சனி, 30 அக்டோபர், 2010

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்...! பதிவுலகில் அடியெடுத்து வைக்கும் ரதியக்காவுக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும்!

"ஈழத்தின் நினைவுகள்" என்ற பெயரில் நெஞ்சை உலுக்கும் கட்டுரைத் தொடரை வினவு பக்கங்களில் எழுதிவந்த ரதியக்கா அந்த தொடருக்குப்பின் தனக்கென தனி வலைப்பூ ஒன்று துவங்காமலேயே இருந்து வந்தார். நான் சிலமுறை கேட்டும் அவர் வலைப்பூ துவங்குவதில் ஆர்வம் இல்லாமலேயே இருந்து வந்தார்.

இன்று எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்த உடன் எனக்கு இன்ப அதிர்ச்சி! நானும் பதிவராயிட்டேன் என்று அக்கா மகிழ்ச்சியுடன் அனுப்பி இருந்த மின்னஞ்சல் பார்த்தேன்.

வாழ்த்துக்களும் நன்றிகளும் சமர்ப்பணம் அக்கா! ஈழத்தின் வலியை, இன்னும் உயிர்ப்போடிருக்கும் கனவுகளை, தொல்தமிழ் பண்பாட்டின் விழுமியங்களை... இன்னும் இன்னும் ஏராளமாய் உங்கள் ஈரம் சுமந்த எழுத்துகளில் காண ஆவலாக இருக்கின்றோம்.

மொக்கைகளும், சிறுமைப் புத்திக்காரர்களும் மலிந்திருக்கும் தமிழ் வலையுலகில் ரதியக்கா போன்றோரின் வருகை இன்னும் ஏராளமாக நிகழவேண்டும். எப்படி தமிழ் எழுத்துலகில் சிறுபத்திரிகைகள் ஒரு புதிய சகாப்தத்தைத் துவங்கினவோ, அதே போல இன்று வலையுலகம் திகழ்கின்றது. தமிழின், தமிழரின், தமிழ் தேசியத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்த ரதியக்கா போன்றோர் விளங்கிட...

வாருங்கள் அக்கா! உங்களையும் ஒரு பாடலோடு வரவேற்கிறேன்!

அக்காவின் வலைப்பூ முகவரி:    http://lulurathi.blogspot.com/



செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஒற்றையடிப்பாதை





சீரியல் பல்புகளின் வெளிச்சச்சிதறல்களில்  
மேய்ந்து கொண்டிருக்கும்
சுடிதார் மகளிரின் புன்னகைகள் 
பர்ஸ் பிரித்து அலைபாயும் 
டக்-இன் கணவர்கள் 
பாசத்தோடு காத்திருக்கும் கல்லாக்கள் 
பாதையெங்கும் சிதறி இருக்கும் 
ஐஸ்க்ரீம் துளிகள்
வறிய புன்னகையோடு 
கடந்து செல்கிறேன் 
பெறுவதற்கும் தருவதற்கும் 
ஏதுமின்றி!
***************************************

வியாழன், 21 அக்டோபர், 2010

இலையுதிர்காலம்



சுத்தம் செய்யத் திறந்த
டிராயரில்
சேமித்துவைத்த உதிர்ந்த பூக்களும்
உடைந்த வளையல்களும்
எச்சிலின் ஈரம் சுமந்த சாக்லேட் காகிதங்களும்

ஒரு காதல் வாழ்ந்திருந்ததின்
தொல்லெச்சங்களாய்

கன்னத்தில் படிந்த
கண்ணீர்க் கோடுகளில்
மரித்துக் கொண்டிருக்கும் ஒருவனின்
விதிரேகை

மேகம் தொலைத்து ஒற்றையாய்
அலையும் சோகை நிலா

மெல்லக் காற்றில் கரையும்
விம்மலின் ஓசை

எங்கிருக்கிறாய் நீ?
*****************************************************

சனி, 16 அக்டோபர், 2010

நீயெல்லாம் ஒரு பதிவரா... ச்சீ!



மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. யாரோ உள்ளுக்குள் அமர்ந்து நெஞ்சைப் பிசைகிறார்கள்....கண்கள் பொங்கி வழிகின்றன... வழியும் விழிநீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே எழுதுகிறேன்.

(ம்ஹூம்... இப்பிடி எளுதுனா வேலைக்காவாது... மச்சி கொஞ்சம் மசாலாவத் தூவுடா...!)

ஏன்யா... நீயெல்லாம் ஒரு மனுஷனா? உனக்கெல்லாம் பிரபல பதிவர்னு பட்டம் ஒருகேடா? எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு நீயி ஞாய தர்மம் பேசிகிட்டு திரியிற? உங்கூட பேசுனதுக்கும் பழகுனதுக்கும் இப்பிடித்தான் முதுகுல குத்துவியா?

கழுத கெட்டா குட்டிச்செவருங்குறமாரி எப்பவும் உங்கூட சேந்து சுத்திட்டு இருக்கான் அந்த சினிமாக்காரன். அவன் மூஞ்சியப்பாரு! எப்பவும் மொசப் புடிக்கிற கொரங்குமாரி வெச்சிட்டு...

உங்க ரெண்டு பேரையும் நல்லவங்கன்னு நம்பி உங்களோட சேந்தேன் பாரு... என்னை மாட்டுச்சாணியும் மனுசச்சாணியும் கலந்த ஐட்டத்துல முக்கி எடுத்த செருப்பால அடிச்சாலும் தகும்யா!

உன்னையும் நல்லவன்னு நம்பி நாலு பேரு படிச்சிட்டு ஜிஞ்சக்கா போடுறானுவ பாரு அந்த அறிவுசீவியளச் சொல்லணும்யா! ஏதோ ஊருல இவன் மட்டும்தான் அறிவாளி மாரியும், மத்தவங்கள்லாம் மடப்பய மக்க மாரியும் நீ அடிக்கிற கூத்துக்கு ஒருநாள் முடிவு வரும்யா! பாத்துட்டே இரு. நான் சாபம் உட்டா பலிக்கும்யா.

இப்ப நான் எளுதுறத பாத்துட்டு " நீங்களா இப்படி கண்ணியக்குறைவா எழுதுறதுன்னு நாலு அறிஞ்சவுங்க தெரிஞ்சவுங்க வருத்தப்படுவாங்கன்னு எனக்குத் தெரியும். அதனால இப்ப பாரு... உன்னை டீசண்டா திட்டிக்காட்டுறேன்.

நீங்களா... அது நீங்களா? வார்த்தைகளுக்கு வக்கிரத்தில் குழைத்த வர்ணங்களைப்பூசியும் உங்களால் பேசமுடியும் என்பதை என் புத்தி அறியத் துவங்குகையில் விண்டுபோகும் மனச்சிதறல்களின் துணுக்குகள் என் மென்னுடலெங்கும் குருதிபார்க்கும் தருணங்களிலும் உங்களோடான என் உரையாடலைத் தொடர்வதில் எவ்விதத் தடையுமற்றுத் தனித்திருக்கும் இராக்காலப் புலம்பல் கீதங்களின் வலிவழியும் வரிகளைப் பிழைதிருத்தம் செய்யத் துவங்கும் என் விரல்கள் எப்போதும் வழிய விட்டிருக்கும் உன்னதமான அன்பினைக் கொச்சைப்படுத்த நீவிர் இருவரும் துவங்கிய வினாடிப்போதுகளில் உள்ளிருந்து கசிந்த கோபத்தின் வீர்யமடக்கித் தருணம் பார்த்து நான் காத்திருப்பேன் என்பதை நீங்கள் உணராமல் போனபோதிலும்...

(யோவ் புரியிற மாதிரி திட்டுய்யா அப்டீன்னு யாரும் திட்டவேணாம்! அவ்ளோ வலி...!)

நீங்கள் என்னோடு நட்பாக இருந்த காலகட்டங்களில் என்னுடனான சாட்களில் நீங்கள் எத்தனை பேரைத் திட்டி இருக்கிறீர்கள் ( அஃப்கோர்ஸ்... நானும்கூடத்தான்), எத்தனை விஷயங்களைப் பற்றிக் நக்கலாகவும், கிண்டலாகவும், புனைவாகவும் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள் என்றெல்லாம் சாட் ஹிஸ்டரியை வெளியிட்டு எனக்கு நானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளமாட்டேன் என்றபோதிலும், நீங்கள் அந்த சாட் ஹிஸ்டரிகளை வெளியிடும்பட்சத்தில் நானும் 'வெளிக்குப்'போவேன்... சீச்சீ... நானும் வெளியிடுவேன் என்பதனைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை எப்போதும் தங்களுடன் திரியும் அந்த மரணமொக்கையிடமும் தாங்களே தெரிவித்துவிடவும். இல்லையெனில் நான் எனது வழக்கறிஞரை ஆலோசித்து இது தொடர்பான நோட்டீஸ் விடுவதைப்பற்றி யோசிக்க நேரிடும்.

டிஸ்கி 1: யாரைத் திட்டுகிறேன், எதற்குத் திட்டுகிறேன் என்று தெரிந்தால்தான் பின்னூட்டமிடுவேன் என்பவர்களுக்கு..... கே.ஆர்.பி.செந்திலையும், அவருடன் எப்போதும் உலகத்திலேயே தான்தான் யூத் என்று மிதப்பில் திரியும் சினிமாக்காரரையும் தான்  திட்டுகிறேன். ஏன் என்றால் போன ஏப்ரல் மாதம் நாங்கள் மூன்றுபேரும் நுங்கம்பாக்கம் ஒருசோறு ஹோட்டலில் பிரியாணி சாப்பிடப்போனோம். பிரியாணி மிகவும் ருசியாக இருந்தாலும் என்னால் முழுதும் சாப்பிட முடியாமல் மீந்ததை பார்சல் கட்டுமாறு கேட்டபோது "மீந்தத ஏன்யா கட்டச் சொல்லுற? புதுசா பார்சல் வாங்கிக்கலாம்" என்று சொல்லி என்னை இழிவு படுத்தினார் கே.ஆர்.பி செந்தில். எல்லாம் பணக்கொழுப்பு இல்லையா? அவர்தான் அப்படி என்றால் அந்த சினிமாக்காரர் இன்னொருமுறை "வாய்யா! பஃபேக்குப் போலாம் என்று சொல்லி ஒரு சைவ உணவகத்தில் ப்ஃபே என்று சொல்லி வழங்கப்பட்ட இட்டிலியையும், ஊத்தாப்பத்தையும், ஒரு வாய் ஜிகர்தண்டாவையும் சாப்பிட வற்புறுத்தி என்னைக் கேவலப் படுத்தியதற்காகத்தான் திட்டுகிறேன்.

ஏன் அப்போதே திட்டவில்லை என்று கேட்க வேண்டாம். என் இஷ்டம்... நான் எப்போது வேண்டுமானாலும் திட்டுவேன். எப்படி வேண்டுமானாலும் திட்டுவேன். எனக்கு இன்றுதான் ரோஷம் வந்தது... நான் என்ன செய்ய?

டிஸ்கி 2 : எனக்கும் கே.ஆர்.பிக்கும் இருந்த உறவு இன்றுடன் ரத்தானதால் ஜூலைமாதம் தேவி தியேட்டர் சென்றபோது கூட்டநெரிசலில் சிக்கி அறுந்துபோன அவரது செருப்பைத் தைக்க நான் கொடுத்த பதினைந்து ரூபாவை உடனடியாக அவர் எனக்கு மணியார்டர் செய்யவேண்டும்.

டிஸ்கி 3 : இந்தப்பதிவின் ஹிட்ஸ் சரசரவென எகிறினால் தமிழ் இணையப் பதிவுகளை வாசிப்பவர்களின் மனநிலையைப்பற்றிய என் சந்தேகம் மேலும் வலுக்கும். இந்த எச்சரிக்கையையும் மீறி ஹிட்ஸ் க்ராஃப் ஏறினால் சுழற்சி முறையில் மாதம் ஒரு பதிவரை நான் திட்டிப் பதிவு போடுவேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(இவ்விடம் சாட் ஹிஸ்டரிகளின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் நியாயவிலையில் விற்கப்படும்)

வெள்ளி, 15 அக்டோபர், 2010

"வர்றியாடி..." (கிராமத்துக்கதைகள்-3)



"வர்றியாடி..." இந்த வார்த்தய சீதாலெச்சுமியப் பாத்து வாய் உட்டு சத்தமாவோ இல்லன்னா மனசுக்குள்ளாறயோ கேக்காத ஆம்பளைங்க ஊருக்குள்ளாற இல்லன்னே சொல்லலாம். ஒத்தமரமா நிக்கிற பொண்டுவள பாத்தா கொஞ்ச நாழி நெழலுக்கு ஒண்டிட்டு போவலாம்னு நெனக்கிற ஆம்பளங்கதானே நாட்டுல நெறஞ்சிருக்காங்க!

சீதாலெச்சுமி நாலும் பொட்டப்புள்ளயா பொறந்த குடும்பத்துல அஞ்சாவதா பொறந்தவ. "அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டி"ன்னு ஊருக்குள்ளாற ஒரு சொலவடை சொல்லுவாங்க. பெத்துப்போட்ட களப்புலயே கண்ண மூடிட்டா பெத்தவ. அக்கச்சிமாருங்ககிட்ட அம்மாவப் பாத்து வளந்த சீதாலெச்சுமி சின்ன வயசுலயே சூட்டிகையா இருப்பா. அதுனால அக்கச்சியளுக்கும் செல்லமாத்தான் வளந்தா. வயசுக்கு வந்தவொடனே நல்லா பசேலுன்னு இருக்குற நெல்லு கதுரு மாரி நெகுநெகுன்னு நின்ன சீதாலெச்சுமியக் கண்டு ராத்தூக்கந்தொலச்ச ஆம்பளைங்களவிட வயிறெரிஞ்ச பொண்டுவதா ஊருல அதிகம். நல்லாக் கனிஞ்ச நாவப்பழம் கணக்கா அப்பிடி ஒரு நெறம் அவளுக்கு.

பேருலமட்டுந்தா லெச்சுமி இருந்துச்சே ஒழிய குந்துமணி தங்கத்துக்கு வக்குல்லாம இருந்தாரு சீதாலெச்சுமியோட அப்பெ. ஒருவழியா நாலு பொண்ணுவள கரையேத்துன பொறவு சீதாலெச்சுமிய என்னடா பண்ணுறதுன்னு அவ அப்பங்காரன் முழிச்சிட்டு இருந்தப்பதாம் அவ வாழ்க்கயில வந்துநின்னா நாட்டாம ஊட்டுல பண்ணையம் பண்ணிட்டு இருந்த மாடச்சாமி. வயக்காட்டுலயும், களத்துமேட்டுலயும், கலித்த அய்யனாரு கோயிலு ஆலமர நெழல்லயும் பொத்திப்பொத்தி வளத்தாங்க காதல ரெண்டுபேரும்.

கத்திரிக்கா முத்துனா கடக்கி வந்துதானே ஆவணும்? அரசபுரசலா சேதி வெளிய வந்து காத்துல பரவ அலறிப்பொடச்ச சீதாலெச்சுமியோட அப்பங்காரெ சந்தக்கி சந்த மாடு ஓட்டிட்டுப்போயி யாவரம் பண்ணுற ஒறமொறக்கார கருப்பையன புடிச்சி கல்யாணத்த முடிச்சி வெச்சிட்டு பொண்டாட்டி போன தெச பாத்து போயிச் சேந்தாரு.

சீதாலெச்சுமியும் வேற வழியில்லாமத்தா கழுத்த நீட்டுனா. கல்யாணத்துக்கு எட்டுநாளக்கி மின்னாடி அய்யனாரு கோயிலு ஆலமரத்துக்குப் பக்கமா மாடச்சாமியப் பாத்து மாலமாலையா கண்ணால தண்ணி உட்டு அழுதா. அவ அழுத கண்ணீரு ஆறாப் பெருகி ஆனை குளிச்சேற, கொளமாப் பெருகி குதுர குளிச்சேற... காலங்காலமா காதலிச்சவன கல்யாணம் பண்ணிக்க முடியாத பொண்டுவ எயலாமையிலயும், ஏக்கத்துலயும் சொல்லுற அதே வார்த்தய மாடச்சாமிகிட்டயுஞ்சொன்னா... " எனக்கு வேற வழியில்லய்யா. என்ன மறந்துட்டு வேற நல்ல பொண்ணா பாத்து கட்டிக்கய்யா"ன்னு சொல்லிட்டு எந்திரிச்சி போனவதான். அதுக்கப்பறம் அவ வாழ்க்க வேற, அவம் வாழ்க்க வேறன்னு ஆயிப்போச்சு.

கல்யாணம் கட்டி நாலு வருசத்துல மூணு ஆம்பிளப் புள்ளய பெத்துப்போட்டா சீதாலெச்சுமி. அவ புருசனும் அவள என்னமோ கண்ணுங்கருத்துமாத்தான் பாத்துக்கிட்டான். காக்காசும், அரக்காசுமா சேத்த பணத்துல மூணாவது புள்ளப்பொறவு முடிஞ்சி பொண்டாட்டிக்கி ரெண்டு பவுனுல வளவியும் வாங்கிப்போட்டான். இப்பிடியா சின்னச் சின்ன சந்தோசத்துல நவந்துகிட்டு இருந்த சீதாலெச்சுமி வாழ்க்கயில மறுபடியும் வந்து நின்னிச்சி விதி 'உட்டனா பாரு!'ன்னு.

வாரச்சந்தக்கி மாடு ஓட்டிட்டுப்போன கருப்பையா ஊட்டுக்கு வந்து களப்பா படுத்தவம்தாம். காலையில "மூத்திரம் மஞ்சளா போவுதுடி"ன்னு சொன்னவனோட கண்ணும், ரெண்டு நகக்கண்ணும் மஞ்சக் கெழங்கு கணக்கா மஞ்சமஞ்சேர்னு இருந்திச்சி. மஞ்சக்காமால...

சீதாலெச்சுமியும் என்னென்னமோ பண்ணிப்பாத்தா, மூலிகச்சாறு குடுத்தா... கீழாநெல்லிய அரச்சி வைத்தியரு குடுத்த மருந்து உருண்டய வாங்கிக்குடுத்தா, வேருகட்டிப்பாத்தா. ஒண்ணும் ஆவாம படுக்கயிலயே கெடந்த கருப்பையாவோட நாப்பதாவது ராத்திரி விடியவே இல்ல.

இருவத்தி ரெண்டு வயசுல அறுத்துப் போட்டுட்டு மூணு வாண்டுசுண்டுவள கக்கத்துல வச்சிக்கிட்டு தனிமரமா நின்ன சீதாலெச்சுமிக்கு என்னன்னு கேக்க ஒரு நாதியத்துப்போச்சி. பொறப்போட வந்த வைராக்கியத்த நெஞ்சுல சொமந்து கொழந்தைங்கள ஒத்த ஆளா வளக்க ஆரமிச்சா.

'பொறம்போக்கு நெலந்தான... கொஞ்சநாளு நாமளும் வெள்ளாம பண்ணித்தான் பாப்பமே'ன்னு நாக்க தொங்க போட்டுட்டு திரிஞ்சானுவோ ஊருக்குள்ள பல பயலுவோ. செல பேரு அவ தனியா நடந்துபோறப்ப பாத்து "என்ன லெச்சுமி தனியாவா போற.... நா வேண்ணா தொணக்கி வரட்டுமா"ன்னு கேட்ட பயலுவள கண்ணாலயே பொளந்துபோட்டுட்டு தான் வழியில போயிட்டே இருப்பா சீதாலெச்சுமி. நல்லபாம்புமாரி புஸ்ஸுபுஸ்ஸுன்னு பெருமூச்சி உட்டுக்கிட்டே திரிஞ்ச ஆம்பிளைங்கல்லாம் நாளு போவப்போவ இவ துளிகூட எளகாத கட்டாந்தரன்னு புரிஞ்சி ஒதுங்கிக்க ஆரமிச்சானுவோ.

உள்ளுக்குள்ள ஆயிரம் இருந்தாலும் ஒரு சொட்டு கண்ணுத்தண்ணி உடாம நெஞ்சழுத்தமா நின்னு எல்லாத்தையும் சமாளிச்சா சீதாலெச்சுமி. புள்ளைங்கள ஒரு சொல்லு திட்டிப்பேச மாட்டா. "எலேய்! ஒங்கப்பன் காக்காசு இல்லாம நின்னாலும் கடேசிவரைக்கி நிமிந்தே நின்னு வாழ்ந்தாண்டா. தகப்பெ இல்லாத புள்ள தறுதலன்னு ஊருக்குள்ள ஒத்தவார்த்த சொன்னாலும் அப்பிடியே நாண்டுகிட்டு நானும் செத்துப் போயிடுவே." அப்பிடின்னு சொல்லியே நண்டுசிண்டா இருந்த புள்ளைங்கள ஆளாக்குனா.

அந்தாப்புடி... இந்தாப்புடின்னு ஓடிப்போச்சி இருவத்தஞ்சி வருசம்! மூணு புள்ளைங்களயும் படிக்கவெச்சு, அவனுவளும் டவுனு பக்கம்போயி ஆளாளுக்கு வீடு, வாச நெலம் நீச்சுன்னு கொஞ்சங்கொஞ்சமா சேக்க ஆரமிச்சானுவ. ஒரு வழியா மூணு பேத்துக்கும் ஒலகமெல்லாம் அலஞ்சி திரிஞ்சி கல்யாணத்தயும் முடிச்சிவெச்சா.

கடேசி மவனுக்கும் கல்யாணம் முடிஞ்ச மூணாம் மாசம் மூத்த மருமவதான் மொத கொள்ளிய பத்தவெச்சா. "ஏங்க! ஒங்கம்மாவ நாமளேதான் வெச்சி கஞ்சி ஊத்தணுமா? மத்த மவனுவ மட்டும் கெட்டிக்காரனுவ, நாமதான் இளிச்சவாயின்னு எழுதி இருக்கா... என்னமோ பண்ணுங்க! ஆனா அத்தை படுக்கையில கெடந்தா பீத்துணி கசக்கிப்போடணும்னு என்னப்பாத்து சொல்லிடாதிய"ன்னு அவ சொன்ன வார்த்தய அடுப்படி பக்கம் போனப்ப அகஸ்மத்தா காதுல வாங்குன சீதாலெச்சுமிக்கி அடிவயித்துல நெருப்பெடுத்து வெச்ச மாரி இருந்திச்சி.

"என்னமோ டவுனு எனக்கு ஒத்துவரலப்பா! நா ஊருக்குபோயி ஏங் காலத்த கழிக்கிறம்பா... அப்பப்ப அம்மாவ வந்து பாத்துட்டு மட்டும் போ ராசா"ன்னு மவங்கிட்ட பக்குவமா சொல்லிட்டு ஊருக்கு வந்து சேந்த சீதாலெச்சுமிக்கி இருவத்தஞ்சி வருசங்கழிச்சி அழுவணும்போல இருந்திச்சி. ரெண்டு மாமாங்கங்கழிச்சி அய்யனாரு கோயிலு ஆலமரத்தடிக்குப் போயி ஒக்காந்தவ கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு 'இப்பவா அப்பவா'ன்னு நின்னிச்சி.என்னன்னமோ நெனப்புல ஒக்காந்துருந்த சீதாலெச்சுமி ஏதோ நெழலாடுதேன்னு தலயத் தூக்கிப் பாத்தா.

மாடச்சாமி நின்னுட்டு இருந்தான். கடேசியா அழுதுட்டுப்போனன்னக்கிதான் அவ அவன கண்ணால நிமிந்து பாத்த கடேசிநாளு. தெகப்பூண்ட மிதிச்சமாரி தெகச்சிப்போயி நின்னா சீதாலெச்சுமி..

"இத்தினி வருசமா ஓன்னோட நெனப்புலதான் வாழ்ந்துட்டு இருக்கேன் சீதா. இப்பவாவது ஏங்கூட வருவியா?

கொஞ்சநேரம் யோசிச்ச சீதாலெச்சுமி "வாய்யா! எங்கயாவது போவலாம்"னு சொல்லிட்டே அவங்கைய புடிச்சி நடக்க ஆரமிச்சா... அதுக்கப்பொறவு சீதாலெச்சுமி எங்கன்னு அந்த ஊரும், அவளோட புள்ளைங்களும் தேடவே இல்ல.

*************************************************************

கதையச் சொல்லிமுடிச்சபொறவு சீதாலெச்சுமி ஆத்தாவப் பாத்து கேட்டே.

"ஏன் ஆத்தா? மாடச்சாமிய கையப்புடிச்சி நடக்க ஆரமிச்சப்ப ஒம்மனசுல என்னதா ஓடிட்டு இருந்திச்சி?"

"ஏம்பொறப்புலேருந்து ஏம் வாழ்க்க பூரா ஏம் ஆசக்கின்னு வாழ்ந்ததில்ல ராசா. எங்கப்பாரு மானம் மருவாத மிக்கியம்னு ஓம்பாட்டன கட்டிக்கிட்டே. ஏம்புருசன் கவுரத மிக்கியம்னு ஏம் மனசுலயிம் ஒடம்புலயிம் எரிஞ்ச தீய ராவக்கி ராவு கொடங்கொடமா தண்ணி ஊத்தி தணிச்சிக்கிட்டே. ஏம்புள்ளைங்க வவுறு மிக்கியம்னு ஏம் வவுத்துல ஈரத்துணிய போட்டுக்கிட்டே. பொம்பளப்பொறப்பே பொசக்கெட்ட பொறப்புய்யா. யாராச்சும் ஒத்தருக்காவ வாழ்ந்தே ஆவணும். ஆம்பிளைங்க வாழ்க்க அப்பிடி இல்ல. ஆனா மாடச்சாமி... நா ஆலமரத்தடில உட்டுட்டு திரும்பிப் பாக்காம போனத்துலருந்து என்ன இல்லாம வேற பொம்பளய நிமுந்தும் பாக்காம இருந்தாம்யா." கொஞ்சூண்டு பெருமூச்சு உட்டுட்டு ஆத்தா சொன்னா...

"அந்த நாப்பத்தஞ்சி வயசிலதாய்யா நா மறுவடி பொம்பளயா பொறப்பெடுத்தே"

திங்கள், 11 அக்டோபர், 2010

ஆறாவது புருஷன்



திரௌபதி அந்த வனத்தையும் தன்னையும் ஒன்றென உணர்ந்தாள். சூரியனின் வெம்மை சற்றும் புகுந்துவிடாதபடி குளுமையாய் இருந்த வனம் தன் குளுமையை திரௌபதிக்குள்ளும் இறக்கியது. திரௌபதியின் மனம் எங்கெங்கோ ஓடத்துவங்கியது. வனம் எப்போதுமே ஒரு
அதீதமான மாய அழகுடன் இறுமாந்திருக்கிறது. ஒழுங்கின்மையின் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே... சுதந்திரத்தின் வீச்சினை பரப்பிக்கொண்டே... அது தன் அழகை யாருக்கும் அடகு வைப்பதில்லை... யாவரையும் தனக்குள் கபளீகரம் செய்துகொள்கிறது.

துருபதன் மகள் ஏனோ அன்று தன்னுள் அதீதக்காதல் பொங்குவதை உணர்ந்தாள். நான் அரசி... என் காதலர்கள் என் சேவகர்களும்கூட... என் கட்டளைக்காய், கண்ணசைவிற்காய் காத்திருக்கும் காதலர் ஐவருக்கும் என் காதலை நான் அவர்களுக்குள் ஊற்றிக்கொண்டே இருக்கிறேன். ஐந்து பேர்... ஐந்து பேர்!

அவளுள் ஒளிந்து எப்போதும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்கும் அந்தத்தீ அன்று சற்றே சாம்பல் பூத்திருந்தது. அர்ஜுனனுக்காக அவள் மனம் எதிர்பார்த்திருந்தது. அழகன்! கம்பீரன்! பௌருஷத்தின் பொக்கிஷங்களை தனக்குள் முதன்முதல் திறந்துவிட்டவன்! இதோ வந்துவிடுவான். யோசனைகள் உந்தித்தள்ள வெகுதூரம் வந்துவிட்டாள் போலும்!

அதோ... அதோ... மதர்த்த ஆண்யானை போல் அசைந்து வருகிறான். பருத்த பிருஷ்டங்களும் சிறுத்த இடுப்பும் பெண்டிர்க்கு மட்டும்தான் அழகென்பவர் அர்ஜுனனைப் பார்க்கவேண்டும்!

"கிருஷ்ணை! என்ன இது இவ்வளவு தூரம் நடந்து வந்துவிட்டாய்? உன் முகமும் மிகவும் பொலிவுடன் இருக்கின்றதே!" வாஞ்சையுடன் கரம்பற்றிய திரௌபதி அவனோடு கரம்கோர்த்து நடக்கத் துவங்கினாள்.

'இவனுக்கு மட்டுமே உரிமையாக இருக்க வேண்டியவள்...ஹ்ஹ்ம்ம்ம்!' அவளுள் மீண்டும் அந்தத்தீ சாம்பல் உதறக் காத்திருந்தது. 'பகிர்ந்து கொள்ளுங்கள்!' குந்தியின் வார்த்தைகள் இப்போது ஒலிப்பதைப்போல...

காதலுஞ்சரி... தாபமுஞ்சரி... கோபமுஞ்சரி....திரௌபதி எப்போதுமே தீ போலத்தான்... எதுவுமே ஒரு வனமாகத்தான் அவளுள் பரவும். தீயில் பிறந்தவள் அல்லவா!

வனம் அர்ஜூனனுக்குள்ளும் தாபத்தை விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. பாஞ்சாலி எது சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இருந்தான். நடந்து கொண்டிருப்பது விதியை நோக்கி என்பதறியாமல் நடந்தான். சுழன்று கொண்டே இருந்த பாஞ்சாலியின் கண்களில் விழுந்து சிரிக்கத்துவங்கியது அந்த நெல்லிக்கனி. உயரத்தில் ஒற்றையாய்....!

"விஜயா! அந்த நெல்லிக்கனியைப் பாரேன்! அழகாக இல்லை?"

"உனக்கு வேண்டுமா க்ருஷ்ணை? இதோ பறித்துத் தருகிறேன்!"

நினைப்பது அர்ஜுனன் எனில் நினைத்த கணம் முடிப்பது காண்டீபம்! அறுந்து விழுந்த பழம்பொறுக்கக் குனிந்த அர்ஜூனனின் காதுகளில் விழுந்தது அந்த "ஐய்யோ!"

சுள்ளி சுமந்துவந்து கொண்டிருந்த அமித்திர ரிஷியின் சீடன் பதறத் தொடங்கினான். "பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்... அதுவும் இந்த நெல்லிக்கனி மட்டும்தானே குருதேவனின் உணவு! அவருக்கென்று மட்டுமே படைக்கப்பட்டதை வீழ்த்தி விட்டீர்களே! அவர்வந்து சபிப்பாரே! உம்மைப்பார்த்தால் அரசகுலம்போல் தோன்றுகிறது. ஏன் இந்தப் புத்தி உமக்கு? கண்ணில் கண்டதெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ளும் நாகரீகவான்களின் புத்தியை காட்டுக்கு வெளியேயே கழற்றிவைத்து வரக்கூடாதா? என்ன செய்யப் போகிறீர் இப்போது?"

அர்ஜூனனும் திரௌபதியும் பதறிப்போனார்கள். செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். யுதிர்ஷ்டிரனுக்கும் செய்தி போனது. சகோதரர்களோடு வந்து சேர்ந்த யுதிர்ஷ்டிரனும் குழம்பித் தவிக்க... 'ஆபத்பாந்தவன் கண்ணனன்றி வேறு யார் இருக்கிறார் நம்மைக்காக்க?'

பதறத்துவங்கும் போதெல்லாம் பாஞ்சாலியின் மனதில் பழைய நெருப்பும் சேர்ந்தே விசிறப்படும். இப்போதும்! குருவம்சத்தில் மணம் முடித்த எல்லாப் பெண்களுமே பாவப்பட்ட ஜீவன்கள் போல! தானும்... தன்னால்தான் இன்றைய பிரச்சினை எனினும் ஏன் வனம்புக நேர்ந்தது? புகுந்திராவிட்டால்...

அர்ஜூனனைக் காதலித்தவளை ஐவருக்கும் மனைவியாக இருக்கச் சொல்லும்போது நானும் இதோ இந்தப் பழம் மாதிரித்தானே கிடந்தேன்! என் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு... சீந்துவாரின்றி... இந்த உலகம் ஆண்களால்தானே நிறைந்திருக்கின்றது? குந்தியும்தானே துணைபோனாள்? மறக்கமுடியுமா அந்த வார்த்தைகளை... "பகிர்ந்துகொள்ளுங்கள்..."   ! கல்யாணத்துக்கு முன்னரே சூரியதேவனால் கன்னிமை கழிக்கப்பட்டு கர்ணனைப் பெற்று அவனையும் தூக்கி வீசியபோதே பெண்மையின் உணர்வுகளையும் கழற்றி வைத்துவிட்டாள் போலும்! இல்லாவிடில் என்னைப் புரிந்திருப்பாள்.ஐவரையும் காலம் போகப்போக ஏற்றுக் கொள்ளத்துவங்கினாலும் என்னுள் அந்தத்தீ ஏன் இன்னும்...?

பல்வேறு திசைகளிலும் சுழலத்துவங்கிய மனக்காற்றாடிக்கு அணை போட்டது பரந்தாமனின் வருகை. விவரம் கேட்டறிந்தவன் கைகளால் முகவாய்க்கட்டைக்கு சிறிது நேரம் முட்டுக்கொடுத்திருந்தான். பின் வழக்கமான கபடப்புன்னகையுடன் பேசத்துவங்கினான் விதியின் வேடிக்கை புரிந்தவனாய்.

"பார் யுதிர்ஷ்டிரா! தர்மம் எப்போதும் தனக்குப் பிடித்தவருடன் விளையாடிப் பார்ப்பதையே பொழுதுபோக்காய் வைத்திருக்கின்றது! இப்போது மீண்டும் உன் முறை. ஆட்டத்தைத் துவங்கியாயிற்று. நீதான் முடித்துவைக்க வேண்டும்!"

"இது என்ன சோதனை க்ருஷ்ணா! என்ன செய்யச் சொல்கிறாய் என்னை?" யுதிர்ஷ்டிரன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் சற்றே நடுங்கின.

"ஒன்றும் பயப்படாதே என் ப்ரிய மைத்துனா! இது அமித்திரமுனிவருக்குச் சொந்தமான கனி. அவர் வருவதற்குள் ஒட்டவைக்க வேண்டும். ஒரே உபாயம்தான் இருக்கிறது"

"சொல் கண்ணா! செய்கிறோம். பிரச்சினை தீர்ந்தால் சரி"

"கடினமானது ஒன்றுமில்லை! நீங்கள் ஒவ்வொருவரும் உம் மனதில் இருப்பதை ஒளிக்காமல் சொல்லுங்கள். இதுதான் உபாயம். நீங்கள் சொல்லச் சொல்ல கனி தானாகவே மேலேறும்.... ஒட்டிக்கொள்ளும்" கண்ணன் திரௌபதியை ஓரக்கண்ணால் பார்த்து லேசாய் சிரித்துக்கொண்டே சொன்ன கணத்தில் புரிந்து போனது அவளுக்கு 'இது தனக்கு வைக்கப்பட்ட சோதனை' என்று. சிந்தனையில் ஆழ்ந்தாள்.

யுதிர்ஷ்டிரன் மெல்ல வாய்திறந்தான்.

"நாடுநகரம் ஆளவேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை கண்ணா!...."

மீதி ஐவரும் லேசாய்த் திடுக்கிடத் தொடர்ந்தான்... " நான் ஜெயிக்கவேண்டாம்.... எது தர்மமோ அது எப்போதும் ஜெயிக்க வேண்டும்"

'தர்மம்.... நீயா யுதிர்ஷ்டிரா தர்மம் பேசுவது! ஒரு பெண்ணின் காதலை வலுக்கட்டாயமாய் வரவழைத்த நீயா?' திரௌபதி மனதில் தீ லேசாக சாம்பல் விலக்கி எட்டிப் பார்த்தது.

பீமன் சொன்னான் " பரந்தாமா! என்றும் நான் பிறன்மனை வேண்டேன். பிறர்வசை வேண்டேன்! பிறர் துயர் என் துயராகக் கொள்ளவே விரும்பினேன்!"

திரௌபதி புன்னகைத்தாள்

அடுத்து அர்ஜூனன்...

"மானமே எமக்கு என்றும் உயிர் கண்ணா! மானம் துறந்து வாழ்வதை நான் என்றும் ஈனமாய்க் கருதுவேன்" என்றான்

" எத்தனை செல்வம் இருப்பினும் எத்தனை பலம் இருப்பினும், கல்வியின், ஞானத்தின் நிழல்படாதோரை என்றும் மதியேன் நான்" என நகுலனும்,  "அன்னையின் வார்த்தை, அனைத்துக்கும் மூலமான ஞானம், துணைநிற்கும் தர்மம், என்றும் பிறர்மேல் காட்டும் தோழமையே உருவான கருணை, மனைவிபோலும் தாங்கிநிற்கும் சாத்வீககுணம், நம்மை அந்திமத்தில் காப்பாற்றும் மகனைப் போன்ற வலிமை இவை ஆறுமன்றி வேறேதும் நான் உறவாக எண்ணுவதில்லை கிருஷ்ணா!" என்று சகாதேவனும் முடித்தார்கள்.

கண்ணன் திரௌபதியிடம் திரும்பினான். திரௌபதி மனதில் தீ சடசடவென எரியத் தொடங்கியது.

"பலசாலிகளும், ஞானவான்களும், அன்பு மிக்கவர்களுமான ஐவரைக் கணவராகப் பெற்ற நான் அவர்கள் நன்மைதவிர வேறேது நினைக்கப்போகிறேன் கண்ணா?"

பழம் அசையாதிருந்தது.

பரந்தாமன் புன்னகைத்தான். "ஏன் கிருஷ்ணை... பொய் சொல்கிறாய்" வார்த்தைகளை கனமாக இறக்கினான்.

திரௌபதியின் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மெல்லக் கணவர்மார்களைப் பார்த்தாள். லேசாய்ப் பெருமூச்சும், குரூரமும் கலந்தெழ மெல்ல... மெல்ல வார்த்தைகளை எண்ணிக் கோர்க்கத் துவங்கினாள். தீ பரவியது... வடவாமுகாக்கினியாய்....

"ஐந்து கணவன்மார்களும் என் ஐந்து புலன்கள் போலத்தான் அண்ணா! ஆனாலும் மனிதர் ஆறாம் அறிவை நாடி ஏங்குவதுபோல என் மனமும் ஆறாவதாய் ஒருவனுக்காய் ஏங்குகிறதே.... என்ன செய்வேன்?!"

கிருஷ்ணன் சிரிக்கத் தொடங்கினான்... அண்டமதிர...

அண்ணண்தம்பி ஐவரும் சிலையாகினர்....அவர்களது ஆண்மையின் கர்வம் செத்திருந்தது...

அதன்பின் திரௌபதியைத் தொடும்போதெல்லாம் அவர்கள் இறந்து இறந்து உயிர்ப்பிக்கப்படுவதே விதிக்கப்பட்டதானது.
*************************************************

சனி, 9 அக்டோபர், 2010

அத்திரிபாச்சா கொழுக்கட்டை - கிராமத்துக்கதைகள் 2



மாரிக்கண்ணு சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் கிறுக்குப்புடிச்ச பய. பள்ளிக்கோடம் போவயிலயே பச்சப்பாம்ப புடிச்சி அதோட வாயக்கட்டி டவுசர் பாக்கெட்டுல திணிச்சிட்டு போயி வாத்தி வீட்டுப்பாடம் கேக்குறப்ப அவருமேல தூக்கிப்போட்டுட்டு ஓடியாந்தவன். ஊருக்குள்ளாற இருக்குற எளந்தாரிப்பயலுவள்லயே இவங்கிட்ட மட்டும்தான் கன்னிப்பொண்டுவளும், கல்யாணமான பொண்டுவளும் தாயக்கட்ட, பல்லாங்குழி வெளையாட சேக்காளி தேடுறதும்.... பயலுக்கும் திங்கிறதையும் தூங்குறதையும் உட்டா வேற வெவரமும் தெரியாதா... பொண்டுவளுக்கு கிண்டல் பண்ணி பொழுதுபோக்க ஒரு ஆம்பிளைப்பய அசடனா வந்து மாட்டிக்கிட்டா கேக்கவா வேணும்!

ஆச்சு... அவனுக்கும் வார ஆவணி வந்தா இருவத்தெட்டு வயசு! கூட இருக்குற பொண்டுவ பூரா அவன 'ஏண்டா இன்னம் கல்யாணம் பண்ணல?'ன்னு கேட்டு தொளச்சி எடுத்துட்டாளுவ. இவனுஞ் சளைக்காம 'ஏங் கல்யாணம் பண்ணனும்?'னு எதிர்க்கேள்வி கேக்க, சும்மா உட்ருவாளுவளா பொண்டுவ?!

"எலே! கல்யாணம் கட்டுனாத்தாண்டா ஒன்னையும் ஊருல குடித்தனக்காரனா மதிப்பானுவ! ஒம்பொண்டாட்டிக்காரியோட அம்மாப்பா வெளையாட்டெல்லாம் வெளையாடலாம். அவ ஒனக்கு துணிமணி கசக்கி போடுவா. வெதவெதமா வாய்க்கு ருசியா சமச்சிப்போடுவா" அப்டீன்னு ஏத்தி உட்டாங்க பொண்டுவள்லாம்!

அவளுவ சொன்னதுல இவனுக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா மண்டையில ஏறினிச்சி! "பொண்டாட்டி வெதவெதமா சமச்சிப்போடுவா!" எவ்ளோநாளுதான் அம்மாக்காரி வெக்கிற புளிக்கொழம்ப மட்டும் தின்னுட்டு கெடக்கிறது! அம்மாக்காரிய போட்டு நச்சரிக்க ஆரமிச்சான் மாரிக்கண்ணு.

அம்மாவும் புள்ளயும் பொண்ணுதேட ஆரம்பிச்சாவ. கிறுக்குபயளுக்கு எவம் பொண்ணு குடுப்பான்? ரெண்டு பேரும் ஊரெல்லாஞ்சுத்தி, ஒடம்பெல்லாம் வத்தி கடேசியா கண்டுபுடிச்சாங்கய்யா ஒரு பொண்ண. வசதிவாய்ப்புக்கு வழி இல்லன்னாலும் பொண்ணு புது வெங்கலக்கொடமாட்டம் நல்லா அம்சமா அமஞ்சா.

மாரிக்கண்ணும் ஒருவழியா கல்யாணம் கட்டி குடும்பம் நடத்த ஆரமிச்சான். கொஞ்சங்கொஞ்சமா கிறுக்குத்தனமெல்லாங் கொறஞ்சிட்டு. ஊட்டுக்கு வந்த மவராசியும் கட்டுசெட்டா குடும்பத்த நடத்துனா. ஊருல அவனவன் நாக்கு செத்துப்போயிக் கெடக்க மாரிக்கண்ணு ஊட்டுல மட்டும் தெனத்துக்கும் மீனுங்கருவாடுமா மணக்க ஆரமிச்சது.

அந்த சமயத்துலதான் ஒருநா மாரிக்கண்ணு கைக்காரியமா சந்தக்கி போனான். சந்த நடக்குறது மாமியா ஊரு. ஊட்டுக்கு வந்த மாப்பிளைய நல்லா கவனிக்கனுமேன்னு மாமியாக்காரியும் வெதவெதமா பலகாரம் பண்ணி விருந்து வெச்சா. அதுல ஒரு பலகாரம்தாம்யா கொழுக்கட்ட. கொழுக்கட்ட ருசியில பய கிறுகிறுத்துப்போயிட்டான். ரொம்பவும் தின்னா மாமியா ஊட்டுல மரியாதை போயிருமே! நாக்க அடக்கிக்கிட்டு "போயிட்டு வாரேனத்த" சொல்லிட்டு கெளம்புனவன் கொழுக்கட்ட பேர மறக்காம கேட்டுக்கிட்டான் மாமியாகிட்ட. வார வழி முச்சூடும் 'கொழுக்கட்ட, கொழுக்கட்ட'ன்னு மந்திரிச்சி உட்ட கோழியாட்டம் முணுமுணுத்துக்கிட்டே வந்தான். பேரு மறந்துட்டா சிக்கலாயிடுமே!

ஊட்டுக்குப்போனவொடனெ பொண்டாட்டிய கொழுக்கட்ட பண்ணச்சொல்லி திங்கணும்னு பய குறுக்குவழியப்புடிச்சி நடக்க ஆரமிச்சான்.வார வழியில ஆறடி அகலத்துல வாய்க்க ஒண்ணு குறுக்கால ஓடினிச்சி. எப்பிடிடா தாண்டுறதுன்னு பய பேமுழி முழிச்சிட்டு இருந்தப்ப பின்னாடி வந்த ஒருத்தன் வாய்க்கால பாத்துட்டு அப்பிடியே ரெண்டடி மறுபடியும் பின்னுக்குப் போயி தம்கட்டி அப்டியே வேகமா ஓடியாந்து " ஏ!அத்திரிபாச்சா ஐலசா"ன்னு கத்திகிட்டே ஒரே தாவு. வாய்க்கால தாண்டிட்டான்.

'அட இது நல்ல ஐடியாவா இருக்கே!'ன்னு யோசிச்ச நம்மாளும் அப்பிடியே தாவுனான் 'அத்திரிபாச்சா ஐலசா' சொல்லிகிட்டே! தாவுனவன் 'கொழுக்கட்ட'ய மறந்துட்டான்.

ஊடுபோயி சேந்ததுமே பொண்டாட்டியக் கூப்புட்டு "அடியேய்! எனக்கு ஒடனே அத்திரிபாச்சா ஐலசா பண்ணிக்குடுடின்னு கேக்க அவ என்னடாது.. இதுவரைக்கும் கேள்விப்படாத அயிட்டமா இருக்கேன்னு யோசிச்சிட்டே அப்பிடி ஒண்ணு இல்லீங்கன்னு சொன்னா. இவனும் இதம்பதமா சொல்லிப்பாத்தான். அவ கொழம்பிப்போயி "அதெல்லாம் எனக்கு பண்ணத் தெரியாது...போய்யா"ன்னுட்டா. இவன் கடுப்பாயி பக்கத்துல கெடந்த கம்ப எடுத்து பொண்டாட்டிய உரி உரின்னு உரிச்சிட்டான்.

அந்த நேரம் பாத்து உள்ளவந்த பக்கத்து ஊட்டு பொம்பள "ஏய்யா! உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு... இவள போட்டு இந்த அடி அடிக்கிறே"ன்னு கேக்க இவனும் நடந்த கதெய வெலாவரியா சொல்ல, "அடப்பாவி மனுசா! சாப்புடுற விசயத்துக்காய்யா இந்த அடி அடிப்ப... பாருய்யா! இவ ஒடம்பு பூரா எப்பிடி வீங்கி இருக்கு பாரு... கொழுக்கட்ட கொழுக்கட்ட மாரி"ன்னா.

மாரிக்கண்ணு அப்டியே எம்பி ஒரு குதி குதிச்சி சொன்னானாம் "ஆங்! அதேதாங்க்கா! அதேதான் எனக்கும் வேணும்"னு

வியாழன், 7 அக்டோபர், 2010

ஸரயூவானவள்...



வானம் நிர்மலமாக இருந்தது. ஸரயூ என்றும்போல் அமைதியாக சலசலத்து அயோத்தியின் கரைகளோடு கதைபேசியபடி நகர்ந்து கொண்டிருந்தாள். என்றுமில்லாமல் ஏனோ லஷ்மணன் அப்போது மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தான். இந்த ஸரயூ தான் யுகாந்திரங்களைத்தாண்டியும் எவ்வளவு ஸாத்வீகமாக, வாத்ஸல்யமாக ஓடிக்கொண்டே இருக்கிறாள் எவ்வித அலட்டல்களும் இன்றி! எத்தனை மனிதர்கள்! எவ்வளவு விதமான் சரித்திரங்கள்!! எல்லாவற்றையும் கண்டு பின் தெளிந்த ஞானத்தோடு வாழ்க்கையின் ஓட்டத்தில் சிடுக்கின்றி ஆரவாரமின்றி பொறுமையாய்.... ஸரயூ ஏன் பெண்ணாக இருக்கிறாள்? பெண் ஏன் நதியாக இருக்கிறாள்? தன் மடியில் தளிர்த்த குழந்தைகளுக்கு இதமாய் உணவும் ,உயிரும் அளித்து, எல்லார் சுக துக்கங்களையும் தானே சுமந்து, எல்லோர் அழுக்கையும் களைந்து, எல்லோரையும் இதமாய் வருடி... தனக்கென்று நிறமின்றி, தனக்கென்று ஆசாபாசங்களின்றி... ஏன் ஸரயூ பெண்ணாய் இருக்கமாட்டாள்? ஏன் பெண் நதியாய் இருக்கமாட்டாள்?

லஷ்மணன் மனம் துள்ளியது. அட... நாமா இப்படியெல்லாம் யோசிக்கிறோம்? எத்தனை ஆண்டுகளாயிற்று? யோசித்து... சிந்தனையை மெல்லமாய் அசைபோட்டு... ம்ம்ம்... நானும் ஸரயூ போலத்தானே? சிற்றன்னை கைகேயிக்காக காடேகும் அண்ணனின் அடித்தடங்களே என் வாழ்க்கைத்தடமாய்... எனக்கென்று நான் என்ன செய்துகொண்டேன்? ஸரயூ தனக்கென்று என்ன செய்துகொண்டாள்?தன் சுற்றமும் நட்பும் இன்ன பிற மாந்தரையெல்லாம் கண்ணில் தேக்கி, சுயம் மறுக்கும் யாவரும் ஸரயூதான்...நானும் ஸரயூதான்... தாயே நீ வாழி!

நினைவுகள் அவனது மொத்தவாழ்க்கையையும் கணநேரத்தில் மின்னலாய்ப் பாய்ச்சிச் சென்றன. தன் வாழ்க்கை மொத்தமும் பிறர்க்கு அர்ப்பணித்தவனே ஞானியாம்! என்னைவிடச் சிறந்த ஞானி யார் உண்டு பூமியில்...? தன் வாழ்க்கை முழுதுமே தகப்பனுக்காக, அன்னைக்காக, குருநாதனுக்காக எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் என் அண்ணனுக்காக... எல்லாமே... எல்லாருக்காகவுமே தியாகம் செய்தவன் நானல்லவோ? நானல்லவோ ஸரயூவின் வாரிசு! நானன்றோ எல்லாம் உதறியதன்மூலம் எல்லாம் அடைந்தவன்.! நானே உயர்ந்தவன் எல்லோரினும்... ஏனெனில் நான் தியாகித்திருக்கிறேன்... எல்லாவற்றையும்... யாவர்க்குமாய்...

அண்ணனின்மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள் உண்டு. வாலியை மறைந்திருந்து கொன்றதுமுதல், உரிமையற்ற மகுடத்தை சுக்ரீவனுக்கு கொடுத்ததும், எவனோ ஒரு வண்ணான் சொன்னானென்று சீதையை அக்னிப் பிரவேசம் செய்வித்ததும், சம்புகனை வதைத்ததும்... இன்னும் இன்னும்...

நான்?! அண்ணனுக்காகவே அர்ப்பணித்து, அண்ணனுக்காகவே சுவாசித்து, அண்ணன் விரல் நீண்ட இடமெல்லாம் கோதண்டத்தில் பூட்டிய அம்பெனப் பயணித்து.. "என் செயல்களும் பலாபலன்களும் அண்ணனுக்கே ஸமர்ப்பணம்!" பாவியல்ல... வெறும் கருவி...

காலமெல்லாம் ராமகாதையில் லஷ்மணன் வியக்கப்படுவான்.... ஸரயூ போலவே!

லஷ்மணன் ஸரயூவிலிருந்து மெல்ல எழுந்தான். செம்பட்டுத்துணி பிழிந்து துவட்டிக் கொண்டு மெல்லத்தன் அரண்மனை நோக்கி நடந்தான்.இன்று திருமணநாள். எத்தனையாவது?!

ஊர்மிளா காத்திருந்தாள். கணவனை நமஸ்கரித்து போஜனம் பரிமாறினாள். ஊர்மிளா தாம்பூலம் கொடுத்தாள். ஊர்மிளா மஞ்சத்தை சரிசெய்து கணவன் கால் அமுக்கத் தொடங்கினாள்.

மெல்ல மனைவியை அணைத்த லஷ்மணன் நிறைவான கூடலுக்குப் பின் ஊர்மிளாவின் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைத்துளிகளை முத்தமிட்டுச் சாய்ந்தான். தானாகவே இழுத்துக் கொண்ட இமைகளின்பின்னே நிறைவு வழிந்தது. ஸரயூவின் பெருக்காய் உள்ளிழுத்த தூக்கத்தின் ஆழத்தில் ஸரயூ பேசத் தொடங்கினாள்.

'லஷ்மணா! எல்லாவற்றையும் நீயே தெரிவு செய்தாய்! நீயே சுயவிருப்போடு காரியம் நிகழ்த்தினாய்! நீயே தன்னலம் நீக்கியவன் என்று விதந்து கொள்கிறாய்! ஊர்மிளா?! என்றாவது ஒரு கணம்.... ஒரே கணம்... அவளின் விருப்பு தெரிந்தாயா? பதினான்கு வருடம்.... ஆயுளின் மிக முக்கிய பருவம்... உடலே தணலாய்... தணலே உடலாய்....! அவளின் உணர்வு அறிந்தாயா? அவள் பேசக் கேட்டாயா? அர்ப்பணித்தவள் நீயல்ல லஷ்மணா! ஊர்மிளா...ஸரயூ...  எங்களின் தெரிவு நாங்கள் கேட்டதல்ல... எங்களின் வார்த்தைகள் நாங்கள் உதிர்த்ததல்ல... ஸரயூக்களுக்கு சுயதெரிவு இல்லை... ஊர்மிளாக்களுக்கும்தான்... ஸரயூவே ஊர்மிளா... ஊர்மிளாதான் ஸரயூ.. லஷ்மணன்களால் ஸரயூவாக முடியாது லஷ்மணா... ஏனெனில் ஸரயூக்கள் எப்போதும் ஊர்மிளாக்களாகவே இருக்கமுடியும்!'


கண்விழித்த லஷ்மணன் அதன்பின் உறங்கவே இல்லை!

பின்குறிப்பு: மகாபாரதமும், ராமாயணமும் கடவுளர் கதை என்று எண்ணாமல் அவற்றைப் படிக்கும்போது கணந்தோறும் வியப்பைத் தருபவை. இன்றும் எனக்கு அலுக்காத காதை பாரதக் காதை. அந்தக் கதைமாந்தரின் உணர்வுகள்,சிறுமைகள், அழுகைகள், பெருமிதங்கள் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. இவ்விரண்டையும் மீள்வாசிப்பு செய்து தம் பார்வையில் புதிதாய் எழுதும் கலை மிகக்கடினமானது. நான் அந்தளவு வாசிப்பாளனல்ல.

பெரியவர்களைப் போலவே 'போலச்செய்தல்' குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டு! நானும் ஒரு குழந்தைபோல முயற்சித்துப் பார்த்தேன். இது பிறந்தது! ஓட்டைகள் ஆயிரம் இருக்கலாம். குறைகள் மலிந்திருக்கலாம். அறிந்தவர் என்னை ஒறுக்கவேண்டாம். குழந்தை விளையாட்டெனக் கருதி மென்னகைத்துச் செல்லுங்களேன்! இன்னும் சீர்ப்படுத்திக் கொள்கிறேன்!

புதன், 6 அக்டோபர், 2010

சும்மாதான்... நீங்களும் ரசிங்களேன்...



இன்னிக்கு ஒண்ணும் மேட்டர் சிக்கல... இருந்தாலும் கை கொஞ்சூண்டு அரிக்க ஆரம்பிச்சிட்டு... ஆனா மூளை வறண்டு போயி கெடக்கு! அதுனால நான் ரசிச்ச செல விஷயங்களை சும்மா சொல்லிட்டு மட்டும் போறேன்.

1) வால்ட் விட்மனுக்கு அவனது காதலி எழுதிய கடிதத்தில் இருந்து...

"அந்த மலையின் உச்சியில் வெட்டவெளியில் நமக்கான குழந்தையை நாம் பெற்றெடுக்க வேண்டும். அதுவரை என் கருவறை வாசலை தேவதைகள் காவல் காப்பார்கள்."

2)விவேக சிந்தாமணி... எளிய எதுகை மோனை, சந்தங்கள்ல கனமான விஷயங்களை ரொம்ப அழகா சொல்லியிருக்குற தமிழ்நூல்... அதுல இருந்து ஒண்ணு... "பசி வந்தா பத்தும் பறந்துபோகும்"னு சொல்லுவோம்ல? அது என்னாங்க அந்த பத்து?

" மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை- தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்"

3) என்னை அவர்களுக்குப் பிடித்திருக்கிறது;
உன்னையும் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது
நம்மைத்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை

இது ஆஸ்கார் வைல்ட் சொன்னதுங்க

4) வரிசையா மூணு கவிதையில இருந்து செல வரிங்க மட்டும் சொல்றேன்... ஒவ்வொரு கவிதையையும் யார் எழுதுனதுன்னு நீங்களே தேடிக் கண்டு பிடிங்களேன்! தேடல்தானே வாழ்வை உயிர்ப்போட வெச்சிருக்கு?!

அ) காலுக்குச் செருப்புமில்லை
  கால் வயிற்றுக் கூழுமில்லை
  பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே
  பசையற்றுப் போனோமடா
 
 பாலின்றிப் பிள்ளை அழும்
 பட்டினியால் தாய் அழுவாள்
 வேலையின்றி நாமழுவோம் - என் தோழனே
 வீடு முச்சூடும் அழும்

ஆ)முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டுச் சத்தமிட்டுப்
புத்திகெட்டுப் போனதொரு காலம்!
இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்!

இ)முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்
நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை மழைமுகிலெனச் சொன்னால்
மலனினை இதழோடு இணைசேர்க்கலாம் என்முன்
வளைந்து இளந்தென்றலில் மிதந்துவரும் கைகளில்
வளையல் இன்னிசை கேட்கலாம்
இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் அன்பே
அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்
*********************
பாக்கலாம் எத்தன பேரு சரியா சொல்றாங்கன்னு!
*****************************************************

செவ்வாய், 5 அக்டோபர், 2010

நான் இறந்துபோயிருந்தேன்



நான் இறந்துபோயிருந்தேன்

முதன்முறை இதழொற்றி நீ
காதல் சொன்னபோதும்

இறுதிமுறை மென்மையாக
பிரிவின் பிரகடனம் வாசித்தபோதும்

காலம் அசைவற்றுப் போயிருந்தது
நான் இறந்து போயிருந்தேன்

ஆதூரமாய் வருடி
மிதந்துசெல்லும்
உதிர்ந்த சிறகும்

கண்ணீர் குடித்துக்
காற்றில் உப்பின் வாசம்
பரப்பும் தென்றலும்

இந்தக்கவிதையை வாசிக்கநேரும்
யாரோ ஒருவரின் ஏளனப்புன்னகையும்
ஒரு இரங்குதலும்
இரங்கப் படும் வலியும்

என்றேனும்
எதிர்கொள்ள நேரிடலாம்
உனது வழியிலும்

அப்போது
வாசிக்கத் துவங்கு
இவ்வாறு துவங்கும்
என் கவிதையை...

"நான் இறந்து போயிருந்தேன்..."

( ரோஜாப்பூந்தோட்டம் அறிவித்திருந்த சவால் கவிதைக்காக எழுதியது)
*******************************************

திங்கள், 4 அக்டோபர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 4/10/10



1) கொஞ்சம் சந்தோசமாவும் வியப்பாவும்தான் இருக்கு! "கொங்கை முகங்குழைய..." பதிவுக்கு இந்தளவுக்கு வரவேற்பு இருக்கும்னு நெனச்சிக்கூட பாக்கலீங்க. நெறைய மக்கள் புதுசா வந்து பின்னூட்டம் போட்ருக்காங்க. எல்லாருமே சொன்ன ஒரு விஷயம் விரசமில்லாம இருக்குதுன்னுதான். "பரவால்லடா பயலே! ஓரளவு நல்லாத்தான் எழுத ஆரமிச்சிட்ட போல! மண்டையில கனத்தை ஏத்திக்காம இப்பிடியே மெயிண்டெயின் பண்ற வழியப் பாரு" அப்டீன்னு எம்முதுகுல நானே தட்டிக்கிட்டேன். படிக்கப் படிக்க மயக்குற விஷயம்ங்க தமிழ். நாச்சியார் திருமொழின்னு சொல்லப் படற ஆண்டாளோட திருப்பாவையில வர்ற "குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்..."னு துவங்குற பாட்டையும் (இதுல இறையோடு ஒன்றுகலப்பது அப்டீங்குற விஷயத்த காமமா உருவகப்படுத்தி சொல்லி இருப்பாங்க!), "யாதும் ஊரே" னு துவங்குற சங்கப்பாடல்ல வர்ற "நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர்..." ( தமிழனோட தத்துவ தரிசனத்தை அழகா காட்டுற வரிங்க!) அப்டீங்குற வரிகளையும் படிச்சிப் பாருங்களேன். இன்னும் எவ்வளவோ இருக்குங்க... நமக்கு எல்லா பாட்டையும் படிக்குற அளவு ஞானம் இல்லங்குறதால தெரிஞ்ச ரெண்டு மட்டும் சொல்லி இருக்கேன்.

2) அயோத்தி தீர்ப்புக்கு பொறவு ராமர் பொறந்த எடம்னு கோர்ட்டே ஒத்துக்கிச்சி அப்டீன்னு பெருமை பேசுற குரல்களும் காதுல விழுது. நண்பர் ஒருத்தரு திடீர்னு சாமி வந்தாப்புல "பாத்தியாடா இந்திய கலாச்சாரம், பண்பாட்டோட மகிமைய! எவ்ளோ பாரம்பரியம்? ஞானவெள்ளம்? நம்ம மதத்துல" அப்டீன்னு சொல்லி ஆட ஆரமிச்சிட்டாருங்க. இன்னொரு பக்கம் பாத்தா "ஒலகத்துலயே பெரிய ஜனநாயகநாடு நாங்க... நீதிமன்றத் தீர்ப்புக்கு மக்கள்ளாம் எவ்ளோ அமைதியா தலைவணங்கி ஏத்துக்கிறோம் பாத்தியளா?" ( அவனவன் கஞ்சிக்கு சாவுறப்ப கோயிலா முக்கியம்னு பொலம்புறது யாருக்கும் கேக்கல) அப்டீன்னு ஜனநாயகம், தேசபக்தின்னு பீலா உடவும் ஒரு குரூப்பு. இன்னும் கொஞ்ச பேரு வல்லரசு மெதப்புல திரியிறாங்களாம்.

வல்லரசு, ஜனநாயகம், இந்த ஈரவெங்காயம்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நாட்டுல எத்தினி பேரு முழுசா மூணுவேள சாப்புடுறான்னு கணக்கெடுத்தா பாதி சனத்தொகைக்கு மேல அரைவயிறுதானாம். சரியான போஷாக்கும், மருத்துவ வசதியும் இல்லாம சாவுற கொழந்தைங்க எண்ணிக்கையும் இந்தியாவுல அதிகமாம்... ஹ்ஹ்ம்ம்ம்... பட்டாமணியாருக்கு வாக்கப்பட்டும் படுக்க பாயி இல்ல... பத்தருக்கு வாக்கப்பட்டும் அறுக்கத் தாலி இல்ல!

3) காமன்வெல்த்... காமன்வெல்த் அப்டீங்குறாங்களே அப்டீன்னா என்னன்னு நம்ம வக்கீலண்ணன் ஒருத்தர்ட்ட கேட்டேன். அது வேறொண்ணுமில்லையாம். முன்னாள் பிரிட்டிஷ் பேரரசு ஆட்சிக்கு கீழ இருந்த நாடுகளோட கூட்டமைப்புதானாம். அரசபரம்பரையில இருக்குறவங்கதான் வழிவழியா காமன்வெல்த் தலைவரா ( இப்பக்கி ரெண்டாம் எலிசபெத் ராணி) இருப்பாங்களாம். சொதந்தரம் வாங்கியும் அடிமைப் புத்தி போவல பாருங்க!

இப்பேர்ப்பட்ட கீர்த்திவாய்ந்த காமன்வெல்த் கேமுக்காவ ஒலகம்பூரா இருந்து பெரியாளுவோ எல்லாம் வாராங்க... அந்த நேரத்துல அசிங்கமா இருக்கப்பிடாதுன்னு சொல்லி சொல்லி டெல்லியில இருக்குற பிச்சைக்காரங்க, ரோட்டோரமா பலூன் விக்கிறவங்க, பேப்பர் விக்கிறவங்க, இந்த மாதிரி அன்னாடங்காச்சிகளையெல்லாம் ராவோட ராவா அடிச்சித் தொரத்திட்டாங்கன்னு நூஸு கேள்விப்பட்டேன். வேற யாருதான் டெல்லியில இருக்கலாமாம்?அரசாங்கத்தையும், மக்களையும் ஏமாத்தி கொள்ளையடிச்சி 'தொழிலதிபரு'ன்னு திரியிறவங்க, மைதானம் கட்டுற காசுல பொண்டாட்டிக்கு ஒண்ணு, வெப்பாட்டிக்கு ரெண்டுன்னு வீடுகட்டி ஏப்பம் விட்ட அரசு அதிகாரிங்க, இன்னும் இந்தந்த மாரி பணம் படைச்சவங்கதான் இருக்கணுமாம். போட்டிய துவக்கிவைக்க வந்த இளவரசருக்கு ஏக வரவேற்பாம்... சும்மாவா சொன்னாங்க... எனம் எனத்த பாக்கும், எச்சி எலைய நாய் பாக்கும்னு!

4) ஒருவழியா நானும் எந்திரன் பாத்துட்டேன். ஈறப் பேனாக்கி பேனப் பெருமாளாக்குற வித்தைய ஷங்கருகிட்டயும், சன் பிக்சர்கிட்டயும்தான் கத்துக்கணும். சுஜாதாவோட "என் இனிய இயந்திரா" நாவல் கொடுத்த பாதிப்பும், பிரம்மாண்டமும் படத்துல இல்லங்கிறதுதான் என்னோட அபிப்பிராயம். கதை, திரைக்கதை, இயக்கம்னு ஷங்கர் பேர் வருது. ஆனா இது "என் இனிய இயந்திரா" கதைதானே? ஏகப்பட்ட சீன்ல எனக்கு "ஜீனோ" தான் ஞாவகத்துக்கு வருது.

Cinema is an old whore, like circus and variety, who knows how to give many kinds of pleasure. Besides, you can't teach old fleas new dogs.
Federico Fellini


அதுனால ஒருவாட்டி பாக்கலாம்னுதான் தோணுது.

5) "ஆப்பிள் ஐ- ஃபோன் 4" அப்டீங்குற சீனாவுல விக்கிற தன்னோட தயாரிப்புல ஆப்பிள் நிறுவனம் அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவோட பகுதி அப்டீன்னு மேப்ல காட்டி இருக்காங்களாம். சீனாவும் இப்பல்லாம் அருணாச்சலப்பிரதேசம் தன்னோட பகுதின்னு ஒத்துக்குற மேப்பை மட்டும்தான் அனுமதிக்கிறாங்களாம். வடகெழக்கு எல்லையில லொள்ளு பண்றதுன்னு பத்தாதுன்னு இப்போ தெற்கு எல்லையிலயும் காலூன்ற வேலைய தெறமையாவே செஞ்சிட்டு இருக்காங்களாம். இந்திய வெளியுறவுக் கொள்கைய வகுக்குறவங்க ஈழத்தை அழிக்கிறதுலயும் காஷ்மீர்ல பாகிஸ்தானோட பஞ்சாயத்து பண்றதுலயும் மட்டும்தான் குறியா இருக்காங்க. இதையெல்லாம் விவாதிக்க வேண்டிய பாராளுமன்றத்துல சம்பளம் பத்தலன்னு சண்டை போடுறதுலதான் எம்.பிங்க நோக்கமா இருக்காங்க. நல்லாத்தான் சொல்லியிருக்காங்க "பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்"னு.

“Every government is a parliament of whores. The trouble is, in a democracy, the whores are us.” -  P. J. O'Rourke

6) எனக்குப் பிடிச்ச கவிதை. வறுமையோட கொடுமைய நடுமண்டையில அடிச்ச மாதிரி சொல்ற இந்தக் கவிதை கவிஞர் சிற்பியோடது.

அப்பா இல்லாத
அநாதைக் குடும்பத்தில்
ஆறு வயிறுகள் ஒவ்வொரு நாளும்
பற்றி எரிந்தன.

அம்மா நகைகளை விற்றாள்
அப்புறம் காய்கறி விற்றாள்
தலையில் விறகு சுமந்து விறகு விற்றாள்
பிறகு...?
கற்பை விற்றாள்
எங்களுக்கு
கால்வயிறு நிரம்பியது

சனி, 2 அக்டோபர், 2010

கொங்கை முகங்குழைய... (வயதுவந்தோர் மட்டும்)



காமம்...! ஒற்றை வார்த்தையைச் சுற்றிச் சுழல்கிறது ஒழுக்கம்சார் உலகம்! காமம் என்பது வெறும் நுகர்வாய் மாற்றப்பட எதிர்விளைவாய் வெடிக்கின்றன பண்பாட்டு குண்டுகள். ஒரு பூவின் மலர்ச்சியாய் இயல்பாய் இருக்கப்பட வேண்டியது செயற்கையாய் ஊதிப் பெருக்கப்பட்டு வாழ்வின் கணந்தோறும் நிறைத்து மூச்சுமுட்ட வைக்கின்றது.

காமம் என்ற சொல் மனதில் காட்சிப்படுத்தப்படுகையில் பல திசைகளில் பாயத்துவங்குகின்றது நினைவெனும் காட்டுக்குதிரை!

காமத்திலிருந்துதான் கடவுளுக்கான பயணம் துவங்குகிறது என்கிறார் ஓஷோ. காமத்தைக் குட்டையாக்கித் தேக்கிவைக்கப்பட்ட கற்பனைகள் அழுகி நாற்றமெடுக்க சாக்கடையாய் வாழப் பழகிவிட்ட நாமோ அவரை வெறும் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம். திராவிடர்களின் ஆதிக் கலாச்சார மரபிலிருந்துதான் காமம்சார்ந்த தாந்த்ரீக விஷயங்களை உள்ளடக்கி அதர்வணவேதம் படைக்கப் பட்டது.

தந்த்ரா என்று ஒரு ரகசிய மார்க்கம் பௌத்தத்தின் ஒரு பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டது. காமத்திலிருந்து கடவுளுக்குச் செல்லும் பயணத்தின் தேடல்களை உள்ளடக்கிய தந்த்ரா இன்றும் பலரால் வியாபார நோக்கமாக மாற்றப்பட்டு வெறும் காமநுகர்வினை வர்ணக் காகிதங்களில் கட்டித் தரும் காமதேனுவாகிவிட்டது.

"Chastity is nothing but lack of opportunity" என்று வேடிக்கையாய் சொல்வார் பெர்னாட்ஷா.காமம் தவறென்று கற்பிக்கப்பட்டு பாலியல் வறட்சிக்குள் தள்ளப்பட்ட சமூகம், ரகசியமாய் "ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று புதிய வேதம் பாடிக் கொண்டிருக்கின்றது.

காமம்பாடும் இலக்கியங்களும், காமம் சொட்டும் கலைக் கோயிலகளும் செழித்திருந்த காலம் போய் கழிவறைக் கிறுக்கல்களே இலக்கியமாய்க் கற்பிதம் செய்யப்படுகின்றது.

எனக்கு ஒரு கதை நினைவிலாடுகின்றது;

ஒரு துறவியும் அவரது சீடனும் ஆற்றைக் கடக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளை. ஆற்றிலோ வெள்ளம் தலைக்குமேலே போகின்றது. நீந்திக் கடக்கலாம் என்று முடிவெடுக்கும்போது ஒரு இளம்பெண்ணின் குரல். துறவியைப்பார்த்து அவள் சொல்கிறாள் "சுவாமி! எனக்கு நீந்தத் தெரியாது. தயைசெய்து என்னையும் அக்கரை சேர்ப்பீர்களா?" அக்கரை சேர்க்கிறேன் பேர்வழி என்று  இளம்பெண்கள்மீது அக்கறை காட்டும் இக்காலத் துறவி அல்ல அவர்; நிஜமாகவே அவர் துறவி! சற்று யோசித்தவர் சரி எனச் சொல்லி அவளையும் சுமந்துகொண்டு நீந்தி அக்கரையில் இறக்கிவிட்டு வழியனுப்புகிறார்.

சிறிதுதூரம் சீடன் மௌனமாகக் குருவைத் தொடர்கிறான். பின் மெதுவாய்த் தயங்கித் தயங்கிக் கேட்கிறான் "குருவே! தாங்களோ துறவி! தாங்கள் ஒரு இளம்பெண்ணை சுமந்து வந்தது சரியா?" என்று.

மெல்லப் புன்னகைத்த குரு சொல்கிறார் " நான் அவளை அப்போதே இறக்கிவிட்டேனே? நீ இன்னுமா சுமந்து வருகிறாய்?!" என்று.

இப்படித்தான் நாமும் கணந்தோறும் காமத்தைக் கற்பனையில் சுமந்து திரிகிறோம்.

காமத்தை இயல்பாய் அதன் அழகு மிளிரப் பாடிய தமிழ் இலக்கியங்கள் கணக்கிலடங்கா.

பெரும்பாலோர் ஆணின் காமத்தை செய்வினையாகவும் (active), பெண்ணின் காமத்தை செயப்பாட்டுவினை(passive) ஆகவுமே வர்ணிக்கையில் புகழேந்திப்புலவர் நளவெண்பாவில் தமயந்தியின் காமத்தை செய்வினை (active) யாக வர்ணிக்கிறார்:

நளன் மிகப்பெரும் வீரன்! இருளைக் கிழித்துப்பாயும் மின்னல்போலப் பாய்ந்துசெல்லும் வேலைக் கொண்டவன்! போர்க்களத்தில் வீரமாய்க் களமாடும் நளனின் விம்மித்து அகன்ற மார்புகளின் மீது வனப்புமிக்க கொங்கைகளை மோதி கண்கள் தனது கூந்தலின்மேலும், நளனின் உயிர்மீதும், நீண்டு விரிந்துபோய்த் தன் செவிமீதும் அலைமோதக் காதல் பெருக்கிக் கலவிச் சண்டை செய்கின்றாளாம் தமயந்தி!

"குழைமேலுங் கோமான் உயிர்மேலுங் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள – இழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்
வல்லோடுங் கொங்கை மடுத்து."


அடுத்த பாடல் இன்னும் அழகு! என் மனதில் என்றும் நீங்காத ஒரு பாடல்!

நளனுடைய படை யானைப்படை. களங்களில் மிகுந்த பிளிறல் சத்தங்களோடு போரிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும். ஆனால் நளனுடைய அதிகாரமெல்லாம் போர்க்களங்களில் மட்டும்தான். பள்ளியறையில் நடக்கும் போரில் தமயந்தியின் போர்க்கருவிகளே ஆட்சி செய்கின்றனவாம். என்ன மாதிரியான கருவிகள்?! குங்குமமும், சந்தனமும் குழைத்துப் பூசப்பட்ட வளமையான கொங்கைகள்! காதுவரை நீண்டு பார்வையிலேயே காதலனை விழுங்கிச் செரித்துப்போடும் கண்கள்! அவளது வளையல்கள் எழுப்பும் கிண்கிணி நாதம்தான் இங்கு போர்முரசு!

பகைவர்களை எப்போதும் கொல்லும் யானைப்படைவேந்தனோடான கலவிப்போரில் அவனுடைய மார்புகளோடு மோதி அவளின் கொங்கைகள் குழைகின்றன! காரிருளாய் அவிழ்ந்து கலைந்து விரிகிறது அவள் கூந்தல்! போர்முரசாய் ஒலிக்கின்றன அவளது வளையல்கள்! காமத்தில் சிவந்த அவளது கண்கள் நீண்டு அலைபாய்கின்றன!

"கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கயற்கண் ஓடிச் செவிதடவி – அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து."


செயற்கையாய்க் குப்பிகளில் அடைக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் போன்றதல்ல காமம்! அது ஒளி புக முடியாக் காட்டுக்குள் பூத்திருக்கும் ஒற்றைப்பூ! நுகரத் தேவை, நீண்டு நெடிதான தேடல்....! துடைத்துவிட்டுத் தூக்கியெறியும் காகிதமல்ல... எல்லாம் ஒடுங்கிப் போய் மனம் அசைவற்றுப் போகும் உள்ளொளிப் பயணம்! "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்பது கடவுளுக்கல்ல.... காமத்திற்கே பொருந்தும்.

தென்றலின் மென்மையாய்த் துவங்கும் காமத்தின் பயணம் சூறைக்காற்றாய் மாறி சாத்திரக் கட்டுகளை சாய்க்கவேண்டும். பொருதிய உடல்களில் மூச்சு மட்டுமே மெல்ல ஓடிக் கொண்டிருக்க வேண்டும். மூடிய இமைகளுக்குள்ளிருந்து வழிய வேண்டும் காதலின் வெள்ளத்தில் முங்கு நீச்சல் அடித்துக் கரையேறிய நிறைவு! அணைத்திருக்கும் கரங்களுக்குள் ஒருவருக்கொருவர் உயிர் ஒடுங்கிக் கொள்ளவேண்டும்.

முத்தமிட்டுத் தீராமல் மோதிக்கொண்டே இருக்கும் கடலலைபோல் நானும் தேடிக்கொண்டே இருக்கின்றேன் நான் உள்ளொடுங்கும் தருணங்களை!

எத்தனை தேக்கியும் விழிகளுக்குத் தப்பிக் கொண்டே இருக்கின்றது குருடன் கண்ட சிற்பமாய்! கழுத்தறுபட்ட ஆட்டினின்று கொப்புளிக்கும் குருதியாய்ப் பொங்கிக் கொண்டே இருக்கின்றது தீராக்காமம்!
Related Posts with Thumbnails