வெள்ளி, 9 ஜூலை, 2010

நினைவிருக்கிறதா சகியே?

நினைவிருக்கிறதா சகியே?

பிரபஞ்சமெங்கும் பூத்துக்கிடக்கும் பல்லாயிரம், பலகோடி ஜீவன்களும் ஆயிரமாயிரம் வழிகளில் காதலைச்சொல்லும்போதில் நாம் நமது காதலை இதழ்பதித்து இதயம் பறித்துக்கொண்டோம்... உனக்கு நினைவிருக்கிறதா சகியே?

என் நெஞ்சமெங்கும் சுரந்திருந்த ஜீவ ஊற்றை நீ அள்ளிக்கொண்டதும்... உன்னை நானாக்கி என் சுயமழித்து நான் திரிந்திருந்ததும்...உன் குரலுக்கும் உன் புன்னகைக்கும், உன் முத்தத்திற்கும், உன் அணைப்பிற்கும் ஏங்கி ஏங்கி என் புலன் சுமந்த அறிவெல்லாம் அழித்துப் போட்டதும் உனக்கு நினைவிருக்கிறதா சகியே?

காதலிக்கும்போதெல்லாம் உனக்காக கவிதை எழுதியதில்லை... நம் காதலே கவிதையாய்த்தானே இருந்தது? தாளம் தப்பாது நான் பாடிக்கொண்டிருந்த காதலின் பாடலில் அவ்வப்போது நீ இசைத்த அபஸ்வரங்களை ஆலாபனைகளாக நான் மாற்றியது நினைவிருக்கிறதா சகியே?

உடல்நலம் குன்றி உன்னை மருத்துவரிடம் அழைத்துப் போகும்போதெல்லாம் நீ ஊசிக்குப் பயந்தழுவாய்... நான் ஊமையாய் அழுவேன். என் தலைவலிக்கு நீ மருந்து தடவியபோது மட்டும் சாபங்களை வரங்களாய் மாற்றியது உன் காதல். நினைருக்கிறதா சகியே?

காதலை நெஞ்சில் சுமப்பது வழக்கம். நான் மட்டும் உன்னை ஒரு கைக்குழந்தையாய் மாற்றி என் தோளில் சுமந்திருந்தேன்.... இன்று சுமையில்லாத தோள்களின் கனத்தில் உயரம் குன்றி நான் தவிப்பது உனக்குப் புரியுமா சகியே?

துரோகங்கள் நிழலாய்த் தொடர்ந்து வந்தென்னை நெஞ்சு கீறியபோதெல்லாம் கண்ணீர் துடைக்க நீண்ட உன் விரல்களின் இதமும், உன் மடியின் கதகதப்பும் என்னை ஆற்றுப்படுத்தியதெல்லாம் நினைவிருக்கிறதா சகியே?

இன்று நீயே என் முதுகெலும்பை உருவி என்னை முடவனாக்கியதேன் சகியே?

கண்ணீரையும் காயங்களையும் எனதாக்கி பூக்களாலும் புன்னகையாலும் உன் பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறேன்.

நீயோ இருண்டுபோன என் வானத்தின் மீதமிருந்த நட்சத்திரங்களைப் பிடுங்கி உன் படுக்கையறைக்கூரையை அலங்கரித்திருக்கிறாய்!

என் வசந்தகாலக்கனிகளைச் சுவைத்துப் போனவள் கண்ணீர்விதைகளை மட்டும் காதல் பரிசாய்த் தந்திருக்கிறாய் சகியே...

எங்குபோய்த் தேடுவேன் இனி என் பாதையை.... அழுதழுது ஜீவனிழந்துபோன குருட்டுவிழிகளால்?

4 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நான் நிறைய சொல்லவேண்டி வரும்.. பொழைச்சு போங்க...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

தெரிந்தே இழந்தவற்றை மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறிர்கள் நண்பரே ,. மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி

நேசமித்ரன் சொன்னது…

நான் நிறைய சொல்லவேண்டி வரும்.. பொழைச்சு போங்க..//

நாட்டுல பலப்பல ரகசியம் நமக்குத்தெரியாமயே மறைஞ்சுரும் போலயே :)

ஹேமா சொன்னது…

செந்தில்,நேசன் ....விந்தைமனிதன்
தன்னோட மனக்கவலையை அள்ளிக் கொட்டி எழுதியிருக்கார்.நல்லாத்தானே இருக்கு.
ஏன் கோவப்படுறீங்க அவர்மேல !
எழுதுவதால் மனப்பாரம் குறையும்.நீங்க தொடர்ந்து எழுதுங்க.இவங்க சும்மா !

Related Posts with Thumbnails