சனி, 19 பிப்ரவரி, 2011

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...19/02/11

உண்பது நாழி, உடுப்பது இரண்டு முழம் என்று விட்டேத்தியாய்த் திரிந்து விடத்தான் ஆசை! எங்கே முடிகிறது? முடிந்தவரை பொருளை இவ்வுலகிலும் அருளை அவ்வுலகிலும் தேடுவதே சிலாக்கியம் என்று உலகத்தோடு ஒட்ட ஒழுகுங்கால் கொஞ்சகாலம் ஊரில் கட்டாய ஓய்வு... நானும் என் நிரந்தரக் காதலியுமாக( ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் தான்!) ஊர்சுற்றிக் கொண்டிருப்போம். அப்படித்தான் பால்ய சிநேகிதன் தங்கராசுவையும் பார்த்தேன். "இப்படியும் கதை எழுதலாம்" என்று ஒரு கதை எழுதினேனே அதில் வரும் அதே தங்கராசுதான்! பயலுக்கு உடம்பெல்லாம் விஷமம். நாலைந்து எருமைமாடுகளையும், ஏழெட்டு ஏக்கர் நிலத்தையும் வைத்துக் கொண்டு... நிம்மதியான வாழ்க்கை! "மனுசப்பயலுவளக் கட்டி மேய்க்கிறத்துக்கு எருமைமாடு தங்கம்டா" என்பான். அன்றைக்குப் பார்த்து நான் சிக்குவேனா? டீக்கடைக்கு இழுத்துச் சென்று

"வேறென்னடா பங்காளி விசேசம்? மெட்ராசுல இருக்க, ஊரு விசயம், ஒலக விசயம்லாம் தெரிஞ்சி வெச்சிருப்ப..." என்று இழுத்தான்.

'பயல் ஆழம்பாக்க ஆரமிச்சிட்டாண்டா.. உட்றப்படாது' என்றெண்ணியபடி " அப்டில்லாம் ஒண்ணுமில்ல பங்காளி, ஒனக்குத் தெரியாத ஒலகமாடா இருக்கு" என்றேன்.

"எலேய்! ஊருக்குள்ளாற பெரிய படிப்பு படிச்சவன்னு கேட்டாக்க பெரீசா சில்லாப்பு காட்டுற, பீத்துணிய ஒளிச்சி வெச்ச புள்ளதாச்சிமாரி (இது ஒரு தனிக்கதைங்க!)..."

அன்றைக்கான சனியன் அந்த "படிச்ச" மேலேறி வந்ததெனக்கு!

"என்னடா ஒலகம் இது?  ஒனக்கு ஸ்பெக்ட்ரம் பத்தி தெரியுமாடா பங்காளி? அசராம ஆட்டைய போட்ருக்கானுவோ பாரேன்! ஆனாலும் உடலையே நம்ம சீபீஅய்யி, நோண்டி நொங்கெடுக்க ஆரமிச்சிட்டானுவோ பாத்தீல்ல. இந்த வேகத்துல போனாக்க இன்னம் நாலு மாசத்துல சார்ஜ் ஷீட்டு போட்ருவானுவோடா பங்காளி" என்றேன்.

'யப்பாடா! மாடு மேய்க்கிறவனுக்கு ஸ்பெக்ட்ரம் எங்க தெரியப்போவுது? தப்பிச்சோம்டா' என் நிம்மதிப் பெருமூச்சைப் பாதியிலேயே நிறுத்தவைத்தான் தங்கராசு.

"அட பொசகெட்ட பயலே! படிச்சுப்புட்டா ஒங்களுக்கெல்லாம் மூள பரதேசம் போயிடுமாடா? சீபீஅய்யாம் புண்ணாக்காம். போபர்சு ஊழல்லயே பணத்த யாரும் திருடல, காக்கா தூக்கிட்டு போயி வட வாங்கி தின்னிடிச்சின்னு சொல்லி முப்பது வருசம் கழிச்சு மூச்சப்புடிச்சி நிறுத்துனவனுவோடா இவனுவோ. அதுக்கப்புறம் எத்தினி பாத்துருப்போம். அர்சத்து மேத்தா, டான்சி, போபால் கேசு அது இதுன்னு எவனாச்சும் சேந்தாப்புல ரெண்டு வருசம் ஜெயில்ல இருந்தானுவளாடா. இந்த மசுரப்புடுங்கியளுக்கு மட்டும் நெஞ்சுவலி, குஞ்சுவலி எல்லாம் வந்துடும். அப்பால ஜாமீன்ல வந்து டிவிய பாத்து கையாட்டிக்கிட்டே போவானுங்க. எலேய், ஒண்ணு சொல்லுறேன் எழுதி வெச்சிக்கடா... இந்த நாட்டுல எந்த அரசியல்வாதியாவது ஊழல் பண்ணிட்டான்னு சொல்லி  அஞ்சு வருசம் ஜெயிலுக்கு போவட்டும்... நான் எருமைப் பாலுக்குப் பதிலா மூத்திரத்தை குடிச்சிக்கிறேன்" என்று நிறுத்தியவன் தொடர்ந்து சொன்னான்...

"மலைமுழுங்கி மகாதேவனுவளுக்கு கதவு ஒரு பப்படம்டா"

**********************************************************************
போனதடவை தாய்மாமா வீட்டுக்குப் போயிருந்தபோது ஏகப்பட்ட உபசரிப்பு... இள ஆட்டுக்கறி, இறால் குழம்பு, நண்டு வறுவல் என. 'உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு' மட்டுமா அழகு... என்ற கொள்கையில் ஏதோ கொறித்து வைத்தேன். கடுப்பாகித் திட்டிய மாமா சொன்னார் " ஏட்டி! நல்லவேளை நமக்கு பொட்டப்புள்ள இல்ல. இருந்திருந்து இவனுக்குக் கட்டிக் கொடுத்திருந்தா கஞ்சிக்கு செத்தவ மாரி தான் இருப்பா"

இந்தமுறை அத்தை மெல்ல தலையை நீட்டிக் கேட்டார் " என்ன சமைக்கட்டும்?'

"ஆமா... நீ சமைச்சிப் போட்டு இவன் தின்னுட்டாலும்..." நக்கலாகச் சொல்லிக்கொண்டே திடீரென்று ஒரு பழைய தமிழ்ப்பாட்டைச் சொன்னார்

"சற்றே துவையலரை, தம்பியொரு பச்சடிவை
 வற்றல் ஏதேனும் வறுத்துவை, குற்றமிலை,
 காயமிட்டு கீரைகடை, கம்மெனவே மிளகுக்
 காயரைத்து வைப்பாய் கறி!"

சிவஞானசுவாமிகள் பாடியதாம்! என்னை நக்கல் செய்யவும் தமிழ்ப்பாட்டு இருக்கின்றது என்று தெரிந்துகொண்டேன்.

*********************************************************************

"இவ்விடம் விசேஷத் திறமைகளுள்ள மிருகங்கள் விற்கப்படும்" என்று ஒரு ஷோரூம் வாசலில் எழுதி இருந்தது. பார்த்துவிட்டு உள்ளேபோனார் ஒருவர். குரங்குகள் பிரிவில் நான்கு குரங்குகள் வரிசையாகக் கூண்டுகளுக்குள் இருந்தன. முதல் குரங்கு இருந்த பெட்டியில் ரூ.10 லட்சம் என்றிருந்தது. "இது என்னென்ன செய்யும்?" என்றார் வந்தவர்.

"இது கட்டிடப் பொறியியலில் மிகச் சிறந்த திறமைகளைக் கொண்டது" என்றார் விற்பனைப் பிரதிநிதி.

இரண்டாம் குரங்கின் விலை ரூ.20 லட்சம் என்றிருந்தது.

"இது மருத்துவத்துறையில் அதி உயர் தொழில்நுட்பங்கள் தெரிந்த குரங்கு" என்றார் பிரதிநிதி.

மூன்றாம் குரங்கின் விலை ரூ.30 லட்சம்.

"கணிணி அறிவியல் தொழில்நுட்பத்தில் கரைகண்டது" என்றார்.

நான்காம் குரங்குக்கு விலை ரூ.50 லட்சம்.

"இது என்ன செய்யும்"

"இந்தக்குரங்குக்கு என்னென்ன தெரியும் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் இது தன்னை ஒரு கன்ஸல்டண்ட் என்று கூறிக் கொள்கிறது"..........

***********************************************************************

நாஞ்சில்நாடனின் "சூடிய பூ சூடற்க" படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கதையும் விதவிதமான உணர்வுகளை, அதிர்வலைகளைக் கிளப்பியபடி இருக்கின்றது. 'கும்பமுனி'யின் எள்ளல் பரமன் உடலில் விழுந்த பிரம்படியாக சமூகத்தின் எல்லா உறுப்புக்களையும் விலாசிக் கொண்டிருக்கின்றது. "யாம் உண்பேம்" கதை யாருக்கும் புரியாமல் எழுதும் இலக்கியவாதிகளைக் கேலிசெய்வதுபோல இருந்தது. மக்களைப் பேசாத இலக்கியம் என்ன மயிர்புடுங்கி இலக்கியம்? சங்கிலிப் பூதத்தான் படித்தபோது "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு" என்று வாழும் பெரிய மனிதர்களும் ஸ்விஸ் வங்கிகளும் நினைவிலாடியது. முன்னைவிட அதிகமாக நாஞ்சில்நாடனை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

**********************************************************************

கூகிள் பஸ்ஸில் கவிஞர் நேசமித்ரன் தான் ரசித்த மிக அருமையான கவிதைகளை அடிக்கடிப் பகிர்வார். சிலநாட்களுக்குமுன் அவரது பஸ்ஸில் படித்தது:

அவரைப் பார்க்க ஆசை

ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்

இடமும், பணமும் என
எல்லாமும் ஏற்கும் புரவலரோ

ஓடிப்போன
தன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி

- ச.முத்துவேல்

பின்குறிப்பும் வேண்டுகோளும் : நானும் என் நண்பன் பார்த்தசாரதியும் சேர்ந்து கதைவனம் (http://kathaivanam.blogspot.com/) என்ற புதிய வலைப்பூவினைத் துவங்கியுள்ளோம். முதல் சிறுகதையாக லாக் அவுட் பண்ணிட்டு வாக் அவுட் பண்ணு (வியாபாரச் சிறுகதைகள்-1) வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.


வியாழன், 17 பிப்ரவரி, 2011

ஸ்வர்ணா என்றொரு தேவதை

நீண்டதூரப் பேருந்துப் பயணங்களில் ஜன்னலோர இருக்கையும், "சார் என்ன பண்றீங்க" ரீதியில் ஆரம்பித்து உயிரை எடுக்காத, தொந்தரவற்ற பக்கத்து இருக்கைப் பயணியும் வாய்க்கப்பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ரகுநாதன் அன்று கொஞ்சம் விசேஷமாகவே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்... முன்னிருக்கையில் அடர்த்தியான கூந்தலில் கதம்பச்சரம் சூட்டி அமர்ந்திருந்தவளின் ஒன்றிரண்டு முடியிழைகள் முகத்தில் உரசப்பெறுவதன் மூலம்! ரகுநாதனுக்குக் கவிதை எழுதும் உந்துதல் வந்தது... ஸ்வர்ணலக்ஷ்மியின் நினைவுகளும்.

ஸ்வர்ணலக்ஷ்மி பதினொண்ணாங்கிளாஸ் அட்மிஷனுக்காக நுழைந்தபோது மொத்த ஸ்கூலுமே "கால் கண்டார் காலே கண்டார்! தோள் கண்டார் தோளே கண்டார்" என்று பார்த்தவிழி பூத்து நின்றது.வாத்தியார், பையன்கள் என்ற வித்தியாசங்கள் மறைந்து சகலரும் ஜோதியில் ஐக்கியமாகி இருந்தனர்.

கால்விரல்கள்கூடத் தெரிந்துவிடாதபடிக்கு சர்வஜாக்கிரதையாய் அசைந்துவரும் தாவணிகளை மட்டும்தான் அவன் கண்டிருக்கிறான்.
கணுக்கால் தெரியும் மினிஸ்கர்ட், வினோதமான மேல்சட்டை, சுமார் மூன்றடி நீளத்தில் காற்றில் கொஞ்சிக் கொண்டிருக்கும் கூந்தலை அடிக்கடி சரிசெய்யும் நீண்ட மெல்லிய விரல்கள்... இத்யாதி,இத்யாதி! ஆற்றில் வலைக்குச் சிக்காமல் துள்ளி நழுவும் கெண்டைமீன் போல கண்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஸ்வர்ணாவுக்கு. நொடிக்கு மூன்றுதரம் சிரிக்கும் வித்தையை எங்கிருந்துதான் கற்றாளோ! சாயங்கால வெயில் மாந்தளிரில் பட்டால் ஒருமாதிரி மின்னுமே, அதுபோல வெளுப்புமில்லாமல் மாநிறமும் இல்லாமல் ஒரு நிறம் அவளுக்கு... ராட்சஸி!

கூடப்படிக்கும் பெண் எவளாவது லேசாகத் திரும்பிப் பார்த்தாலே அடுத்தநாள் சுவரிலோ போர்டிலோ இன்னாருக்கும் இன்னாருக்கும் லவ்வு எனக் காவியம் படைக்கும் கிறுக்குப்பயல்கள் ஊர் அது. ஸ்வர்ணலக்ஷ்மியோ முழுக்க முழுக்க ஸ்நேகம் ததும்பி நின்றாள். எல்லோருக்கும் ஒரு சிரிப்பு... ஒரு தொடுகை... ! பையன்கள் அவ்வப்போது லீவ்லெட்டர் கொடுப்பதற்காகவே ஸ்டாக் வைத்திருக்கும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி இன்னபிற வியாதிகள் எல்லாம் ஸ்வர்ணலக்ஷ்மி வந்தபின் மாயமாய்ப் போயின... தேவதைகள் சொஸ்தப்படுத்துவதற்காகவே அவதரிக்கின்றனர் போலும்!

ஏகப்பட்ட பையன்கள் தப்பும் தவறுமாய் காதல்கடுதாசிகளை விதம்விதமாக எழுதிக்குவிக்க ரெண்டுகுயர், மூணுகுயர் நோட்டெல்லாம் இளைத்துத் துரும்பாய்ப்போன கொடுமையெல்லாம் நடந்தேறின. பனிரெண்டாவதுக்கு கெமிஸ்ட்ரி வகுப்பெடுக்கும் பாலமுருகன் வாத்தியாரும் கைநோக லெட்டர் எழுதியதாகச் செவிவழிச் செய்திகள் உண்டு! எல்லாக் கடுதாசிகளையும் சின்னப்புன்னகையாலும் "சேச்சே! நான் உன்ன லவ்வெல்லாம் பண்ணலடா" என்று ஒற்றைவாசகத்துடனும் எளிதாகக் கடந்து கொண்டிருந்தாள் ஸ்வர்ணா. 'சிரிச்சி சிரிச்சி பேசறா... அப்புறம் ஏன் லவ்வு பண்ணலங்கிறா?' என்ற கேள்வி, ஒதுக்கி வீசப்பட்ட பாடப்புத்தகங்களைக் கரையான் அரிப்பதுபோல ஒவ்வொருத்தனையும் அரித்துத் தின்றது. காதல் துளிர்க்கப்பெற்றவர்களும், காதல் மறுக்கப்பட்டவர்களுமாக ஏகப்பட்ட புதுக்கவிஞர்கள் பிறப்பெடுத்தனர். மொத்தத்தில் "எங்கெங்கு காணினும் ஸ்வர்ணாவடா" என்றாகிப்போனது.

ஒண்ணாங்கிளாசிலிருந்து கூடப்படிக்கும் பெண்களிடம் பேசியறியாத ரகுநாதனுக்கு ஸ்வர்ணா அவனிடம் வந்து எது பேசினாலும் ஏதோ மந்திர உச்சாடனம்போல இருந்தது. "ஹோம் வொர்க் முடிச்சிட்டியாடா?" என்று கேட்டால்கூட மிதத்தல், பறத்தல் போன்ற அதிமானிட வேலைகளெல்லாம் செய்ய ஆரம்பித்தான். ஒன்றரை குயர் நோட்டு முழுக்க "அன்பே ஸ்வர்ணா!ஆருயிர் செய்யுதடி உன்னால் தர்ணா" என்று ஆனாவுக்கு ஆவன்னா, ணாவன்னாவுக்கு ணாவன்னா எல்லாம் போட்டு படுஜோராகக் கவிதை எல்லாம் எழுதத்தான் செய்தான். ஆனால் ஸ்வர்ணாவிடம் பேசித் தொலையும்போது மட்டும் நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு சதிவேலை செய்யும். நாலு பசங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கதைபேசத் தொடங்கினால் ஸ்வர்ணாவுக்கு என்ன பிடிக்கும், ஸ்வர்ணா நாளைக்கு என்ன ட்ரெஸ்ஸில் வருவாள், ஸ்வர்ணாவின் அண்ணன் ஏன் இவ்வளவு தடியாக ராட்சசன் மாதிரி இருக்கிறான் என்பது போன்ற விவரங்கள் அலசி ஆராயப்பட்டன.

ஸ்வர்ணாவுக்கு மொத்த ஸ்கூலுமே தன்னைச் சுற்றி இயங்கி வருவதெல்லாம் ஒரு விஷயமாகத் தோன்றவே இல்லை. வந்தாள்... சிரித்தாள்.. பேசினாள்..சிரித்தாள்.. படித்தாள்..சிரித்தாள்..ஹோம்வொர்க் செய்தாள்..சிரித்தாள்...ஹோம்வொர்க் செய்யாமல் திட்டு வாங்கினாள்..சிரித்தாள்.. இன்னும் தாள்..தாள்..தாள்! அழகான பெண்களுக்கு அறிவு என்பது ஆட்டுக்கு வால்போல என்ற தொன்மொழிகளெல்லாம் ஸ்வர்ணாவுக்கு செல்லுபடியாகாது. ஹெட்மாஸ்டர் பஞ்சாபகேச அய்யருக்கு ஸ்வர்ணா என்றாலே ஒரே பூரிப்புதான். ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்த்து வயிறெரிந்தவர்கள் சுதந்திரதினக் கலை நிகழ்ச்சிகளில் பாரதமாதா வேஷம் கட்டியபோது குளிர்ந்துபோனார்கள். "பாரதி கனவில் வந்த" கவிதையைப் படித்தபோது தமிழ்வாத்தியார் வாயில் எத்தனை பல் சொத்தைப்பல்லென்ற நெடுநாள் சந்தேகம் தீர்ந்துபோனது.

இப்படியான பிரக்யாதிகள் கொண்ட ஸ்வர்ணா ரகுநாதனையும் நண்பனாக ஏற்றுக்கொண்டதற்கு பாட்டன் முப்பாட்டன் உள்ளிட்ட பரம்பரையே பூர்வஜென்ம புண்ணியங்கள் செய்திருப்பதாகக் கருதிக் கொண்டான் ரகுநாதன். ஒருவழியாகப் ப்ளஸ்டூ பரிட்சை முடிவுகளும் வெளிவந்து மார்க் ஷீட்டும், கையுமாக "போயிட்டு வரேண்டா" என்று சொல்லி ஸ்வர்ணா விடைபெற்றபோது "ராசாத்தீ... ஏம் உசிரு என்னதில்ல..." என்று பக்கத்து ஆடியோகேசட் கடையிலிருந்து ஷாகுல் ஹமீது உருகிக் கொண்டிருந்தார்.

"வெளங்காமுட்டி பய.. ஒழுங்கா படிடான்னு கழுதமாரி கத்தியும்.... பாருடி ஒம்புள்ளையை! தொள்ளாயிரத்தி அம்பது மார்க்கோட பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருக்கு. எம்மவன் டாக்டருக்கு படிக்கப்போறான்னு நானும் ஊரெல்லாம் பீத்திக்கிட்டு வந்ததுக்கு இதான் லட்சணம்..."
கத்திக் கொண்டிருந்த அப்பாவுக்குத் தெரியுமா ஸ்வர்ணா சிரிப்பால் களவாண்டு போன மார்க்குகள் ஒரு நூத்தம்பது இருக்குமென்று? அவரவர் பாடு அவரவர்க்கு... அவரவர் கவலை அவரவர்க்கு.

காலம் ரகுநாதன் கையில் ஒரு எஞ்சினியரிங் பட்டத்தையும், அவன் தகப்பனாருக்கு நான்குலட்சம் கடனையும் பரிசாகத் தந்ததும், இடையில் அவனது வாழ்க்கையில் சுமார் மூன்று ஒருதலைக் காதல்களும் இரண்டு இருதலைக் காதல்களும் கடந்துபோனதும், ஒவ்வொரு காதல் கடந்து போகும்போதும் ஸ்வர்ணாவின் முகம் மின்னிப் போனதும், முப்பதாயிரம் மாதவருமானமும் முன்னந்தலை வழுக்கையுமாக முதிர்கண்ணனாகி நின்ற ரகுநாதனுக்கு கல்யாண மார்க்கெட்டில் நல்ல விலைபடிய பேரம் பேசப் பட்டுக் கொண்டிருப்பதுமாக சுமார் ஒரு மாமாங்கம் ஃப்ளாஷ்பேக்கை விரித்துச் சொன்னால் கோடிபெறும்.

என்றாவது ஒருநாள் கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்கும், பழங்கதைகளும், கொசுவர்த்திக் கொளுத்தல்களுமாகக் கூடிக்கலையும் நண்பர்குழாத்தின் பேச்சுக்களின் இறுதிப்புள்ளி சுற்றிச்சுற்றி ஸ்வர்ணாவில் வந்துநின்று சின்ன மௌனத்துடனும் பெருமூச்சுடனும் முடிவுபெறுவதும் வாடிக்கை. அப்படித்தான் ஒருநாள் அந்த அரிய பெரிய தகவலைக் கண்டுபிடித்து வந்து சொன்னான் ஆரம்பப்பள்ளி ஆசிரியனாகக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் தங்கபாண்டியன்... "டேய் ஸ்வர்ணா ஊருக்குப் போயிருந்தேன். அவ தஞ்சாவூர்ல பிஎஸ்ஸி படிச்சிட்டு இருந்தப்பவே ஒரு பையனோட லவ்வாம்... ஃபைனல் இயர்ல பிரச்சினையாகி அந்தப் பையனோட ஓடிப்போயிட்டா. இப்போ அவ கோயம்புத்தூர்லதான் இருக்காளாம். புருஷன் ஆடிட்டரா இருக்கார்போல. நல்லா செட்டிலாயிட்டா. ரெண்டு குழந்தைங்க பொறந்தப்புறம் வீட்டுலயும் ராசியாயிட்டாங்களாம். அவளும் எம்பிஏ முடிச்சிருக்காளாம்" என்றபோது அரிஸ்டாட்டில் 'யுரேகா' சொல்லி ஓடிக் கொண்டிருந்தபோது அடைந்திருந்த உணர்ச்சிகளை அவன் முகத்தில் காண முடிந்தது. அப்போது முடிவு செய்தான் ரகுநாதன் எப்படியாவது ஒருதடவை ஸ்வர்ணாவைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதென்று.

ஒருவழியாக ஸ்வர்ணாவின் கோயம்புத்தூர் முகவரியைக் கண்டுபிடித்து ஒரு சுபமுகூர்த்த சுபநாளில் கோயமுத்தூருக்கு ஆம்னி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்ததுதான் ஆரம்ப பாராக்களுக்கு அடிப்படை. ஒருவழியாக சிங்காநல்லூரில் இறங்கி அட்ரஸ் விசாரித்துக்கொண்டு காலிங்பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது பத்து விநாடிகளுக்குள் பதினைந்துமுறை வியர்த்திருத்தான்.

"யாரு" என்றபடியே கதவைத் திறந்த ஸ்வர்ணா லேசாகப் பூசினாற்போல இருந்தாள். ஆடிமாசக்காவேரிபோல் அலைபாய்ந்திருந்த கண்களில் மார்கழிமாச அகண்டகாவேரிபோல அமைதியும் ஆழமும் நிறந்திருந்தன. அதே ஸ்வர்ணா! இன்னும் ஸௌந்தர்யமாக...

"நீங்க...நீ... ஹேய் ரகுதான! என்னடாது? வானத்துலருந்து குதிச்சமாதிரி திடீர்னு வந்து நிக்கிறே?" ஆச்சர்யமாக வரவேற்றாள்.

"சும்மாதான்பா. கோயமுத்தூருக்கு வேலையா வந்தேன். பசங்ககிட்ட பேசிட்டு இருந்தப்போ நீ இங்கதான் இருக்கிறதா சொன்னாங்க. அதான் அப்பிடியே உன்னைப் பாத்திட்டு போகலாம்னு.."

அதே சிரிப்பு! "தாங்க்ஸ்டா! ஸ்கூலுக்கு அப்புறம் நம்ம க்ளாஸ்மேட் யாரையுமே பாக்கலை. மொதமொதல்ல உன்னைத்தான் பாக்குறேன்"

பேசினாள்..சிரித்தாள்..பேசினாள்..சிரித்தாள்...புருஷன் பற்றி... குட்டி ஸ்வர்ணா பற்றி... சாகசங்கள் நிறைந்த அவளது காதல்கதை பற்றி... எப்போது பார்த்தாலும் இங்கிலீஷில் பீட்டர் விடும் ஃபிஸிக்ஸ் வாத்தியார் பற்றி... காதலித்தே ஆகவேண்டும் என்று கெஞ்சி காலில் விழுந்த பனிரெண்டாம் வகுப்பு குமாரசாமி பற்றி.. இன்னும் ஏதேதோ.

புருஷனுக்கு ஃபோன் பண்ணி அவனிடம் கொடுத்தாள். ஸ்வர்ணாவிடம் இருந்து சிரிப்பையும், வழியும் அன்பையும் கடன்வாங்கியனைப்போலவே அவரும் பேசினார். ஹ்ம்ம்.. கொடுத்து வைத்த மனிதன்! மதியம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அவள் புருஷன் சொல்ல, அவனும் தலையாட்டினான். சாப்பாடு முடிந்து "நான் கெளம்பறேன் ஸ்வர்ணா! நேரமாச்சு" என்று எழுந்தவனிடம் "இருடா! கொஞ்சநேரம் பேசிட்டுப் போ! அவருக்கு ஆஸ்திரேலியா விசா அப்ரூவ் ஆயிடிச்சு. அடுத்தமாசம் ஃபேமிலியோட கெளம்பிடுவோம். ஆமா உனக்கு எப்படா கல்யாணம்?" என்றாள்.

"பார்த்துகிட்டு இருக்காங்க ஸ்வர்ணா. கூடிய சீக்கிரம் ஆயிடும்னு நினைக்கிறேன்" என்றபடி இன்னும் அரைமணிநேரம் ஓடிப்போனது. ரகுநாதன் ஸ்வர்ணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

கதவைத் திறக்குமுன் "ரகு... ஒரு நிமிஷம்" என்ற ஸ்வர்ணா லேசாக அவன் முன்னுச்சி மயிரைக் கலைந்திட்டு அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுச் சொன்னாள்.

"நீ என்னை லவ் பண்ணேனு எனக்கு தெரியும்டா. உன்னோட காதலுக்கு இதான் என்னோட கிஃப்ட். சரி போயிட்டு வாடா. ஆஸ்திரேலியா போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்றேன். மறக்காம ஏர்போர்ட் வந்திடு" என்று கதவைத் திறந்தாள்.

வெளியேவந்து ஆட்டோ பிடித்து ரயில்நிலையம் வந்து சீட் சரிபார்த்து அமர்ந்த ரகுநாதனுக்கு ஏனோ கொஞ்சம் அழவேண்டும் போலத் தோன்றியது... கவிதை எழுத வேண்டும் போலவும்...

இந்தக் கதையின் கவிதை வெர்ஷனை அண்ணன் கேஆர்பி காதல்கடுதாசி என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். இங்கே பாருங்களேன்.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

ப்ரிய ஜெனீ....

ப்ரிய ஜெனீ,
கடிதங்கள் தீண்டாத் தொலைவில் இருந்து என்னை எப்போதும் எழுதவைத்துக் கொண்டிருக்கும் என் சகீ! என் முடிவுறாப் பயணம் முழுதும் நான் தேடிக் கொண்டிருப்பது தொலைந்துபோன உன் பிம்பம்தான் என்பதை நீ அறிவாயா? காற்றுவெளியெங்கும் கிளைத்துக் கொண்டிருக்கின்ற என் விழுதுகள் உன் அன்பின் ஈரம் தேடியபடியே! அந்தியில் கருத்தரித்த மென்பனித்துளிகளை ஒன்றோடொன்று காதலோடு உரசிக் கொண்டிருக்கும் மெல்லிலைகளிலும், புல்லிதழ்களிலும் பிரசவித்தபடி மெல்லமாய் நகர்ந்துகொண்டிருக்கும் நள்ளிரவு உன் காதலின் வாசனையைப் பரவவிட்டபடி என்னை அணைத்துக் கொண்டிருக்கின்றது. நாம் நம்மோடு கலந்திருந்த நாட்கள் நட்சத்திரங்களாய் மாறிச் சிதறிக்கிடக்கின்றன. நினைவுகளை மூட்டையாய்ச் சுமந்தபடி வசந்தம் கடந்துசென்ற பாதையில் அடியொற்றி நடக்கிறேன்.

அன்பே ஜெனீ,
"நாம் பிரிந்தபோது கண்ணீரும் அமைதியும் மட்டுமே இருந்தன" என்றொரு வாசகம் படித்திருக்கின்றேன். நாம் பிரிந்தபோது கூடுதலாய் இன்னொன்றும் இருந்தது... மிச்சமிருந்த காதலும்! இல்லையா? என் தொடைகளில் கைதாங்கி, மார்பினில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாய் நீ! தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆட்டுக்குட்டிக்கும் உனக்கும் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடித்தவாறு இருந்தேன் நான்! பிரிவின் வாசகங்களுக்கு ஒத்திகை பார்த்தபடி வார்த்தைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தோம் நாம்! உறைந்திருந்த காலத்திலிருந்து வழிந்துகொண்டிருந்தது உளிச்சத்தம்... 'நமது' என்றிருந்தவற்றையெல்லாம் 'எனது' என்றும் 'உனது' என்றும் செதுக்கியபடி... ஆனாலும் எனக்குப் புரிபடவில்லை 'நமக்கு' என்றிருந்த கற்பனைக் குழந்தையைக் காணாமலடிப்பது எப்படியென்று!

ஜெனீ,
நிலவைத் தொலைத்துத் தனித்திருந்த கரிய இரவொன்று என் ஸ்நேகம் தேடி வந்தபோது, "அப்படி என்னதான் இருக்கோ இந்தக் கருமத்துல" என்று இருமிக்கொண்டே முதலும் கடைசியுமாய் நீ புகைத்த சிகரெட் துண்டு சுமந்து கொண்டிருக்கும் உன் இதழ்ரேகைகளைக் கோர்த்து நான் எழுதிக் கொண்டிருந்தேன் எனது கானல்வரிகளை... முன்னம் நீ கைகோர்த்திருந்த விரல்களைக் கதறக்கதறத் தேய்த்துக் கிழித்துக் கிழித்து எழுதிக் கொண்டிருக்கிறேன் இறந்துபோன ஒரு காதல்கதைக்கான அஞ்சலிக் குறிப்புக்களை...காதலை எப்படிக் காகிதங்களுக்குள் உறையச் செய்வது என்றும்...என் குருதியை திராட்சைரசமாகவும், என் உடலத்துணுக்குகளை அப்பமாகவும் நம் காதலுக்கான இறுதி விருந்தென நீ பரிமாறிச் சென்ற பொழுதுகளின் இடைவெளியினின்றும் கசிந்துகொண்டிருக்கும் வார்த்தைகளைக் கோர்த்தெடுத்தபடியும்...

தேவதா ஜெனீ,
காய்ந்து கரைந்துபோன ஆற்றின் தடம்பிடித்து ஒற்றையாய் நடந்துகொண்டிருக்கும் பயணத்தினூடே மனதின் தகிப்பைக் கண்களின்வழி வழியவிட்டுப் பாடிப்போகிறேன் ஒரு ஒப்பாரிப்பாடலை... காதல் சுமந்த கணங்கள் காணாமல்போனபின்பு எனதுடலைச் சுமக்கும் கனம் என்னை அழுத்தியபடித் தள்ளாடித் தொடரும் பயணத்தின் இறுதிப்புள்ளியைத் தேடிக்கொண்டும்...

ஜெனீ... என் குட்டிப் பிரபஞ்சமே,
பிரசவிக்கப்படாத நம் குழந்தையைப்போலவே உறைகிழிக்கப்படாமலேயே இற்று உதிர்ந்துபோவதற்காக எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த முற்றுப்பெறாத கடிதத்தில்....

( கடந்துபோன காலங்களின் நினைவுகளைக் கண்ணீரால் கழுவிவிட்டுக் கொண்டிருக்கும் நண்பனின் கத்தை கத்தையான காதல் கடிதங்களையும், கதைகளையும் "ரகுநாதனின் டைரிக் குறிப்புகள்" என்ற பெயரில் தொகுப்பாக வெளியிடலாம் என்று உத்தேசித்து உளுத்துப்போன அவனது பழைய பையை பீராய்ந்தபோது கிடைத்த இந்தக் கடிதத்தின் இரண்டாம் பாகமாக ஜெனீ அவனுக்கு எழுதப்போகும் பதில்கடிதத்தை வெளியிடலாம் என்று உத்தேசம்...)

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இப்படியும் கதை எழுதலாம்


காலையில் கருவத்தோப்புக்குப்போய் வெளிக்குப்போக உட்கார ஆரம்பித்தபோது பிடித்தது இந்தச்சனியன். ஒற்றைவரி மட்டும் தொண்டைக்குள் சிக்கி அதைக் கவிதையாக மாற்றவேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததில் 'வந்த' காரியமும் சரியாகக் கைகூடாமல் போனது.'ப்ளாக் எளுதி ஒரு மாசம் ஆகப்போவுது. ஒரு கவிதய கிறுக்கிப் போடலாமுன்னா பாத்தாக்கா ம்ஹூம்...ஏற்கனவே எளுதிவெச்ச ஒரு கட்டுரையும் பாதிலயே நிக்கிறதுதான் மிச்சம்...'

'எளவு...இந்த ப்ளாக் எளுத எந்த எமகண்டத்தில ஆரமிச்சோமின்னே தெரிய மாட்டேங்குது. ஒவ்வொரு பதிவ எளுதுறப்பையும் மூலம் வந்தவன் மாரி முக்கித் தொலைய வேண்டியிருக்கு. ஆட்டாம்புளுக்கை அளவுக்குக்கூட வந்து தொலைய மாட்டேங்குது. நாமெல்லாம் என்னத்த எளுதிக்கிளிச்சி... பொஸ்தகம் போட்டு... வெளங்கிரும்'

விரக்தி மூளையைத்தின்ன இருபத்தி எட்டாவது முயற்சியாக உதைத்தும் ஸ்டார்ட் ஆகித் தொலைக்காத கட்டபொம்முராசா காலத்து (எத்தனை காலம்தான் 'ஹைதர்காலத்து' என்று க்ளிஷேத் தனமாக எளுதித் தொலைப்பது!) பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு சிகரெட் பாக்கெட்டை வெளியே எடுத்தேன்.

"எலேய் ராசாராமா! நல்லாருக்கியாடா"

சட்டென சத்தம் கேட்டுப் பதறியதில் கோல்ட் ஃப்ளேக் கிங்க்ஸ் சிகரெட்டை எதிர்காற்றுக்கு அணையாமல் பற்றவைக்கும் முயற்சி சிதறிப் போனதில் எரிச்சலாகித் திரும்பினேன்.

ஏற்றிக்கட்டிய முண்டாசும், தோளில் மண்வெட்டியுமாக நான்கைந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்திருந்த தங்கராசு உற்சாகமிகுதியில் கத்திக்கொண்டு வந்ததைப் பார்த்தவன் சட்டென மலர்ந்தேன். எட்டாப்புல இருந்து பன்னெண்டாப்பு வரை கூடப்படிச்சவன். பன்னெண்டாப்புல பிஸிக்ஸு பிச்சிக்கிச்சி, கணக்கு பிணக்காச்சி என்று மண்வெட்டியைத் தூக்கியவன்.

"நான் நல்லாருக்கேண்டா பங்காளி. நீ எப்டி இருக்க? எங்கேருந்துட்டுடா வார"

"ஆமா... களுத கெட்டா குட்டிச்செவரு...மம்பட்டிய தூக்கிக்கிட்டு மவராசா வேலக்காடா போவப்போறேன். வாய்க்கா தூந்துபோயி கெடந்திச்சி. அதத்தான் வெட்டி உட்டுட்டு வாரேன். அது கெடக்கட்டு... நீ என்னமோ மெட்ராசுல இருக்கறதாவுல்ல நம்ம பயலுவோ சொன்னானுவோ! அங்க என்னடா பண்ணிட்டு இருக்க? எதாவது சம்பாத்தியம் இருக்கா... இல்ல அங்கயும் கோமாளித்தனம் பண்ணிட்டு திரியிறியா?"

"என்ன பங்காளி இப்படி கேட்டுப்புட்ட? நான் மெட்ராசுல பிசினஸ் பண்ணிட்டு இருக்கேண்டா." மனதுக்குள் திட்டிக்கொண்டே சொன்னேன்.

"என்ன எளவோ போ. காசுக்குப் புடிச்ச கேடு. ங்கொப்பாரு ரயில்வேயில மட்டையடிச்சி எஞ்சினீருக்கு படிக்கவெச்சாக்க நீ என்னடான்னா பிசினசு பண்றேன் பெருங்காயம் பண்றேன்னு திரியிற"

'இன்றைக்கு இவன் வாயைக் கொஞ்சம் பிடுங்குவோம்...ஏதாச்சும் கிராமத்துக் கதையாவது தேறும்' என்று நாக்கையும் காதையும் தீட்டிக்கொண்டேன்.

"சரி சரி... அத உட்றா பங்காளி.. இந்த வருசம் சாவடியெல்லாம் எப்டிடா ஏதாச்சும் தேறுமா?"

"இந்தா... அந்த வயித்தெரிச்ச கதையெல்லாம் ஏண்டா கேக்குற? வார்டு மெம்பர்லேருந்து மந்திரிமாரு வரைக்கிம் நம்ம தாலியத்தாண்டா அறுக்கிறானுவோ. ஆத்துல தண்ணியக் காணோம். அப்பிடியே வந்தாலும் வாய்க்கால்ல கன்னுக்குட்டி மூத்திரம் அளவுக்குக் கூட காங்கல. வாய்க்கா வெட்டின காண்ட்ராக்டரு முத்துசாமி இப்போ ரெண்டாவது மாடி கட்டிக்கிட்டு இருக்கான். இந்த வருசம் வெள்ளக்காடு. ஒண்ணும் மிச்சமில்லாம அளுகிப்போச்சுடா. இந்தப்பயலுவோ என்னன்னாக்கா ஏக்கருக்கு ரெண்டாயிரம் பிச்சை போடுறேங்கிறானுவோ.. ஆமா என்னடா இதெல்லாம் ரொம்ப அக்கறையா விஜாரிக்கிறே?"

"ஹி..ஹி... ஒண்ணுமில்ல பங்காளி. நா இப்பல்லாம் இண்டர்நெட்ல கொஞ்சம் எளுதிட்டு இருக்கேன். அதான் நம்ம நாட்டைப் பத்தி ஒரு கட்டுரைய எளுதிப்போடலாம்னு..."

"எலேய்! இந்த பித்துக்குளித்தனத்த நீ இன்னும் உடலையாடா? ஏண்டா எட்டாப்புல அந்த ரேவதி புள்ளைக்கு கவிதையோ கருமாந்திரமோ ஒரு கடுதாசிய எளுதி நீட்டி, நம்ம மூக்குறிஞ்சான் வாத்தியாரு முட்டிக்கிக் கீளயே சாத்தி எடுத்தாரே... அப்பயே நீ இதையெல்லாம் மூட்டை கட்டி இருப்பேன்னுல்ல நெனச்சேன். எலேய் ஒண்ணு சொல்றேன் நல்லதுக்குக் கேட்டுக்க.. ஒளுங்கா காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி சம்சாரியா குடுத்தனம் நடத்துற வளியப் பாரு.. இப்பவே ஊர்ல ஆளாளுக்கு ரயிலு மொவன் கிறுக்கனாத் திரியிறானாம்லன்னு கேக்க ஆரமிச்சிட்டானுவோ... பாத்துக்க"

'ச்சை... ஒரு எழுத்தாளனின் பெருமை ஏன் எப்போதும் உள்ளூருக்குத் தெரிவதில்லை? ஹ்ம்... சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?'

"சுட்ட சட்டி சட்டுவம்..." அட இது நல்ல தலைப்பா இருக்கே! பேசாம இப்பிடியே ஆரமிச்சிடலாமே!' கொஞ்சூண்டு உற்சாகம் வந்தது. சரி சரி... இந்தப் பயலை உட்றப்படாது... இன்னும் கொஞ்சம் கிண்டித்தான் பார்க்கலாமே!

"எலேய் ஆக்கங்கெட்ட கூவை! எளுத்துடா எளுத்து. களுதைக்கு தெரியுமாடா கற்பூரவாசனை? நாங்கல்லாம் சமூகத்தோட மனச்சாட்சிடா. எவ்ளோ கஸ்டப்பட்டு ஒண்ணொண்ணையும் எளுதிட்டு இருக்கோம்... நீ என்னடான்னா இப்பிடி அசிங்கப்படுத்திட்ட... "

"கிளிச்சீங்க. எளுதுனவன் ஏட்டக் கெடுத்தான் பாடுனவன் பாட்டக் கெடுத்தான். போக்கத்தப் பயலுவளா. எலேய் நாங்களும் பன்னெண்டாவது வரைக்கிம்  படிச்சவங்கதாண்டா. உங்க லெச்சணம் தெரியும்டா. நாலு பக்கம் எளுதிட்டு வாரவன் போறவனையெல்லாம் இளுத்து வெச்சிப் படிக்கச் சொல்லி உசுரை வாங்குவீங்களே. இந்த எளுத்தாளப் பயலுவளையெல்லாம் நாஞ்சாவறதுக்குள்ள ஒருநாளு இளுத்தாந்துவெச்சி சேத்து ஒழவு ஓட்டச் சொல்லிறணும்டா. நீங்க பாட்டுக்கு கண்ட கருமாந்திரத்தையும் எளுதிடுறீங்க... படிக்கிற பயலுவபூராம் மந்திரிச்சி உட்ட கோழி கணக்கா திரியிறானுவ. இந்தா பாரு... எவனோ ஒருத்தன் தாடியெல்லாம் வெச்சிட்டு சாமியார் கணக்கா எளுதுறானே... பேருகூட என்ன எளவோ வரும் ராசகுமாரனோ... மந்திரிகுமாரனோ... எம்பொண்டாட்டி அதைப் படிச்சிட்டு விடியவிடிய அவங்கதையில வார புருசனுவ மாரி சரிசமமா வெச்சி பேசமாட்டேங்கிறேன்னு பாயச் சொரண்டுறா... அப்பறம் யாரோ சங்கரநாராயணனாம்ல... அந்தாளுக்கு வேற உருப்படியா வேலக்களுத இல்லையாடா... ஏதோ ஒரு கதையில சாரதான்னு ஒரு குட்டியப் பத்தி எளுதிட்டாராம்ல...சுருட்டமுடியும் குட்டப்பாவாடயுமா... கட்டுனா அந்தமாரி ஒருத்தியத்தான் கட்டுவேன்னு நம்ம செட்டியாரு ஊட்டு எளங்கோவன் ஒத்தக்கால்ல நிக்கிறானாம். ஹூம்... குண்டி களுவத் தெரியாம கெடந்த பயலுவபூரா என்னமா ஆயிட்டானுவ!..."

'அய்யய்யோ!  வேலில போற ஓணானை வேட்டிக்குள்ள இழுத்துவிட்ட கதையாப்போச்சே! என்னா வாங்கு வாங்குறான் பய...' பேய்முழி முழிக்க ஆரம்பித்தேன்.

"சரி உடு களுதைய..  ஆமா அந்த ரேவதிபுள்ள இப்ப எப்டிடா இருக்கு?" (வந்த கேட்டுக்கு இந்த பிட்டையாவது போட்டு வாங்குவோம்.... பால்யகாலக் காதல்கதையாச்சும் எளுதிப் போடலாம்!)

"எலேய் தெரியும்டா நீ கேப்பன்னு... 'என்னத்தச் சொல்லி ஏத ஒரைச்சாலும் கந்தனுக்கு புத்தி கவுட்டிக்குள்ள'ன்னு சும்மாவா சொன்னானுவ! இன்னுமாடா அந்தப்புள்ளய மறக்கல? அது ஒன்ன மாரிக்க இல்லடா... வாத்தியாரு ட்ரெயினிங்கு முடிச்சி இப்ப நம்ம சம்முவவிலாசுலதான் வேல செய்யிது. கல்யாணங்கட்டி ரெண்டு ஆம்பளப்பசங்களும் ஆச்சுடா. புருசனும் வாத்தியாருதாண்டா. நீயும் இருக்கியே... கவித எளுதுனதுக்கு பதிலா அந்தபுள்ளய கடத்திட்டாவது போயிருக்கலாம்..."

இப்போதுதான் மனம் கொஞ்சம் பேதலிக்க ஆரம்பித்தது. ஒருவேளை கதை எழுதுவதும், கவிதை எழுதுவதும் சுய இன்பம் செய்வது போலத்தானோ?! ச்சை... இவனோடு இனி பேசக்கூடாது. ஒரு படைப்பாளியை எவ்வளவு எளிதாக கீழ்மைப்படுத்தி விடுகிறார்கள்! என்னைச் சொல்லவேண்டும்... எழுதுகிறவன் பேசாமல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கற்பனைக் குதிரையை கால்கிளாஸ் சாராயம் ஊற்றியாவது ஓட விட்டிருக்கவேண்டும்... ஃபீல்ட் வொர்க் செய்கிறேன் பேர்வழி என்று இனி கிளம்பக்கூடாது. எவனாவது எதையாவது சொல்லப்போய் மனசு பாட்டுக்கு பெரிய புத்தன் மாதிரி தத்துவவிசாரணை செய்யப் புறப்பட்டு விடுகின்றது... யசோதரை கிடைக்க வேண்டியதுதான் பாக்கி!

"சரி பங்காளி... நான் கெளம்புறேன்... வீட்டுல எங்கப்பாரு வேற பைக்க காணோம்னு கத்திக்கிட்டு இருப்பாரு" முள்ளில் சேலையைப் போட்டாயிற்று... பதமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?!

"சரி போய்த்தொலை. வருவா கெட்டுத் திரியாம சீக்கிரம் ஒளுங்கா பொளக்கிற வளியப் பாரு.." என்றபடிக் கிளம்பியவன் ஒரு நாலைந்து எட்டுவைத்துத் திரும்பிச் சொன்னான்...

"எலேய்! முந்தாநாளு ஒன்னோட எதுத்த ஊட்டு மைதிலிகிட்ட அந்த ரேவதிபுள்ள பேசிட்டு இருந்திச்சிடா."ராசாராமன் என்ன பண்ணிட்டு இருக்கார்... நல்லாருக்காரா"னு கேட்டது கொஞ்சமா எங்காதுலயும் உளுந்திச்சி..." என்றபடி நடக்கத் துவங்கினான்.

இம்முறை ஒரே உதையில் ஸ்டார்ட் ஆன பைக்கை வேகமாக ஓட்டிச்சென்று வீட்டில் விட்டவன் " நாய்க்கி வேலையில்ல நிக்கிறதுக்கும் நேரமில்ல... சாப்பாட்டுக்குக்கூட வராம எங்கடா போய்த் தொலஞ்சே?" என்ற அப்பாவின் குரலை உதாசீனித்து அஷ்டாங்க யோகம் செய்வதுபோன்று கம்ப்யூட்டர் முன்னமர்ந்து தட்டத் தொடங்கினேன்...

"கொஞ்சதூரத்தில் இருந்து ரேவதி ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள். அப்போதுதான் குளித்து வந்திருப்பாள் போலும்! காதோரம் மஞ்சள் செம்பருத்தி...."Related Posts with Thumbnails