புதன், 16 மார்ச், 2011

இதோ ஜயத்ரதன்! அதோ சூரியன்! எடு காண்டீபத்தை!!



குருஷேத்திர யுத்தகளத்தின் பதிமூன்றாம் நாள். சின்னஞ்சிறு இளைஞனாக இருந்தாலும், பகைக்கூட்டத்தினிடையே சூறாவளியாய்ச் சுழன்று சக்கரவியூகக்கணக்குகளை சிதறச்செய்த அபிமன்யூவை சுற்றி வளைக்கின்றனர் கௌரவர் கூட்டத்தின் மகாவீரர்கள். தன்னந்தனியாய்க் களத்தில் சுழன்றடித்த அபிமன்யூவை பெருவீரர்கள் கூடிப் போர் செய்தபோதிலும் தோற்கடிக்க முடியாமல் போரியல் தர்மநெறிகளுக்குப் புறம்பான முறையில் அபிமன்யூ என்ற மகாவீரனைச் சிதைத்தனர் கௌரவர் படையின் தளகர்த்தர்கள்.

"என் மகன் அபிமன்யூவினை அதர்மமாகக் கொன்ற ஜயத்ரதனை நாளைய சூர்ய அஸ்தமனத்துக்குள் கொல்வேன்! இல்லையேல் தீயில் வீழ்ந்து மடிவேன்" என்று சபதம் செய்கிறான் அர்ஜுனன்.

விடிகின்றது பதினான்காம் நாள். ஜயத்ரதனைப் பாதுகாப்பாக வைத்து சுற்றி அரணமைத்து நிற்கின்றனர் துரோனாச்சாரியும், கர்ணனும், பூரிச்ரவசும், சகுனியும், சல்லியனும், விகர்ணனும்,சுதாயுவும், ஸகஸ்ரபாகுவும்,கிருபாச்சாரியாரும்,அஸ்வத்தாமனும், துரியோதனனும். கடும்போரில் ஒவ்வொருவராக வீழ்த்திவிட்டு முன்னேறியபோதிலும் அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்க முடியவில்லை. சூரியன் அஸ்தமிக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எப்படியும் இன்னும் கொஞ்சநேரம் தப்பியிருந்துவிட்டால் அர்ஜுனனிடமிருந்து உயிரும் பிழைக்கும், அர்ஜுனனும் இறந்துபடுவான் என்று காத்திருக்கிறான் ஜயத்ரதன்.

முக்கால நிகழ்வுகளும் தப்பாது உணரும் கண்ணனும் இதை உணர்ந்து தன் வேலையைத் துவங்குகிறான். தன் சக்கராயுதத்தை வீசியெறிய அது சூரியனை மறைத்துக் கொண்டு அஸ்தமனம் ஆனதுபோல தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சண்டமாருதமாய் சுற்றிச் சுழன்றும், கொண்ட சபதத்தை நிறைவேற்ற முடியாத அர்ஜுனன் தீக்குண்டத்தை வளர்க்க ஆணையிடுகிறான். "தீக்குளிக்கத் தயாரானான் பார்த்தன்" என்று கேட்டு ஆனந்தக்கடலில் முக்குளித்த கௌரவர்கள் பார்த்தன் அக்கினியில் இறங்குவதைக் காண ஆவலுடன் சுற்றி நிற்கத் தொடங்கினர்... வாயைப் பிளந்துகொண்டு ஜயத்ரதனும் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டு நின்றான்.

ஜயத்ரதன் எதிரே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கியது கண்ட கண்ணன் ஆதவனை மறைத்திருந்த சக்கராயுதத்தை திரும்பப் பெறுகிறான். எங்கும் பரவுகிறது அந்தியின் பொன்னொளி.

கண்ணன் சொல்கிறான்...

"அர்ஜுனா! இதோ ஜயத்ரதன்! அதோ சூரியன்!! அஸ்தமிக்க இன்னும் நேரம் இருக்கிறது. எடு காண்டீபத்தை! தொடு அம்பினை!!"

காண்டீபம் நிமிர்கிறது...

காண்டீபம் வளைகிறது...

காண்டீபம் துளைக்கிறது...

பறந்துபோய் விழுந்தது ஜயத்ரதனின் தலை!

நண்பர்களே! இது புராணம். நடந்ததாகக் கூறப்படுவது அல்லது நம்பப்படுவது.

இதே அபிமன்யூ, அர்ஜூனன், ஜயத்ரதன், கண்ணன், காண்டீபம் கதை நம் காலத்திலும் நிகழ்வதை உணர்கிறீர்களா?

முப்பது ஆண்டுகாலம் எத்தனை முக்கியும் முழங்கால் மயிரைக்கூட பிடுங்க முடியாமல் நுரைதள்ளிப்போய் கிடந்தது சிங்களம்.  மிகச்சிறு நிலப்பரப்பில் மிகச்சிறு படையை நடத்திக்கொண்டு, சாராயம் இல்லாத, விபச்சாரம் இல்லாத, தூய்மையான ஒரு நிர்வாகத்தை, இது தமிழனின் நிர்வாகமுறை என்கிற ஒரு பாரம்பரியத் தொடர்ச்சியை உலகத்துக்கே முன்னுதாரணமாய் நிகழ்த்திக் கொண்டிருந்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்களது போரியல் முறைகளில், யுத்தகளங்களில் ஊழிப்பெருவெள்ளப்பெருக்காய்க் காட்டிய வீரத் தியாகங்களில், விக்கித்துப்போய் கிடந்தன வல்லரசுநாடுகள். முப்படைகள் சேர்ந்து கடுந்தாகுதல் நடத்தினால் ஒழிய தகர்ப்பது கடினம் என்று அமேரிக்கப் படைவல்லுனர்கள் கருத்து தெரிவித்துச் சென்றிருந்த ஆனையிறவுக்கோட்டையை முப்பத்தைந்தே நாட்களில் வெறும் 1200 வீரர்களைக் கொண்டு வீழ்த்திக்காட்டிய வீரம் புலிகளுக்கே சொந்தமானது.

சிவில் நிர்வாகத்திலும், ராணுவ சாதனைகளிலும் தேர்ந்து தமக்கான ஒரு விடியலை கருக்கொண்டு இருந்த ஒரு சின்னஞ்சிறு தேசத்தை, இந்திய, சீன அரசுகள் தோள்கொடுக்க, மேற்கத்திய வல்லரசுநாடுகள் பின்னிருக்க, அபிமன்யூவாய் சிலிர்த்தெழுந்து கொண்டிருந்த அந்த தேசம் சிதைக்கப்பட்டது. லட்சக்கணக்கில் நரபலியெடுத்து, சிங்களத்துக்கு வால்பிடித்து, ஆயுத உதவியும், இன்னபிற தொழில்நுட்ப உதவிகளையும் கொடுத்து தனது ஜனநாயகக் கிரீடத்தில் ரத்தாபிஷேகம் நடத்திக்கொண்டது இந்திய வல்லரசு. "இந்தியாவுக்கான போரை நாங்கள் நடத்தினோம்" என்று கூச்சலிடுகிறான் மகிந்த ராஜபக்க்ஷே.

தனது தனிப்பட்ட வஞ்சம் தீர்ப்பதற்காய் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் காவுகொண்ட காங்கிரஸ் கட்சி இன்று தமிழகத் தேர்தல்களத்தில் ரத,கஜ, துரக பதாதிகளோடு களமிறங்கி இருக்கின்றது. தனித்து நின்றால் தமிழகத்திலிருந்தே துடைத்தெறியப்படுவோம் என்பதை நன்குணர்ந்து வியாபார பேரங்களை வெற்றிகரமாக ஸ்பெக்ட்ரம் உதவியுடன் முடித்து மிதப்பாக உலாவரத் தொடங்கிவிட்டது.

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே தேசமக்களுக்கு துரோகம் செய்தே பழக்கப்பட்ட ஒரு கட்சி, தனது சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக்கித் துரத்திக் கொல்லும் ஒரு கட்சி ( லால்கர், தண்டகாரண்யா), நரித்தனமான தனது ஆட்சித் தந்திரங்களால் நாட்டுமக்களுக்கிடையே மதவாதத்தையும், சாதி, மொழிப்ப் பிரிவினைகளையும் செவ்வனே தூண்டிவிட்டுக் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி, மிச்சம் மீதி இருந்த கோவணத்தையும் அடமானம் வைத்ததுபோல கொஞ்சம்போல ஒட்டிக் கொண்டிருந்த இறையாண்மையையும் அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்க வல்லரசுக்கு பந்திவைத்த ஒரு கட்சி, "வீணில் அழுகிப்போய் கடலில் கொட்டினாலும் கொட்டுவோம்; பட்டினியில் கும்பி காய்ந்து சாகும் கஞ்சிக்கில்லா கபோதிகளுக்குத் தரமாட்டோம்" என்று திமிர்த்தனம் காட்டிய ஒரு கட்சி, தமிழனின் உயிருக்கு ஆபத்து வரும்போதெல்லாம் கள்ளமௌனம் சாதித்து சீக்கியனின் மயிருக்கு பங்கம் நேர்ந்தால் மட்டும் பொங்கியெழுந்த ஒரு கட்சி, கொஞ்சமும் வெட்கமில்லாமல் உத்தம முகமூடி அணிந்து ஓட்டுக் கேட்டு வருகின்றது.

இதோ கண்களுக்கெதிரில் காட்டப்பட்டிருக்கிறது நமக்கான இலக்கு...திருத்தணி தொடங்கி கிள்ளியூர் வரையிலான அறுபத்திமூன்று சட்டமன்றத் தொகுதிகள். காங்கிரஸ் கட்சியைக் கருவறுக்க, தமிழனின் பழிமுடிக்க களமாய் விரிந்து நீள்கிறது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2011.

இணையத்தில் மட்டுமே பொழிந்து கொண்டிருக்கும் மாயமழையாய் இல்லாமல், குறைந்தபட்சம் ஆளுக்கு ஐந்து நாட்களாவது தமிழுணர்வு கொண்ட பதிவர்கள், இணைய வாசகர்கள் அனைவரும் நமக்கு அருகிலிருக்கும் அறுபத்திமூன்றில் ஒன்றைத் தேர்வுசெய்வோம். தெருத்தெருவாய் இறங்கி மக்களைச் சந்திப்போம்.குறைந்தபட்சம் ஆளுக்கு ஐம்பது ஓட்டுக்களையாவது காங்கிரஸுக்குப் போகாமல் தடுப்போம்.

என்னைப் பொறுத்தவரை நான், எங்கள் ஊரிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் அப்பகுதியில் உள்ள தமிழுணர்வாளர்கள், தமிழ்தேசியம் பேசும் அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றிடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களோடு இணைந்து காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தினை மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

தமிழ் என்ற இன உணர்வும், மனிதநேயமும் மிக்கோர் இந்தத் தருணத்தில் நமது இனத்துக்காய் செய்யவேண்டிய கடமையை செய்ய மறந்து விடாதீர்கள்.

ஈழம் என்ற அபிமன்யூவைச் சிதைத்த ஜயத்ரதன் காங்கிரஸ் இதோ அறுபத்துமூன்று தொகுதிகளில்!

ஓட்டுச்சீட்டுக்களாகவும், எதிர்ப்புப் பிரச்சாரங்களாகவும் நமது கரங்களில் காண்டீபம்!

வீழட்டும் காங்கிரஸ் தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும்!

பின்குறிப்பு: மயிலாடுதுறை சட்டமன்றத்தொகுதிக்குச் செல்லும் அல்லது அங்கிருந்தே தேர்தல் பணிகளை ஆற்றிவரும் தோழர்கள் யாரேனும் என்னைத் தொடர்புகொண்டால் எனக்கு மிகவும் உபயோககரமாக இருக்கும்.

இணைப்பு : காங்கிரஸ் பற்றிய எனது முந்தைய பதிவு:      "தமிழகத்தில் மீளுயிர்க்கும் காங்கிரஸ் - ஒரு பைனாகுலர் பார்வை!"

7 பேரு கிடா வெட்டுறாங்க:

குழலி / Kuzhali சொன்னது…

எப்படிங்க காங்கிரசை மட்டும் வீழ்த்தினால் போதுமா? அல்லது காங்கிரசை அபிமன்யூவை வீழ்த்தும்போது அதன் தேர் சக்கர அச்சாக இருந்த திமுகவும் சேர்த்து வீழ்த்தப்படனுமா? அல்லது எல்லாம் முடிந்தும் இன்னமும் சுயமரியாதையின்றி செருப்படி வாங்கிக்கொண்டே முதுகில் சுமக்கும் திமுகவைப்பற்றி எதுவுமே இந்த பதிவில் காணாமே... காங்கிரஸ் திமுக என்னும் தேர் சக்கர அச்சோடு பாமக என்னும் மணியை ஆட்டிக்கொண்டே போர் பரணி பாடுச்சே அந்த பாமகவை பற்றியும் இதில் காணாமே... ஒரு வேளை அக்மார்க் தி.க. காரங்கள் மாதிரி உங்களுக்கும் கோபமும் ருத்ரமும் செலக்டிவா தான் வருமோ?

vinthaimanithan சொன்னது…

குழலிண்ணே, எண்ணிக்கையளவுல சிறுபான்மையினராத்தானே இருக்கோம் தமிழுணர்வாளர்கள். மொத்தக் கவனத்தையும் 63 ல ஃபோகஸ் செஞ்சா கருமாதி, எட்டு , எழவு எல்லாத்தையும் பண்ணிடலாமே, அதான் சொன்னேன். மற்றபடி காங்கிரசுக்கு கால் தாங்குன ஒரே விஷயத்துக்காகவே திமுகவையும், பாமகவையும், ரெட்டை வேஷம் போடுறதில சிவாஜிகணேசனையும், கமலஹாசனையும் விஞ்சின திருமாவையும் தோற்கடிக்கணும் அப்டீங்குறதுல எனக்கு கருத்து வேறுபாடு இல்லண்ணே!

ஆனா 234 லயும் திமுக கூட்டணியத் தோற்கடிக்கிறது எந்தளவுண்ணே சாத்தியம்? எவ்வளவோ போராடியும் நம்மால ஈவிகேஎஸ், தங்கவாலு அப்டீன்னு ஒரு சிலரைத்தானே 2009 ல தோக்கடிக்க முடிஞ்சது?

"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்"

இதுதாண்ணே நான் நெனச்சது.

Sanjai Gandhi சொன்னது…

//எவ்வளவோ போராடியும் நம்மால ஈவிகேஎஸ், தங்கவாலு அப்டீன்னு ஒரு சிலரைத்தானே 2009 ல தோக்கடிக்க முடிஞ்சது?//

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

அதெப்டிங்க கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம புளுக முடியுது.? ;)))) இவங்க தோற்க அப்படி என்னத்த நீங்க கிழிச்சிங்கன்னு கொஞ்சம் பட்டியல் போடறிங்களா?

Unknown சொன்னது…

வீழட்டும் காங்கிரஸ் தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும்!

ஜோதிஜி சொன்னது…

இங்கு தேடி அலைய வேண்டிய அவஸ்யமில்லாமல் மூஞ்சி பேந்து போகும் அளவிற்கு வந்து விழப்போகும் எதிர்ப்பு ஓட்டுகளை இந்த முறை கோவை மாவட்டம் உணர்த்திக் காட்டும்.

முகவை மைந்தன் சொன்னது…

கையக் குடுங்க சஞ்சய், மக்கள் கடுப்பாயி காங்கிரசைத் தோக்கடிச்சா, பேரை இவர் தட்டிக்கப் பாக்குறாரு;-)

ராஜ நடராஜன் சொன்னது…

அபிமன்யூவின் கரு என் மனதிலும் சில காலங்களுக்கு முன் உதித்தது.ஒரே மனஅலையோட்டத்தில் பயணிப்பதில் மகிழ்ச்சி!

Related Posts with Thumbnails