வியாழன், 30 செப்டம்பர், 2010

கவிதைப்பார்வை-9: நீக்கப்படுவோருக்கான பட்டியல்



"எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன" என்றொரு புகழ்பெற்ற ஆங்கில வாக்கியம் உண்டு. எல்லோர் வாழ்க்கையும் ஏதோ ஒரு விதத்தில் நேசித்தலையும் நேசிக்கப் படுதலையும் நோக்கியே நகர்கின்றன. பலர் தத்தமது சுயத்தை நேசித்தல் என்ற அளவில் சுருங்கிப் போய்விடுகின்றனர். சிலர் மட்டும் விரிகின்ற மொட்டின் வாசத்தைச் சுமந்து செல்லுமிடந்தோறும் தூவிச் செல்லும் தென்றல்போல நேசத்தைப் பரப்பிச் செல்கின்றனர்.

நேசிப்பு உண்மையென்றால் அதில் முன்நிபந்தனைகள் இருக்கக்கூடாதென்றார் ஓஷோ! உங்கள் நேசிப்பு உங்களை மட்டுமே சார்ந்ததாய் இருக்க வேண்டுமே தவிர நேசிக்கப்படுபவரைச் சார்ந்து இருந்தால் அது அவரை நேசிப்பதாகாது;அவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அவரது பிம்பத்தின் மீதான நேசிப்பாகவே இருக்கும் என்கிறார் மேலும் அவர்!

நிதர்சனத்தில் நேசிப்பவர்மீதான நேசத்தைவிடவும் அவர்மீது நாம் சுமத்தும் நிபந்தனைகளே அதிகமாய் இருக்கின்றது. நிபந்தனைகள் மீறப்படும்போது மனம் துடிக்கின்றது; ஏமாற்றங்களையும், வலிகளையும் விருப்போடு சுமக்கத் துவங்குகின்றது.

"நீங்கள் சிலுவைகளைப் பரிசளியுங்கள்; நான் அன்பைத் தருகிறேன்" என்றார் ஏசு!

எல்லோருக்கும் எளிதா என்ன ஏசுவாதல்?!

எத்தனை பேருக்கு முடியுமோ தெரியாது.... என்னால் முடியாது என்றுமே!

என்னிடம் ஒரு தேர்வு இருக்கின்றது... அதன் ஏடுகள் என்றுமே கறுப்பு வெள்ளைப் பக்கங்களாலானது! பக்கங்களில் வழிந்திருக்கும் பெயர்களும் கணக்கற்றவை

நான் மட்டுமல்ல... எல்லோருமே வைத்திருக்கின்றோம் விருப்பு வெறுப்புக்களால் நிரம்பிய ஒரு புத்தகத்தை! இல்லையா?

"நான் உன்னை வெறுக்கிறேன்; அதன்மூலம் உன்னை நிராகரிக்கிறேன்" என்று அறைகூவும்போதெல்லாம் என் கடைவாய்ப் பற்களில் இருந்து கசிகின்றது சிதைக்கப்பட்ட பிரியங்களின் குருதி. ஆனாலும் என்னுள் வெறுப்பின் விதைகளைத் தூவியபடியே இருக்கும் மனிதர்கள் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர் என் வழியெங்கும்.

"நான் உன்னை நேசிக்கிறேன்" என்பதில் வழியும் அன்பின் நெகிழ்வு தரும் ஆனந்தம், "நான் உன்னை நிராகரிக்கிறேன்" என்பதில் பொங்கும் குரூர திருப்தியிலும் இருக்கின்றது.... ஆமாம்... நேசமும் வெறுப்பும் நாணயத்தின் இருவேறு பக்கங்கள்தாமே?!

"நீ நீக்கப்பட வேண்டியவன்" என்ற தீர்ப்பை எழுதும்போது எனக்கு நானே கற்பித்துக் கொள்கிறேன் உன்னிலும் நான் உயர்ந்தவன் என.... உனக்கான தீர்ப்பை எழுதுபவன் நான் என....

மறுதலையாக நீக்கப்படும் பெயர்ப்பட்டியலில் என் பெயரைக் காணும்போதெல்லாம் எழுகின்றது ஒரு கேவல் எனக்குள்ளிருந்து....

"மரணத்தைவிடக் கொடியது மறக்கப்படுவது!" என்று ஒரு தமிழ்த் திரைப்பட வசனம் இருக்கின்றது

நான் நேசிப்பவைகளின் பட்டியலில் எப்போதும் இருக்கின்றது.... 'நீக்கப்பட வேண்டியவர்களின்' பட்டியலைப் பற்றிப் பேசும் இந்தக் கவிதை! மனுஷ்யபுத்திரன் எழுதியது...

பட்டியலிலிருந்து

ஒருவரை நம் பட்டியலிலிருந்து
நாம் நீக்கும்போது
அவர் அறியாதபடி
அவருக்கு
ஒரு தீர்ப்பை எழுதவேண்டும்.

அந்தத் தீர்ப்பில் நம்மையும் மீறி
ஒரு துளிக் கண்ணீர்
சிந்த நேரிடலாம்.

ஒரு முற்றுப்புள்ளியிலேனும்

நினைவு உறைந்து
நம்மைச் சற்றே
தடுமாற்றமடையச் செய்யலாம்.

நம்முடைய பட்டியலிலிருந்து
ஒருவரை நீக்கும்போது
ஒரு உறுப்பை நீக்குவதுபோல சில சமயம் அதிக வலி இருக்கலாம்.

எந்தக் கட்டத்திலும்
திரும்பிப் பார்க்காமலிருப்பதுதான்
ஒரு தீர்ப்பை எழுதத் தொடங்கிவிட்டவரின்
முதல்பணி

இல்லாவிடில்
நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட
தன்னலம் தோய்ந்த வைராக்கியங்களை
செலுத்த முடியாமல் போகும்.

அல்லது
நீக்கப்படும் மனிதனுக்கு
தேவையற்ற ஒரு பிடிமானத்தையோ
கடைசி நம்பிக்கையையோ
அது கொடுத்தது போலாகும்

நம்மிடம் ஒரு தேர்வு இருப்பது
ஒரு பட்டியல் இருப்பது
அதில் அகற்றுவதற்கான
ஒரு பெயர் இருப்பது

அது நம்மை
அவ்வளவு வசீகரிக்கிறது

அது ஒரு புனிதக் கடமைபோல.


கண்களை மூடமுடியாத
இறந்த ஒருவனின் கண்களைப்போல.


***************************************************

புதன், 29 செப்டம்பர், 2010

கரங்கள் கொஞ்சம் நீளட்டுமே...!

உலகில் கணந்தோறும் ஆயிரமாயிரம் உயிர்கள் தம் துயர்நீக்க விழிநீர் தேக்கி இறைஞ்சிக்கொண்டே இருக்கின்றன... ஏதிலிகளாய்! இருப்போரின் கை கொஞ்சமாவது தாழுமா என்று!

மனமிருப்போரிடம் பெரும்பாலும் பணமிருப்பதில்லை; பணம் படைத்தோரோ மனம் வறண்டே....!

மட்டுமன்றி.... உதவி தேடி அலையும் நெஞ்சங்களுக்கு நாம் பணமாக மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்றில்லையே? வேறு வகைகளில் உழைப்பாகவும், உதவிகளாகவும்கூட செய்யலாம்....

பொருள் படைத்தோர் அள்ளிக் கொடுக்கலாம்;
பொருள் குறைந்தோர் கிள்ளியாவது கொடுக்கலாம்!

நண்பர் கேபிள்சங்கரின் பக்கத்தில் சில நாள்களுக்குமுன் உதவிக்கு ஏங்கும் ஒரு தளிரைப் பற்றிக் குறிப்பிட்டு 'இயன்றோர் உதவுக!' என்று கோரிக்கை விடுத்திருந்தார்:-

"இந்த  குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா  இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.  ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery  செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் என்னை தொலைபேசி எண்ணிலோ.. அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக.. "



தம்மால் இயன்ற உதவிகளை - பொருளுதவியாகவோ இல்லை வேறேதுமான மருத்துவ உதவிகளாகவோ - செய்யும் மனம் படைத்தோர் நண்பர் கேபிள்சங்கரைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

கேபிளின் மின்னஞ்சல் முகவரி ...
sankara4@gmail.com

அவரிடம் பேச: 9840332666

வங்கி கணக்கு விபரம் :
A/C NAME : SANWAS INFOTECH
A/C NO : 0077 0501 0890
ICICI BANK, ASHOK NAGAR BRANCH

பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இயன்றவரை உங்கள் பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்டால் ( கூடுமானால் தனிப்பதிவாகவே!) உங்களைப் படிக்கும் வாசகர்களில் யாரேனும் ஒருவராவது உதவக்கூடுமல்லவா?

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை!

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பேயெல்லாஞ் செத்துப்போச்சி! - கிராமத்துக் கதைகள் 1


கொழந்தைங்களோட ஒலகம் ரொம்ப வேடிக்கையானது, அழகானதுன்னு சொல்லுவாங்க! தாத்தாக்களோட ஒலகமும் அவ்ளோ அழகா இருக்கும்.அவங்க ஒலகத்துல பேரம்பேத்தியளுக்கு மட்டும்தான் மொத மரியாத. தாத்தாக்கள் கதெ சொல்ல பேரம்பேத்திங்க கண்ணு விரிய தலையாட்ட... அடடா!

தொண்ணூறுகளுக்கு மிந்தி இருக்குற காலகட்டம் வரைக்கும் கெராமத்துல வளந்த எளந்தாரிங்க வாழ்க்கையில ரொம்ப புண்ணியம் பண்ணவங்க! ஏஞ்சொல்றேன்னா அதுக்கப்புறம்தான் - இன்னுஞ் சொல்லப்போனா சாட்டலைட் டி.வியும், சாஷேவுல ஷாம்பூவும் வந்த காலகட்டம் - கெராமமெல்லாம் பயத்தம் மாவையும், கல்ல மாவையும்* மறந்துட்டு பாண்ட்ஸ் பவுடரு, குட்டிகூரா பவுடருன்னு டவுனு மாரியே மினுக்க ஆரமிச்சிச்சி. ஒவ்வொருத்தனா... பணம் இருக்குறவன் சிங்கப்பூரு, மலேசியான்னும், இல்லாதவன் சென்னை, திருப்பூருன்னும் நவர ஆரமிச்சான் பொழப்புக்கு!

அப்பிடியே மெல்ல மெல்ல கூட்டுக் குடும்பம்லாம் செதைய ஆரமிச்சிது. எங்க தஞ்சாவூர் மாவட்டத்துலயும், தல குளிச்சிட்டு மொழங்கா முட்டு தொங்குற கூந்தல விரிச்சிப்போட்டு ஒயிலா நடக்குற கன்னிப்பொண்ணு மாரி மனச அள்ளிட்டுப்போற காவிரித் தண்ணி அரசியல் சித்து வெளையாட்டுக்கள்ல சிக்கி, பச்சப்புள்ள மூக்குல ஒழுகுற சளி மாரி ஆயிப்போக, வெவசாயி வாழ்க்கையில் பூஞ்சக் காளான் புடிக்க ஆரமிச்சிச்சி.

கொஞ்சங்கொஞ்சமா தாத்தாக்கள்லாம் திண்ணையிலயும், பொட்டுபொடுசுங்க எல்லாம் டிவிக்குள்ளயும் ஒடுங்கிப்போவ கதைங்க மட்டும் காத்துல அனாதையா திரிய ஆரமிச்சுதுங்க!

எங்க தாத்தா கிட்டத்தட்ட ஒரு கதெ சொரங்கம்ங்க! துச்சாதனன் துகிலுரியறப்ப பாஞ்சாலியோட சீல கலர்கலரா வளந்துகிட்டே போவுமாம்ல! அதே மாரி கதெய ஆரமிச்சா போயிகிட்டே இருக்கும்!

தாத்தாகிட்ட "ஒரு கதெ சொல்லுங்க தாத்தா"ன்னு கெஞ்சுறப்ப அவரு குடுக்குற பில்டப்பு இருக்கே! மொதல்ல வெத்தல பொட்டிய தொறந்து வெட்டி வெச்சிருக்குற கொட்டப்பாக்க கொஞ்சமா அள்ளிப்போட்டு அடக்கிட்டு, நல்லதா நாலு வெத்தலை எடுத்து வெத்தலைக்கி நோகாம காம்பு கிள்ளி நறுவிசா நரம்புக்கு நரம்பு சுண்ணாம்பத் தடவி வாய்க்குள்ள வெச்சி கொதப்ப ஆரமிக்கிறப்போ, போயிலைய எடுத்து தூசுதும்ப ஒதறிப்போட்டு உள்ளாற அடக்குனா.... மனுஷன் அப்பிடியே கண்ண மூடி கொஞ்சநேரம் 'ஆழ்நிலைத் தியான'த்துக்கு போயிட்டு அப்புறமா பொளிச்சுன்னு எச்சி துப்பிட்டு வந்து ஒக்காந்து வாயத் தொறப்பாரு!

"கதெ கேட்ட நாய செருப்பால அடி!"ன்னு.

இப்பிடித்தான் ஒருநா ஒரு பேய்க்கதெ சொன்னாரு!

"நாஞ்சொல்றது நடந்து ஒரு நாப்பது வருசம் இருக்கும்டா! எங்க வகையறாவுல எங்கத்தை பொண்ணுதான் ஒரே பொண்ணு. ரெண்டு தலமொறையா பொட்டப்புள்ள இல்லாம கருவேப்பிலக் கொத்து மாரி ஒத்தப் பொண்ணா பொறந்தவெ! செக்கச் செவப்பழகி.. சீமையில பேரழகி! ஒங்களோட பெரிய பாட்டியா அவெ. காவேரியாத்துல சுழியில மாட்டி செத்தவெங் கொள்ளப் பேருன்னா... அவளோட கண்ணச் சுழிச்சி பாக்குற பார்வெல சிக்கிச் செத்தவனுவோ மீதிப்பேரு. அப்பிடியாப்பட்ட அழகிக்கு ஏம்பெரியப்பன் மவன்.. அதாண்டா.. எங்க மூத்த அண்ணெ நல்லுச்சாமி மேல ஒரு கண்ணு. இவனும் தேன்கொடத்துல விழுந்த ஈ மாரி அவள நெனச்சே கெறங்கிக் கெடந்தான். ஒருவழியா எல்லாரும் கூடிப்பேசி ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் கட்டி வெச்சாங்க.

நாலு மாசம் முடிஞ்சிது. ஆத்துல தண்ணி வார நேரம். அவெ.. அவெனும் ஏரும் கலப்பயுமா திரிஞ்சானுவோ. எங்க நெலம் இருவது வேலியிலயும் ஒழவு ஆரமிச்சிது. எங்கண்ணெ நல்ல ஒழப்பாளிடா. விடிஞ்சாப்புல பூட்டுன ஏரு அந்தி சாஞ்சும் ஓடுது... ஆனாலும் முடியல. இருவது வேலின்னா சும்மாவா! மாடுகட்டி போரடிச்சா மாளாது இன்னு சொல்லி ஆனைகட்டி போரடிச்ச பரம்பரடா நாங்க. நாலாம்நாளு எங்க பெரியப்பன் அண்ணன கூப்புட்டு "எலே பெரியவனே! இன்னிக்கு ரா ஒழவு அடிச்சாதாண்டா சரிப்படும்போல! நம்ம வெள்ளையன தொணைக்கு வெச்சிக்கிட்டு ரெண்டு ஏரா பூட்டுடா"ன்னு சொல்லிட்டு போயிட்டாரு. இவனும் வேலக்கார வெள்ளையன்கிட்ட விடிவெள்ளிக்கி மின்னாடி வந்துருடா!  ஏரப்பூட்டணும்னு சொல்லிட்டு படுத்துட்டான்.

ராப்பொழுதுல தட்டி எழுப்புனான் வெள்ளையன். மாட்ட அவுத்து, ஏரத் தூக்கிட்டு வயலுக்கு போயி ஏரப்பூட்டுனாங்க ரெண்டு பேரும்! ரெண்டு வெளா உழுதுட்டு வெள்ளையன திரும்பிப் பாக்குறாரு பெரியவரு! அவன் நாலு வெளா முடிச்சி அஞ்சாவது வெளாவுல ஓட்டிகிட்டு இருக்கான் ஏர! மாடு ரெண்டும் வெறிக்க வெறிக்க ஓடுது... அவனும் அசரல! "எலேய்! என்னடா மாட்ட இந்தப் புடி புடிக்கிற? மெல்ல ஓட்டுடா. கொஞ்சம் அவுத்து வுடு! ரொம்ப எரைக்கிது அதுக்கு"ன்னு சொல்லிட்டு வரப்போரமா ஒக்காந்து வெத்தலைய எடுத்து சுண்ணாம்ப தடவ ஆரமிச்சாரு.

வெத்தலாக்கு செரியா செட்டு சேந்த ஆனந்தத்துல இருக்குறப்ப பக்கத்துல வந்த வெள்ளையன் " சாமீ! எனக்கும் ஒரு தரம் குடுங்களேன்"னான். இவருக்கு லேசா பொறி தட்டிச்சி. 'என்னடா இது! என்னிக்கும் இந்த மாரி மருவாதி இல்லாம எதுத்தாப்புல நின்னு கேக்க மாட்டானே! என்ன இன்னிக்கு திடீர்னு துணிச்ச இவனுக்கு?"ன்னு யோசிச்சிட்டே கொஞ்சம் உசாரானவரு வெத்தல சுண்ணாம்பை எடுத்து பாக்கட்டில** வெச்சி நீட்டுனாரு. சட்டுனு எதுத்தாப்புல நின்ன வெள்ளையன் காத்துல மறஞ்சி காணாம போனான். ஏதோ ஒரு பாழாப் போன பேயி... ஏரோட்டுறப்பயே செத்துப் போயிருக்கும்போல! ஏரோட்டுற ஆச வுடாம அலஞ்சி அன்னிக்கி நெறவேத்திட்டு. பாக்கட்டி இரும்புல்ல? அதான் பேயி பயந்து ஓடிப்போயிடிச்சி"

அப்டீன்னு சொல்லி கதெய முடிச்சாரு தாத்தா!

( பொறவு நானா யூகிச்சி தெரிஞ்சிகிட்ட விஷயம் என்னான்னா பெரிய தாத்தாவுக்கு புதுப் பொண்டாட்டிய வுட்டுட்டு ராவுல ஏரு ஓட்ட புடிக்கல. பொண்டாட்டி வாசம் எங்க போனாலும் இழுக்குது! என்னடா பண்ணலாம்னு யோசிச்சி வெள்ளையன்கிட்ட கூடிக் குசுகுசுத்து ரெண்டு பேரும் இந்த உத்திய செஞ்சிருக்காங்க! வெள்ளையனும் புதுசா கல்யாணம் ஆனவம்தாம்!)

"செரி தாத்தா! அந்த காலத்துல அவ்ளோ பேயி ஊருபூரா சுத்திட்டு இருந்துருக்கே? இப்பல்லாம் ஏந்தாத்தா பேயி வர்றது இல்ல?"ன்னு கேட்டேன்.

"அட ஏம் மடப்பய மொவனே! எப்பிடியெல்லாம் கேக்குற கேள்வி!"ன்னு எங்கன்னத்த கிள்ளிக்கிட்டே தாத்தா சொன்னாரு...

" அது ஒண்ணுமில்லடா பயலே! ஊருக்குள்ள விஞ்ஞானம்லாம் முன்னேறி கரண்டெல்லாம் இழுத்தானுவோல்ல! அந்த கரண்டு கம்பில அடிபட்டு எல்லா பேயும் செத்துப் போச்சுடா!" 

*    கல்ல மாவு - கடலை மாவு
**  பாக்கட்டி - பாக்குவெட்டி



           ********************************************************

திங்கள், 27 செப்டம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 27/09/10


பதிவு எழுத மேட்டர் யோசிச்சே முன்மண்டையில முக்காவாசி போச்சே என்னடா பண்றதுன்னு மிச்சமிருக்குறத பிச்சிகிட்டு இருந்தப்பதான்யா இந்த ஐடியா வந்திச்சி. என்னாத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு? பேசாம வாரத்துக்கு ஒருவாட்டி ஜாலியா நம்மூரு பாஷையில கொஞ்சம் காத்தாட அரட்டையடிச்சிட்டு போயிடலாம்னு இந்த அரட்டைக்கச்சேரி டாபிக்கை ஆரமிச்சேன். ஆரம்பத்துல சுளுவா இருந்தாலும் இந்த கெராமத்து சொலவடையெல்லாம் தேத்த நாம் படுற பாடு இருக்கே! குப்புறப்போட்டு கொள்ளிக்கட்டையால சொறிஞ்ச மாதிரி ஆயிடுச்சுங்க என் நெலம! இந்தவாரம் என்னடா பண்றதுன்னு பேய்முழி முழிச்சப்ப வகையா வந்து சிக்குனிச்சி அந்தணனோட வலைப்பூ! அண்ணனோட பக்கம் எட்டிப்பாருங்க... வயிறு வலிக்கச் சிரிக்க நான் கேரண்டி! ( "ப்ரீத்தி வாங்கு நான் கேரண்டி"யை ஞாவகப் படுத்துதா?). அப்படியே உருவிட்டேன். அதுனால இந்தவாரம் சொலவடைக்குன்னு வர்ற பாராட்டெல்லாம் அந்தணன் அண்ணனுக்கே சொந்தம்!

1) விதிய வேலி போட்டு தடுத்தாலும் அது புடுங்கிகிட்டு பூந்துடும் அப்டீம்பாங்க! காங்கிரசு கெவுருமெண்டுக்கு இது பொல்லாத காலம் போல! எதத் தொட்டாலும் அதுல சனியன் சம்மணம் போட்டு ஒக்காந்துடுது. காமன்வெல்த் போட்டி நடத்துறேன் பேர்வழின்னு எறங்குனா அஸ்திவாரம் போடுறதுல ஆரமிச்சி அரங்கம் கட்டுறவரைக்கும் ஊழல் பெருச்சாளிங்க அனகோண்டா வாயத் தொறந்து ஏப்பம்விட, நாட்டோட மானம், மருவாதியெல்லாம் கப்பல் புடிச்சிப்போயி பிபிசி வரைக்கும் நாறுது! ஊழல்தான் இந்தியாவோட தேசிய அடையாளமாச்சே! கொஞ்சூண்டு கவனமா இருந்திருக்கப்படாது? எங்க போங்க?! மண்ணுமோகனுக்கு ஒபாமாகிட்டயும், ராஜபக்க்ஷேகிட்டயும் கூடிக் குலாவுறதுக்கே நேரம் பத்தல!

அது ஒரு பக்கம் கெடக்கட்டும்! இந்திய சனங்கள்ள மூணுல ரெண்டு பங்கு பேருக்கு ரெண்டு வேளை சாப்பாட்டுக்கே ததிகணத்தோம்தானாம்! ஒலக வங்கிலயும், மத்த நாடுகள்கிட்டயும் வாங்குற கடன்ல முக்காவாசி பழைய கடனோட வட்டி கட்டத்தான் செரியா இருக்காம். இந்த லட்சணத்துல காமன்வெல்த் போட்டியெல்லாம் தேவைதானா? பணக்கார நாடுங்க நடத்துறாங்கன்னு நாமளும் நடத்தணுமா? ஆனை தும்பிக்கைய ஆட்டுதுன்னு ஆட்டுக்குட்டி வாலை ஆட்டுச்சாம்.

காமன்வெல்த்தை ஒதுக்கி வெச்சிட்டு காமன்மேனோட வெல்த்த கவனிச்சு பாத்தா அடுத்த பீரியட்லயும் அலுங்காம ஆட்சியில ஒக்காரலாம். இல்லன்னா...

"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை."
குறள் 556

2) தஞ்சை பெரியகோயிலோட ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழா நல்லபடியா முடிஞ்சிடிச்சி. நம்ம தமிழ்ப் பாரம்பரியத்தோட பழைமைய நெனச்சா மனசுக்குள்ள பெருமையா இருக்குங்க. "எலேய்! நாங்க நேத்து பேஞ்ச மழையில இன்னிக்கு மொளச்ச காளான் இல்லடா! " அப்டீன்னு சத்தம் போட்டு கத்தத் தோணுது. அதே சமயம் ராஜராஜன் ஆட்சிலதான் தமிழகக் கோயில்கள்ல வைதீகமும் சமஸ்கிருதமும் செழிக்க ஆரமிச்சதுங்குறதையும் நெனைச்சுப் பார்க்குறேன். அவனோட ஆட்சில எப்படி குடவோலை முறை அப்டீங்குற விஷயத்தை அறிமுகப் படுத்துனானோ அதே மாதிரி பிராமணீயத்தை உச்சில ஏத்திவைக்குற வேலையையும் நல்லாவே செஞ்சிருக்கான். அதுனால வெறுமனே நம்ம கலாச்சாரப் பெருமையப் பேசுறதோட இல்லாம வரலாற்றுல இருந்து பாடம் கத்துகிட்டு அதை இன்னும் செழுமைப்படுத்தி மக்களோட வாழ்க்கைமுறைய, பண்பாட்டை அடுத்தடுத்த படிகள்ல மேல ஏத்துற அளவு உழைச்சாத்தானே நல்லாருக்கும்?!

அதை விட்டுட்டு வெறுமனே செம்மொழி மாநாடு, பெரியகோயில் விழா அப்டீன்னு பழைய பல்லவியையே பாடிட்டு மக்களைக் கவனிக்காம இருக்குறத பாத்தா எனக்கு எங்கூரு சொலவடைதான் ஞாவகம் வருது.

"பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டா கொட்டைப்பாக்கு கிலோ எட்டுரூவான்னானாம்!"

3) தி.மு.க வுல உட்கட்சிப்பூசல் முத்திகிட்டே போவுதுபோல! எப்பவும் செப்டம்பர்ல நடக்குற முப்பெரும் விழாவ இந்த வருஷம் நாகர்கோயில்ல நடத்தப்போக, சரியா மருவாதி கொடுக்கலன்னு சொல்லி தென்மண்டலப் பொறுப்பாளர் அழகிரி முறுக்கிக்கிட்டு நிக்கிறாராம். 'கலைச்சேவை' செஞ்சி ஓஞ்சிபோன குஷ்புவுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்குறவங்க அழகிரிய ஒதுக்கி இருக்கத் தேவையில்ல. சொன்னாலும் சொல்லாட்டினாலும் அவருதான் அண்ணா தி.மு.க கோட்டையா இருந்த தென்மாவட்டங்கள்ல தி.மு.க ஆழமா காலூனவும் ஜெயிக்கவும் காரணமா இருந்தவர். எனக்கென்னவோ இந்தத் தடவை அவரு கோவத்துல ஞாயம் இருக்குறாப்புலதாம் தோணுது!

அஞ்சு வருஷம் மெனக்கெட்டு எலவசங்களா அள்ளிக் கொடுத்தாவது வரப்போற எலக்க்ஷன்ல மறுபடியும் ஜெயிச்சிடலாம்னு நம்பிக்கையோட இருக்குறப்ப தேர்தல் வர்ற சமயத்துல இப்பிடி ஒரு பூதம்! "வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு சாப்பிட்டாலும், முக்கியமான நேரத்திலே முடக்கத்தான் லேகியத்தை முழுங்குன மாதிரி ஆயிருச்சே!"

4) எந்திரன் சொரம் உச்சத்துல அடிச்சிட்டு இருக்கு! நம்ம நண்பர் ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ அவரு செல விஷயங்கள சொல்லி வருத்தப்பட்டுட்டு இருந்தாரு. 1960 ல எந்த யாவார நோக்கமும் இல்லாம பொதுவுடைமைக் கருத்துக்கள வலியுறுத்தி "பாதை தெரியுது பார்"னு ஒரு படம் வந்திச்சாம். நம்ம ஜெயகாந்தன்கூட அந்தப் படத்துக்கு பாட்டு எழுதி இருந்தாராம். அந்தப் படம் ஓடக்கூடாதுன்னு அப்போ ஏகப்பட்ட சதிவேலை எல்லாம் நடந்துச்சாம். மக்களுக்கு கொஞ்சம்கூட விழிப்புணர்வு வந்துடப்படாதுங்குறதுல அவ்ளோ அக்கறை!

அதே மாதிரி கொஞ்ச வருஷம் மின்னாடி சரத்சூர்யான்னு ஒரு இயக்குனரு.... மக்களுக்கான சினிமாதான் எடுப்பேன்... அதையும் மக்கள் குடுக்குற அஞ்சு பத்தை வாங்கித்தான் எடுப்பேன்னு சொல்லி காவிரிப் பிரச்சினைய மையமா வெச்சி "பச்சைமனிதன்"னு ஒரு படத்த ஆரமிச்சாரு. ஆனா பல கஷ்டத்துல பாதியிலயே நின்னுபோச்சு. இந்த மாதிரி நல்ல கலை, கலைஞர்களை ஏறவிடாம தொரத்தி அடிக்கிற சமூகம் என்னத்த வளந்து, வாழ்ந்து கிழிக்கப் போவுது? கலையும், கலைஞர்களும் மக்களுக்காக அப்டீங்குற நெனப்பு இல்லாம, யாவரம் ஓடினிச்சா, கல்லாவைக் கட்டுனமான்னு மட்டும் மனசுல நெனச்சிக்கிறதும் என்னைப் பொறுத்தவரை வெபச்சாரத்துக்கு சமானம்தான்! என்ன சொல்றீங்க?

"Our society is run by insane people for insane objectives. I think we're being run by maniacs for maniacal ends and I think I'm liable to be put away as insane for expressing that. That's what's insane about it."  John Lennon

The aim of every artist is to arrest motion, which is life, by artificial means and hold it fixed so that a hundred years later, when a stranger looks at it, it moves again since it is life.  ~William Faulkner


5) நண்பர் பாலபாரதி அப்பப்போ ஆன்லைன்ல வந்தி உபயோகமான செல லிங்க கொடுத்து "இதெல்லாம் படிய்யா!" அப்டீன்னு அன்புக்கட்டளை போடுவாரு! அவரு சொல்ற மேட்டர்லாம் ரொம்ப நல்லாவும் வேற இருந்துடும். அவருதான் சீவக சிந்தாமணியோட கதைச் சுருக்கத்த பிடிஎஃப் ஃபைலா அனுப்பிச்சாரு. நாம எல்லாருக்கும் சிலப்பதிகாரம் கதெ, மணிமேகலை கதெ தெரியும். எத்தன பேத்துக்கு சீவகசிந்தாமணி கதெ தெரியும்? காமமும் காதலும் சொட்டச் சொட்ட திருத்தக்கத்தேவர் அப்டீங்குற சமண முனிவர் எழுதுன காப்பியம் அது. ஒரு துறவியால காதல்காப்பியம் எழுத முடியாதுங்குற சவாலை ஏத்துக்கிட்டு அவரு இதை எழுதுனாராம். எழுதி முடிச்சா... முனிவருக்கு எப்டிடா இந்த 'மேட்டர்'லாம் தெரியும்னு நீங்க சந்தேகப்படுற மாதிரியே அப்ப மக்களுக்கும் வந்திச்சாம்! அப்புறமா தன் துறவுமேல இருந்த சந்தேகத்தைப் போக்க என்னன்னமோ சோதனைய எல்லாம் சந்திச்சி நிரூபிச்சாராம்! இப்பவும்தான் இருக்காங்களே சாமியாருங்க! ஜாமீன்ல வெளில வந்துட்டு தாந்தான் சத்தியசீலன்னு வெக்கமில்லாமல்ல திரியிறானுவோ!

அது கெடக்கட்டும்.... நாஞ்சொல்ல வந்ததே வேற! ஒருநா அவரோட கூகுள் ரீடர்ல  இருந்து ஒரு லிங்க்க கொடுத்து "இதப் படிய்யா!"ன்னாரு. "மரி என்கிற ஆட்டிக்குட்டி"ன்னு ஒரு அற்புதமான கதெ! பிரபஞ்சன் எழுதுனது! நாஞ்சொல்றதவிட படிச்சிப்பாத்துட்டு நீங்க சொல்லுங்களேன்.

இந்த வாரம் கொஞ்சம் நெறய (அது என்னாங்க கொஞ்சம் நெறய?? முரண்!!!) வதவதன்னு பேசிட்டேனோ?! பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க! அடுத்தவாரம் பாப்போம்!

வழக்கம்போல கடேசியா கவிதை!

கணையாழி கி.கஸ்தூரிரங்கன் எழுதுனது!

"உன்னருகே நானிருந்து
சொன்ன கதையெல்லாம்
சுவையற்றுப் போனதென்ன
என்னை எதிர்நோக்கி
வீதியின் கோடிவரை
நிலைப்படியே நீயாக
நின்றிருப்பாய்
இன்று? இல்லை
காரணமோ
ஆணொன்றும் பெண்ணொன்றும்
குழந்தைகள் காரியங்கள்
அடுப்பில் புளிக்குழம்பு.
"

*************************************************************************************

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

வண்புணர்ச்சி


கூர்த்த நாசியுடன் சாக்லேட் கலரில்
உதடு சுழிக்கும் புன்னகையும்
குட்டிப் பூனையாய்ச் சுருண்டிருந்த
கழுத்து முடிகளுமாய்
வாசம் வீசும்
எதிர் சீட்டுப் பெண்
அறிந்திருக்கவில்லை
நான் அவளை ரகஸியமாய்ப்
புணர்ந்து கொண்டிருப்பதை!
************************
காற்றில் முடிபறக்க
துப்பட்டா சரிசெய்தபடி கடப்பவளும்
உதடுகளில் ஐஸ்க்ரீம் வழிய
தோழியிடம் கண்ணடிப்பவளும்
முத்தமிடும் ஆசையைக் கிளர்ந்தெழச் செய்யும்
மினுமினுக்கும் கரிய கன்னங்களையுடைய
விற்பனைப் பெண்ணுமாய்
நிறைத்துக் கொள்கின்றனர்
இந்த ஞாயிற்றுக் கிழமையின்
கனவுகளை!
**************************************************

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பிடித்த பாடல்கள்! (தொடர்பதிவு)




பிடித்த பாடல்கள் என்ற தலைப்பில் என்னை இங்கு உரையாற்ற அழைத்திருக்கும் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய.....

அய்யய்யோ...! தொடந்தாப்புல நாலு அரசியல் மீட்டிங்க வேடிக்க பார்த்தா இதான் கெதி...! எங்க போனாலும் வாயிக்கு மின்னாடி மைக்க நீட்டிட்டு இருக்குறா மாதிரியே ஒரு ஃபீலிங்கு....

தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் வால்பையனுக்கு நன்றி! வெகுநாட்களாகவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை இசை, பாடல் என்றாலே தமிழ்த் திரையிசை மட்டும்தான் தெரியும். அதற்கு மேல் பாலமுரளிகிருஷ்ணா, பாப் மார்லி, மைக்கேல் ஜாக்ஸன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, நான்சி அஜ்ரம் என்றெல்லாம் சொல்லக்கேட்டு வாயைப் பிளப்பதோடு சரி!

நிற்க!

மனம் எந்தளவு விசித்திரமானது என்பதை அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால் தெரியும். எனக்கு இது பிடித்தமான பொழுதுபோக்கு. நன்கு சுறுசுறுவென இருப்பேன்; திடீரென்று பொழுதுகள் இருண்டு போனதாய் உணர்வு வரும்! இறுக்கமாய் அமர்ந்திருப்பேன்.... சடாரென்று வண்ணம் மாறி மனம் மலைச்சுனையாய் நெகிழ்ந்து சொட்டத் துவங்கும்! இப்படியே.....!

எந்தப் பொழுதானாலுஞ்சரி! எனக்கு பி.சுசீலாவின் குரல் கேட்டால் போதும்! அப்படியே உருகத் தொடங்கிவிடுவேன். அப்படி ஒரு வசீகரம்! அம்மாடி!

இதோ ஆண்டவன்கட்டளை படத்தில் "அமைதியான நதியினிலே ஓடும்..." கேளுங்களேன்.... டி.எம்.எஸ் இரண்டாவது சரணம் முடிக்கும்போதே சுசீலா ஒரு ஹம்மிங் உடன் "நாணலிலே காலெடுத்து நடந்துவந்த பெண்மையிது" என்று ஆரம்பிப்பார் பாருங்கள்! என் கண்கள் தானாகவே செருகிக்கொள்ளும்.

http://thenkinnam.blogspot.com/2008/09/695.html

(பாடலின் யூட்யூப் லிங்க் கிடைக்கவில்லை...)



அடுத்து இதைக் கேளுங்களேன்.... மயக்கமென்ன.... என்று உணர்வீர்கள்! " கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்" என்று கொஞ்சும்போது காதலி இருப்பவர்கள் கற்பனையில் மூழ்குவீர்கள்! இல்லாதவர் தேடத்துவங்குவீர் அப்படி ஒரு காதலியை!



எனக்கு இறைநம்பிக்கை இல்லை... ஆனால் சுசீலாவின் இந்தப்பாடலில் என்றும் உருகிக் கொண்டே இருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை... பெரும்பாலும் பக்தர்கள் இறையிடம் இறைஞ்சுவார்கள்.. ஆனால் இதில் சுசீலாவின் குரலில் கம்பீரம் வழிவதாய் உணர்கிறேன்... ஒருவேளை அவர் இறைவணக்கஞ்செய்யத் தேர்ந்தெடுத்தது 'தேன் தமிழ்ச்சொல்' என்பதாலோ?!



ஒருநாள் ஆந்திராவின் ஒரு கிராமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தில் ஒலித்த தெலுங்குப்பாடல் என்னைத் தனக்குள் இழுத்துப்போட்டது. என்ன பாடல் அது என மூன்று மாதங்களாய்க் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு ஒருநாள் விடை கிடைத்தது.... தமிழிலும் தெலுங்கிலும் அது அதே பாடல்தான்... மிஸ்ஸியம்மா படத்தில் ஏ.எம்.ராஜாவும், இசையரசி பி.சுசீலாவும் பாடிய "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்" பாடல்!



தமிழில் மிகக் குறைவான பாடல்களையே பாடியிருந்தாலும் ஒவ்வொன்றையும் குறையற்றுப் பாடியவர் சசிரேகா... இவர் குரலிலும் அதே சொக்குப்பொடி! 'செந்தூரப்பூவைத் தேன் கொண்டுவரச்' சொல்லும் இந்தப்பாடலில் எஸ்.பி.பியின் குரலையும் மீறி என்னைக் கட்டிப்போடும் பாடலின் துவக்கத்தில் சசிரேகா பாடும் வரிகள்! அதேபோல மனோஜ் கியானின் இசை...! அடடா!



அங்கங்களில் வழியும் கவிதையை ரசிக்கும் கவிமனம் எத்தனை பேருக்கு வாய்க்கும்?! எனக்கு மட்டுமல்ல.... இசைப்பிரியர்கள் அனைவருக்குமே எப்போதுமான எவர்கிரீன் ஃபேவரைட்!... சங்கத்தில் பாடப்படாத இந்தக் கவிதை!



காமம்...! கஸ்தூரிமானின் அடிவயிற்றிலிருந்து பரவும் வாசம்போல நம்மில் இருந்து வழிந்துகொண்டே இருக்கின்றது! ஒரு மந்திரச்சாட்டையாய் மாறி நம்மைச் சுழற்றி பிரபஞ்சவெளியில் வீசியெறியும்! மெலிதாய் ஓடும் ஓடையின் குளிர்ச்சியாய் தோல்துளைத்து உட்புகும்! எவ்வளவு அருந்தியும் தாகம் அடக்காத சமுத்திரநீராய்ப் பெருகி ஆவேசமாய் அலையடிக்கும்! ஜேசுதாஸ், ஸ்வர்ணலதாவின் குரலில் இதோ "ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு!"



தனிமையின் பாடலை உணர்ந்திருக்கிறீர்களா? தாயற்ற குழந்தையாய்த் தொற்றிக் கொள்ளத் தோள்தேடி அலையும் வேதனையை? மனிதக்காட்டுக்குள் தனக்கென ஒரு ஜீவனின்றி உள்ளிருந்து எழும் கேவலை? எப்போது கேட்டாலும் என் விழியோரம் ஒட்டி நிற்கும் ஒருதுளி கண்ணீர்...  காற்றலைகளில் கண்ணீர்கொண்டு ஈரப்பதம் சேர்க்கும் ஸ்வர்ணலதாவின் குரலில்.... "எவனோ ஒருவன் வாசிக்கிறான்! இருட்டில் இருந்து நான் சுவாசிக்கிறேன்"



இன்னும் எத்தனையோ பாடல்கள்....! ஓ...ரசிக்கும் சீமானேவும், ஏழிசை கீதமேவும், பாடி அழைத்தேனும், என் ஜீவன் பாடுதுவும், தன்னந்தனிக் கூட்டுக்குள்ளவும்... இன்னும்.... இன்னும்.... கணவனைப் பிரிந்த பெண்ணின் தனித்த இரவுகள் போல நீண்டுகொண்டே செல்லும் முடிவுறாது...! என்னை மெல்லமாய்த் தடவிக் கொடுத்து, சோர்வுநீக்கி, மனதுக்குள் புகுந்து மாயம் செய்யும் பாடல்கள் கணக்கிலடங்கா! சமீபத்தில்கூட விடியவிடிய விழித்திருந்து களவாணி படத்தின் "ஊரடங்கும் சாமத்துல" கேட்டுக்கொண்டே இருந்தேன்.

ஆனால் முதல்முறை கேட்டபோதில் இருந்து இதுவரையிலும் என்னில் ஒரு சிலிர்ப்பை ஓடச்செய்யும் ஒரு பாடல் உண்டு! அந்தப் பாடலை முதன்முறை கேட்டபோது நான் தன்னிலையை அடைய சிறிது நேரம் பிடித்தது... 2003 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். தஞ்சையில் நடந்த ம.க.இ.க வின் தமிழ்மக்கள் இசைவிழாவில் துவக்கப்பாடல் என்றும் நினைவு. ஐந்தோ, ஆறோ பெண்தோழர்களின் அர்ப்பணிப்பும், ஜீவனும் நிறைந்த கோரஸ் குரலில் கேட்ட அனுபவம் இன்று வரையிலும் மறக்க முடியாது. வசந்தத்தின் இடிமுழக்கம் என்ற ஒலிப்பேழையில் இருக்கும் பாடல்.... "செவ்வணக்கம்" என்ற இந்தப்பாடலை இணையம் மூலம் கேட்பதைவிட நேரடி அனுபவமாகக் கேட்க முடிந்தால்.......  (இணையத்தில் எனக்குத் தெரிந்து ரயாகரனின் தமிழரங்கம் தளத்தில் மட்டுமே கேட்கக் கிடைக்கின்றது)

பின்குறிப்பு: இசையரசி பி.சுசீலாவின் பாடல்களை ரசிக்க விரும்பும் நண்பர்கள் இந்தத் தளத்துக்குப் போய்ப் பாருங்களேன்..... http://psusheela.org/.

இந்தப் பதிவினைத் தொடர நான் அழைக்க விரும்புவது எனக்கான ப்ரியங்களை எப்போதும் சுமக்கும் என் நண்பன் பார்த்தசாரதியை

*******************************************************************************

வியாழன், 23 செப்டம்பர், 2010

நான் மட்டுமா தின்னேன்... ஒங்கண்ணனும்தான்...!



இன்னிக்கி வினவு தோழர்கள் நேபாள அரசியல்ல இந்திய மேலாதிக்கத்தோட குறுக்கீடு பத்தி அருமையான் ஒரு பதிவு போட்டுருந்தாங்க (link : http://www.vinavu.com/2010/09/23/nepal-india/  ) படிச்சுட்டு பின்னூட்டம் போடலாம்னு போனா அங்க ரெண்டு பேரு சீனா பண்ணாததையா இந்தியா பண்ணிச்சுன்னு ஒரே குதி...  கடுப்பு தாங்கல எனக்கு.. என் பின்னூட்டத்துல ஒரு வரிய.. அதான் இந்தத் தலைப்பை... போட்டு, இந்தக் கதை யாருக்காவது தெரியுமான்னு ஒரு கேள்விய போட்டுட்டு வந்துட்டேன்.

கேஆர்பி.செந்திலண்ணன் மொதல்ல ஃபோனப்போட்டாரு..." யோவ்! அது என்னய்யா ஒரு வரிய மட்டும் சொல்லிட்டு வந்துட்ட? கதைய ஒங்க தாத்தாவா வந்து சொல்லுவாரு?"ன்னு...

வரிசையா ரெண்டு மூணு பேரு இதே மாதிரி...

நம்மகிட்ட ஒரு விஷயம். ஏதாச்சும் ஒரு விஷயம் நல்லாருக்குன்னா அத நாலு பேருகிட்ட சொல்லாட்டி தல வெடிச்சிடும். வினவுல அவ்ளோ பெரிய கதைய பின்னூட்டமாவும் போட முடியாது... சரி இங்கனயாச்சும் போட்ருவோம்னு தான்...

சின்னப் பசங்கள பாத்தீங்கன்னா நெறய விஷயம் சுவாரஸ்யமா இருக்கும்... நாமளும் அதே மாதிரி இருந்தவங்கதானே!

ஒருநா ரெண்டு பயலுவ பள்ளிக்கோட செவத்தோரமா நின்னு ஒண்ணுக்கடிச்சிட்டு இருந்தானுவோ.... என்னப் பாத்தவொடனே ஒருத்தன் ஓடிட்டான். இன்னொருத்தன புடிச்சி "ஏண்டா... அந்தப்பக்கம்தான் கக்கூஸு இருக்குல்ல... இங்க ஏண்டா ஒண்ணுக்கு அடிக்கிற?"ன்னு கேட்டா " உடுங்கண்ணே! நான் மட்டுமா அடிச்சேன்? அவனும்தான் அடிச்சான்"ன்னு கேட்டாம் பாருங்க!

சின்னப்புள்ளைங்க புத்தி இன்னும் நம்மாளுவகிட்ட நெறைய இருக்கு!

அதுக்காவ ஒரு கத!

ஒரு ஊர்ல.... சரி வேண்டாம் உதைக்க வருவீங்க!

ரெண்டு பேரு... மச்சானும் மச்சானும். பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்தவங்க. ( அது வேற ஒண்ணுமில்லீங்க.... இவங்க ஊட்டுல அவன் பொண்ணெடுத்து கட்டி இருப்பான்... அவன் ஊட்டுல இவன் கல்யாணம் கட்டி இருப்பான்... அதான் பொண்ணு குடுத்து பொண்ணெடுக்குறது!). ரெண்டு பேருமே தரகு யாவாரம் பண்ணி பொழக்கிறவங்க.

ஒருநா ரெண்டுபேரும் பக்கத்து ஊரு வாரச்சந்தைக்கி போயிருந்தாங்க. நல்ல யாவாரம்! பயலுவளுக்கு சந்தோசம் தாங்கல! சந்த முடிஞ்ச பொறவு சாராயக்கடைக்குப் போயி மூக்குமுட்டக் குடிச்சிட்டு பொடிநடையா நடந்தே போயிடலாம்னு முடிவு பண்ணி நடக்க ஆரமிச்சாங்க. நல்ல நெலா! கதையடிச்சிகிட்டே நடந்தாங்க.

போற வழியில ரெண்டு பேருக்குமே வயத்துல கடாமுடா! சுத்திமுத்தி பாத்தானுவோ! வசமா பக்கத்துல ஒரு வெள்ளரித்தோட்டம். அப்புறம்? குந்திட்டானுவோ!

பாதி போயிட்டு இருக்குறப்பவே கொல்லைக்காரன் பாத்துட்டான்.

"எலே! யார்ராவன் கிராதகப் பயலுவோள! ஏன்கொல்லையில பேளுறவனுவோ?"ன்னு கத்திகிட்டே வந்தவன் ரெண்டு பயலுவளயும் புடிச்சிட்டான்.

ரெண்டு பயலும் அவனவன் 'பேண்டத' அவனவன் தின்னுட்டுத்தான் போவணும்னு உத்தரவும் போட்டுட்டான். வேற வழி?! பயலுவ ரெண்டுபேரும் மூக்கப் பொத்திகிட்டே சோலிய முடிச்சானுவோ! முடிஞ்சாப்புல நடைக்கட்டுங்கடான்னு வெரட்டி விட்டான் கொல்லைக்காரன்.

ரெண்டு பயலுவளும் தலைய தொங்க போட்டுட்டே நடந்தானுவ. ஒருத்தன் சொன்னான் "மச்சான்! மறந்தாப்புல கூட எங்கயும் ஒளறிடாத... ஊரு பயளுவ, பொண்டுவோ எல்லாம் இதச் சொல்லியே மானத்த வாங்கிடுவாங்க.. சாக்கிரத மச்சான்" அப்டின்னான். அடுத்தவனும் தலைய ஆட்டுனான். இப்பிடியா ரெண்டு பேரும் ஒடம்பாட்டுக்கு வந்து அவனவன் ஊட்டுக்குப் போனானுவ.

ஒருத்தன் பொண்டாட்டி கொஞ்சம் கோவக்காரி... இவன் தண்ணி போட்டுட்டு போறன்னிக்கெல்லாம் திண்ணையிலதான் படுக்கணும். பயலும் கமுக்கமா போயி திண்ணையில படுத்துட்டான்.

காலையில சூரியன் சுள்ளுனு அடிச்சும் தூக்கம் முழுசா கலையல.

பொண்டாட்டிக்காரி முத்தம்கூட்டி சாணிகரைச்சி போட்டு கோலம் போடலாம்னு வந்தா. நட்டநடு முத்தத்துல ஒரு நாயி படுத்திருந்திச்சி. இவ ஒடனே "பீயத் தின்ன நாயே! செருப்பால அடிப்பேன்... ஓடு அந்தாண்ட"ன்னு வெரட்டுனா.

அரத்தூக்கத்துல இருந்த நம்ம பயலுக்கு பொண்டாட்டி நம்மளத்தான் திட்டுறான்னு கோவம்! சடார்னு துள்ளி எந்திரிச்சி கேட்டானாம்...

 " ஏட்டி! நான் மட்டுமா தின்னேன்? ஒங்கண்ணனும்தான் தின்னான்...."


******************************************************************

புதன், 22 செப்டம்பர், 2010

அஸ்தமிக்கும் விடியல்கள்



நிர்வாணமாய்ப் படுத்திருந்த அவளது ஒரு கால் அவன்மேலே கிடந்தது. உதடுகளில் குறுஞ்சிரிப்பு. கனவில் ஏதோ கண்டு சிரிக்கிறாள் போலும்!மூடியிருந்த இமைகளில் வழிந்திருக்கும் அசாத்திய நிம்மதி... மெல்ல புருவங்களை வருடினான். மூக்கை லேசாக நிமிண்டிவிட்டு வகிட்டில் உதடுபதித்தான். ஃபேன் காற்றில் பறந்துகொண்டிருந்த கூந்தல் இழைகளை லேசாய் ஓரம் ஒதுக்கி மீண்டும் பார்க்கையில் அப்படியே தூக்கி மார்போடு இறுக்கி அணைத்துக்கொள்ளும் ஆசை எழுந்தது. வேண்டாம்... சிணுங்குவாள்! கொஞ்சம் முன் பெரும் இரைச்சலோடு அருவியாய் விழுந்து புரண்டோடும் காட்டாறாக இருந்தவள் இப்போது அமைதியாய் அசைவின்றி நகரும் நதிபோல....

வெளியே வைகாசி மாத நிலவு காய்ந்து கொண்டிருந்தது. மனம் ஏனோ ததும்பியது. ஒரு சிகரெட்...? லேசாக அவள் காலை எடுத்துக் கீழே வைத்தான். அரைத்தூக்கத்திலேயே கைகளை நீட்டி இறுக்கிக் கொண்டு " எங்கடா போற? போகாத....".  "இல்லடா செல்லம்...அஞ்சு நிமிஷம் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்" பொய் சொல்லி சிகரெட் பாக்கெட் எடுத்துக் கொண்டு வந்து மொட்டைமாடிச் சுவர்சாய்ந்து பற்றவைத்தான்.

வைகாசி நிலவு.... புத்த பூர்ணிமா..! ஹம்மா... ராகுல்ஜியோட 'பௌத்தத் தத்துவவியல்' தானே கடைசியாகப் படித்தது? முழுதாய் மூன்று வருஷம் ஆகிவிட்டது கனமான புத்தகங்கள் படித்து.... "முத்தம் தரவா?!" என்ற ஒற்றை வார்த்தையில் துவங்கிய காதல் பயணம், அப்புறம் சென்னையில் சொந்தமாய் அலுவலகம், அவளும் சென்னைக்கு வர யாரும் அறியாமல் சேர்ந்தே வாழும் ஏற்பாடு. முன்போல் இல்லை மனம். எப்போதும் அவளது ஃபோனுக்காய் ஏங்கும் பொழுதுகள் மறைந்து அமைதியாய் காதலை ரசிக்கத் துவங்கி இருக்கின்றது. வார்த்தைகள் தேவையா என்ன?!

தூங்கவேண்டும். காலையில் தண்ணீர் பிடித்து பால்வாங்கி தேநீர் போட்டு அவளை எழுப்பி, அடுப்பில் இட்லிப்பானை வைத்து... சிரிப்புத்தான் வந்தது... ஊரில் இருக்கும்போது தன் உள்ளாடையைக் கூடத் தோய்த்ததில்லை. மீண்டும் கன்னம் வருடி முத்தமிட்டான். சீக்கிரம் கடன் அடைத்துக் கல்யாணம் செய்யவேண்டும்!
நாளைக்கு வரும் க்ளையண்ட் மட்டும் நம்பக்கம் சாய்ந்துவிட்டால் போதும்... ஆறே மாதம்....
********************************************
"ஷட்"... என்ன மனிதன் இவன்? மணி மூன்றாகிறது. காலையில் ஏர்போர்ட்டில் ரிஸீவ் செய்யும்போது மணி ஏழரை. நாளும் அப்படித்தான் போல! வந்திருக்கும் சப்பைமூக்கு சீனப்பயல் அநியாயமாய்க் கடுப்பேற்றுகிறான். வேறு வழியில்லை. இவனை.. இவனை நம்பித்தான்.... பசி வேறு. இவன் எப்போது டாகுமெண்ட்ஸ் சரிபார்த்து... அக்ரிமெண்ட் போட்டு? என்னென்ன எழவு உதைக்கப் போகிறதோ? சடசடவென மண்டிய எரிச்சலில் எட்டாவது சிகரெட் காலி!

'அவள் சாப்பிட்டிருப்பாளா?'

"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..." செல்ஃபோன் சிணுங்க...

"என்னடா குட்டிமா...."

...............

"ம்ம்ம்... சாப்டேன்.. நீ?"

...............

"உனக்கு வேற வேலைக்கழுதையே இல்லையா? வைடி... ஈவினிங் கால் பண்றேன்"

...............

" ஏண்டி புரிஞ்சிக்கவே மாட்ற... காலைல இருந்து நாயா அலைஞ்சுட்டு இருக்கேன்... ஃபோன வை"

.................

" சொன்னா கேளுடி.. உசிர வாங்காத. சாயங்காலம் கூப்பிடு... பை"
**********************************************
"ப்ளீஸ்டா! ஒரு ரெண்டு நிமிஷம் கேளேன் நான் சொல்றத..."

...............

" நீ ஒரு மண்ணும் பண்ணவேண்டாம். சாயங்காலம்லாம் பேசமாட்டேன்.... போடா"

ஃபோனை நங்கென்று வத்தவள் கண்ணில் நீர் முட்டியது. 'எவ்ளோ காலமாச்சு? மணிக்கணக்கா பேசுவான்... இப்போ எப்போ பண்ணினாலும்.... அப்புறம் பேசுறேன்... ச்சை... அலுத்துப் போயிடுச்சா என்ன?'

எல்லா வேலையும் அவன்தான் செய்யிறான்... டீயில இருந்து டிஃபன் வரைக்கும்.... ஆனா ஆசையா ரெண்டு வார்த்தை ஃபோன்ல பேசினா குறைஞ்சா போயிடும்? இனி கால் பண்ணினாத்தானே!

"என்னம்மா சும்மா யோசிச்சிட்டு இருக்கீங்க? எத்தனை கால்ஸ் போயிருக்கு?"

"இல்ல மேடம்... ஸாரி.. இதோ பண்ணிட்டே இருக்கேன்"

...........

...........

...........

"ஹலோ! குட் ஈவினிங் சார். நான் பி.கே.ஜே ஃபினான்ஷியல் கன்சல்டன்சில இருந்து ஜனனி பேசுறேன். எங்க ஹாலிடே ரிஸார்ட்ஸ் சம்பந்தமா நேத்து கால் பண்ணி இருந்தேன். அதான் கூப்டேன் சார்..."

"ஹேய் ஜனனி! நேத்துல இருந்தே இந்த ஸ்வீட் வாய்ஸ் மறுபடியும் எப்போ கேக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஸ்வீட் சர்ப்ரைஸ்பா......."

..............


..............



..............

***************************************************************************

திங்கள், 20 செப்டம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 20/09/10



(இந்திய உணவுக்கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் அழுகும் தானியங்கள்)

1) காலங்காத்தால கொல்லைக்குப் போயிட்டு வந்து ஜூனியர் விகடனைப் பொரட்டிட்டு இருந்தேன். உமாசங்கரைப் பத்தி கட்டுரை. பறிச்ச பதவிய திரும்பி குடுத்துட்டா அடங்குறதுக்கு அந்த மனுஷன் என்ன கரைவேட்டியா கட்டிட்டு திரியுறாரு? சும்மா கோயில்காள கணக்கா சீற ஆரம்பிச்சிட்டாரு. "ஆதரவு கொடுத்த அரசியல்வாதிகளையெல்லாம் சந்திப்பேன்" அப்டீன்னு பேட்டியெல்லாம் அனல் பறக்குது... தேர்தல் வேற பக்கத்துல வர்ற சூழ்நெல... எங்கே ஒருவேள தலித் மக்களோட ஓட்டெல்லாம் கைநழுவிடுமோன்னு ஆளுங்கட்சி கையப் பெசஞ்சிட்டே நிக்கிறதா கேள்வி. அந்த மனுஷன் நேர்மையாத் தானேய்யா தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தாரு? எல்லாருமே 'ஜிங்ஜிக்' மட்டும்தான் போட்டுட்டு இருக்கணும்னு எதிர்பார்த்தா என்ன கெதியாவும்னு இனியாச்சும் புரிஞ்சாச் செரி.
"அவளத் தொடுவானேன்... கவலப் படுவானேன்... கச்சேரி வாசல்ல கைகட்டி நிப்பானேன்?"

2) எல்லா அரசாங்கங்களுமே போராட்டங்களை ஒடுக்கனும்ங்கிற விஷயத்துல ஒரே மாதிரிதான் இருக்காங்க. சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தையும் (30.08.10) அதே மாதிரி ஒடுக்கியிருக்குற கருணாநிதி அடுத்ததா வீசுன அறிக்கைதான் மேட்டரே! "கம்யூனிஸ்ட்காரங்களுக்கு போராட்டம் நடத்துறதே பொழப்பாப் போச்சு! அவங்க வெச்ச கொள்ளிதான் மாவோயிஸ்ட்டு அளவுக்கு வளந்து கொழுந்துவிட்டு எரியுது... " அப்டி.. இப்டின்னு மூஞ்செல்லாம் செவந்து பொளந்து கட்டி இருக்காரு. திருக்குறளுக்கு உரை எழுதுனதெல்லாம் அவருக்கு மறந்துபோச்சு போல! அவரு அளவுக்கு இல்லன்னாலும் நம்மளும் நாலு திருக்குறள பள்ளிக்கோடத்துல படிச்சிருக்கோம்ல!

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்."


3) ஆயுதம் வாங்குனதுல ஊழல் பண்ணிட்டாருன்னு சொல்லி சரத் ஃபொன்சேகாவுக்கு 3 வருஷம் கம்பி எண்ணச் சொல்லி உத்தரவு போட்ருக்குதாம் இலங்கை ராணுவ நீதிமன்றம். அநியாயமா லட்சக்கணக்கான மக்களைக் கொன்னுபோட்டு, மிச்சமிருக்கிறவங்களோட வாழ்க்கையையே ஆயுள்காலச் சிறையா மாத்துன அரக்கத்தனத்துல சம பங்காளி இவரு. இந்த தண்டனை பத்தாதுன்னாலும் ராஜபக்ஷே குரூப்பு இத்தோட விட்ருவாங்கன்னா நெனக்கிறீங்க? சரி... ஃபொன்சேகாவுக்கு ஆப்பு எறங்கியாச்சு... அடுத்தடுத்து ராஜபக்க்ஷே அண்ட் கோ, நரித்தனமா சதிராடுன இந்திய அரசியல்வியாதிங்க இவங்கல்லாம்???

"தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" அப்டீன்னு பட்டினத்தார் பாடியிருக்காராம்!

4) "சீல இல்லன்னு சின்னாயி வூட்டுக்குப் போனா, அவ ஈச்சம்பாய கட்டிகிட்டு 'ஈ'ன்னு இளிச்சாளாம்". ஓட்டை பொட்டியிலயும், ஈரத்துணிய வயித்துலயும் போட்டுட்டு இருக்குற மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லன்னு கவுருமெண்டுகிட்ட போனா, அவங்க வீணாப் போனாலும் போவுமே தவிர, எலவசமா மட்டும் கொடுத்துற மாட்டோம்னு ஒத்தக் கால்ல நிக்கிறாங்க. கேட்டா கொள்கை முடிவு, லொட்டு லொசுக்குன்னு வியாக்கியான மசுரு.... எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம்! அது எப்டிடா பொருள்ளாம் வீணாப் போவும்? விஞ்ஞானம்ங்குறான், தொழில்நுட்பம்ங்குறான், இவ்ளோ கருமாந்திரம் இருந்தும் அரிசி, கோதுமைய மக்காம வெக்கிறதுக்கு வழியில்லையா... கெவுருமெண்டு அதையாச்சும் பண்ணலாமேன்னு வெசாரிச்சா....

தரமான, போதுமான அளவில் தானிய சேமிப்புக் கிடங்குகள் கட்டி பாதுகாப்பா வெக்க காசில்லையாம்பா! இப்ப மறுபடியும் பழமொழியப் படிங்க!

The government, which was designed for the people, has got into the hands of the bosses and their employers, the special interests.  An invisible empire has been set up above the forms of democracy.  ~Woodrow Wilson


5) இப்பல்லாம் ஸ்கூலு, காலேஜில படிக்கிற எல்லா பசங்களும் பொண்ணுங்களும் ரொம்ப சகஜமா சிரிச்சி பேசிட்டு போறத பாக்குறப்ப கொஞ்சம் பொறாமையா இருக்கு. பன்னெண்டு வருசம் முன்னாடி நான் படிச்ச கிராமத்து ஐஸ்கூலுல ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட ஒருவார்த்தையாவது பேசிட்டா அவந்தான் மாவீரன்.விஜயலட்சுமின்னு ஒரு பொண்ணு! மொதமொதல்ல ஸ்கூல்ல குட்டைப்பாவாடைய தைரியமா போட்டுக்கிட்டு காத்துல முடிபறக்க, தெத்துப்பல் தெரிய சிரிச்சுக்கிட்டே நொழஞ்சப்ப பசங்க மட்டுமில்ல, வாத்தியாருங்க வாயெல்லாம்கூட அலிபாபா குகை மாதிரி தொறந்தது மூடவேயில்ல! ரெண்டு வருசம் என்னோட க்ளாஸ்மேட். ஒரு வார்த்தை பேசியிருப்பேன்ங்கிறீங்க?! ம்ஹூம். ஒருநாள் கெமிஸ்ட்ரி லேப்ல பாதரசத்தைக் கொட்டிட்டு நான் முழிச்சப்ப கன்னத்துல லேசா தட்டிட்டு "பயப்படாத! சார்ட்ட சொல்ல மாட்டேன்! கூட்டிவிட்டுட்டு எஸ்கேப்பாயிடு!"ன்னு சொல்லிட்டுப் போயிடிச்சு! நமக்கு அதிர்ச்சியில நாலுநாளு ஜொரம்!

அ.முத்துலிங்கத்தோட கடன் அப்டீங்கிற கட்டுரைய படிச்சப்போ எனக்கு இதுதான் ஞாபகம் வந்துச்சு... ரொம்ப சில எழுத்தாளர்கள்தான் நம்ம தோளுல கையப் போட்டு, காதோட மென்மையா பேசுறமாதிரி எழுதுவாங்க. படிக்கவும், படிச்சிட்டு மனசுக்குள்ள அசைபோடவும் எதமா இருக்கும். அதுல அ.முத்துலிங்கம் முக்கியமான ஒரு எழுத்தாளர். ஈழத்தைச் சேர்ந்தவர்... இப்போ கனடாவுல இருக்கார்னு நெனக்கிறேன்.

6) வழக்கம்போல மனசுக்குள்ள மத்தாப்பு பத்தவெக்கிற மாதிரி ஒரு கவிதை! நீலமணி எழுதினது:

என்ன வரம் வேண்டும்
என்கிறார் கடவுள்
அது தெரியாத
நீர் என்ன கடவுள்?











************************************************************************

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பிறந்தது பெருநெருப்பு! பெரியார் என்று பெயர்!



காந்தியையும் காங்கிரஸையும் தன் வாழ்நாளின் கடைசிவரை எதிர்த்தவர்கள் இருவர். ஒருவர் தமிழர்களின் தன்மானத்தைத் தட்டியெழுப்பிய தந்தை பெரியார்; இரண்டாமவர் காலங்காலமாய் அடிமை நுகத்தடியைச் சுமந்து முதுகெலும்பு கூனிப் போயிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை நிமிர்ந்தெழச் செய்த அண்ணல் அம்பேத்கர். இன்று அம்பேத்கரைக் கூட இந்துத்துவ சட்டத்திற்குள் அடைக்க இந்து மதவெறி சக்திகள் முயன்று வரும் நேரத்தில் இந்துத்துவ சக்திகளால் எப்போதும் நெருங்க முடியா பெருநெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருப்பவர் நம் தந்தை பெரியார்.

"சுதந்திரம் என்பது இரண்டு ஆதிக்கச்சக்திகளுக்கு இடையில் நிகழ்ந்த அதிகாரப் பரிமாற்றம்தானே வேறொன்றுமில்லை" என்று முழங்கி சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்தவர். வாழ்நாள் முழுக்க ஒரு கலகக்காரனாகவே வாழ்ந்த மாமனிதன்.

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் பெரியார் அறிவிக்கிறார் இந்த நாட்டை இனி காந்திதேசம் என்று அறிவிக்கவேண்டும் என. ஏனெனில் அவரது எதிர்ப்பு காந்தியின் கொள்கைகளின் மீதுதானே தவிர வேறேதும் தனிப்பட்ட விரோதமில்லை; வாழ்நாள் முழுக்க பார்ப்பனீயத்தை எதிர்த்தே வாழ்ந்த மனிதன் ராஜாஜியின் மரண ஊர்வலத்துக்கு சுடுகாடுவரை நடந்தே செல்கிறார்.

ஏனெனில் அவர் பெரியார்; அவர்தான் பெரியார்!

என்றாவது தமிழர்தேசம் அமைந்தால் நாம் பெயர்வைப்போம் அதற்கு "பெரியார்தேசம்" என!

அப்படி என்ன கிழித்துவிட்டான் அந்த தாடிக்கிழவன் என்கிறீர்களா?

அடிமைத்தனம் எந்த விதத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதையே தம் வாழ்நாள் கடமையாகச் செய்தவர்; அவர் பேசாத, எதிர்க்காத அடிமைத்தனம் உண்டா?

இன்றும் இளைய தலைமுறையினர் 90 சதம் பேருக்கு பெரியார் என்றால் கடவுள் எதிர்ப்பாளர் என்றுதான் அறிமுகம் ஆகிறார்.

ஆனால்....

பறையடிப்பதற்கும், முடிவெட்டுவதற்கும், ஆடு மேய்ப்பதற்கும் அடியாள் வேலை பார்ப்பதற்கும், சேற்று வயலிலும் வீட்டு ஏவல்களிலும் குனிந்த முதுகு நிமிராமல் இருப்பதற்கும் மட்டுமே பழக்கப்பட்டிருந்த பெருந்திரளான ஒடுக்கப்பட்ட மக்கள் நிஜமான மனிதர்களாய் நெஞ்சு நிமிர்த்தக் காரணமாயிருந்த தமிழகத்தின் ஒரே போராளி பெரியார்.

இன்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசுப்பணிகளிலும் அதிகாரவர்க்கங்களிலும் வலம் வரக் காரணமும் அவரே.

'இப்படிச் சொன்னால் இவர்கள் ஆதரவு போகுமோ? அப்படிப் பேசினால் அவர்களை இழப்போமோ? இந்தக் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தால் நமது பிம்பம் கரைந்து போகுமோ?' என்றெல்லாம் தயங்கித் தயங்கிப் பேசுவோர் மத்தியில் தான் நம்பும் எதையும் எந்த இடத்திலும் மறைக்காமல் முழங்கிய சத்தியசீலன் பெரியார்.

கற்பு, காதல் போன்ற கருத்தாக்கங்கள் எல்லாம் கடைக் கத்திரிக்காயைவிட மதிப்பு வாய்ந்ததில்லை என்று சொல்லும் நெஞ்சுரம் அவருக்கு மட்டுமே சொந்தம்.
"பெண்களும் ஆண்களைப்போல் உடையணியவேண்டும்; கிராப்பு வெட்டிக்கொள்ள வேண்டும்; தாலி என்பது அடிமைச்சின்னம்" என்று இன்று போய்த் தெருவில் சொல்லிப்பாருங்கள். குறைந்தது இரண்டு கற்களும், ஒரு ஜதை செருப்பும் நிச்சயம்! ஆனால் மக்கள் மாக்களாய் உலாவந்த அந்தக் காலத்திலேயே மேடைபோட்டு முழங்கியவன் அந்த தாடிக்கிழவன்!

எந்தவகையில் அடிமைத்தளை இருந்தாலும் அதை உடைத்தெறிவதையே வாழ்நாள் கடமையாகக் கொண்ட மாமனிதன்.

சிறுநீரகங்கள் செயலிழந்து செல்லுமிடமெல்லாம் மூத்திரக் கலயத்தையும் சேர்த்துச் சுமக்க வேண்டி இருந்தாலும் அசராமல் தன்பணியாற்ற தமிழ்நாடு தோறும் வலம்வந்த செயல்வீரன் பெரியார்.

பெரியார் என்ற ஒற்றை வார்த்தை தமிழ்ச் சமூகத்தின் முகவரியையே மாற்றியமைத்தது. அந்த மந்திரச் சொல்லில் சொரணை ஏற்றப்பட்டு துள்ளியெழுந்த வீரர் கூட்டத்திற்கு புறமுதுகிட்டு ஓடின பார்ப்பனீய, அடிமைத்தனம் பரப்பும் பேய்கள்.

நண்பர்கள் வாய்ப்பிருந்தால் பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.

பெரியார் பற்றி முழுதும் எழுதுமளவு என் வார்த்தைகளில் வீரியமில்லை.

எனவே பாவேந்தரின் பாடலுடன் பெரியார் பிறந்த நாளான இன்று எம் தமிழ்ச் சமூகத்தின் அறிவு ஆசான் தந்தை பெரியாரை நினைவு கூர விரும்புகிறேன்.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.


- பாரதிதாசன்

வியாழன், 16 செப்டம்பர், 2010

உடுக்கை இழந்தவன் கைபோல...



என் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் "எனக்கான மனிதர்கள் இல்லாமல் போய்விடவில்லை எனும் நம்பிக்கை ஊற்றெடுக்கின்றது" என்று எழுதியிருந்தேன். எழுதி இருபத்திநாலு மணி நேரத்துக்குள் என் வாழ்வில் இதுவரை சந்திக்க நேரிடாத ஒரு பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது. அவமானத்திலும், வேறேதும் உதவிகளற்ற நிலையிலும் குறுகிப்போயிருந்த நேரத்தில் தமிழ் வலையுலகின் இரண்டு முக்கியப் பதிவர்களைத் தொடர்பு கொண்டேன், கிடைத்த ஓரிரு நிமிட இடைவெளியில்.

அதில் ஒருவர் தமிழ்சினிமாவின் நாளைய நட்சத்திரம். மற்றொருவர் தமிழக அரசியலில் செல்வாக்குப் பொருந்திய மனிதர். நான் இதுவரை ஒரே முறை மட்டுமே சந்தித்தவர்.

நானோ எனது வாழ்வில் அடுத்தடுத்து பல இழப்புக்களைச் சந்தித்து மனவலிமையும், பணவலிமையும், உடல்வலிமையும் குன்றி கண்ணீரோடும், மிச்சமிருக்கும் நம்பிக்கையோடும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு சராசரி மனிதன்.

அவர்கள் உதவி மட்டும் எனக்கு அந்த சமயத்தில் கிடைத்திராவிட்டால்... கற்பனை செய்யவே நெஞ்சம் பதறுகின்றது. இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது என் விரல்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

என் பிரச்சினை என்னவென்றும், அந்தப் பதிவர் நண்பர்களுக்கு நன்றி கூறியும் எழுதவேண்டும் என்று என்னுள்ளம் பொங்குகின்றது. 'வலக்கை கொடுப்பது இடக்கை அறியக்கூடாது' என்ற பெருந்தன்மை கொண்ட இருவரும் மறுத்துவிட்ட காரணத்தால் விரிவாக தற்போது எழுத இயலவில்லை. நிச்சயம் ஒருநாள் எழுதுவேன்.

வெறுமனே நன்றி என்ற வார்த்தையின் போதாமையை நான் என் வாழ்வில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நேற்று மிகவும் அதிகமாகவே... 'நன்றி' என்பதைவிட தமிழில் அடர்த்தியான வார்த்தை ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்.

"அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்
அல்லல் உழப்பதாம் நட்பு"- குறள்  (787)

புதன், 15 செப்டம்பர், 2010

கிண்ணத்தில் தேன்வடித்துக் கைகளில் ஏந்துகிறேன்!




"கிண்ணத்தில் தேன்வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதைவர எங்கெங்கோ நீந்துகிறேன்
"

தங்கநிறத்தில் அசையும் அமுதத்தில் அசைந்தாடும் சிறு பனிக்கட்டிகள்.... இளங்கன்னியின் கண்களில் மிதக்கும் கருவிழிகள்போல! சில்லிட்ட கண்ணாடிக்கோப்பையின் விளிம்புகளை உணரும் உதடுகளில் ஓடும் சுழிப்பில் மெலிதாய் ஓடுகிறது ஒரு கர்வப் புன்னகை... இப்போது என் நொடிகளுக்கு நானே ராஜா!

அந்தக்கோப்பையின் விளிம்புகள் எப்போதும் பெண்ணின் இதழ்களை நினைவுபடுத்தும். மேனி நோகுமென மெல்லத்தொட்டு, நாவினால் வருடி மூச்சை உள்ளிழுத்து ஓர்மைப்படுத்தி இமைகள் கிறங்கக் கிறங்க, மெதுவாய் உள்ளிறக்கு அமிழ்தத்தை... சட்டென்று பற்றிக்கொள்ளும் தீ.....எரியாத பெருநெருப்பு... உச்சந்தலை துவங்கி ஒவ்வொரு நரம்பிலும் பற்றிப் படரும் ஒரு சிலிர்ப்பு.... உலகெலாம் அழிந்து ஒருவராய் உணரும் ஏகாந்தப் பெருவெளி!

ஆ...! மதுக்கோப்பையும், இதழ்க்கோப்பையும் வேறா என்ன?! வேறென்பவன் வீணன்... இரண்டையுமே கையாளத் தெரியாதவன்!

மது அருந்தும் தருணங்கள் என் மனதிற்புகுந்து ஒட்டடை அடிக்கும் பொழுதுகள்.... கண்ணாடித் திரவம் காட்டும் பிம்பம் நான் என்கிற நானா... இல்லை இதுவரை நான் உணராத நானா?  நான் நானாக இருக்கும் பொழுதுகளை மீட்டுக்கொடுக்கும் தேவ ஊற்றே! எனை மீட்டும் இரவுகளில் சுருதிதப்பாது இசைமீட்டும் அமுதே! வாழி!

"ஒரு கோப்பை ஒயினும், ஒரு புத்தகமும், தங்குவதற்கு தாஜ்மகாலும்" மட்டும் கேட்ட கலீல் கிப்ரன் பாக்யவான். நானும் கேட்கிறேன் உறிஞ்சக் கொஞ்சம் மதுவும், உறங்க என் காதலியின் இதழ்களும்! ஆம்... நானும் பாக்யவான் தானே?

"சிறிது கள் கிடைத்தால் எனக்குக் கொடுத்து நான் அருந்த மகிழ்ந்திருக்கும் என் மன்னா!" என்று அதியமானின் திறம் போற்றிய அவ்வையின் பேரன் நான்!

மதுவை 'அருந்துவது' தொல்தமிழ்க் கலாச்சாரத்தின் வாழ்வியல் கூறு... மதுவைக் 'குடிப்பது'' மானுடம் நீக்கி, மதிபோக்கி புழுக்களாக்கி நெளியவிடும் நோய்க்கூறு! 'செவியுள்ளவன் கேட்கக் கடவது!'

தினம் கொஞ்சம் மது இதயம் வலுப்படுத்துமாம். மாரடைப்பைத் தடுக்குமாம்! வார்த்தைகளில் நஞ்சுதடவி முதுகில் அம்புவீசப்படும் தருணங்களின் வலியையும் தடவிக்கொடுத்து ஆற்றுமாம்.

ஒருமரத்துக் கள் ஒருமண்டலம் அருந்த உடம்பு பொன்னாகுமாம்... 'தென்னம்பாலும் இன்னொரு தாய்ப்பால் போலத்தான் தனக்கு' என்பார் கருத்து மினுமினுக்கும் ஓங்குதாங்கான ஆகிருதியான மீசைத்தாத்தா.... குடித்து வளர்ந்த குதூகலம் உடல்மொழியில் வழிய வழிய.

மதுகுடித்துச் சலம்புவது பன்றிகளின் செயல்.... மது உள்ளிறங்க உள்ளிறங்க உள்மனம் ஒடுங்கவேண்டும்... மெல்ல மெல்ல நினைவின் அலைகள் ஓய்ந்து வருமே ஒரு பரவச உணர்வு..... ஒரு நிஜமான குடிகாரன் அப்போதுதான் ஆன்மீக அனுபூதி எய்துகிறான்.

"மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு உலகெலாம்" என்று கணீர்க் குரலெடுத்துப் பாடுகிறான் பாரதி!

'கிண்ணத்தில் தேன்வடித்துக் கைகளில் ஏந்துகிறேன்' நான்! 






பின்குறிப்பு:

ஆச்...ஊச்... எப்படி நீ குடிப்பதை நியாயப்படுத்தி எழுதலாம் என்று திட்டத் தயாராகும் நண்பர்களுக்கு.... 1) எழுதும் எல்லாம் எழுதுபவனின் அனுபவமாக இருக்க வேண்டுமா என்ன? ( நான் குடிப்பேன் என்பது வேறு விஷயம்!) 2) அப்படியே பிரபஞ்சனின் இந்தப் பக்கத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டுப் போங்களேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளன். காதுக்குள் வந்து கதைபேசும் சித்துக்காரன்! இதுவரை பிரபஞ்சனை வாசிக்காதவர் யாரேனும் இருந்தால் தயவுசெய்து உடனே தாவுங்கள் பிரபஞ்சனின் தளத்திற்கு.

திங்கள், 13 செப்டம்பர், 2010

கவித எளுதப்போறேன்...

"தூங்குறப்போகூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும்டா; இல்லன்னா பொணம்னு சொல்லி பொதச்சிடுவானுங்க" என்று சொல்லுவார் என் தாத்தா. பதிவு எழுதி இரண்டு,மூன்று நாட்களாயிற்றே... ஏதாவது எழுதி ஆக வேண்டுமே என்ற எண்ணம் என்னை அரித்துக்கொண்டே இருந்தது என்னை.

என்ன எழுதலாம்? நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று ஏதாவது மொக்கையாக எழுத விருப்பமில்லை; என்னால் பின்பற்ற முடியாத விஷயங்களை வியாக்கியானப்படுத்தி எதுகை,மோனை நீட்டிமுழக்கி பக்கங்களை நிரப்பவும் எரிச்சலாய் இருக்கின்றது; அரசியல் நிறைய எழுத ஆசைதான்... ஆனால் குறைந்தபட்சம் ஒரு கட்டுரை எழுத ஐந்துமணி நேரமாவது வேண்டும் எனக்கு! ஏற்கனவே தொடங்கிய 'மறைக்கப்பட்ட வரலாறுகள்: இந்திய சுதந்திரதினத்தையொட்டி சில நினைவுகள்' தொடர் பாதியிலேயே நிற்கிறது.

பேசாமல் 'கவிதை' எழுதிவிட்டால்? 'அடப்பாவி!கவிதை என்ன கடைச்சரக்கா? அந்த அளவு மலிந்துபோன விஷயமா?' உள்ளிருந்து ஒலித்த குரல் சில கேள்விகளையும் சேர்த்து வீசிச் சென்றது.

எவ்வளவு சுலபமாக நமக்கு கவிதை வருகிறது?

'பெண்ணே! உன் பார்வையில் பற்றிக்கொண்டேன் நான்... அணைக்க வாயேன்!' என்று காதல் செய்யலாம்.

'ஏ இளைஞனே! எழுந்திடு.... உன் தோள்களுக்காய்த் தவம் கிடக்கிறது உலகம்' (பாழாப்போச்சு!) என்று அறிவுரை செய்துவிட்டு எழுதிய களைப்பு நீங்க கொஞ்சம் தூங்கலாம்.

ஆனால்...ஆனால்....

நாற்பது தமிழ்வார்த்தைகளும், நாலு வெள்ளைக்காகிதங்களும் போதுமா என்ன கவிதை எழுத?!

நாட்டில் அதிகம் உற்பத்தியாவது ஜனத்தொகையும் கவிதைகளும் மட்டுமே.

கவிதையாகவே ஊற்றெடுத்த ஒரு தொன்மரபின் இலக்கியங்கள் ஏதுமறியாமல், அதன் வாழ்வியலும் அரசியலும், அழகியலும் பற்றி ஏதுமறியாமல் 'செத்துப்போன வார்த்தைகளின் ஊர்வலமாய்' எழுதுவது கவிதையா?

"மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"

என்ற வரிகளில் இழையும் அகத்தின் தரிசனமும்

"எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே."

என்ற கவிதாகர்வமும் இல்லாமல் வருவது கவிதையாகுமா?

ஒரு நல்ல கவிதை சில பூக்களையும், சில முட்களையும் நம்மீது வீசிச்செல்ல வேண்டும்.

மனதின் ரகசிய அறைகளுக்குள் புகுந்து உறவாடி, வாசிக்கும் கணந்தோறும் பலவண்ண ஜாலம் காட்டவேண்டும்.

"எமக்குத் தொழில் கவிதை; இமைப்போதும் சோராதிருத்தல்" என்ற அக்கினிச் சுடர் உள்ளுக்குள் எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.

சமூகம் சார்ந்த அக்கறையும், நேசமும் மனதிலிருந்து வழிந்து கொண்டிருக்கவேண்டும்.

இத்தனை கேள்விகளையும் வீசி என் இமைகளுக்குள் அமர்ந்து மூடவொட்டாமல் தூக்கம் பறித்தது ஒரு கவிதை. ஏனெனில் அது கவிதை!

இதோ கல்யாண்ஜி "இவனைப் போன்ற கவிதை" எப்படி இருக்கும் என்று கேட்டுப் பரிகசிக்கிறார் பாருங்களேன்.

இந்தக் கவிதை எழுதுகிறவன்
எத்தனை சொற்கள்
மனதாரப் பேசுகிறான்
அவன் மனைவியிடம், பிள்ளைகளிடம்
அடுத்த பக்கத்துவீட்டுக்காரனுடைய
மூக்கும் முழியும்
அடையாளம் சொல்ல முடியுமா
நெஞ்சில் கை வைத்து.

இந்தக் கவிதை எழுதுகிறவன்
முண்டியடித்து ஏறி
அமர்ந்த பேருந்தில்
எப்போதாவது
எழுந்து இடம் கொடுத்திருக்கிறானா
இன்னொரு தள்ளாதவருக்கு.

குதிகால் நரம்பு தென்னிய
சைக்கிள் ரிக்க்ஷாக் காரனிடம்
கூலி பேரம் பேசாமல்
இருக்க முடிகிறதா இவனால்
இவனைப் போலத்தானே
இருக்கும்
இவனுடைய கவிதையும்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

மௌனங்களால் செவிடானவனின் புலம்பல்கள்



"கர்ப்பக்கிருகமே கல்லறையாய்
கரைந்துபோன என் மகளே!
பிரபஞ்சத்தின் விளிம்பு தாண்டியும்
வீசுகிறது உன் குருதியின் வீச்சம்
இனி எப்போதும் திறக்கப்பட முடியாத
இமைகளின் வெளிச்சம்
இருளில் அழுந்தியபடி...
உணரப் படாத உன் இதயத் துடிப்பின் கேளா ஒலிகளில்
செவிடாகிப் போகட்டும் தர்ம சாஸ்திரங்களின் செவிகள்
உனைப் புறந்தள்ளிய அசதியில்
தற்காலிகமாய் இறந்துகிடக்கிறாள் உன் தாய்!
இனி என்றும் எழுந்துவிடாது இற்றுப் போகட்டும் என் ஆண்மை
உன் தகப்பனுக்கு ஒன்றுமட்டும் செய்
பிறவாது போன
என் மகளே...
தயவு செய்து....
எப்போதும்...
என்னை மன்னித்துவிடாதே!"




         

வியாழன், 9 செப்டம்பர், 2010

என் மரண அறிவிப்பு


என்றோ ஒருநாள்
நான் மரித்துப் போவேன்

பூக்கள் மொய்க்கும்
என் உடலத்தின் ஏக்கம்
உள்ளிருந்து வடியும் சில துளிகளை நோக்கி....

இறுதி 'மரியாதை'யின் போதாவது
கழற்றி வையுங்கள் உங்கள்
முகமூடிகளை

உமது விமர்சனங்களுக்குக் கையளிக்கிறேன்
சில கவிதைகளையும்
ஒரு டைரிக் குறிப்பையும்

என் மரண அறிவித்தலில்
உரக்கச் சொல்லுங்கள்
கம்பீரமாகவும்...
"மனிதர்களைத் தேடி அலைந்தவன்
களைத்து உறங்கிப் போய்விட்டான்"
என

புதன், 8 செப்டம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...8/09/10


இந்தவாரம் அரட்டைக் கச்சேரிக்கு மேட்டர் தேடிட்டு இருந்தா.... அடங்கொப்புரான கண்ணுல படறது பூரா அநியாயமா இருக்குய்யா... வரிசையா படிச்சிட்டு நீங்களும் கொஞ்சம் வயித்தெரிஞ்சிட்டு போங்க சாமீ

1) வாயத் தொறந்தா வில்லங்கமா கொட்டுதுய்யா நம்ம மண்ணுமோகனுக்கு.... ஸ்பெக்ட்ரம் வெவகாரத்தைப் பத்தி பெரதமரு பேப்பர் பாத்துத் தான் தெரிஞ்சிகிட்டாராம்.... அதுக்கு மின்னாடி தெரியாதாம்... ஒருவேள மந்திரிசபை மீட்டிங்ல மத்தியான சாப்பாடு அதிகமாயி தூங்கிட்டே இருந்திருப்பாரோ?! கேக்குறவன் கேணையனா இருந்தா கேப்பையில நெய்யி வடியுதுடாம்பாங்க... கஷ்டகாலண்டா சாமீ

மக்கிப் போவப்போற அரிசியயும், கோதுமையயும் கஞ்சிக்கு வழியில்லாத மக்களுக்குக் கொடுத்தா வெவசாயி மனரீதியா பாதிக்கப் படுவானாம்... இது இவரு உதுத்த இன்னொரு முத்து... அடப்பாவியளா... விதர்ப்பாவுலயும், ஆந்திரத்துலயும் நாண்டுகிட்டு செத்த பயலுவ பூரா பொழுதுபோவலன்னு செத்து செத்து வெளையாடுனாங்கன்னு எப்படா சொல்லப் போறீங்க?
An election is coming.  Universal peace is declared, and the foxes have a sincere interest in prolonging the lives of the poultry.  ~George Eliot, Felix Holt,

2) அய்யா வாங்க, அம்மா வாங்க, ஆப்படிக்கறதுக்குன்னே பொறப்பெடுத்த அண்ணாச்சி வாங்கன்னு ஊருலெ வெள்ளவேட்டி கட்டுன முன்னாள், இந்நாள், வருங்கால மாண்புமிகு(?!)க்கள் எல்லாரையும் மாஞ்சி மாஞ்சி பொண்ணு கல்யாணத்துக்கு கூப்டாரு சூப்பர்ஸ்டாரு.ரசிகருங்க வந்தா மட்டும் கூட்டம் அதிகமாவும், போக்குவரத்து நெரிசலாவும்னு புதுசா ஞானம் வந்துடிச்சாம். பாபா படப்பொட்டிய பாமக காரங்ககிட்ட இருந்து காப்பாத்துற போராட்டத்துல வாங்குன அடி ரசிகருங்களுக்கு ஒடம்புல மட்டும்தான் விழுந்துருக்கும்... இப்போ? "மொத பந்திக்கு நானும் மொய்ப்பணத்துக்கு எங்கண்ணனும்"னு எங்கூர்ல ஒரு சொலவடை சொல்வாங்கப்பா.

3) சிந்து சமவெளின்னு ஒரு படம் வெளிவந்து சக்கப் போடு போடுதுப்பா. மாமனாரு மருமவ கள்ளக்காதல ரொம்ப 'அழகா' காட்டி கடேசில நீதி வேற சொல்றாராம் டேரக்டரு 'சரோஜாதேவி' கதைப் புஸ்தகம் மாதிரி! ஊருல ஒலகத்துல நடக்காததயா நாஞ்சொல்லிட்டேன்னு  டேரக்டரு அனல்பறக்க பேட்டியெல்லாம் குடிக்குறாரு... ஹ்ம்ம்... காமத்தையும் காதலையும் ஒரு கலையா, முறையா அணுகப்படவேண்டிய விஷயமா பாத்த ஒரு பழம்பெரும் நாகரீகம் எப்டியெல்லாம் பாலியல்வறுமைல சிக்கிச் சீரழியுது பாருங்க. பெண்ணுடல் சுவைக்கப்படமட்டுமே.. அது மூடிவைத்துப்பொத்திப்பாதுகாக்கப் படவேண்டியது அப்டீன்ற விக்டோரியன் கலாச்சாரத்துல சிக்கி இன்னிக்கு ஜட்டி வெளம்பரத்துல இருந்து பாடிஸ்ப்ரே வரைக்கும் பொம்பளப்புள்ளய அரகொறையா ஆடவுட்டுத் தான் வெளம்பரப் படுத்துறாங்க... ஆபாசப் பாட்டுக்கு பள்ளிக்கோடத்துல டான்ஸ் ஆடறதுல ஆரம்பிச்சி... ஹீரோ ஹீரோயின கிண்டல் பண்றப்ப விசிலடிக்கறதுல வளந்து எல்லா இளைய தலைமுறையும் காமச்சேத்துல மூழ்க ஆரம்பிச்சி மூணாவது தலைமுறை ஆயிடிச்சு அநேகமா. இந்த லட்சணத்துல பாலியல் கல்வியப் பத்தி பேசுறப்ப மட்டும் கலாச்சாரம் ஞாவகத்துக்கு வந்துடுது நம்ம பெற்றோர்களுக்கும், பெரிய மனுஷங்களுக்கும்.
A widespread taste for pornography means that nature is alerting us to some threat of extinction.  ~J.G. Ballard,

4) நெட்ல மேஞ்சுகிட்டு இருந்தப்ப "எலக்கியம் படைக்கிறது எப்டி"ன்னு செம நக்கலா நம்ம அண்ணன் பாலபாரதி ஒரு பதிவுல கலாய்ச்சிருக்காரு பாருங்க! அவரு 'சமைச்சி'ருக்குற ஒரு கவித...அடடா... எலக்கியத்தரம்னா இதாண்டான்னு நெத்தில அடிக்கிறாருய்யா. நீங்களும் படிச்சிப் பாருங்க

http://blog.balabharathi.net/?p=669

"கலையும் இலக்கியமும் மக்கள் தங்களோட அறிவுத் தேடலை விரித்துக் கொள்ளவும் பிரச்சினைகளுக்குத் தீர்வை நாடிச் செல்லவும், ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும் மட்டுமே" அப்டீன்னு எங்கியோ படிச்சேன். சுருக்கமாச் சொன்னா "கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே" அப்டீங்குற முழக்கத்த ஆதரிக்கிறவன் நான். மக்கள வுட்டுப் புட்டு என்ன மயித்துல எலக்கியம் வாழுது? தூய இலக்கியம், புண்ணாக்குன்னு ஜல்லியடிக்கிற எலக்கியவியாதிகளுக்கு சொம்படிச்சாத்தான் இண்டலக்சுவல் குரூப் மெம்பரா காட்டிக்க முடியும்னு இணையத்துல நெறய மக்கள் சொறிஞ்சிகிட்டே திரியிறாங்க... வாய்ப்பிருக்குறவங்க எப்பவாச்சும் கல்யாண்ஜியோட "இவனைப்போன்ற கவிதை" அப்டீங்கிற கவிதைய வாசிச்சிப் பாருங்க... மத்தவுங்களுக்கு.. கூடியசீக்கிரம் "கவிதைப்பார்வை"யில அந்தக்கவிதைய எழுதலாம்னு இருக்கேன். இந்தமாதிரி உணர்வுப்பூர்வமா அழகியலோட  இருக்குற கவிதையெல்லாம் பாக்குறப்ப நானும் கவிதைங்குற பேர்ல கிறுக்கிட்டு இருக்கேனேன்னு வெக்கமா இருக்கு சாமீ! என்ன பண்றது... "சீமான் வூட்டு நாயி சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வூட்டு நாயி வெள்ளாவியில ஏறிச்சாம்!"

5) இந்த "அரட்டைக்கச்சேரி" தொடர்ல அரசியல் பத்தி நெறைய எழுதலாம்னு ஒரு நெனப்புல தான் மொதல்ல ஆரம்பிச்சேன்... ஆனா அரசியலப் பத்தி விமர்சனம் மட்டும் பண்ணிட்டு "நானும் பெர்ரீய தேசநேசன்"னு சீனப் போட மனச்சாட்சி எடம் கொடுக்கல. தமிழ்நாட்டுல திமுக, அண்ணா திமுக, பாமக, மதிமுக, காங்கிரசு, பாசக வகையறாக்களைத் தவிரவும் வேற தீவிர அரசியல் இயக்கங்கள் இருக்குங்குற விஷயம் நெறய இளம் தலைமுறையினருக்குத் தெரியல. தெரிஞ்சு வெச்சுக்கிட்டு சும்மா வெட்டி ஞாயம் மட்டுமே பேசிட்டு இருக்குற ஜந்துக்கள்ள நானும் ஒருத்தனா இருக்கேன்.  எத்தன பேருக்கு ம.க.இ.க, பெரியார் தி.க, தமிழர் தன்மான இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி மாதிரியான இயக்கங்களோட செயல்பாடு தெரியும்? இவங்கமேல எவ்வளவோ விமர்சனம் இருக்கலாம்... அவங்க கொள்கைகளோட நமக்கு உடன்பாடு இல்லாம இருக்கலாம்... ஆனா இப்படியும் ஒருவிதமான அரசியல் இருக்கு.. இதே மாதிரி ஒரு குடிமகனா நாமும் நம்மோட அரசியல்கடமைய பண்ண வக்கில்லாம இருக்கோமேன்னு என்னிக்காவது யோசிச்சிருக்கோமா?

'எவனும் சரியில்லப்பா'ன்னு வக்கணை பேசிட்டே தேர்தலன்னக்கி ஓட்டு மட்டும் போட்டுட்டு ( காசு வாங்கிட்டோ வாங்காமலோ), 'விடுமுறைநாள் சிறப்புதின' நிகழ்ச்சியில குட்டைப்பாவாடை டான்ஸ் பாத்துட்டு கவுந்தடிச்சி தூங்குற வழிய பாக்காம ஏண்டா இங்க வந்து இந்த நொண்ணை ஞாயம் பேசிக் கொல்ற?ன்னு கேக்குறீயளா? அதுவும் சரிதான். "Democracy is being allowed to vote for the candidate you dislike least."

6) வழக்கம்போல க்ளைமாக்ஸ்ல கவிதை சொல்றது நம்ம ஸ்டைலாச்சே! அதான் பழைய டைரில பீராய்ஞ்சிட்டு இருந்தப்போ கெடச்சிது இது. கவிக்கோ அப்துல் ரகுமானோட "ஐந்தாண்டுக்கு ஒருமுறை"ங்குற கவிதை

"புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி"

திங்கள், 6 செப்டம்பர், 2010

மௌனமாய் ஒரு கொலை


"எனக்கு ரொம்ப பயமா இருக்குடா...ஒருவேளை செத்துப் போயிட்டேன்னா என்னடா பண்றது?" அவளது குண்டுக்கண்களில் நிறைய பயமும், துளிர்க்கத் துவங்கிய துளி கண்ணீரும் இருந்தன.

"ச்சீ! லூசு மாதிரி பேசாதடி. அப்டில்லாம் ஒண்ணும் ஆயிடாது... அழாதடா குட்டி" தோள்களை மிருதுவாக அணைத்துக் கொண்டான் அவன்.

'ஏதாவது எசகுபெசகா நடந்து இவளுக்கு ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிட்டா என்ன பண்றது? நாமளும் செத்துட வேண்டியதுதான்' அவன் மனசுக்குள் பதைத்தபடி கண்களை அலைபாயவிட்டான்.

ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குண்டான அத்தனை லட்சணங்களோடும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த பெண்கள், குழந்தைகளுக்கான ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல். சுவற்றில் கர்ப்பவதிகளுக்கும், கணவன்மார்களுக்கும் போதிக்கும் போஸ்டர்களில் தவறாமல் ஏதாவது ஒரு கொழுக்மொழுக் குழந்தை புன்னகைத்துக் கொண்டிருந்தது.மெருகு குலையாத தாலியுடன் கூடிய பெண்கள் சிலர் தத்தமது தாயுடனோ, கணவனுடனோ முகத்தில் கொஞ்சம் வெட்கத்தையும் புன்னகையையும், எதிர்பார்ப்பையும் தேக்கி முணுமுணுத்துக் கொண்டிருக்க, மூன்றாவது ( அல்லது இரண்டாவது?!) குழந்தையை பெறப்போகும் ஒருத்தி 'கன்ஃபர்ம்' ஆன சந்தோஷத்துடன் அலட்டலின்றிக் கடந்துபோனாள்.

கல்யாணம் ஆகாத சின்ன வயசு நர்ஸ் ஒருத்தி "பேக்கேஜ் ஜாய்ன் பண்ணிக்கோங்க மேடம். ப்ரக்னன்ஸி டெஸ்ட்ல இருந்து டெலிவரி முடிஞ்சு போறவரைக்கும் உங்களுக்கு ஸ்பெஷல் கேர் கிடைக்கும்.சிடிலயே எங்க ஹாஸ்பிடல்ல மட்டும்தான் 'வாட்டர் பர்த்' ஃபெஸிலிட்டி இருக்கு. நார்மல் டெலிவரிக்கு கியாரண்டி" என்று யாரிடமோ கேன்வாஸிங் செய்துகொண்டிருக்க அவனுக்கு ஒரு சிகரெட் பிடித்தால் தேவலாம்போல் இருந்தது.

வெளியில் வந்து நுரையீரல் முழுக்கப் புகைநிரப்பி வெளியேற்றியபோது படபடப்பு கொஞ்சம் குறைந்தமாதிரி இருந்தது. பதினைந்து நாட்கள்.... சம்பவங்கள் நிரம்பிய பதினைந்து நாட்கள்...

"இன்னிக்கு பூரா வாமிட் எடுத்துட்டே இருக்கேண்டா. முப்பத்திரெண்டு நாளாச்சு... இன்னும் வரல... எனக்கு என்னமோ பயமாருக்கு" என்றபோது திடுக்கிட்ட மனசு...

ஹெச்ஸிஜி கார்டு வாங்கிவந்து விடியற்காலையில் கொஞ்சம் யூரின் விட்டுப்பார்த்தபோது இரண்டாவது கோடு காட்டியது.

இடி விழுந்ததுபோல் உணர்ந்தாலும் மூலையில் சின்னதாய்க் கிளர்வு... 'ந்ம்ம உயிர்...'

"உன்னோட துடிப்பு... எனக்குள்ள.. சந்தோஷமாவும் இருக்குடா..." லேசாக விம்மினாள்.

'இதோ... இன்னும் கொஞ்சநேரத்தில் ஸ்கேன் எடுக்கப் போகிறார்கள். எவளோ ஒருத்தி வந்து "ஸ்வீட்நியூஸ் சார் (யாருக்கு?) ! கன்ஃபார்ம் ஆயிடிச்சி" என்று சொல்வாள்... . "இல்ல சிஸ்டர்... அபார்ஷன் பண்ணத்தான் வந்திருக்கோம்" என்று சொன்னால் என்ன ரியாக்க்ஷன் காட்டுவாள்?' புழுவைப் போல் உணர்ந்தான்.

'ஷிட்! எவ்ளோ கேவலமா வாழ்ந்திருக்கேன்? எவ்ளோ படிச்சி என்ன பிரயோஜனம்? ஆசையெல்லாம் தேக்கிக் காதலிச்சவளோட வெளிப்படையா கல்யாணம் பண்ணிட்டு வாழமுடியாம, அப்டி ஒரு சூழ்நிலை வர்றவரைக்கும் பொறுத்திருக்கவும் முடியாம... ஏதோ தேவிடியாகிட்ட பண்றமாதிரி திருட்டுத்தனமா தொட்டு, இன்னிக்கி... ச்சே!'

ஏனோ மனதுக்குள் வந்துபோனது முப்பதை நெருங்கியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் அக்காவின் கண்களின் அடியில் விழுந்த கருவளையங்களின் நிழல்.

"ஸ்ஸ்ஸ்" விரலை உதறிக்கொண்டு சிகரெட்டை தூக்கிவீசியபடி உள்நுழைந்தபோது

"டோக்கன் நெம்பர் பதினெட்டு. ஜெனிஃபர்...."

மாற்றிக் கொடுத்த பெயர்!

ஸ்கேன்ரூம் திறந்து கட்டிலில் படுக்கவைத்த நர்ஸ் 'ஜெனிஃபரி'ன் சுடிதார்நாடா தளர்த்தி, அடிவயிற்றில் ஏதோ க்ரீம் பூசியபின் ஸ்கேனரை அட்ஜஸ்ட் செய்ய எலக்ட்ரானிக் திரையில் புள்ளிபுள்ளியாய் ஓடி கொஞ்சம்கொஞ்சமாய்த் தெளிவுக்கு வந்த பிம்பத்தில் தெரிந்த 'கொசகொச' உருவத்தில் சின்னச்சின்ன துடிப்புகள்... முதுகெலும்பில் சிலிர்ப்பு ஓடியது.... 'இதை.... இதைப்போயா...?'

"நமக்கு கொழந்த பொறந்தா என்ன பேர் வெக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேண்டா. ஸ்வஸ்திகா! பிடிச்சிருக்கா?"...

'ப்ச்... எல்லாம் பாழ்!'

"கங்க்ராட்ஸ்மா! கன்ஃபர்ம் ஆயிடிச்சி. இந்தா ரிப்போர்ட்! ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எல்லாம் அட்டாச் பண்ணி இருக்கேன். பக்கத்து ரூம்ல டாக்டர் மாலதின்னு இருப்பாங்க. போயி பாருங்க"

தலையை உதறிக்கொண்டவன் அவளை எழுப்பிக்கொண்டு வெளியேறி அடுத்த அறைக்குள் நுழைந்தான்.

"முதல் குழந்தையாம்மா! பயப்படாத. ஹெல்த்தியாத் தான் இருக்க. நல்லபடியா பெத்துக்கலாம்" ரிப்போர்ட்டைப் புரட்டிக்கொண்டே வந்தாள் டாக்டர் மாலதி.

தொண்டைக்குள் ஏதோ உருண்டது. "இல்ல டாக்டர்! க்யூ.டி.சி காகத் தான்"

லேசாக முகம் மாறி மீண்டவள் " ஏங்க! மாரீட் கப்பிள்தானே! (அப்படித்தான் பதிவு செய்திருக்கிறான்!)  பெத்துக்கலாமே?"

"இல்ல டாக்டர்! கொஞ்சம் ஃபினான்ஷியல் கண்டிஷன் சரியில்ல. அதான்..."

"ப்ச்! முதல் குழந்தைய கலைக்கிறது ரொம்ப தப்புங்க. ஃப்யூச்சர்ல ஃபெர்ட்டிலிட்டியே பாதிக்கப்படலாம். கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்திருக்கலாமே! சரி சரி... இந்த இஞ்ஜெக்க்ஷன் வாங்கிடுங்க!  இந்த டேப்லெட்ஸ் இப்போ சாப்பிடச் சொல்லுங்க. நாளைக்கு மார்னிங் எய்ட் தர்ட்டிக்கெல்லாம் அட்மிட் ஆயிடுங்க. ஈவினிங் டிஸ்சார்ஜ் ஆயிடலாம்... ம்ம்ம்.. அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ்... அடுத்தவாட்டி இந்த மாதிரி இருந்துட வேணாம்... ப்ளீஸ்... ஆஸ் அ கைனகாலஜிஸ்ட்... அபார்ஷன் பண்றது... அல்ரெடி குழந்தை இருந்தாக் கூட அக்செப்ட் பண்ணிக்கலாம்.. அவாய்ட் பண்ணிடுங்க"

மெடிக்கல் ஷாப் போய்த் திரும்பி வருகையில்...

"ஊசி வேண்டாண்டா! பயமா இருக்குடா" என்றவளை கொஞ்சம் எரிச்சலுடனும் அனுதாபத்துடனும் வெறித்தான்.

'அடிப்பாவிப் பெண்ணே! இங்கு யாருக்கு யார் பலியாகி இருக்கிறோம்? என் வெறிக்கு நீயா? உன் தகிப்புக்கு நானா? இல்லை நம் சுயநலத்துக்கும், அவசரத்துக்கும் நாளை கரையப் போகும் குழந்தையா?'

"ப்ளீஸ்டா செல்லம். படுத்தாத. கொஞ்சம் என் நிலமை புரிஞ்சிக்கோ"

"நாளைக்கு மார்னிங் வரும்போது ஒரு நைட்டி, டவல், இன்னர்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்க சார்"

தலையாட்டிவிட்டு வெளிவந்தபோது தலை விண்விண் எனத் தெறிக்கத் தொடங்கியது.

அடுத்த நாள்.

அவளுக்கு மட்டும் ஒரு ஆரஞ்ச் ஜூஸ் கொடுத்து, நைட்டி மாற்றி, அமரவைத்த பின் நர்ஸ் வந்து பாக்ஸ் பிரித்து மாத்திரை கொடுக்க விழுங்கிப் படுத்தாள்.

"கொஞ்சநேரம் கழிச்சி மாத்திரை வேலைசெய்ய ஆரம்பிக்கும். வயிறு வலிக்கும். வலி அதிகமாச்சுன்னா கூப்பிடுங்க... இஞ்செக்க்ஷன் போடுறேன். யூரின் போகவேணாம். ரொம்ப தோணிச்சின்னா ஸ்ட்ரெய்ட்டா டாய்லட்ல போகவேணாம். உள்ளாற பீங்கான் வெச்சிருக்கேன். அதுல போகச் சொல்லிட்டு என்னைக் கூப்பிடுங்க. நான் பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணனும்"

சரசரவென இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுத்துவிட்டு வேகமாய் நழுவியவளின் குரல் கதவுக்கு வெளியே சன்னமாய்க் கேட்டது " பானுக்கா! சேனல் மாத்தாதீங்க. இதோ பதினைஞ்சாம் ரூம்ல ட்ரிப்ஸ் மாத்திட்டு வந்திடுறேன்"

கண்மூடிப் படுத்திருந்தவளை இமையசைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அரைமணி நேரம் கழித்து லேசாய் முகம் சுளிக்கத் துவங்கியவளின் முனகல் மெல்ல மெல்ல சுருதி ஏறியது.

"தாங்க முடியலடா...ம்மா... ரொம்ப வலிக்குது.. யாரோ கைய விட்டு பிசையிற மாதிரி இருக்குடா. அய்யோ..." கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"எம்பொண்ணு மெட்றாஸ்ல வேலை பாக்குறா. நல்ல சம்பளம். அடுத்த ஆவணிக்குள்ள கல்யாணம் முடிச்சிடலாம்னு இருக்கோம். அவளுக்கென்ன தங்கச் செல!"

பாவம் அவளது அம்மாவா? அவளா?

துடிக்கும்போது மனசுக்குள் பயம் கவ்வியது...'ஏதாச்சும் ஆயிடுமோ?' கண்கள் இருட்டிக் கொண்டு வருவதுபோல் இருந்தது. நர்ஸ் வந்து ஊசி போடும்போது மெல்ல தலைதடவி தோள்பிடித்து விட்டு....

நர்ஸ் போனபின் கதவு சாத்தினான். நைட்டியை மேலேற்றினான். தொப்புளில் சிறிது நல்லெண்ணை தடவி அழுத்திப் பிடித்துவிட்டு தட்டிக்கொடுக்கும்போது தொடைகள் மின்னின.

'ஹ்ம்ம்ம்... இப்போது வெறுமே முத்தமிட மட்டும் தோன்றுகிறது. அவள் வலி குறைக்க வேண்டும்... எங்கே போனது என் வெறி? எங்கே போனது தகதகத்த தொடைகளின் மேலான மோகம்?'

காமம் அழிந்து காதலும் ஆதூரமும் மட்டும் எஞ்சும் தருணங்கள்! எல்லாம் உணர்ந்தாயிற்று....இருபத்தியேழு வயதில் ஐம்பதைத் தாண்டிய வாழ்க்கை.

"பசிக்குதாடா குட்டி? ஜூஸ் வாங்கிட்டு வரட்டுமா?"

"ம்ம்ம்"

மீண்டும் ஒரு சிகரெட் பிடித்து வெறும் வயிற்றுக்கு தேநீர் வார்த்தபின் அறைக்குள் வந்து அவளின் தலையைத் தூக்கி மார்போடு சாய்த்து கொஞ்சம் கொஞ்சமாய் ஜூஸை ஊட்டும்போது தோன்றியது

"கடவுளே! நான் செய்தது பெரிய பாவம்தான். தப்புத்தான். ப்ளீஸ் மன்னிச்சிடு. எங்களை தண்டிச்சிடாதே! இவளை எப்பவும் இதே மாதிரி பாத்துக்கணும்... என்னோட.. என் அணைப்புலயே... எனக்குள்ளயே..."

ஏதேதோ எண்ணங்கள் தறிகெட்டுப் பாய... மணி பார்த்தான். நாலரை. தூங்கிக் கொண்டிருந்தாள். 'இன்னும் ஒண்ணும் ஆகலையே!' வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது.

அறைக்காற்று மூச்சு முட்டியது. வெளியே போய் மீண்டும் சிகரெட்.

நுழைகையில் விழித்திருந்தாள்.

"எங்கடா போயிட்ட? ஏண்டா என்னைத் தனியா விட்டுட்டுப் போற. தனியா இருக்க பயமாருக்குடா. ப்ளீஸ்"

கொஞ்சநேரம் கழித்து "பாத்ரூம் வருதுடா" என்றவளை அழைத்துப்போய் பீங்கான் எடுத்துக் கொடுத்து உட்காரவைத்தான்."தொப்"பென்ற சத்தத்தோடு ரத்தம் கலந்து விழுந்தது 'அது' கட்டியாய்... அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.மெல்ல நடத்திப் படுக்கவைத்து நர்ஸை அழைத்துக் காட்டியபின்

"வெயிட் பண்ணுங்க. டாக்டர்ட்ட சொல்லிட்டு வரேன்" என்று போனவள்  திரும்பிவந்து "போய் டாக்டரைப் பாத்துட்டு ஸ்கேன் எடுத்துட்டு வாங்க" என்றாள்.

ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து "எல்லாம் க்ளியர் ஆயிடிச்சு. எதுக்கும் அடுத்தவாரம் வந்து இன்னொரு ஸ்கேன் எடுத்துடுங்க. மே பி எதுவும் கொஞ்சம் மிச்சம் இருந்து யூட்ரஸ் வால்ஸ்ல ஒட்டிட்டு இருக்கலாம். ஸோ கேர்ஃபுல்லா இருங்க. தயவு செஞ்சி இன்னொரு வாட்டி அபார்ஷன் ட்ரை பண்ணாதீங்க. அதுவா வர்றப்ப வேண்டாம்னு தள்றோம். நாம எதிர்பார்த்து கையேந்துறப்போ கிடைக்கும்னு என்ன நிச்சயம்?" வார்த்தைகள் ஊசியாய் இறங்கின.

ஃபார்மாலிட்டீஸ் முடித்து ஆட்டோ பிடித்து அமரும்போது, கழுத்தைக் கட்டி முத்தமிட்டுச் சொன்னாள் "ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். ஸாரிடா"

'உன்வலி மறந்து என்வலி நினைக்க எப்படி முடிகிறது என் கண்ணே?!'

ஃப்ளாட் திறந்து வாங்கிவந்த இட்லியை அவளுக்கும் ஊட்டி, தானும் சாப்பிட்டு அவளைப் படுக்கவைத்த பின்  நெற்றியில் முத்தமிட்டு அணைத்த படியே படுத்தவனின் இமைகள்  தானாகவே மூடிக்கொள்ளத் தொடங்கின. கண்களுக்குள் மின்னி மின்னி... 'அது'... வெண்மையாய், உருண்டையாய், ரத்தமும்,நிணமும் கலந்து... 'ஏன் அப்பா?'

உடலெங்கும் ரத்தத்தின் பிசுபிசுப்பை உணர்ந்தான். மெல்ல எழுந்து பாத்ரூம் கதவு திறந்து அமர்ந்து கைகளால் முகத்தை அறைந்துகொண்டு கொள்ளத் தொடங்கினான்.




        

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

...எனவே எழுதுகிறேன்


'இன்று எப்படியாவது செத்துவிடுவது'  சங்கல்பம் பூண்டிருக்கின்றது மனது. நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸின் வேகங்காட்டிமுள் தொண்ணூறைத் தாண்டி உதறிக்கொண்டிருக்கிறது.ஆல்கஹாலின் எரிச்சல், மனதின் நெருப்பை மேலும் விசிறிவிட்டுக்கொண்டே இருக்கிறது.

''ஏய்! வலிக்குதுடி! ஏண்டி இப்படி கடிக்கிற உதட்ட..."

"உன் உதட்ட கடிச்சாத்தான் எனக்கு முழுசா கிஸ் பண்ண திருப்தியே வருதுடா"

லேசாக ரத்தம் கட்டியிருந்த உதடுகளை மீண்டும் கவ்வினாள்.


இதற்குமேல் முறுக்கினால் அறுந்துபோய்விடுவேன்...ப்ளீஸ்... ஆக்ஸிலேட்டர் வயர் கெஞ்சுவதை முகத்தில் அறைந்தபடி சத்தமிட்டது காற்று. 'நிறுத்தி ஒரு சிகரெட் பிடிக்கலாமா?'. தீக்குச்சியின் ஜோதி ஆனந்தமாய் சிகரெட்டைத் தழுவ 'ஆகா!'

"ப்ளீஸ்டி... சாப்பிடாம இருந்தா ரொம்பவும் முடியாம போகும்டி. இந்த ஓட்ஸையாவது மெல்லமா குடிடா செல்லம்"

"ஏண்டா கொல்ற என்னை... கொஞ்ச நேரம் என்னை தனியாத்தான் விடேன்"

வயிறுமுட்டக் குடித்தபின் ஏதும் சாப்பிடாமலேயே கிளம்பியது நினைவுக்கு வந்து பசியைக் கிளப்பியது. 'ச்சே! இந்த சனியனைக் குடிக்காமலேயே வந்திருக்கலாம்... என்ன எழவுடா இது?'

எந்தப்புள்ளியிலோ கிளைக்கும் நினைவுகள் சட்சடாரென எவ்வளவு வேகமாக மாறிச்செல்கின்றன! மனதை  வேடிக்கை பார்க்கும்போது 'நியூரான், எலக்ட்ரான், எலெக்ட்ரிகல் பல்ஸ்' ... பயாலஜி வாத்தியாரின் கறுப்புச்சட்டை..... தாவிக்கொண்டே.... 'எந்த எலக்ட்ரிகல் பல்ஸ் அவளை தாலிக்கயிற்றுக்குள் தலைநுழைக்கச் சொல்லியது?'

"வயிறு ரொம்ப வலிக்குதுடா... ப்ளீடிங்கும் இந்தவாட்டி அதிகம்... நீ வந்து தடவி விட்டா நல்லாருக்கும்ணு தோணுதுடா...."

"அடிப்பாவி! ஈவினிங்கே மாத்திரை வாங்கித் தரேன்னு சொன்னேனே... ஏதாவது நான் சொல்லி கேக்குறியா நீ? இப்ப என்னடி பண்ணுவேன்?

இருட்டில் திறந்திருக்கும் கடை தேடி வாங்கிவந்த பவண்டோவைக் குடித்தாளா இல்லையா?

"ஹாஸ்டல் தாத்தா திட்டிக்கிட்டே எழுப்பிக் கொண்டாந்து குடுத்தாரு... எனக்கு பிடிக்கவே இல்ல... சீக்கிரம் வீடு பாருன்னு சொன்னா ஏண்டா கேக்க மாட்ற?"

ம்ம்ம்... நேற்றிரவு படித்த வரிகள் மனதில் ஏனோ ரீங்கரிக்கத் தொடங்கின... புத்தகங்கள் திறக்கும் உலகம் நிஜமாகவே அலாதியானதுதான்... ஆங்...! என்ன வரிகள் அவை...? மூளையின் நரம்புகள் லேசாகச் சிணுங்கிக் கொண்டே பிறாண்ட...

"வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கைதான்... என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும்...."

'சைபீரியச் சிறைவாசத்தின் கொடுங்கரங்களுக்கிடையிலும் எப்படி முடிந்தது தாஸ்தாயெவ்ஸ்கியால் இவ்வரிகளை எழுத! என்னாலும் தாஸ்தாயெவ்ஸ்கியாய் மாறமுடிந்தால்?' கொடுத்து வைத்தவன்! காதல் உயிரோடு இருக்கும்போதே செத்துப்போய் விட்டான்.. ஏன் எழுதமாட்டான்?

ஹெட்லைட் வெளிச்சத்தைக் குறைக்காமலேயே கடந்துசென்ற சக்கரங்கள் ஏக்கத்துடன் கடக்கின்றன. 'இன்னும் கொஞ்சம் குடித்திருந்தால் நன்றாயிருந்திருக்குமோ?'

"ஏண்டி.. உன் போர்வைய மட்டும் துவச்சி வச்சிட்டு என் போர்வைய தூக்கி குப்பைக் கூடையில போட்ருக்கே? என்ன நெனச்சிட்டு இருக்கே?"

"கத்தாதேடா அழுக்குப்பயலே! அவ்ளோ நாறுது.... எவ தொவப்பா? பேசாம மூடிட்டு என் போர்வைக்குள்ள வந்து படு"

காதுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டியபடி கிசுகிசுத்தது மூச்சுக்காற்று... "ஏன் நாயே! நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு போர்வை பத்தாது?"


எதிர்க்காற்றின் வேகத்தில் குளிர்கிறது. 'எங்கே எனது போர்வை?  ப்ச்... செத்துப்போனால் குளிருமா என்ன?'

'என்ன செய்வேன் இனி? மனங்களிலிருந்து வழியும் சாக்கடையின் அருவருப்பில் தோல் கூசுகிறதே! ஏன் என் வண்டியும் எனக்கு ஒத்துழைக்க மறுக்கிறது? எவ்வளவு ஒடித்தும் சாகஸமாய் சக்கரங்களுக்குத் தப்பிப் பாய்கிறதே! ச்சே... உயிர்வாழும் ஆசை அதற்குமா?'

ஆமாம் என்று ஆமோதிக்கிறது காலிவயிற்றின் ஏக்கம்... 'ஏதாவது போடேன்'... 'ச்சை... சும்மா கெட சனியனே'

"அதான் ஐ-பில் வாங்கி வெச்சிருக்கேல்ல... அப்புறம் ஏண்டா கவலைப்படுறே? நீ கண்டினியூ பண்ணு"

"இல்லடா செல்லம்.... நீ போன தடவை அழுதது எனக்கு இப்பவும் பயமா இருக்கு"



 "இப்ப நீயா  வர்றியா.. இல்ல நானே....."

"ஹை! அப்டீன்னா சீக்கிரம் வாடி...

கிறங்கத் துவங்கும் இமைகளில் மென்மையாய்ப் பதிந்தது முத்தம்...:"எப்பவும் என்கூடவே இருடா"


வண்டியை சைட்லாக் செய்து அறைக்கதவைத் திறக்கையில்

"பீப்...பீப்"

"உனக்கு நான் பண்ணினது எல்லாமே ரொம்பக் கொடுமைடா... இன்னும் உன் லைஃப்ல நான் இருக்கணும்னு நெனக்கிறியா... ப்ளீஸ்டா... ரிப்ளை அனுப்பு"

'ச்சே! இன்னிக்கும் சாகாம தப்பிச்சிட்டேனே!'

கம்ப்யூட்டரைத் திறந்து '...எனவே எழுதுகிறேன்,' தலைப்பிட்டு எழுதிச் சரிபார்த்து கோப்பினைச் சேமித்துவிட்டு எல்லா ஆடைகளையும் களைந்து படுக்கையில் விழுந்த பத்தாம் நிமிடம்...

அவன்  செ...த்.....து........ப்...........போ.................
சொல்லடி சிவசக்தி- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
....................
....................
....................
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் .....


புதன், 1 செப்டம்பர், 2010

எழுத நினைக்கும் காதல்கடிதம்...


உனக்கு ஒரு கடிதம் எழுத ஆசை தோழீ!
அதன் வார்த்தைகளில் வழியவேண்டும்
உலகின் மொத்தக் காதலும்...
உன் மனதின் எளிமையான அழகும்...

கடிதத்தை நீ வாசிக்கையில்
"அட! திருட்டுப்பயலே!"
முறுவலிப்பும் முணுமுணுப்பும்
என் வார்த்தைக் குழந்தைகளுக்கு
நீ வார்க்கும் முலைப்பாலாய் வேண்டும்

வார்த்தைகள் காதலிடமும்
காதல் உன்னிடமும்
சரணடைவதாய் இருக்கவேண்டும்

எப்போதாவது உரசிச்செல்லும்
உன் கூந்தலின் ஒற்றைமுடியைப்போல்
மென்மையானதாகவும்...

என் பேனா முனையின் முதற்புள்ளியோ
எப்போதும் ஆர்ப்பாட்டங்களுடனேயே
முனைமுறிந்து விடுகின்றது...

இடுக்குகளில் எப்படியோ நுழைந்து விடுகின்றன
என் பகட்டும் அறிவின் திமிரும்....

பேசாமல்...

உனக்கான என் கடிதத்தை நீயே
எழுதிவிடேன்!
Related Posts with Thumbnails