சனி, 7 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-5 : பால்யம்

குழந்தைகளின் உலகம் ஒரு மாயக்கோட்டைக்குள் இருக்கின்றது. அதனைச் சுற்றி ஏழுமலைகளும், ஏழு கடல்களும் இருக்கின்றன. அதனைக் காவல்காக்கும் பூதமானது எப்போதும் குழந்தைகளின் கண்ணை மட்டும் குத்தாது! அங்கு இயற்பியல், உயிரியல் விதிகளுக்கும், மனதில் லௌகீகத்தின் சாயல் அழுந்தப்படிந்த பெரியவர்களுக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா.... நீங்கள் எப்போது அந்த உலகத்தில் இருந்து தூக்கி வீசப் பட்டீர்களென்று?!

தாத்தாக்களை உங்களுக்கு நினைவிருக்கின்றதா.... வெட்ட வெட்டத் தலைமுளைக்கும் அசுரனையும், தலைக்குமேல் ரத்தினங்களை வைத்துக்கொண்டு பறந்து திரியும் பாம்புகளையும், அண்டபேரண்டப் பட்சிகளையும், கிளிக்குள் உயிர்புதைத்துத் திரிந்த மந்திரவாதிகளையும் உங்களோடு ஸ்னேகிதப்படுத்திய தாத்தாக்கள் இன்று எங்கே போய்விட்டார்கள்?

கனவுகள் மேகங்களென மிதந்து மிதந்து நிழல்தரும் உலகினில் உறவாட வேண்டிய குழந்தைகளை இன்று வார்ப்பச்சுகளினூடே வழிந்தோடும் உலோகக் குழம்பென இறுக்கமாய் மாற்றிவிட்டதன் குற்றவுணர்வை என்றேனும் உணர்ந்திருக்கிறீர்களா?

அவர்களின் சிறகுகளை மழுங்கச் சிரைத்து அதனிடத்தில் புத்தகப்பைகளைப் பொருத்திய குற்றத்தின் வீரியத்தை எண்ணி ஏங்கியிருக்கிறீர்களா என்றேனும்?

முதலீட்டியத்தின் கொடுங்கரங்களுக்கு நம்மை ஒப்புக் கொடுத்தது போதாதென்று அதன் நுகத்தடிகளுக்குள் நுழைந்துகொள்ளும் பயிற்சியாய் குழந்தைகளின் முதுகை புத்தகப்பைகளால் கூன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்!

"அவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்.. பிதாவே! அவர்களை மன்னியும்!" என்ற இறைமைந்தனின் வார்த்தைகளுக்கு நாம் தகுதியானவர்கள்தானா?

"வாருங்கள் தோழர்களே! அரங்கத்திலேயே புணரும் அங்க அசைவு நடனங்களில் இருந்தும், இந்திரிய வாசனை வழியும் திரையிசை வரிகளிலிருந்தும் குழந்தைகளை விடுவித்து, கதைகள் மிதக்கும் காட்டையும், விட்டு விடுதலையாகிப் பறப்பதற்கான சிறகுகளையும் குழந்தைகளுக்குத் திருப்பித் தருவோம்"

என்று இந்தக் கவிதையில் வாணியம்பாடி குலசேகரன் உங்கள் காதுக்குள் மெல்ல இறைஞ்சும் தொனி உங்களுக்குப் புரிகிறதா?

காடு

சிறுவனுக்கு காட்டின் கதையை
தந்தை சொல்ல ஆரம்பித்தான்
ஒரு காடு இருந்தது
அது மிகவும் பெரிதானது
காட்டிற்குள் சிறுவன் ஓடினான்
பாறைகளும் செடிகொடிகளும் அடர்ந்திருந்தன
அவற்றைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான்
அவனைப்பிடிக்க தந்தையும் சென்றான்
குன்று ஒன்று எதிர்ப்பட்டது
சிறுவன் ஒரே தாவில் மறுபுறம் குதித்தான்
பின்னாலேயே தந்தையும் வந்ததால்
கையைப் பிடித்து தாண்ட வைத்தான்
தந்தையால் நம்பவே முடியவில்லை
ஒரு நதி குறுக்கிட்டது
மகனும் தந்தையும் நிற்காமல்
நீரின்மேல் நடந்து கடந்தார்கள்
சிறுவன் வேகமாக மரங்களின் மீது
பறந்து கொண்டிருந்தான் தொடரும் தந்தை
கடைசியாக குகையை அடைந்தார்கள்
அங்கு ஒரு புலி காத்துக் கொண்டிருந்தது
சிறுவன் அதனுடைய வரிகளை
இழுத்து விளையாடத் தொடங்கினான்
தந்தை பயந்தபடி
குகைக்கு வெளியிலேயே அமர்ந்து
தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்
மகன் தூக்கத்திலேயே உம் கொட்டிக் கொண்டிருந்தான்.

3 பேரு கிடா வெட்டுறாங்க:

parthasarathy சொன்னது…

நாம் நினைத்தாலும் முடியாது நண்பா
இன்று நிலை வேறு , அன்றைய நிலை வேறு
என் மகனுக்கு நான் எதை காட்டி சோறு ஊட்ட ? நிலவை தவிர
என் மக்கள் மகிழ எதை ஊட்ட - செரலோக் தவிர
என் மக்கள் பார்க்க எதை காட்ட - டி வி தவிர

Unknown சொன்னது…

நான் இன்னும் என் பையனுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன்... அவனும் தன் கற்பனையில் எனக்கு கதை சொல்கிறான்...
ஆனால் தாத்தா, பாட்டி சொல்லும் கதைகள் அவன் கேட்க முடியவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது...

ஜோதிஜி சொன்னது…

நண்பரே

வெகுவாக பாதித்த எழுத்துக்கள். சிந்தனைகள்.

எந்த விமர்சனமும் தேவைப்படாத உங்கள் பணி தொடர வேண்டும்.

பெற்ற தாக்கம் அதிகம்

Related Posts with Thumbnails