வியாழன், 30 செப்டம்பர், 2010
கவிதைப்பார்வை-9: நீக்கப்படுவோருக்கான பட்டியல்
"எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன" என்றொரு புகழ்பெற்ற ஆங்கில வாக்கியம் உண்டு. எல்லோர் வாழ்க்கையும் ஏதோ ஒரு விதத்தில் நேசித்தலையும் நேசிக்கப் படுதலையும் நோக்கியே நகர்கின்றன. பலர் தத்தமது சுயத்தை நேசித்தல் என்ற அளவில் சுருங்கிப் போய்விடுகின்றனர். சிலர் மட்டும் விரிகின்ற மொட்டின் வாசத்தைச் சுமந்து செல்லுமிடந்தோறும் தூவிச் செல்லும் தென்றல்போல நேசத்தைப் பரப்பிச் செல்கின்றனர்.
நேசிப்பு உண்மையென்றால் அதில் முன்நிபந்தனைகள் இருக்கக்கூடாதென்றார் ஓஷோ! உங்கள் நேசிப்பு உங்களை மட்டுமே சார்ந்ததாய் இருக்க வேண்டுமே தவிர நேசிக்கப்படுபவரைச் சார்ந்து இருந்தால் அது அவரை நேசிப்பதாகாது;அவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அவரது பிம்பத்தின் மீதான நேசிப்பாகவே இருக்கும் என்கிறார் மேலும் அவர்!
நிதர்சனத்தில் நேசிப்பவர்மீதான நேசத்தைவிடவும் அவர்மீது நாம் சுமத்தும் நிபந்தனைகளே அதிகமாய் இருக்கின்றது. நிபந்தனைகள் மீறப்படும்போது மனம் துடிக்கின்றது; ஏமாற்றங்களையும், வலிகளையும் விருப்போடு சுமக்கத் துவங்குகின்றது.
"நீங்கள் சிலுவைகளைப் பரிசளியுங்கள்; நான் அன்பைத் தருகிறேன்" என்றார் ஏசு!
எல்லோருக்கும் எளிதா என்ன ஏசுவாதல்?!
எத்தனை பேருக்கு முடியுமோ தெரியாது.... என்னால் முடியாது என்றுமே!
என்னிடம் ஒரு தேர்வு இருக்கின்றது... அதன் ஏடுகள் என்றுமே கறுப்பு வெள்ளைப் பக்கங்களாலானது! பக்கங்களில் வழிந்திருக்கும் பெயர்களும் கணக்கற்றவை
நான் மட்டுமல்ல... எல்லோருமே வைத்திருக்கின்றோம் விருப்பு வெறுப்புக்களால் நிரம்பிய ஒரு புத்தகத்தை! இல்லையா?
"நான் உன்னை வெறுக்கிறேன்; அதன்மூலம் உன்னை நிராகரிக்கிறேன்" என்று அறைகூவும்போதெல்லாம் என் கடைவாய்ப் பற்களில் இருந்து கசிகின்றது சிதைக்கப்பட்ட பிரியங்களின் குருதி. ஆனாலும் என்னுள் வெறுப்பின் விதைகளைத் தூவியபடியே இருக்கும் மனிதர்கள் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர் என் வழியெங்கும்.
"நான் உன்னை நேசிக்கிறேன்" என்பதில் வழியும் அன்பின் நெகிழ்வு தரும் ஆனந்தம், "நான் உன்னை நிராகரிக்கிறேன்" என்பதில் பொங்கும் குரூர திருப்தியிலும் இருக்கின்றது.... ஆமாம்... நேசமும் வெறுப்பும் நாணயத்தின் இருவேறு பக்கங்கள்தாமே?!
"நீ நீக்கப்பட வேண்டியவன்" என்ற தீர்ப்பை எழுதும்போது எனக்கு நானே கற்பித்துக் கொள்கிறேன் உன்னிலும் நான் உயர்ந்தவன் என.... உனக்கான தீர்ப்பை எழுதுபவன் நான் என....
மறுதலையாக நீக்கப்படும் பெயர்ப்பட்டியலில் என் பெயரைக் காணும்போதெல்லாம் எழுகின்றது ஒரு கேவல் எனக்குள்ளிருந்து....
"மரணத்தைவிடக் கொடியது மறக்கப்படுவது!" என்று ஒரு தமிழ்த் திரைப்பட வசனம் இருக்கின்றது
நான் நேசிப்பவைகளின் பட்டியலில் எப்போதும் இருக்கின்றது.... 'நீக்கப்பட வேண்டியவர்களின்' பட்டியலைப் பற்றிப் பேசும் இந்தக் கவிதை! மனுஷ்யபுத்திரன் எழுதியது...
பட்டியலிலிருந்து
ஒருவரை நம் பட்டியலிலிருந்து
நாம் நீக்கும்போது
அவர் அறியாதபடி
அவருக்கு
ஒரு தீர்ப்பை எழுதவேண்டும்.
அந்தத் தீர்ப்பில் நம்மையும் மீறி
ஒரு துளிக் கண்ணீர்
சிந்த நேரிடலாம்.
ஒரு முற்றுப்புள்ளியிலேனும்
நினைவு உறைந்து
நம்மைச் சற்றே
தடுமாற்றமடையச் செய்யலாம்.
நம்முடைய பட்டியலிலிருந்து
ஒருவரை நீக்கும்போது
ஒரு உறுப்பை நீக்குவதுபோல சில சமயம் அதிக வலி இருக்கலாம்.
எந்தக் கட்டத்திலும்
திரும்பிப் பார்க்காமலிருப்பதுதான்
ஒரு தீர்ப்பை எழுதத் தொடங்கிவிட்டவரின்
முதல்பணி
இல்லாவிடில்
நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட
தன்னலம் தோய்ந்த வைராக்கியங்களை
செலுத்த முடியாமல் போகும்.
அல்லது
நீக்கப்படும் மனிதனுக்கு
தேவையற்ற ஒரு பிடிமானத்தையோ
கடைசி நம்பிக்கையையோ
அது கொடுத்தது போலாகும்
நம்மிடம் ஒரு தேர்வு இருப்பது
ஒரு பட்டியல் இருப்பது
அதில் அகற்றுவதற்கான
ஒரு பெயர் இருப்பது
அது நம்மை
அவ்வளவு வசீகரிக்கிறது
அது ஒரு புனிதக் கடமைபோல.
கண்களை மூடமுடியாத
இறந்த ஒருவனின் கண்களைப்போல.
***************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 பேரு கிடா வெட்டுறாங்க:
அத்தனை வரிகளையும் சம்மதித்துத் தத்தெடுத்துக்கொள்கிறேன் !
//ஏமாற்றங்களையும், வலிகளையும் விருப்போடு சுமக்கத் துவங்குகின்றது.//
//"நான் உன்னை நிராகரிக்கிறேன்" என்பதில் பொங்கும் குரூர திருப்தியிலும் இருக்கின்றது....//
இந்த தத்துவமெல்லாம் ஆன்மீக வாழ்விற்கா? அல்லது சராசரி மனிதர்களுக்கா?
என்னமோ குழப்புது????
இடுகை சரி இல்ல நண்பா .
தள்ளித் தள்ளிக் கட்டிய மல்லிகைச் சரமாட்டம்
நன்றி தோழி ஹேமாவுக்கு!
ரதியக்கா! கவிதை தெள்ளத் தெளிவா சராசரி மனுஷனப் பத்தினதுதான்! ஆனா இடுகையில் ஒரு ideal man இருக்க வேண்டியதைப்பத்தி சொல்லி நம்மால அப்பிடி இருக்க முடியலன்னு... நான் நேசிப்பை விரும்பும் அளவு, வெறுப்பையும் ரசிக்கிறேன் அப்டீன்னு சொல்லி இருக்கேன். ஏன்னா நான் சராசரி மனுஷன் தானே?!
@ நேசன்
யோவ் நக்கீரா! i luv u ya! திருப்பி analyze பண்றேன்...கொஞ்சம் நெதானமா திருப்பித் திருப்பி ரெண்டு வாட்டி படிச்சி திருத்தி எழுதினா சரியா வருமோ? ஆனா என்ன ஒரு எழவுன்னா நாந்தான் டெய்லி ஒண்ணு அப்டேட் பண்ணிட்டு இருக்கேனே! வேற ஒரு கழுதயும் இல்ல..... To be frank.... கொஞ்சம் popularityக்காவத்தான். கட்டுரையோ கதையோ.... நல்ல கவிதை மாதிரி ஒத்த வார்த்த கூடக் கொறைய இல்லாம கட்டுசெட்டா எழுதணும்னுதான் ஆசை... பாக்கலாம்! இப்பத்தானே நடைவண்டி பழகிட்டு இருக்கோம்!
எழுத்தை ஷார்ப்பா பாக்குற ஆளுங்கள்ல நீருதாம்யா மின்னாடி இருக்கீரு! ஆனா உம்மமேல வேறொரு வருத்தம் இருக்கு... தனியா சாட்ல வாரப்ப சொல்றேன்
எழுதுகிற 500 எழுத்தும் வாசிக்கிறவனைச்சென்றடையவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை தோழரே.
மறுக்கப்படுதல் குறித்தும் இது பேசுவதாகவே படுகிறது.
//உண்மையென்றால் அதில் முன்நிபந்தனைகள் இருக்கக்கூடாதென்றார் ஓஷோ!"
"மரணத்தைவிடக் கொடியது மறக்கப்படுவது!" என்று ஒரு தமிழ்த் திரைப்பட வசனம் இருக்கின்றது//
இப்படி மேற்கோள்கள் எனக்குப்புதிது. ஆகிறபடியால் இந்த இடுகை எனக்கு ரொம்பப்பிடித்திருக்கிறது.
//"நீ நீக்கப்பட வேண்டியவன்" என்ற தீர்ப்பை எழுதும்போது எனக்கு நானே கற்பித்துக் கொள்கிறேன் உன்னிலும் நான் உயர்ந்தவன் என.... உனக்கான தீர்ப்பை எழுதுபவன் நான் என..//
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். ஈகோ தானே விருப்பு வெறுப்புக்கு காரணமா இருக்கிறது. எனக்கு இந்த பதிவு பிடிச்சிருக்கு. அருமை!
என் பட்டியலிலிருந்து உங்களை எப்போது நீக்கப் போகிறேனென்று தெரியவில்லை ...
நன்றி தோழர் காமராஜ்! அந்தத் தமிழ்ப்பட வசனம் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" திரைப்படத்தில் மம்முட்டி பேசுவதாக அமைந்திருக்கும்... வசனத்தின் பிண்ணனி எனக்கு வெறுப்பைத் தந்தாலும், வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.... கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சுக்குள் பச்சக் என ஒட்டிக் கொண்ட ஒன்று
நன்றி "என்னது நானு யாரு" நண்பரே!
செந்திலண்ணே! ஏன் இவ்ளோ காண்டு எம்மேல? :(
கருத்துரையிடுக