திங்கள், 20 செப்டம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 20/09/10(இந்திய உணவுக்கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் அழுகும் தானியங்கள்)

1) காலங்காத்தால கொல்லைக்குப் போயிட்டு வந்து ஜூனியர் விகடனைப் பொரட்டிட்டு இருந்தேன். உமாசங்கரைப் பத்தி கட்டுரை. பறிச்ச பதவிய திரும்பி குடுத்துட்டா அடங்குறதுக்கு அந்த மனுஷன் என்ன கரைவேட்டியா கட்டிட்டு திரியுறாரு? சும்மா கோயில்காள கணக்கா சீற ஆரம்பிச்சிட்டாரு. "ஆதரவு கொடுத்த அரசியல்வாதிகளையெல்லாம் சந்திப்பேன்" அப்டீன்னு பேட்டியெல்லாம் அனல் பறக்குது... தேர்தல் வேற பக்கத்துல வர்ற சூழ்நெல... எங்கே ஒருவேள தலித் மக்களோட ஓட்டெல்லாம் கைநழுவிடுமோன்னு ஆளுங்கட்சி கையப் பெசஞ்சிட்டே நிக்கிறதா கேள்வி. அந்த மனுஷன் நேர்மையாத் தானேய்யா தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தாரு? எல்லாருமே 'ஜிங்ஜிக்' மட்டும்தான் போட்டுட்டு இருக்கணும்னு எதிர்பார்த்தா என்ன கெதியாவும்னு இனியாச்சும் புரிஞ்சாச் செரி.
"அவளத் தொடுவானேன்... கவலப் படுவானேன்... கச்சேரி வாசல்ல கைகட்டி நிப்பானேன்?"

2) எல்லா அரசாங்கங்களுமே போராட்டங்களை ஒடுக்கனும்ங்கிற விஷயத்துல ஒரே மாதிரிதான் இருக்காங்க. சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தையும் (30.08.10) அதே மாதிரி ஒடுக்கியிருக்குற கருணாநிதி அடுத்ததா வீசுன அறிக்கைதான் மேட்டரே! "கம்யூனிஸ்ட்காரங்களுக்கு போராட்டம் நடத்துறதே பொழப்பாப் போச்சு! அவங்க வெச்ச கொள்ளிதான் மாவோயிஸ்ட்டு அளவுக்கு வளந்து கொழுந்துவிட்டு எரியுது... " அப்டி.. இப்டின்னு மூஞ்செல்லாம் செவந்து பொளந்து கட்டி இருக்காரு. திருக்குறளுக்கு உரை எழுதுனதெல்லாம் அவருக்கு மறந்துபோச்சு போல! அவரு அளவுக்கு இல்லன்னாலும் நம்மளும் நாலு திருக்குறள பள்ளிக்கோடத்துல படிச்சிருக்கோம்ல!

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்."


3) ஆயுதம் வாங்குனதுல ஊழல் பண்ணிட்டாருன்னு சொல்லி சரத் ஃபொன்சேகாவுக்கு 3 வருஷம் கம்பி எண்ணச் சொல்லி உத்தரவு போட்ருக்குதாம் இலங்கை ராணுவ நீதிமன்றம். அநியாயமா லட்சக்கணக்கான மக்களைக் கொன்னுபோட்டு, மிச்சமிருக்கிறவங்களோட வாழ்க்கையையே ஆயுள்காலச் சிறையா மாத்துன அரக்கத்தனத்துல சம பங்காளி இவரு. இந்த தண்டனை பத்தாதுன்னாலும் ராஜபக்ஷே குரூப்பு இத்தோட விட்ருவாங்கன்னா நெனக்கிறீங்க? சரி... ஃபொன்சேகாவுக்கு ஆப்பு எறங்கியாச்சு... அடுத்தடுத்து ராஜபக்க்ஷே அண்ட் கோ, நரித்தனமா சதிராடுன இந்திய அரசியல்வியாதிங்க இவங்கல்லாம்???

"தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" அப்டீன்னு பட்டினத்தார் பாடியிருக்காராம்!

4) "சீல இல்லன்னு சின்னாயி வூட்டுக்குப் போனா, அவ ஈச்சம்பாய கட்டிகிட்டு 'ஈ'ன்னு இளிச்சாளாம்". ஓட்டை பொட்டியிலயும், ஈரத்துணிய வயித்துலயும் போட்டுட்டு இருக்குற மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லன்னு கவுருமெண்டுகிட்ட போனா, அவங்க வீணாப் போனாலும் போவுமே தவிர, எலவசமா மட்டும் கொடுத்துற மாட்டோம்னு ஒத்தக் கால்ல நிக்கிறாங்க. கேட்டா கொள்கை முடிவு, லொட்டு லொசுக்குன்னு வியாக்கியான மசுரு.... எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம்! அது எப்டிடா பொருள்ளாம் வீணாப் போவும்? விஞ்ஞானம்ங்குறான், தொழில்நுட்பம்ங்குறான், இவ்ளோ கருமாந்திரம் இருந்தும் அரிசி, கோதுமைய மக்காம வெக்கிறதுக்கு வழியில்லையா... கெவுருமெண்டு அதையாச்சும் பண்ணலாமேன்னு வெசாரிச்சா....

தரமான, போதுமான அளவில் தானிய சேமிப்புக் கிடங்குகள் கட்டி பாதுகாப்பா வெக்க காசில்லையாம்பா! இப்ப மறுபடியும் பழமொழியப் படிங்க!

The government, which was designed for the people, has got into the hands of the bosses and their employers, the special interests.  An invisible empire has been set up above the forms of democracy.  ~Woodrow Wilson


5) இப்பல்லாம் ஸ்கூலு, காலேஜில படிக்கிற எல்லா பசங்களும் பொண்ணுங்களும் ரொம்ப சகஜமா சிரிச்சி பேசிட்டு போறத பாக்குறப்ப கொஞ்சம் பொறாமையா இருக்கு. பன்னெண்டு வருசம் முன்னாடி நான் படிச்ச கிராமத்து ஐஸ்கூலுல ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட ஒருவார்த்தையாவது பேசிட்டா அவந்தான் மாவீரன்.விஜயலட்சுமின்னு ஒரு பொண்ணு! மொதமொதல்ல ஸ்கூல்ல குட்டைப்பாவாடைய தைரியமா போட்டுக்கிட்டு காத்துல முடிபறக்க, தெத்துப்பல் தெரிய சிரிச்சுக்கிட்டே நொழஞ்சப்ப பசங்க மட்டுமில்ல, வாத்தியாருங்க வாயெல்லாம்கூட அலிபாபா குகை மாதிரி தொறந்தது மூடவேயில்ல! ரெண்டு வருசம் என்னோட க்ளாஸ்மேட். ஒரு வார்த்தை பேசியிருப்பேன்ங்கிறீங்க?! ம்ஹூம். ஒருநாள் கெமிஸ்ட்ரி லேப்ல பாதரசத்தைக் கொட்டிட்டு நான் முழிச்சப்ப கன்னத்துல லேசா தட்டிட்டு "பயப்படாத! சார்ட்ட சொல்ல மாட்டேன்! கூட்டிவிட்டுட்டு எஸ்கேப்பாயிடு!"ன்னு சொல்லிட்டுப் போயிடிச்சு! நமக்கு அதிர்ச்சியில நாலுநாளு ஜொரம்!

அ.முத்துலிங்கத்தோட கடன் அப்டீங்கிற கட்டுரைய படிச்சப்போ எனக்கு இதுதான் ஞாபகம் வந்துச்சு... ரொம்ப சில எழுத்தாளர்கள்தான் நம்ம தோளுல கையப் போட்டு, காதோட மென்மையா பேசுறமாதிரி எழுதுவாங்க. படிக்கவும், படிச்சிட்டு மனசுக்குள்ள அசைபோடவும் எதமா இருக்கும். அதுல அ.முத்துலிங்கம் முக்கியமான ஒரு எழுத்தாளர். ஈழத்தைச் சேர்ந்தவர்... இப்போ கனடாவுல இருக்கார்னு நெனக்கிறேன்.

6) வழக்கம்போல மனசுக்குள்ள மத்தாப்பு பத்தவெக்கிற மாதிரி ஒரு கவிதை! நீலமணி எழுதினது:

என்ன வரம் வேண்டும்
என்கிறார் கடவுள்
அது தெரியாத
நீர் என்ன கடவுள்?************************************************************************

8 பேரு கிடா வெட்டுறாங்க:

Cable Sankar சொன்னது…

நல்லாருக்கு..

நேசமித்ரன் சொன்னது…

எசமானே அவர் அ.முத்துலிங்கம் தான் ராமரை ஏன் சேத்தீங்க :)

வானம்பாடிகள் சொன்னது…

உள்நாடுல வறுமை, உலக வங்கிக் கடன். இந்த அழகுல உணவுப்பொருளை நாசம் பண்ணா வெளங்கீரும். கடைசிக் கவிதை சூப்பர்ப்

என்னது நானு யாரா? சொன்னது…

எல்லா மேட்டரும் டாப்பு நண்பா!

பழமொழிகளை எல்லாம் நல்லா தேர்ந்தெடுத்து போட்றீங்க அப்பு! எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு!

விந்தைமனிதன் சொன்னது…

நன்றி நேசன்.... முத்துலிங்கத்தோட கட்டுரை படிச்சிட்டு லிங்க எல்லாம் காப்பி பண்ணி வெச்சிட்டேன். அப்புறமா 'அசுரனோ'ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரப் பத்தின கட்டுரைய படிச்சிட்டு இருந்தேன்.(நீங்க அந்த கட்டுரைய படிச்சிருக்கீங்களா?) எழுதுறப்போ ஏதோ ஒரு விநாடி மூளைச்சிடுக்குல குழம்பிடுச்சி. எவ்ளோ பெரிய மிஸ்டேக்? நல்லவேளை கண்டுபிடிச்சி திருத்துனீங்க! ரொம்ப நன்றி நேசன்!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அந்த விஜயலட்சுமி இப்ப எங்க இருக்காங்க?...

முத்துலிங்கம் நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர் ....

Rathi சொன்னது…

//அந்த விஜயலட்சுமி இப்ப எங்க இருக்காங்க?...//

:)).

நாடாளும் ராஜாக்கள், மந்திரிகளின் கதை நன்று. ஐந்தாவது பந்தியில் காத்தாட மனசுவிட்டுப் பேசினதை ரசித்தேன்.

கவிதை அசத்தல். அது அப்படியே நம்ம ராஜா, மந்திரிகளுக்கு பொருந்துகிறது.

அண்ணாமலை..!! சொன்னது…

காத்தாடப் பேசுனது நல்லா இருக்கு!
கவிதை சுள்ளுன்னு இருக்குது!

Related Posts with Thumbnails