திங்கள், 4 ஏப்ரல், 2011

நான்...கிரிதரன்! - 1


ட்ரம்மில் அடுத்த லோடு தோல்களை ஏற்றிக் கொண்டிருந்தான் முரளி. சுறுசுறுப்பான பையன். மதியம் ஒரு மணியில் தொடங்கி இரவு மணி இரண்டு ஆகியும் துறுதுறுவென்று வேலை செய்துகொண்டிருக்கிறான். எனக்கு கண்கள் இரண்டும் கோவைப்பழமாகச் சிவந்து எரிந்துகொண்டிருந்தன. தொடர்ந்து முப்பத்தி ஆறு மணி நேரமாக ரூமுக்கே போகாமல் கண்டினியூவஸ் ஷிப்ட். மதியம் தின்ற அரை வேக்காட்டு லெமன் சோறு செரிக்காமல் வயிற்றோடு யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது.

ஓரமாய் வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். கொஞ்சம் என் முன்கதைச் சுருக்கத்தைச் சொல்லி விடுகிறேன்.

அது சென்னையின் ஒதுக்குப்புறமாக குரோம்பேட்டைப் பகுதி நாகல்கேணியில் இருந்த ஒரு சின்ன லெதர் ஃபேக்டரி. பதப்படுத்தப்பட்ட தோல் அதாவது ரா மெட்டீரியலை பர்ச்சேஸ் செய்து அதன் அடுத்தகட்ட ப்ராசஸை மட்டும் எடுத்துச் செய்யும் ஒரு ஜாப் வொர்க் யூனிட். இரவு பகல் இருபத்திநாலு மணிநேரமும் மூன்று ஷிப்டுகளை ஓட்டினால்தான் போட்ட முதல் கைக்குத் திரும்ப வரும். அரசாங்கத்தின் பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டின் கிடுக்கிப்பிடிகளால் தோல்பதனிடும் தொழில் நசித்துப் போய்க் கொண்டிருந்த காலகட்டம்.

நான் கிரிதரன். தஞ்சை மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, முட்டிமோதி ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் லெதர் டெக்னாலஜி படித்துமுடித்து இப்போது ஆயிரத்தி எண்ணூறு ரூபாய் சம்பளத்துக்கு இந்தக் கம்பெனியில் ட்ரெய்னீ டெக்னீஷியனாகச் சேர்ந்து நாற்பத்தியிரண்டு நாள்களாகின்றன.வீட்டில் இருந்து வாங்கிவந்த எட்டாயிரம் ரூபாயை வைத்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்து நானும் என் நண்பனும் தங்கி இருக்கிறோம்.

இருபத்தியிரண்டு வயதில் எனக்கு வாழ்க்கை புரிய ஆரம்பித்திருக்கிறது. எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என் பெற்றோர் எனக்கு வறுமையைக் காட்டியதில்லை. ஓரளவு மதிப்பெண்களுடன் வாணியம்பாடியின் அந்த தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் லெதர் டெக்னாலஜி சேர்ந்தபோது என்னை பயமுறுத்திய இரண்டு விஷயங்கள் ஆங்கிலம், மிக சகஜமாய்ப் பழகும் பெண்கள். இரண்டுமே எனக்குக் கைவரும்போது நான் இறுதியாண்டில்! பிடிவாதன், மூர்க்கன், நினைத்ததை எப்பாடுபட்டாவது அடையவேண்டும் என்ற வெறியுடையவன். ஐந்தரை அடி உயரம், கருப்பு நிறம், லேசான திக்குவாய். இதுதான் நான்.என்னைப்பற்றி இன்னும் நீங்கள் போகப்போகத் தெரிந்து கொள்வீர்கள்.

ஜெனரல் ஷிப்ட் என்றுதான் பேர். எட்டுமணிக்குப் போனால் ரூமுக்குத் திரும்ப இரவு பதினோரு மணியாகிவிடும். மடிப்புக் குலையாத உடுப்புடன் வேலை, பல ஆயிரங்களில் சம்பளம் என்றெல்லாம் கனவுகளோடு எஞ்சினியரிங் காலேஜுக்குள் நுழைந்த நாட்கள் மனதில் புகைபடிந்த பழைய புகைப்படம் போல் ஆகிவிட்டன. கம்பெனிக்குள் நுழைந்தவுடனேயே மாற்று உடுப்புக்களை போட்டுக்கொண்டு அன்றைய லோடினை ட்ரம்மில் ஏற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்யவேண்டும். ட்ரம்மில் ஓட்டுவதற்கான கெமிக்கல்களை செலக்ட் செய்து அவற்றை தனித்தனி பக்கெட்டுகளில் ஊற்றி மிக்ஸ் செய்து ட்ரம்மில் ஏற்றப்பட்ட தோலுடன் கலந்துவிட்டு, அடுத்தடுத்து க்வாலிட்டி கண்ட்ரோலுக்காகக் காத்திருக்கும் தோல்களைப் பார்க்க ஆரம்பித்தால், முடிப்பதற்குள் ட்ரம் ஓடி முடிந்திருக்கும். இறக்கி அவற்றைக் காயவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். மீண்டும் அடுத்த லோடு, அடுத்த ட்ரம், கெமிக்கல்கள்.

நான் படித்த லெதர் டெக்னாலஜி துறையில் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்த காலகட்டம். எப்படியோ முட்டிமோதி இந்த கம்பெனியில் வேலையில் சேர்ந்தாகிவிட்டது. இப்படியே இன்னும் இரண்டு வருடங்களை ஓட்டினால் அடுத்தடுத்து சின்னச்சின்னதாக வளர்ச்சிகள், அடுத்தடுத்த கம்பெனி... முப்பது வயதை நெருங்கும்போது ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்தாயிரத்தைத் தொடும் சம்பளம்... யோசிக்கவே அயர்ச்சியாய் இருந்தது. எத்தனை கனவுகள்! எல்லாம் கசங்கிப்போய் இன்று இந்தக் கம்பெனியில்..... படிப்பதற்காக வாங்கிய மூன்று லட்சம் ரூபாய் கடனும், அதற்கான வட்டியும் நினைவுகளில் வந்துவந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றது

எனக்கு வாய்த்த ஷிப்ட் சூப்பர்வைசர் ஆனந்தன் என்கிற சனியனின் டார்ச்சர் வேறு. தலையில் கருங்கல்லைத் தூக்கிப்போட்டுவிடலாமா என்று தோன்றும். சுமார் இருபது பேர் வேலைபார்க்கும் இந்த கம்பெனியில் அவன் கண்ணுக்கு நான் மட்டும்தான் உறுத்துகிறேன் போல! டிப்ளமோ படித்துவிட்டு சூபர்வைசராக இருக்கும் அவன் வேலைக்கு டிகிரி படித்த நான் சவாலாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்று இல்லைதான். கூடுதலாக இன்னொரு காரணமும்....

பத்மினி!

நாட்டுக்கட்டை, நாட்டுக்கட்டை என்பார்களே, இவளைப்பார்த்தால் அதன் முழு அர்த்தமும் விளங்கும். கருந்தேக்கு மரத்தில் கடைந்தெடுத்த சிற்பம்போல் இருப்பாள். இருபது வயது. கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆகிறது. புருஷன் குடிகாரன். இரண்டு பாட்டில் சாராயம் இருந்தால் பெற்ற தாயாரைக்கூட விற்றுவிடுவான். பத்மினியின் இரவுகள் கண்ணீரில் மிதந்தன.

நான் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த நான்காம் நாளில் பத்மினி என்னை அவளுக்குள் உறிஞ்சிக்கொண்டாள். அவள் தாபத்திற்கு நானா, இல்லை என் காமத்துக்கு அவளா என்று தெரியவில்லை. ஸ்டோர் ரூமிலும், மொட்டைமாடி இரவுகளிலும், அவளது ஒதுக்குப்புறக் குடிசையிலும் முப்பது சொச்சம் நாட்கள் கரைந்து காணாமல் போயின.

சிகரெட்டை காலின்கீழ் நசுக்கி உள்ளே நுழைந்தேன்.

என்னைப் பார்த்தவுடன் ஏதோ எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பத்மினி அருகே வந்தாள்.

ஒரு சின்ன பக்கெட்டில் அந்த லோடுக்குத் தேவையான கெமிக்கல்களை எடுத்து பத்மினியிடம் நீட்டினேன். பக்கெட்டை வாங்குவதற்குப் பதிலாய் புடவை முந்தானை விலகி அருகில் வந்து "என்ன இன்னைக்கு கண்டுக்கவே மாட்டேன்கிறீங்க?" என்று லேசாய் உரசினாள். சட்டென அவளைத் தள்ளி விட்டேன். அவள் முகம் சுருங்கியது. சட்டென அவள் முகம் வாடியதைப் பார்த்து.. “முப்பது மணி நேரம் தொடர்ந்து வேலை பாத்திட்டிருக்கேன்.. புரியாம உரசுறியே.."

"புரிஞ்சிதான் உரசினேன்..." என்று முணுமுணுத்துக்கொண்டே அவள் நகர...
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்

கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து இன்றுவரை எனக்கு இருந்த ஒரே வடிகால் பத்மினிதான். என் கோபம், வெறி, மன அழுத்தம் எல்லாவற்றையும் இவள் உடலில்தான் இறக்கி வைக்கிறேன். அன்புக்கும் பகிர்தலுக்கும் ஏங்கும் ஜீவன். கிடைத்தவுடன் கன்றுக்குட்டிபோல துள்ளிக்குதிக்கிறாள். 'அவளைப்போய்த் திட்டி...ச்சே...'

அடுத்தடுத்து ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்து முடித்து நிமிர்ந்தேன். இன்னும் அரைமணிநேரம் ஓய்வெடுக்கலாம். 'சரி...பத்மினியையாவது சமாதானப்படுத்தலாம்' என்றெண்ணி...

"பத்மினி... எனக்கு டீ எடுத்துட்டு வா" என்றேன்

டீ கொண்டுவந்தவளோடு பேசிச் சிரித்துக் கொண்டே ஊதிக்குடிக்கத் தொடங்கினேன்.

"என்னடி மூஞ்செல்லாம் இன்னிக்கு ரொம்ப பளபளப்பா இருந்திச்சி. புருஷன் செமையா கவனிச்சானோ!" என்று அவளை வம்பிழுத்தேன்.

"அவன் கிழிச்சான். நாலு கிளாஸ் சாராயத்தை எறக்குனா அவனுக்கு எது எங்க இருக்குன்னே தெரியாது... அப்புறம் என்னத்தைப் பண்ணி...."

லோடு ஆர்டருக்கு வெளியே போயிருந்த ஷிப்ட் சூபர்வைசர் ஆனந்தன் உள்ளே நுழைந்தான். பத்மினியை மடக்க முயன்று தோற்றதால் ஏற்கனவே அவனுக்கு இருந்த இயலாமையின் எரிச்சல் இப்போது எங்கள் இருவரையும் சேர்ந்து பார்த்ததில் அவனுக்கு அதிகமாகி இருக்கவேண்டும்

"ஏய் கிரி இங்க வா."

ரூமுக்குள் கூப்பிட்டவனை எரிச்சலாய் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

"எத்தனாவது லோடு ஓடிட்டு இருக்கு"

"மூணாவது லோடு இப்பத்தான் சார் ஏத்தியிருக்கேன். இன்னும் டூ அவர்ஸ் ஆகும்"

"வேலையப் பாக்காம என்ன அவகிட்ட புடுங்கிகிட்டு இருக்கே? எப்ப பாத்தாலும் கைல புடிச்சிக்கிட்டே திரிவியோ?"

எனக்கு சுர்ரென்று ஏறியது. கையில் இருந்த டீ தம்ளரை அவன் முகத்தில் விசிறினேன். சுடச்சுட அலறினான்.

"ங்கோத்தா. சூபர்வைசர்னா அந்த வேலைய மட்டும் புடுங்கு போதும். என் வேலைய நான் ஒழுங்கா செய்யலன்னா அத மட்டும் கேளு. நான் எவகிட்ட படுக்கிறேன், எவகிட்ட இளிக்கிறேன்னு மாமா வேலை பாக்குற வேலையெல்லாம் வேணாம். போடா நீயும் உன் கம்பெனியும்"

சூபர்வைசர் ரூமை விட்டு வெளியே வந்த என்னை பத்மினி திகிலாய்ப் பார்த்தாள். என் பேகை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்.

(பயணம் தொடரும்...)

10 பேரு கிடா வெட்டுறாங்க:

Philosophy Prabhakaran சொன்னது…

அட்ராசக்க... தொடர்கதையா... ம்ம்ம் நடக்கட்டும்... கதையா அல்லது உங்கள் வாழ்க்கை வரலாறா...???

Rathi சொன்னது…

அதிக வர்ணனைகள் இன்றி சம்பவங்களோடு ராஜாராமனின் எழுத்துக்கேயுரிய தனி சிறப்புடன் கதை இயல்பாய் நகர்கிறது. தொடருங்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ராஜாராமன் - கதை நடை இயல்பாகச் செல்கிறது. கிரிதரனின் ஆற்றாமையும் ஆதங்கமும் கோபமும் நன்கு எழுதப்பட்டிருக்கிறாது. தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

விந்தைமனிதன் சொன்னது…

நன்றி பிலாசபி பிரபாகரன்

இது வாழ்க்கை வரலாறுதான். ஆனால் என்னுடையது அல்ல. என் நண்பனுடையது! An Adorable character!

நன்றி ரதியக்கா.

இது வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவனின் கதையாதலால் சம்பவங்கள் நிறைந்திருக்கும்

நன்றி சீனா அய்யா!

உங்கள் வாழ்த்துக்களும், முதல் பின்னூட்டமும் என்னை உற்சாகப்படுத்துகின்றன

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

குஞ்சாமணியின் கதைகளா????

Anbu சொன்னது…

ஜி, “அவருக்கு” இன்னும் கல்யாணம் ஆகல, நினைவு இருக்கட்டும்.

VJR சொன்னது…

ஓ.. லெதர் டெக்னீசியன். good o'.நானும்.

நல்ல எழுத்து நடை. பார்க்கனும். பார்ப்பேன்.

மோகன் குமார் சொன்னது…

இந்த வார தமிழ் மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்; நானும் தஞ்சை மாவட்டம் தான். இவ்வளவு நாள் உங்களை தெரியாமல் போயிற்றே

ஜோதிஜி சொன்னது…

வாழ்த்துகள் ராஜாராமன். நல்ல வாய்ப்பு. சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்க. தங்களின் மொழித் திறமையை ஆளுமையை அறிய ஆவல்.

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!!

Related Posts with Thumbnails