வியாழன், 31 மார்ச், 2011

விலக்கப்பட்ட கல்லே வீட்டுக்கு மூலைக்கல்லாயிற்று ( வைகோ பற்றிய பார்வை)


தமிழக அரசியல்களம் முன்னெப்போதையும் விட பல விசித்திரக்காட்சிகளைக் கண்டு வியந்து நிற்கிறது.  தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக்கூட்டணியல்ல, வெறும் கொள்ளைக்கூட்டணியே என்பதை பிரதான அரசியல்கட்சிகள் அனைத்துமே மெய்ப்பித்து அம்மணமாகி நிற்கின்றன. ஒருபுறம் "காங்கிரஸ் செய்வது நியாயமா?" என்று வீராவேசத்துடன் முழங்கி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக ஓர் ஓரங்க நாடகத்தை நடத்தி திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, தன்மானம் என்கிற எல்லாவற்றையும் உதறிப் போட்டுவிட்டு பதவி என்னும் கோவணத்துக்காக அலைகிறார் 'கலைஞர்' கருணாநிதி.

தன்னை நம்பி உடனிருக்கும் கூட்டணிக்கட்சிகளைக்கூட துச்சமாகத் தூக்கியெறிந்து என்றுமே தானொரு தான்தோன்றித்தனமான, அகங்காரம் பிடித்த தற்குறித்தனமான தலைவிதான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே இரவில் டிஸ்மிஸ் செய்தும், சுப்பிரமணியசாமிக்கு மகளிர் அணி 'ஷோ' காட்டியதும், இன்னபிற அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்களையும், சர்வாதிகாரத்தையும் கைக்கொண்டு இன்னும் மிச்சமிருக்கும் 'மைசூர் திவான் பங்களாவில் அரண்மனை வைத்தியம் பார்த்தவரின் பேத்தி' என்கிற 'கெத்'தில் நிற்கிறார் ஜெயலலிதா.

இந்த இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் மாற்றாக வேறு யாரும் இல்லையே என்று புழுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு தற்காலிக வடிகாலாய் வந்து சேர்ந்தார் விஜயகாந்த். நீண்ட நெடுங்காலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு மல்லுக்கட்டியதில் அலுத்துப்போய் அவ்வப்போது சுகன்யாக்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டதும் சலித்துப்போய் இறுதியாக அவர் கரைசேர்ந்த இடம் அரசியல். மாமண்டூரில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைத் துவங்கி 'தூய்மை'யான பொதுவாழ்வுக்கு அடித்தளம் போட்டுக்கொண்டு நுழைந்தார். பக்கத்தில் பிரேமலதாவையும், அவர்தம் இளவலார் சுதீஷையும் வைத்துக்கொண்டே கூச்சநாச்சமின்றி கருணாநிதியின் குடும்ப அரசியலை எதிர்த்து கொஞ்சகாலம் லாவணி பாடவும் செய்தார். எத்தனைகாலம்தான் 'சுட்டி சுட்டி உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி' என்று பாடிக் கொண்டிருப்பது?! தனி ஆவ்ர்த்தனமெல்லாம் இனி கவைக்குதவாது என்றுசொல்லி மூட்டையைக் கட்டிக்கொண்டு போயஸ் கார்டனுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டார்.

இவர்களில் இருந்து எந்த வகையில் மாறுபடுகிறார் அல்லது எந்தெந்த வகைகளில் ஒன்றுபடுகிறார் வைகோ என்கிற அரசியல்வாதி?

மறுமலர்ச்சி திமுக என்ற கட்சியைத் துவங்கிய போதிலிருந்தே அந்தக்கட்சிக்கான சவக்குழியை கூடிய சீக்கிரம் வெட்டிவிட வேண்டும் என்கிற குறிக்கோளில் 'ஓடமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்கு' போல அல்லும் பகலுமாக அயராது பணி செய்துவரும் கருணாநிதி, 'பகையாளிக் குடியை உறவாடிக் கெடு' என்கிற வித்தைகளையெல்லாம்கூட செய்து பார்த்தார். 2001 தேர்தலிலும், 2006 தேர்தலிலும் அவர் ஆடிய சதுரங்கத்தில் வெட்டுப்படும் குதிரையானார் வைகோ.

தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்தக்கட்சியும் சமரசங்களைத் தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலையில் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறு வழியின்றி போயஸ் தோட்டத்தில் சரண்புக வேண்டிய இழிமைக்கும் தள்ளப்பட்டார். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று தேவை என்று இன்றைய நிலையில் ஏற்பட்டிருக்கிற ஒரு வெற்றிடம் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருக்கவில்லை.

தனித்து நின்றே தனது கட்சியைக் காபந்து செய்ய வேண்டும் என்பது பெரியளவில் மக்களிடம் செல்வாக்கு இல்லாத நிலையில் சாத்தியமில்லை. மேலும் கட்சியில் அவருடன் இருந்த சாறுண்ணிகளும், ஒட்டுண்ணிகளுமான எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்களின் 'காயசண்டிகை'ப் பசிக்கும் தீனி போட வேண்டிய கட்டாயம்.

எனவே கூட்டணி அரசியல் சகதியில் அவரும் தாராளமாகப் புழங்கியவர்தான்... மறுக்கவில்லை. அவரது வார்த்தைகளிலேயே சொல்லப்போனால் காட்டாற்று வெள்ளத்திலே சந்தன மரங்களும் அடித்துச் செல்லத்தான் படும் என்கிற தமிழக அரசியல் சூழலில் கரையொதுங்க வேண்டிய நிர்ப்பந்தங்களிலும் அவருக்கென்று சில தனித்தன்மைகள் இருந்தன. மற்றெந்த அரசியல் தலைவர்களிடமும் இல்லாத அந்தத் தன்மைகள்தான் இன்று அவரைத் தனித்துக் காட்டி இருக்கின்றன.

1) முதலானதும் தலையாயதுமானது வாரிசு அரசியலை இதுவரை வைகோ முன்னெடுக்கவில்லை. அவரது பிள்ளைகளான துரைவையாபுரியையும், கண்ணகியையும், தடா சட்டத்தில் சிறைவாசமிருந்த தம்பி ரவிச்சந்திரனையும் இதுவரை கட்சிக்கு பட்டாதாரர்களாக மாற்றவில்லை.

2) இதுவரை மத்திய அரசில் பங்கேற்று மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்குபோதெல்லாம் அவற்றைப் புறம்தள்ளி தனது சகாக்களுக்கே பதவியைத் தாரைவார்த்தவர் வைகோ.

3) கூட்டணிக்கேற்றவாறு கொள்கைகளை மாற்றிப்பேசும் வழக்கமும் அவரிடமில்லை. இதுவரை புலிகள் ஆதரவுக் கொள்கையையோ, சேது சமுத்திரத் திட்டத்தின் பாலான தமது உறுதிகளையோ மாற்றிக்கொள்ளவில்லை.

4) ஸ்டெர்லைட் ஆலைப்பிரச்சினையில் எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் இன்று அவரது அரசியல் எதிகாலத்துக்கு சவாலாக வந்தபோதிலும் கூட தனது உறுதியை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்று ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் அந்த நிர்வாகத்தால் செய்யப்பட்ட நிலையில் இன்றளவும் சட்டரீதியாக அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர் வைகோ ஒருவர் மட்டுமே.

5) முல்லைப்பெரியாறு அணைக்கட்டு தொடர்பான போராட்டங்களிலும் முன்னிற்பவர் வைகோ மட்டுமே.

6) நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார்மயமாக்க முயற்சிகள் நடந்தபோது அதனைத் தடுத்து நிறுத்திய காரணகர்த்தாக்களில் வைகோ முக்கியமானவர்.

இப்போது அரசியல்களத்தில் அவமானப்பட்டு நிற்கும் நிலையில், இருபெரும் திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கி இருக்கின்றது.

வைகோவின் அரசியல் இப்போது துவங்குகிறது எனக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்தலுக்குப் பிறகும் அவரிடம் மிச்சமிருக்கும் தொண்டர்கள் இனி எக்காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பலாம்.

இந்த தொண்டர் பலத்தை வைத்து அவர் தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையைத் துவங்கிட வேண்டும் என்பதே தமிழுணர்வாளர்களின் எதிர்பார்ப்பு. சரியான திசையில் பயணிப்பாரா வைகோ?

"வீடுகட்டுவதற்கு வேண்டாம் என்று விலக்கிவைக்கப்பட்ட கல் மூலைக்கு தலைக்கல்லாயிற்று" என்கிறது விவிலியம்..(மத்தேயு சுவிசேஷம் 21)

பின்குறிப்பு : இந்தக் கட்டுரை ஆக்கத்திற்கு பெருமளவு துணைபுரிந்த என் இனிய நண்பரும், என் வாழ்வில் பகிர்தலுக்கும், புரிதலுக்குமாக இருக்கும் மிகச்சில சுமைதாங்கிகளில் ஒருவருமான கா.அன்புவேலுக்கு என் நன்றிகள்

20 பேரு கிடா வெட்டுறாங்க:

Sivakumar சொன்னது…

தாயகம்..பேட்டி?

ஜோதிஜி சொன்னது…

கலைஞருக்கு இருக்கும் புகழை விட வைகோ உலக தமிழர்களிடத்திலும் உண்மையான தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. இந்த மரியாதைக்கும் ஓட்டு அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை. அவருடைய விமான பயணத்தில் சந்திக்கும் பலரும் இளம் தொழில் அதிபர்கள். என்னவொன்று வைகோவுக்கு ஒவ்வொரு நிலையிலும் உணர்ச்சி மேலோங்கி விடுகின்றது. சூழ்நிலை அவரை பந்தாட வைத்து விடுகின்றது.

காத்தடிக்கும் போது மாவு விற்பது
மழை பெய்யும் போது உப்பு விற்பது

தமிழக அரசியலில் வைகோவுக்குத்தான் பொருந்தும்.

படம் மற்றும் நோக்கம் அற்புதம்.

pichaikaaran சொன்னது…

இருபெரும் திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கி இருக்கின்றது "

உண்மை..

சிறப்பான பார்வை

Unknown சொன்னது…

ஹி...ஹி...

தமிழ் அமுதன் சொன்னது…

//வைகோவின் அரசியல் இப்போது துவங்குகிறது எனக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்தலுக்குப் பிறகும் அவரிடம் மிச்சமிருக்கும் தொண்டர்கள் இனி எக்காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பலாம்.//

நிச்சயமாக...!

Bibiliobibuli சொன்னது…

தமிழ்நாட்டு அரரசியலில் வித்தியாசமானவர் தான் வை. கோ.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்ல அலசல் சார்

Unknown சொன்னது…

very good article thanks so much for blog this post

அஞ்சா சிங்கம் சொன்னது…

வை கோவை வாழ்த்துவோம் ...............

http://thavaru.blogspot.com/ சொன்னது…

போராடக் கற்றுக்கொள்; கற்றுக்கொள்ளப் போராடு!

வை.கோ வுக்கு கரெக்டா இருக்குமா விந்தைமனிதன்.

ராஜ நடராஜன் சொன்னது…

பெவிலியனில் உட்கார்ந்திருப்பவனை விட களத்தில் ஆடுபவனையே அனைத்துக் கண்களும் நோக்கும்.

கூடவே வெற்றியால் மகிழ்வ்தும்,தோல்வியால் சொதப்பிட்டான்யா விமர்சனங்களும்!

அடுத்து களத்தில் இறங்க வை.கோ வுக்கு வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

பதிவில் பற்பல விமர்சனங்கள் இருப்பினும் மையக் கருத்தில் உடன்பாடு உள்ளபடியால் ஒரு + ஓட்டு போட்டுக்கிறேன்

சர்வோத்தமன் சடகோபன் சொன்னது…

மிக நல்ல கட்டுரை.இன்னும் விரிவாகவே எழுதலாம்.

boopathy perumal சொன்னது…

நன்றி ''பாருங்க!. படிங்க!. பரப்புங்க!'' பதிவிருக்கு
http://jmdtamil.blogspot.com/2011/03/blog-post_31.html

இறுதி போட்டிக்கு வருகிறான்! இனவெறி பிடித்தவன்!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி! மும்பையில் ஏப்ரல் 2 -ம் தேதி நடக்க இருக்கிறது!
இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் களம் காணுகின்றன.... பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது, போட்டியை காண பெரிய வி. வி.ஐ.பி. கள் வருகின்றனர்,

அது மட்டும் இல்லை, இன வெறி பிடித்த இலங்கை அதிபர் ராசபக்சே- வும் வருகிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதைவைத்து தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
இனத்தை அழித்தவனக்கு!
இன்முக வரவேற்ப்பா!

பூபதி துபை

Thekkikattan|தெகா சொன்னது…

தமிழகத்தின் வித்தியாசமான அரசியல் தலைவன் வை.கோ. மீண்’டும் வர,வாழ்த்துக்கள்! நம்பிக்கையான கட்டுரைக்கும் நன்றி!

Philosophy Prabhakaran சொன்னது…

"கருவாப்பையா" விஜயகாந்திற்கு இனி ம.திமுக பாமக நிலைமைதான்... அவருடைய முதலமைச்சர் கனவு க்ளோஸ்...

ஆனால் மதிமுக பற்றி நீங்கள் கூறுவது சாத்தியப்படாது என்றே எண்ணுகிறேன்...

Sathish A சொன்னது…

//வைகோவின் அரசியல் இப்போது துவங்குகிறது எனக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்தலுக்குப் பிறகும் அவரிடம் மிச்சமிருக்கும் தொண்டர்கள் இனி எக்காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பலாம்.//

இது நடந்தால், தமிழனுக்கும் நல்ல எதிர்காலம் பிறக்கும். வைகோ ஒரு தன்னலமில்லாத தனித்தன்மையான அரசியல்வாதி, ஆனால் அவர் செய்ததிலே பெரிய தவறு, இந்த வீணாப்போன அகன்கரம்பிடித்த பெண்ணோடு ரொம்ப நாள் கூட்டணியாக இருந்ததுதான்...

செங்கோவி சொன்னது…

//இந்தத் தேர்தலுக்குப் பிறகும் அவரிடம் மிச்சமிருக்கும் தொண்டர்கள் இனி எக்காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பலாம்.// உண்மையான வரிகள். நல்ல பதிவு நண்பரே!

Alagesan சொன்னது…

வைகோவின் சேவை தொடரட்டும்


Alagesan.K
chennai

மர்மயோகி சொன்னது…

வைக்கோ என்பவன் இந்தியாவில் தேச துரோக செயல்கள் செய்து வரும் தடை செய்யப்பட இயக்கமான விடுதலைப்புலிகளின் கைக்கூலி..
ஸ்டெர்லைட் விஷயம் பொதுநலமல்ல சுயநலம் எனபது பலருக்கு தெரியாத விஷயம்..
இந்தியாவில், தமிழகத்தில் பதவி சுகம் அனுபவித்து அரசியல் நடத்தும் வைக்கோ(ல்) இந்தியாவுக்கு எதிரான விடுதலைப்புலிகளைப் பற்றி பேசியே ஒட்டுபிச்சை எடுக்க முயல்கிறான்.
தமிழகத்தில் எத்தனையோ பொதுப் பிரச்சினைகள் இருக்க, இலங்கைப் பிரச்சினை பற்றி மட்டுமே பேசும் வைக்கோ(ல்) வேண்டுமென்றால் யாழ்பாணத்தில் போய் ஒட்டுபிச்சை எடுக்கட்டும்
ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று நாம் விரும்புவதற்கு காரணம் இந்த தேச துரோகியின் கட்சியை இல்லாமல் பண்ணியதர்காகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளான வைக்கோ (ல்), நெடுமாறன், சீமான் போன்ற தேச துரோகிகளை சிறையில் தள்ளுவார் என்பதும்தான்..

Related Posts with Thumbnails