெடுக்க வேண்டும்

2) மாற்றுமருத்துவம் பற்றிய தெளிவான கொள்கைத்திட்டத்தை அதற்குரிய கொளகை வகுப்பாளர்களைக் கொண்டு வகுத்திடல் வேண்டும்

3) மக்களிடையே இதுபற்றிய பிரச்சாரங்களை முறையான திட்டமிடலுடன் மேற்கொள்ள வேண்டும்

4) மாற்றுமருத்துவம் என்பது ஒரு தேசத்தின் சுயச்சார்பான பொருளாதாரத்திற்கு அவசியமானது என்ற புரிதலும், அக்கறையும் ஆட்சியாளர்களுக்கும் , அறிவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வரவேண்டும்

5) பகாசுர பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளை தீவிரமாக ஒடுக்கிட அரசை வலியுறுத்தக் கோரி மக்கள்நலன் சார்ந்து இயங்கும் அனைத்து இயக்கங்களும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்

பின்குறிப்பு: இதுவரை வாசகர்களிடம் ஓட்டுப் போடுங்கள் என்று நான் கேட்டதில்லை. இந்தப் பதிவின் நியாயமும் தேவையும் உங்களுக்கு சரியானது என்று தோன்றினால் கட்டாயம் ஓட்டுப் போடுமாறு உங்களை இறைஞ்சுகிறேன்.

பின்குறிப்பு 2: இந்தக் கட்டுரை நிச்சயமாக முழுமைபெற்ற ஒன்றல்ல என்பது எனக்குப் புரியும். சில சிந்தனைவிதைகளைத் தூவுவது மட்டுமே என் நோக்கம். இதுபற்றிய விவாதத்தை தகுதிவாய்ந்தோர் மென்மேலும் முன்னெடுக்கவேண்டும் என்பதும் எனது தாழ்மையான வேண்டுகோள்.

வெள்ளி, 30 ஜூலை, 2010

களவுபோன பௌருஷங்கள்

நிணக்குழம்பின் மணம் நுரைக்க நுரைக்கத் ததும்பிக் கொண்டிருக்கும் கோப்பையிற்பொருந்திய உதடுகளின் வழியே கசிந்து வழியுமந்தக் கந்தக நீரூற்றின் கொடுங்கசந்த சாரங்களே அமுதமெனக் கண்ட கனாக்களினிடையே விழித்தெழுந்தயென் ஆத்மாவின் களவாடப்பட்ட பௌருஷங்களையெண்ணி விம்மியழும் கண்ணீராற்றின்கண் மிதந்து செல்லும் உறிஞ்சிப்பின் உமிழப்பட்ட இந்திரியங்களின் மாமிச நாற்றங்கள் ஒன்றாய்ச்சேர்ந்தொரு பேய்க்குழந்தையாய் மாறித்தன் அந்தகாரக் கரங்களால் நட்சத்திரங்களைப் பெயர்த்துச் செய்த கருந்துளைக்கூட்டுக்குள் அடைபட்டும் அல்குல் வாசம் தேடி இறைஞ்சும் நாசித்துவாரங்களின்மீது சபித்தபடிக்குத் தன் கூடுடைக்கக்போராடி வென்ற மனக்குரங்கின் கற்பனைகளிலலையும் சிதைக்கப்பட்ட யோனிகளைக் குதூகலித்துக் கெக்கலித்தபின்னெழும் குற்றப் புலம்பல்களெல்லாம் மலையெனச்சேர்வதில் பீதியுற்றுப் பகிரவியலா அவஸ்தையில் தன்னைக்கீறிக் குருதி சுவைத்து நாசுழற்றும் அவலச்சுவைமிகுந்ததொரு நாடகக் காட்சிதனைப் பரிகசிக்கும் மாந்தர்தம் கண்பார்க்கக்கூசி ஒளிந்து ஒளிந்தென் பயணம் தொடர்கிறேன் என்னை ஸ்வீகரித்து என்னைக் கரைத்து என்னின் என்னைத் தனதாக்கி என்காதல் அள்ளித் தன் நயனங்களில் தேக்கியெனக்கான நயனதீட்சையளிக்கும் கன்னியினை....

வியாழன், 29 ஜூலை, 2010

கரைந்துபோகிறவனின் வரிகள்

கவித்துவ வரிகள் பொங்கிவழியுமந்தப் பின்னிராப்போதிற்றன்னுறக்கம் தேடிச்செல்லும் ஆயத்தத்திலிருந்த மங்கிய நிலாவுடனான சிற்றுரையாடல் ஒரு இனிய இசைப்பாடலாய் அவன் தன்நெஞ்சிலே கசிந்திருக்கத்தன் கோப்பையிலேயிருந்த கடைசி மிடற்றை அடிநாவின் எரிச்சல்வேட்கைக்கு இதமாயிறக்கையில் அவன் காதலொரு மண்புழுவாய் மெல்லூர்ந்துத் தற்புணர்ச்சி செய்து பெற்ற குழந்தையைத் தன் காற்பெருவிரலால் நசுக்கித் தேய்த்த வெறுப்பில் சட்டெனவெழுந்து ஓடத்துவங்கியவன் மனம் ஒரு காற்றாய் மாறி காடுமலை, நாடுநகரம் கடந்து கடிதெனத்தாண்டிப்போய் அங்கே பேரழுகையாய் மாறி வீழ்ந்துகொண்டிருந்ததோர் அருவியிற்கலந்து ஜெபிக்கத் தொடங்கிய மந்திரம் அல்லது கவிதை அல்லது புலம்பல் அல்லது வெற்றுக்கூச்சலின் பொருளென்னவென்றால் '" நீவிர் என்னை நேசிக்காததால், நான் உங்களை நேசிக்காததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்பதாகவும் " என் மரணத்தின் சிலுவையைத் தாங்கவியலாமல் உங்கள் தோள்கள் முறிந்து போவதாகட்டும்" என்பதாகவும் இருந்த அந்த வரிகளின் கனத்தைச் சுமந்து மெல்ல காற்றிலேறிப் பறந்த அந்த அக்கக்காக் குருவி நெடுந்தூரஞ்சென்று அவற்றை அந்தக் கவிஞனிடம் ஒப்படைத்தபின் அவனும் அவ்வரிகளின் துயரமும் கனமும் தாங்கச்சகியாது அவற்றைச் சீர்படுத்தியோர் கவிதையாக்க முயன்று கொண்டிருந்தபோது அக்கவிதையின் முதல்வரியாகப் பிறப்பெடுத்ததிவ்வாறாக...." கவித்துவ வரிகள் பொங்கி வழியுமந்த...."

திங்கள், 26 ஜூலை, 2010

அர்த்தமற்றவனின் புலம்பல்கள்

1)ஒரு சருகைப்போல
காற்றில் அலைகிறது
என் காதல்

பறவைகள் சென்றபின்
யாருக்காய்க் காத்திருக்கிறது
வெறுமையான கூடு


2)தழுவலுக்கும் புணர்தலுக்கும்
காதல் என்று
பெயரிட்டாய்

காதல் கசிந்த
என் முத்தங்களை
என்னவெனப் பெயரிடுவாய்?


3)கிளர்ந்தாய்
புணர்ந்தாய்
கொஞ்சினாய்

அது இருக்கட்டும்....
ஒரு முறையாவது
காதலித்துப் பாரேன்!

சனி, 17 ஜூலை, 2010

துரோகத்தின் சுவையறிதல்.....

ஒரு கண்ணாடியைக் கையாளும் கவனத்தில்
அழகாய்த் தேர்ந்தெடுக்கிறாய்
மிக மெலிதானதொரு கத்தியை...

பொறு... அவசரப்படாதே!

கொல்வது மட்டும் நோக்கமல்ல
அதன் தருணங்கள் உனக்கு
உவகைகூட்ட வேண்டும்

முதலில் என்னை நம்பவை

நீயே என் இறை என்று...
நீதான் என் ரட்சகி என்று...
நீதான் என் எல்லாம் என்று...

இதில்தான் இருக்கிறது
இதயமறுக்கும் சூட்சுமம்...

பிறிதொருபொழுதில்
நீ என்னுடன் இழையத் தொடங்கவேண்டும்...
புலன்கள் கிறங்கும் வேளையில்....
மென்மையாய்த் துவங்கு செயலை

குரல்வளையை அறுத்துவிடாதே
சீக்கிரம் செத்துப்போவேன்...

மெலிதாய் வழியும் குருதியில்
காதலின் வாசம் நுகர்

பிதுங்கத் துவங்கும் கண்களில்
துரோகத்தின் வலி உணர்

நாசித் துவாரங்களின்
விடைப்பில் தெரிகிறதா
மூச்சுக்கான ஏக்கத்தின் தீவிரம்?
காதலினுடையதும் அஃகதே!

இனி நீ துவங்கலாம்
இதே விளையாட்டை
இன்னொரு இனிய பொழுதில்...
அழகான புன்னகையுடன்
உன் காதல் சொல்லி!

வெள்ளி, 9 ஜூலை, 2010

நினைவிருக்கிறதா சகியே?

நினைவிருக்கிறதா சகியே?

பிரபஞ்சமெங்கும் பூத்துக்கிடக்கும் பல்லாயிரம், பலகோடி ஜீவன்களும் ஆயிரமாயிரம் வழிகளில் காதலைச்சொல்லும்போதில் நாம் நமது காதலை இதழ்பதித்து இதயம் பறித்துக்கொண்டோம்... உனக்கு நினைவிருக்கிறதா சகியே?

என் நெஞ்சமெங்கும் சுரந்திருந்த ஜீவ ஊற்றை நீ அள்ளிக்கொண்டதும்... உன்னை நானாக்கி என் சுயமழித்து நான் திரிந்திருந்ததும்...உன் குரலுக்கும் உன் புன்னகைக்கும், உன் முத்தத்திற்கும், உன் அணைப்பிற்கும் ஏங்கி ஏங்கி என் புலன் சுமந்த அறிவெல்லாம் அழித்துப் போட்டதும் உனக்கு நினைவிருக்கிறதா சகியே?

காதலிக்கும்போதெல்லாம் உனக்காக கவிதை எழுதியதில்லை... நம் காதலே கவிதையாய்த்தானே இருந்தது? தாளம் தப்பாது நான் பாடிக்கொண்டிருந்த காதலின் பாடலில் அவ்வப்போது நீ இசைத்த அபஸ்வரங்களை ஆலாபனைகளாக நான் மாற்றியது நினைவிருக்கிறதா சகியே?

உடல்நலம் குன்றி உன்னை மருத்துவரிடம் அழைத்துப் போகும்போதெல்லாம் நீ ஊசிக்குப் பயந்தழுவாய்... நான் ஊமையாய் அழுவேன். என் தலைவலிக்கு நீ மருந்து தடவியபோது மட்டும் சாபங்களை வரங்களாய் மாற்றியது உன் காதல். நினைருக்கிறதா சகியே?

காதலை நெஞ்சில் சுமப்பது வழக்கம். நான் மட்டும் உன்னை ஒரு கைக்குழந்தையாய் மாற்றி என் தோளில் சுமந்திருந்தேன்.... இன்று சுமையில்லாத தோள்களின் கனத்தில் உயரம் குன்றி நான் தவிப்பது உனக்குப் புரியுமா சகியே?

துரோகங்கள் நிழலாய்த் தொடர்ந்து வந்தென்னை நெஞ்சு கீறியபோதெல்லாம் கண்ணீர் துடைக்க நீண்ட உன் விரல்களின் இதமும், உன் மடியின் கதகதப்பும் என்னை ஆற்றுப்படுத்தியதெல்லாம் நினைவிருக்கிறதா சகியே?

இன்று நீயே என் முதுகெலும்பை உருவி என்னை முடவனாக்கியதேன் சகியே?

கண்ணீரையும் காயங்களையும் எனதாக்கி பூக்களாலும் புன்னகையாலும் உன் பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறேன்.

நீயோ இருண்டுபோன என் வானத்தின் மீதமிருந்த நட்சத்திரங்களைப் பிடுங்கி உன் படுக்கையறைக்கூரையை அலங்கரித்திருக்கிறாய்!

என் வசந்தகாலக்கனிகளைச் சுவைத்துப் போனவள் கண்ணீர்விதைகளை மட்டும் காதல் பரிசாய்த் தந்திருக்கிறாய் சகியே...

எங்குபோய்த் தேடுவேன் இனி என் பாதையை.... அழுதழுது ஜீவனிழந்துபோன குருட்டுவிழிகளால்?
Related Posts with Thumbnails