ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

மறைக்கப்பட்ட வரலாறுகள்- சுதந்தர தினத்தையொட்டி சில நினைவுகள்: பகுதி 2


Until lions have their historians, tales of the hunt shall always glorify the hunters.  ~African Proverb

Animals are in possession of themselves; their soul is in possession of their body. But they have no right to their life, because they do not will it.
G.W.F. Hegel


இந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்ல! உலகம் முழுதுமே காலனியாதிக்கக் கொடுமைகளில் இருந்து வெளிவரத் துடித்துக் கொண்டிருந்த நேரமது.

1905- பனிக்கட்டிகள் மழையாய்ப்பெய்து கொண்டிருக்கையில் கொடும் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு சீற்றத்தோடு துப்பப்பட்டது ஒரு பீரங்கிக்குண்டு; துப்பியது பொட்டம்கின் என்கிற போர்க்கப்பல்; துப்பப்பட்டது ஜாரின் ரஷ்யாவில்; ஜாருக்கெதிராக! ஒடுக்குமுறைக்கெதிராக!

அந்தக்குண்டிலிருந்து வந்த நெருப்பு ஊழித்தீயாய் மாறி 1917-ல் சோவியத் என்ற தேசத்தை நிர்மாணித்ததோடு நின்றுவிடவில்லை. உலகெங்கும் தத்தம் தளையறுக்கப் போராடிய மக்கள் அந்தத்தீயிலிருந்து கங்குகளைக் கடன்பெற்றனர்.

அதில் ஒரு கங்கு கருத்தரித்த நாள்: 18, ஃபெப்ருவரி, 1946; இடம் பம்பாய்த் துறைமுகத்தில் அன்றைய 'ராயல் இந்தியன் நேவி' என்றழைக்கப்பட்ட இந்தோ-பிரிட்டன் கப்பற்படையில் இருந்த "HMS தல்வார்" என்ற போர்க்கப்பல்.
"Operation Success; But patient out!" என்பதைப்போல இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்றாலும் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சிதைந்து கலகலத்திருந்தது பிரிட்டிஷ் பேரரசு.

இன்னும் ஒரு உதை போதும்! உடைந்து நொறுங்கிவிடும் சாம்ராஜ்ய மாளிகை! என்றிருந்த நிலையில் ஒப்புக்குச் சப்பாணியாய்ப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் இயக்கம் எப்படியாவது Dominican அந்தஸ்தைப் பெற்றால் போதும் என்று முக்கி முனகிக் கொண்டிருந்த நிலையில் வெடித்தது கப்பற்படைப் புரட்சி!

மக்கள் போராடினால் போலிஸை வத்து அடக்கலாம்! போலிஸும் போராடினால் ராணுவம் வைத்துச் சுடலாம்! ராணுவமே போராடினால்...? அதன்கூட மக்கள்திரளும் கைகோர்த்தால்....?

அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவம்,கப்பற்படை,விமானப் படை இவற்றில் அதிகாரிகள் அந்தஸ்தில் பிரிட்டிஷார் மட்டுமே இருந்தனர். படைவீரர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்களே! சொற்ப அளவில் மட்டுமே படைவீரர் அந்தஸ்தில் ஆங்கிலேயர் இருந்தனர்.

முதலில் சிற்சில சலுகைகளுக்காகத் தொடங்கிய தல்வார் கப்பலில் தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் இந்திய விடுதலை என்ற முழக்கத்தோடு விரிவு பெற்றது. அருகில் இருந்த கப்பல்களுக்கும் பரவியது போராட்டம். கப்பற்படையின் முழுக் கட்டுப்பாடும் அடுத்தநாளே போராடத்துவங்கிய மாலுமிகளின் கைக்குள் வந்துசேர்ந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள மக்களுக்கும் அறைகூவல் விடுத்தனர்.

போராளிகளால் வானொலிநிலையமும் கைப்பற்றப் பட்ட நிலையில் போராட்டம் பற்றிய தகவலறிந்து இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மக்கள் தங்கள் பங்களிப்பைத் தரத்துவங்கினர்.



மும்பையில் 30,000 மக்கள் கலந்துகொண்ட வேலைநிறுத்தத்துடன் கூடிய போராட்டம்! கல்கத்தாவிலும், விசாகப் பட்டினத்திலும் கப்பற்படைப் போராட்டம்! சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டம்! மக்களைக் கட்டுப் படுத்த அனுப்பப்பட்ட போலிசார் மக்களோடு சேரத் தொடங்கினர். ராணுவமும் இணைந்தது போராளிகளோடு!  குண்டுவீசிக் கூட்டத்தை கலைக்க மறுத்தனர் விமானப் படையினர்!

போராட்டக்குழு அமைக்கப் பட்டு போராட்டம் முறைப்படுத்தப் பட்டது. பெரும்பான்மையான கப்பல்களில் காங்கிரஸ்கொடியும், முஸ்லிம் லீக் கொடியும், செங்கொடியும் ஏற்றப்பட்டன. நெறிப்படுத்தப்பட்டு இலக்கைக் குறிவைத்து எய்தப்பட்ட அம்பைப்போல போராட்டம் முழுவீச்சில் தொடர்ந்தது. இருபத்தைந்து வயதேயான இளஞ்சிங்கங்களான சிக்னல்மேன் எம்.எஸ்.கானும், டெலிக்ராஃப் ஆபரேட்டரான மதன்சிங்கும் முறையே தலைவர் மற்றும் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றனர்.

"எமது நோக்கம் முன்னேற்றம்! நாமே புனிதப்போராளிகள்
எமது மந்திரம் புரட்சி! புரட்சி !! புரட்சி!!!"

விடுதலை கீதம் விடியலின் வாசம் சுமந்து வீதிகளெங்கும் உலா வந்தது!

ஆனால்...?

மரணம் வாழ்வின் ஒரு முடிவல்ல
உங்கள் சொற்களை விடவும்
செயல்களை விடவும்
உங்கள் மரணம் மிகவும் வலியது !
                             சேரன்

8 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

//மரணம் வாழ்வின் ஒரு முடிவல்ல
உங்கள் சொற்களை விடவும்
செயல்களை விடவும்
உங்கள் மரணம் மிகவும் வலியது !//

நிதர்சனம் ....

பெயரில்லா சொன்னது…

அடுத்த பகுதி எப்போது ?

vinthaimanithan சொன்னது…

எதிர்பார்த்தைவிடவும் கொஞ்சம் ஆழமான விஷயமாக இருப்பதால் அடுத்த பகுதி இன்னும் ஓரிரு நாட்களில் வரும்... அடுத்து தோண்டத்தோண்ட இம்மாதிரியான மறைக்கப்பட்ட வரலாறுகள் வந்துகொண்டே இருக்கின்றன.... கப்பற்படைப் புரட்சியோடு நிறுத்திவிடலாமா அல்லது இன்னும் நீட்டிக்கலாமா என்ற குழப்பத்திலும்....

Prem சொன்னது…

மிட்டாய் கொடுத்தவுடன், சுதந்திர தினத்தை மறந்து விடும் அரசியல்வாதிகள் போல..
மறைக்கப்பட்ட வரலாறுகள் பதிவு, மறக்கப்பட்டு விட்டதா என்ன ??
மறக்காமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

vinthaimanithan சொன்னது…

நிச்சயம் மறக்கவில்லை நண்பரே.... இந்தக் குறிப்பிட்ட போராட்டத்தைப் பற்றியே ஏராளமான தகவல்கள் இருப்பதால் ஒன்றொன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை, கதையெல்லாம் கற்பனையில் எழுதிவிடலாம்... வரலாறு அல்லவா?!

மேலும் இந்தத் தொடரை கப்பற்படைப் புரட்சியோடு நிறுத்திவிடலாமா (துவங்கும்போது கப்பற்படைப்புரட்சி மட்டுமே நினைவில் இருந்தது) அல்லது தெலுங்கானாப்புரட்சி போன்றவற்றையும் தொடரலாமா என்ற குழப்பமும்.... தெலுங்கானா என்று தொடர்ந்தால் அதற்கான வீரியம் என்னிடம் இருக்கின்றதா என்று தெரியவில்லை.. மேலும் ஏராளமாகப் படிக்கவேண்டும்... பார்க்கலாம்...

அப்புறம் இன்னும் மறக்காமல் இந்தத் தொடரை நினைவில் வைத்துக் கொண்டிருப்பது மகிழ்வாயும், நிறைவாயும் இருக்கின்றது. நன்றிகள் நண்பரே!

Prem சொன்னது…

தங்களின் பதிலுக்கு நன்றி!!

Prem சொன்னது…

வரலாறு சம்பந்தமான, சில புத்தகங்கள் கிடைத்துள்ளன. அவற்றை படித்து கொண்டிருக்கிறேன். வேறு விதங்களில் தேட உதவியமைக்கும்...
பதிவுக்கும், பதில்களுக்கும் நன்றி (டாட்)

vinthaimanithan சொன்னது…

ஹாய் பிரேம்.. உங்கள் ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது. தாங்கள் தோழர் செங்கொடியின் தளத்தில் பார்த்தால் கப்பற்படைப் புரட்சி பற்றிய மிகத் தெளிவான கட்டுரை அங்கு கிடைக்கும். senkodi.wordpress.com. மேலும் தெலிங்கானா மக்கள்புரட்சி பற்றியும் அவரது தளத்தில் காணக்கிடைக்கின்றது. தங்கள் தொடர்பு எண் , மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? பேச ஆவல்...

Related Posts with Thumbnails