திங்கள், 16 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-8 : என்னை நேசியுங்களேன்!


The body is a house of many windows: there we all sit, showing ourselves and crying on the passers-by to come and love us.  ~Robert Louis Stevenson

There are at least two kinds of cowards.  One kind always lives with himself, afraid to face the world.  The other kind lives with the world, afraid to face himself.  ~Roscoe Snowden

உங்களுக்கு மிகவும் பிடித்த குரல் எது என்று சொல்லுங்களேன்?

ஜேசுதாஸ்? எஸ்.பி.பி? டி.எம்.எஸ்? ஜானகி? சுசீலா? மைக்கேல் ஜாக்ஸன்? நான்சி அஜ்ரம்? பாப் மார்லே?

அதேபோல நீங்கள் உங்கள் வாழ்க்கையிலேயே அதிகம் நேசிக்கும் நபர்?

அம்மா? அப்பா? காதலி? உங்கள் குழந்தை? மனைவி? உற்ற ஸ்நேகிதன்?

இரண்டுக்கும் ஒரே விடைதான்! "நீங்கள்!"
ஒவ்வொரு மனிதனும் தன் குரல் ஒலிக்கப்படுவதைத்தான் விரும்புவான்!

ஒவ்வொரு மனிதனும் தன்னைவிட அதிகமாக யாரையும் நேசித்துவிட முடியாது!

தன்னை நேசிக்காதவன் எவனுமே தன்னைச் சுற்றியுள்ள எந்த உயிரையும் நேசிக்கவும் முடியாது!

அறிவியலும்,இறையியலும் எப்போதும் "நான்" என்பதை ஆராய்வதிலேயே சூல்கொண்டுள்ளது. தத்துவங்களின் தேடுபொருளும் "நான்"தான்! "நான்" என்பது என்ன அல்லது யார் என்ற கேள்வியை நோக்கி நகர்ந்த அறிவியல் 'உளவியல்' என்று வகைப்படுத்தப் படுகிறது. நவீன உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃப்ராய்டு "நான்" என்ற உணர்வை id, ego, super ego என்று படிநிலைப் படுத்துகிறார்.

'நான்' என்பதை ஆராயப்புகுந்த இறையியல் பலப்பல பிரிவுகளாய்ப் பிரிந்து விதவிதமான முடிவுகளுக்கு இட்டுச் சென்றது.

கடவுள் என்ற அழகிய, ஆழமான சொல்லாட்சி 'இறை' என்பதைப் பற்றிய தொல்தமிழனின் புரிதலை விளக்குகிறது.

அனைத்தையும் கடந்து தனக்கு உள் நிற்பவனே இறைவன் என்றான் தமிழன். ஒவ்வோர் உயிரினையும் இறைவடிவாகக் காணும் இந்தியத் தத்துவமரபின் வேர் தமிழனிடமிருந்துதான் துவங்குகிறது. இன்றோ தமிழன் தொலைந்துபோய் 'இந்து'வாக மட்டும் வாழும் நிலை!

"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?"
என்பது சிவவாக்கியச்சித்தர் பாடல்.

இப்படி 'நான்' என்பதைச் சுற்றியே உலகம் வலம் வருகையில் அந்த 'நானை' ஏனைய 'நான்'கள் புரிந்துகொள்ளவேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற இடையறாத ஏக்கத்தைச் சுமந்து திரிகிறது ஒவ்வொரு 'நானு'ம்!

என் கண்ணீரைத் துடைக்க உமது கரங்கள் நீளவேண்டும்; என் தலையைச் சாய்த்துக்கொள்ள உமது மடிகள் விரிந்திடவேண்டும்; என் அறிவினை வியந்திட உமது புருவங்கள் உயரவேண்டும் என ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றியுள்ள சக உயிர்களிடம் எதிர்பார்க்கிறான்.

"என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டியா?"

"நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் புரிஞ்சிக்கயேன்"

"நம்மள யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்கப்பா"


பாருங்கள்! ஒவ்வொரு மனிதனும் தன்னைப் புரிந்துகொள்ளவேண்டி இறைஞ்சுவதை!

"கண்களால் எடை போடுகிறாய்

புறம் சார்ந்தே இருக்கிறது
உன்புரிதல் என்பதால்
கிளம்புகிறேன்

என்றாவது உணர்வாய் நீ
இழப்பின் வலி."


என்று புரிதல் மறுக்கப்பட்டதால் வரும் "இழப்பின் வலி"யை இசைத்துச் செல்கிறார் ராஜா.சந்திரசேகர்.

துரதிருஷ்டவசமாய் நாம் யாரையும் அவர்களது 'நானை' விரும்புவதில்லை. அவன் அல்லது அவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பின் பிம்பத்தை அவர்கள்மீதேற்றி அந்த பிம்பத்தையே நேசிக்கிறோம்.

நம் குழந்தைகளை நாம் 'எதுவாக' ஆசைப்பட்டோமோ 'அதுவாக' அவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்; நம் நண்பர்கள், நம் உறவுகள், நம் காதல்கள் என எல்லாவற்றையும் நமது விருப்பங்களைச் சுமந்த பிம்பங்களாகவே பார்க்கிறோம்.

ஆனால் பிம்பங்கள் நீர்க்குமிழி போன்றவை; கணநேரத்தில் காணாமல் போய்விடக்கூடியவை; உறவு வாய்க்காலில் பாய்ந்து உள்ளக் கழனியை வளப்படுத்த வேண்டிய அன்பெனும் நீரோட்டம் பிம்பங்களால் உடைபட்டு வீணாய்ப் போகிறது.

அவரவரை அவரவர் இயல்போடு நேசித்தால்? குறைகளையும் சேர்த்தால்தான் மனிதன் முழுமையடைகிறான் என்ற புரிதல் ஒவ்வொருவருக்கும் வந்துவிட்டால்?

சுவர்க்கத்தின் கதவுகள் அங்குதான் திறக்கப் படுகின்றன. சுகந்தம் அங்குதான் பரவத் தொடங்குகிறது.

மனிதர்களே! ஒவ்வொரு 'நானை'யும் 'நானா'க இருக்க விடுங்கள் என்று இறைஞ்சுகிறது லீனாமணிமேகலையின் இந்தக்கவிதை

நான்
விரும்பும் என்னை
எப்பொழுதும்
விரும்புவதில்லை
இந்த உலகம்,
யார்
விரும்பும் என்னையும்
ஒரு பொழுதும்
விரும்பியதில்லை
நான்.
விருப்புகளின் போராட்டங்களில்
வெல்வதும் தோற்பதுமாய்
மூள்கிறது வாழ்க்கை
நிர்கலனாய்.

8 பேரு கிடா வெட்டுறாங்க:

ஜோதிஜி சொன்னது…

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

இது தான் இளங்கிடா வெட்டு.

ரத்தம் தெரிக்கிறது பாருங்கள்.

Unknown சொன்னது…

//"நம்மள யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்கப்பா"//

இந்திய மக்களில், அதுவும் தென்னிந்திய மக்களில் அதிகம் பேர் சொல்லும் வாசகம் இது ..

பொதுவாகவே எல்லோருக்கும் ஒரு சோகம் தேவைப்படுகிறது.. அதனை சுமந்து, கொண்டாடி வெந்து சாகின்றனர்..

இதில் மற்றவர்களின் இரக்கத்தை தேடுவது பெருங்கொடுமை ...

திருந்துங்கப்பு...

மற்றபடி மிகதெளிவான கவிதைபார்வை ... பாராட்டுக்கள்

Unknown சொன்னது…

//"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?"
என்பது சிவவாக்கியச்சித்தர் பாடல்.//

இதுதான் உண்மை ..

சௌந்தர் சொன்னது…

தன்னை நேசிக்காதவன் எவனுமே தன்னைச் சுற்றியுள்ள எந்த உயிரையும் நேசிக்கவும் முடியாது!///

இது மிகவும் உண்மை...

Bibiliobibuli சொன்னது…

வார்த்தைகளினூடே வலியையும், வலியினூடே வாழ்க்கையும் புரிய வைக்கும் எழுத்து. Unconditional acceptance, unconditional love இதெல்லாம் எல்லோருக்கும் எப்போதும் கிடைப்பதில்லை.

என் தாழ்மையான கருத்து எப்போது என்னை நானே சுயமதிப்பீடு செய்து, எனக்கு நானே உண்மையாக இருக்கிறேனோ, அப்போது தான் இயல்பாய் இருக்கமுடிகிறது. எனக்கு மற்றவர்களின் நிர்ப்பந்தங்கள் அற்ற அங்கீகாரம் பற்றிய அக்கறையற்றுப்போகிறது. என் வாழ்க்கையை என்வரையில் நான் இனிமையாக வாழ முடிகிறது.

ரொம்ப அறுக்கிறேனோ?

vinthaimanithan சொன்னது…

//ரொம்ப அறுக்கிறேனோ? //

என்ன சகோதரி இப்படிக் கேட்டுவிட்டீர்கள்?

முகமூடிகளின் சுமைகளற்று, காற்றில் மிதக்கும் இறகினைப்போன்ற இயல்பான வாழ்க்கை எத்தனை பேருக்கு வாய்க்கும்? மிக அற்புதமாய் ஒருவனின் வாழ்க்கை நதி அடைய வேண்டிய இலக்கை விளக்கியுள்ளீர்கள். இம்மாதிரியான விமர்சனங்களையும், கூர்மையான விவாதங்களையுமே ஒரு குழந்தையைப் போல எதிர்பார்க்கிறேன்.

Unconditional acceptance, unconditional love - இதைத்தான் ஓஷோ வலியுறுத்துகிறார். எனக்கென்னமோ இதுவும் ஒரு Utopian Dream என்றே தோன்றுகிறது. அம்மாதிரியான ஒரு மனம் வாய்க்கப் பெற்றால்....!

உங்கள் கூரிய விமர்சனங்களை எப்போதுமே எதிர்நோக்கி!

vinthaimanithan சொன்னது…

அப்புறம் இன்னொரு வேண்டுகோள்: உங்கள் பார்வையும் அனுபவங்களும் மிக விசாலமாக இருக்கின்றன. உங்கள் எழுத்தின் ஆழம் ஏற்கனவே 'வினவி'ல் நிரூபணமான ஒன்று. ஏன் இன்னும் உங்கள் வலைப்பூவினைக் காணவில்லை. உங்கள் வாழ்க்கைச்சூழல் பற்றி எனக்குத் தெரியாது. ஆனாலும் என்னைப்போன்ற பலரது எதிர்பார்ப்பு இது.

எழுதினால் நீங்கள் அடைவீர்களோ இல்லையோ, நிறைய உள்ளங்கள் விசாலமடையும்!

கமலேஷ் சொன்னது…

இன்றுதான் இங்க பதிவுகளை படிக்கிறேன்...
ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

Related Posts with Thumbnails