திங்கள், 13 செப்டம்பர், 2010

கவித எளுதப்போறேன்...

"தூங்குறப்போகூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும்டா; இல்லன்னா பொணம்னு சொல்லி பொதச்சிடுவானுங்க" என்று சொல்லுவார் என் தாத்தா. பதிவு எழுதி இரண்டு,மூன்று நாட்களாயிற்றே... ஏதாவது எழுதி ஆக வேண்டுமே என்ற எண்ணம் என்னை அரித்துக்கொண்டே இருந்தது என்னை.

என்ன எழுதலாம்? நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று ஏதாவது மொக்கையாக எழுத விருப்பமில்லை; என்னால் பின்பற்ற முடியாத விஷயங்களை வியாக்கியானப்படுத்தி எதுகை,மோனை நீட்டிமுழக்கி பக்கங்களை நிரப்பவும் எரிச்சலாய் இருக்கின்றது; அரசியல் நிறைய எழுத ஆசைதான்... ஆனால் குறைந்தபட்சம் ஒரு கட்டுரை எழுத ஐந்துமணி நேரமாவது வேண்டும் எனக்கு! ஏற்கனவே தொடங்கிய 'மறைக்கப்பட்ட வரலாறுகள்: இந்திய சுதந்திரதினத்தையொட்டி சில நினைவுகள்' தொடர் பாதியிலேயே நிற்கிறது.

பேசாமல் 'கவிதை' எழுதிவிட்டால்? 'அடப்பாவி!கவிதை என்ன கடைச்சரக்கா? அந்த அளவு மலிந்துபோன விஷயமா?' உள்ளிருந்து ஒலித்த குரல் சில கேள்விகளையும் சேர்த்து வீசிச் சென்றது.

எவ்வளவு சுலபமாக நமக்கு கவிதை வருகிறது?

'பெண்ணே! உன் பார்வையில் பற்றிக்கொண்டேன் நான்... அணைக்க வாயேன்!' என்று காதல் செய்யலாம்.

'ஏ இளைஞனே! எழுந்திடு.... உன் தோள்களுக்காய்த் தவம் கிடக்கிறது உலகம்' (பாழாப்போச்சு!) என்று அறிவுரை செய்துவிட்டு எழுதிய களைப்பு நீங்க கொஞ்சம் தூங்கலாம்.

ஆனால்...ஆனால்....

நாற்பது தமிழ்வார்த்தைகளும், நாலு வெள்ளைக்காகிதங்களும் போதுமா என்ன கவிதை எழுத?!

நாட்டில் அதிகம் உற்பத்தியாவது ஜனத்தொகையும் கவிதைகளும் மட்டுமே.

கவிதையாகவே ஊற்றெடுத்த ஒரு தொன்மரபின் இலக்கியங்கள் ஏதுமறியாமல், அதன் வாழ்வியலும் அரசியலும், அழகியலும் பற்றி ஏதுமறியாமல் 'செத்துப்போன வார்த்தைகளின் ஊர்வலமாய்' எழுதுவது கவிதையா?

"மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"

என்ற வரிகளில் இழையும் அகத்தின் தரிசனமும்

"எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே."

என்ற கவிதாகர்வமும் இல்லாமல் வருவது கவிதையாகுமா?

ஒரு நல்ல கவிதை சில பூக்களையும், சில முட்களையும் நம்மீது வீசிச்செல்ல வேண்டும்.

மனதின் ரகசிய அறைகளுக்குள் புகுந்து உறவாடி, வாசிக்கும் கணந்தோறும் பலவண்ண ஜாலம் காட்டவேண்டும்.

"எமக்குத் தொழில் கவிதை; இமைப்போதும் சோராதிருத்தல்" என்ற அக்கினிச் சுடர் உள்ளுக்குள் எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.

சமூகம் சார்ந்த அக்கறையும், நேசமும் மனதிலிருந்து வழிந்து கொண்டிருக்கவேண்டும்.

இத்தனை கேள்விகளையும் வீசி என் இமைகளுக்குள் அமர்ந்து மூடவொட்டாமல் தூக்கம் பறித்தது ஒரு கவிதை. ஏனெனில் அது கவிதை!

இதோ கல்யாண்ஜி "இவனைப் போன்ற கவிதை" எப்படி இருக்கும் என்று கேட்டுப் பரிகசிக்கிறார் பாருங்களேன்.

இந்தக் கவிதை எழுதுகிறவன்
எத்தனை சொற்கள்
மனதாரப் பேசுகிறான்
அவன் மனைவியிடம், பிள்ளைகளிடம்
அடுத்த பக்கத்துவீட்டுக்காரனுடைய
மூக்கும் முழியும்
அடையாளம் சொல்ல முடியுமா
நெஞ்சில் கை வைத்து.

இந்தக் கவிதை எழுதுகிறவன்
முண்டியடித்து ஏறி
அமர்ந்த பேருந்தில்
எப்போதாவது
எழுந்து இடம் கொடுத்திருக்கிறானா
இன்னொரு தள்ளாதவருக்கு.

குதிகால் நரம்பு தென்னிய
சைக்கிள் ரிக்க்ஷாக் காரனிடம்
கூலி பேரம் பேசாமல்
இருக்க முடிகிறதா இவனால்
இவனைப் போலத்தானே
இருக்கும்
இவனுடைய கவிதையும்.

6 பேரு கிடா வெட்டுறாங்க:

Bibiliobibuli சொன்னது…

இயல்பாய், அழகாய் உள்ளது உங்கள் எண்ணங்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

மனதில தோன்றிய எண்ணங்களை வெகு இயல்பாய் கூரியிருகிரீர்கள்....ரொம்ப நல்லாயிருக்கு..

vasu balaji சொன்னது…

கல்யாண்ஜி கவிதை யதார்த்தம். ஆனால் கவிதை கற்பனைதானே. நீங்க எழுதுங்க சாமி:))

என்னது நானு யாரா? சொன்னது…

//குதிகால் நரம்பு தென்னிய
சைக்கிள் ரிக்க்ஷாக் காரனிடம்
கூலி பேரம் பேசாமல்
இருக்க முடிகிறதா இவனால்
இவனைப் போலத்தானே
இருக்கும்
இவனுடைய கவிதையும்.//

கவிதை எழுதுகிறவர்களை வாரிவிட்டிருக்காரு நண்பர்! இப்படி இரட்டை வேஷம் போடுகிறவர்கள் தான் அதிகமாய் இருக்கிறார்கள்.

மிகவும் அருமை!

சரி நேரம் இருக்கும்போது நம்ப கடைபக்கம் வந்து போங்க நண்பரே!

pichaikaaran சொன்னது…

good thoughts

ஹேமா சொன்னது…

கல்யாண்ஜியின் கவிதை இயல்பாய் ஒரு மனிதனை சொல்லிக்காட்டுகிறது.உங்கள் மனமும் எழுத்தும் அதுபோலவே விந்தையாரே !

Related Posts with Thumbnails