திங்கள், 27 செப்டம்பர், 2010
கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 27/09/10
பதிவு எழுத மேட்டர் யோசிச்சே முன்மண்டையில முக்காவாசி போச்சே என்னடா பண்றதுன்னு மிச்சமிருக்குறத பிச்சிகிட்டு இருந்தப்பதான்யா இந்த ஐடியா வந்திச்சி. என்னாத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு? பேசாம வாரத்துக்கு ஒருவாட்டி ஜாலியா நம்மூரு பாஷையில கொஞ்சம் காத்தாட அரட்டையடிச்சிட்டு போயிடலாம்னு இந்த அரட்டைக்கச்சேரி டாபிக்கை ஆரமிச்சேன். ஆரம்பத்துல சுளுவா இருந்தாலும் இந்த கெராமத்து சொலவடையெல்லாம் தேத்த நாம் படுற பாடு இருக்கே! குப்புறப்போட்டு கொள்ளிக்கட்டையால சொறிஞ்ச மாதிரி ஆயிடுச்சுங்க என் நெலம! இந்தவாரம் என்னடா பண்றதுன்னு பேய்முழி முழிச்சப்ப வகையா வந்து சிக்குனிச்சி அந்தணனோட வலைப்பூ! அண்ணனோட பக்கம் எட்டிப்பாருங்க... வயிறு வலிக்கச் சிரிக்க நான் கேரண்டி! ( "ப்ரீத்தி வாங்கு நான் கேரண்டி"யை ஞாவகப் படுத்துதா?). அப்படியே உருவிட்டேன். அதுனால இந்தவாரம் சொலவடைக்குன்னு வர்ற பாராட்டெல்லாம் அந்தணன் அண்ணனுக்கே சொந்தம்!
1) விதிய வேலி போட்டு தடுத்தாலும் அது புடுங்கிகிட்டு பூந்துடும் அப்டீம்பாங்க! காங்கிரசு கெவுருமெண்டுக்கு இது பொல்லாத காலம் போல! எதத் தொட்டாலும் அதுல சனியன் சம்மணம் போட்டு ஒக்காந்துடுது. காமன்வெல்த் போட்டி நடத்துறேன் பேர்வழின்னு எறங்குனா அஸ்திவாரம் போடுறதுல ஆரமிச்சி அரங்கம் கட்டுறவரைக்கும் ஊழல் பெருச்சாளிங்க அனகோண்டா வாயத் தொறந்து ஏப்பம்விட, நாட்டோட மானம், மருவாதியெல்லாம் கப்பல் புடிச்சிப்போயி பிபிசி வரைக்கும் நாறுது! ஊழல்தான் இந்தியாவோட தேசிய அடையாளமாச்சே! கொஞ்சூண்டு கவனமா இருந்திருக்கப்படாது? எங்க போங்க?! மண்ணுமோகனுக்கு ஒபாமாகிட்டயும், ராஜபக்க்ஷேகிட்டயும் கூடிக் குலாவுறதுக்கே நேரம் பத்தல!
அது ஒரு பக்கம் கெடக்கட்டும்! இந்திய சனங்கள்ள மூணுல ரெண்டு பங்கு பேருக்கு ரெண்டு வேளை சாப்பாட்டுக்கே ததிகணத்தோம்தானாம்! ஒலக வங்கிலயும், மத்த நாடுகள்கிட்டயும் வாங்குற கடன்ல முக்காவாசி பழைய கடனோட வட்டி கட்டத்தான் செரியா இருக்காம். இந்த லட்சணத்துல காமன்வெல்த் போட்டியெல்லாம் தேவைதானா? பணக்கார நாடுங்க நடத்துறாங்கன்னு நாமளும் நடத்தணுமா? ஆனை தும்பிக்கைய ஆட்டுதுன்னு ஆட்டுக்குட்டி வாலை ஆட்டுச்சாம்.
காமன்வெல்த்தை ஒதுக்கி வெச்சிட்டு காமன்மேனோட வெல்த்த கவனிச்சு பாத்தா அடுத்த பீரியட்லயும் அலுங்காம ஆட்சியில ஒக்காரலாம். இல்லன்னா...
"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை." குறள் 556
2) தஞ்சை பெரியகோயிலோட ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழா நல்லபடியா முடிஞ்சிடிச்சி. நம்ம தமிழ்ப் பாரம்பரியத்தோட பழைமைய நெனச்சா மனசுக்குள்ள பெருமையா இருக்குங்க. "எலேய்! நாங்க நேத்து பேஞ்ச மழையில இன்னிக்கு மொளச்ச காளான் இல்லடா! " அப்டீன்னு சத்தம் போட்டு கத்தத் தோணுது. அதே சமயம் ராஜராஜன் ஆட்சிலதான் தமிழகக் கோயில்கள்ல வைதீகமும் சமஸ்கிருதமும் செழிக்க ஆரமிச்சதுங்குறதையும் நெனைச்சுப் பார்க்குறேன். அவனோட ஆட்சில எப்படி குடவோலை முறை அப்டீங்குற விஷயத்தை அறிமுகப் படுத்துனானோ அதே மாதிரி பிராமணீயத்தை உச்சில ஏத்திவைக்குற வேலையையும் நல்லாவே செஞ்சிருக்கான். அதுனால வெறுமனே நம்ம கலாச்சாரப் பெருமையப் பேசுறதோட இல்லாம வரலாற்றுல இருந்து பாடம் கத்துகிட்டு அதை இன்னும் செழுமைப்படுத்தி மக்களோட வாழ்க்கைமுறைய, பண்பாட்டை அடுத்தடுத்த படிகள்ல மேல ஏத்துற அளவு உழைச்சாத்தானே நல்லாருக்கும்?!
அதை விட்டுட்டு வெறுமனே செம்மொழி மாநாடு, பெரியகோயில் விழா அப்டீன்னு பழைய பல்லவியையே பாடிட்டு மக்களைக் கவனிக்காம இருக்குறத பாத்தா எனக்கு எங்கூரு சொலவடைதான் ஞாவகம் வருது.
"பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டா கொட்டைப்பாக்கு கிலோ எட்டுரூவான்னானாம்!"
3) தி.மு.க வுல உட்கட்சிப்பூசல் முத்திகிட்டே போவுதுபோல! எப்பவும் செப்டம்பர்ல நடக்குற முப்பெரும் விழாவ இந்த வருஷம் நாகர்கோயில்ல நடத்தப்போக, சரியா மருவாதி கொடுக்கலன்னு சொல்லி தென்மண்டலப் பொறுப்பாளர் அழகிரி முறுக்கிக்கிட்டு நிக்கிறாராம். 'கலைச்சேவை' செஞ்சி ஓஞ்சிபோன குஷ்புவுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்குறவங்க அழகிரிய ஒதுக்கி இருக்கத் தேவையில்ல. சொன்னாலும் சொல்லாட்டினாலும் அவருதான் அண்ணா தி.மு.க கோட்டையா இருந்த தென்மாவட்டங்கள்ல தி.மு.க ஆழமா காலூனவும் ஜெயிக்கவும் காரணமா இருந்தவர். எனக்கென்னவோ இந்தத் தடவை அவரு கோவத்துல ஞாயம் இருக்குறாப்புலதாம் தோணுது!
அஞ்சு வருஷம் மெனக்கெட்டு எலவசங்களா அள்ளிக் கொடுத்தாவது வரப்போற எலக்க்ஷன்ல மறுபடியும் ஜெயிச்சிடலாம்னு நம்பிக்கையோட இருக்குறப்ப தேர்தல் வர்ற சமயத்துல இப்பிடி ஒரு பூதம்! "வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு சாப்பிட்டாலும், முக்கியமான நேரத்திலே முடக்கத்தான் லேகியத்தை முழுங்குன மாதிரி ஆயிருச்சே!"
4) எந்திரன் சொரம் உச்சத்துல அடிச்சிட்டு இருக்கு! நம்ம நண்பர் ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ அவரு செல விஷயங்கள சொல்லி வருத்தப்பட்டுட்டு இருந்தாரு. 1960 ல எந்த யாவார நோக்கமும் இல்லாம பொதுவுடைமைக் கருத்துக்கள வலியுறுத்தி "பாதை தெரியுது பார்"னு ஒரு படம் வந்திச்சாம். நம்ம ஜெயகாந்தன்கூட அந்தப் படத்துக்கு பாட்டு எழுதி இருந்தாராம். அந்தப் படம் ஓடக்கூடாதுன்னு அப்போ ஏகப்பட்ட சதிவேலை எல்லாம் நடந்துச்சாம். மக்களுக்கு கொஞ்சம்கூட விழிப்புணர்வு வந்துடப்படாதுங்குறதுல அவ்ளோ அக்கறை!
அதே மாதிரி கொஞ்ச வருஷம் மின்னாடி சரத்சூர்யான்னு ஒரு இயக்குனரு.... மக்களுக்கான சினிமாதான் எடுப்பேன்... அதையும் மக்கள் குடுக்குற அஞ்சு பத்தை வாங்கித்தான் எடுப்பேன்னு சொல்லி காவிரிப் பிரச்சினைய மையமா வெச்சி "பச்சைமனிதன்"னு ஒரு படத்த ஆரமிச்சாரு. ஆனா பல கஷ்டத்துல பாதியிலயே நின்னுபோச்சு. இந்த மாதிரி நல்ல கலை, கலைஞர்களை ஏறவிடாம தொரத்தி அடிக்கிற சமூகம் என்னத்த வளந்து, வாழ்ந்து கிழிக்கப் போவுது? கலையும், கலைஞர்களும் மக்களுக்காக அப்டீங்குற நெனப்பு இல்லாம, யாவரம் ஓடினிச்சா, கல்லாவைக் கட்டுனமான்னு மட்டும் மனசுல நெனச்சிக்கிறதும் என்னைப் பொறுத்தவரை வெபச்சாரத்துக்கு சமானம்தான்! என்ன சொல்றீங்க?
"Our society is run by insane people for insane objectives. I think we're being run by maniacs for maniacal ends and I think I'm liable to be put away as insane for expressing that. That's what's insane about it." John Lennon
The aim of every artist is to arrest motion, which is life, by artificial means and hold it fixed so that a hundred years later, when a stranger looks at it, it moves again since it is life. ~William Faulkner
5) நண்பர் பாலபாரதி அப்பப்போ ஆன்லைன்ல வந்தி உபயோகமான செல லிங்க கொடுத்து "இதெல்லாம் படிய்யா!" அப்டீன்னு அன்புக்கட்டளை போடுவாரு! அவரு சொல்ற மேட்டர்லாம் ரொம்ப நல்லாவும் வேற இருந்துடும். அவருதான் சீவக சிந்தாமணியோட கதைச் சுருக்கத்த பிடிஎஃப் ஃபைலா அனுப்பிச்சாரு. நாம எல்லாருக்கும் சிலப்பதிகாரம் கதெ, மணிமேகலை கதெ தெரியும். எத்தன பேத்துக்கு சீவகசிந்தாமணி கதெ தெரியும்? காமமும் காதலும் சொட்டச் சொட்ட திருத்தக்கத்தேவர் அப்டீங்குற சமண முனிவர் எழுதுன காப்பியம் அது. ஒரு துறவியால காதல்காப்பியம் எழுத முடியாதுங்குற சவாலை ஏத்துக்கிட்டு அவரு இதை எழுதுனாராம். எழுதி முடிச்சா... முனிவருக்கு எப்டிடா இந்த 'மேட்டர்'லாம் தெரியும்னு நீங்க சந்தேகப்படுற மாதிரியே அப்ப மக்களுக்கும் வந்திச்சாம்! அப்புறமா தன் துறவுமேல இருந்த சந்தேகத்தைப் போக்க என்னன்னமோ சோதனைய எல்லாம் சந்திச்சி நிரூபிச்சாராம்! இப்பவும்தான் இருக்காங்களே சாமியாருங்க! ஜாமீன்ல வெளில வந்துட்டு தாந்தான் சத்தியசீலன்னு வெக்கமில்லாமல்ல திரியிறானுவோ!
அது கெடக்கட்டும்.... நாஞ்சொல்ல வந்ததே வேற! ஒருநா அவரோட கூகுள் ரீடர்ல இருந்து ஒரு லிங்க்க கொடுத்து "இதப் படிய்யா!"ன்னாரு. "மரி என்கிற ஆட்டிக்குட்டி"ன்னு ஒரு அற்புதமான கதெ! பிரபஞ்சன் எழுதுனது! நாஞ்சொல்றதவிட படிச்சிப்பாத்துட்டு நீங்க சொல்லுங்களேன்.
இந்த வாரம் கொஞ்சம் நெறய (அது என்னாங்க கொஞ்சம் நெறய?? முரண்!!!) வதவதன்னு பேசிட்டேனோ?! பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க! அடுத்தவாரம் பாப்போம்!
வழக்கம்போல கடேசியா கவிதை!
கணையாழி கி.கஸ்தூரிரங்கன் எழுதுனது!
"உன்னருகே நானிருந்து
சொன்ன கதையெல்லாம்
சுவையற்றுப் போனதென்ன
என்னை எதிர்நோக்கி
வீதியின் கோடிவரை
நிலைப்படியே நீயாக
நின்றிருப்பாய்
இன்று? இல்லை
காரணமோ
ஆணொன்றும் பெண்ணொன்றும்
குழந்தைகள் காரியங்கள்
அடுப்பில் புளிக்குழம்பு."
*************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 பேரு கிடா வெட்டுறாங்க:
கெடாதானே வெட்டிருவோம்!
நல்ல அலசல்!
//அவனோட ஆட்சில எப்படி குடவோலை முறை அப்டீங்குற விஷயத்தை அறிமுகப் படுத்துனானோ //
குடவோலை முறை பெரும்பாலோர் நம்பிக் கொண்டிருப்பது போல பெருமைக் குரிய ஒரு முறையல்ல. கட்டுரையாளர் குத்திக் காட்டும் பார்ப்பன நடைமுறைகளின் ஒரு பகுதிதான் குடவோலை முறை.
அதில் வோட்டு போடுவதற்கு சில சாதித் தகுதிகள் தேவைப்படுகின்றன. தேர்ந்தெடுக்க போட்டியில் பங்கேற்பதற்கு மனுநிதியை கற்றுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு சாதிய, பார்ப்பனிய தகுதிகள் முன் வைக்கப்படுகின்றன.
எனவே, குடவோலை முறை என்பதும் வெறுக்கத்தக்க ஒரு நடைமுறைதான்.
எல்லா விஷயமும் நல்லா தான் கீது தல!
அலசப்பட்ட விடயங்கள், அதில் தெரியும் சமூக அக்கறை சந்தோசப்பட வைக்கிறது. Commonwealth Games பற்றி இங்குள்ள பத்திரிகைகளில் இந்தியாவை அதன் "குழந்தை தொழிலாளர்கள்" பற்றி நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள். நேரமிருக்கும் போது இணைப்பை தேடி இணைக்கிறேன்.
இந்தியாவின் மானம் சர்வதேசத்தில் நாறடிக்கப்படும் போது ஓர் ஈழத்தமிழாய் மிக, மிக, மிக சந்தோஷமடைகிறேன்.
பச்சை மனிதன் இயக்குனர் சரத் சூர்யா என் நெருங்கிய நண்பர். இன்றைக்கு வரைக்கும் அந்த படத்தை எடுத்துவிட்டுத்தான் அடுத்த படத்தில் வேலை செய்வேன் என ஒரு யோகியைபோல் வாழ்கிறார். திருவிழாக்களில் பொம்மை விற்றுத்தான் தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார். எடுத்தவரைக்கும் போக இன்னும் ஒரு ஐந்து லட்சம் இருந்தால் கூட அதனை முழுமை படுத்தி தந்தால் விஜய் டிவி வாங்கிக் கொள்வதாக சொல்லியிருக்கிறது. ஸ்பொன்சர் தேடிக்கொண்டிருக்கிறோம் ..
//குடவோலை முறை பெரும்பாலோர் நம்பிக் கொண்டிருப்பது போல பெருமைக் குரிய ஒரு முறையல்ல. கட்டுரையாளர் குத்திக் காட்டும் பார்ப்பன நடைமுறைகளின் ஒரு பகுதிதான் குடவோலை முறை. //
நன்றி நண்பரே! புதிதாய் ஒன்றைக் கற்றுத் தந்ததற்கு....! ராஜராஜன் பார்ப்பனீயத்துக்கு ஆதரவாய் இருந்ததால்தான் இந்தளவுக்கு ஹைலைட் செய்யப்பட்டானோ?!
ஆமாம்... ஏன் அநானியாகப் பின்னூட்டம்? நீங்கள் தெரிவித்தது நிச்சயம் நல்ல விஷயம்தானே! உங்கள் பெயர் அறிய ஆவல்!
@ ரதியக்கா
இணைப்பிற்காய்க் காத்திருக்கின்றேன்
//இந்தியாவின் மானம் சர்வதேசத்தில் நாறடிக்கப்படும் போது ஓர் ஈழத்தமிழாய் மிக, மிக, மிக சந்தோஷமடைகிறேன். //
இந்தியாவின் மானம் இன்னுமா நாறடிக்கப்படாமல் இருக்கின்றது??? புதிதாய் நாறடிக்கப்பட...?
@செந்திலண்ணன்
சரத்சூர்யா மீண்டுவரும் நாளை நோக்கி...!
உங்க அலசல் கொஞ்சம் வித்தியாசம்தான் விந்தையாரே.கவிதை பிடிச்சிருக்கு !
என் மனதை பாதித்த "அஜய்" என்ற சிறுவனின் படத்திற்கான இணைப்பு.
http://www.thestar.com/sports/commonwealthgames/article/866371--getting-new-delhi-ready-for-canada-s-commonwealth-games-team-four-year-old-ajay
இதில் ஒரேயொரு பத்திரிகை இணைப்பு மட்டுமே கொடுத்திருக்கிறேன். நிறைய செய்திகளின் தலைப்புக்கள் உள்ளன.
http://www.thestar.com/searchresults?AssetType=article&stype=genSearch&q=commonwealth%20games%20in%20india&r=all:1
இந்த ஃபார்மட் ரொம்ப நல்லா வருது உங்களுக்கு. கொஞ்சம் சிரமம்னாலும் விடாம தொடருங்க சார்:)
ராசா ரதி சொல்வது அது அவங்களது உரிமை. நீ அதுக்கு பதில் அளிக்கின்றேன் என்று உளறிக் கொட்டுவதை நிறுத்து( என்னடா வார்த்தை ஒரு மாதிரியா வருதேன்னு பாக்குறியா ராசா) எத்தனை வேதனைகள் சோகம் வெறும் இருந்தாலும் கட்டுரையாளர் உணர்த்த முயற்சிக்க வேண்டும். உள்ளே இருப்பதை அப்படியோ கொட்டிவிடக்கூடாது. இங்கே ஒருவர் குட்டியபிறகு தான் புரிந்தது. நான் இப்ப உன்னை கொட்டி விட்டேன்.
பாரு பாலாஜி அய்யா பாராட்டி விட்டாரு. ஈழம் முதல் இந்தியா வரை ஏன் சோமாலியா வரைக்கும் உனக்குள் இருக்கும் தனிப்பட்ட கருத்து உன் டைரியில் எழுதி வைத்துக்கொள். பொதுவாக படைக்கும் போது விமர்சனமாய் கொண்டு வந்து ராசா. ஒவ்வொன்றுக்கும் ஒரு காரண காரியத்தை காட்டு. தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
மேலே இருக்கும் பன்னிக்குட்டி ராமசாமி பதிவுகளை அவஸ்யம் படிக்க. இப்ப நீ இருக்கும் சூழ்நிலையில் உன் மனதை ரொம்பவே சந்தோஷம் அடைய வைக்கும். பிச்சு பின்னி பிடல்மார்காடு எல்லாமே எடுத்துருக்காரு ராசா.
இன்று முதல் காதல் அல்லது முடியாத காதல்..
வெறும் வெறுப்பு என்று மாற்றி வாசிக்க
வீதியின் கோடிவரை
நிலைப்படியே நீயாக
நின்றிருப்பாய்
பாதிவரிகள் இதை வைத்து தொடர்ந்தேன்
ஆனால் நல்லாயில்ல. ஜெயித்து விட்டாய்.
ஜோதிஜி சார், என்ன சார் இப்பிடி சொல்லிட்டீங்க! உங்களுக்கு மினிஸ்ட்ரில ஒரு எடம் பாத்து வெக்கிறேன்.
KRP செந்தில் அண்ணனும், கேபிளாரும் சொன்னாங்க... இன்னைக்குத் தான் உங்களோட பழைய பதிவுகளையும் சேர்த்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன்...
அப்புடியே சீவகசிந்தாமணியை அனுப்பிவைக்கிறீகளா? - thisaikaati@gmail.com
மிக்க நன்றி :-)
கருத்துரையிடுக