சனி, 19 பிப்ரவரி, 2011

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...19/02/11

உண்பது நாழி, உடுப்பது இரண்டு முழம் என்று விட்டேத்தியாய்த் திரிந்து விடத்தான் ஆசை! எங்கே முடிகிறது? முடிந்தவரை பொருளை இவ்வுலகிலும் அருளை அவ்வுலகிலும் தேடுவதே சிலாக்கியம் என்று உலகத்தோடு ஒட்ட ஒழுகுங்கால் கொஞ்சகாலம் ஊரில் கட்டாய ஓய்வு... நானும் என் நிரந்தரக் காதலியுமாக( ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் தான்!) ஊர்சுற்றிக் கொண்டிருப்போம். அப்படித்தான் பால்ய சிநேகிதன் தங்கராசுவையும் பார்த்தேன். "இப்படியும் கதை எழுதலாம்" என்று ஒரு கதை எழுதினேனே அதில் வரும் அதே தங்கராசுதான்! பயலுக்கு உடம்பெல்லாம் விஷமம். நாலைந்து எருமைமாடுகளையும், ஏழெட்டு ஏக்கர் நிலத்தையும் வைத்துக் கொண்டு... நிம்மதியான வாழ்க்கை! "மனுசப்பயலுவளக் கட்டி மேய்க்கிறத்துக்கு எருமைமாடு தங்கம்டா" என்பான். அன்றைக்குப் பார்த்து நான் சிக்குவேனா? டீக்கடைக்கு இழுத்துச் சென்று

"வேறென்னடா பங்காளி விசேசம்? மெட்ராசுல இருக்க, ஊரு விசயம், ஒலக விசயம்லாம் தெரிஞ்சி வெச்சிருப்ப..." என்று இழுத்தான்.

'பயல் ஆழம்பாக்க ஆரமிச்சிட்டாண்டா.. உட்றப்படாது' என்றெண்ணியபடி " அப்டில்லாம் ஒண்ணுமில்ல பங்காளி, ஒனக்குத் தெரியாத ஒலகமாடா இருக்கு" என்றேன்.

"எலேய்! ஊருக்குள்ளாற பெரிய படிப்பு படிச்சவன்னு கேட்டாக்க பெரீசா சில்லாப்பு காட்டுற, பீத்துணிய ஒளிச்சி வெச்ச புள்ளதாச்சிமாரி (இது ஒரு தனிக்கதைங்க!)..."

அன்றைக்கான சனியன் அந்த "படிச்ச" மேலேறி வந்ததெனக்கு!

"என்னடா ஒலகம் இது?  ஒனக்கு ஸ்பெக்ட்ரம் பத்தி தெரியுமாடா பங்காளி? அசராம ஆட்டைய போட்ருக்கானுவோ பாரேன்! ஆனாலும் உடலையே நம்ம சீபீஅய்யி, நோண்டி நொங்கெடுக்க ஆரமிச்சிட்டானுவோ பாத்தீல்ல. இந்த வேகத்துல போனாக்க இன்னம் நாலு மாசத்துல சார்ஜ் ஷீட்டு போட்ருவானுவோடா பங்காளி" என்றேன்.

'யப்பாடா! மாடு மேய்க்கிறவனுக்கு ஸ்பெக்ட்ரம் எங்க தெரியப்போவுது? தப்பிச்சோம்டா' என் நிம்மதிப் பெருமூச்சைப் பாதியிலேயே நிறுத்தவைத்தான் தங்கராசு.

"அட பொசகெட்ட பயலே! படிச்சுப்புட்டா ஒங்களுக்கெல்லாம் மூள பரதேசம் போயிடுமாடா? சீபீஅய்யாம் புண்ணாக்காம். போபர்சு ஊழல்லயே பணத்த யாரும் திருடல, காக்கா தூக்கிட்டு போயி வட வாங்கி தின்னிடிச்சின்னு சொல்லி முப்பது வருசம் கழிச்சு மூச்சப்புடிச்சி நிறுத்துனவனுவோடா இவனுவோ. அதுக்கப்புறம் எத்தினி பாத்துருப்போம். அர்சத்து மேத்தா, டான்சி, போபால் கேசு அது இதுன்னு எவனாச்சும் சேந்தாப்புல ரெண்டு வருசம் ஜெயில்ல இருந்தானுவளாடா. இந்த மசுரப்புடுங்கியளுக்கு மட்டும் நெஞ்சுவலி, குஞ்சுவலி எல்லாம் வந்துடும். அப்பால ஜாமீன்ல வந்து டிவிய பாத்து கையாட்டிக்கிட்டே போவானுங்க. எலேய், ஒண்ணு சொல்லுறேன் எழுதி வெச்சிக்கடா... இந்த நாட்டுல எந்த அரசியல்வாதியாவது ஊழல் பண்ணிட்டான்னு சொல்லி  அஞ்சு வருசம் ஜெயிலுக்கு போவட்டும்... நான் எருமைப் பாலுக்குப் பதிலா மூத்திரத்தை குடிச்சிக்கிறேன்" என்று நிறுத்தியவன் தொடர்ந்து சொன்னான்...

"மலைமுழுங்கி மகாதேவனுவளுக்கு கதவு ஒரு பப்படம்டா"

**********************************************************************
போனதடவை தாய்மாமா வீட்டுக்குப் போயிருந்தபோது ஏகப்பட்ட உபசரிப்பு... இள ஆட்டுக்கறி, இறால் குழம்பு, நண்டு வறுவல் என. 'உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு' மட்டுமா அழகு... என்ற கொள்கையில் ஏதோ கொறித்து வைத்தேன். கடுப்பாகித் திட்டிய மாமா சொன்னார் " ஏட்டி! நல்லவேளை நமக்கு பொட்டப்புள்ள இல்ல. இருந்திருந்து இவனுக்குக் கட்டிக் கொடுத்திருந்தா கஞ்சிக்கு செத்தவ மாரி தான் இருப்பா"

இந்தமுறை அத்தை மெல்ல தலையை நீட்டிக் கேட்டார் " என்ன சமைக்கட்டும்?'

"ஆமா... நீ சமைச்சிப் போட்டு இவன் தின்னுட்டாலும்..." நக்கலாகச் சொல்லிக்கொண்டே திடீரென்று ஒரு பழைய தமிழ்ப்பாட்டைச் சொன்னார்

"சற்றே துவையலரை, தம்பியொரு பச்சடிவை
 வற்றல் ஏதேனும் வறுத்துவை, குற்றமிலை,
 காயமிட்டு கீரைகடை, கம்மெனவே மிளகுக்
 காயரைத்து வைப்பாய் கறி!"

சிவஞானசுவாமிகள் பாடியதாம்! என்னை நக்கல் செய்யவும் தமிழ்ப்பாட்டு இருக்கின்றது என்று தெரிந்துகொண்டேன்.

*********************************************************************

"இவ்விடம் விசேஷத் திறமைகளுள்ள மிருகங்கள் விற்கப்படும்" என்று ஒரு ஷோரூம் வாசலில் எழுதி இருந்தது. பார்த்துவிட்டு உள்ளேபோனார் ஒருவர். குரங்குகள் பிரிவில் நான்கு குரங்குகள் வரிசையாகக் கூண்டுகளுக்குள் இருந்தன. முதல் குரங்கு இருந்த பெட்டியில் ரூ.10 லட்சம் என்றிருந்தது. "இது என்னென்ன செய்யும்?" என்றார் வந்தவர்.

"இது கட்டிடப் பொறியியலில் மிகச் சிறந்த திறமைகளைக் கொண்டது" என்றார் விற்பனைப் பிரதிநிதி.

இரண்டாம் குரங்கின் விலை ரூ.20 லட்சம் என்றிருந்தது.

"இது மருத்துவத்துறையில் அதி உயர் தொழில்நுட்பங்கள் தெரிந்த குரங்கு" என்றார் பிரதிநிதி.

மூன்றாம் குரங்கின் விலை ரூ.30 லட்சம்.

"கணிணி அறிவியல் தொழில்நுட்பத்தில் கரைகண்டது" என்றார்.

நான்காம் குரங்குக்கு விலை ரூ.50 லட்சம்.

"இது என்ன செய்யும்"

"இந்தக்குரங்குக்கு என்னென்ன தெரியும் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் இது தன்னை ஒரு கன்ஸல்டண்ட் என்று கூறிக் கொள்கிறது"..........

***********************************************************************

நாஞ்சில்நாடனின் "சூடிய பூ சூடற்க" படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கதையும் விதவிதமான உணர்வுகளை, அதிர்வலைகளைக் கிளப்பியபடி இருக்கின்றது. 'கும்பமுனி'யின் எள்ளல் பரமன் உடலில் விழுந்த பிரம்படியாக சமூகத்தின் எல்லா உறுப்புக்களையும் விலாசிக் கொண்டிருக்கின்றது. "யாம் உண்பேம்" கதை யாருக்கும் புரியாமல் எழுதும் இலக்கியவாதிகளைக் கேலிசெய்வதுபோல இருந்தது. மக்களைப் பேசாத இலக்கியம் என்ன மயிர்புடுங்கி இலக்கியம்? சங்கிலிப் பூதத்தான் படித்தபோது "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு" என்று வாழும் பெரிய மனிதர்களும் ஸ்விஸ் வங்கிகளும் நினைவிலாடியது. முன்னைவிட அதிகமாக நாஞ்சில்நாடனை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

**********************************************************************

கூகிள் பஸ்ஸில் கவிஞர் நேசமித்ரன் தான் ரசித்த மிக அருமையான கவிதைகளை அடிக்கடிப் பகிர்வார். சிலநாட்களுக்குமுன் அவரது பஸ்ஸில் படித்தது:

அவரைப் பார்க்க ஆசை

ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்

இடமும், பணமும் என
எல்லாமும் ஏற்கும் புரவலரோ

ஓடிப்போன
தன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி

- ச.முத்துவேல்

பின்குறிப்பும் வேண்டுகோளும் : நானும் என் நண்பன் பார்த்தசாரதியும் சேர்ந்து கதைவனம் (http://kathaivanam.blogspot.com/) என்ற புதிய வலைப்பூவினைத் துவங்கியுள்ளோம். முதல் சிறுகதையாக லாக் அவுட் பண்ணிட்டு வாக் அவுட் பண்ணு (வியாபாரச் சிறுகதைகள்-1) வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.


7 பேரு கிடா வெட்டுறாங்க:

Anbu சொன்னது…

ரொம்ப நாள் கழித்து மனசு விட்டு பேசி இருக்கிங்க போல...
நல்லா இருக்கு.

வானம்பாடிகள் சொன்னது…

கான் சாகிப்புல கும்பமுனி தவசிப்பிள்ளை அடிக்கிற கொட்டம் பார்த்து ஆஹான்னு இருந்துச்சு. சூடிய பூவிலுமா? படிக்கணும். நாஞ்சில் நாடன் கதைகளும் என்னைய முதல்ல படின்னு தூண்டுது. தங்கராசு போட்ட போடுல தல கிருகிருத்துப் போகுது. 200 கிலோ தங்கதுரைய விட்டுட்டாரே:)).

கவிதை காதலன் சொன்னது…

கடைசி கவிதை என்னமோ பண்ணுது...

கவிதை காதலன்

மோகன்ஜி சொன்னது…

விந்தைமனிதன் ! அசத்திவிட்டீர்கள். உங்க தங்கராசு,சமையல் கவிதை குரங்கு ஜோக்,முத்துவேல் கவிதை அனைத்தும் அற்புதம்.. மிகவும் ரசித்தேன்.நன்றி!

Rathi சொன்னது…

தங்கராசு ஜோக் டாப்.

தருமி சொன்னது…

//படிச்சுப்புட்டா ஒங்களுக்கெல்லாம் மூள பரதேசம் போயிடுமாடா? சீபீஅய்யாம் புண்ணாக்காம்.//

தங்கராசு செம சரியா சொல்லியிருக்கார் - என்னைப் போல

நிலவு சொன்னது…

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

Related Posts with Thumbnails