சனி, 31 ஜூலை, 2010

மாற்றுமருத்துவம் ஏமாற்றுவேலையா? - Dr.புரூனோவின் பதிவையொட்டி சில சிந்தனைகள்

நீண்டநாட்களாகவே மாற்றுமருத்துவம் பற்றியும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரச்சூழலில் அதன் அவசியம் பற்றியும் எழுதவேண்டும் என்ற
எண்ணத்தில் இருந்த எனக்கு இன்று மரு.புரூனோ அவர்களின் பதிவைப் பார்த்ததும் உடனடியாக சில கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்பதால் இந்தப் பதிவு...

நான் மாற்றுமருத்துவத்துறையைச் சார்ந்தவனல்லன். எனவே இந்தப் பதிவில் வரும் கருத்துப்பிழைகள் முழுக்க முழுக்க என்னை மட்டுமே சார்ந்தவை என்பதை முதலிலேயே தெளிவுபடுத்துகிறேன்.

மருத்துவர் தனது பதிவில்

//இவ்வளவு நாளாக அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை நாங்கள் குணமாக்குகிறோம் என்று புருடா விட்டு நோயாளிகளிடமிருந்து பணம் பறித்து வந்தவர்களின் நிலை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிறது //

என்று தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்கிறார்.

எத்தனை அலோபதி மருத்துவர்கள் தங்கள் தொழிலில் தார்மீக நியாயங்களை மீறித் தவறு செய்கிறார்கள்? பட்டியலிட்டால் பக்கங்கள் தீராது. அவர்களை உதாரணப்படுத்தி அலோபதி நோய்களைக் குணமாக்கும் என்பது புருடா என்று குற்றம் சாட்டினால் அது எவ்வளவு பெரிய அறியாமையோ அதற்கு சற்றும் குறையாதது நம் மருத்துவரின் குற்றச்சாட்டு.

ஒரு சில லாட்ஜ் வைத்தியர்கள் செய்யும் தவற்றை மிகைப்படுத்தி சொல்லும்போது அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதுதான் நேர்மையானது.

மேற்கண்ட உயர்நீதிமன்றத்தீர்ப்பை சுட்டிக்காட்டியவர் அந்த வழக்கைத் தொடுக்கவேண்டிய சமூக, பொருளாதாரக் காரணிகளையும் அலசி ஆராய்ந்திருக்கலாமே!!!

நிற்க...

மாற்றுமருத்துவம் பற்றிய எனது சில கருத்துக்களுக்கு வருகிறேன்...

மாற்றுமருத்துவம் என்றால் என்ன?

உலகளாவிய அளவில் கோலோச்சும் (ஏன் கோலோச்சுகிறது என்பதை விளக்க வினவு தோழர்கள் போன்றோர்கள் முன்வரவேண்டும்) அலோபதி மருத்துவமுறைக்குப் பதிலீடாக அந்தந்தக் கலாச்சார மற்றும் வாழ்வியல் பிண்ணனிகளோடு பிணைந்திருக்கும் பாரம்பரியமான மருத்துவமுறைகள் (உ-ம்: சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர், ரெய்கி, மலர்மருத்துவம் போன்றவை) மாற்றுமருத்துவமுறைகள் என அழைக்கப் படுகின்றன.

அவற்றின் நம்பகத்தன்மை?

நூற்றாண்டுகளைத் தாண்டியும் தன் செல்வாக்கினை இழந்துவிடாமல் இன்னும் அலோபதியின் தாக்குதல்களை சமாளித்துத் தாக்குப்பிடிக்கும் திறன் ஒன்றுபோதாதா? இருக்கட்டும்...

ஆயுர்வேதத்தின்(ஆயுள்+வேதம்- வாழ்க்கையின் வேதம்) வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பாருங்கள்... இன்றைக்கு நவீன அறிவியல் முறை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே... அந்த காஸ்மெடிக் சர்ஜரி பற்றி புட்டுப் புட்டு வைக்கிறார் ஆயுர்வேதத்தின் மூலவர்களில் ஒருவரான சுஸ்ருதர். ரணசிகிச்சையும் சத்திர சிகிச்சையும் ஆயுர்வேதத்தில் வலிமையாகவே இருக்கின்றன.

தென்னாட்டின் பாரம்பரியமான சித்தவைத்திய மரபின் மூலிகைச் செல்வங்களைத் தானே அலோபதி தன் நவீன சோதனைச் சாலைகளில் பகுப்பாய்வு செய்து தன் சுயக்கண்டுபிடிப்பாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது?? ( இல்லையென்று மறுப்போர்க்கு ஒரு கேள்வி... ஏன் ஆயுர்வேதம் மற்றும் சித்தாவின் முக்கிய மருந்தினங்களாகத் திகழும் வேம்பு, பாகற்காய், மஞ்சள் போன்றவற்றுக்கு திருட்டுத் தனமாக மேலைநாட்டு மருந்தியல் ஆய்வு நிறுவனங்கள் காப்புரிமை பெறுவதில் தீவிரம் காட்டுகின்றன?)

''நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள் எண்: 948)" என்ற குறளின் பொருளை மிக முழுமையாய் நிறைவு செய்யும் வகையில் "நோய்க்கு மருந்தல்ல நோயாளிக்குத் தான் மருந்து" என்று கூறி மருத்துவத் துறையில் பெரும்பாய்ச்சலை நிகத்தியது ஹோமியோபதி.. ஒரே மாதிரியான நோய் பலருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித மருந்து என்ற நடைமுறையிலும் நோயாளியின் உடல், மன மற்றும் சமூகக் கூறுகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சையை மேற்கொள்ளும் ஹோமியோவின் சிறப்புக்களை நானே அனுபவித்துப் பார்த்து வியந்திருக்கிறேன். எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.

மேலும் விரித்துக் கூறப்போனால் இது பெருந்தொடராக எழுதவேண்டிய பதிவாக மாறிவிடும்

ஏன் வேண்டும் மாற்றுமருத்துவம்?

அலோபதி மருத்துவமும், அதுசார்ந்த மருந்தியல் நிறுவனங்களும் நோயாளிகளை வெறும் வாடிக்கையாளர்களாக நுகர்வு பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் அவலம் இன்று தலைவிரித்து ஆடுகின்றது. எப்போது ஒரு மருத்துவன் "தான் முதல் போட்டு நடத்துகிறேன். எனவே தனக்குத் தன் முதலையும்,வட்டியையும் மீட்டாக வேண்டும் ( MBBS சீட்டுக்கு 50-100 லட்சங்களில் நன்கொடை??)" என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறானோ அப்போது அவன் noble profession செய்பவன் என்ற நிலையிலிருந்து profittable profession செய்பவன் என்ற நிலைக்குக் கீழிறங்குகின்றான்.

பொதுவாகவே மக்களை வெறும் நுகர்வோராக மாற்றும் கலாச்சாரச் சீரழிவைத் தடுக்கவேண்டிய அவசியத்தில் தேசம் இருக்கும் நிலையில் மாற்றுமருத்துவமுறைகள் இயல்பாகவே அதைச் செய்து வருகின்றன. உதாரணமாக பசுமைவளர்க்கும் கட்டாயத்தில் உலகம் இருக்கும்போது சித்தவைத்தியமுறையும், ஆயுர்வேதமும் பசுமையான மரஞ்செடி,மூலிகைகளைச் சார்ந்திருப்பதை சுட்டிக்காட்டலாம்.

அதுமட்டுமல்லாமல் அலோபதி மருத்துவம் மனிதனை எந்திரமயமாக- தலையில் பிரச்சினை என்றால் தலைக்குத் தான் மருந்து, சிறுநீரகத்தில் கோளாறு என்றால் அங்கு மட்டும்தான் சிகிச்சை- என்ற அளவில்தான் பார்க்கின்றது. ஆனால் சித்தா, ஆயுர்வேதம்,ஹோமியோ போன்றவை மனிதனை ஒரு முழுமையான உயிர்த்தொகுப்பு என்ற கோணத்தில் அணுகுகின்றன.

மேலும் மூன்றில் இரண்டுபங்கு மக்கள் மூன்றுவேளை உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு வறிய தேசத்தில் பெருமளவில் ஊக்குவிக்கப்படவேண்டியதாய் இருக்கின்றன இம்மாதிரியான மாற்றுமருத்துவமுறைகள்.

இந்த இடத்தில் சீனாவில் கலாச்சாரப்புரட்சி நடந்தபோது மாவோ அறிமுகப் படுத்திய 'வெறுங்கால் வைத்தியர்கள்' (மக்களைத் தேடிச்சென்று பாரம்பரியமுறையில் எளிமையாக வைத்தியம் செய்வது) என்ற திட்டமே சீனாவின் வைத்தியத் தேவையை மிக அதிக அளவில் ஈடுகட்டியது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும் உலகசுகாதார நிறுவனம் (WHO) தனது ஆய்வறிக்கை ஒன்றில் 70 சத நோய்களை சாதாரண மருத்துவ அறிவு இருந்தாலே குணப்படுத்தமுடியும்; அதற்கு 10-ம் வகுப்புக் கல்வித்தகுதி இருந்தாலே போதும் என்று கூறியிருக்கிறது. அதனடிப்படையில் கல்பாக்கத்தைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர் திரு.ராஜரத்தினம் என்பவர் தனது தொண்டமைப்பின் வாயிலாக மேற்கூறிய "வெறுங்கால் வைத்தியர்கள்" போன்றதொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வெற்றிகண்டிருக்கிறார் என்பதையும் உற்றுநோக்கவேண்டும்.

என்ன செய்யவேண்டும்?

1) மாற்றுமருத்துவமுறைகளைப் பற்றிய மிகப்பெரும் ஆராய்ச்சிகளை அரசும் மக்கள் நலன்சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் முன்னெடுக்க வேண்டும்

2) மாற்றுமருத்துவம் பற்றிய தெளிவான கொள்கைத்திட்டத்தை அதற்குரிய கொளகை வகுப்பாளர்களைக் கொண்டு வகுத்திடல் வேண்டும்

3) மக்களிடையே இதுபற்றிய பிரச்சாரங்களை முறையான திட்டமிடலுடன் மேற்கொள்ள வேண்டும்

4) மாற்றுமருத்துவம் என்பது ஒரு தேசத்தின் சுயச்சார்பான பொருளாதாரத்திற்கு அவசியமானது என்ற புரிதலும், அக்கறையும் ஆட்சியாளர்களுக்கும் , அறிவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வரவேண்டும்

5) பகாசுர பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளை தீவிரமாக ஒடுக்கிட அரசை வலியுறுத்தக் கோரி மக்கள்நலன் சார்ந்து இயங்கும் அனைத்து இயக்கங்களும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்

பின்குறிப்பு: இதுவரை வாசகர்களிடம் ஓட்டுப் போடுங்கள் என்று நான் கேட்டதில்லை. இந்தப் பதிவின் நியாயமும் தேவையும் உங்களுக்கு சரியானது என்று தோன்றினால் கட்டாயம் ஓட்டுப் போடுமாறு உங்களை இறைஞ்சுகிறேன்.

பின்குறிப்பு 2: இந்தக் கட்டுரை நிச்சயமாக முழுமைபெற்ற ஒன்றல்ல என்பது எனக்குப் புரியும். சில சிந்தனைவிதைகளைத் தூவுவது மட்டுமே என் நோக்கம். இதுபற்றிய விவாதத்தை தகுதிவாய்ந்தோர் மென்மேலும் முன்னெடுக்கவேண்டும் என்பதும் எனது தாழ்மையான வேண்டுகோள்.

70 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நல்ல கேள்விகள்தான்

வவ்வால் சொன்னது…

Nice post, niraya unmaikalai vetta velicham aakitinga.

many allopathy drs kuthumathippa than marunthu tharanga!

Sidha,homoeopathi drs surgery seyyalam ena hc judgement koduthullathum kavanikka thakkathu.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

விழிப்புணர்வை தூண்டும் வகையில் பல சிறந்த கேள்விகளுடன் கூடிய சிந்தனைகள் . பகிர்வுக்கு நன்றி

குறும்பன் சொன்னது…

அலோபதி முறையில் ஒரு நோய்க்கு மருந்து உண்டால் அம்மருந்தினால் பெரும்பாலும் பக்கவிளைவுகள் இருக்கும்.

மாற்று மருத்துவம் தேவை தேவை தேவை.....

இடுகைக்கு நன்றி.

curesure4u சொன்னது…

நண்பரே ..வாழ்த்துக்கள் ..ஆயுர்வேத மருத்துவனாய் நான் கூற நினைத்ததை எல்லாம் நீங்கள் எழுதிவிட்டீர்கள் ..தீர்வு சூப்பர் ..
முதலில் அறியாமையை போக்க வேண்டும் அதற்க்கு என்னால் http://ayurvedamaruthuvam.blogspot.com/ ஒரு பிளாக்கினை எழுதி வருகிறேன் ..உங்களை போன்றவர்களின் ஆதரவு ,பனித்துளி சங்கர் போன்றவர்களின் ஆதரவு எங்களை வளர்க்க உதவுகிறது ..

நல்லா சொன்னீங்க ..

இருங்க நானும் இத பத்தி எழுதுறேன் ..

புருனோ Bruno சொன்னது…

ஐயா

--

//அலோபதி மருத்துவமும், அதுசார்ந்த மருந்தியல் நிறுவனங்களும் நோயாளிகளை வெறும் வாடிக்கையாளர்களாக நுகர்வு பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் அவலம் இன்று தலைவிரித்து ஆடுகின்றது. //

இந்த நிலையில் சித்த மருத்துவர்கள் சித்த மருந்தை தராமல் அலோபதி மருந்து தந்தால் இந்த நிலை மோசமாகுமா, சரியாகுமா

இந்த நிலையில் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆயுர்வேத மருந்தை தராமல் அலோபதி மருந்து தந்தால் இந்த நிலை மோசமாகுமா, சரியாகுமா

இந்த நிலையில் ஹோமியோபதி மருத்துவர்கள் ஹோமியோபதி மருந்தை தராமல் அலோபதி மருந்து தந்தால் இந்த நிலை மோசமாகுமா, சரியாகுமா

இந்த நிலையில் யுனானி மருத்துவர்கள் யுனானி மருந்தை தராமல் அலோபதி மருந்து தந்தால் இந்த நிலை மோசமாகுமா, சரியாகுமா

--

மாற்று மருத்துவம் வளர வேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் நீங்கள் இந்த தீர்ப்பை ஆதரிக்க வேண்டுமா எதிர்க்க வேண்டுமா

--

புருனோ Bruno சொன்னது…

சித்த மருத்துவர்கள் சித்த மருந்தை தராமல் அலோபதி மருந்தை தருவதினால் சித்த மருத்துவம் வளருமா தேயுமா

ஆயுர்வேத மருத்துவர்கள் ஆயுர்வேத மருந்தை தராமல் அலோபதி மருந்தை தருவதினால் ஆயுர்வேத மருத்துவம் வளருமா தேயுமா

ஹோமியோபதி மருத்துவர்கள் ஹோமியோபதி தராமல் அலோபதி மருந்தை தருவதினால் ஹோமியோபதி மருத்துவம் வளருமா தேயுமா

யுனானி மருத்துவர்கள் யுனானி மருந்தை தராமல் அலோபதி மருந்தை தருவதினால் யுனானி மருத்துவம் வளருமா தேயுமா

புருனோ Bruno சொன்னது…

//1) மாற்றுமருத்துவமுறைகளைப் பற்றிய மிகப்பெரும் ஆராய்ச்சிகளை அரசும் மக்கள் நலன்சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் முன்னெடுக்க வேண்டும்//

வழிமொழிகிறேன்

//2) மாற்றுமருத்துவம் பற்றிய தெளிவான கொள்கைத்திட்டத்தை அதற்குரிய கொளகை வகுப்பாளர்களைக் கொண்டு வகுத்திடல் வேண்டும்//

வழிமொழிகிறேன்

//3) மக்களிடையே இதுபற்றிய பிரச்சாரங்களை முறையான திட்டமிடலுடன் மேற்கொள்ள வேண்டும்//

வழிமொழிகிறேன்

//4) மாற்றுமருத்துவம் என்பது ஒரு தேசத்தின் சுயச்சார்பான பொருளாதாரத்திற்கு அவசியமானது என்ற புரிதலும், அக்கறையும் ஆட்சியாளர்களுக்கும் , அறிவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வரவேண்டும்//

வழிமொழிகிறேன்

ஆனால் மாற்று மருத்துவ முறையில் பயின்றவர்கள் தங்களது முறையை பயன்படுத்தாமல் அலோபதியை பயன்படுத்துவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா :) :) :)

//5) பகாசுர பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளை தீவிரமாக ஒடுக்கிட அரசை வலியுறுத்தக் கோரி மக்கள்நலன் சார்ந்து இயங்கும் அனைத்து இயக்கங்களும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்//

ஆனால் இவ்வளவு நாளும் அலோபதி மருத்துவர்கள் மட்டுமே இந்த மருந்துக்களை பயன் படுத்தி வந்தார்கள்

இனி சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களும் பயன்படுத்துவார்கள்.

அதற்கு இந்த தீர்ப்பு வழிவகுத்துள்ளது என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா :) :) :)

--

♠புதுவை சிவா♠ சொன்னது…

சமூகம் மற்றும் வாழ்நிலை சுழல் , பருவநிலைகளால் ஏற்படும் மாற்றம் சார்ந்து உருவானதே இயற்கை மருத்துவம். அது நம் தமிழகத்தில் கைவைத்தியம், பாட்டிவைத்தியம், சித்த மருத்துவம், என தன் வளர்ச்சியை கொண்டுள்ளது. இன்றளவும் பல கிராமங்களில் பாம்புகடிக்கு சிரியாநங்கை, நாய்யுருவி, வெப்பங்கொழுந்து, மிளகு காசயம், கரும்துளசி சாறு, குப்பமேனி சாறு போன்ற தன் அருகில் இருக்கும் மூலிகையை கொண்டு முதல்உதவி சிச்சைஅளித்து பல கிலோமீட்டர் தொலைவில் அமைந்த மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வரை அவரை பாதுகாப்பது இவ்வகை மருத்துவமே.


மக்களுக்காக அமைவதுதான் சட்டமே ஒழிய
சட்டத்திற்காக மக்கள் இல்லை

பல தனியார் மருத்துவ மனைகளில் நடக்கும் கொள்ளை வழிபறி,பீரோ புல்லிங், காட்டிலும் மிக மோசமானவை.

அரசு மருத்துவமனையில் பனிபுரியும் பல மருத்துவர்கள் வரும் நோயளியிடம் அவர்கள் சொந்தமாகவோ அல்லது தனியார் மருத்துவமனைக்கு வாருங்கள் சிகிச்சை பெறலாம் என அழைக்கும் நாட்டில் இந்த தீர்ப்பு தேவையானது ஆனால் அரசால் அங்கீகாரம் பெற்ற மாற்று மருத்துவர்களுக்கு போதிய பயிற்ச்சி கொடுத்து நடைமுறைபடுத்தலாம்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

இரண்டு மருத்துவங்களும் இனிது செயல்பட்டால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.

ஆனால் மருத்துவர் நண்பர் ப்ருநோவின் பதிவில் அதிகமாக தெரிந்த (அல்லது என்னால் உணரப் பட்ட) விஷயம் . எல்லாரும் ஓடி வாருங்க, இங்கே பாருங்கள் நீதிபதி சொல்லி விட்டார், அவர்கள் முட்டாள் நாங்கள் மட்டுமே புத்திசாலிகள்.

எனவே நாங்கள் மட்டுமே இங்க கடை போட முடியும், அவர்களது கடைகளை விரட்டுங்கள் என்பது போல இருந்தது


In Maths Probability there are concepts. Inclusive events, Mutually exclusive events.

Siddha & Anglo medicines should be inclusive/complement each other on hand on hand.

They are not mutually exclusive.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

அறிவின் பால் ஏற்படும்/பார்க்கப் படும் மனித பாகுபாடும் கூட ஒரு வகையான சாதியம், பார்ப்பனீயமே.

நாங்கள் எல்லாம் ஆங்கில மருத்துவ வகுப்பினர், நாங்கள் எல்லாம் அதிக மதிப்பெண் பெற்று இந்த படிப்பு படிக்க இடம் பெற்றவர்கள். எனவே நாங்கள் உயர்வானவர்கள் - நீங்கள் எல்லாம் மதிப்பெண் குறைந்து பெற்றவர்கள், எனவே உங்களால் சித்தா , பல் மருத்துவ படிப்பு, கால்நடை மருத்துவம் மட்டுமே படிக்க முடிந்தது, எனவே நீங்கள் எல்லாம் பிறபடுத்த பட்டவர்கள்.

அங்கே உள்ளவர்கள் இன்னும் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் எனவே அவர்களால் பொறியியல் படிப்பு மட்டுமே படிக்க முடிந்தது. எனவே அவர்கள் மிகவும் பிறபடுத்த பட்டவர்கள்.

அடுத்து உள்ளவர்களை பார், அவர்களால் கலை கல்லூரிகளுக்குள் மட்டுமே நுழைய முடிந்தது, எனவே அவர்கள் மிக மிக பிற்படுத்த பட்டவர்கள்.

Engineering graduates too have same mentality they say software ingineers are the higher category, No2 is for Mechnaicla, then civil, then automobiles.
In 11 th std or BE 1st year students talk this way.

are we adults or still in teen age?

Robin சொன்னது…

மாற்று மருத்துவத்தை நம்பி நானே ஏமாந்ததால் -1.

வினவு சொன்னது…

மாற்று மருத்துவம் வளரக்கூடாது எனப்தில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கே பெரும் ஆதாயம். நீங்கள் குறிப்பிட்டது போல சுய சார்ப பொருளாதாரத்திற்கு மாற்று மருத்துவம் அவசியம். வினவிலும் எழுத முயல்கிறோம். நன்றி

பெயரில்லா சொன்னது…

//Engineering graduates too have same mentality they say software ingineers are the higher category, No2 is for Mechnaicla, then civil, then automobiles.
In 11 th std or BE 1st year students talk this way.

are we adults or still in teen age?//

Why are you ranting on unrelated things?
Please stick to the topic buddy!

ஏழர சொன்னது…

அலோபதிதான் பெஸ்டு மத்ததெல்லாம் வேஸ்டுன்னு நினைப்பவர்கள் தயவு செய்து அலோபதி என்ற பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் ஏனெனில் அந்த பெயரை வைத்தவர் ஹோமியோபதியின் தந்தையான சாமுவேல் ஹானிமேன்..அதன் பொருளே
'வியாதிக்கு உதவாத வேறொன்று'என்பதுதான்

தவிர இங்கே அலோபதி என்பதற்குள் Bio Medicine, சீன மருத்துவம் உட்பட மாற்று மருத்துவம் கூட வரும் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இங்கே இதை நான் குறிப்பிடக்காரணம் ஹோமியோபதி அலோபதி பிரச்சனையில் இன்னமும் முடிவு ஏற்படவில்லை, மருத்துவ அறிவியல் நோயை அனுகுவது தொடர்பான ஒரு தத்துவ பிரச்சனை

மருத்துவ அறிவியல் மனிதனுக்கு சேவை செய்ய வேண்டும். அதன் வேலை அதுதான். இதில் எல்லாவற்றிலும் சிறந்த வழிமுறைகளை கதம்பமாக்கி ஒரு புது வழிமுறை உறுவாகலாம். உறுவாக வேண்டும். அதுதான் சரியானது. மாறாக இதில் யார் சிறந்தவர் என்ற போட்டி பயன்படாது என்று நினைக்கிறேன்

விந்தைமனிதன் சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில்

சரி பதில்கள்? எல்லாரும் யோசிக்கவேண்டுமென்றுதானே இப்பதிவே...!

@ வவ்வால்

நன்றி வவ்வால்

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

நன்றி சங்கர்

@ குறும்பன்

'பக்க' மட்டுமில்லீங்க, நடு,பின், முன் எல்லா விளைவுகளும் வரும்

@ curesure4u

நல்ல விஷயங்களை கண்டிப்பாக பிரச்சாரப்படுத்த வேண்டும்

விந்தைமனிதன் சொன்னது…

@ புருனோ

எத்தனை மாற்றுமருத்துவர்கள் அலோபதியை பரிந்துரை செய்கிறார்கள்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை அலசி இருக்கின்றீர்களா?

அலோபதி மட்டுமே சிறந்தது என்ற மாயை மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியதால் தங்கள் தொழிலில் பாதிப்படையும் சிலரும், தாங்கள் பயின்ற மருத்துவமுறைகளில் முழுத் தேர்ச்சி பெறாதவர்களும் survival -காக அலோபதி பின் செல்கிறார்கள்

அது மட்டுமல்ல திரு. புருனோ அவர்களே!

Drugs & Cosmetics Act, Schedule "A", 1940 படி ஆங்கில மருத்துவமானது நீரிழிவு நோய் முதலான 51 வியாதிகளைத் தமது வைத்தியமுறையில் குணப்படுத்துகிறோம் என்று உறுதி சொல்லக் கூடாது... ஆக எல்லா மருத்துவமுறைகளும் எல்லாஇடங்களிலும் முழுமையான ஒன்றாக இல்லாதபட்சத்தில் அனைத்தையும் சரியான பயிற்சியுடன் கூட்டாக செயல்படுத்துவதில் தவறொன்றுமில்லையே? உயர்நீதிமன்றத்தீர்ப்பு இந்தக் கோணத்தில் தான் அமைந்திருக்கும் என்றெண்ணுகிறேன்.

எனவே சித்தமருத்துவர்கள் அறுவைசிகிச்சை போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்வது நிச்சயம் தவறாகாது. அது சித்தவைத்தியத்தை இழிவுபடுத்துவதும் ஆகாது

விந்தைமனிதன் சொன்னது…

//ஆனால் இவ்வளவு நாளும் அலோபதி மருத்துவர்கள் மட்டுமே இந்த மருந்துக்களை பயன் படுத்தி வந்தார்கள்//

ஆக ஆங்கிலமருத்துவர்கள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் கொள்ளைக்கு உடந்தை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

சித்த, ஆயுர்வேத நிபுணர்கள் ஆங்கில மருந்துகளை உபயோகப் படுத்துவது என்பது இம்முறைகளின் குறைபாடல்ல. வேறு கலாச்சாரத்தின் கூறுகளை தன்வயப்படுத்தி மேலும் செழுமையடையும் மானுட இயற்கையின் நியதி...

வறட்டு கவுரவம் பார்க்காமல் ஆங்கில மருந்தியலும் மாற்றுமருத்துவங்களோடு இணைந்து இயங்கினால் பயன் பெறப் போவது மக்கள்தான்

அது சரி டாக்டர்....
//எப்போது ஒரு மருத்துவன் "தான் முதல் போட்டு நடத்துகிறேன். எனவே தனக்குத் தன் முதலையும்,வட்டியையும் மீட்டாக வேண்டும் ( MBBS சீட்டுக்கு 50-100 லட்சங்களில் நன்கொடை??)" என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறானோ அப்போது அவன் noble profession செய்பவன் என்ற நிலையிலிருந்து profittable profession செய்பவன் என்ற நிலைக்குக் கீழிறங்குகின்றான்.//
என்ற எனது குற்றச்சாட்டினைப் பற்றி தாங்கள் மூச்சு விடாததன் ரகசியமென்னவோ???

விந்தைமனிதன் சொன்னது…

@ ♠புதுவை சிவா♠

முழுக்கமுழுக்க உங்களோடு உடன்படுகிறேன் சிவா

@ ராம்ஜி_யாஹூ

நன்றி ராம்ஜி

//ஆனால் மருத்துவர் நண்பர் ப்ருநோவின் பதிவில் அதிகமாக தெரிந்த (அல்லது என்னால் உணரப் பட்ட) விஷயம் . எல்லாரும் ஓடி வாருங்க, இங்கே பாருங்கள் நீதிபதி சொல்லி விட்டார், அவர்கள் முட்டாள் நாங்கள் மட்டுமே புத்திசாலிகள்.

எனவே நாங்கள் மட்டுமே இங்க கடை போட முடியும், அவர்களது கடைகளை விரட்டுங்கள் என்பது போல இருந்தது//

இது.. இது.. இதுதான் என்னை இப்பதிவு எழுதத் தூண்டியதன் காரணம்

//அறிவின் பால் ஏற்படும்/பார்க்கப் படும் மனித பாகுபாடும் கூட ஒரு வகையான சாதியம், பார்ப்பனீயமே//

உடன்படுகிறேன்

@ Robin

சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையால் பாதிக்கப் பட்டோர் ஏராளம் நண்பரே! அதனால் அம்மருத்துவமனைகளை ஒதுக்கிவிட முடியுமா?

ஏமாற்றும் மருத்துவர்கள் அலோபதியிலும் அதிகம் உண்டு

@ வினவு

நன்றி தோழர் வினவு

சுயச்சார்பு பொருளாதாரத்திற்கு மாற்றுமருத்துவத்தின் அவசியத்தையும், ஆங்கில மருத்துவம் உலகளாவிய நிலையில் கோலோச்சும் ரகசியத்தையும் உங்களால் மட்டும்தான் வீரியமாக எழுத முடியும். விரைவில் எதிர்பார்க்கிறேன்

@ ஏழர..

நன்றி தோழர்

அலோபதியின் பெயர்விளக்கம் நிச்சயம் நல்ல தகவல்...

Dr.ராம் சொன்னது…

மாற்று மருத்துவம் வளரவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.ஆனால் மாற்று மருத்துவத்தை வளர்ப்பது என்பது சித்தா, ஹோமியோபதி, யுனானி மருந்துகளின் பயன்பாட்டை அதிகபடுத்துவதிலும், அந்த துறையின் மருத்துவ வல்லுனர்கள் அவர்கள் கற்றுக்கொண்ட மருத்துவ முறையை பயன்படுத்துவதிலுமே இருக்கிறது. அதனை விடுத்து அலோபதி முறையை பயன்படுத்த ஒப்புதல் வாங்குவது என்பது எப்படி மாற்று மருத்துவத்தை வளர்க்கும் என்பதுதான் ப்ருனோ அவர்களின் கேள்வி.. ஆனால் மாற்று மருத்துவர்களை இழிவு படுத்துவதுபோல் நீங்களாகவே அர்த்தம் கற்பிப்பது எதனால்..... சித்த மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்கும் சித்த மருத்துவம் படித்த நண்பர்கள் எனக்கு தெரியும் .. அதுதானே மாற்று மருத்துவத்தை வளர்க்கும்.. அதனை விடுத்து அலோபதி சிறந்தது என்று அவர்களே ஒப்புகொள்வது போல் உள்ளது இந்த வழக்கில் அவர்களது வாதம்..அதனைத்தான் ப்ருனோ சுட்டி காட்டி உள்ளார்.. மீண்டும் இடுகையை படிக்கவும்..

புருனோ Bruno சொன்னது…

//இன்றளவும் பல கிராமங்களில் பாம்புகடிக்கு சிரியாநங்கை, நாய்யுருவி, வெப்பங்கொழுந்து, மிளகு காசயம், கரும்துளசி சாறு, குப்பமேனி சாறு போன்ற தன் அருகில் இருக்கும் மூலிகையை கொண்டு முதல்உதவி சிச்சைஅளித்து பல கிலோமீட்டர் தொலைவில் அமைந்த மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வரை அவரை பாதுகாப்பது இவ்வகை மருத்துவமே.//

புதுவை சிவா சார்

இது போன்ற கருத்துக்கள் ஆபத்தானவே

நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்

பாம்புக்கடிக்கு சிறியாநங்கை மட்டும் போதும் என்றா

அப்படி என்றால் anti snake venom தேவையே இல்லையா

விளக்கவும்

புருனோ Bruno சொன்னது…

//மக்களுக்காக அமைவதுதான் சட்டமே ஒழிய
சட்டத்திற்காக மக்கள் இல்லை

பல தனியார் மருத்துவ மனைகளில் நடக்கும் கொள்ளை வழிபறி,பீரோ புல்லிங், காட்டிலும் மிக மோசமானவை.
//

இதில் தனியார் சித்த மருத்துவமனைகளும் உண்டு
தனியார் அலோபதி மருத்துவமனைகளும் உண்டு என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா

புருனோ Bruno சொன்னது…

//அரசு மருத்துவமனையில் பனிபுரியும் பல மருத்துவர்கள் வரும் நோயளியிடம் அவர்கள் சொந்தமாகவோ அல்லது தனியார் மருத்துவமனைக்கு வாருங்கள் சிகிச்சை பெறலாம் என அழைக்கும் நாட்டில் இந்த தீர்ப்பு தேவையானது //

அப்படி அழைப்பவர்களில் சித்த மருத்துவர்களும் உண்டு. ஆயுர்வேத மருத்துவர்களும் உண்டு

அப்படி இருக்கும் போது இந்த தீர்ப்பினால் வரும் விளைவுகளை விளக்கு முடியுமா

அது சரி

சித்த மருத்துவர்கள் சித்த மருந்திற்கு பதில் அலோபதி மருந்தை பயன்படுத்துவதான் என்ன நன்மையை எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று நீங்கள் இது வரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை :) :)

புருனோ Bruno சொன்னது…

//இரண்டு மருத்துவங்களும் இனிது செயல்பட்டால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.//

இதைத்தான் நானும் கூறுகிறேன்

ஆனால் சித்த மருத்துவர்களே சித்த மருந்துகளை புறக்கணித்து விட்டு அலோபதி பயன் படுத்தினால் என்ன நன்மை கிடைக்கும்

//ஆனால் மருத்துவர் நண்பர் ப்ருநோவின் பதிவில் அதிகமாக தெரிந்த (அல்லது என்னால் உணரப் பட்ட) விஷயம் . எல்லாரும் ஓடி வாருங்க, இங்கே பாருங்கள் நீதிபதி சொல்லி விட்டார், அவர்கள் முட்டாள் நாங்கள் மட்டுமே புத்திசாலிகள்.//
அப்படி நான் கூறவில்லை

//எனவே நாங்கள் மட்டுமே இங்க கடை போட முடியும், அவர்களது கடைகளை விரட்டுங்கள் என்பது போல இருந்தது//

இப்படியும் நான் கூறவில்லை

//In Maths Probability there are concepts. Inclusive events, Mutually exclusive events.

Siddha & Anglo medicines should be inclusive/complement each other on hand on hand.//

ஏற்றுக்கொள்கிறேன்

//They are not mutually exclusive.//

ஏற்றுக்கொள்கிறேன்
ஆனால் சித்த மருத்துவர்களே சித்த மருந்தை பயன்படுத்தாவிட்டால் வேறு யார் பயன்படுத்துவார்கள்

எப்படி நோயாளிக்கு சித்த மருந்தின் பலன் கிடைக்கும் என்பது தான் என் கேள்வி

புருனோ Bruno சொன்னது…

//மாற்று மருத்துவம் வளரக்கூடாது எனப்தில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கே பெரும் ஆதாயம்.//

உண்மை

// நீங்கள் குறிப்பிட்டது போல சுய சார்ப பொருளாதாரத்திற்கு மாற்று மருத்துவம் அவசியம்.//

உண்மை

// வினவிலும் எழுத முயல்கிறோம். நன்றி//

இந்த தீர்ப்பு மாற்று மருத்துவத்தை வளர்க்குமா, அழிக்குமா என்ற கேள்விக்கு விடை என்ன

மேலும் சில கேள்விகள் இந்த இடுகையில் உள்ளன

வாசித்து பார்த்து விடையளித்தால் உங்களுக்கே உண்மை புரியும்

புருனோ Bruno சொன்னது…

//மருத்துவ அறிவியல் மனிதனுக்கு சேவை செய்ய வேண்டும்.//

வழிமொழிகிறேன்

// அதன் வேலை அதுதான். இதில் எல்லாவற்றிலும் சிறந்த வழிமுறைகளை கதம்பமாக்கி ஒரு புது வழிமுறை உறுவாகலாம். உறுவாக வேண்டும். அதுதான் சரியானது. //
வழிமொழிகிறேன்

//மாறாக இதில் யார் சிறந்தவர் என்ற போட்டி பயன்படாது என்று நினைக்கிறேன்//
வழிமொழிகிறேன்

சென்ற மறுமொழியில் இருக்கும் சுட்டியில் நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் விடையளியுங்களேன் :) :)

புருனோ Bruno சொன்னது…

//பக்க' மட்டுமில்லீங்க, நடு,பின், முன் எல்லா விளைவுகளும் வரும்//

இது சித்த மருத்துவத்திற்கும் பொருந்தும் என்பது உங்களுக்கு தெரியாதா ???

அனைத்து மருந்துக்களுக்கும் பக்க விளைவு உண்டு. பக்க விளைவு இல்லாத மருந்தே உலகத்தில் கிடையாது

புருனோ Bruno சொன்னது…

//எத்தனை மாற்றுமருத்துவர்கள் அலோபதியை பரிந்துரை செய்கிறார்கள்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை அலசி இருக்கின்றீர்களா? //

இந்த வழக்கை தொடுத்தவர்கள் அலோபதி பரிந்துரை செய்பவர்கள் என்று நினைக்கிறேன்

//அலோபதி மட்டுமே சிறந்தது என்ற மாயை மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியதால் தங்கள் தொழிலில் பாதிப்படையும் சிலரும், தாங்கள் பயின்ற மருத்துவமுறைகளில் முழுத் தேர்ச்சி பெறாதவர்களும் survival -காக அலோபதி பின் செல்கிறார்கள்//
அதே அதே
அதனால் தான் இது ஒரு சிலரின் வேலையா என்ற கேள்வியை நான் திரும்ப திரும்ப கேட்கிறேன்

நீங்கல் உட்பட யாரும் பதிலளிக்கவில்லை :) :)

புருனோ Bruno சொன்னது…

// ஆக எல்லா மருத்துவமுறைகளும் எல்லாஇடங்களிலும் முழுமையான ஒன்றாக இல்லாதபட்சத்தில் அனைத்தையும் சரியான பயிற்சியுடன் கூட்டாக செயல்படுத்துவதில் தவறொன்றுமில்லையே?//

கண்டிப்பாக தவறில்லை

ஆனால் சித்த மருத்துவர்கள் சித்த மருந்தை பயன்படுத்தாமல் அலோபதியை பயன்படுத்தினால் கூட்டாக செயல்படுவது எப்படி என்ற கேள்விக்கு விடை என்ன

புருனோ Bruno சொன்னது…

//எனவே சித்தமருத்துவர்கள் அறுவைசிகிச்சை போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்வது நிச்சயம் தவறாகாது. அது சித்தவைத்தியத்தை இழிவுபடுத்துவதும் ஆகாது//

BSMS பாடத்தில் அறுவை சிகிச்சையை சேர்த்தால் அவர்கள் பயன் படுத்திக்கொள்ளாம் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது

தற்பொழுது கூட BSMS, BAMS ஆகிய படிப்புகளில் பெரும்பாலும் (மருந்தியல் தவிர) அலோபதி புத்தகங்களின் (உடற்கூறு, உடலியக்கவியல் உட்பட) அடிப்ப்டையிலேயே படிக்கிறார்கள் என்று கூறப்படுவது உண்மையா

புருனோ Bruno சொன்னது…

//ஆக ஆங்கிலமருத்துவர்கள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் கொள்ளைக்கு உடந்தை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?//

இனி சித்த மருத்துவர்களும் உடந்தையாகப்போகிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா

புருனோ Bruno சொன்னது…

//சித்த, ஆயுர்வேத நிபுணர்கள் ஆங்கில மருந்துகளை உபயோகப் படுத்துவது என்பது இம்முறைகளின் குறைபாடல்ல. வேறு கலாச்சாரத்தின் கூறுகளை தன்வயப்படுத்தி மேலும் செழுமையடையும் மானுட இயற்கையின் நியதி...//

ம்ம்ம்ம்ம்

//வறட்டு கவுரவம் பார்க்காமல் ஆங்கில மருந்தியலும் மாற்றுமருத்துவங்களோடு இணைந்து இயங்கினால் பயன் பெறப் போவது மக்கள்தான்//
ஐயா
அப்படி ஏற்கனவே கீழா நெல்லி, தேன் உட்பட பல மருந்துக்களை முறையாக ஆராய்ச்சி செய்து பக்க விளைவுகள் எவை என்று பட்டியலிட்டு, எந்த மருந்துடன் இணைந்து பயன் படுத்தக்கூடாது என்பது அறிந்து பயன்படுத்த ஆரம்பித்தாகிவிட்டது

புருனோ Bruno சொன்னது…

//என்ற எனது குற்றச்சாட்டினைப் பற்றி தாங்கள் மூச்சு விடாததன் ரகசியமென்னவோ???//

MBBS சீட்டிற்கு 100 லட்சம் எந்த கல்லூரி என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அது குறித்து கருத்து கூற இயலவில்லை. எந்த கல்லூரி என்று நீங்கள் கூறினால் கருத்து கூறத்தயார்

புருனோ Bruno சொன்னது…

//.ஆனால் மாற்று மருத்துவத்தை வளர்ப்பது என்பது சித்தா, ஹோமியோபதி, யுனானி மருந்துகளின் பயன்பாட்டை அதிகபடுத்துவதிலும், அந்த துறையின் மருத்துவ வல்லுனர்கள் அவர்கள் கற்றுக்கொண்ட மருத்துவ முறையை பயன்படுத்துவதிலுமே இருக்கிறது. //

வழிமொழிகிறேன்

புருனோ Bruno சொன்னது…

//அதனை விடுத்து அலோபதி முறையை பயன்படுத்த ஒப்புதல் வாங்குவது என்பது எப்படி மாற்று மருத்துவத்தை வளர்க்கும் என்பதுதான் ப்ருனோ அவர்களின் கேள்வி.. ஆனால் மாற்று மருத்துவர்களை இழிவு படுத்துவதுபோல் நீங்களாகவே அர்த்தம் கற்பிப்பது எதனால்.....//

காரணம் உறுதியாக தெரியவில்லை.... கற்பித்தவர்கள் தானே கூற வேண்டும் :) :) :)

விந்தைமனிதன் சொன்னது…

மரு.புருனோ அவர்களே

//மாற்று மருத்துவ முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு//

இது உங்கள் இடுகையின் தலைப்பு

//நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்திருக்கிறது. //

இது முதல்வரி....

இதில் தெரிவது, நான் தமிழ் படித்தவரை, மாற்றுமருத்துவமுறைகளுக்கு ஆப்படித்த தீர்ப்பு என்கிற சந்தோஷத் தொனிதானே தவிர மாற்றுமருத்துவத்தினை ஆதரிக்கும் தொனியல்ல.

//இவ்வளவு நாளாக அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை நாங்கள் குணமாக்குகிறோம் என்று புருடா விட்டு நோயாளிகளிடமிருந்து பணம் பறித்து வந்தவர்களின் நிலை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிறது //

1) அலோபதியால் அனைத்துநோய்களையும் குணப்படுத்திவிடமுடியும் என்கிறீர்களா?

2)அலோபதியால் முடியாதது வேறு எதனாலும் முடியாது என உங்களால் உறுதியாகச் சொல்லமுடியுமா?

3)"வாலிப,வயோதிக அன்பர்களை" கூவிக்கூவி அழைக்கும் மருத்துவச் சிகாமணிகளை இப்படி அனைத்து மாற்றுமருத்துவ வல்லுனர்களுடனும் பொதுமைப்படுத்திப் பேசலாமா?

//அலோபதி மருந்துகள் பக்க விளைவு, எங்கள் மருந்தில் பக்க விளைவே கிடையாது என்று ஊரை ஏமாற்றியவர்களும், அவர்களுக்கு ஆதரவாக எழுதிவந்த பதிவர்கள் சிலரும் இப்பொழுது முகத்தை எங்கு வைத்து கொள்ள போகிறார்கள்//

1)ஹோமியோபதியிலும், சித்தாவிலும், ஆயுர்வேதத்திலும் உள்ள மிகப்பெரும்பான்மையான மருந்துகள் பக்கவிளைவற்றவை... ஏனெனில் அவை செயற்கை ரசாயனங்களால் தயாரிக்கப் படுபவையல்ல. ஆனால் அலோபதியில் உள்ள சாதாரண பாரசிட்டமால் கூட பக்கவிளைவினை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஒத்துக்கொள்வீர்களா?

2)வெகுகாலம்வரை அலோபதியில் கோலோச்சிய பென்சிலின் மருந்தைப் பற்றிய நவீன மருத்துவ அறிவியலின் இப்போதைய கருத்தென்ன?

//எனவே எங்களை அலோபதி முறையில் சிகிச்சை அளிக்க அனுமதியுங்கள் என்று சிலர் வழக்கு தொடுத்ததில் மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் உடன்பாடு உண்டா அல்லது இது ஒரு சிலரின் வேலை ??//

நிச்சயமாக இது அனைத்து மாற்றுமருத்துவர்களின் பொதுக்கருத்தாக இருக்கமுடியாது.

ஆனால் இந்த வழக்கு தொடுக்கப்படவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிய சமூக, பொருளாதாரக் காரணிகளை உள்ளடக்காமல் வெறுமனே ஒற்றைப் பரிணாமப்பார்வையில் பார்ப்பது அழகல்லவே!

நவீன இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் கண்டுபிடிப்புக்களையும் ஆராய்ச்சிகளையும் பன்னாட்டு ஏகாதிபத்திய மற்றும் மருந்தியல் நிறுவனங்கள் தங்களது சுயலாபநோக்கத்துடன் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால்தான் அலோபதி இந்த அளவு கோலோச்சுகிறது என்பது எனது வாதம்.

அதுசரி மருத்துவரே! MBBS, MD, MS (MD,MS போன்ற உயர்படிப்பு படித்தால்தான் மருத்துவத்துறையில் நிற்க முடியும் என்று உங்கள் பழைய பதிவில் சொல்லியிருக்கின்றீர்கள்) ஆகிய படிப்புக்களுக்கு இன்று ஆகும் செலவென்ன?

MBBSக்கு மிகக் குறைந்தபட்சம் நன்கொடை கூட 30-40 லட்சங்கள் என்ற தனியார் கல்லூரிகளின் நடைமுறை தங்களுக்குத் தெரியாதா? அல்லது தெரியாததுபோல் இருக்கிறீர்களா?

Amudhavan சொன்னது…

மாற்றுமருத்துவத்தில் ரெய்கி சிகிச்சை மூலம் எத்தனையோ பிரச்சினைகளை , அலோபதி மருந்துகளால் குணமாகாத பிரச்சினைகளை குணப்படுத்தி இருக்கிறேன். இதனை அங்கீகாரமாகச் சொல்ல முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அலோபதியைத் தவிர எந்த மருத்துவமுறையையும் ஏற்றுக்கொள்ள முடியாத சட்டச்சிக்கல்கள். இரண்டாவது அப்படி குணமடைந்த அந்த நபர்கள் இவ்வளவு நாட்களும் தாங்கள் சிகிச்சைப் பெற்ற அந்த அலோபதி மருத்துவரிடம் சென்று நான் இன்ன சிகிச்சை மேற்கொண்டதால் குணமடைந்துவிட்டேன் என்று அவர்களிடம் தெரிவிப்பதில்லை. இதுதான் தொடர்ந்து இருக்கின்ற சிக்கல். மனிதனை எப்படியும் நோய்களினின்று காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பல்வேறு நோய்தீர்ப்பு நிபுணர்களும் முயன்றுவருகிறார்கள் என்பதை அலோபதியும் அரசாங்கமும் எப்போதுதான் உணர்வார்களோ தெரியவில்லை. இதுபற்றிய சில கருத்துக்களை நான் ஏற்கெனவே என்னுடைய அற்புத ரெய்கி என்ற நூலில் எழுதியுள்ளேன்.(கிழக்குப் பதிப்பக வெளியீடு)மேற்கொண்டு என்னுடைய பிளாக்கிலும் மாற்று மருத்துவம் பற்றி எழுதவிருக்கிறேன்.http://amudhavan.blogspot.com/ விந்தை மனிதனின் கட்டுரை மிகமிக நல்ல முயற்சியுடன் கூடிய விவாதத்திற்குரிய கட்டுரை

Dr.ராம் சொன்னது…

///மருத்துவர் தனது பதிவில்

//இவ்வளவு நாளாக அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை நாங்கள் குணமாக்குகிறோம் என்று புருடா விட்டு நோயாளிகளிடமிருந்து பணம் பறித்து வந்தவர்களின் நிலை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிறது //

என்று தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்கிறார்.///

மாற்று மருத்துவமே அலோபதியை விட சிறந்தது ..தீராத வியாதிகளை எங்களால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று கூறக்கூடிய மாற்று மருத்துவர்கள் ஏன் அலோபதி மருத்துவம் practice செய்ய ஒப்புதல் கேட்டு வழக்கு தொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலான கருத்து இது .. இதில் வஞ்சம் எங்கிருந்து வந்தது..

Dr.ராம் சொன்னது…

//
1) மாற்றுமருத்துவமுறைகளைப் பற்றிய மிகப்பெரும் ஆராய்ச்சிகளை அரசும் மக்கள் நலன்சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் முன்னெடுக்க வேண்டும்

2) மாற்றுமருத்துவம் பற்றிய தெளிவான கொள்கைத்திட்டத்தை அதற்குரிய கொளகை வகுப்பாளர்களைக் கொண்டு வகுத்திடல் வேண்டும்

3) மக்களிடையே இதுபற்றிய பிரச்சாரங்களை முறையான திட்டமிடலுடன் மேற்கொள்ள வேண்டும்

4) மாற்றுமருத்துவம் என்பது ஒரு தேசத்தின் சுயச்சார்பான பொருளாதாரத்திற்கு அவசியமானது என்ற புரிதலும், அக்கறையும் ஆட்சியாளர்களுக்கும் , அறிவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வரவேண்டும்

5) பகாசுர பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளை தீவிரமாக ஒடுக்கிட அரசை வலியுறுத்தக் கோரி மக்கள்நலன் சார்ந்து இயங்கும் அனைத்து இயக்கங்களும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்//

முழுவதும் ஏற்கிறேன்

Dr.ராம் சொன்னது…

//குறும்பன் said...

அலோபதி முறையில் ஒரு நோய்க்கு மருந்து உண்டால் அம்மருந்தினால் பெரும்பாலும் பக்கவிளைவுகள் இருக்கும்.//

பக்க விளைவு அற்ற மருந்துகள் எந்த மருத்துவத்திலும் கிடையாது.

// மாற்று மருத்துவம் தேவை தேவை தேவை.....//

.இதனை தான் நாங்களும் கூறுகிறோம் ..ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டால் அலோபதியில் பக்க விளைவு உண்டு என்றாலும் தாங்கள் கூறியதுபோல் பக்கவிளைவு அற்ற மாற்று மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் ஏன் அலோபதி மருந்தை பரிந்துரைக்க வேண்டும்.. இதுதான் கேள்வி.. இதற்கு பதில் கூறவும்

Dr.ராம் சொன்னது…

//♠புதுவை சிவா♠ said...
அரசு மருத்துவமனையில் பனிபுரியும் பல மருத்துவர்கள் வரும் நோயளியிடம் அவர்கள் சொந்தமாகவோ அல்லது தனியார் மருத்துவமனைக்கு வாருங்கள் சிகிச்சை பெறலாம் என அழைக்கும் நாட்டில் இந்த தீர்ப்பு தேவையானது//

அதாவது அலோபதி மருத்துவம் படித்தவர்களே தவறு செய்கிறார்கள் .. மாற்று மருத்துவர்கள் தங்கள் படித்த மருத்துவ முறையினை பயன்படுத்தாமல் அலோபதி மருத்துவத்தை அதனை பற்றி தெரியாமலேயே பயன்படுத்தலாம் என்பதனைத்தான் தேவையான தீர்ப்பு என்று கூறுகிறீர்கள சிவா சார்

Dr.ராம் சொன்னது…

//ராம்ஜி_யாஹூ said...
நாங்கள் எல்லாம் ஆங்கில மருத்துவ வகுப்பினர், நாங்கள் எல்லாம் அதிக மதிப்பெண் பெற்று இந்த படிப்பு படிக்க இடம் பெற்றவர்கள். எனவே நாங்கள் உயர்வானவர்கள் - நீங்கள் எல்லாம் மதிப்பெண் குறைந்து பெற்றவர்கள், எனவே உங்களால் சித்தா , பல் மருத்துவ படிப்பு, கால்நடை மருத்துவம் மட்டுமே படிக்க முடிந்தது, எனவே நீங்கள் எல்லாம் பிறபடுத்த பட்டவர்கள்.//

மன்னிக்க வேண்டும்.. அந்த கட்டுரையின் பொருள் இது அல்ல .ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன் .. நீங்கள் சொல்வதுபோல் மாற்று மருத்துவம் ,கால்நடை மருத்துவம், இன்ஜினியரிங் படித்தவர்கள் அனைவரும் மதிப்பெண் குறைந்ததினால் அலோபதி படிக்க முடியவில்லை..அதனால் என்ன அலோபதி மருத்துவம் பாருங்கள் என்று அங்கீகரிப்பது எந்த அளவுக்கு அபத்தமோ அந்த அளவுக்கு உள்ளது தங்களின் விவாதம் .. இதில் யாரும் யாரையும் மட்டம் தட்டவில்லை..ஒவ்வொரு துறையிலும் அவரவர்கள் உயர்வனவர்களே ..ஆனால் நான் பயிற்சி பெற்ற மருத்துவத்தை விட்டுவிட்டு எனக்கு தெரியாத முறையில்( அலோபதி) மருத்துவம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்பது என்ன சார் நியாயம்

Dr.ராம் சொன்னது…

//எப்போது ஒரு மருத்துவன் "தான் முதல் போட்டு நடத்துகிறேன். எனவே தனக்குத் தன் முதலையும்,வட்டியையும் மீட்டாக வேண்டும் ( MBBS சீட்டுக்கு 50-100 லட்சங்களில் நன்கொடை??)" என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறானோ அப்போது அவன் noble profession செய்பவன் என்ற நிலையிலிருந்து profittable profession செய்பவன் என்ற நிலைக்குக் கீழிறங்குகின்றான்//

அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆயிரங்களில் மட்டுமே கட்டணம் என்பது தெரியுமா?.. தமிழ் நாட்டில் பெரும்பான்மையான மருத்துவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் மெரிட் அடிப்படையில் படித்து வருபவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?..தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அங்கு நன்கொடை கொடுத்து படித்து வருபவர்களையும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மெரிட் அடிப்படையில் படித்து வரும் மருத்துவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதுதான் உங்கள் பிரச்சினை .. மேலும் எங்கும் 100 லட்சங்களில் கட்டணம் இல்லை ..

விந்தைமனிதன் சொன்னது…

//பக்கவிளைவு அற்ற மாற்று மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் ஏன் அலோபதி மருந்தை பரிந்துரைக்க வேண்டும்.. இதுதான் கேள்வி.. இதற்கு பதில் கூறவும்//

1) ஏற்கனவே நான் சொன்னதுபோல அலோபதி மாயைய்ல் சிக்கி மக்கள் உழலும்போது, தங்கள் survivalக்காக சில மருத்துவர்கள் அலோபதியையும் கையாளத்தொடங்குகிறார்கள்... இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்

இதற்கு அடிப்படையான பன்னாட்டு நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் வீழ்த்தப் படுவதுதான் தீர்வு.

2)சிலநேரங்களில் அவசியப்படும் உடனடி மற்றும் தற்காலிகத்தீர்வுக்கான மற்றைய குறிப்பாக அலோபதி முறையைக் கையாள்வதனால் எந்தவிதத்தில் மாற்று மருத்துவம் குறையுள்ளதாகிறது?

♠புதுவை சிவா♠ சொன்னது…

"பாம்புக்கடிக்கு சிறியாநங்கை மட்டும் போதும் என்றா

அப்படி என்றால் anti snake venom தேவையே இல்லையா

விளக்கவும்"

தலைவா மருந்து கால் மதி முக்கால் இது உளவியல் சார்ந்தது பாம்பு கடி பட்ட நபருக்கு மனதளவில் தைரியத்தையும் அதன் மூலம் அவருக்கு மன வலிமையையும் பெற செய்வது இந்த மூலிகை மருத்துவம்.

இந்த சிரியாநங்கை அவர் உடலில் உயரும் விஷத்தை கட்டுபடுத்தும் தன்மை கொண்டது அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல வேண்டும் என எழுதி இருந்தேன்.

"இதில் தனியார் சித்த மருத்துவமனைகளும் உண்டு
தனியார் அலோபதி மருத்துவமனைகளும் உண்டு என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா"

இல்லை சார் ஆனா இருக்கு இதில் மெஜாரிட்டி வசூல் ராஜா M.B.B.S தான் :-)


"சித்த மருத்துவர்கள் சித்த மருந்திற்கு பதில் அலோபதி மருந்தை பயன்படுத்துவதான் என்ன நன்மையை எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று நீங்கள் இது வரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை :) :)"

ஒரு சித்த மருத்துவரால் தன் நோயாளிக்கான மருந்தை உருவாக்கும் திறமை பெற்றவர் ஆனா அலோபதி மருத்துவரால் அது முடியாது. கிராமத்து பழமொழி "நாட்டையே ஆன்டவனுக்கு எறுமை எம்மாத்தரம்."

:-)

புருனோ Bruno சொன்னது…

//இதில் தெரிவது, நான் தமிழ் படித்தவரை, மாற்றுமருத்துவமுறைகளுக்கு ஆப்படித்த தீர்ப்பு என்கிற சந்தோஷத் தொனிதானே தவிர மாற்றுமருத்துவத்தினை ஆதரிக்கும் தொனியல்ல.//

நான் இதுவரை இதில் மூன்று இடுகைகள் எழுதியுள்ளேன்

அவற்றை படித்து பார்த்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்

முடிந்தால் மூன்றாவது இடுகையில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க பாருங்கள்

உங்களுக்கு உண்மை புரியும்

புருனோ Bruno சொன்னது…

//1) அலோபதியால் அனைத்துநோய்களையும் குணப்படுத்திவிடமுடியும் என்கிறீர்களா?//

இல்லை

ஆனால் எந்த நோயை குணப்படுத்த முடியாது என்பதை தெளிவாக கூற முடியும்.

//2)அலோபதியால் முடியாதது வேறு எதனாலும் முடியாது என உங்களால் உறுதியாகச் சொல்லமுடியுமா?//
முடியாது
உதாரணமாக பெம்பிகஸ் போன்ற நோய்களுக்கு சித்த மருந்துக்கள் அலோபதி மருந்துக்களை விட அதிகம் பலன் தருபவை

//3)"வாலிப,வயோதிக அன்பர்களை" கூவிக்கூவி அழைக்கும் மருத்துவச் சிகாமணிகளை இப்படி அனைத்து மாற்றுமருத்துவ வல்லுனர்களுடனும் பொதுமைப்படுத்திப் பேசலாமா?//
நான் பொதுமை படுத்தி பேசவில்லை
நான் தெளிவாகவே வித்தியாசப்படுத்தியிருந்தேன் என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன்

♠புதுவை சிவா♠ சொன்னது…

"அதாவது அலோபதி மருத்துவம் படித்தவர்களே தவறு செய்கிறார்கள் .. மாற்று மருத்துவர்கள் தங்கள் படித்த மருத்துவ முறையினை பயன்படுத்தாமல் அலோபதி மருத்துவத்தை அதனை பற்றி தெரியாமலேயே பயன்படுத்தலாம் என்பதனைத்தான் தேவையான தீர்ப்பு என்று கூறுகிறீர்கள சிவா சார்"

ராம் சார் நான் அப்படி சொல்ல வில்லை அவர்களுக்கும் போதுமான பயிற்ச்சி கொடுத்த பின் இந்த அலோபதியை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.

புருனோ Bruno சொன்னது…

//1)ஹோமியோபதியிலும், சித்தாவிலும், ஆயுர்வேதத்திலும் உள்ள மிகப்பெரும்பான்மையான மருந்துகள் பக்கவிளைவற்றவை...//

இதை நான் மறுக்கிறேன்

அவர்கள் என்ன் ஆராய்ச்சி செய்து பக்கவிளைவுகள் இல்லை என்று கண்டுபிடித்தார்கள் என்ற விபரம் தர வேண்டும்

ஆராய்ச்சி செய்ததால் தான் அலோபதி மருந்துக்களின் பக்க விளைவுகள் தெரிய வருகின்றன

ஆராய்ச்சியை செய்யாமல் பக்க விளைவு கிடையாது என்று கூறுவதை ஏற்க முடியாது

--

சின்கோனா மரப்பட்டையை பயன்படுத்தும் போது அதற்கு பக்க விளைவு கிடையாது என்று தான் கூறினார்கள்

ஆனால் அதே பட்டை அலோபதியால் ஆராய்ச்சிக்குட்பட்ட பின்னர் தான் பக்க விளைவுகள் தெரிய வந்தது

இது உதாரணம் தான்

--

விளைவை ஏற்படுத்தும் எந்த ஒரு பொருளுக்கும் பக்க விளைவு உண்டு

இது உலக நீதி

புருனோ Bruno சொன்னது…

//ஏனெனில் அவை செயற்கை ரசாயனங்களால் தயாரிக்கப் படுபவையல்ல.//

இயற்கையாக விளையும் அனைத்து பொருட்களுமே பக்க விளைவு உள்ளவையே

அலோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துக்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவை அல்ல

அவையும் தாவரங்கள் / பிற உயிரினங்களிலிருந்து பெறப்பட்டவையே

மலேரியாவிற்கு சின்கோனா பட்டை பலனளிப்பதற்கு காரணம் அதில் உள்ள குவினைன்.

குவினைனின் விளைவுகள் சின்கோனா பட்டையில் உண்டு
குவினைனின் பக்கவிளைவுகளும் சின்கோனா பட்டையில் உண்டு

//ஆனால் அலோபதியில் உள்ள சாதாரண பாரசிட்டமால் கூட பக்கவிளைவினை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஒத்துக்கொள்வீர்களா?//
ஏற்றுக்கொள்கிறேன்
இந்த பாராசிட்டமாலுக்கு அண்ணன் ஒருவர் உண்டு

அவர் பெயர் ஆஸ்பிரின்
அவருக்கும் பக்க விளைவுகள் உண்டு
அவர் இருக்கும் oil of wintergreenக்கும் ஆஸ்பிரினின் அதே பக்க விளைவுகள் உண்டு

ஆஸ்பிரின் சாப்பிட்டால் பக்க விளைவு ஆனால் oil of wintergreen சாப்பிட்டால் பக்க விளைவு கிடையாது என்பது அறியாமை

புருனோ Bruno சொன்னது…

//2)வெகுகாலம்வரை அலோபதியில் கோலோச்சிய பென்சிலின் மருந்தைப் பற்றிய நவீன மருத்துவ அறிவியலின் இப்போதைய கருத்தென்ன?//

நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை
விளக்கவும்

புருனோ Bruno சொன்னது…

//நிச்சயமாக இது அனைத்து மாற்றுமருத்துவர்களின் பொதுக்கருத்தாக இருக்கமுடியாது.//

இதைத்தான் நான் கேட்டேன்

//ஆனால் இந்த வழக்கு தொடுக்கப்படவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிய சமூக, பொருளாதாரக் காரணிகளை உள்ளடக்காமல் வெறுமனே ஒற்றைப் பரிணாமப்பார்வையில் பார்ப்பது அழகல்லவே!//
என்ன காரணிகள்

//நவீன இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் கண்டுபிடிப்புக்களையும் ஆராய்ச்சிகளையும் பன்னாட்டு ஏகாதிபத்திய மற்றும் மருந்தியல் நிறுவனங்கள் தங்களது சுயலாபநோக்கத்துடன் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால்தான் அலோபதி இந்த அளவு கோலோச்சுகிறது என்பது எனது வாதம்.//
சரி
இனி சித்த மருத்துவர்களும் அலோபதி மருந்தை பரிந்துரைத்தால் அலோபதி கோலோச்சுவது கூடுமா குறையுமா

இதற்கு பதில் கூறுங்கள்

புருனோ Bruno சொன்னது…

//அதுசரி மருத்துவரே! MBBS, MD, MS (MD,MS போன்ற உயர்படிப்பு படித்தால்தான் மருத்துவத்துறையில் நிற்க முடியும் என்று உங்கள் பழைய பதிவில் சொல்லியிருக்கின்றீர்கள்) ஆகிய படிப்புக்களுக்கு இன்று ஆகும் செலவென்ன?//

TUITION FEES PER ANNUM.
PG Diploma Rs.15,000/-
PG Degree Rs.20,000/-
MDS Rs.20,000/-

புருனோ Bruno சொன்னது…

//MBBSக்கு மிகக் குறைந்தபட்சம் நன்கொடை கூட 30-40 லட்சங்கள் என்ற தனியார் கல்லூரிகளின் நடைமுறை தங்களுக்குத் தெரியாதா? அல்லது தெரியாததுபோல் இருக்கிறீர்களா? //
தெரியாது

நீங்கள் தான் முதலில் 100 லட்சம் என்று கூறினீர்களே. இப்பொழுது 30, 40 என்று கூறுகிறீர்கள்

புருனோ Bruno சொன்னது…

//மாற்றுமருத்துவத்தில் ரெய்கி சிகிச்சை மூலம் எத்தனையோ பிரச்சினைகளை , அலோபதி மருந்துகளால் குணமாகாத பிரச்சினைகளை குணப்படுத்தி இருக்கிறேன்//
வாழ்த்துக்கள்

//இதனை அங்கீகாரமாகச் சொல்ல முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அலோபதியைத் தவிர எந்த மருத்துவமுறையையும் ஏற்றுக்கொள்ள முடியாத சட்டச்சிக்கல்கள். //

இப்படி பொத்தாம் பொதுவாக கூறாமல் என்ன சட்டச்சிக்கல் என்று விவரித்தால் தீர்வு என்னவென்று பார்க்கலாம்

புருனோ Bruno சொன்னது…

//இதுதான் தொடர்ந்து இருக்கின்ற சிக்கல். மனிதனை எப்படியும் நோய்களினின்று காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பல்வேறு நோய்தீர்ப்பு நிபுணர்களும் முயன்றுவருகிறார்கள் என்பதை அலோபதியும் அரசாங்கமும் எப்போதுதான் உணர்வார்களோ தெரியவில்லை.//

உணர்ந்தாகிவிட்டது
ஆனால் ஒரு சிலர் தான் தங்கள் முறை வேண்டாம், அடுத்த முறை வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்

புருனோ Bruno சொன்னது…

//1) ஏற்கனவே நான் சொன்னதுபோல அலோபதி மாயைய்ல் சிக்கி மக்கள் உழலும்போது, தங்கள் survivalக்காக சில மருத்துவர்கள் அலோபதியையும் கையாளத்தொடங்குகிறார்கள்... இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்

இதற்கு அடிப்படையான பன்னாட்டு நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் வீழ்த்தப் படுவதுதான் தீர்வு.//

சித்த மருத்துவர்களும் தங்கள் மருந்தை விட்டு விட்டு அலோபதி பரிந்துரைத்ஹால் இந்த நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படுமா, மேலும் வளருமா என்பது தான் என் கேள்வி

//2)சிலநேரங்களில் அவசியப்படும் உடனடி மற்றும் தற்காலிகத்தீர்வுக்கான மற்றைய குறிப்பாக அலோபதி முறையைக் கையாள்வதனால் எந்தவிதத்தில் மாற்று மருத்துவம் குறையுள்ளதாகிறது? //
எப்படி என்று தெளிவாகவே விளக்கியுள்ளேன். இதுவரை உங்களுக்கு புரியவில்லை என்றாலும் கூட நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். உடனடியாக புரியும்

புருனோ Bruno சொன்னது…

//தலைவா மருந்து கால் மதி முக்கால் இது உளவியல் சார்ந்தது பாம்பு கடி பட்ட நபருக்கு மனதளவில் தைரியத்தையும் அதன் மூலம் அவருக்கு மன வலிமையையும் பெற செய்வது இந்த மூலிகை மருத்துவம்.//

மனவலிமை மட்டும் தானா
நிஜத்தில் பலன் கிடையாதா

ஆனால் நீங்கள் முதலில் கூறியது என்ன

எது சரி

(எது சரி என்று எனக்கு தெரியும் !!)

புருனோ Bruno சொன்னது…

//இந்த சிரியாநங்கை அவர் உடலில் உயரும் விஷத்தை கட்டுபடுத்தும் தன்மை கொண்டது அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல வேண்டும் என எழுதி இருந்தேன்.//

கட்டுப்படுத்தும் தன்மை உடையது என்றால் ஏன் மேல் சிகிச்சைக்காக செல்ல வேண்டும்.

புருனோ Bruno சொன்னது…

//"இதில் தனியார் சித்த மருத்துவமனைகளும் உண்டு
தனியார் அலோபதி மருத்துவமனைகளும் உண்டு என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா"

இல்லை சார் ஆனா இருக்கு இதில் மெஜாரிட்டி வசூல் ராஜா M.B.B.S தான் :-)//

ஆதாரம் தர முடியுமா.

-

//ஒரு சித்த மருத்துவரால் தன் நோயாளிக்கான மருந்தை உருவாக்கும் திறமை பெற்றவர்//

அப்படி பட்டவர் ஏன் சார் அலோபதி வேண்டும் என்று கேட்கிறார்

//ஆனா அலோபதி மருத்துவரால் அது முடியாது.//
ஆமாம் சார்
இங்கு நோயாளியின் உயிருக்கு மதிப்பு அதிகம்.

// கிராமத்து பழமொழி "நாட்டையே ஆன்டவனுக்கு எறுமை எம்மாத்தரம்."//
உண்மைதான்

அதனால் தான் எங்கள் முறையில் பலனில்லை. அடுத்த முறையை பயன்படுத்த அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்களாம் :) :)

புருனோ Bruno சொன்னது…

//ராம் சார் நான் அப்படி சொல்ல வில்லை அவர்களுக்கும் போதுமான பயிற்ச்சி கொடுத்த பின் இந்த அலோபதியை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. //

அப்படி என்றால் அவர்களுக் கல்லூரியில் சேர்ந்து ஐந்த்ரை வருடம் படிக்க வேண்டியது தானே

யார் தடுத்தது

அப்படி படித்த பல சித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் !! தெரியுமா

Dr.ராம் சொன்னது…

இது தொடர்பான எனது பதிவு இங்கே

http://sakalakaladr.blogspot.com/2010/08/blog-post.html

தங்கள் கருத்துக்களை இடவும்

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

சுத்தமான தண்ணீரைக் கூட அதிக அளவில் குடித்தால் தலைவலி ஏற்படும், வாந்தி மயக்கம் ஏற்படும், சில நேரங்களில் வலிப்புகூட வரலாம் சந்தேகம் வந்தால் சில லிட்டர்களை ஒரே மூச்சில் குடித்துப் பாருங்கள். சுத்தமான தண்ணீருக்கே இப்படி பக்க விளைவுகள் இருக்கும்போது பக்கவிளைவே இல்லாத மருந்து என்பதை நம்புகிறீர்களா?

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது நம்முன்னோர்கள் கண்டதுதான். எது அளவு என்பதை அறிந்தவர்கள் மட்டுமே அதை உபயோகிக்க வேண்டும். நோயாளிக்கு தேவை நோய் குணமடைதல் அது எந்த முறையில் என்றாலும் அதை அவர் வரவேற்பார். அது அறுவை சிகிச்சையாய் இருந்தாலும் சரி, மாத்திரை சிகிச்சையாய் இருந்தாலும் சரி, தொடு சிகிச்சையாய் இருந்தாலும், காந்த சிகிச்சையாய் இருந்தாலும் சரி. மந்தரித்து குண்மானாலும் கூட அவருக்கு மகிழ்ச்சியே. இதில் அவரவருக்கு தெரிந்ததை தெளிந்ததை செய்வதுதான் அனைவருக்கும் நல்லது

பெயரில்லா சொன்னது…

SORRY FOR INTERRUPTION

READ THE LINK BELOW AND RELAX A LITTLE BIT

கிறிஸ்தவ ம‌த‌ குருக்க‌ள் நோயுற்ற‌வ‌ன் உட‌ம்பில் ஜெபித்த‌ எண்ணை த‌ட‌வியே எப்பிணியையும் தீர்க்க‌ முடியும். உலகில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு த‌குதி பெற்ற‌ அனைத்து ம‌ருத்துவ‌ர்க‌ளும் ஸ்டெதஸ்கோப், ம‌ருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள் முத‌லிய‌வைக‌ளை தூக்கி எறிந்து விட்டு சர்ச்சின் மூப்பர்க‌ளாக‌ மாறி ச‌ர்வ‌ பிணிக‌ளையும் தீர்க்க‌லாம் தானே?.

..................

parthasarathy சொன்னது…

நல்ல ஒரு தொடக்கம்

allinall சொன்னது…

//அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை மாற்று மருத்துவத்தில் குணமாக்க முடியும்” என்பது உண்மையென்றால் எங்களை அலோபதி முறையில் வைத்தியம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏன் உயர் நீதிமன்றத்தில் கெஞ்ச வேண்டும்'---- //

அது மட்டும் அல்ல போஸ்ட்மார்டம் செய்யும் உரிமையும் சித்த மருத்துவர்களுக்கு உண்டு என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வர வாய்ப்பு உண்டு. ஏன் என்றால் சித்த மருத்துவத்திற்காண Tamilnadu Dr. M.G.R. Medical University- யின் Syllabus -ல் உள்ள பாடபிரிவுகள்
1. History and Basic Principles of Siddha Medicine
2. Bio-Chemistry
3. Anatomy - Part-I
4. Anatomy - Part-II
5. Physiology - Part-I
6. Physiology - Part-II
7. Medicinal Botany
8. Basic Principles of Pharmacy
9. Plant Kingdom
10. Metals, Minerals and
Animal Kingdom
11. Micro Biology
12. Siddha Pathology
13. Modern Pathology
14. Hygiene and Community
Medicine
15. Forensic Medicine and
Toxicology
16. General Medicine(siddha)
17. Special Medicine including
Yoga & Varma
18. Surgery including Bone
Setting and Dental Diseases
19. Obstetrics &Gynaecology
20. Paediatric Medicine
இவை 6 செமஸ்டராக பிரிக்கபட்டு 41/2 வருடம் படிப்பு
1 வருடம் மருத்துவ
பயிற்சி.
தகுதியின் அடிப்படையிலே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
தகுதியின் அடிப்படையிலே உரிமையை பெற்று பயன்படுதுவதும் பயன்படுத்தாமல் விடுவதும் அவர்கள் விருப்பம்.
உயர் நீதிமன்றத்தில் கெஞ்சினால்
சாதகமான திர்ப்பு கிடைக்கும் என்று இந்திய இறையான்மையை கேலிகூத்தாக்காதிர்கள்.
ஏன் சித்தா,ஆயுற்வேத மருத்துவர்கள் அலோபதியை நாடவேண்டும். அலோபதி மருத்துவத்தால் சித்தா,ஆயுற்வேத மருத்துவத்தில் ஏற்பட்ட அழிவுகள் என்ன என்பதை எனது blog_ல் எழுதி தங்களது பார்வைக்கு கொண்டுவருகிறேன்

புருனோ Bruno சொன்னது…

//ஏன் சித்தா,ஆயுற்வேத மருத்துவர்கள் அலோபதியை நாடவேண்டும்.//

தங்கள் முறையை விட அலோபதி பல விதங்களில் சிறந்து என்பதால்

// அலோபதி மருத்துவத்தால் சித்தா,ஆயுற்வேத மருத்துவத்தில் ஏற்பட்ட அழிவுகள் என்ன என்பதை எனது blog_ல் எழுதி தங்களது பார்வைக்கு கொண்டுவருகிறேன் //
அப்படி என்றால் ஏன் சார் அலோபதி முறைக்கு வருகிறார்கள்

Ashvinji சொன்னது…

அருமையான பதிவுக்கு நன்றி.
மாற்று மருத்துவம் என்று சொல்லும் போது இயற்கை நல வாழ்வியல் பற்றியும் சொல்லியாகி வேண்டும். ஆயுர்வேதா, சித்தா, யூனானி, ஹோமியோபதி, போன்றவற்றில் மருந்து, மருத்துவர், உண்டு.
இயற்கை நலவாழ்வியலில் மருந்து என்று ஒன்று கிடையவே கிடையாது. நமக்கு நாமே மருத்துவர்; உண்ணும உணவே மருந்து. "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" என்னும் திருக்குறளை நோக்கினால் உணவே மருந்து என்னும் உண்மை புரிய வரும். நான் மாற்று மருத்துவத்துக்கு எதிரானவன் அல்ல. மருந்துகள் இல்லாமலேயே மனிதன் ஆரோக்கியமாக வாழ இயலும் என்றால், அந்த முறையான இயற்கை நலவாழ்வியலை எல்லோரும் பின்பற்றலாமே. நேரம் கிடைக்கும் போது வாருங்கள் எனது வலைப்பூவுக்கு:
வாழி நலம் சூழ..
www.frutarians.blogspot.com

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விழிப்புணர்வை தூண்டும்
இடுகைக்கு நன்றி.

Related Posts with Thumbnails