வியாழன், 17 மார்ச், 2011

1967 ஐ காங்கிரஸின் நினைவுகளில் தட்டியெழுப்புவோம்! தேர்தல் களத்தில் சூன்யத்தைப் பரிசளிப்போம்!!காங்கிரசுக்கு இறுதிச்சடங்குகளை செய்யத் தேவையான சாமக்கிரியைகளைப் பற்றி நானும் கேஆர்பி அண்ணனும் பேசிக் கொண்டிருந்தோம். நம்மால் என்ன செய்ய இயலும் என்பதனைப் பற்றிய ஆலோசனைகளை பதிவர் கும்மி உடல்நலன் குன்றி இருந்தபோதிலும் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட நேரம் தொலைபேசி உரையாடலில் பகிர்ந்து கொண்டார். அண்ணன் குழலியுடனான தொலைபேசி உரையாடலில் அவர் திமுகவையும் சேர்த்துப் புதைக்க வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்தார்.

இருக்கும் மிகச்சில நாட்களில் மிகச்சிறு அளவில் இருக்கும் தமிழ்(உணர்வுள்ள)  இணையஜீவிகள் - ப்ளாக், டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாசகர்கள்- (அதிலும் நேரடியாக தேர்தல் களப்பணிக்கு தயாராக இருப்பவர்கள் மிக மிகக் குறைவு) மிகப்பெரும் அஜெண்டாவை வைத்துக்கொண்டு செயல்படுவது என்பது நடைமுறைச் சாத்தியங்களற்ற ஒன்று என்பதை நண்பர் கும்மி தனது கருத்தாகச் சொன்னார். இவ்வாறு களப்பணியாற்றத் தயாராக இருக்கும் தமிழ் இணையவாசிகள் ஏனைய தமிழ்தேசிய இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து, அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படுவதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் போட்டியிடும் 63-ல் நிச்சயம் தோற்றுப்போகும் என்ற தொகுதிகளில் கவனம் குவிப்பதை விடுத்து, காங்கிரஸ் கடுமையான போட்டியைக் கொடுக்கக்கூடிய தொகுதிகளிலும், ஏறத்தாழ ஜெயித்துவிடும் என்ற நிலை இருக்கும் தொகுதிகளிலும் கூர்மையான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும் என்பதும் கும்மி அவர்களின் ஆலோசனை.

இணையத்தமிழ் வாசகர்களும், ப்ளாக்,டிவிட்டர், ஃபேஸ்புக் முதலானவற்றில் பங்களிப்போருமாக இருப்பவர்களில் தேர்தல் பணிக்கு வர விரும்புவோருக்காய் பொதுவான ஒரு ஃபோரம் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது எனது கருத்து. அப்படி நமக்குள்ளேயே ஒரு ஒருங்கிணைப்பும், ஏனைய இயக்கங்களினுடன் ஒத்திசைந்து செயல்படுவதும் அவசியமானது என்று கருதுகிறேன்.

இந்தத் தேர்தல் பணிகளில் பிரதானமாய் காங்கிரஸுக்கு எதிராய் எடுத்துவைக்கப்பட வேண்டிய பிரச்சாரங்களாக நான் கருதுபவை:

1) மிக முக்கியமானதாக ஈழப்படுகொலைகள். ஒரு இனத்தையே கருவறுத்த குரூரத்தை துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுகளின் மூலமாகவும் கொண்டு செல்லுதல். வைகோ எழுதி இயக்கிய "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" என்ற ஆவணப்படத்தினை இதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பது பற்றி மதிமுக தோழர்கள் மூலமாக நான் முயல்கிறேன். அப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் எனில் அந்த ஆவணப்படத்தினை பல்லாயிரம் குறுவட்டுக்களில் படியெடுத்து விநியோகிக்க வேண்டும்

2) தமிழக மீனவர் படுகொலைகளை எவ்வித இடையூறுகளுமின்றி நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு கால்தாங்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் அயோக்கியத்தனத்தைப் பற்றிய பிரச்சாரங்கள்

3) கேவலமான பொருளாதாரக் கொள்கைகளினால் மக்களின் வாழ்க்கைத் தரத்தினைச் சீரழித்து, விண்ணளந்த பெருமாளைப்போல சிகரத்தை எட்டி நிற்குமளவு விலைவாசி உயரக் காரணமாக இருந்த கையாலாகாத்தனங்கள், அற்பத்தனங்கள் பற்றிய பிரச்சாரம்

4) அரசுக்கிடங்குகளில் இருக்கும் தானியங்கள் அழுகிப்போனாலும் போகுமே ஒழிய, அடித்தட்டு மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கமாட்டோம் என்று மேட்டிமைத்திமிர்த்தனத்துடன் இறுமாந்திருந்துவிட்டு இன்று அதே அடித்தட்டு வர்க்கத்திடம் "போடுங்கம்மா ஓட்டு" என்று பல்லை இளித்து பசப்பும் பொறுக்கித்தனம் பற்றிய பிரச்சாரங்கள்

5) இதுவரையிலும், மீனவர் பிரச்சினையானாலும் சரி, காவேரிப் பிரச்சினையானாலும் சரி, முல்லைப்பெரியாறு பற்றிய பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினை என தமிழக நலன் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினைகளிலும் வாய்மூடி கள்ளமௌனம் சாதிக்கும் சாமர்த்தியம் பற்றிய பிரச்சாரம்

6) காமன்வெல்த் போட்டிகளில் துவங்கி ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் என்று நீளும் காங்கிரஸின் லட்சணமான முகத்தினை மக்களுக்கு விளக்கும் பிரச்சார யுக்திகள்

7) அந்தந்த பகுதி சார்ந்த உள்ளூர்ப் பிரச்சினைகளில் காங்கிரஸின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய விளக்கங்கள்.

இவற்றை மையப்படுத்தி ஏனைய தமிழுணர்வாளர்களுடன் இணைந்து தீவிரமாக வீதிப் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்க்கும் இளைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் தேர்தல் பணிகளின் தீவிரத்தை ஏற்கனவே சிவகங்கைச் சீமான் சிதம்பரம் அனுபவித்திருக்கிறார்.

63-ல் மிகக்கடுமையாக வேலைசெய்ய வேண்டியதாக இருக்கும் 25 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து நான்கு அல்லது ஐந்து பேர்கொண்ட சிறு குழுக்களாக வீதிநாடகங்களை அரங்கேற்றுவது போன்ற வேலைகளைச் செய்யவேண்டும்.

அமைக்கப்படும் ஃபோரத்திற்கு தலைவர் என்று யாரும் இல்லாமல் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை நமக்குநாமே அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக தொடங்கப்படும் சிறிய அளவிலான ஃபோரத்தைப்பற்றிய செய்திகளை இணையத்தில் பரவலாக அறியப்பட செய்யக்கூடிய வேலைகளையும் நாம் செய்தாக வேண்டும். சிறு பொறிதான் தீயாகப் பரவ ஆரம்பிக்கின்றது. தனித்தனியாய் தன்னார்வலர்களாய் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் தமிழுணர்வாளர்களை ஒருங்கிணைக்கும்போது அதன் ஆற்றல் மிகப்பெரிதாக இருக்குமென்று எண்ணுகிறேன். ஏற்கனவே #tnfisherman என்ற வார்த்தை டிவிட்டர் மூலம் ஏற்படுதிய அதிர்வலைகளை நாம் கவனிக்கவேண்டும்.

நண்பர் கும்மி இது தொடர்பாக "நாம் தமிழர்" இயக்கம், மற்றும் சில இயக்கங்களுடன் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார். நானும்  என் தொடர்பிலுள்ள நண்பர்களிடம் பேசுவதாக இருக்கிறேன். அண்ணன் கேஆர்பி செந்திலும் இது தொடர்பான வேலைகளில் தீவிரமாக இயங்குவார்.

காங்கிரஸுக்கு போடப்படாமல் தடுக்கப்படும் ஒவ்வொரு ஓட்டும் தமிழினத்தின் வேரில் பாய்ச்சப்படும் ஜீவ ஊற்று என்பதை கருத்தில் கொள்வோம்; களமிறங்குவோம்!

இதற்கென பொதுவான ஒரு வலைப்பூவோ அல்லது இணையதளமோ (சாத்தியப்படின்),  இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.

நாம் விதையை ஊன்றுவோம். இது விருட்சமாகுமா, இல்லை வீணாய்ப்போகுமா என்பதை நாளைய தமிழகம் முடிவுசெய்து கொள்ளட்டும்.

"காங்கிரசுக்கு ஒரு ஓட்டுக்கூட விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. அப்படியும் காங்கிரசுக்கு யாரேனும் ஓட்டுப்போடுவார்களேயானால் அது இந்த நாட்டுக்கும், திராவிட மக்களுக்கும் செய்கிற துரோகம் மட்டுமல்ல.. தன் தாய், தகப்பன், பெண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்தீங்கு. இந்த நிலையில் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி தம்பி நான் கூறமுடியும் & நாடு நகைக்காதா? நல்லோர் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?’’


& 55 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சொன்ன வார்த்தைகள் இவை. - இன்றும் ஜீவித்திருக்கின்றன இவ்வார்த்தைகள்.

3 பேரு கிடா வெட்டுறாங்க:

rajatheking சொன்னது…

I accept it . . . Conform a congress lose all 63 seats

விந்தைமனிதன் சொன்னது…

இணையத்துல மட்டும் பொங்குற இணையப்புலிகள்னு சொல்றது கரெக்ட்தான் போல! சமூக அக்கறை பொங்கி வழியுற ஒருத்தரையும் காணோமே???

Kousalya சொன்னது…

உங்களின் இந்த பதிவை தற்போது தான் பார்த்தேன்...பதிவின் எழுத்துக்கள் ஒவ்வொன்றுடன் அப்படியே உடன் படுகிறேன்.

எழுச்சியான வார்த்தைகள் !

என்னாலான பங்கெடுப்பு எதுவென்றாலும் செய்ய உடன்படுகிறேன். நிச்சயம் வென்றெடுப்போம் !

உங்களுக்கும் மற்றும் தோழர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

Related Posts with Thumbnails