வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பிடித்த பாடல்கள்! (தொடர்பதிவு)




பிடித்த பாடல்கள் என்ற தலைப்பில் என்னை இங்கு உரையாற்ற அழைத்திருக்கும் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய.....

அய்யய்யோ...! தொடந்தாப்புல நாலு அரசியல் மீட்டிங்க வேடிக்க பார்த்தா இதான் கெதி...! எங்க போனாலும் வாயிக்கு மின்னாடி மைக்க நீட்டிட்டு இருக்குறா மாதிரியே ஒரு ஃபீலிங்கு....

தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் வால்பையனுக்கு நன்றி! வெகுநாட்களாகவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை இசை, பாடல் என்றாலே தமிழ்த் திரையிசை மட்டும்தான் தெரியும். அதற்கு மேல் பாலமுரளிகிருஷ்ணா, பாப் மார்லி, மைக்கேல் ஜாக்ஸன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, நான்சி அஜ்ரம் என்றெல்லாம் சொல்லக்கேட்டு வாயைப் பிளப்பதோடு சரி!

நிற்க!

மனம் எந்தளவு விசித்திரமானது என்பதை அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால் தெரியும். எனக்கு இது பிடித்தமான பொழுதுபோக்கு. நன்கு சுறுசுறுவென இருப்பேன்; திடீரென்று பொழுதுகள் இருண்டு போனதாய் உணர்வு வரும்! இறுக்கமாய் அமர்ந்திருப்பேன்.... சடாரென்று வண்ணம் மாறி மனம் மலைச்சுனையாய் நெகிழ்ந்து சொட்டத் துவங்கும்! இப்படியே.....!

எந்தப் பொழுதானாலுஞ்சரி! எனக்கு பி.சுசீலாவின் குரல் கேட்டால் போதும்! அப்படியே உருகத் தொடங்கிவிடுவேன். அப்படி ஒரு வசீகரம்! அம்மாடி!

இதோ ஆண்டவன்கட்டளை படத்தில் "அமைதியான நதியினிலே ஓடும்..." கேளுங்களேன்.... டி.எம்.எஸ் இரண்டாவது சரணம் முடிக்கும்போதே சுசீலா ஒரு ஹம்மிங் உடன் "நாணலிலே காலெடுத்து நடந்துவந்த பெண்மையிது" என்று ஆரம்பிப்பார் பாருங்கள்! என் கண்கள் தானாகவே செருகிக்கொள்ளும்.

http://thenkinnam.blogspot.com/2008/09/695.html

(பாடலின் யூட்யூப் லிங்க் கிடைக்கவில்லை...)



அடுத்து இதைக் கேளுங்களேன்.... மயக்கமென்ன.... என்று உணர்வீர்கள்! " கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்" என்று கொஞ்சும்போது காதலி இருப்பவர்கள் கற்பனையில் மூழ்குவீர்கள்! இல்லாதவர் தேடத்துவங்குவீர் அப்படி ஒரு காதலியை!



எனக்கு இறைநம்பிக்கை இல்லை... ஆனால் சுசீலாவின் இந்தப்பாடலில் என்றும் உருகிக் கொண்டே இருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை... பெரும்பாலும் பக்தர்கள் இறையிடம் இறைஞ்சுவார்கள்.. ஆனால் இதில் சுசீலாவின் குரலில் கம்பீரம் வழிவதாய் உணர்கிறேன்... ஒருவேளை அவர் இறைவணக்கஞ்செய்யத் தேர்ந்தெடுத்தது 'தேன் தமிழ்ச்சொல்' என்பதாலோ?!



ஒருநாள் ஆந்திராவின் ஒரு கிராமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தில் ஒலித்த தெலுங்குப்பாடல் என்னைத் தனக்குள் இழுத்துப்போட்டது. என்ன பாடல் அது என மூன்று மாதங்களாய்க் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு ஒருநாள் விடை கிடைத்தது.... தமிழிலும் தெலுங்கிலும் அது அதே பாடல்தான்... மிஸ்ஸியம்மா படத்தில் ஏ.எம்.ராஜாவும், இசையரசி பி.சுசீலாவும் பாடிய "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்" பாடல்!



தமிழில் மிகக் குறைவான பாடல்களையே பாடியிருந்தாலும் ஒவ்வொன்றையும் குறையற்றுப் பாடியவர் சசிரேகா... இவர் குரலிலும் அதே சொக்குப்பொடி! 'செந்தூரப்பூவைத் தேன் கொண்டுவரச்' சொல்லும் இந்தப்பாடலில் எஸ்.பி.பியின் குரலையும் மீறி என்னைக் கட்டிப்போடும் பாடலின் துவக்கத்தில் சசிரேகா பாடும் வரிகள்! அதேபோல மனோஜ் கியானின் இசை...! அடடா!



அங்கங்களில் வழியும் கவிதையை ரசிக்கும் கவிமனம் எத்தனை பேருக்கு வாய்க்கும்?! எனக்கு மட்டுமல்ல.... இசைப்பிரியர்கள் அனைவருக்குமே எப்போதுமான எவர்கிரீன் ஃபேவரைட்!... சங்கத்தில் பாடப்படாத இந்தக் கவிதை!



காமம்...! கஸ்தூரிமானின் அடிவயிற்றிலிருந்து பரவும் வாசம்போல நம்மில் இருந்து வழிந்துகொண்டே இருக்கின்றது! ஒரு மந்திரச்சாட்டையாய் மாறி நம்மைச் சுழற்றி பிரபஞ்சவெளியில் வீசியெறியும்! மெலிதாய் ஓடும் ஓடையின் குளிர்ச்சியாய் தோல்துளைத்து உட்புகும்! எவ்வளவு அருந்தியும் தாகம் அடக்காத சமுத்திரநீராய்ப் பெருகி ஆவேசமாய் அலையடிக்கும்! ஜேசுதாஸ், ஸ்வர்ணலதாவின் குரலில் இதோ "ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு!"



தனிமையின் பாடலை உணர்ந்திருக்கிறீர்களா? தாயற்ற குழந்தையாய்த் தொற்றிக் கொள்ளத் தோள்தேடி அலையும் வேதனையை? மனிதக்காட்டுக்குள் தனக்கென ஒரு ஜீவனின்றி உள்ளிருந்து எழும் கேவலை? எப்போது கேட்டாலும் என் விழியோரம் ஒட்டி நிற்கும் ஒருதுளி கண்ணீர்...  காற்றலைகளில் கண்ணீர்கொண்டு ஈரப்பதம் சேர்க்கும் ஸ்வர்ணலதாவின் குரலில்.... "எவனோ ஒருவன் வாசிக்கிறான்! இருட்டில் இருந்து நான் சுவாசிக்கிறேன்"



இன்னும் எத்தனையோ பாடல்கள்....! ஓ...ரசிக்கும் சீமானேவும், ஏழிசை கீதமேவும், பாடி அழைத்தேனும், என் ஜீவன் பாடுதுவும், தன்னந்தனிக் கூட்டுக்குள்ளவும்... இன்னும்.... இன்னும்.... கணவனைப் பிரிந்த பெண்ணின் தனித்த இரவுகள் போல நீண்டுகொண்டே செல்லும் முடிவுறாது...! என்னை மெல்லமாய்த் தடவிக் கொடுத்து, சோர்வுநீக்கி, மனதுக்குள் புகுந்து மாயம் செய்யும் பாடல்கள் கணக்கிலடங்கா! சமீபத்தில்கூட விடியவிடிய விழித்திருந்து களவாணி படத்தின் "ஊரடங்கும் சாமத்துல" கேட்டுக்கொண்டே இருந்தேன்.

ஆனால் முதல்முறை கேட்டபோதில் இருந்து இதுவரையிலும் என்னில் ஒரு சிலிர்ப்பை ஓடச்செய்யும் ஒரு பாடல் உண்டு! அந்தப் பாடலை முதன்முறை கேட்டபோது நான் தன்னிலையை அடைய சிறிது நேரம் பிடித்தது... 2003 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். தஞ்சையில் நடந்த ம.க.இ.க வின் தமிழ்மக்கள் இசைவிழாவில் துவக்கப்பாடல் என்றும் நினைவு. ஐந்தோ, ஆறோ பெண்தோழர்களின் அர்ப்பணிப்பும், ஜீவனும் நிறைந்த கோரஸ் குரலில் கேட்ட அனுபவம் இன்று வரையிலும் மறக்க முடியாது. வசந்தத்தின் இடிமுழக்கம் என்ற ஒலிப்பேழையில் இருக்கும் பாடல்.... "செவ்வணக்கம்" என்ற இந்தப்பாடலை இணையம் மூலம் கேட்பதைவிட நேரடி அனுபவமாகக் கேட்க முடிந்தால்.......  (இணையத்தில் எனக்குத் தெரிந்து ரயாகரனின் தமிழரங்கம் தளத்தில் மட்டுமே கேட்கக் கிடைக்கின்றது)

பின்குறிப்பு: இசையரசி பி.சுசீலாவின் பாடல்களை ரசிக்க விரும்பும் நண்பர்கள் இந்தத் தளத்துக்குப் போய்ப் பாருங்களேன்..... http://psusheela.org/.

இந்தப் பதிவினைத் தொடர நான் அழைக்க விரும்புவது எனக்கான ப்ரியங்களை எப்போதும் சுமக்கும் என் நண்பன் பார்த்தசாரதியை

*******************************************************************************

10 பேரு கிடா வெட்டுறாங்க:

காமராஜ் சொன்னது…

செவ்வணக்கம் பாடலைக்கேட்க ஆவலைத்தூண்டி விட்டு விட்டீர்கள் தோழா .

வால்பையன் சொன்னது…

உழவன் படத்தில் வரும், பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ பாட்டும் கிளாசா இருக்கும் தல!

நேசமித்ரன் சொன்னது…

ம்ம் நல்லா இருக்கு :)

ஜோதிஜி சொன்னது…

வால்பையன் பின்னூட்டத்தில் அப்பவே சொன்னேன். யோவ் ரசனையான ரட்சிக்கும் ரசனையாளர் தான்.

பெயரில்லா சொன்னது…

good taste

மோகன்ஜி சொன்னது…

ரொம்ப நல்ல ரசனை உங்களுக்கு.. என்ன மாதிரியான பாடல்கள்?

சிவராம்குமார் சொன்னது…

உழவன் பாடலுக்கான முன்னுரை மிக அருமை!

ஜோதிஜி சொன்னது…

அவசரத்தில் பேச முடியல ராசா

ரசனை////// ரசிப்பாளர்

ரட்சிக்கும்////// மற்றவர்களை ரசிக்க வைக்கும்

ரசனையாள்ர் //////// அது தான் நீ ராசா.

ஜோதிஜி சொன்னது…

போராடக் கற்றுக்கொள்; கற்றுக்கொள்ளப் போராடு!


தலைப்பு நல்லாத்தான் இருக்கு. ஆனா இது குறித்து எந்த விசயமும் இப்ப வரவே மாட்டுதே..........

ஹேமா சொன்னது…

எல்லாக் காலகட்டத்திலும் இந்தப் பாடல்களை ரசிக்கலாம்.தெரிவுகளுக்கு நன்றி.

Related Posts with Thumbnails