ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இப்படியும் கதை எழுதலாம்


காலையில் கருவத்தோப்புக்குப்போய் வெளிக்குப்போக உட்கார ஆரம்பித்தபோது பிடித்தது இந்தச்சனியன். ஒற்றைவரி மட்டும் தொண்டைக்குள் சிக்கி அதைக் கவிதையாக மாற்றவேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததில் 'வந்த' காரியமும் சரியாகக் கைகூடாமல் போனது.'ப்ளாக் எளுதி ஒரு மாசம் ஆகப்போவுது. ஒரு கவிதய கிறுக்கிப் போடலாமுன்னா பாத்தாக்கா ம்ஹூம்...ஏற்கனவே எளுதிவெச்ச ஒரு கட்டுரையும் பாதிலயே நிக்கிறதுதான் மிச்சம்...'

'எளவு...இந்த ப்ளாக் எளுத எந்த எமகண்டத்தில ஆரமிச்சோமின்னே தெரிய மாட்டேங்குது. ஒவ்வொரு பதிவ எளுதுறப்பையும் மூலம் வந்தவன் மாரி முக்கித் தொலைய வேண்டியிருக்கு. ஆட்டாம்புளுக்கை அளவுக்குக்கூட வந்து தொலைய மாட்டேங்குது. நாமெல்லாம் என்னத்த எளுதிக்கிளிச்சி... பொஸ்தகம் போட்டு... வெளங்கிரும்'

விரக்தி மூளையைத்தின்ன இருபத்தி எட்டாவது முயற்சியாக உதைத்தும் ஸ்டார்ட் ஆகித் தொலைக்காத கட்டபொம்முராசா காலத்து (எத்தனை காலம்தான் 'ஹைதர்காலத்து' என்று க்ளிஷேத் தனமாக எளுதித் தொலைப்பது!) பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு சிகரெட் பாக்கெட்டை வெளியே எடுத்தேன்.

"எலேய் ராசாராமா! நல்லாருக்கியாடா"

சட்டென சத்தம் கேட்டுப் பதறியதில் கோல்ட் ஃப்ளேக் கிங்க்ஸ் சிகரெட்டை எதிர்காற்றுக்கு அணையாமல் பற்றவைக்கும் முயற்சி சிதறிப் போனதில் எரிச்சலாகித் திரும்பினேன்.

ஏற்றிக்கட்டிய முண்டாசும், தோளில் மண்வெட்டியுமாக நான்கைந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்திருந்த தங்கராசு உற்சாகமிகுதியில் கத்திக்கொண்டு வந்ததைப் பார்த்தவன் சட்டென மலர்ந்தேன். எட்டாப்புல இருந்து பன்னெண்டாப்பு வரை கூடப்படிச்சவன். பன்னெண்டாப்புல பிஸிக்ஸு பிச்சிக்கிச்சி, கணக்கு பிணக்காச்சி என்று மண்வெட்டியைத் தூக்கியவன்.

"நான் நல்லாருக்கேண்டா பங்காளி. நீ எப்டி இருக்க? எங்கேருந்துட்டுடா வார"

"ஆமா... களுத கெட்டா குட்டிச்செவரு...மம்பட்டிய தூக்கிக்கிட்டு மவராசா வேலக்காடா போவப்போறேன். வாய்க்கா தூந்துபோயி கெடந்திச்சி. அதத்தான் வெட்டி உட்டுட்டு வாரேன். அது கெடக்கட்டு... நீ என்னமோ மெட்ராசுல இருக்கறதாவுல்ல நம்ம பயலுவோ சொன்னானுவோ! அங்க என்னடா பண்ணிட்டு இருக்க? எதாவது சம்பாத்தியம் இருக்கா... இல்ல அங்கயும் கோமாளித்தனம் பண்ணிட்டு திரியிறியா?"

"என்ன பங்காளி இப்படி கேட்டுப்புட்ட? நான் மெட்ராசுல பிசினஸ் பண்ணிட்டு இருக்கேண்டா." மனதுக்குள் திட்டிக்கொண்டே சொன்னேன்.

"என்ன எளவோ போ. காசுக்குப் புடிச்ச கேடு. ங்கொப்பாரு ரயில்வேயில மட்டையடிச்சி எஞ்சினீருக்கு படிக்கவெச்சாக்க நீ என்னடான்னா பிசினசு பண்றேன் பெருங்காயம் பண்றேன்னு திரியிற"

'இன்றைக்கு இவன் வாயைக் கொஞ்சம் பிடுங்குவோம்...ஏதாச்சும் கிராமத்துக் கதையாவது தேறும்' என்று நாக்கையும் காதையும் தீட்டிக்கொண்டேன்.

"சரி சரி... அத உட்றா பங்காளி.. இந்த வருசம் சாவடியெல்லாம் எப்டிடா ஏதாச்சும் தேறுமா?"

"இந்தா... அந்த வயித்தெரிச்ச கதையெல்லாம் ஏண்டா கேக்குற? வார்டு மெம்பர்லேருந்து மந்திரிமாரு வரைக்கிம் நம்ம தாலியத்தாண்டா அறுக்கிறானுவோ. ஆத்துல தண்ணியக் காணோம். அப்பிடியே வந்தாலும் வாய்க்கால்ல கன்னுக்குட்டி மூத்திரம் அளவுக்குக் கூட காங்கல. வாய்க்கா வெட்டின காண்ட்ராக்டரு முத்துசாமி இப்போ ரெண்டாவது மாடி கட்டிக்கிட்டு இருக்கான். இந்த வருசம் வெள்ளக்காடு. ஒண்ணும் மிச்சமில்லாம அளுகிப்போச்சுடா. இந்தப்பயலுவோ என்னன்னாக்கா ஏக்கருக்கு ரெண்டாயிரம் பிச்சை போடுறேங்கிறானுவோ.. ஆமா என்னடா இதெல்லாம் ரொம்ப அக்கறையா விஜாரிக்கிறே?"

"ஹி..ஹி... ஒண்ணுமில்ல பங்காளி. நா இப்பல்லாம் இண்டர்நெட்ல கொஞ்சம் எளுதிட்டு இருக்கேன். அதான் நம்ம நாட்டைப் பத்தி ஒரு கட்டுரைய எளுதிப்போடலாம்னு..."

"எலேய்! இந்த பித்துக்குளித்தனத்த நீ இன்னும் உடலையாடா? ஏண்டா எட்டாப்புல அந்த ரேவதி புள்ளைக்கு கவிதையோ கருமாந்திரமோ ஒரு கடுதாசிய எளுதி நீட்டி, நம்ம மூக்குறிஞ்சான் வாத்தியாரு முட்டிக்கிக் கீளயே சாத்தி எடுத்தாரே... அப்பயே நீ இதையெல்லாம் மூட்டை கட்டி இருப்பேன்னுல்ல நெனச்சேன். எலேய் ஒண்ணு சொல்றேன் நல்லதுக்குக் கேட்டுக்க.. ஒளுங்கா காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி சம்சாரியா குடுத்தனம் நடத்துற வளியப் பாரு.. இப்பவே ஊர்ல ஆளாளுக்கு ரயிலு மொவன் கிறுக்கனாத் திரியிறானாம்லன்னு கேக்க ஆரமிச்சிட்டானுவோ... பாத்துக்க"

'ச்சை... ஒரு எழுத்தாளனின் பெருமை ஏன் எப்போதும் உள்ளூருக்குத் தெரிவதில்லை? ஹ்ம்... சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?'

"சுட்ட சட்டி சட்டுவம்..." அட இது நல்ல தலைப்பா இருக்கே! பேசாம இப்பிடியே ஆரமிச்சிடலாமே!' கொஞ்சூண்டு உற்சாகம் வந்தது. சரி சரி... இந்தப் பயலை உட்றப்படாது... இன்னும் கொஞ்சம் கிண்டித்தான் பார்க்கலாமே!

"எலேய் ஆக்கங்கெட்ட கூவை! எளுத்துடா எளுத்து. களுதைக்கு தெரியுமாடா கற்பூரவாசனை? நாங்கல்லாம் சமூகத்தோட மனச்சாட்சிடா. எவ்ளோ கஸ்டப்பட்டு ஒண்ணொண்ணையும் எளுதிட்டு இருக்கோம்... நீ என்னடான்னா இப்பிடி அசிங்கப்படுத்திட்ட... "

"கிளிச்சீங்க. எளுதுனவன் ஏட்டக் கெடுத்தான் பாடுனவன் பாட்டக் கெடுத்தான். போக்கத்தப் பயலுவளா. எலேய் நாங்களும் பன்னெண்டாவது வரைக்கிம்  படிச்சவங்கதாண்டா. உங்க லெச்சணம் தெரியும்டா. நாலு பக்கம் எளுதிட்டு வாரவன் போறவனையெல்லாம் இளுத்து வெச்சிப் படிக்கச் சொல்லி உசுரை வாங்குவீங்களே. இந்த எளுத்தாளப் பயலுவளையெல்லாம் நாஞ்சாவறதுக்குள்ள ஒருநாளு இளுத்தாந்துவெச்சி சேத்து ஒழவு ஓட்டச் சொல்லிறணும்டா. நீங்க பாட்டுக்கு கண்ட கருமாந்திரத்தையும் எளுதிடுறீங்க... படிக்கிற பயலுவபூராம் மந்திரிச்சி உட்ட கோழி கணக்கா திரியிறானுவ. இந்தா பாரு... எவனோ ஒருத்தன் தாடியெல்லாம் வெச்சிட்டு சாமியார் கணக்கா எளுதுறானே... பேருகூட என்ன எளவோ வரும் ராசகுமாரனோ... மந்திரிகுமாரனோ... எம்பொண்டாட்டி அதைப் படிச்சிட்டு விடியவிடிய அவங்கதையில வார புருசனுவ மாரி சரிசமமா வெச்சி பேசமாட்டேங்கிறேன்னு பாயச் சொரண்டுறா... அப்பறம் யாரோ சங்கரநாராயணனாம்ல... அந்தாளுக்கு வேற உருப்படியா வேலக்களுத இல்லையாடா... ஏதோ ஒரு கதையில சாரதான்னு ஒரு குட்டியப் பத்தி எளுதிட்டாராம்ல...சுருட்டமுடியும் குட்டப்பாவாடயுமா... கட்டுனா அந்தமாரி ஒருத்தியத்தான் கட்டுவேன்னு நம்ம செட்டியாரு ஊட்டு எளங்கோவன் ஒத்தக்கால்ல நிக்கிறானாம். ஹூம்... குண்டி களுவத் தெரியாம கெடந்த பயலுவபூரா என்னமா ஆயிட்டானுவ!..."

'அய்யய்யோ!  வேலில போற ஓணானை வேட்டிக்குள்ள இழுத்துவிட்ட கதையாப்போச்சே! என்னா வாங்கு வாங்குறான் பய...' பேய்முழி முழிக்க ஆரம்பித்தேன்.

"சரி உடு களுதைய..  ஆமா அந்த ரேவதிபுள்ள இப்ப எப்டிடா இருக்கு?" (வந்த கேட்டுக்கு இந்த பிட்டையாவது போட்டு வாங்குவோம்.... பால்யகாலக் காதல்கதையாச்சும் எளுதிப் போடலாம்!)

"எலேய் தெரியும்டா நீ கேப்பன்னு... 'என்னத்தச் சொல்லி ஏத ஒரைச்சாலும் கந்தனுக்கு புத்தி கவுட்டிக்குள்ள'ன்னு சும்மாவா சொன்னானுவ! இன்னுமாடா அந்தப்புள்ளய மறக்கல? அது ஒன்ன மாரிக்க இல்லடா... வாத்தியாரு ட்ரெயினிங்கு முடிச்சி இப்ப நம்ம சம்முவவிலாசுலதான் வேல செய்யிது. கல்யாணங்கட்டி ரெண்டு ஆம்பளப்பசங்களும் ஆச்சுடா. புருசனும் வாத்தியாருதாண்டா. நீயும் இருக்கியே... கவித எளுதுனதுக்கு பதிலா அந்தபுள்ளய கடத்திட்டாவது போயிருக்கலாம்..."

இப்போதுதான் மனம் கொஞ்சம் பேதலிக்க ஆரம்பித்தது. ஒருவேளை கதை எழுதுவதும், கவிதை எழுதுவதும் சுய இன்பம் செய்வது போலத்தானோ?! ச்சை... இவனோடு இனி பேசக்கூடாது. ஒரு படைப்பாளியை எவ்வளவு எளிதாக கீழ்மைப்படுத்தி விடுகிறார்கள்! என்னைச் சொல்லவேண்டும்... எழுதுகிறவன் பேசாமல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கற்பனைக் குதிரையை கால்கிளாஸ் சாராயம் ஊற்றியாவது ஓட விட்டிருக்கவேண்டும்... ஃபீல்ட் வொர்க் செய்கிறேன் பேர்வழி என்று இனி கிளம்பக்கூடாது. எவனாவது எதையாவது சொல்லப்போய் மனசு பாட்டுக்கு பெரிய புத்தன் மாதிரி தத்துவவிசாரணை செய்யப் புறப்பட்டு விடுகின்றது... யசோதரை கிடைக்க வேண்டியதுதான் பாக்கி!

"சரி பங்காளி... நான் கெளம்புறேன்... வீட்டுல எங்கப்பாரு வேற பைக்க காணோம்னு கத்திக்கிட்டு இருப்பாரு" முள்ளில் சேலையைப் போட்டாயிற்று... பதமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?!

"சரி போய்த்தொலை. வருவா கெட்டுத் திரியாம சீக்கிரம் ஒளுங்கா பொளக்கிற வளியப் பாரு.." என்றபடிக் கிளம்பியவன் ஒரு நாலைந்து எட்டுவைத்துத் திரும்பிச் சொன்னான்...

"எலேய்! முந்தாநாளு ஒன்னோட எதுத்த ஊட்டு மைதிலிகிட்ட அந்த ரேவதிபுள்ள பேசிட்டு இருந்திச்சிடா."ராசாராமன் என்ன பண்ணிட்டு இருக்கார்... நல்லாருக்காரா"னு கேட்டது கொஞ்சமா எங்காதுலயும் உளுந்திச்சி..." என்றபடி நடக்கத் துவங்கினான்.

இம்முறை ஒரே உதையில் ஸ்டார்ட் ஆன பைக்கை வேகமாக ஓட்டிச்சென்று வீட்டில் விட்டவன் " நாய்க்கி வேலையில்ல நிக்கிறதுக்கும் நேரமில்ல... சாப்பாட்டுக்குக்கூட வராம எங்கடா போய்த் தொலஞ்சே?" என்ற அப்பாவின் குரலை உதாசீனித்து அஷ்டாங்க யோகம் செய்வதுபோன்று கம்ப்யூட்டர் முன்னமர்ந்து தட்டத் தொடங்கினேன்...

"கொஞ்சதூரத்தில் இருந்து ரேவதி ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள். அப்போதுதான் குளித்து வந்திருப்பாள் போலும்! காதோரம் மஞ்சள் செம்பருத்தி...."14 பேரு கிடா வெட்டுறாங்க:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

1st cut

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

m m story.. or thodar kadhai?

மதுரை சரவணன் சொன்னது…

kathai nirkum idam revathi ..............so ithu oru thodarkathai poola irukke... vaalththukkal

Anbu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Anbu சொன்னது…

ஜி, இதுக்கு ஒரு கருத்து சொல்லாம்னு நினச்சேன், உங்க எழுத்தோட ஓட்டத்துல அது மறந்து போச்சு.

ஆனா ஒன்னு,
//"எலேய்! இந்த பித்துக்குளித்தனத்த நீ இன்னும் உடலையாடா? ஏண்டா எட்டாப்புல அந்த ரேவதி புள்ளைக்கு கவிதையோ கருமாந்திரமோ ஒரு கடுதாசிய எளுதி நீட்டி, நம்ம மூக்குறிஞ்சான் வாத்தியாரு முட்டிக்கிக் கீளயே சாத்தி எடுத்தாரே... அப்பயே நீ இதையெல்லாம் மூட்டை கட்டி இருப்பேன்னுல்ல நெனச்சேன். எலேய் ஒண்ணு சொல்றேன் நல்லதுக்குக் கேட்டுக்க.. ஒளுங்கா காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி சம்சாரியா குடுத்தனம் நடத்துற வளியப் பாரு.. இப்பவே ஊர்ல ஆளாளுக்கு ரயிலு மொவன் கிறுக்கனாத் திரியிறானாம்லன்னு கேக்க ஆரமிச்சிட்டானுவோ... பாத்துக்க"//

இத நான் வழிமொழிகிறேன்....

மோகன்ஜி சொன்னது…

என்ன லகுவான எழுத்து? என்ன உயிரோட்டம்? அற்புதமான படைப்புக்கு வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran சொன்னது…

கதையை படிக்க படிக்க தங்கராசு கஞ்சா கருப்பாக மனதில் தோன்றினார்...

Rathi சொன்னது…

ம்ம்ம்ம்.... கதையோட்டம் நல்லாருக்கு. ஆனாலும் அடுப்புக்கு தப்பி நெருப்புக்குள் விழுந்த மாதிரி ஓர் முடிவு போல் தெரிகிறது. தொடருமோ?

வெறும்பய சொன்னது…

உயிரோட்டமாய் உலவுகிறது எழுத்துக்களின் தோரணை..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்லா இருக்கு

அர. பார்த்தசாரதி சொன்னது…

அய்யா , இது போல் பலமுறை தங்களுக்கு எழுத விஷயம் கிடைக்காதது போல தொடங்கியுள்ளீர் , இது சற்று எரிச்சலை கிளப்புகிறது என்றாலும் ,தங்களுடைய நடை நன்றாகவே உள்ள பட்சத்தில் போனால் போகிறது என்று விட்டு விடுகிறேன்.அலை பேசியில் நீங்கள் பேசும் வேட்டி நியாயத்தை ஒரு மெகா தொடராக எழுதலாம்

ஹேமா சொன்னது…

விந்தையாரே...மூலம் வருதுன்னு சொன்னது உண்மைதான்.வாழ்வின் மூலம்/ஒரு கதையின் மூலம் வந்திருக்கு !

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இப்படியும் கதை எழுதலாமா?..

அப்புறம் அன்புவை நானும் வழிமொழிகிறேன்..`

பா.ராஜாராம் சொன்னது…

தி ஒன் மோர் ராசாராமா?

ராசாராமுகளுக்கு ஈச பூத்தது மாதிரி எதிரிகள் ராசாராமா. ஊண்டி எந்திருச்சு அடி மாமு. :-)

Related Posts with Thumbnails