ஏழிசைகீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும்காலம் யாவும்
உனக்காக நான் தான்
காவியவீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன்
கானம்... கானம்... ஜீவகானம்
ஜேசுதாஸ் காதுகள் வழியாக நெஞ்சம் நனைத்து வருடிக்கொண்டு இருக்கிறார். மெல்லிய தூறல் கிளப்பும் மண்வாசம்... இதமான போர்வையாய் தனிமையின் அரவணைப்பில்.... சின்னக் கோப்பையில் மேன்ஷன் ஹவுஸ்...
.............................
.............................
.............................
மௌனத்தின் கவிதையை எப்படி எழுத? தனிமைதரும் குளிர் சிலபோது நரம்புகளை மீட்டும்... சிலபோது குருதிக்குள் தீமூட்டும்... மனம் ஒரு கட்டுத்தறி தாண்டிய காளையெனப் பாய்ந்துகொண்டிருக்கிறது. கழிந்துபோன காலங்கள் யாவும் உதிர்ந்துபோன ரோமத்தினும் இழிந்து போனதாய்...
கடற்கரையில் ஓடி ஓடி மூச்சிளைக்க... கிளிஞ்சல்கள் மட்டுமே கைகளில்... அவ்வப்போது அகப்பட்ட ஆரஞ்சு மிட்டாய்களும்...
வாழ்க்கையென்றால் நோக்கம் இருந்தாக வேண்டுமா என்ன!
இருட்டைப் புசித்து மின்னும் பூனையின் கண்கள் எதைச் சொல்ல நினைக்கின்றன? துண்டுதுண்டாய் ஓடி மறைகின்றன வாக்கியங்கள்... வெட்டுப்பட்ட வார்த்தைகளின் ஊர்கோலத்தில் வாத்திய இசையாய் என்ன வாசிக்கலாம்?
விலக்கிப்போன கரங்களின் சூடு தேடி அலைகிறது தேகம்... சுருட்டுப்புகையின் வளையங்களூடே பயணிக்கிறது வாழ்க்கை...
ஆ! சாம்பல்கிண்ணி...! எங்கே போயிற்று? எரிந்துபோனதன் மிச்சங்களோடு? பாறைநிலத்தில் விதைக்க முயலும் புத்தகம் பதற்றத்தில் படபடக்கின்றதே...பாவம்!
வெளிச்சம் வேண்டாத விழிகளில் மிதக்கும் கனவுகள் வர்ணங்களைக் குழைத்துப் பூசிவிளையாடும்... நீரள்ளி வீசி குதிக்கும் குழந்தைகளும்...
என்ன முயன்றாலும் வார்த்தைகளுக்கு வழுக்கி கண்ணாமூச்சி காட்டும் நினைவோட்டம்... ஒன்றும் எழுதுவதற்கில்லை...
துயரங்களே ஸௌந்தர்யமாய்... சௌஜன்யமாய்... மெல்ல நடக்கிறது இரவு... பகலை மூடிய கைகளுக்குள் சர்வஜாக்கிரதையாய் இறுக்கிக் கொண்டே....ம்ம்ம்ம்
5 பேரு கிடா வெட்டுறாங்க:
/கழிந்துபோன காலங்கள் யாவும் உதிர்ந்துபோன ரோமத்தினும் இழிந்து போனதாய்.../
ரொம்ப பிரமாதம்.
/துயரங்களே ஸௌந்தர்யமாய்... சௌஜன்யமாய்... மெல்ல நடக்கிறது இரவு... பகலை மூடிய கைகளுக்குள் சர்வஜாக்கிரதையாய் இறுக்கிக் கொண்டே....ம்ம்ம்ம்//
நமக்கே நமக்கான இரவு..மனம் உள்ளேயும் வெளியேயும் ஆட்டம் காட்ட, சலனமற்ற உடலும், அலைபாயும் மனமுமாய் அது ஒரு அவஸ்தை. அது ஒரு சுகம். மெல்ல விடிகையில் கண் களைத்து மனம் களைத்து மனதில் உதிக்கும் இரவு.
சபாஷ்.
///வாழ்க்கையென்றால் நோக்கம் இருந்தாக வேண்டுமா என்ன!///
என்ன ஒரு கவிதை கொஞ்சும் வரிகள்! அடடா மிகவும் அருமை!!
நண்பரே! புதுசா கடை திறந்து எழுத வந்திருக்கேன். உங்கள போல பெரியவங்க வந்து படிச்சி பாத்து கருத்து சொல்லனும்னு கேட்டுகிறேன்.
நன்றி நண்பரே!
ஆரம்பம் முதல் மூச்சு விடாமல் படித்தேன்.மனதை பிசைகிற உணர்வு ...என்னவென்று சொல்லத்தெரியாமலே போகிறேன் !
இந்தப் பாடல் சோகத்தின் அதீதத்தை சுமந்து வருகிற பாடல் வைரமுத்துவின் பாடல் அது ஜேசுதாஸ் குரலில் கீதாஞ்சலியை பிரிந்த பெருந்துயரில் என்னை மேலும் மேலும் துயரில் தள்ளி சித்ரவதை செய்த பாடல் இது. சோகமான சமயங்களில் இம்மாதிரியான பாடல்களை தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
nanainjathu maathiri, sillunnu..
paataa? porulaa?
கருத்துரையிடுக