திங்கள், 4 அக்டோபர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 4/10/101) கொஞ்சம் சந்தோசமாவும் வியப்பாவும்தான் இருக்கு! "கொங்கை முகங்குழைய..." பதிவுக்கு இந்தளவுக்கு வரவேற்பு இருக்கும்னு நெனச்சிக்கூட பாக்கலீங்க. நெறைய மக்கள் புதுசா வந்து பின்னூட்டம் போட்ருக்காங்க. எல்லாருமே சொன்ன ஒரு விஷயம் விரசமில்லாம இருக்குதுன்னுதான். "பரவால்லடா பயலே! ஓரளவு நல்லாத்தான் எழுத ஆரமிச்சிட்ட போல! மண்டையில கனத்தை ஏத்திக்காம இப்பிடியே மெயிண்டெயின் பண்ற வழியப் பாரு" அப்டீன்னு எம்முதுகுல நானே தட்டிக்கிட்டேன். படிக்கப் படிக்க மயக்குற விஷயம்ங்க தமிழ். நாச்சியார் திருமொழின்னு சொல்லப் படற ஆண்டாளோட திருப்பாவையில வர்ற "குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்..."னு துவங்குற பாட்டையும் (இதுல இறையோடு ஒன்றுகலப்பது அப்டீங்குற விஷயத்த காமமா உருவகப்படுத்தி சொல்லி இருப்பாங்க!), "யாதும் ஊரே" னு துவங்குற சங்கப்பாடல்ல வர்ற "நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர்..." ( தமிழனோட தத்துவ தரிசனத்தை அழகா காட்டுற வரிங்க!) அப்டீங்குற வரிகளையும் படிச்சிப் பாருங்களேன். இன்னும் எவ்வளவோ இருக்குங்க... நமக்கு எல்லா பாட்டையும் படிக்குற அளவு ஞானம் இல்லங்குறதால தெரிஞ்ச ரெண்டு மட்டும் சொல்லி இருக்கேன்.

2) அயோத்தி தீர்ப்புக்கு பொறவு ராமர் பொறந்த எடம்னு கோர்ட்டே ஒத்துக்கிச்சி அப்டீன்னு பெருமை பேசுற குரல்களும் காதுல விழுது. நண்பர் ஒருத்தரு திடீர்னு சாமி வந்தாப்புல "பாத்தியாடா இந்திய கலாச்சாரம், பண்பாட்டோட மகிமைய! எவ்ளோ பாரம்பரியம்? ஞானவெள்ளம்? நம்ம மதத்துல" அப்டீன்னு சொல்லி ஆட ஆரமிச்சிட்டாருங்க. இன்னொரு பக்கம் பாத்தா "ஒலகத்துலயே பெரிய ஜனநாயகநாடு நாங்க... நீதிமன்றத் தீர்ப்புக்கு மக்கள்ளாம் எவ்ளோ அமைதியா தலைவணங்கி ஏத்துக்கிறோம் பாத்தியளா?" ( அவனவன் கஞ்சிக்கு சாவுறப்ப கோயிலா முக்கியம்னு பொலம்புறது யாருக்கும் கேக்கல) அப்டீன்னு ஜனநாயகம், தேசபக்தின்னு பீலா உடவும் ஒரு குரூப்பு. இன்னும் கொஞ்ச பேரு வல்லரசு மெதப்புல திரியிறாங்களாம்.

வல்லரசு, ஜனநாயகம், இந்த ஈரவெங்காயம்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நாட்டுல எத்தினி பேரு முழுசா மூணுவேள சாப்புடுறான்னு கணக்கெடுத்தா பாதி சனத்தொகைக்கு மேல அரைவயிறுதானாம். சரியான போஷாக்கும், மருத்துவ வசதியும் இல்லாம சாவுற கொழந்தைங்க எண்ணிக்கையும் இந்தியாவுல அதிகமாம்... ஹ்ஹ்ம்ம்ம்... பட்டாமணியாருக்கு வாக்கப்பட்டும் படுக்க பாயி இல்ல... பத்தருக்கு வாக்கப்பட்டும் அறுக்கத் தாலி இல்ல!

3) காமன்வெல்த்... காமன்வெல்த் அப்டீங்குறாங்களே அப்டீன்னா என்னன்னு நம்ம வக்கீலண்ணன் ஒருத்தர்ட்ட கேட்டேன். அது வேறொண்ணுமில்லையாம். முன்னாள் பிரிட்டிஷ் பேரரசு ஆட்சிக்கு கீழ இருந்த நாடுகளோட கூட்டமைப்புதானாம். அரசபரம்பரையில இருக்குறவங்கதான் வழிவழியா காமன்வெல்த் தலைவரா ( இப்பக்கி ரெண்டாம் எலிசபெத் ராணி) இருப்பாங்களாம். சொதந்தரம் வாங்கியும் அடிமைப் புத்தி போவல பாருங்க!

இப்பேர்ப்பட்ட கீர்த்திவாய்ந்த காமன்வெல்த் கேமுக்காவ ஒலகம்பூரா இருந்து பெரியாளுவோ எல்லாம் வாராங்க... அந்த நேரத்துல அசிங்கமா இருக்கப்பிடாதுன்னு சொல்லி சொல்லி டெல்லியில இருக்குற பிச்சைக்காரங்க, ரோட்டோரமா பலூன் விக்கிறவங்க, பேப்பர் விக்கிறவங்க, இந்த மாதிரி அன்னாடங்காச்சிகளையெல்லாம் ராவோட ராவா அடிச்சித் தொரத்திட்டாங்கன்னு நூஸு கேள்விப்பட்டேன். வேற யாருதான் டெல்லியில இருக்கலாமாம்?அரசாங்கத்தையும், மக்களையும் ஏமாத்தி கொள்ளையடிச்சி 'தொழிலதிபரு'ன்னு திரியிறவங்க, மைதானம் கட்டுற காசுல பொண்டாட்டிக்கு ஒண்ணு, வெப்பாட்டிக்கு ரெண்டுன்னு வீடுகட்டி ஏப்பம் விட்ட அரசு அதிகாரிங்க, இன்னும் இந்தந்த மாரி பணம் படைச்சவங்கதான் இருக்கணுமாம். போட்டிய துவக்கிவைக்க வந்த இளவரசருக்கு ஏக வரவேற்பாம்... சும்மாவா சொன்னாங்க... எனம் எனத்த பாக்கும், எச்சி எலைய நாய் பாக்கும்னு!

4) ஒருவழியா நானும் எந்திரன் பாத்துட்டேன். ஈறப் பேனாக்கி பேனப் பெருமாளாக்குற வித்தைய ஷங்கருகிட்டயும், சன் பிக்சர்கிட்டயும்தான் கத்துக்கணும். சுஜாதாவோட "என் இனிய இயந்திரா" நாவல் கொடுத்த பாதிப்பும், பிரம்மாண்டமும் படத்துல இல்லங்கிறதுதான் என்னோட அபிப்பிராயம். கதை, திரைக்கதை, இயக்கம்னு ஷங்கர் பேர் வருது. ஆனா இது "என் இனிய இயந்திரா" கதைதானே? ஏகப்பட்ட சீன்ல எனக்கு "ஜீனோ" தான் ஞாவகத்துக்கு வருது.

Cinema is an old whore, like circus and variety, who knows how to give many kinds of pleasure. Besides, you can't teach old fleas new dogs.
Federico Fellini


அதுனால ஒருவாட்டி பாக்கலாம்னுதான் தோணுது.

5) "ஆப்பிள் ஐ- ஃபோன் 4" அப்டீங்குற சீனாவுல விக்கிற தன்னோட தயாரிப்புல ஆப்பிள் நிறுவனம் அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவோட பகுதி அப்டீன்னு மேப்ல காட்டி இருக்காங்களாம். சீனாவும் இப்பல்லாம் அருணாச்சலப்பிரதேசம் தன்னோட பகுதின்னு ஒத்துக்குற மேப்பை மட்டும்தான் அனுமதிக்கிறாங்களாம். வடகெழக்கு எல்லையில லொள்ளு பண்றதுன்னு பத்தாதுன்னு இப்போ தெற்கு எல்லையிலயும் காலூன்ற வேலைய தெறமையாவே செஞ்சிட்டு இருக்காங்களாம். இந்திய வெளியுறவுக் கொள்கைய வகுக்குறவங்க ஈழத்தை அழிக்கிறதுலயும் காஷ்மீர்ல பாகிஸ்தானோட பஞ்சாயத்து பண்றதுலயும் மட்டும்தான் குறியா இருக்காங்க. இதையெல்லாம் விவாதிக்க வேண்டிய பாராளுமன்றத்துல சம்பளம் பத்தலன்னு சண்டை போடுறதுலதான் எம்.பிங்க நோக்கமா இருக்காங்க. நல்லாத்தான் சொல்லியிருக்காங்க "பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்"னு.

“Every government is a parliament of whores. The trouble is, in a democracy, the whores are us.” -  P. J. O'Rourke

6) எனக்குப் பிடிச்ச கவிதை. வறுமையோட கொடுமைய நடுமண்டையில அடிச்ச மாதிரி சொல்ற இந்தக் கவிதை கவிஞர் சிற்பியோடது.

அப்பா இல்லாத
அநாதைக் குடும்பத்தில்
ஆறு வயிறுகள் ஒவ்வொரு நாளும்
பற்றி எரிந்தன.

அம்மா நகைகளை விற்றாள்
அப்புறம் காய்கறி விற்றாள்
தலையில் விறகு சுமந்து விறகு விற்றாள்
பிறகு...?
கற்பை விற்றாள்
எங்களுக்கு
கால்வயிறு நிரம்பியது

17 பேரு கிடா வெட்டுறாங்க:

பழமைபேசி சொன்னது…

ப்ச்... கடைசில இப்படிச் சொல்லி... மனசு கனக்குது...

மாதவராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. உங்கள் எழுத்துக்களில் ஒருகோபம் வெளிப்படுகிறது. அது வேண்டும். அதிலும் - //ஈறப் பேனாக்கி பேனப் பெருமாளாக்குற வித்தைய ஷங்கருகிட்டயும், சன் பிக்சர்கிட்டயும்தான் கத்துக்கணும்.//
-என மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

காமராஜ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
காமராஜ் சொன்னது…

கடைசிக்கவிதை குத்துது விந்தை மனிதன்.காமன்வெல்த்,எந்திரன்வெல்த்,ராமர் வெல்த் இந்த மூன்றும்தான் இப்போதைய ஐந்தாட்டுத்திட்டம்.அதென்ன 1:2 RATIO
சிரிச்சு முடியல.நல்ல கோபம்.

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

நல்ல எழுத்துக்கள். கவிதையின் கோபம்- இன்றைய சமூகத்தின் நிலையும் அதுதான்.தொடருங்கள் நண்பா

vimalanperalai சொன்னது…

எழுத்துக்களின் வீச்சு பிரமிக்க வைக்கிறது.வாழ்த்துக்கள்
கடைசி கவிதை நம் சமூகத்தின் அவலம்.

பெயரில்லா சொன்னது…

காமம் அழகுதான்.அதை பிய்த்துப் பார்க்காதவரை.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

புரட்சியாளர்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள் எந்திரன் படத்தை பார்கின்றனர்.. பின்பு மட்டமான விமர்சனம் வைக்கின்றனர்.. புறக்கணிக்க தெரியாதவனுக்கு புரட்சி ஒரு கேடு...

காமன்வெல்த் பற்றிய காமன் மேன்களின் அக்கறை பற்றி ஆளும் மேன்களுக்கு எந்தக் கவலையும் இல்லை..

வயது வந்தோருக்கு அல்லது 18+ எனப்போட்டால் கூட்டம் வரத்தான் செய்யும் தம்பி ...

வெறும்பய சொன்னது…

கடைசிக்கவிதை... என்னமோ செய்கிறது...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

/////காமன்வெல்த்... காமன்வெல்த் அப்டீங்குறாங்களே அப்டீன்னா என்னன்னு நம்ம வக்கீலண்ணன் ஒருத்தர்ட்ட கேட்டேன். அது வேறொண்ணுமில்லையாம். முன்னாள் பிரிட்டிஷ் பேரரசு ஆட்சிக்கு கீழ இருந்த நாடுகளோட கூட்டமைப்புதானாம் ///////

தகவலுக்கு நன்றி !


இறுதியாக தாங்கள் ரசித்தக் கவிதை என்னை காயப்படுத்தி விட்டது . அருமை . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

விந்தைமனிதன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
விந்தைமனிதன் சொன்னது…

//புரட்சியாளர்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள் எந்திரன் படத்தை பார்கின்றனர்.. பின்பு மட்டமான விமர்சனம் வைக்கின்றனர்.. புறக்கணிக்க தெரியாதவனுக்கு புரட்சி ஒரு கேடு...//

புரட்சி பத்தி ரொம்ம்ம்ப 'தெளிவா' புரிஞ்சி வெச்சிருக்கீங்க போல! எந்திரன புறக்கணிக்கணும்னு ஒண்ணும் விமர்சனம் சொல்லலியே நானு! அவ்ளோ பணம் செலவு பண்ணி எடுத்த அளவு பிரம்மாண்டம் இல்லங்கிறதுதான் நாஞ்சொன்னது. 'என் இனிய இயந்திரா' நாவல் படிச்சதுனால எனக்கு இந்த உணர்வு. "புறக்கணி!" கோஷம் போட்ருந்தா அத இந்த மாதிரியா எழுதி இருப்பேன்?!

அடுத்ததா நீங்க சொன்னது வாஸ்தவம்தான் 18+ போடலன்னா இந்த அளவு ஹிட்ஸ் இருந்திருக்காதுதான்.

Rathi சொன்னது…

You can't teach an old dog new tricks என்பது பொதுவா எல்லா விடயத்திற்கும் பொருந்தாவிட்டாலும், பகிர்ந்துகொண்ட அத்தனை விடயங்களுக்கும் பொருந்தும். ஏனோ அநியாயத்திற்கு "Pavlov's drooling Dog" என்பதும் எந்திரன் விடயத்தில் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

எங்களைப் போன்ற சராசரிகளின் சமூக கோபம், இயலாமை இரண்டையும் வெளிப்படுத்துகிறது உங்கள் எழுத்து.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அருமையான பதிவு.குறிப்பாக எந்திரன் பற்றிய சாடலும் வருத்தமும் அழகு,வாழ்த்துக்கள் சார்

வானம்பாடிகள் சொன்னது…

உச்சி மண்ட அடிதான். பழமொழியெல்லாம் நச்

Denzil சொன்னது…

@ கே.ஆர்.பி. செந்தில், கடந்த பதிவில் பின்னூட்டமிட்ட பெண்கள் உட்பட எல்லாரும் 18+ கண்டு வந்தவர்கள் என்றா சொல்கிறீர்கள்? பேசாமல் உங்கள் பணம் தொடரில் கூட 18+ போட்டுவிடுங்கள். கூட்டம் பிய்த்துக்கொள்ளட்டும். பதிவுகளை வாசிப்பவர்கள் குறித்த நல்ல புரிதல்.

பார்வையாளன் சொன்னது…

" பின்பு மட்டமான விமர்சனம் வைக்கின்றனர்.. புறக்கணிக்க தெரியாதவனுக்கு புரட்சி ஒரு கேடு..."

அருமை நண்பா... பாராட்ட வார்த்தை இல்லை

Related Posts with Thumbnails