திங்கள், 21 மார்ச், 2011

கச்சத்தீவும் நமதே! கீழைக்கடலும் நமதே!! #DefeatCongress


காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து எதிர்வரும் 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரஸை மண்ணைக்கவ்வச் செய்யவேண்டும் என்று சிலநாட்களுக்கு முன் நானும் அண்ணன் கேஆர்பி.செந்திலும் பதிவுகளை வெளியிட்டிருந்தோம். எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்ப்பதிவுலத்தினரின் ஒத்துழைப்பு கிட்டவில்லை என்றபோதிலும், எதிர்பாராத திசைகளிலிருந்து இணைய நண்பர்கள் மூலம் ஆதரவு குவிகின்றது.

நானும், அண்ணன் கேஆர்பியும் இது தொடர்பான மேலதிகச் செயற்பாடுகளையும், நடைமுறைத் தந்திரங்களையும் பற்றி தொடர்ந்து நண்பரும் பதிவருமான கும்மியுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு முன்னெடுப்பு செய்து வருகிறோம். நண்பர் கும்மி ஏற்கனவே தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான இணையநண்பர்களின் முன்னெடுப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். நேற்று மாலை தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை முடித்துவிட்டு, மேற்கொண்டு, வரும் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிப்பது தொடர்பான கலந்துரையாடலை நடத்தலாம் என்று கூறியிருந்தார். அது தொடர்பானவற்றைப் பேசிமுடித்தபின் தியாகராயநகரில் , 'மே பதினேழு' இயக்கமும், தமிழக மக்கள் உரிமைக்கழகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த "தமிழக மீனவர் படுகொலையும், மக்களை திசை திருப்பும் சதியும்" என்கிற கலந்துரையாடலில் கலந்துகொண்டோம்.

மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ் வெப்துனியா இணைய இதழ் ஆசிரியர் கா.அய்யநாதன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பா.புகழேந்தி(வழக்கறிஞர்), கச்சத்தீவு மீட்பு இயக்கம் சீதையின் மைந்தன், பாரம்பரிய மீனவர் சங்கம் மகேஷ் ஆகியோரின் உரைகளின் சாராம்சத்தைத் தொகுத்துத் தருவதன் முலம் இந்திய நடுவண் அரசு தமிழனிடம் காட்டிவரும் மாற்றாந்தாய் மனப்பான்மையும், ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் என்கிற காவாலிக்கட்சி தமிழக மண்ணுக்கும், மானவாழ்விற்கும், மனித உரிமைக்கும் செய்துவரும் பச்சைத் துரோகங்களையும் ஓரளவு எடுத்துக்காட்ட முடியும் என்று நம்புகிறேன்.

மேற்சொன்ன நண்பர்களின் உரைகளிலிருந்து :

எந்த ஒரு மக்கள்பிரச்சினையும் அதன் அளவில் தீவிரமடையத் துவங்கும்போது ஆளும் மத்திய அரசு தன் கைக்கூலிகளான உளவுத்துறையினர், எலும்புத்துண்டுகளுக்கு எச்சில் ஒழுக நிற்கின்ற, ஊடகதர்மம் பிறழ்ந்த பத்திரிகையாளர்கள், போலி முற்போக்கு அறிவுஜீவிகள் ஆகியோர் மூலம் மக்கள்பிரச்சினைகளில் புதிய கதையாடல்களை பரப்புரை செய்து போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்கின்றது. அதே போலத்தான் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து கொல்லப்படும் கொடுமைகள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாறிப்போவதைப் பார்த்த நடுவணரசு, மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர், தடைசெய்யப்பட்ட இருமடி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துகின்றனர், அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். "தமிழக மீனவர்கள் பேராசையால் எல்லை தாண்டுகின்றனர்" என்று கொஞ்சம்கூட மனச்சாட்சியும், கூச்ச உணர்வுமின்றி தமிழக முதல்வர் கருணாநிதி சில மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது ஞாபகம் இருக்கும் ( லட்சக்கணக்கான கோடிகளுக்கெல்லாம் தனது குடும்பம் ஆசைப்படுவது 'ஞாயமான' ஆசையாகவும், அன்றாட பிழைப்புக்காக மீனவன் எல்லை தாண்டிச் செல்வது 'பேராசை'யாகவும் அவருக்குத் தோன்றுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. கொட்டுவது எப்போதுமே தேளின் குணம்! கொட்டாது என்று எதிர்பார்ப்பது நமது மடமை!).

ஆனால் மீனவர்களை அவர்களின் வாழ்வாதாரங்களிலிருந்து அப்புறப்படுத்துவது என்பது பன்னாட்டு முதலாளிகளிடம் தேசத்தைக் காட்டிக் கொடுப்பதற்கான அயோக்கியத்தனத்திற்கு மீனவர்களிடமிருந்து எவ்வித இடைஞ்சலும் வராமல் இருப்பதற்கான ஒரு யுக்தியாகவே மைய அரசால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனைப் புரிந்துகொள்ள முதலில் மீன்பிடித்தொழில் தொடர்பான சில தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கடல்பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்காக நார்வே அரசு இரும்பாலான சிறப்பு வலைகளைப் பயன்படுத்தத் துவங்கியது. மீனவர்கள் பயன்படுத்தும் சாதாரண வலைகள் கடலின் பாதி ஆழத்தோடு நின்றுவிடும். ஆனால் இப்படிப்பட்ட இரும்புவலைகள் கடலின் அடியாழம்வரை இறங்கிச்சென்று கண்ணிவெடிகளை அப்புறப்படுத்த உதவின. அதே சமயம் அந்த வலைகளில் மிக அதிகமான அளவில் மீன்களும் பிடிபட்டன். இந்த கூடுதல் உபயோகத்தைக் கண்டுகொண்ட மேலைநாடுகள்  தங்களுக்கான கடலுணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இவ்வகையான வலைகளை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தன. அளவுக்கு அதிகமாக இவ்வகை வலைகளைப் பயன்படுத்தியதால் இன்று மத்தியத் தரைக்கடல் பிரதேசமே மீன்வளம் இழந்து காணப்படுகின்றது. எனவே மேலைநாடுகள் தங்களது மீன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள புதிய கடல்பரப்புகளைத் தேர்வுசெய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின.

எனவே அவர்களின் பார்வை, வளம் மிகுந்த இந்தியக் கடற்பகுதியின் மீது திரும்பியது. இந்தியக் கடற்பகுதியில் குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக் நீரிணை பகுதிகளில் அவர்கள் மீன்பிடித் தொழிலை நடத்துவதற்கு பெரும் இடைஞ்சலாக உள்ளூர் மீனவர்களே இருப்பார்கள். அவர்களை மீன்பிடித்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால்...???

இந்தியாவில் இழுவைப்படகு மீன்பிடித்தொழில் :

மேலைநாடுகள் இருமடி வலைகளைப் பயன்படுத்த ஆரம்பித்த சிறிது காலம் கழித்து இந்தியக் கடல்பரப்பில் இருமடி வலைகளைப் பயன்படுத்துவதை இந்திய அரசே மீனவர்களுக்கு மானியங்களும் சலுகைகளும் கொடுத்து ஊக்குவிக்க ஆரம்பித்தது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இருமடி வலைகளையும் ட்ராலர்கள் எனப்படும் இழுவைப்படகுகளையும் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலைச் செய்ய மிகப்பெரும் அளவில் ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கடலுணவுத்தேவை வருடத்திற்கு ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் டன்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே அரசு மீனவர்களை மானியங்களும், சலுகைகளும் கொடுத்து ஊக்குவித்தது. ஆனாலும் மீன்வளம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு மீன்கள் குஞ்சு பொறிக்கும் பருவகாலத்தில் மட்டும் இருமடி வலைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமிழக மீனவர்களில் ஏறத்தாழ முப்பதுசத மீனவர்கள் மட்டுமே இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை நடத்தி வருகின்றனர். ஏனையோர் பாரம்பரிய மீன்பிடிப் படகுகளையே பயன்படுத்துகின்றனர்.

காலங்காலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின், நெடுந்தீவு, தலைமன்னார், யாழ்ப்பாணம் வரையிலும் சென்று மீன்பிடிப்பதும், இலங்கை மீனவர்கள் தமிழக எல்லையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதும் வழக்கமாகவே இருந்து வருகின்றது. இந்திய மீனவருக்குத் தேவையான மீன்கள் இலங்கைப் பகுதியிலும், இலங்கை மீனவருக்குத் தேவையான மீன்கள் இந்தியப்பகுதிகளிலும் பெருமளவு கிடைப்பதே இதற்குக் காரணம்.

புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் துவங்கியபின் சிங்களப்படைக்கு இயல்பாகவே தமிழக மீனவர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கத் துவங்கியது.தமிழக மீனவர்கள் மீதான அவர்களின் தாக்குதலும் பெருமளவில் நிகழ ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக்கொல்வதும், நடுக்கடலில் சித்திரவதை செய்வதும், அவர்களின் மீன்பிடிச் சாதனங்களை நாசப்படுத்துவதும் நின்றபாடில்லை.

கச்சத்தீவைக் கொடுத்த அயோக்கியத்தனம்:

இதற்கிடையில் கச்சத்தீவினை தாரைவார்த்துக் கொடுத்த அயோக்கியத்தனமும் சிங்களத்துக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. கச்சத்தீவானது பிரிட்டிஷார் காலத்திலும், அதற்கு முன்னும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான நிலமாக இருந்ததை பிரிட்டிஷ் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையில் ஆட்சி செய்த பண்டாரநாயகா குடும்பமும், இந்தியாவின் ஜவகர்லால்நேரு குடும்பமும் ஒன்றுக்கொன்று நட்பாக இருந்துவந்தன. நேருவுக்குப் பின்னரும் இந்த நட்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இந்திராவின் ஆட்சிக்காலத்தில், இலங்கையில் திருமதி.பண்டாரநாயக பிரதம மந்திரியாக இருந்துவந்தார். தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது செல்வாக்கு மக்கள்மத்தியில் குன்றியிருந்த நேரத்தில் இலங்கையில் பொதுத்தேர்தலுக்கான காலமும் வந்தது. மக்கள் மத்தியில் குறைந்துபோன தனது செல்வாக்கினை மீண்டும் உயர்த்திக்கொள்ள அவர் கச்சத்தீவினைப் பெற்று இலங்கையோடு இணைக்க முயற்சித்தார். அதற்குத்தான் ஏற்கனவே குடும்ப நண்பரான இந்திராகாந்தி இருக்கிறாரே?! சேதுபதி மன்னருக்கும், தமிழக மீனவர்களுக்கும் சொந்தமான கச்சத்தீவு இவர்கள் யாருடைய அனுமதியும் இன்றி சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஒரு (அ)சுபயோகத்தில் இலங்கைக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தாரைவார்க்கப்பட்டது. இது நடந்தது 28-06-1974-ல்.

இது தொடர்பான பாராளுமன்ற விவாதங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.என் தேவர், முகமது ஷெரீஃப் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று தெரிந்தும்கூட இந்திய அரசாங்கம் தமிழகத்துக்கு இந்த இரண்டகமான வேலையைச் செய்தது. இதற்கு தோதாக ஏற்கனவே கடல் எல்லையைக் குறிக்கும் வரைபடங்கள் திருத்தப்பட்டு, கச்சத்தீவானது இலங்கைக்குச் சொந்தம் என்று காட்டுமாறு வரைபடங்கள் மாற்றப்பட்டன.

கச்சத்தீவினைத் தாரைவார்க்கும் ஒப்பந்தம் எட்டாவது ஷரத்தின்படி இந்த ஒப்பந்தமானது அரசியல்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் இருவகைகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும். ஆனால் நாளது தேதிவரையிலுங்கூட இந்த ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படவோ, பாராளுமன்ற அவைகளில் ஒப்புதல் பெறப்படவோ இல்லை.

உதாரணமாக, நான் ஒருவரிடம் அவரது நிலத்தை கிரய ஒப்பந்தம் செய்து வாங்கிக் கொள்கிறேன் என்று கொள்வோம். அந்த ஒப்பந்தம் முறையாக குறிப்பிட்ட பதிவாளர்/சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டால்தானே அந்த கிரய ஒப்பந்தம் சட்டப்பூர்வமானதாக இருக்கும்? அப்படி பதிவு செய்யப்படவில்லையென்றால்...?

ஆக, ஒரு திருட்டுத்தனமான, அயோக்கியத்தனமான, தமிழக மக்களின் நலனை அழிக்கக்கூடிய ஒரு ஒப்பந்தம் இன்று வரையிலும் அரசியல் சாசனத்துக்கு விரோதமான முறையில் இருப்பதைக்கூட கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசின் காவாலித்தனத்தை என்னவென்று சொல்வது?

காலங்காலமாய்த் தமிழர்களுக்கு துரோகம் செய்துவரும் காங்கிரஸ் :

இப்படி பரம்பரை பரம்பரையாகவே காங்கிரஸ் கட்சியானது தமிழர்களுக்கு துரோகம் செய்தே வருகின்றது. இன்றும் சிங்களக் கடற்படை தமிழக மீனவனை சுட்டுக் கொல்வதற்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பது அதன் கள்ளமௌனத்தின் மூலமே வெட்டவெளிச்சமாகிறது.

தாங்கவொண்ணாக் கொடுமைகள் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து அவர்களை மாற்றுத் தொழிலை நோக்கி திசைமாற்றிவிட்டால், ஏற்கனவே அகோரப் பசியில் இருக்கும் பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களைக் கூப்பிட்டு ஆசை, ஆசையாக பந்தி வைக்கலாமே?

எல்லை தாண்டும் பிரச்சினை :

ஐக்கியநாடுகள் சபையின் வழிகாட்டுதல்களின்படி கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பவும், ஒருவேளை சந்தேகம் எழுந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் மட்டுமே செய்யவேண்டும். அதைமீறி அவர்களைக் காயப்படுத்துவதும், மரணம் ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்.

தனது சொந்த நாட்டு மீனவன் செத்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்ற ஆண்மைகெட்ட தேசத்துக்கு என்ன மயிர்பிடுங்கி இறையாண்மை இருக்க முடியும்? தன் பெண்டு, பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாத ஒரு குடும்பத்தலைவனை பேடி என்று சொல்லித்தான் எங்களுக்குப் பழக்கம்.

தம் மக்களை அநியாயமாகக் கொன்றுகுவிக்கக் கள்ளத்தனமாக துணைபோகும், கொன்று குவிக்கப்படுவதை விழிவிரிய வேடிக்கை பார்க்கும், தன் மக்களுக்குச் சொந்தமான சொத்தை திருட்டுத் தனமாக ஊரானுக்கு பட்டா போட்டுக்கொடுக்கும் காங்கிரச் கட்சியும், அரசும் நமக்குத் தேவைதானா?

தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும், உடலில் தமிழ்க்குருதி பாயும் ஒவ்வொருவனும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழ் இளைஞனும் குறைந்தது பத்து வாக்குகளையாவது காங்கிரஸுக்குப் போகாமல் தடுக்க வேண்டும்.
***************************************************

கூட்டம் முடிவடைந்த பின்னர் 'மே பதினேழு' இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியுடன் நானும் கேஆர்பி அண்ணனும் எமது இணைய நண்பர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது:

"தொகுதிக்கு பத்துபேர் இருந்தால்கூட போதும் தோழர். மிகத் தீவிரமான பிரச்சாரத்தின்மூலம் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸை மண்ணைக் கவ்வச் செய்யலாம். பத்து நூறாகவும், ஆயிரம், லட்சங்களாகவும் மாறும் நாள் தொலைவில் இல்லை. "நாம் தமிழர்" போன்ற இயக்கங்களுடனும் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம்"

என்றார் திருமுருகன்.

இன்னும் ஓரிரு நாட்களில் பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கம், தமிழ் தேசிய உணர்வுள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் இவர்களையும் சந்திக்க உள்ளோம். இணைய நண்பர்கள் மென்மேலும் களப்பணியாற்ற வரவேண்டுமாய் இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.

தொடர்புக்கு :

கேஆர்பி.செந்தில் - 8098858248
விந்தைமனிதன்( ராஜாராமன்) - 9500790916

" ஹே... பூதலமே! என் போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் அந்தப் போதினிலே"


7 பேரு கிடா வெட்டுறாங்க:

ஜோதிஜி சொன்னது…

வை கோ அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை ஆவலுடன் கவனித்துக் கொண்டு இருக்கின்றேன். நண்பர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

கும்மி சொன்னது…

நிகழ்ச்சியின் மொத்தக் கருத்தையும் வரி விடாமல் பதிவு செய்துள்ளீர்கள். மிகச் சிறப்பு.

அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற்க் கொண்டாரடி - கிளியே
ஊமைச் சனங்களடீ

சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

களம் இறங்குவோம்

குழலி / Kuzhali சொன்னது…

காங்கிரசை மட்டும் தனித்து வீழ்த்துவோம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை, இனத்தை காக்க செக்யூரிட்டியாக நியமிக்கப்பட்ட திமுக கொலைகாரன் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கொலைசெய்யும்போது தன் செக்யூரிட்டி வேலையை பார்க்காமல் அமைதியாக இருந்து கடமையில் தவறிய திமுகவும் சேர்த்தே வீழ்த்தப்பட வேண்டும் அதைவிடுத்து காங்கிரஸ் மேல் மட்டும் பழியை போட்டு திமுகவை விடுப்பது திமுகவை நல்லவராக காண்பிக்கும் முயற்ச்சி எனவே திமுக கூட்டணியை தோற்கடிப்போம் என்பதே சரியாக இருக்கும் இல்லையென்றால் இது ஒரு பக்க சாய்வான செயல்

விந்தைமனிதன் சொன்னது…

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது சரிதான் அண்ணே. ஆனா 234 லயும் நீங்களும் நானும் மட்டும் கத்திக்கிட்டு இருக்கலாம். வழக்கம்போல அவங்களும் ஏதோ முதுவுல கொசு உக்காந்தா மாதிரி தொடச்சிட்டு போயிட்டு இருப்பாங்க. இருக்குற கொஞ்சம் பலத்தை 63 ல ஃபோகஸ் செய்றது தானே சரியான நடைமுறைத் தந்திரமாக இருக்கும்? இதுல வேற 'கதாநாயகி' கவர்ச்சியும்.... எங்கூருல நானும் முடிஞ்சவரை கத்திப் பாத்துட்டு இருக்கேன். (வேதாரணியம்) திமுகவுக்கான ஆதரவு தேர்தல் அறிக்கைக்கு பிறகு கொஞ்சம் கூடி இருக்கிறது நல்லாவே தெரியுது.

Gopi Ramamoorthy சொன்னது…

மிகத் தாமதமாகப் படிக்கிறேன். மிக நல்ல பதிவு

Related Posts with Thumbnails