வியாழன், 7 அக்டோபர், 2010

ஸரயூவானவள்...



வானம் நிர்மலமாக இருந்தது. ஸரயூ என்றும்போல் அமைதியாக சலசலத்து அயோத்தியின் கரைகளோடு கதைபேசியபடி நகர்ந்து கொண்டிருந்தாள். என்றுமில்லாமல் ஏனோ லஷ்மணன் அப்போது மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தான். இந்த ஸரயூ தான் யுகாந்திரங்களைத்தாண்டியும் எவ்வளவு ஸாத்வீகமாக, வாத்ஸல்யமாக ஓடிக்கொண்டே இருக்கிறாள் எவ்வித அலட்டல்களும் இன்றி! எத்தனை மனிதர்கள்! எவ்வளவு விதமான் சரித்திரங்கள்!! எல்லாவற்றையும் கண்டு பின் தெளிந்த ஞானத்தோடு வாழ்க்கையின் ஓட்டத்தில் சிடுக்கின்றி ஆரவாரமின்றி பொறுமையாய்.... ஸரயூ ஏன் பெண்ணாக இருக்கிறாள்? பெண் ஏன் நதியாக இருக்கிறாள்? தன் மடியில் தளிர்த்த குழந்தைகளுக்கு இதமாய் உணவும் ,உயிரும் அளித்து, எல்லார் சுக துக்கங்களையும் தானே சுமந்து, எல்லோர் அழுக்கையும் களைந்து, எல்லோரையும் இதமாய் வருடி... தனக்கென்று நிறமின்றி, தனக்கென்று ஆசாபாசங்களின்றி... ஏன் ஸரயூ பெண்ணாய் இருக்கமாட்டாள்? ஏன் பெண் நதியாய் இருக்கமாட்டாள்?

லஷ்மணன் மனம் துள்ளியது. அட... நாமா இப்படியெல்லாம் யோசிக்கிறோம்? எத்தனை ஆண்டுகளாயிற்று? யோசித்து... சிந்தனையை மெல்லமாய் அசைபோட்டு... ம்ம்ம்... நானும் ஸரயூ போலத்தானே? சிற்றன்னை கைகேயிக்காக காடேகும் அண்ணனின் அடித்தடங்களே என் வாழ்க்கைத்தடமாய்... எனக்கென்று நான் என்ன செய்துகொண்டேன்? ஸரயூ தனக்கென்று என்ன செய்துகொண்டாள்?தன் சுற்றமும் நட்பும் இன்ன பிற மாந்தரையெல்லாம் கண்ணில் தேக்கி, சுயம் மறுக்கும் யாவரும் ஸரயூதான்...நானும் ஸரயூதான்... தாயே நீ வாழி!

நினைவுகள் அவனது மொத்தவாழ்க்கையையும் கணநேரத்தில் மின்னலாய்ப் பாய்ச்சிச் சென்றன. தன் வாழ்க்கை மொத்தமும் பிறர்க்கு அர்ப்பணித்தவனே ஞானியாம்! என்னைவிடச் சிறந்த ஞானி யார் உண்டு பூமியில்...? தன் வாழ்க்கை முழுதுமே தகப்பனுக்காக, அன்னைக்காக, குருநாதனுக்காக எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் என் அண்ணனுக்காக... எல்லாமே... எல்லாருக்காகவுமே தியாகம் செய்தவன் நானல்லவோ? நானல்லவோ ஸரயூவின் வாரிசு! நானன்றோ எல்லாம் உதறியதன்மூலம் எல்லாம் அடைந்தவன்.! நானே உயர்ந்தவன் எல்லோரினும்... ஏனெனில் நான் தியாகித்திருக்கிறேன்... எல்லாவற்றையும்... யாவர்க்குமாய்...

அண்ணனின்மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள் உண்டு. வாலியை மறைந்திருந்து கொன்றதுமுதல், உரிமையற்ற மகுடத்தை சுக்ரீவனுக்கு கொடுத்ததும், எவனோ ஒரு வண்ணான் சொன்னானென்று சீதையை அக்னிப் பிரவேசம் செய்வித்ததும், சம்புகனை வதைத்ததும்... இன்னும் இன்னும்...

நான்?! அண்ணனுக்காகவே அர்ப்பணித்து, அண்ணனுக்காகவே சுவாசித்து, அண்ணன் விரல் நீண்ட இடமெல்லாம் கோதண்டத்தில் பூட்டிய அம்பெனப் பயணித்து.. "என் செயல்களும் பலாபலன்களும் அண்ணனுக்கே ஸமர்ப்பணம்!" பாவியல்ல... வெறும் கருவி...

காலமெல்லாம் ராமகாதையில் லஷ்மணன் வியக்கப்படுவான்.... ஸரயூ போலவே!

லஷ்மணன் ஸரயூவிலிருந்து மெல்ல எழுந்தான். செம்பட்டுத்துணி பிழிந்து துவட்டிக் கொண்டு மெல்லத்தன் அரண்மனை நோக்கி நடந்தான்.இன்று திருமணநாள். எத்தனையாவது?!

ஊர்மிளா காத்திருந்தாள். கணவனை நமஸ்கரித்து போஜனம் பரிமாறினாள். ஊர்மிளா தாம்பூலம் கொடுத்தாள். ஊர்மிளா மஞ்சத்தை சரிசெய்து கணவன் கால் அமுக்கத் தொடங்கினாள்.

மெல்ல மனைவியை அணைத்த லஷ்மணன் நிறைவான கூடலுக்குப் பின் ஊர்மிளாவின் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைத்துளிகளை முத்தமிட்டுச் சாய்ந்தான். தானாகவே இழுத்துக் கொண்ட இமைகளின்பின்னே நிறைவு வழிந்தது. ஸரயூவின் பெருக்காய் உள்ளிழுத்த தூக்கத்தின் ஆழத்தில் ஸரயூ பேசத் தொடங்கினாள்.

'லஷ்மணா! எல்லாவற்றையும் நீயே தெரிவு செய்தாய்! நீயே சுயவிருப்போடு காரியம் நிகழ்த்தினாய்! நீயே தன்னலம் நீக்கியவன் என்று விதந்து கொள்கிறாய்! ஊர்மிளா?! என்றாவது ஒரு கணம்.... ஒரே கணம்... அவளின் விருப்பு தெரிந்தாயா? பதினான்கு வருடம்.... ஆயுளின் மிக முக்கிய பருவம்... உடலே தணலாய்... தணலே உடலாய்....! அவளின் உணர்வு அறிந்தாயா? அவள் பேசக் கேட்டாயா? அர்ப்பணித்தவள் நீயல்ல லஷ்மணா! ஊர்மிளா...ஸரயூ...  எங்களின் தெரிவு நாங்கள் கேட்டதல்ல... எங்களின் வார்த்தைகள் நாங்கள் உதிர்த்ததல்ல... ஸரயூக்களுக்கு சுயதெரிவு இல்லை... ஊர்மிளாக்களுக்கும்தான்... ஸரயூவே ஊர்மிளா... ஊர்மிளாதான் ஸரயூ.. லஷ்மணன்களால் ஸரயூவாக முடியாது லஷ்மணா... ஏனெனில் ஸரயூக்கள் எப்போதும் ஊர்மிளாக்களாகவே இருக்கமுடியும்!'


கண்விழித்த லஷ்மணன் அதன்பின் உறங்கவே இல்லை!

பின்குறிப்பு: மகாபாரதமும், ராமாயணமும் கடவுளர் கதை என்று எண்ணாமல் அவற்றைப் படிக்கும்போது கணந்தோறும் வியப்பைத் தருபவை. இன்றும் எனக்கு அலுக்காத காதை பாரதக் காதை. அந்தக் கதைமாந்தரின் உணர்வுகள்,சிறுமைகள், அழுகைகள், பெருமிதங்கள் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. இவ்விரண்டையும் மீள்வாசிப்பு செய்து தம் பார்வையில் புதிதாய் எழுதும் கலை மிகக்கடினமானது. நான் அந்தளவு வாசிப்பாளனல்ல.

பெரியவர்களைப் போலவே 'போலச்செய்தல்' குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டு! நானும் ஒரு குழந்தைபோல முயற்சித்துப் பார்த்தேன். இது பிறந்தது! ஓட்டைகள் ஆயிரம் இருக்கலாம். குறைகள் மலிந்திருக்கலாம். அறிந்தவர் என்னை ஒறுக்கவேண்டாம். குழந்தை விளையாட்டெனக் கருதி மென்னகைத்துச் செல்லுங்களேன்! இன்னும் சீர்ப்படுத்திக் கொள்கிறேன்!

24 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

ரொம்ப நல்லா வந்திருக்குங்க ஸரயூவானவள் கதை. ஊர்மிளா பாவம். அதே போல், "பரதனும் லக்ஷ்மணனைப் போல விரதம் எடுக்கிறான்; மாண்டவி (பரதனின் மனைவி) பாடு ஊர்மிளையை விடப் பாவம் (அதாவது கணவன் அருகில் இருந்தும்..)"னு ஒரு சிறுகதை படிச்சிருக்கேன்....

உங்க நடையும் சொற்கோவையும் மிக நன்றாக வந்திருக்கு. வாழ்த்துகள்.

//எவனோ ஒரு வண்ணான் சொன்னானென்று சீதையை அக்னிப் பிரவேசம் செய்வித்ததும்// வண்ணார் சொன்னதற்காக சீதை காட்டுக்கு அனுப்பப் பட்டாள். "தூயவன்" ராமன் சீதையை மீட்டதும் கேட்டதனால், சீதை அக்னிப் பிரவேசம் செய்தாள்.

vasu balaji சொன்னது…

ரொம்ப அழகா வந்திருக்கு விந்தைமனிதன்.

Bibiliobibuli சொன்னது…

எத்தனையோ தடவை love map போட்டு கதை எழுதியிருக்கிறீர்கள். படித்துவிட்டு நகர்ந்திருக்கிறேன். எப்போதும் போல இங்கேயும் காதல் வரைபடம் இலக்கியம் கலந்து வரையப்பட்டிருக்கிறது. இலக்கிய ரசனையோடு சொன்ன விதம் ராஜாராமனுக்கே உரியது. குறை ஒன்றும் தெரியவில்லை.

Keep up your good work.

பெயரில்லா சொன்னது…

நல்லா வந்திருக்கு நண்பரே!
இன்னும் நிறைய ஊர்மிளாக்கள் ஊர்களில்.. கணவன் கடல் தாண்டி..

ஜோதிஜி சொன்னது…

ராமாயணமும் கடவுளர் கதை என்று எண்ணாமல் அவற்றைப் படிக்கும்போது கணந்தோறும் வியப்பைத் தருபவை.

பழைய கலைஞர், தெளிவான வைகோ போன்றவர்கள் முதல் பல இலக்கிய பேச்சாளர்கள் வரைக்கும் தொடக்க பேச்சில் ராசா நீ சொன்ன மாதிரி தான் மேற்கோள் காட்டி சொல்லுவாங்க.

ஜோதிஜி சொன்னது…

அப்புறம் சிங்கப்பூர் பயணத்திட்டத்திற்காக உழைத்துக் கொண்டுருப்பது இங்கிருந்தே உணர முடிகிறது

ஜோதிஜி சொன்னது…

ரதி நீங்க கனடாவில் சிங்கப்பூர் மணற்கேணி போல வாய்ப்பு கொடுப்பவர்கள் வேறு ஏதும் சங்கம் இருந்தால் ராசாவிடம் சொல்லுங்க. ராஜாராமன் முதல் ராமபிரான் வரைக்கும் என்று நம்மாளு பொளந்து கட்டுவாரு? உண்மைதானே ராசா?

சிவராம்குமார் சொன்னது…

அழகான சிந்தனை! ரொம்ப நல்லா இருக்கு!

Bibiliobibuli சொன்னது…

//பழைய கலைஞர், தெளிவான வைகோ போன்றவர்கள் முதல் பல இலக்கிய பேச்சாளர்கள் வரைக்கும் தொடக்க பேச்சில் ராசா நீ சொன்ன மாதிரி தான் மேற்கோள் காட்டி சொல்லுவாங்க.//

அப்போ இதெல்லாம் அரசியல் களம் புகும் முஸ்தீபா?

vinthaimanithan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

பாராட்டுக்கள் தம்பி ...சரயு நதியின் போக்கில் லட்சமணன் கதை சொல்லியிருக்கிறீர்கள் என படித்தால் ஊர்மிளாவின் கதையை தொட்டிருக்கிறீர்கள்.. எனக்கு மிகவும் பிடித்த ராமாயாணம் ஆயிரம் வாழ்வின் வழிகளை வலிகளை பேசுபவை. ஞானம் என்பது கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பதே... இன்னும் நிறைய எழுதுங்கள்...ஒரு எழுத்தாளனுக்கு உரிய முழு தரம் உங்களுக்கு இருக்கிறது ..

மீண்டும் என் வந்தனங்கள் ....

pichaikaaran சொன்னது…

அருமை... அருமை.. அருமை...

நல்ல முயற்சி... நன்றாக வந்து இருக்கிறது...

பின்குறிப்பு தேவை இல்லை என்பது என் கருத்து...
அனைத்தையும் ரசிக்கும் உணர்வும், எதிலிருந்தும் கற்று கொள்ளும் ஆர்வமும் கதையிலேயே தெரிகிறது. பின்குறிப்பு எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக இருக்கிறது..

நிறைய எழுதுங்கள்... வெகு சிறப்பான கதை... அதனால்தான் எவ்வளவு எழுதினாலும் முழுதும் பாராட்ட முடியவில்லை

Anbu சொன்னது…

இன்னும் நிறைய எழுதுங்கள்...ஒரு எழுத்தாளனுக்கு உரிய முழு தரம் உங்களுக்கு இருக்கிறது ..

vinthaimanithan சொன்னது…

@ கெக்கே பிக்குணி

நன்றிங்க... அப்போ இதை தொடரலாம்ங்கிறீங்க?! மாண்டவி பற்றிய தகவல் எனக்குப் புதிது.

@ வானம்பாடிகள்

நன்றி சார்

@ ரதியக்கா

அடிக்கடி 'எலக்கியம்'னு சொல்லி பயங்காட்றீங்களேக்கா... எல்லாரும் என்னை சாதிமுட்டு கட்டிடப் போறாங்க

@ பாலாஜிசரவணா

உண்மைதான் நண்பரே! ஊர்மிளாக்கள் என்றும் அழிவதில்லை

@ ஜோதிஜி

மணற்கேணியில் மூழ்கி முத்தெடுக்க உங்கள் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன்

@ சிவா

நன்றிங்க

@ ரதியக்கா

//அப்போ இதெல்லாம் அரசியல் களம் புகும் முஸ்தீபா? //

நான் ஒரு திராவிடக்கட்சியில ஆறுவருஷம் முன்னாடி மாணவர் அணியிலயும், அப்புறம் இலக்கிய அணியிலயும் இருந்தவனாக்கும்!!! (ஹி...ஹி எல்லாம் ஒரு வெளம்பரந்தான்!)

@ செந்திலண்ணா

அப்போ முன்னுக்கு வந்துடுவேன்னு சொல்றீங்க?!

@ பார்வையாளன்

ரொம்ப நன்றிங்க விரிவான விமர்சனத்துக்கு

@ அன்பு

நன்றி ஜி

மோகன்ஜி சொன்னது…

அற்புதமான படைப்பு நண்பரே! ஊர்மிளையின் தியாகம் அளப்பரியது சரயு போல... ஆனாலும் அவளுக்கான அங்கீகாரம் பரவலாய்க் கிட்ட வில்லை ஏனைய கதை மாந்தர் போல்.. சிலரின் உழைப்பும் தியாகமும் அதிகம் பாராட்டப் படாதது இயற்கையின் ஓர் நியதி போலும்

Unknown சொன்னது…

அருமையான படைப்பு இந்த ஷரயுவனவள்.உங்கள் எழுத்து நடை அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் நண்பா .....

ஜெயந்தி சொன்னது…

அருமை. பெண்களை உங்களைப்போன்ற ஆண்கள் உணர்வதால்தானே நாங்கள் சற்று நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொள்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

மிக நல்ல முயற்சி விந்தை மனிதன்.அழகாகவும் வந்திருக்கிறது.வாழ்த்துக்கள்.

மணிஜி சொன்னது…

நதி..பிரவாகம்....சொற்களுக்கு கொஞ்சம் பொறாமை

ஜோதிஜி சொன்னது…

நான் ஒரு திராவிடக்கட்சியில ஆறுவருஷம் முன்னாடி மாணவர் அணியிலயும், அப்புறம் இலக்கிய அணியிலயும் இருந்தவனாக்கும்!!! (ஹி...ஹி எல்லாம் ஒரு வெளம்பரந்தான்!)

நான் சிரித்த சிரிப்பில் அறை அதிருதுல்லே...........

மனி ஜீ விமர்சனம் டாப்பூ


மணற்கேணியில் மூழ்கி முத்தெடுக்க உங்கள் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன்

ஏற்கனவே உங்க குரு பகவான் கடவுச் சீட்டு இல்லாத ராசான்னு போட்டு தாக்கியிருந்தாரு. மொதல்ல அதை எடுக்க வழியைப் பாரு தங்கம்.

காரணம் இங்கேயும் காலாவதியாகிப் போயிடுச்சு...........

ஜோதிஜி சொன்னது…

பிழைப்புக்காக சென்னையில். வாழ்வில் சுமந்திருப்பது நம்பிக்கையை மட்டுமே

நல்ல வேளை அந்த பொண்ணு தப்பித்து போய்விட்டது. இத்தாம் பெரிய சென்னையில வெறும் நம்பிக்கையை வச்சுக்கிட்டு போய் மளிகைக்கடையில் போய் நின்றால் கடுகு உளுந்தம்பருப்பு கூட தர மாட்டாங்கல்லே..........

வருவே ராசா வருவே. வயது கம்மிதானே, நம்ம கதிர் மாதிரி நீயும் ஒரு நாள் தொ.கா யில் ஜெயித்து வந்த கதையை பேட்டியாக கொடுப்பாய்........

ஜோதிஜி சொன்னது…

ஊர்மிளாக்கள் என்றும் அழிவதில்லை

மொதல்ல ஊத்த வாய்க் கொண்டு இதை சொல்லக் கூடாது. இருந்த ஆளே தப்பித்து போய்விட்டது. அப்புறமெங்க அழிவு ஆக்கம்ன்னு.........

இப்படியே நாலு இடுகை எழுதிவிட்டு குப்புற படுத்து தூங்க வேண்டியது தான்.

அப்புறம் மறந்து போச்சு..... ஆம்னி பஸ்ஸா இல்ல டகடக வண்டியா

ஒன்னும் தகவல் இல்லையே

Bibiliobibuli சொன்னது…

ஜோதிஜி,

என்னால் இன்னும் சிரிப்பதை நிறுத்தமுடியவில்லை. சரி, சரி ராஜாராமன் ரோந்து வர்ற நேரம் நாம் அப்புறமா சிரிப்போம்.

// ஜெயித்து வந்த கதையை பேட்டியாக கொடுப்பாய்........ //
இதைத்தான் நான் ராஜாராமனிடம் எதிர்பார்க்கிறேன்.

vinthaimanithan சொன்னது…

:))))

ஆஹா! ஒண்ணு சேந்துட்டாய்ங்கய்யா... ஒண்ணு சேந்துட்டாய்ங்க... கைப்புள்ள ஓடுடா ஓடு!

Related Posts with Thumbnails