செவ்வாய், 28 செப்டம்பர், 2010
பேயெல்லாஞ் செத்துப்போச்சி! - கிராமத்துக் கதைகள் 1
கொழந்தைங்களோட ஒலகம் ரொம்ப வேடிக்கையானது, அழகானதுன்னு சொல்லுவாங்க! தாத்தாக்களோட ஒலகமும் அவ்ளோ அழகா இருக்கும்.அவங்க ஒலகத்துல பேரம்பேத்தியளுக்கு மட்டும்தான் மொத மரியாத. தாத்தாக்கள் கதெ சொல்ல பேரம்பேத்திங்க கண்ணு விரிய தலையாட்ட... அடடா!
தொண்ணூறுகளுக்கு மிந்தி இருக்குற காலகட்டம் வரைக்கும் கெராமத்துல வளந்த எளந்தாரிங்க வாழ்க்கையில ரொம்ப புண்ணியம் பண்ணவங்க! ஏஞ்சொல்றேன்னா அதுக்கப்புறம்தான் - இன்னுஞ் சொல்லப்போனா சாட்டலைட் டி.வியும், சாஷேவுல ஷாம்பூவும் வந்த காலகட்டம் - கெராமமெல்லாம் பயத்தம் மாவையும், கல்ல மாவையும்* மறந்துட்டு பாண்ட்ஸ் பவுடரு, குட்டிகூரா பவுடருன்னு டவுனு மாரியே மினுக்க ஆரமிச்சிச்சி. ஒவ்வொருத்தனா... பணம் இருக்குறவன் சிங்கப்பூரு, மலேசியான்னும், இல்லாதவன் சென்னை, திருப்பூருன்னும் நவர ஆரமிச்சான் பொழப்புக்கு!
அப்பிடியே மெல்ல மெல்ல கூட்டுக் குடும்பம்லாம் செதைய ஆரமிச்சிது. எங்க தஞ்சாவூர் மாவட்டத்துலயும், தல குளிச்சிட்டு மொழங்கா முட்டு தொங்குற கூந்தல விரிச்சிப்போட்டு ஒயிலா நடக்குற கன்னிப்பொண்ணு மாரி மனச அள்ளிட்டுப்போற காவிரித் தண்ணி அரசியல் சித்து வெளையாட்டுக்கள்ல சிக்கி, பச்சப்புள்ள மூக்குல ஒழுகுற சளி மாரி ஆயிப்போக, வெவசாயி வாழ்க்கையில் பூஞ்சக் காளான் புடிக்க ஆரமிச்சிச்சி.
கொஞ்சங்கொஞ்சமா தாத்தாக்கள்லாம் திண்ணையிலயும், பொட்டுபொடுசுங்க எல்லாம் டிவிக்குள்ளயும் ஒடுங்கிப்போவ கதைங்க மட்டும் காத்துல அனாதையா திரிய ஆரமிச்சுதுங்க!
எங்க தாத்தா கிட்டத்தட்ட ஒரு கதெ சொரங்கம்ங்க! துச்சாதனன் துகிலுரியறப்ப பாஞ்சாலியோட சீல கலர்கலரா வளந்துகிட்டே போவுமாம்ல! அதே மாரி கதெய ஆரமிச்சா போயிகிட்டே இருக்கும்!
தாத்தாகிட்ட "ஒரு கதெ சொல்லுங்க தாத்தா"ன்னு கெஞ்சுறப்ப அவரு குடுக்குற பில்டப்பு இருக்கே! மொதல்ல வெத்தல பொட்டிய தொறந்து வெட்டி வெச்சிருக்குற கொட்டப்பாக்க கொஞ்சமா அள்ளிப்போட்டு அடக்கிட்டு, நல்லதா நாலு வெத்தலை எடுத்து வெத்தலைக்கி நோகாம காம்பு கிள்ளி நறுவிசா நரம்புக்கு நரம்பு சுண்ணாம்பத் தடவி வாய்க்குள்ள வெச்சி கொதப்ப ஆரமிக்கிறப்போ, போயிலைய எடுத்து தூசுதும்ப ஒதறிப்போட்டு உள்ளாற அடக்குனா.... மனுஷன் அப்பிடியே கண்ண மூடி கொஞ்சநேரம் 'ஆழ்நிலைத் தியான'த்துக்கு போயிட்டு அப்புறமா பொளிச்சுன்னு எச்சி துப்பிட்டு வந்து ஒக்காந்து வாயத் தொறப்பாரு!
"கதெ கேட்ட நாய செருப்பால அடி!"ன்னு.
இப்பிடித்தான் ஒருநா ஒரு பேய்க்கதெ சொன்னாரு!
"நாஞ்சொல்றது நடந்து ஒரு நாப்பது வருசம் இருக்கும்டா! எங்க வகையறாவுல எங்கத்தை பொண்ணுதான் ஒரே பொண்ணு. ரெண்டு தலமொறையா பொட்டப்புள்ள இல்லாம கருவேப்பிலக் கொத்து மாரி ஒத்தப் பொண்ணா பொறந்தவெ! செக்கச் செவப்பழகி.. சீமையில பேரழகி! ஒங்களோட பெரிய பாட்டியா அவெ. காவேரியாத்துல சுழியில மாட்டி செத்தவெங் கொள்ளப் பேருன்னா... அவளோட கண்ணச் சுழிச்சி பாக்குற பார்வெல சிக்கிச் செத்தவனுவோ மீதிப்பேரு. அப்பிடியாப்பட்ட அழகிக்கு ஏம்பெரியப்பன் மவன்.. அதாண்டா.. எங்க மூத்த அண்ணெ நல்லுச்சாமி மேல ஒரு கண்ணு. இவனும் தேன்கொடத்துல விழுந்த ஈ மாரி அவள நெனச்சே கெறங்கிக் கெடந்தான். ஒருவழியா எல்லாரும் கூடிப்பேசி ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் கட்டி வெச்சாங்க.
நாலு மாசம் முடிஞ்சிது. ஆத்துல தண்ணி வார நேரம். அவெ.. அவெனும் ஏரும் கலப்பயுமா திரிஞ்சானுவோ. எங்க நெலம் இருவது வேலியிலயும் ஒழவு ஆரமிச்சிது. எங்கண்ணெ நல்ல ஒழப்பாளிடா. விடிஞ்சாப்புல பூட்டுன ஏரு அந்தி சாஞ்சும் ஓடுது... ஆனாலும் முடியல. இருவது வேலின்னா சும்மாவா! மாடுகட்டி போரடிச்சா மாளாது இன்னு சொல்லி ஆனைகட்டி போரடிச்ச பரம்பரடா நாங்க. நாலாம்நாளு எங்க பெரியப்பன் அண்ணன கூப்புட்டு "எலே பெரியவனே! இன்னிக்கு ரா ஒழவு அடிச்சாதாண்டா சரிப்படும்போல! நம்ம வெள்ளையன தொணைக்கு வெச்சிக்கிட்டு ரெண்டு ஏரா பூட்டுடா"ன்னு சொல்லிட்டு போயிட்டாரு. இவனும் வேலக்கார வெள்ளையன்கிட்ட விடிவெள்ளிக்கி மின்னாடி வந்துருடா! ஏரப்பூட்டணும்னு சொல்லிட்டு படுத்துட்டான்.
ராப்பொழுதுல தட்டி எழுப்புனான் வெள்ளையன். மாட்ட அவுத்து, ஏரத் தூக்கிட்டு வயலுக்கு போயி ஏரப்பூட்டுனாங்க ரெண்டு பேரும்! ரெண்டு வெளா உழுதுட்டு வெள்ளையன திரும்பிப் பாக்குறாரு பெரியவரு! அவன் நாலு வெளா முடிச்சி அஞ்சாவது வெளாவுல ஓட்டிகிட்டு இருக்கான் ஏர! மாடு ரெண்டும் வெறிக்க வெறிக்க ஓடுது... அவனும் அசரல! "எலேய்! என்னடா மாட்ட இந்தப் புடி புடிக்கிற? மெல்ல ஓட்டுடா. கொஞ்சம் அவுத்து வுடு! ரொம்ப எரைக்கிது அதுக்கு"ன்னு சொல்லிட்டு வரப்போரமா ஒக்காந்து வெத்தலைய எடுத்து சுண்ணாம்ப தடவ ஆரமிச்சாரு.
வெத்தலாக்கு செரியா செட்டு சேந்த ஆனந்தத்துல இருக்குறப்ப பக்கத்துல வந்த வெள்ளையன் " சாமீ! எனக்கும் ஒரு தரம் குடுங்களேன்"னான். இவருக்கு லேசா பொறி தட்டிச்சி. 'என்னடா இது! என்னிக்கும் இந்த மாரி மருவாதி இல்லாம எதுத்தாப்புல நின்னு கேக்க மாட்டானே! என்ன இன்னிக்கு திடீர்னு துணிச்ச இவனுக்கு?"ன்னு யோசிச்சிட்டே கொஞ்சம் உசாரானவரு வெத்தல சுண்ணாம்பை எடுத்து பாக்கட்டில** வெச்சி நீட்டுனாரு. சட்டுனு எதுத்தாப்புல நின்ன வெள்ளையன் காத்துல மறஞ்சி காணாம போனான். ஏதோ ஒரு பாழாப் போன பேயி... ஏரோட்டுறப்பயே செத்துப் போயிருக்கும்போல! ஏரோட்டுற ஆச வுடாம அலஞ்சி அன்னிக்கி நெறவேத்திட்டு. பாக்கட்டி இரும்புல்ல? அதான் பேயி பயந்து ஓடிப்போயிடிச்சி"
அப்டீன்னு சொல்லி கதெய முடிச்சாரு தாத்தா!
( பொறவு நானா யூகிச்சி தெரிஞ்சிகிட்ட விஷயம் என்னான்னா பெரிய தாத்தாவுக்கு புதுப் பொண்டாட்டிய வுட்டுட்டு ராவுல ஏரு ஓட்ட புடிக்கல. பொண்டாட்டி வாசம் எங்க போனாலும் இழுக்குது! என்னடா பண்ணலாம்னு யோசிச்சி வெள்ளையன்கிட்ட கூடிக் குசுகுசுத்து ரெண்டு பேரும் இந்த உத்திய செஞ்சிருக்காங்க! வெள்ளையனும் புதுசா கல்யாணம் ஆனவம்தாம்!)
"செரி தாத்தா! அந்த காலத்துல அவ்ளோ பேயி ஊருபூரா சுத்திட்டு இருந்துருக்கே? இப்பல்லாம் ஏந்தாத்தா பேயி வர்றது இல்ல?"ன்னு கேட்டேன்.
"அட ஏம் மடப்பய மொவனே! எப்பிடியெல்லாம் கேக்குற கேள்வி!"ன்னு எங்கன்னத்த கிள்ளிக்கிட்டே தாத்தா சொன்னாரு...
" அது ஒண்ணுமில்லடா பயலே! ஊருக்குள்ள விஞ்ஞானம்லாம் முன்னேறி கரண்டெல்லாம் இழுத்தானுவோல்ல! அந்த கரண்டு கம்பில அடிபட்டு எல்லா பேயும் செத்துப் போச்சுடா!"
* கல்ல மாவு - கடலை மாவு
** பாக்கட்டி - பாக்குவெட்டி
********************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
16 பேரு கிடா வெட்டுறாங்க:
மண் வாசனையோடு அழகா கதை சொல்லி இருக்கீங்க அண்ணாச்சி!
வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்
ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் படிக்கற மாதிரியே இருக்கு... அடுத்த கதைக்கு காத்திருக்கேன்...
அப்படியே எங்க சின்ன தாத்தா கிட்ட கதே கேட்ட மாதிரி இருக்கு ... அப்படியே உங்க பேவரிட் கிராமத்து பாலியல் கதைகளை 18+ போட்டு எழுதுனா எல்லோரும் விழுந்தடிச்சிட்டு வந்து படிப்பாகன்னு நெனைக்கிறேன் ...
Idhu ennadhu krimathai ninaivukku kondu varugirathu..
ஆனந்தமான கதை. அவைகள் ஆவியாய் அலைகிறது எனும் சொல் அழகு அழகு.
பகிர்வுக்கு நன்றி.
நல்லா கதவிட்டாரு தாத்தா போங்க:))
தாத்தா சரியாத்தானே சொல்லியிருக்கார்.கெட்டிக்காரத் தாத்தா !
இப்ப சரியா இருக்கு ராசா இது போல பல விசயங்களை கோர்த்து எழுதிக் கொண்டே போனால் ஒரு கரிசல்காட்டு ராஜா என்ற பட்டம் கொடுக்கத் தயார். நீங்க வாங்கத் தயாரா?
//அது ஒண்ணுமில்லடா பயலே! ஊருக்குள்ள விஞ்ஞானம்லாம் முன்னேறி கரண்டெல்லாம் இழுத்தானுவோல்ல! அந்த கரண்டு கம்பில அடிபட்டு எல்லா பேயும் செத்துப் போச்சுடா!//
கோபல்லபுரத்து மக்கள் கதைகளில் இதைத்தான் கி.ராஜநாராயணனும் சொன்னார் வேறு வார்த்தைகளில். கரண்ட் ஊருக்கு வந்ததும் தெருவெல்லாம் வெளிச்சம் வந்ததில் பல பேய்கள் காணாமல் போயின என்றார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
யப்பாடா! இப்பதான் நிம்மதியா இருக்கு... டோண்டு சாருக்கு நன்றி.... கதையில ஏதோ உறுத்திட்டே இருந்திச்சி எனக்கு. என்னன்னு புரியாம முழிச்சிட்டே இருந்தேன்! ஆனா ஒண்ணு டோண்டு சார்! எழுதும்போது நெசமா கி.ரா நெனப்பு வரல....அவரோட பாதிப்புலதான் எழுதினேன்... குறிப்பிட்ட இந்தக்கதை படிச்சதில்ல...Anyhow, வெளிப்படையான கமெண்டுக்கு நெசமாவே நன்றி.....
கதையில எனக்கு இருந்த இன்னும் ஒரு உறுத்தலை வாய்ஸ் சாட்ல சுட்டிக்காட்டின ஜோதிஜிக்கும் நன்றி! வட்டார வழக்கைக் கையாள்வதில் இருந்த குழப்பத்தையும், திணிக்கப்பட்டது போன்ற உணர்வையும் நானும் உணர்கிறேன் இப்போது....
நன்றி தோழி ஹேமா!
நன்றி பாலா சார்!
ரதியக்கா.... ஒத்த வரில பொசுக்குன்னு போயிட்டீங்களே?! செரி செரி!
நன்றி காமராஜ் சார்....நுணுக்கமா ரசிச்சிருக்கீங்க போல!
அட....! callezee!! யாருங்க இது? ஏற்கனவே எனக்குத் தெரிந்த நிறுவனத்தில் இருந்து எனக்கு ஒரு வாசகரா?! சந்தோஷமா இருக்கு! கொஞ்சம் அடையாளத்தையும் வெளிக்காட்டுங்களேன்!
செந்திலண்ணே! உங்க நக்கல் புரியுது.... ஆரமிச்சிடலாம் பாலியல் கதைகள.... என்ன ஒரு சிக்கல்னா கலெக்ஷனுக்குன்னு ரொம்ப அலையணும்.... எனக்கு அந்த அளவு டெடிகேஷன் இருக்குன்னு நீங்க நம்புறீங்க?!
அருண்பிரசாத்.... என்னங்க இது பொசுக்குனு இப்டி ஒரு குண்ட போடுறீங்க? கள்ளிக்காட்டு இதிகாசம்லாம் ரொம்ப பெரிய ஒசரம்ங்க... நம்மளுது சின்ன கூழாங்கல்லு!
நன்பர் 'என்னது நானு யாரா?' .... நன்றிங்க!
superb writing
எங்க தாத்தா கதை சொல்ற மாதிரியே இருந்துச்சு.
Nice Story.
வட்டார மொழி வழக்கில் கதை சொல்வது ரொம்ப சிரமம். அதை அட்டகாசமாக கையாண்டிருக்கீறீர்கள்... கதையை ரொம்பவே ரசித்தேன்...:))
Nice
கருத்துரையிடுக