வெள்ளி, 15 அக்டோபர், 2010

"வர்றியாடி..." (கிராமத்துக்கதைகள்-3)



"வர்றியாடி..." இந்த வார்த்தய சீதாலெச்சுமியப் பாத்து வாய் உட்டு சத்தமாவோ இல்லன்னா மனசுக்குள்ளாறயோ கேக்காத ஆம்பளைங்க ஊருக்குள்ளாற இல்லன்னே சொல்லலாம். ஒத்தமரமா நிக்கிற பொண்டுவள பாத்தா கொஞ்ச நாழி நெழலுக்கு ஒண்டிட்டு போவலாம்னு நெனக்கிற ஆம்பளங்கதானே நாட்டுல நெறஞ்சிருக்காங்க!

சீதாலெச்சுமி நாலும் பொட்டப்புள்ளயா பொறந்த குடும்பத்துல அஞ்சாவதா பொறந்தவ. "அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டி"ன்னு ஊருக்குள்ளாற ஒரு சொலவடை சொல்லுவாங்க. பெத்துப்போட்ட களப்புலயே கண்ண மூடிட்டா பெத்தவ. அக்கச்சிமாருங்ககிட்ட அம்மாவப் பாத்து வளந்த சீதாலெச்சுமி சின்ன வயசுலயே சூட்டிகையா இருப்பா. அதுனால அக்கச்சியளுக்கும் செல்லமாத்தான் வளந்தா. வயசுக்கு வந்தவொடனே நல்லா பசேலுன்னு இருக்குற நெல்லு கதுரு மாரி நெகுநெகுன்னு நின்ன சீதாலெச்சுமியக் கண்டு ராத்தூக்கந்தொலச்ச ஆம்பளைங்களவிட வயிறெரிஞ்ச பொண்டுவதா ஊருல அதிகம். நல்லாக் கனிஞ்ச நாவப்பழம் கணக்கா அப்பிடி ஒரு நெறம் அவளுக்கு.

பேருலமட்டுந்தா லெச்சுமி இருந்துச்சே ஒழிய குந்துமணி தங்கத்துக்கு வக்குல்லாம இருந்தாரு சீதாலெச்சுமியோட அப்பெ. ஒருவழியா நாலு பொண்ணுவள கரையேத்துன பொறவு சீதாலெச்சுமிய என்னடா பண்ணுறதுன்னு அவ அப்பங்காரன் முழிச்சிட்டு இருந்தப்பதாம் அவ வாழ்க்கயில வந்துநின்னா நாட்டாம ஊட்டுல பண்ணையம் பண்ணிட்டு இருந்த மாடச்சாமி. வயக்காட்டுலயும், களத்துமேட்டுலயும், கலித்த அய்யனாரு கோயிலு ஆலமர நெழல்லயும் பொத்திப்பொத்தி வளத்தாங்க காதல ரெண்டுபேரும்.

கத்திரிக்கா முத்துனா கடக்கி வந்துதானே ஆவணும்? அரசபுரசலா சேதி வெளிய வந்து காத்துல பரவ அலறிப்பொடச்ச சீதாலெச்சுமியோட அப்பங்காரெ சந்தக்கி சந்த மாடு ஓட்டிட்டுப்போயி யாவரம் பண்ணுற ஒறமொறக்கார கருப்பையன புடிச்சி கல்யாணத்த முடிச்சி வெச்சிட்டு பொண்டாட்டி போன தெச பாத்து போயிச் சேந்தாரு.

சீதாலெச்சுமியும் வேற வழியில்லாமத்தா கழுத்த நீட்டுனா. கல்யாணத்துக்கு எட்டுநாளக்கி மின்னாடி அய்யனாரு கோயிலு ஆலமரத்துக்குப் பக்கமா மாடச்சாமியப் பாத்து மாலமாலையா கண்ணால தண்ணி உட்டு அழுதா. அவ அழுத கண்ணீரு ஆறாப் பெருகி ஆனை குளிச்சேற, கொளமாப் பெருகி குதுர குளிச்சேற... காலங்காலமா காதலிச்சவன கல்யாணம் பண்ணிக்க முடியாத பொண்டுவ எயலாமையிலயும், ஏக்கத்துலயும் சொல்லுற அதே வார்த்தய மாடச்சாமிகிட்டயுஞ்சொன்னா... " எனக்கு வேற வழியில்லய்யா. என்ன மறந்துட்டு வேற நல்ல பொண்ணா பாத்து கட்டிக்கய்யா"ன்னு சொல்லிட்டு எந்திரிச்சி போனவதான். அதுக்கப்பறம் அவ வாழ்க்க வேற, அவம் வாழ்க்க வேறன்னு ஆயிப்போச்சு.

கல்யாணம் கட்டி நாலு வருசத்துல மூணு ஆம்பிளப் புள்ளய பெத்துப்போட்டா சீதாலெச்சுமி. அவ புருசனும் அவள என்னமோ கண்ணுங்கருத்துமாத்தான் பாத்துக்கிட்டான். காக்காசும், அரக்காசுமா சேத்த பணத்துல மூணாவது புள்ளப்பொறவு முடிஞ்சி பொண்டாட்டிக்கி ரெண்டு பவுனுல வளவியும் வாங்கிப்போட்டான். இப்பிடியா சின்னச் சின்ன சந்தோசத்துல நவந்துகிட்டு இருந்த சீதாலெச்சுமி வாழ்க்கயில மறுபடியும் வந்து நின்னிச்சி விதி 'உட்டனா பாரு!'ன்னு.

வாரச்சந்தக்கி மாடு ஓட்டிட்டுப்போன கருப்பையா ஊட்டுக்கு வந்து களப்பா படுத்தவம்தாம். காலையில "மூத்திரம் மஞ்சளா போவுதுடி"ன்னு சொன்னவனோட கண்ணும், ரெண்டு நகக்கண்ணும் மஞ்சக் கெழங்கு கணக்கா மஞ்சமஞ்சேர்னு இருந்திச்சி. மஞ்சக்காமால...

சீதாலெச்சுமியும் என்னென்னமோ பண்ணிப்பாத்தா, மூலிகச்சாறு குடுத்தா... கீழாநெல்லிய அரச்சி வைத்தியரு குடுத்த மருந்து உருண்டய வாங்கிக்குடுத்தா, வேருகட்டிப்பாத்தா. ஒண்ணும் ஆவாம படுக்கயிலயே கெடந்த கருப்பையாவோட நாப்பதாவது ராத்திரி விடியவே இல்ல.

இருவத்தி ரெண்டு வயசுல அறுத்துப் போட்டுட்டு மூணு வாண்டுசுண்டுவள கக்கத்துல வச்சிக்கிட்டு தனிமரமா நின்ன சீதாலெச்சுமிக்கு என்னன்னு கேக்க ஒரு நாதியத்துப்போச்சி. பொறப்போட வந்த வைராக்கியத்த நெஞ்சுல சொமந்து கொழந்தைங்கள ஒத்த ஆளா வளக்க ஆரமிச்சா.

'பொறம்போக்கு நெலந்தான... கொஞ்சநாளு நாமளும் வெள்ளாம பண்ணித்தான் பாப்பமே'ன்னு நாக்க தொங்க போட்டுட்டு திரிஞ்சானுவோ ஊருக்குள்ள பல பயலுவோ. செல பேரு அவ தனியா நடந்துபோறப்ப பாத்து "என்ன லெச்சுமி தனியாவா போற.... நா வேண்ணா தொணக்கி வரட்டுமா"ன்னு கேட்ட பயலுவள கண்ணாலயே பொளந்துபோட்டுட்டு தான் வழியில போயிட்டே இருப்பா சீதாலெச்சுமி. நல்லபாம்புமாரி புஸ்ஸுபுஸ்ஸுன்னு பெருமூச்சி உட்டுக்கிட்டே திரிஞ்ச ஆம்பிளைங்கல்லாம் நாளு போவப்போவ இவ துளிகூட எளகாத கட்டாந்தரன்னு புரிஞ்சி ஒதுங்கிக்க ஆரமிச்சானுவோ.

உள்ளுக்குள்ள ஆயிரம் இருந்தாலும் ஒரு சொட்டு கண்ணுத்தண்ணி உடாம நெஞ்சழுத்தமா நின்னு எல்லாத்தையும் சமாளிச்சா சீதாலெச்சுமி. புள்ளைங்கள ஒரு சொல்லு திட்டிப்பேச மாட்டா. "எலேய்! ஒங்கப்பன் காக்காசு இல்லாம நின்னாலும் கடேசிவரைக்கி நிமிந்தே நின்னு வாழ்ந்தாண்டா. தகப்பெ இல்லாத புள்ள தறுதலன்னு ஊருக்குள்ள ஒத்தவார்த்த சொன்னாலும் அப்பிடியே நாண்டுகிட்டு நானும் செத்துப் போயிடுவே." அப்பிடின்னு சொல்லியே நண்டுசிண்டா இருந்த புள்ளைங்கள ஆளாக்குனா.

அந்தாப்புடி... இந்தாப்புடின்னு ஓடிப்போச்சி இருவத்தஞ்சி வருசம்! மூணு புள்ளைங்களயும் படிக்கவெச்சு, அவனுவளும் டவுனு பக்கம்போயி ஆளாளுக்கு வீடு, வாச நெலம் நீச்சுன்னு கொஞ்சங்கொஞ்சமா சேக்க ஆரமிச்சானுவ. ஒரு வழியா மூணு பேத்துக்கும் ஒலகமெல்லாம் அலஞ்சி திரிஞ்சி கல்யாணத்தயும் முடிச்சிவெச்சா.

கடேசி மவனுக்கும் கல்யாணம் முடிஞ்ச மூணாம் மாசம் மூத்த மருமவதான் மொத கொள்ளிய பத்தவெச்சா. "ஏங்க! ஒங்கம்மாவ நாமளேதான் வெச்சி கஞ்சி ஊத்தணுமா? மத்த மவனுவ மட்டும் கெட்டிக்காரனுவ, நாமதான் இளிச்சவாயின்னு எழுதி இருக்கா... என்னமோ பண்ணுங்க! ஆனா அத்தை படுக்கையில கெடந்தா பீத்துணி கசக்கிப்போடணும்னு என்னப்பாத்து சொல்லிடாதிய"ன்னு அவ சொன்ன வார்த்தய அடுப்படி பக்கம் போனப்ப அகஸ்மத்தா காதுல வாங்குன சீதாலெச்சுமிக்கி அடிவயித்துல நெருப்பெடுத்து வெச்ச மாரி இருந்திச்சி.

"என்னமோ டவுனு எனக்கு ஒத்துவரலப்பா! நா ஊருக்குபோயி ஏங் காலத்த கழிக்கிறம்பா... அப்பப்ப அம்மாவ வந்து பாத்துட்டு மட்டும் போ ராசா"ன்னு மவங்கிட்ட பக்குவமா சொல்லிட்டு ஊருக்கு வந்து சேந்த சீதாலெச்சுமிக்கி இருவத்தஞ்சி வருசங்கழிச்சி அழுவணும்போல இருந்திச்சி. ரெண்டு மாமாங்கங்கழிச்சி அய்யனாரு கோயிலு ஆலமரத்தடிக்குப் போயி ஒக்காந்தவ கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு 'இப்பவா அப்பவா'ன்னு நின்னிச்சி.என்னன்னமோ நெனப்புல ஒக்காந்துருந்த சீதாலெச்சுமி ஏதோ நெழலாடுதேன்னு தலயத் தூக்கிப் பாத்தா.

மாடச்சாமி நின்னுட்டு இருந்தான். கடேசியா அழுதுட்டுப்போனன்னக்கிதான் அவ அவன கண்ணால நிமிந்து பாத்த கடேசிநாளு. தெகப்பூண்ட மிதிச்சமாரி தெகச்சிப்போயி நின்னா சீதாலெச்சுமி..

"இத்தினி வருசமா ஓன்னோட நெனப்புலதான் வாழ்ந்துட்டு இருக்கேன் சீதா. இப்பவாவது ஏங்கூட வருவியா?

கொஞ்சநேரம் யோசிச்ச சீதாலெச்சுமி "வாய்யா! எங்கயாவது போவலாம்"னு சொல்லிட்டே அவங்கைய புடிச்சி நடக்க ஆரமிச்சா... அதுக்கப்பொறவு சீதாலெச்சுமி எங்கன்னு அந்த ஊரும், அவளோட புள்ளைங்களும் தேடவே இல்ல.

*************************************************************

கதையச் சொல்லிமுடிச்சபொறவு சீதாலெச்சுமி ஆத்தாவப் பாத்து கேட்டே.

"ஏன் ஆத்தா? மாடச்சாமிய கையப்புடிச்சி நடக்க ஆரமிச்சப்ப ஒம்மனசுல என்னதா ஓடிட்டு இருந்திச்சி?"

"ஏம்பொறப்புலேருந்து ஏம் வாழ்க்க பூரா ஏம் ஆசக்கின்னு வாழ்ந்ததில்ல ராசா. எங்கப்பாரு மானம் மருவாத மிக்கியம்னு ஓம்பாட்டன கட்டிக்கிட்டே. ஏம்புருசன் கவுரத மிக்கியம்னு ஏம் மனசுலயிம் ஒடம்புலயிம் எரிஞ்ச தீய ராவக்கி ராவு கொடங்கொடமா தண்ணி ஊத்தி தணிச்சிக்கிட்டே. ஏம்புள்ளைங்க வவுறு மிக்கியம்னு ஏம் வவுத்துல ஈரத்துணிய போட்டுக்கிட்டே. பொம்பளப்பொறப்பே பொசக்கெட்ட பொறப்புய்யா. யாராச்சும் ஒத்தருக்காவ வாழ்ந்தே ஆவணும். ஆம்பிளைங்க வாழ்க்க அப்பிடி இல்ல. ஆனா மாடச்சாமி... நா ஆலமரத்தடில உட்டுட்டு திரும்பிப் பாக்காம போனத்துலருந்து என்ன இல்லாம வேற பொம்பளய நிமுந்தும் பாக்காம இருந்தாம்யா." கொஞ்சூண்டு பெருமூச்சு உட்டுட்டு ஆத்தா சொன்னா...

"அந்த நாப்பத்தஞ்சி வயசிலதாய்யா நா மறுவடி பொம்பளயா பொறப்பெடுத்தே"

24 பேரு கிடா வெட்டுறாங்க:

ஜோதிஜி சொன்னது…

இரவு முழுவதும் கண்விழித்து உருவான தாக்கமா?

நேசமித்ரன். சொன்னது…

ராஜாராமா பின்னிட்டையா பின்னி !!ஒமக்கு கிராமத்து மொழிதான் அழகு விடாதீரு !

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

கிரா, கழ்னியூரானுக்கு பிறகு தமிழில் ஆளில்லையோன்னு நெனச்சேன். அடுத்த தலமுற ஆளு ரெடிப்பே.. :)

வாழ்த்துகள் ராசாராமா.. தொடரட்டும் உம்ம பணி.

தாராபுரத்தான் சொன்னது…

அருமைங்க....தம்பி.

Unknown சொன்னது…

நிறைய சொல்லவேணும். பிறகு வாறன்.

vinthaimanithan சொன்னது…

அட! பயந்துட்டே போஸ்ட் பண்ணினேன். மின்னல்வேகத்துல நான் மதிக்கிற பெருந்தலைங்கல்லாம் வந்துட்டீங்க! காலையிலயே மனசு மத்தாப்பூவா மாறிட்டு. நன்றிங்க!

எல் கே சொன்னது…

அருமையான எழுத்து நடை

vinthaimanithan சொன்னது…

'Joseph' அப்டீங்குற பேருல தன்னோட பின்னூட்டம் தவறுதலா பதிவாயிடிச்சி அப்டீன்னு தகவல் அனுப்பின ரதியக்காவுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

அக்கா கண்டிப்பா உங்களை மறுபடி எதிர்பாக்குறேன்!

பெயரில்லா சொன்னது…

அண்ணே சில வார்த்தைகள் புரியலேன்னாலும் கிராமத்து மொழி நடைல பின்றீங்க!
இது எந்தவூர் பக்க மொழி நடைண்ணே?

ஜோதிஜி சொன்னது…

காலையிலயே மனசு மத்தாப்பூவா மாறிட்டு. நன்றிங்க

இனி தொழில் வாழ்க்கையிலும் மத்தாப்பூ மற்றும் பூக்கள் நிறைந்த மாலைகளும் பாராட்டுகளும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தெளிவான வலையுலக பாதைக்கு என் நல்வாழ்த்துகள் ராசா.

ரதி ஹேமா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். எங்க ராசா சந்தோஷமாயிருக்கார்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான நடை... படிப்பவர்களையும் இல்லுத்து செல்கிறது கதையினூடே..

Bibiliobibuli சொன்னது…

காலையிலயே மனசு மத்தாப்பூவா மாறிட்டு.

Yes, Jothiji, I am happy for him. will write later.

Vidhya Chandrasekaran சொன்னது…

simple yet beautiful.

Anbu சொன்னது…

ஜி, ரொம்ப நெகிழ்சியான கதை. மிக அருமை. இம்மாதிரி கதை படித்து ரொம்ப நாள் ஆகுது. மனச ஒரு மீள்பதிவு செய்துருக்கு இந்த கதை. ரொம்ப நன்றி ஜி.

ஆமா, இந்த கதய யாருக்கிட்ட சொல்றா சீதா?

Unknown சொன்னது…

தஞ்சை நடையில் ஒரு அருமையான கதை. நெறைய வார்த்தைகள் என்னை எங்கூருக்கு இழுத்துகிட்டு போச்சு!! வாழ்த்துக்கள்!

ராஜவம்சம் சொன்னது…

கதைய படிச்சிட்டு ஒன்னும் சொல்லாம போக மனம் இல்லை என்ன சொல்வது என்றும் தெரியவில்லை நேரில் இருந்தால் கட்டியனைத்து வாழ்த்தியிறுப்பேன் வாழ்த்துக்கள் ரொம்ப நல்லா இருக்கு.

Unknown சொன்னது…

என்ன சொல்றதுன்னே தெரியல தம்பி .. மிகப் பிரமாதமான நடை .. கிராமத்து வாசனை ..

சீதாலெட்சுமி மாதிரி எத்தனையோ பொறப்புகள் வழி தெரியாம அல்லாடிட்டுதான் கெடக்கு ...

உங்களுக்கு எழுத்துலகில் ஒரு இடம் கண்டிப்பாக உண்டு ...

உமர் | Umar சொன்னது…

நல்லா இருக்கு நண்பா.

கிராம வழக்கில் இருக்கும் பல வார்த்தைகள் புழக்கத்திலும், சில வார்த்தைகள் கேள்வியிலும் அறிமுகம் இருந்தாலும், 'தெகப்பூண்ட மிதிச்சமாரி' அப்படின்னா என்னன்னு புரியல. கொஞ்சம் சொல்லுங்களேன்.

எஸ்.கே சொன்னது…

செம கதைங்க! நல்ல எழுத்து நடை!

விக்னேஷ்வரி சொன்னது…

நிஜமா குறைஞ்சது இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த எழுத்துக்களையே நினைச்சிட்டிருப்பேங்க. செம மொழி உங்களுக்கு. அப்பா இன்னும் அதுக்குள்ள இருந்து வெளில வர முடியல. கலக்கல்.

tsekar சொன்னது…

கிராம வழக்கில் ...மிகப் பிரமாதமான நடை !!

வாழ்த்துக்கள் ரொம்ப நல்லா இருக்கு!!!

Bibiliobibuli சொன்னது…

உயிரோட்டத்துடன் மண்வாசனை ராஜாவின் மனதை விட்டகலாத ஓர் படம் பார்த்த திருப்தி. எழுத்தில் காட்சிகளை விவரித்து படிப்பவரின் மனதில் அதை நிழலாடவைத்து பதியவைப்பது எல்லோராலும் முடியாத ஒன்று. அதை சர்வசாதரணமாக செய்திருக்கிறது உங்கள் எழுத்து.

இன்னோர் முறை பெண் ஜென்மங்களுக்காய் இயல்பாய் கதையினூடே பேசியிருக்கிறீர்கள். காட்சிகளின் விவரிப்புகளுக்கிடையே யதார்த்த உலகம் பற்றிய உங்கள் கருத்துகள் "நச்".

வேறென்ன, செந்தில் சொன்னது தான்; "உங்களுக்கு எழுத்துலகில் ஒரு இடம் கண்டிப்பாக உண்டு"

பெயரில்லா சொன்னது…

"அந்த நாப்பத்தஞ்சி வயசிலதாய்யா நா மறுவடி பொம்பளயா பொறப்பெடுத்தே"
ரொம்ப பேரு வாழ்க்கை எப்புடித்தான் ஆயிடுத்துங்கோ

இளைய கவி சொன்னது…

very very good. i gone in to it man. i felt the old women's feelings. My god i haven't read anything like this heavy. keep the good work buddy.

Related Posts with Thumbnails