திங்கள், 6 செப்டம்பர், 2010

மௌனமாய் ஒரு கொலை


"எனக்கு ரொம்ப பயமா இருக்குடா...ஒருவேளை செத்துப் போயிட்டேன்னா என்னடா பண்றது?" அவளது குண்டுக்கண்களில் நிறைய பயமும், துளிர்க்கத் துவங்கிய துளி கண்ணீரும் இருந்தன.

"ச்சீ! லூசு மாதிரி பேசாதடி. அப்டில்லாம் ஒண்ணும் ஆயிடாது... அழாதடா குட்டி" தோள்களை மிருதுவாக அணைத்துக் கொண்டான் அவன்.

'ஏதாவது எசகுபெசகா நடந்து இவளுக்கு ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிட்டா என்ன பண்றது? நாமளும் செத்துட வேண்டியதுதான்' அவன் மனசுக்குள் பதைத்தபடி கண்களை அலைபாயவிட்டான்.

ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குண்டான அத்தனை லட்சணங்களோடும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த பெண்கள், குழந்தைகளுக்கான ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல். சுவற்றில் கர்ப்பவதிகளுக்கும், கணவன்மார்களுக்கும் போதிக்கும் போஸ்டர்களில் தவறாமல் ஏதாவது ஒரு கொழுக்மொழுக் குழந்தை புன்னகைத்துக் கொண்டிருந்தது.மெருகு குலையாத தாலியுடன் கூடிய பெண்கள் சிலர் தத்தமது தாயுடனோ, கணவனுடனோ முகத்தில் கொஞ்சம் வெட்கத்தையும் புன்னகையையும், எதிர்பார்ப்பையும் தேக்கி முணுமுணுத்துக் கொண்டிருக்க, மூன்றாவது ( அல்லது இரண்டாவது?!) குழந்தையை பெறப்போகும் ஒருத்தி 'கன்ஃபர்ம்' ஆன சந்தோஷத்துடன் அலட்டலின்றிக் கடந்துபோனாள்.

கல்யாணம் ஆகாத சின்ன வயசு நர்ஸ் ஒருத்தி "பேக்கேஜ் ஜாய்ன் பண்ணிக்கோங்க மேடம். ப்ரக்னன்ஸி டெஸ்ட்ல இருந்து டெலிவரி முடிஞ்சு போறவரைக்கும் உங்களுக்கு ஸ்பெஷல் கேர் கிடைக்கும்.சிடிலயே எங்க ஹாஸ்பிடல்ல மட்டும்தான் 'வாட்டர் பர்த்' ஃபெஸிலிட்டி இருக்கு. நார்மல் டெலிவரிக்கு கியாரண்டி" என்று யாரிடமோ கேன்வாஸிங் செய்துகொண்டிருக்க அவனுக்கு ஒரு சிகரெட் பிடித்தால் தேவலாம்போல் இருந்தது.

வெளியில் வந்து நுரையீரல் முழுக்கப் புகைநிரப்பி வெளியேற்றியபோது படபடப்பு கொஞ்சம் குறைந்தமாதிரி இருந்தது. பதினைந்து நாட்கள்.... சம்பவங்கள் நிரம்பிய பதினைந்து நாட்கள்...

"இன்னிக்கு பூரா வாமிட் எடுத்துட்டே இருக்கேண்டா. முப்பத்திரெண்டு நாளாச்சு... இன்னும் வரல... எனக்கு என்னமோ பயமாருக்கு" என்றபோது திடுக்கிட்ட மனசு...

ஹெச்ஸிஜி கார்டு வாங்கிவந்து விடியற்காலையில் கொஞ்சம் யூரின் விட்டுப்பார்த்தபோது இரண்டாவது கோடு காட்டியது.

இடி விழுந்ததுபோல் உணர்ந்தாலும் மூலையில் சின்னதாய்க் கிளர்வு... 'ந்ம்ம உயிர்...'

"உன்னோட துடிப்பு... எனக்குள்ள.. சந்தோஷமாவும் இருக்குடா..." லேசாக விம்மினாள்.

'இதோ... இன்னும் கொஞ்சநேரத்தில் ஸ்கேன் எடுக்கப் போகிறார்கள். எவளோ ஒருத்தி வந்து "ஸ்வீட்நியூஸ் சார் (யாருக்கு?) ! கன்ஃபார்ம் ஆயிடிச்சி" என்று சொல்வாள்... . "இல்ல சிஸ்டர்... அபார்ஷன் பண்ணத்தான் வந்திருக்கோம்" என்று சொன்னால் என்ன ரியாக்க்ஷன் காட்டுவாள்?' புழுவைப் போல் உணர்ந்தான்.

'ஷிட்! எவ்ளோ கேவலமா வாழ்ந்திருக்கேன்? எவ்ளோ படிச்சி என்ன பிரயோஜனம்? ஆசையெல்லாம் தேக்கிக் காதலிச்சவளோட வெளிப்படையா கல்யாணம் பண்ணிட்டு வாழமுடியாம, அப்டி ஒரு சூழ்நிலை வர்றவரைக்கும் பொறுத்திருக்கவும் முடியாம... ஏதோ தேவிடியாகிட்ட பண்றமாதிரி திருட்டுத்தனமா தொட்டு, இன்னிக்கி... ச்சே!'

ஏனோ மனதுக்குள் வந்துபோனது முப்பதை நெருங்கியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் அக்காவின் கண்களின் அடியில் விழுந்த கருவளையங்களின் நிழல்.

"ஸ்ஸ்ஸ்" விரலை உதறிக்கொண்டு சிகரெட்டை தூக்கிவீசியபடி உள்நுழைந்தபோது

"டோக்கன் நெம்பர் பதினெட்டு. ஜெனிஃபர்...."

மாற்றிக் கொடுத்த பெயர்!

ஸ்கேன்ரூம் திறந்து கட்டிலில் படுக்கவைத்த நர்ஸ் 'ஜெனிஃபரி'ன் சுடிதார்நாடா தளர்த்தி, அடிவயிற்றில் ஏதோ க்ரீம் பூசியபின் ஸ்கேனரை அட்ஜஸ்ட் செய்ய எலக்ட்ரானிக் திரையில் புள்ளிபுள்ளியாய் ஓடி கொஞ்சம்கொஞ்சமாய்த் தெளிவுக்கு வந்த பிம்பத்தில் தெரிந்த 'கொசகொச' உருவத்தில் சின்னச்சின்ன துடிப்புகள்... முதுகெலும்பில் சிலிர்ப்பு ஓடியது.... 'இதை.... இதைப்போயா...?'

"நமக்கு கொழந்த பொறந்தா என்ன பேர் வெக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேண்டா. ஸ்வஸ்திகா! பிடிச்சிருக்கா?"...

'ப்ச்... எல்லாம் பாழ்!'

"கங்க்ராட்ஸ்மா! கன்ஃபர்ம் ஆயிடிச்சி. இந்தா ரிப்போர்ட்! ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எல்லாம் அட்டாச் பண்ணி இருக்கேன். பக்கத்து ரூம்ல டாக்டர் மாலதின்னு இருப்பாங்க. போயி பாருங்க"

தலையை உதறிக்கொண்டவன் அவளை எழுப்பிக்கொண்டு வெளியேறி அடுத்த அறைக்குள் நுழைந்தான்.

"முதல் குழந்தையாம்மா! பயப்படாத. ஹெல்த்தியாத் தான் இருக்க. நல்லபடியா பெத்துக்கலாம்" ரிப்போர்ட்டைப் புரட்டிக்கொண்டே வந்தாள் டாக்டர் மாலதி.

தொண்டைக்குள் ஏதோ உருண்டது. "இல்ல டாக்டர்! க்யூ.டி.சி காகத் தான்"

லேசாக முகம் மாறி மீண்டவள் " ஏங்க! மாரீட் கப்பிள்தானே! (அப்படித்தான் பதிவு செய்திருக்கிறான்!)  பெத்துக்கலாமே?"

"இல்ல டாக்டர்! கொஞ்சம் ஃபினான்ஷியல் கண்டிஷன் சரியில்ல. அதான்..."

"ப்ச்! முதல் குழந்தைய கலைக்கிறது ரொம்ப தப்புங்க. ஃப்யூச்சர்ல ஃபெர்ட்டிலிட்டியே பாதிக்கப்படலாம். கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்திருக்கலாமே! சரி சரி... இந்த இஞ்ஜெக்க்ஷன் வாங்கிடுங்க!  இந்த டேப்லெட்ஸ் இப்போ சாப்பிடச் சொல்லுங்க. நாளைக்கு மார்னிங் எய்ட் தர்ட்டிக்கெல்லாம் அட்மிட் ஆயிடுங்க. ஈவினிங் டிஸ்சார்ஜ் ஆயிடலாம்... ம்ம்ம்.. அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ்... அடுத்தவாட்டி இந்த மாதிரி இருந்துட வேணாம்... ப்ளீஸ்... ஆஸ் அ கைனகாலஜிஸ்ட்... அபார்ஷன் பண்றது... அல்ரெடி குழந்தை இருந்தாக் கூட அக்செப்ட் பண்ணிக்கலாம்.. அவாய்ட் பண்ணிடுங்க"

மெடிக்கல் ஷாப் போய்த் திரும்பி வருகையில்...

"ஊசி வேண்டாண்டா! பயமா இருக்குடா" என்றவளை கொஞ்சம் எரிச்சலுடனும் அனுதாபத்துடனும் வெறித்தான்.

'அடிப்பாவிப் பெண்ணே! இங்கு யாருக்கு யார் பலியாகி இருக்கிறோம்? என் வெறிக்கு நீயா? உன் தகிப்புக்கு நானா? இல்லை நம் சுயநலத்துக்கும், அவசரத்துக்கும் நாளை கரையப் போகும் குழந்தையா?'

"ப்ளீஸ்டா செல்லம். படுத்தாத. கொஞ்சம் என் நிலமை புரிஞ்சிக்கோ"

"நாளைக்கு மார்னிங் வரும்போது ஒரு நைட்டி, டவல், இன்னர்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்க சார்"

தலையாட்டிவிட்டு வெளிவந்தபோது தலை விண்விண் எனத் தெறிக்கத் தொடங்கியது.

அடுத்த நாள்.

அவளுக்கு மட்டும் ஒரு ஆரஞ்ச் ஜூஸ் கொடுத்து, நைட்டி மாற்றி, அமரவைத்த பின் நர்ஸ் வந்து பாக்ஸ் பிரித்து மாத்திரை கொடுக்க விழுங்கிப் படுத்தாள்.

"கொஞ்சநேரம் கழிச்சி மாத்திரை வேலைசெய்ய ஆரம்பிக்கும். வயிறு வலிக்கும். வலி அதிகமாச்சுன்னா கூப்பிடுங்க... இஞ்செக்க்ஷன் போடுறேன். யூரின் போகவேணாம். ரொம்ப தோணிச்சின்னா ஸ்ட்ரெய்ட்டா டாய்லட்ல போகவேணாம். உள்ளாற பீங்கான் வெச்சிருக்கேன். அதுல போகச் சொல்லிட்டு என்னைக் கூப்பிடுங்க. நான் பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணனும்"

சரசரவென இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுத்துவிட்டு வேகமாய் நழுவியவளின் குரல் கதவுக்கு வெளியே சன்னமாய்க் கேட்டது " பானுக்கா! சேனல் மாத்தாதீங்க. இதோ பதினைஞ்சாம் ரூம்ல ட்ரிப்ஸ் மாத்திட்டு வந்திடுறேன்"

கண்மூடிப் படுத்திருந்தவளை இமையசைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அரைமணி நேரம் கழித்து லேசாய் முகம் சுளிக்கத் துவங்கியவளின் முனகல் மெல்ல மெல்ல சுருதி ஏறியது.

"தாங்க முடியலடா...ம்மா... ரொம்ப வலிக்குது.. யாரோ கைய விட்டு பிசையிற மாதிரி இருக்குடா. அய்யோ..." கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"எம்பொண்ணு மெட்றாஸ்ல வேலை பாக்குறா. நல்ல சம்பளம். அடுத்த ஆவணிக்குள்ள கல்யாணம் முடிச்சிடலாம்னு இருக்கோம். அவளுக்கென்ன தங்கச் செல!"

பாவம் அவளது அம்மாவா? அவளா?

துடிக்கும்போது மனசுக்குள் பயம் கவ்வியது...'ஏதாச்சும் ஆயிடுமோ?' கண்கள் இருட்டிக் கொண்டு வருவதுபோல் இருந்தது. நர்ஸ் வந்து ஊசி போடும்போது மெல்ல தலைதடவி தோள்பிடித்து விட்டு....

நர்ஸ் போனபின் கதவு சாத்தினான். நைட்டியை மேலேற்றினான். தொப்புளில் சிறிது நல்லெண்ணை தடவி அழுத்திப் பிடித்துவிட்டு தட்டிக்கொடுக்கும்போது தொடைகள் மின்னின.

'ஹ்ம்ம்ம்... இப்போது வெறுமே முத்தமிட மட்டும் தோன்றுகிறது. அவள் வலி குறைக்க வேண்டும்... எங்கே போனது என் வெறி? எங்கே போனது தகதகத்த தொடைகளின் மேலான மோகம்?'

காமம் அழிந்து காதலும் ஆதூரமும் மட்டும் எஞ்சும் தருணங்கள்! எல்லாம் உணர்ந்தாயிற்று....இருபத்தியேழு வயதில் ஐம்பதைத் தாண்டிய வாழ்க்கை.

"பசிக்குதாடா குட்டி? ஜூஸ் வாங்கிட்டு வரட்டுமா?"

"ம்ம்ம்"

மீண்டும் ஒரு சிகரெட் பிடித்து வெறும் வயிற்றுக்கு தேநீர் வார்த்தபின் அறைக்குள் வந்து அவளின் தலையைத் தூக்கி மார்போடு சாய்த்து கொஞ்சம் கொஞ்சமாய் ஜூஸை ஊட்டும்போது தோன்றியது

"கடவுளே! நான் செய்தது பெரிய பாவம்தான். தப்புத்தான். ப்ளீஸ் மன்னிச்சிடு. எங்களை தண்டிச்சிடாதே! இவளை எப்பவும் இதே மாதிரி பாத்துக்கணும்... என்னோட.. என் அணைப்புலயே... எனக்குள்ளயே..."

ஏதேதோ எண்ணங்கள் தறிகெட்டுப் பாய... மணி பார்த்தான். நாலரை. தூங்கிக் கொண்டிருந்தாள். 'இன்னும் ஒண்ணும் ஆகலையே!' வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது.

அறைக்காற்று மூச்சு முட்டியது. வெளியே போய் மீண்டும் சிகரெட்.

நுழைகையில் விழித்திருந்தாள்.

"எங்கடா போயிட்ட? ஏண்டா என்னைத் தனியா விட்டுட்டுப் போற. தனியா இருக்க பயமாருக்குடா. ப்ளீஸ்"

கொஞ்சநேரம் கழித்து "பாத்ரூம் வருதுடா" என்றவளை அழைத்துப்போய் பீங்கான் எடுத்துக் கொடுத்து உட்காரவைத்தான்."தொப்"பென்ற சத்தத்தோடு ரத்தம் கலந்து விழுந்தது 'அது' கட்டியாய்... அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.மெல்ல நடத்திப் படுக்கவைத்து நர்ஸை அழைத்துக் காட்டியபின்

"வெயிட் பண்ணுங்க. டாக்டர்ட்ட சொல்லிட்டு வரேன்" என்று போனவள்  திரும்பிவந்து "போய் டாக்டரைப் பாத்துட்டு ஸ்கேன் எடுத்துட்டு வாங்க" என்றாள்.

ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து "எல்லாம் க்ளியர் ஆயிடிச்சு. எதுக்கும் அடுத்தவாரம் வந்து இன்னொரு ஸ்கேன் எடுத்துடுங்க. மே பி எதுவும் கொஞ்சம் மிச்சம் இருந்து யூட்ரஸ் வால்ஸ்ல ஒட்டிட்டு இருக்கலாம். ஸோ கேர்ஃபுல்லா இருங்க. தயவு செஞ்சி இன்னொரு வாட்டி அபார்ஷன் ட்ரை பண்ணாதீங்க. அதுவா வர்றப்ப வேண்டாம்னு தள்றோம். நாம எதிர்பார்த்து கையேந்துறப்போ கிடைக்கும்னு என்ன நிச்சயம்?" வார்த்தைகள் ஊசியாய் இறங்கின.

ஃபார்மாலிட்டீஸ் முடித்து ஆட்டோ பிடித்து அமரும்போது, கழுத்தைக் கட்டி முத்தமிட்டுச் சொன்னாள் "ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். ஸாரிடா"

'உன்வலி மறந்து என்வலி நினைக்க எப்படி முடிகிறது என் கண்ணே?!'

ஃப்ளாட் திறந்து வாங்கிவந்த இட்லியை அவளுக்கும் ஊட்டி, தானும் சாப்பிட்டு அவளைப் படுக்கவைத்த பின்  நெற்றியில் முத்தமிட்டு அணைத்த படியே படுத்தவனின் இமைகள்  தானாகவே மூடிக்கொள்ளத் தொடங்கின. கண்களுக்குள் மின்னி மின்னி... 'அது'... வெண்மையாய், உருண்டையாய், ரத்தமும்,நிணமும் கலந்து... 'ஏன் அப்பா?'

உடலெங்கும் ரத்தத்தின் பிசுபிசுப்பை உணர்ந்தான். மெல்ல எழுந்து பாத்ரூம் கதவு திறந்து அமர்ந்து கைகளால் முகத்தை அறைந்துகொண்டு கொள்ளத் தொடங்கினான்.
        

22 பேரு கிடா வெட்டுறாங்க:

ஜோதிஜி சொன்னது…

மீண்டும் வருவேன்

கலாநேசன் சொன்னது…

மனதைப் பிசைந்த கதை.......

Rathi சொன்னது…

வைத்தியசாலை, கருக்கலைப்பு பற்றிய வர்ணனைகள் மிகவும் யதார்த்தம். வர்ணனையின் யதார்த்தம் மீறிய ஒரு எரிச்சல் கதையின் ஓரிரு வரிகளின் பிறகு அதன் போக்கை புரிந்துகொள்வதால் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஓர் ஆண் மனதை முன்னிலைப் படுத்தியே கதை எழுதப்பட்டிருக்கிறது, தவறில்லை. கதையில் வெளிப்படுவது ஒருவிதமான ஆணாதிக்க மனப்போக்கு என்பதை தவிர்க்கமுடியாத அளவுக்கு எழுத்தும், கருவும் உள்ளது.

மொத்தத்தில் காதல் பற்றிய கருத்துருவாக்கம் தாறுமாறாய் இருக்கிறது.

பத்மா சொன்னது…

மனக் குழப்பத்தின் பிரதிபலிப்பு .
good write up

சிவராம்குமார் சொன்னது…

வலியின் அருமையான பிரதிபலிப்பு!

அர. பார்த்தசாரதி சொன்னது…

நேற்று பெங்களூரு நகர சிக்னல் ஒன்றில் குழந்தையை கையில் வைத்து கொண்டு பிச்சை எடுக்கும் ஒரு பெண்ணை பார்த்தேன்.ஊசி போடப்பட்டு தூங்கும் குழந்தை , தூசி, புகை ,பட்டினி என ஒரு வயது குழந்தை படும் அவஸ்தை, சட்டென்று என்னையும் அறியாமல் எனது 1 வயது குழந்தையை அந்த இடத்தில் உறவகப்படுதிவிட்டேன் . சொல்ல முடியாத மன வேதனை . உங்களுடைய கதை படித்தபின் அந்த சிக்னல் குழந்தையை பெற்றவர்கள் கூட என் போல் வெதும்பிகொண்டுதான் இருப்பார்கள் என்று நினைக்கதொன்றுகிறது . சந்தர்ப்பங்கள் சொல்லும் தீர்ப்பு . கண்ணீர் வரவழைத்த கதை ! ஒரு ஓரத்தில் மனிதர்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் கதை .
சில நேரங்களில் படைப்புகளை எழுதியவரை வைத்து பார்க்கக்கூடாது , இது அற்புதமான கதை , எந்த இடத்திலும் ஆணாதிக்கம் புலப்படவில்லை, ஆணின் நிலையில் இது எழுத பட்டிருக்கிறது , இதையே பெண் நிலையில் எழுதியிருந்தால் பெண் ஆதிக்கமாக தெரியுமோ என்னவோ

என்னது நானு யாரா? சொன்னது…

சந்தர்ப்பங்கள் மனிதனின் மனத்தினை எவ்வாறு எல்லாம் ஆட்டி படைக்கின்றன என்று அருமையாக சொல்லி இருக்கின்றீர் நண்பரே!

சாதரணமாக பெண்ணின் உடலை பார்க்கும் போது ஏற்படும் காமம், அவள் மருத்துவமனையில் இருக்கையில் ஏற்படாமல் இருந்ததை அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள் வார்த்தைகளால். மிகவும் அருமை!

எல்லோருடைய செய்கைக்கும் அவரவரே பொறுப்பு! நாம் யாரை தவறென்று சொல்லமுடியும்? பெண்ணும் கூட இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி கொண்டால் கருகலைப்பு என்று ஒரு மாற்றமுடியாத முடிவை எடுக்க தானே செய்கிறாள்.

என்னது நானு யாரா? சொன்னது…

நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஒரு பெண்ணை தீவிரமாக காதலிக்கும்போதே அவளை மணமுடிக்கும் எண்ணத்துடன்தான் காதலிப்போம்..
அதீத காதலில் அவள் கர்ப்பமாக மணம் முடித்தல் சரியான தீர்வாக இருக்க.. அதனை விடுத்து கலைத்து விட்டு புலம்பும் ஆண்மகன் வேசம் போடுகிறான்...

கோழியை அறுத்து நன்றாக சுவைத்து தின்றுவிட்டு அதன்பின் ஐயோ கொலை செய்து விட்டேனே என அழுவது போல் இருக்கிறது...

முட்டாள் மனிதர்களின்.. வெற்று புலம்பலே இக்கதை என்றாலும்....

அவசரத்தில் இரண்டு தவறுகளை அடுத்தடுத்து செய்துவிட்டு இந்த கலாசார உலகில் அடுத்த வாழக்கை நோக்கி நகர முற்படுகையில் குற்ற உணர்ச்சி மேலிட அழும் நாயகன் நிறைந்த எதார்த்த உலகத்தில் நாமெல்லாம் "வாழத்தான்" வேண்டியிருக்கிறது ...

மார்கண்டேயன் சொன்னது…

நிஜமான முரண், குழந்தை இல்லை என்று பலர் வாட, சிலருக்கு சுமை என்று இறக்க, பிறந்ததை வைத்து பிழைப்பு நடத்த . . . இதில் எது சரி ? எது தவறு ?

Rathi சொன்னது…

சரியான, தெளிவான பார்வை செந்தில். இதை இவ்வளவு அழுத்தம் திருத்தமாக எனக்கு சொல்லத்தெரியவில்லை.

senthil velayuthan சொன்னது…

ரெம்பவே மனச பிசஞ்ச கதை, அப்படியே உயிரை உருவி எடுத்தது மாதிரி வலித்தது .

நேசமித்ரன் சொன்னது…

//முட்டாள் மனிதர்களின்.. வெற்று புலம்பலே இக்கதை என்றாலும்....//


:)

விந்தைமனிதன் சொன்னது…

@கே.ஆர்.பி.செந்தில்

//ஒரு பெண்ணை தீவிரமாக காதலிக்கும்போதே அவளை மணமுடிக்கும் எண்ணத்துடன்தான் காதலிப்போம்..//

நிச்சயம்.... ஏமாற்றிப்போகும் ஆடவர் சிலரையும், பொழுதுபோக்கிற்காயும் உடல்தேவைகளுக்காகவும் காதலிப்பதாய்ச் சொல்லும் சிலரையும் தவிர்த்து.... ஏனைய அனைத்துக்காதலர்களும் அப்படியே!

காதலிப்பவரையே மணமுடிப்பதாய் இருந்தால் இன்று நாட்டில் 90 சதம் திருமணங்கள் காதல் திருமணங்களாக மட்டும்தான் இருந்திருக்கும். காதலைப் பிரிந்து வாழ்க்கையை வேறு திசையில் தொடங்குவோர் எல்லாருமே கோழைகள் என்று வகைப்படுத்துவது தட்டைப்பார்வை.

//அதீத காதலில் அவள் கர்ப்பமாக மணம் முடித்தல் சரியான தீர்வாக இருக்க.. அதனை விடுத்து கலைத்து விட்டு புலம்பும் ஆண்மகன் வேசம் போடுகிறான்...//

காதல் வெறுமனே உள்ளத்தால் மட்டுமே இருக்கவேண்டும் என்பது என்ற கருத்து...

i) உளவியல் ரீதியாக உளுத்துப் போன விஷயம்... மனம் பகிரப்பட்டபின் உடல் பகிர்வுக்கு ஏது தடை? வேண்டுமானால் காதல் முறிந்துவிட்டால் (ஒருவேளை!.... சாத்தியங்கள் உண்டுதானே?!) கட்டப்போகும் வேறு ஒருவனுக்கு தூய உடலைப் பரிசளிக்கப் பேணவேண்டும் என்ற கருத்தாக்கம் மட்டுமே உடல்பகிர்வுக்குத் தடை... உண்டா இல்லையா?

ii) சமூகவியல்ரீதியாக உடல்பகிர்வுக்கான மனத்தடைகளை நியாயப் படுத்த காரணங்கள் பலவுண்டு. தடைகள் மீறப்படுவது தானே அமைதியாய் அல்லது இயக்கமற்று இருக்கும் சமூகத்தில் சலனத்தை உண்டாக்குகிறது?! தடைகளை பாதிமீறி (ரகசியமாய் இயற்கையின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து ), மீதிமீறப்படும்போது பாதிக்கப்படுவோர் நம்மிருவரைத் தாண்டியும் பலருண்டு என்ற உண்மை அப்பட்டமாய் முகத்திலடிக்க... பணிந்துபோகும் ஒருவனின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது அநியாயம் என்றே கருதுகிறேன்.

மனிதன் எப்போதும் அறிவின் கட்டளைக்கு மட்டுமே ஆட்பட்டு, உணர்வுகளுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது எப்படி சாத்தியம்?

உணர்வுகளுக்குப் பணிந்து விளைவுகளுக்கு நிர்ப்பந்திக்கப்படும் மனிதன் ... அடுத்தபடியாக எந்தவழியில் பாதிப்புக்கள் குறைவாக இருக்கும் என்றுதான் யோசிப்பான். தேர்வுசெய்யும் வழி அவனுக்கு உவப்பானதாய் இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே?

//கோழியை அறுத்து நன்றாக சுவைத்து தின்றுவிட்டு அதன்பின் ஐயோ கொலை செய்து விட்டேனே என அழுவது போல் இருக்கிறது...//

பெண்ணுடல்மீதான ஆணின் அதிகாரம் இந்த வரிகளில் தெரிவதைவிடவா கதையில் வெளிப்படுகிறது??? கதையில் வருவது காதலனிடம் தன்னைக் குழந்தையாய் ஒப்புக்கொடுத்த நாயகியும், அவளைத் தன் கரம்கோர்த்து அணைத்துக் கொள்ளும் நாயகனும் வாழும் கதையில், சராசரி உணர்வுகளையும் சமூத்தையும் மீற அஞ்சும் அவர்களிடம் வழமையான அதே சமூக எண்ணப்பழக்கங்களை மட்டும்தான் எதிர்பார்க்கமுடியும்...

ஆனால் கேஆர்பி அண்ணன் சொல்லி இருப்பது அவரது கருத்து. அதில் வெளிப்படுவன அவரின் கருதுகோள்கள். இதைத்தான் ரதியக்கா தான் சொல்ல வந்து இயலாமல் போனதாகச் சொல்கிறாரா? அப்போ 'ஆணாதிக்கம்'?!

//வெற்று புலம்பலே இக்கதை என்றாலும்....// நிச்சயமாக...

ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மனிதர்களின் அத்தனை இயலாமைகளையும், விளைவாய் எழும் வேதனைகளையும் வெற்றுப்புலம்பல் என்று ஒதுக்கித் தள்ளுவது எங்ஙனம்?!

//அவசரத்தில் இரண்டு தவறுகளை அடுத்தடுத்து செய்துவிட்டு//

இரண்டு தவறுகள்??!!

'முதல்பாவம்' எது அண்ணா? உடலுறவு வைத்துக் கொண்டதா? இல்லை பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதா?

//குற்ற உணர்ச்சி மேலிட அழும் நாயகன் நிறைந்த எதார்த்த உலகத்தில் நாமெல்லாம் "வாழத்தான்" வேண்டியிருக்கிறது ... //

நாயகனும் அப்படி 'வாழத்தான்' வேண்டியிருக்கும் சூழலில் தன் இயலாமை நினைத்துப் புலம்புகிறான்... அவன் செய்தது சரியா தவறா என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை நான் எழுதவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டபின் அவனது குமுறலைத்தான் பதிவுசெய்ய முயன்றுள்ளேன்.

செந்திலண்ணாவுக்கும் ரதியக்காவுக்கும்...

மலையாளக்கவிஞன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் 'சிதம்பர நினைவுகள்' நூலில் உள்ள கலைக்கப்பட்ட தன் குழந்தைக்காக அழுதுபுலம்பும் அக்கவிஞனின் வேதனைவரிகளாலான கவிதையை
வாசிக்க வேண்டுகிறேன்

விந்தைமனிதன் சொன்னது…

எவ்வாறாயினும் சரி, நான் எழுதிய முதல் சிறுகதை (முதலில் முயன்ற 'எனவே எழுதுகிறேன்' சிறுகதையாய் எழுத நினைத்து கோணிக்கொண்டு போய்விட்டதால் ... இதுவே 'முதல்') நேர்மறையாகவோ இல்லை எதிர்மறையாகவோ விவதப் படுத்தப்படும் அளவுக்குப் பாத்திரமாய் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இன்னும் ஊக்கங்களுடன் தொடரும் விருப்பம் வருகிறது.

விந்தைமனிதன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
விந்தைமனிதன் சொன்னது…

கடமைக்காய்ப் பின்னூட்டுபவர் மத்தியில் ரதியக்கா, செந்திலண்ணன் போல் சிலர் ஆக்ஸிஜன் ஏற்றுகிறார்கள்.நன்றி உள்ளார்ந்து என்னைத் தொடர்பவர்களுக்கு

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

////'ஹ்ம்ம்ம்... இப்போது வெறுமே முத்தமிட மட்டும் தோன்றுகிறது. அவள் வலி குறைக்க வேண்டும்... எங்கே போனது என் வெறி? எங்கே போனது தகதகத்த தொடைகளின் மேலான மோகம்?'/////
நிச்சியமாக உணரப்படவேண்டிய வலி ,காதல் மட்டும் இல்லை காமமும்.

மதுரை சரவணன் சொன்னது…

கதை நல்லா இருக்கு ...வாழ்த்துக்கள்

...........enthisai.......... சொன்னது…

'உன்வலி மறந்து என்வலி நினைக்க எப்படி முடிகிறது என் கண்ணே?!' superb.

laavanya சொன்னது…

supperb writing...

பெயரில்லா சொன்னது…

en manthinil eruntha porattam entah nigalvai paditha piragu mari ullathu eruvarin santhosatthirgaka oru ethayam thudiku arampikum pothe erakkintrathu endrro thonriya kamaporattathirku pali oru pinchu kulanthain ethayamum sathaum mudinthal mananthu kollungal ellaiyeal uravu kolvathai niruthi kollungal yaro eruvar 10 nimidam pinnipinaiya avargal santhositharku paliyaga kulanthai vendam enium ethu thodara ventam
thavarugal erunthal mannikavum

Related Posts with Thumbnails