குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
சேரன் கணைக்காலிரும்பொறை (புறநானூறு-74)
கொடுமையானதோர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் சேரமாமன்னன் கணைக்காலிரும்பொறை. சுதந்திரத்தின் ஏக்கத்துக்காய் மனமும், சொட்டுத் தண்ணீருக்காய் நாவும் வறண்டிருக்கின்றன. காவலுக்கு நின்ற ஒரு வீரனை அழைத்துக் "கொஞ்சம் தண்ணீர் கொடு!" என்று கேட்கிறான்; கொடுத்துக் கொடுத்துக் கைகள் பழகியவன் முதன்முறையாய்க் கேட்பதன் வலியை நெஞ்சில் சுமந்தபடி!
கோவேந்தனானால் என்ன? இன்று நம் கொட்டடியில் கிடப்பவன் தானே! தண்ணீருக்கென்ன அவசரம் என்று ஆடி அசைந்து நேரஞ்சென்றபின் ஒரு குவளையைக் கொண்டுவந்து நீட்டுகிறான் காவலன்;காலஞ்சென்றோருக்குக் காரியம் கழிப்பது போல! பாவலர்கள் வாயினால் என்றும் புகழப்பட்ட தமிழினத்தில் கோவலர்களுக்கும் கேவலர்களுக்கும் அன்றும்கூடப் பஞ்சமிருந்ததில்லைபோல!
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டால் மட்டும் அதன் சீற்றம் குறைந்துவிடுமா என்ன? தாமதம் ஒரு பொருட்டில்லை; அதன்பின்னே மறைந்திருந்த ஏளனம் பொறுக்கவில்லை மன்னனுக்கு! குவளையைச் சீந்தவும் விரும்பாத கொற்றவனின் வாயிலிருந்து விழுந்த தீக்கங்குகள்தான் புறநானூற்றின் வரிகளில் அழியாப்புகழ்பெற்றப் பாடலாய்ப் பரிமளித்தது.
அதிகமாய் விழுப்புண்களை எந்த ஆண்மகனின் மார்புகள் சுமந்திருக்கின்றதோ அவனே அழகன் என விம்மி அவன் தோள்சேர விரும்பினர் அக்கால மங்கையர். புலிகளொடு வாழ்ந்து, புலிகளையே ஈன்று பொலிந்திருப்பதுதான் வாழ்வு என்று இறுமாந்த இனத்தின் அரசன் தீப்பிழம்பாய் மாறிப் பாடுகிறான்:
"எம்மினத்தில் ஒரு குழந்தை- அது நாங்கள் தவமிருந்து பெற்றதாயினுஞ்சரி- இறந்துவிட்டாலோ, அல்லது பிறந்தது வெறுஞ்சதைப்பிண்டமாய் இருந்துவிட்டாலோ அதைக்கூட அப்படியே அடக்கம் செய்தல் மானமரபிற்கு அழகல்ல என்றெண்ணி அதை எம் வாளால் இரண்டாகப் பிளந்து பின்னரே புதைப்போம்! அந்த இனத்திலோர் அரசன் பச்சைத் தண்ணீருக்குக் கூடப் பகைவனிடம் இறைஞ்சினான் என்ற பழியை என் இனத்துக்குக் கொடுக்கமாட்டேன்! அதைவிட நான் இறப்பது மேலல்லவா? எதிரியிடம் பிச்சையெடுத்து அவன் காலை அண்டிப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா! இனி என் உடலுக்கு இந்த உயிர் வெறும் சுமைதான்" என்று பாடி உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தான் கணைக்காலிரும்பொறை.
தமிழனின் தன்மையும் தொன்மையும் வெறும் பாடுபொருளாய் மட்டுமே எஞ்சிப்போனது. மாயன் இனமும், இன்கா இனமும் உள்ளிட்ட உலகின் தொல்பெருங்குடியினரில் இன்று மிச்சமிருப்பது தமிழன் மட்டுமே. மிச்சமிருப்பது பெருமைதான்; வெறும் எச்சமாய் இருப்பது...?
ஆணுமற்று, பெண்ணுமற்றுப் பிறப்போர் தம் குறியகற்றிப் பெண்தோற்றம் கொள்வதுபோல இந்தியனாய் இனமாற்றம் செய்யப்பட்ட தமிழனுக்கு இதயநீக்கம் செய்யப் பட்டதுபோலும்! 'இங்கிலீசி'ல் பிள்ளைபேச இளித்திருந்தால் அதுவே இதம் என்று மாறிப்போனோமே!
வெண்திரையில் வீராப்பு பேசும் வெற்று முகமூடிகளில் தேடினோம் நம் தலைமைகளை; சின்னத்திரையின் ஆபாச நெடுங்கதைகளில் இழந்தோம் நம் வளமிக்க தொன்கதை மரபை; பள்ளிமேடைகளைப் பள்ளியறையாக்கி நம் குழந்தைகளை நாட்டியமிடச் செய்து நசுக்கினோம் அம்மன்கூத்தும்,அன்னக்கொடியாட்டமும், இலாவணிப்பாட்டும், எக்காளக்கூத்தும், உடுக்கைப்பாட்டும்,உறுமிப்பாட்டும், ஒயில்கும்மியும், கணியன் ஆட்டமும், கரகாட்டமும், சிம்மநடனமும்,சேலையாட்டமும், தெருக்கூத்தும், தேவராட்டமும், புலியாட்டமும், பொம்மலாட்டமும், பொய்க்கால் குதிரையாட்டமும், மயானக்கொள்ளையும், மயிலாட்டமுமாய்ச் செழித்தோங்கி நின்ற நம் ஆடற்கலையை;
தமிழரின் இசைமரபின் தனித்துவம் உலக இசைமரபுகளின் முன்னோடி; தமிழிசைமரபை அணு அணுவாக வரையறை செய்கிறது சிலப்பதிகாரம்;
சங்ககாலத்துக்கு முன்னரே இசை எனப்படுவது யாது என்று இலக்கணப்படுத்தின நம் நூல்கள்:
“இசையெனப்படுவது இயம்புங் காலை
ஒத்துணர் ஒலியிஇன் நீட்சி யதாகும்”
இன்றோ தமிழ்ப்பண்களான செவ்வழி,சாதாரி, புறநீர்மை,இந்தளம், தக்கேசி முதலியன முறையே யதுகுலகாம்போதி, காமவர்த்தினி, பூபாளம், மாயமாளவகௌலை, காம்போதி என்று திருடப்பெற்று இசைமேடைகளில் தமிழை இரண்டாந்தாரமாய்த் தள்ளிவைக்கும் கொடுமையைத் தலையாட்டி ஆமோதித்து அதுவும் போதாமல் அரைக்கிறுக்குகளின் இசைத்துணுக்குகளில் இழந்தோம் நம் இசைரசனையை.
நம் இந்திரவிழாக்களை 'வாலண்டைன்ஸ் டே'வாக்கி களவியல், கற்பியல் என்று வகுக்கப்பட்ட நம் காதல்வாழ்வினை வெறுமே உடலை ஆராதிக்கும் விலங்குத்தன்மைக்கு ஆளாக்கினோம்.
நவீன முதலாளித்துவம் பெற்றெடுத்த நுகர்வுக்கலாச்சாரத்தின் நுகத்தடிகளுக்குள் தலைநுழைத்து நுரைதள்ள, வாழ்க்கைப்போராட்டத்தின் போர்க்களத்துக்கு பலிகொடுத்தொம் தமிழனின் ஈகைக்குணத்தையும், எளிமை வாழ்க்கையையும்.
எல்லாக் கொடுமைகளுக்கும் சிகரம் வைத்தாற்போல இன்று ஈழத்தின் திறந்தவெளிச்சிறைக்குள் சிறகொடிந்த பறவைகளாய், கண்ணீருக்கும் வழியின்றிக் காய்ந்த பாலைபோன்றக் கண்களில் உலகம் கைவிட்டாலும் உறவுகள் கைவிடாது என்ற நம்பிக்கை தேக்கி வெறித்து நிற்கும் நம்தமிழ் உறவுகளுக்கு என்ன செய்தோம் தமிழர்களே! 'கண்கள் பனிக்கவும், இதயம் இனிக்கவும்' இந்திய சுதந்திரதின மிட்டாய்களை நம் நாவுகளுக்கும், "சோற்றாலடித்த பிண்டங்கள் நாங்கள்; தனித்தியங்கும் தன்மையிழந்துச் சார்ந்துவாழும் எம்மால் சோர்ந்துநிற்கும் உம் துயராற்ற முடியாது" என்ற நஞ்சை நம் உறவுகளுக்கும் பங்குவைப்பது நம் இனமானத்துக்கு இழுக்கென்று நாம் எண்ணவில்லையே!
தலைப்பாகைக்கு ஆபத்து என்றதும் துள்ளியெழுந்த சீக்கியர்களின் உணர்ச்சியலை உடனே விமானமேறிப்போய் ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தோடு பேச்சுநடத்தி விவகாரம் தீர்த்தது! தம் உரிமைகேட்டு ஆர்ப்பரித்த தெலுங்கானா மக்களின் நெஞ்சக் கொதிப்பு எரிமலையாய் மாறி இந்திய அரசின் குடுமியைச் சுட்டது! மராட்டியத்தில் பிகாரிகளுக்கு இடமில்லை என்றதும் எதிரும்புதிருமாய் இருந்த லாலுபிரசாத், நிதிஷ்குமார் இருவரது தொண்டைகளும் ஒரே குரலில் கனைத்தன! ஓர் அற்ப ரயில்வே கோட்டத்துக்காய் ஆர்ப்பரித்த மலையாளிகளின் எழுச்சிக்குப் பதிலளிக்க பறந்து பறந்து ஓடினர் மத்திய அமைச்சர்கள்!
ஆனால் நாம்...?
குறைந்தபட்சம், கடற்குருவிகளைவிடக் கேவலமாக சுட்டுவீழ்த்தப்பட்டு வீசப்படும் நம் மீனவர்களுக்காகக் கண்ணீர் சிந்தக்கூட வழியற்ற கருவாடுகளாகிப் போனோமே!
மதியிழந்தோம்! மானம் விற்றோம்! சுதந்திரம் மீட்பதும், சொந்தம் காப்பதும் நம் சுயவுரிமை என்ற சொரணை கெட்டோம்!
இனியாவது இணைவோம் தமிழர்களே! நம் சனம் காக்கவும், இனம் மீட்கவும்! இல்லையெனில்...
தொலைத்தோம் தமிழம் என எதிர்காலம் நமை உமிழும்!
18 பேரு கிடா வெட்டுறாங்க:
இதுக்கு விவரமா பின்னூட்டம் இடனும் அப்புறம் வாரேன்
//புலிகளொடு வாழ்ந்து, புலிகளையே ஈன்று பொலிந்திருப்பதுதான் வாழ்வு என்று இறுமாந்த இனத்தின் அரசன் தீப்பிழம்பாய் மாறிப் பாடுகிறான்://
புலிகள் இருந்த காட்டில்தான் கழுதைப் புலிகள் பெருகி வஞ்சகமாய் புலிகளின் ரத்தம் குடித்தது..
//தொல்பெருங்குடியினரில் இன்று மிச்சமிருப்பது தமிழன் மட்டுமே. மிச்சமிருப்பது பெருமைதான்; வெறும் எச்சமாய் இருப்பது...?//
சங்க காலம் என்று இல்லை.. இனி வரப் போகும் காலங்களிலும் தமிழனுக்கு தமிழனே பின்னடைவைத் தருவான்...
//அம்மன்கூத்தும்,அன்னக்கொடியாட்டமும், இலாவணிப்பாட்டும், எக்காளக்கூத்தும், உடுக்கைப்பாட்டும்,உறுமிப்பாட்டும், ஒயில்கும்மியும், கணியன் ஆட்டமும், கரகாட்டமும், சிம்மநடனமும்,சேலையாட்டமும், தெருக்கூத்தும், தேவராட்டமும், புலியாட்டமும், பொம்மலாட்டமும், பொய்க்கால் குதிரையாட்டமும், மயானக்கொள்ளையும், மயிலாட்டமுமாய்ச்//
இப்பல்லாம் குத்து பாட்டுதான் களைகட்டுது ..
//மதியிழந்தோம்! மானம் விற்றோம்! சுதந்திரம் மீட்பதும், சொந்தம் காப்பதும் நம் சுயவுரிமை என்ற சொரணை கெட்டோம்!//
பெரிய நகைச்சுவையே கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள்.. நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறு யென நம்மை சொல்வதுதான்..
மிட்டாய் சுதந்திரம் பெற்ற நண்பர்களே... உங்களுக்கு சுதந்திர வாழ்த்துக்கள் ...
வெகு ஆழம்!
:)
UNGA TAMIL...
MEI SELIRKKA VAIKINRATHU....
இப்பல்லாம் குத்து பாட்டுதான் களைகட்டுது ..:)))
HM...
இனி வரப் போகும் காலங்களிலும் தமிழனுக்கு தமிழனே பின்னடைவைத் தருவான்...:((((
பல்கலைகழக தேர்வின் முந்திய இரவு ஏதோ தமிழ் நாவல் படித்துக்கொண்டிருந்ததை பார்த்து யார் இந்த மனிதர் என்று வியந்திருக்கிறேன்.நீங்கள் எழுதிய சில கவிதைகளை குறித்து ரபீக் சொல்ல கேட்டிருக்கிறேன்.விவேகானந்தர் குறித்தும் , பின்னர் ஆயுர்வேதம் குறித்தும் கூட. நீங்கள் இன்னும் தீவிர தளத்தில் எழுதலாம்.எழுதகூடியவர். Binaryகளுக்கு வெளியே நிறைய இருக்கிறது இன்று.
அன்புடன்,
சர்வோத்தமன்
கட்டுரையை நேற்றிலிருந்து குறைந்தது ஐந்து தடவையாவது திருப்பித் திருப்பி படித்துவிட்டேன். எத்தனை முறை படித்தாலும் இந்த அழகு தமிழையும் ரசிக்க முடியாத தமிழினம் குறித்த ஒரு வெறுமை மட்டுமே முடிவில் மனதில் எஞ்சி நிற்பதை உணர்கிறேன்.
சகோதரி ரதிக்கு,
தமிழ்நாகரீகத்தின் தொன்மையையும் அதன் வீரியத்தையும் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு தமிழனுக்கும் மட்டுமல்ல உலகளாவிய ஒவ்வொரு வரலாற்று மாணாக்கனுக்கும் இன்றைய தமிழினத்தின் இழிநிலை அதே வெறுமையைத்தான் உண்டுபண்ணுகின்றது. எப்போதாவது படிப்பேன் - லத்தீனில் ஒவ்வொரு சொல்லின் மூலமும் எதிலிருந்து உருவானதென்று. தமிழின் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து பாருங்களேன். அவற்றின் பொருளாழம் உங்களை வியக்கச் செய்யும்.
நேற்று ஒரு நண்பரிடம் பேசும்போது எனக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தேன். உலகப்புகழ்பெற்ற காப்பியங்கள், இதிகாசங்கள் - சம்ஸ்கிருதத்தில் ராமாயணம், மகாபாரதம், சாகுந்தலம், கிரேக்கத்தின் இலியட், ஒடிசி - எல்லாமே மன்னர்களைப் பாடுபொருளாய்க் கொண்டிருக்கின்றன; ஆனால் நம் தமிழில் மட்டும்தான் ஐம்பெருங்காப்பியங்களின் முதன்மையான இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குடிமக்களைத் தம் கதைமாந்தராகக் கொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் பற்றிப் பேசிமுடித்தபின் இறுதியாய் வரும் பெருமூச்சு; அது உருவாக்கும் வெற்றிடம். இனி வரும் காலமெல்லாம் இந்த வெறுமை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனுக்கும் ஒரு சாபக்கேடு தானே?
இந்த தமிழனின் வெறுமையைத்தான் Co-operate controlled Media தங்கள் கேளிக்கை, வினோத நிகழ்ச்சிகளால் தழும்பத் தழும்ப நிரப்பிக்கொண்டிருக்கின்றன. இந்த hangover நெடுங்காலம் நீடிக்காமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.
hangoverக்கு மருந்து தொலைந்துபோன நம் மக்கள்கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதுதான். இல்லையெனில் ராட்சசத்தனமான கார்ப்பொரேட் ஊடகங்கள் நம் மக்களின் மூளைகளை முழுதுமாய் அரித்துவிடும். இந்த விஷயத்தில் நான் மக்கள் தொலைக்காட்சிக்குத் தலைவணங்குகிறேன். இந்த வியாபார உலகின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர்களின் இயக்கம் போற்றப்படவேண்டிய ஒன்று
பின்னூட்டி என் எழுத்துக்களுக்கு உயிவளியூட்டும் தோழமைகளுக்கு நன்றி. என் இந்த இடுகை பரவலாக விவாதிக்கப் படவேண்டும் என விரும்புகிறேன். ஐம்பதாவது பதிவை நெருங்கும் இந்தவேளையில் இந்தப் பதிவை எழுதியபோது நான் அடைந்த கொந்தளிப்பான உணர்வுடன் இதுவரை எழுதியதில்லை.
செந்திலண்ணனுக்கு, தங்களின் மிகக்கூர்மையான விமர்சனத்தை எதிபார்த்தேன்!
தோழன் சர்வோத்தமன்! உன் பின்னூட்டம் எனக்கு விவரிக்கவியலாத உணர்வைத் தந்துள்ளது! நன்றிகள் உனக்கு.
சகோதரி ரதியின் பின்னூட்டங்களை என் பதிவில் காணும்போதெல்லாம் என் உதடுகள் ஒரு விசேஷமான புன்னகையைப் பிரசவிக்கும்; அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாய்! இன்று மிகவும் ஆழமாய் என்னைப் பாதித்திருக்கிறார்; தமிழர்களின் கேளிக்கை உணர்வினைப் பற்றி ஒரு கேள்வியுடன்! என்ன செய்யப் போகிறோம்? நமது கேளிக்கைகளுக்கு வடிகால் வெறும் வண்ணத்திரைகளும், சின்னத்திரைகளும் மட்டும்தான் வழியா?
சில ஆண்டுகளுக்கு முன்னர் தோழர் மு.ராமசாமியின் நிஜநாடக இயக்கம் நிகழ்த்திக்காட்டிய "கலகக்காரர் தோழர் பெரியார்" என்ற நாடகம் மக்களின் பேராதரவோடு நூறுமுறைகளுக்கும் மேல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என் நினைவில் நிழலாடுகிறது.மக்கள் நல்ல கலைவடிவங்களுக்கு ஆதரவளிக்க என்றும் தயங்கியதில்லை என்று நிரூபணம் ஆன தருணமது! மீண்டும் அது உயிர்க்கவேண்டும் என்ற ஆசையில்....
IGNORANCE - இதற்கு தமிழ் அர்த்தம் தமிழன்தான்
நாம் எல்லாம் பேசி பேசி சாவது மட்டுமன்றி , சாவது பற்றி கூட பேசுகிறோம்
வரலாறு ஒன்றினை தெளிவாக கூறுகிறது , நாம் மானமுள்ள முட்டாள்கள்
சேரன் அதே காவலனிடம் நயமாக பேசி தப்பித்து , நயத்துடன் வெற்றி ஈன்று , வரலாற்றை அவனே மாற்றி எழுதி இருக்கலாம் அனைத்தையும் மறைத்து. நாம் நம் தலைமுறைக்கு சொல்லவேண்டியது நாம் ஏமாந்து செத்த வரலாற்றை அல்ல, வெற்றி காணும் வெள்ளைக்காரன் யுக்தியை. ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் , வெள்ளைக்காரன் யுக்தியை
அவனுக்கு முன் நாகரீகம் கற்ற நாம் , அவனை விட ஒரு படி மேலே யோசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்
இன்னும் நாம் வரலாற்றை எழுதிதான் வாழ்கிறோம்
உங்கள் எழுத்து புரட்சிகரமாக உள்ளது , மாற்றி யோசியுங்கள்
நம் தலைமுறைக்கு வாழ கற்றுக்கொடுங்கள்;சாக அல்ல !
--
ரதி சொன்னது போல் ஒரு வெறுமையும் வெற்றிடமும் உருவானது.
ராஜா காலம் முதல் இன்று வரைக்கும் நம் மக்கள் இந்த பொழுது போக்கு அம்சங்களை ஏன் இந்த அளவுக்கு விரும்புகிறார்கள்?
எதிர்கொள்ள துணிவு இல்லாமையா?
துன்பம் அதிகமாக வரும் போது ஏன் தலைகுப்புற ஆன்மீகத்தில் போய் கேள்வி ஏதும் கேட்க விரும்பாமல் தொபக்கடீர்ன்னு போய் சாஷ்ட்டாங்கமாக கிடக்கிறார்கள்?
தப்பித்துக் கொள்ளவா?
நண்பர் சொன்னது போல எந்த வகையில் வாழ வழி சொன்னவர்கள் ரொம்ப குறைவு. சொன்னவர்களை பின்பற்றியவர்கள் அதையும் விட குறைவு.
விதி என்ற ஒற்றை வார்த்தை தான் 3000 வருடங்களாக இந்த தமிழினத்தை வழிநடத்திக்கொண்டுருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
தந்தை செல்வா சாகும் தருவாயில் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
இலங்கை தமிழ் மக்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.
நிறைய எழுத வேண்டும் போல் உள்ளது. ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க வேதனை தான் மிஞ்சுகிறது.
வேறு சில விசயங்கள் வேறொரு சமயத்தில். அருண் சொன்னது போல் இந்த அளவுக்கு ஆழம் எந்த இடுகையிலும் நான் படித்தது இல்லை மனிதா?
ராசா போட்டியில் உள்ள இந்த தலைப்பை பார்த்து மறுபடியும் உள்ளே வந்தேன். வாழ்த்துகள் ராசா.
கருத்துரையிடுக