சனி, 14 ஆகஸ்ட், 2010

மறைக்கப்பட்ட வரலாறுகள்- சுதந்தர தினத்தையொட்டி சில நினைவுகள்: பகுதி 1


“You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all of the people all the time.”
                    -  Abraham Lincoln

இன்றையநாள் முடிவுக்கு வரும்போது துவங்கியிருக்கும் இன்னுமொரு சம்பிரதாயமான சுதந்தர தினக் கொண்டாட்டங்கள்!

குண்டுதுளைக்காத கூண்டுக்குள் நின்று சுதந்தரதின உரைநிகழ்த்தி வாழ்த்துவார்கள் ஜனாதிபதியும் பிரதமரும்; "வைஷ்ணவோ ஜனதோ"வும், "வந்தேமாதரமு"ம் ( வந்தே ஏமாத்துறம்?!) ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்; 'இன்றைய சுதந்தர தினச் சிறப்பு நிகழ்ச்சிகள்' அனைத்தையும் பெப்சி கோலா, கொக்கோகோலா மற்றும் இந்துஸ்தான் லீவர் வழங்க 'இந்தியன்' வகையறா திரைக்காவியங்கள் மீண்டும் ஒளிபரப்பப்படும்; திவசத்துக்கு திவசம் தூசு தட்டப்படும் தாத்தாவின் புகைப்படமாய்த் தேடித் தூக்கிவரப்பட்டு கவுரவிக்கப் படுவர் சில தியாகிகள்; என்றும்போல இன்றும் 'அன்னாடங்காய்ச்ச'க் கிளம்புவார்கள் விவசாயிகளும் , கூலித்தொழிலாளிகளும் இதரர்களும்!

இந்திய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள 15.08.1947 க்குப் பின் மறைக்கப்பட்டுள்ள குருதி வீச்சத்தையும் துரோகங்களின் முடைநாற்றத்தையும் 'தேசபக்தி' செண்ட் அடித்து மறைத்துவிட்ட நிலையில் சில விஷயங்களை நினைவுபடுத்திப் பார்க்க விரும்புகிறேன்:

எத்தனை எத்தனை வீர வரலாறுகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து துடைத்தழிக்கப் பட்டுள்ளன! எவ்வளவு அரசியல் பேரங்கள் தியாக வரலாறெனச் சித்தரிக்கப் பட்டுள்ளன!! இந்த மறைக்கப் பட்ட வரலாறுகள் மட்டுமே இந்திய சுதந்தரத்தின் உண்மையான கதையை விவரிக்கும்.மறைக்கப்பட்ட ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டத் தொடங்கினால்...!

தென்னிந்தியாவின் முதல் சுதந்தரப் போராளி என்று போற்றப்படுகிறான் பூலித்தேவன். நெற்கட்டுஞ்செவ்வலை நெற்கட்டான்செவ்வலாக்கி ஆதிக்கத்துக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பிய வீரன் அவன்.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு பூலித்தேவனின் நெடிதுயர்ந்த இரண்டு தோள்களாய் இருந்து களமாடிய ஒண்டிப்பகடையையும், காலாடியையும் தெரியும்?

கட்டப் பொம்மு ராஜாவின் பேரைக் கேட்டாலே உடனே சிவாஜி கணேசனின் வசனங்களை ஏற்ற இறக்கங்களோடுப் பேசிக்காட்டும் எத்தனை பேருக்கு சுந்தரலிங்கத்தைத் தெரியும்?


இதோ இரண்டாம் உலகப்போருக்குப் பின் புதிதாய்ப் பதவியேற்ற தொழிற்கட்சியின் தலைவரும் பிரதமருமான அட்லி இந்தியாவுக்குச் சுதந்தரம் அளிக்கவேண்டியதன் அவசியம் பற்றி பிரிட்டன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்:

"இந்தியாவில் தேசவிடுதலை என்ற அலை ஓங்கி உயர்ந்து அடிக்கிறது. அது கற்களையும் பாறைகளையும் மோதி நொறுக்குகிறது. ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். இது 1920 அல்ல (ஒத்துழையாமை இயக்கம்). 1930 அல்ல ( உப்புச் சத்யாக்கிரகம்). 1932 அல்ல ( சட்டமறுப்பு இயக்கம்). 1941 அல்ல ( தனிநபர்ச் சத்யாக்கிரகம்). 1942 அல்ல ( ஆகஸ்டுப் புரட்சி). இது 1946 ( கப்பற்படைப் புரட்சி). ஒரு சுதந்தர தேசமாக வாழ இந்தியாவுக்கு உரிமை உண்டு."

ஒவ்வொன்றையும் கழித்துக் கொண்டே வந்த அட்லி ஏன் கப்பற்படைப் புரட்சியை முக்கியக் காரணமாகக் காட்டுகிறார்? அப்படி வரலாற்று முக்கியம் வாய்ந்த புரட்சியைப்பற்றி ஏன் இன்றைய வரலாற்றுநூல்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றன? அப்படிப்பட்ட புரட்சியின் முன்னோடிகளாக இருந்தவர்கள் யார் யார்?

இன்னும் ஏராளமான கேள்விகளைச் சுமந்துகொண்டு நான் நடக்கிறேன் விடைகளைத்தேடி... நாளை என்பதே எப்போதும் புதிர்களை விடுவிக்கும் என்ற நம்பிக்கையில்தானே நாம் நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றோம்!

"அன்பான தேசமே
உயர்த்தி அடைத்த
இரும்பு வேலியுள் இருந்து
எழுகிற எமது குரல்கள்
உங்களைக் கேட்பதெல்லாம்
போரிடுங்கள்!
அநீதிகளுக்கு எதிராக
போரிடுங்கள்
அடக்குமுறைகளுக்கு எதிராக!
போரிடுங்கள்
மனிதநேயத்துக்காக!"

        - சேரன்
                                                                                         தொடர்வோம்

11 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இங்கு சரித்திரம் மறைக்கப்பட்டு சாக்கடைகளுக்கு ப்ளெக்ஸ் வைக்கும் காலம் ...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

கெடா வெட்டு...!

அட்லீஸ்ட் மனிதநேயத்துக்காகவாவது போரிடமுடியாவிடினும் மனிதநேயத்தை சிறிதேனும் வளர்த்துக்கொள்ளவேனும் செய்வோம்..

கலாநேசன் சொன்னது…

நன்று. தொடருங்கள்...

சௌந்தர் சொன்னது…

இன்னும் ஏராளமான கேள்விகளைச் சுமந்துகொண்டு நான் நடக்கிறேன் விடைகளைத்தேடி...///
உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்..


உங்கள் எழுத்துகள் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது

புருனோ Bruno சொன்னது…

http://www.marxist.com/1946-rebellion-indian-navy150903.htm

http://en.wikipedia.org/wiki/Royal_Indian_Navy_Mutiny

துளசி கோபால் சொன்னது…

தொடருங்கள். காத்து நிற்கிறோம்.

'உண்மை'ச் சரித்திரங்கள் எங்கே என்று தேடவேண்டும் அப்படி ஒன்று எழுதப்பட்டிருந்தால் :(

C.Rajapandiyan சொன்னது…

அருமையான பதிவு

C.Rajapandiyan சொன்னது…

நானும் வேதாரண்யம் தான் நண்பரே . உங்கள் கிராமத்தின் பெயரை தெரிந்துகொள்ளலாமா ?

விந்தைமனிதன் சொன்னது…

நன்றி மரு.புருனோ, உங்கள் சுட்டிகள் நிச்சயம் உபயோகமானவை... எனக்குத் தொடரவும்.....படிப்போருக்கு மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும்...

நன்றி துளசிகோபால்.... வரலாறு என்பது மக்களால் ஆனது, மன்னர்களால் அல்ல என்பது மார்க்ஸின் தீட்சண்யம்.. மக்களைத்தேடிச் செல்லுவோமே!

நன்றி தோழர் ராஜபாண்டியன்,

எனக்கு வேதாரணியம்- திருத்துறைப்பூண்டி (வாய்மேடு வழி) சாலையில் ஆயக்காரன்புலத்துக்கு அடுத்துள்ள பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி கிராமம். வாய்ப்பிருந்தால் சந்திப்போம். நீங்கள் தற்போது எங்கு இருக்கின்றீர்கள்?

ஜெய்லானி சொன்னது…

@@@கே.ஆர்.பி.செந்தில் --//இங்கு சரித்திரம் மறைக்கப்பட்டு சாக்கடைகளுக்கு ப்ளெக்ஸ் வைக்கும் காலம் ..//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

செழியன் சொன்னது…

வணக்கம்
படிக்கத்தூண்டும் வரிகள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Related Posts with Thumbnails