சனி, 2 அக்டோபர், 2010

கொங்கை முகங்குழைய... (வயதுவந்தோர் மட்டும்)காமம்...! ஒற்றை வார்த்தையைச் சுற்றிச் சுழல்கிறது ஒழுக்கம்சார் உலகம்! காமம் என்பது வெறும் நுகர்வாய் மாற்றப்பட எதிர்விளைவாய் வெடிக்கின்றன பண்பாட்டு குண்டுகள். ஒரு பூவின் மலர்ச்சியாய் இயல்பாய் இருக்கப்பட வேண்டியது செயற்கையாய் ஊதிப் பெருக்கப்பட்டு வாழ்வின் கணந்தோறும் நிறைத்து மூச்சுமுட்ட வைக்கின்றது.

காமம் என்ற சொல் மனதில் காட்சிப்படுத்தப்படுகையில் பல திசைகளில் பாயத்துவங்குகின்றது நினைவெனும் காட்டுக்குதிரை!

காமத்திலிருந்துதான் கடவுளுக்கான பயணம் துவங்குகிறது என்கிறார் ஓஷோ. காமத்தைக் குட்டையாக்கித் தேக்கிவைக்கப்பட்ட கற்பனைகள் அழுகி நாற்றமெடுக்க சாக்கடையாய் வாழப் பழகிவிட்ட நாமோ அவரை வெறும் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம். திராவிடர்களின் ஆதிக் கலாச்சார மரபிலிருந்துதான் காமம்சார்ந்த தாந்த்ரீக விஷயங்களை உள்ளடக்கி அதர்வணவேதம் படைக்கப் பட்டது.

தந்த்ரா என்று ஒரு ரகசிய மார்க்கம் பௌத்தத்தின் ஒரு பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டது. காமத்திலிருந்து கடவுளுக்குச் செல்லும் பயணத்தின் தேடல்களை உள்ளடக்கிய தந்த்ரா இன்றும் பலரால் வியாபார நோக்கமாக மாற்றப்பட்டு வெறும் காமநுகர்வினை வர்ணக் காகிதங்களில் கட்டித் தரும் காமதேனுவாகிவிட்டது.

"Chastity is nothing but lack of opportunity" என்று வேடிக்கையாய் சொல்வார் பெர்னாட்ஷா.காமம் தவறென்று கற்பிக்கப்பட்டு பாலியல் வறட்சிக்குள் தள்ளப்பட்ட சமூகம், ரகசியமாய் "ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று புதிய வேதம் பாடிக் கொண்டிருக்கின்றது.

காமம்பாடும் இலக்கியங்களும், காமம் சொட்டும் கலைக் கோயிலகளும் செழித்திருந்த காலம் போய் கழிவறைக் கிறுக்கல்களே இலக்கியமாய்க் கற்பிதம் செய்யப்படுகின்றது.

எனக்கு ஒரு கதை நினைவிலாடுகின்றது;

ஒரு துறவியும் அவரது சீடனும் ஆற்றைக் கடக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளை. ஆற்றிலோ வெள்ளம் தலைக்குமேலே போகின்றது. நீந்திக் கடக்கலாம் என்று முடிவெடுக்கும்போது ஒரு இளம்பெண்ணின் குரல். துறவியைப்பார்த்து அவள் சொல்கிறாள் "சுவாமி! எனக்கு நீந்தத் தெரியாது. தயைசெய்து என்னையும் அக்கரை சேர்ப்பீர்களா?" அக்கரை சேர்க்கிறேன் பேர்வழி என்று  இளம்பெண்கள்மீது அக்கறை காட்டும் இக்காலத் துறவி அல்ல அவர்; நிஜமாகவே அவர் துறவி! சற்று யோசித்தவர் சரி எனச் சொல்லி அவளையும் சுமந்துகொண்டு நீந்தி அக்கரையில் இறக்கிவிட்டு வழியனுப்புகிறார்.

சிறிதுதூரம் சீடன் மௌனமாகக் குருவைத் தொடர்கிறான். பின் மெதுவாய்த் தயங்கித் தயங்கிக் கேட்கிறான் "குருவே! தாங்களோ துறவி! தாங்கள் ஒரு இளம்பெண்ணை சுமந்து வந்தது சரியா?" என்று.

மெல்லப் புன்னகைத்த குரு சொல்கிறார் " நான் அவளை அப்போதே இறக்கிவிட்டேனே? நீ இன்னுமா சுமந்து வருகிறாய்?!" என்று.

இப்படித்தான் நாமும் கணந்தோறும் காமத்தைக் கற்பனையில் சுமந்து திரிகிறோம்.

காமத்தை இயல்பாய் அதன் அழகு மிளிரப் பாடிய தமிழ் இலக்கியங்கள் கணக்கிலடங்கா.

பெரும்பாலோர் ஆணின் காமத்தை செய்வினையாகவும் (active), பெண்ணின் காமத்தை செயப்பாட்டுவினை(passive) ஆகவுமே வர்ணிக்கையில் புகழேந்திப்புலவர் நளவெண்பாவில் தமயந்தியின் காமத்தை செய்வினை (active) யாக வர்ணிக்கிறார்:

நளன் மிகப்பெரும் வீரன்! இருளைக் கிழித்துப்பாயும் மின்னல்போலப் பாய்ந்துசெல்லும் வேலைக் கொண்டவன்! போர்க்களத்தில் வீரமாய்க் களமாடும் நளனின் விம்மித்து அகன்ற மார்புகளின் மீது வனப்புமிக்க கொங்கைகளை மோதி கண்கள் தனது கூந்தலின்மேலும், நளனின் உயிர்மீதும், நீண்டு விரிந்துபோய்த் தன் செவிமீதும் அலைமோதக் காதல் பெருக்கிக் கலவிச் சண்டை செய்கின்றாளாம் தமயந்தி!

"குழைமேலுங் கோமான் உயிர்மேலுங் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள – இழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்
வல்லோடுங் கொங்கை மடுத்து."


அடுத்த பாடல் இன்னும் அழகு! என் மனதில் என்றும் நீங்காத ஒரு பாடல்!

நளனுடைய படை யானைப்படை. களங்களில் மிகுந்த பிளிறல் சத்தங்களோடு போரிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும். ஆனால் நளனுடைய அதிகாரமெல்லாம் போர்க்களங்களில் மட்டும்தான். பள்ளியறையில் நடக்கும் போரில் தமயந்தியின் போர்க்கருவிகளே ஆட்சி செய்கின்றனவாம். என்ன மாதிரியான கருவிகள்?! குங்குமமும், சந்தனமும் குழைத்துப் பூசப்பட்ட வளமையான கொங்கைகள்! காதுவரை நீண்டு பார்வையிலேயே காதலனை விழுங்கிச் செரித்துப்போடும் கண்கள்! அவளது வளையல்கள் எழுப்பும் கிண்கிணி நாதம்தான் இங்கு போர்முரசு!

பகைவர்களை எப்போதும் கொல்லும் யானைப்படைவேந்தனோடான கலவிப்போரில் அவனுடைய மார்புகளோடு மோதி அவளின் கொங்கைகள் குழைகின்றன! காரிருளாய் அவிழ்ந்து கலைந்து விரிகிறது அவள் கூந்தல்! போர்முரசாய் ஒலிக்கின்றன அவளது வளையல்கள்! காமத்தில் சிவந்த அவளது கண்கள் நீண்டு அலைபாய்கின்றன!

"கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கயற்கண் ஓடிச் செவிதடவி – அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து."


செயற்கையாய்க் குப்பிகளில் அடைக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் போன்றதல்ல காமம்! அது ஒளி புக முடியாக் காட்டுக்குள் பூத்திருக்கும் ஒற்றைப்பூ! நுகரத் தேவை, நீண்டு நெடிதான தேடல்....! துடைத்துவிட்டுத் தூக்கியெறியும் காகிதமல்ல... எல்லாம் ஒடுங்கிப் போய் மனம் அசைவற்றுப் போகும் உள்ளொளிப் பயணம்! "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்பது கடவுளுக்கல்ல.... காமத்திற்கே பொருந்தும்.

தென்றலின் மென்மையாய்த் துவங்கும் காமத்தின் பயணம் சூறைக்காற்றாய் மாறி சாத்திரக் கட்டுகளை சாய்க்கவேண்டும். பொருதிய உடல்களில் மூச்சு மட்டுமே மெல்ல ஓடிக் கொண்டிருக்க வேண்டும். மூடிய இமைகளுக்குள்ளிருந்து வழிய வேண்டும் காதலின் வெள்ளத்தில் முங்கு நீச்சல் அடித்துக் கரையேறிய நிறைவு! அணைத்திருக்கும் கரங்களுக்குள் ஒருவருக்கொருவர் உயிர் ஒடுங்கிக் கொள்ளவேண்டும்.

முத்தமிட்டுத் தீராமல் மோதிக்கொண்டே இருக்கும் கடலலைபோல் நானும் தேடிக்கொண்டே இருக்கின்றேன் நான் உள்ளொடுங்கும் தருணங்களை!

எத்தனை தேக்கியும் விழிகளுக்குத் தப்பிக் கொண்டே இருக்கின்றது குருடன் கண்ட சிற்பமாய்! கழுத்தறுபட்ட ஆட்டினின்று கொப்புளிக்கும் குருதியாய்ப் பொங்கிக் கொண்டே இருக்கின்றது தீராக்காமம்!

26 பேரு கிடா வெட்டுறாங்க:

வானம்பாடிகள் சொன்னது…

ரொம்ப நளினமா சொல்லியிருக்கீங்க. சபாஷ்.

கமலேஷ் சொன்னது…

அழகா பேசி இருக்கீங்க...பேசவேண்டியதை..

kuwaittamilan சொன்னது…

அருமை!


http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post.html

என்னது நானு யாரா? சொன்னது…

அழகாக சொல்லாட்சிப் புரிந்திருக்கும் விந்தைமனிதனே! நீ வாழி! பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திச் சொல்லி விட்டீர்கள்.

அருமை நண்பா! அருமை! அழகாக இருக்கிறது பதிவு! பகிர்விற்கு நன்றிகள்!

பத்மா சொன்னது…

நல்ல தொரு போஸ்ட் ...

இயல்பாகவுள்ளது .நன்று

KVR சொன்னது…

நல்லா எழுதி இருக்கிங்க :-)

தமிழ்ப்பறவை சொன்னது…

நல்லா இருக்கு பாஸ்... :-)

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

நண்பரே மிகச்சிறந்த இடுகை.நான் உணர்ந்து படித்தது நண்பா. ///கழுத்தறுபட்ட ஆட்டினின்று கொப்புளிக்கும் குருதியாய்ப் பொங்கிக் கொண்டே இருக்கின்றது தீராக்காமம்///இடுகை முழுவதும் மிகச்சிறந்த சொல்லாடல்கள்.நான் உங்களின் எழுத்தில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.வாழ்த்துக்கள் நண்பரே

ரம்மி சொன்னது…

அருமையான மொழி வளம்! இது போன்ற வாழ்வியல் பதிவுகளே, இணையத்தில், நல்ல நிறைவைத் தருகிறது! வாழ்த்துக்கள்!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தம்பி பின்றீங்க... மிகுந்த அனுபவசாலிகள் தொட தயங்கும் விசயங்களை மிக அழகாக சொல்லியிருகிறீர்கள்.. காமத்தை மிக சுலபமாக கடக்க ஒரு வழி இருக்கு. அது அதனை மிக தீவிரமாக அனுபவித்தலில் இருந்து கற்றுக்கொள்ளலாம். இதனை ஓஷோ மிக விரிவாக விளக்கியிருக்கிறார்...

வெறும்பய சொன்னது…

நல்லா எழுதி இருக்கிங்க

ஹேமா சொன்னது…

மிக மிக நயமாக சொல்லவேண்டியதைச் சொல்லியிருக்கீங்க விந்தையாரே !

பெயரில்லா சொன்னது…

சங்ககால பாடலோடு சிறந்ததொரு பதிவு ....கலைக்கண்ணோடு..

விஜய் சொன்னது…

இலைமறைவு காயாய் காமத்தை உணர்த்திய விதம் அருமை நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

NADESAN சொன்னது…

"கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்பது கடவுளுக்கல்ல.... காமத்திற்கே பொருந்தும்.
உண்மை நல்ல தெளிந்த பதிவு

நன்றியுடன்
நெல்லை பெ . நடேசன்
அமீரகம்

விந்தைமனிதன் சொன்னது…

இந்தளவு வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. எழுதி போஸ்ட் செய்தபோது முழுத் திருப்தி இன்றியே போஸ்ட் செய்தேன். நன்றி நண்பர்களே!

@வானம்பாடிகள்

நன்றி பாலாண்ணே

நன்றி கமலேஷ்

நன்றி குவைத் தமிழன்

நன்றி என்னது நானு யாரா..

நன்றி சகோதரி பத்மா

நன்றி கேவிஆர்

நன்றி தமிழ்ப்பறவை

நன்றி நந்தா ஆண்டாள்மகன்

நன்றி ரம்மி

நன்றி செந்திலண்ணே

நன்றி வெறும்பய

நன்றி ஹேமா

நன்றி தமிழரசி

நன்றி விஜய்

நன்றி நடேசன் சார்

ஜெகதீஸ்வரன். சொன்னது…

அருமை.

http://sagotharan.wordpress.com/

skamaraj சொன்னது…

அன்பின் விந்தை மனிதன் வணக்கமுங்க.கலக்கிட்டீங்க.பழந்தமிழ்பாடல்களோடு எழுத்தின் வசீகரத்தால்
காமம் சுழன்று சுழன்று அடிக்கிறது.மிக முக்கியமான பதிவு.

Iam in Internet சொன்னது…

காமத்தைக் கொச்சையின்றி இலக்கிய நளினம் சொட்ட, அருமையான நளவெண்பா வெண்பாக்களின் எடுத்துக்காட்டோடு அருவிபோல மனத்திற்கு இதமான மொழிநடையில் சொல்லியிருக்கிறீர்கள். இல்லை!இல்லை!பாடியிருக்கிறீர்கள். இனிமை! இனிமை.

sivakumaran சொன்னது…

விந்தை மனிதா
உங்கள்
விந்தை அடக்க முடியாததின் விளைவா
இல்லை
விந்தை இலக்கியத்தின் விழைவா?
எதுவானாலும்
பதிவில் லயித்தது என் சிந்தை.
-சிவகுமாரன்

Denzil சொன்னது…

காமம் - நறுமணம், துர்நாற்றம் இரண்டு வகையாகவும் கொடுக்கவும், கொள்ளவும் முடியும். நறுமணம் கமழும் நல்லதொரு பார்வை இது. காமத்திற்கும் தமிழழகு, காமத்திலும் தமிழழகு. ரசித்தேன்.

denim சொன்னது…

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Gopi Ramamoorthy சொன்னது…

\\நளனுடைய அதிகாரமெல்லாம் போர்க்களங்களில் மட்டும்தான். பள்ளியறையில் நடக்கும் போரில் தமயந்தியின் போர்க்கருவிகளே ஆட்சி செய்கின்றனவாம். என்ன மாதிரியான கருவிகள்?! குங்குமமும், சந்தனமும் குழைத்துப் பூசப்பட்ட வளமையான கொங்கைகள்! \\

ஒங்க ரேஞ்சுக்கு இல்லன்னாலும் என் ரேஞ்சுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வேட்டைக்காரன் படத்தில் கரிகாலன் காலைப்போலே பாட்டில் ஒரு இடத்தில் வரும் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

"மாராப்பு பந்தலிலே மறந்ஜிருக்குது சோல
சோலை இல்லை சோலை இல்லை ஜல்லிக்கட்டு காளை"

அவை சோலை இல்லை இளைப்பாற. உன்னைக் காமப் போரில் வீழ்த்தக் கூடிய படைக் கலங்கள். அதுவும் எப்படிப்பட்டவை? ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போன்றவை.

Sham சொன்னது…

Hi.. Anna Sham Here... Romba nalla iruku... Athuvum Antha thuravi and seadan kathai..appram antha kamatha pathi romba allaga sollei irukeinga hats off... I am experting more.. all the best....


Regards
Sham M
9500727155

Riyas சொன்னது…

SUPERB POST...

dheva சொன்னது…

கட்டுரை முழுதிலும்...

காமத்துக்குள்ளேயே போகாம காமத்தை பற்றி பேசியிருபப்து போல தோன்றுகிறது. அங்கே என்ன நிகழ்கிறது? அல்லது என்ன நிகழ வேண்டும்? ஏன் நிகழ வேண்டும்? தந்திரா எப்படி காமத்தை கடவுளாகச் சொல்கிறது....

இதை விளக்கியிருந்தால் கட்டுரை இன்னும் மிளிர்ந்திருக்கும் தம்பி!

Related Posts with Thumbnails