திங்கள், 11 அக்டோபர், 2010

ஆறாவது புருஷன்



திரௌபதி அந்த வனத்தையும் தன்னையும் ஒன்றென உணர்ந்தாள். சூரியனின் வெம்மை சற்றும் புகுந்துவிடாதபடி குளுமையாய் இருந்த வனம் தன் குளுமையை திரௌபதிக்குள்ளும் இறக்கியது. திரௌபதியின் மனம் எங்கெங்கோ ஓடத்துவங்கியது. வனம் எப்போதுமே ஒரு
அதீதமான மாய அழகுடன் இறுமாந்திருக்கிறது. ஒழுங்கின்மையின் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே... சுதந்திரத்தின் வீச்சினை பரப்பிக்கொண்டே... அது தன் அழகை யாருக்கும் அடகு வைப்பதில்லை... யாவரையும் தனக்குள் கபளீகரம் செய்துகொள்கிறது.

துருபதன் மகள் ஏனோ அன்று தன்னுள் அதீதக்காதல் பொங்குவதை உணர்ந்தாள். நான் அரசி... என் காதலர்கள் என் சேவகர்களும்கூட... என் கட்டளைக்காய், கண்ணசைவிற்காய் காத்திருக்கும் காதலர் ஐவருக்கும் என் காதலை நான் அவர்களுக்குள் ஊற்றிக்கொண்டே இருக்கிறேன். ஐந்து பேர்... ஐந்து பேர்!

அவளுள் ஒளிந்து எப்போதும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்கும் அந்தத்தீ அன்று சற்றே சாம்பல் பூத்திருந்தது. அர்ஜுனனுக்காக அவள் மனம் எதிர்பார்த்திருந்தது. அழகன்! கம்பீரன்! பௌருஷத்தின் பொக்கிஷங்களை தனக்குள் முதன்முதல் திறந்துவிட்டவன்! இதோ வந்துவிடுவான். யோசனைகள் உந்தித்தள்ள வெகுதூரம் வந்துவிட்டாள் போலும்!

அதோ... அதோ... மதர்த்த ஆண்யானை போல் அசைந்து வருகிறான். பருத்த பிருஷ்டங்களும் சிறுத்த இடுப்பும் பெண்டிர்க்கு மட்டும்தான் அழகென்பவர் அர்ஜுனனைப் பார்க்கவேண்டும்!

"கிருஷ்ணை! என்ன இது இவ்வளவு தூரம் நடந்து வந்துவிட்டாய்? உன் முகமும் மிகவும் பொலிவுடன் இருக்கின்றதே!" வாஞ்சையுடன் கரம்பற்றிய திரௌபதி அவனோடு கரம்கோர்த்து நடக்கத் துவங்கினாள்.

'இவனுக்கு மட்டுமே உரிமையாக இருக்க வேண்டியவள்...ஹ்ஹ்ம்ம்ம்!' அவளுள் மீண்டும் அந்தத்தீ சாம்பல் உதறக் காத்திருந்தது. 'பகிர்ந்து கொள்ளுங்கள்!' குந்தியின் வார்த்தைகள் இப்போது ஒலிப்பதைப்போல...

காதலுஞ்சரி... தாபமுஞ்சரி... கோபமுஞ்சரி....திரௌபதி எப்போதுமே தீ போலத்தான்... எதுவுமே ஒரு வனமாகத்தான் அவளுள் பரவும். தீயில் பிறந்தவள் அல்லவா!

வனம் அர்ஜூனனுக்குள்ளும் தாபத்தை விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. பாஞ்சாலி எது சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இருந்தான். நடந்து கொண்டிருப்பது விதியை நோக்கி என்பதறியாமல் நடந்தான். சுழன்று கொண்டே இருந்த பாஞ்சாலியின் கண்களில் விழுந்து சிரிக்கத்துவங்கியது அந்த நெல்லிக்கனி. உயரத்தில் ஒற்றையாய்....!

"விஜயா! அந்த நெல்லிக்கனியைப் பாரேன்! அழகாக இல்லை?"

"உனக்கு வேண்டுமா க்ருஷ்ணை? இதோ பறித்துத் தருகிறேன்!"

நினைப்பது அர்ஜுனன் எனில் நினைத்த கணம் முடிப்பது காண்டீபம்! அறுந்து விழுந்த பழம்பொறுக்கக் குனிந்த அர்ஜூனனின் காதுகளில் விழுந்தது அந்த "ஐய்யோ!"

சுள்ளி சுமந்துவந்து கொண்டிருந்த அமித்திர ரிஷியின் சீடன் பதறத் தொடங்கினான். "பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்... அதுவும் இந்த நெல்லிக்கனி மட்டும்தானே குருதேவனின் உணவு! அவருக்கென்று மட்டுமே படைக்கப்பட்டதை வீழ்த்தி விட்டீர்களே! அவர்வந்து சபிப்பாரே! உம்மைப்பார்த்தால் அரசகுலம்போல் தோன்றுகிறது. ஏன் இந்தப் புத்தி உமக்கு? கண்ணில் கண்டதெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ளும் நாகரீகவான்களின் புத்தியை காட்டுக்கு வெளியேயே கழற்றிவைத்து வரக்கூடாதா? என்ன செய்யப் போகிறீர் இப்போது?"

அர்ஜூனனும் திரௌபதியும் பதறிப்போனார்கள். செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். யுதிர்ஷ்டிரனுக்கும் செய்தி போனது. சகோதரர்களோடு வந்து சேர்ந்த யுதிர்ஷ்டிரனும் குழம்பித் தவிக்க... 'ஆபத்பாந்தவன் கண்ணனன்றி வேறு யார் இருக்கிறார் நம்மைக்காக்க?'

பதறத்துவங்கும் போதெல்லாம் பாஞ்சாலியின் மனதில் பழைய நெருப்பும் சேர்ந்தே விசிறப்படும். இப்போதும்! குருவம்சத்தில் மணம் முடித்த எல்லாப் பெண்களுமே பாவப்பட்ட ஜீவன்கள் போல! தானும்... தன்னால்தான் இன்றைய பிரச்சினை எனினும் ஏன் வனம்புக நேர்ந்தது? புகுந்திராவிட்டால்...

அர்ஜூனனைக் காதலித்தவளை ஐவருக்கும் மனைவியாக இருக்கச் சொல்லும்போது நானும் இதோ இந்தப் பழம் மாதிரித்தானே கிடந்தேன்! என் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு... சீந்துவாரின்றி... இந்த உலகம் ஆண்களால்தானே நிறைந்திருக்கின்றது? குந்தியும்தானே துணைபோனாள்? மறக்கமுடியுமா அந்த வார்த்தைகளை... "பகிர்ந்துகொள்ளுங்கள்..."   ! கல்யாணத்துக்கு முன்னரே சூரியதேவனால் கன்னிமை கழிக்கப்பட்டு கர்ணனைப் பெற்று அவனையும் தூக்கி வீசியபோதே பெண்மையின் உணர்வுகளையும் கழற்றி வைத்துவிட்டாள் போலும்! இல்லாவிடில் என்னைப் புரிந்திருப்பாள்.ஐவரையும் காலம் போகப்போக ஏற்றுக் கொள்ளத்துவங்கினாலும் என்னுள் அந்தத்தீ ஏன் இன்னும்...?

பல்வேறு திசைகளிலும் சுழலத்துவங்கிய மனக்காற்றாடிக்கு அணை போட்டது பரந்தாமனின் வருகை. விவரம் கேட்டறிந்தவன் கைகளால் முகவாய்க்கட்டைக்கு சிறிது நேரம் முட்டுக்கொடுத்திருந்தான். பின் வழக்கமான கபடப்புன்னகையுடன் பேசத்துவங்கினான் விதியின் வேடிக்கை புரிந்தவனாய்.

"பார் யுதிர்ஷ்டிரா! தர்மம் எப்போதும் தனக்குப் பிடித்தவருடன் விளையாடிப் பார்ப்பதையே பொழுதுபோக்காய் வைத்திருக்கின்றது! இப்போது மீண்டும் உன் முறை. ஆட்டத்தைத் துவங்கியாயிற்று. நீதான் முடித்துவைக்க வேண்டும்!"

"இது என்ன சோதனை க்ருஷ்ணா! என்ன செய்யச் சொல்கிறாய் என்னை?" யுதிர்ஷ்டிரன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் சற்றே நடுங்கின.

"ஒன்றும் பயப்படாதே என் ப்ரிய மைத்துனா! இது அமித்திரமுனிவருக்குச் சொந்தமான கனி. அவர் வருவதற்குள் ஒட்டவைக்க வேண்டும். ஒரே உபாயம்தான் இருக்கிறது"

"சொல் கண்ணா! செய்கிறோம். பிரச்சினை தீர்ந்தால் சரி"

"கடினமானது ஒன்றுமில்லை! நீங்கள் ஒவ்வொருவரும் உம் மனதில் இருப்பதை ஒளிக்காமல் சொல்லுங்கள். இதுதான் உபாயம். நீங்கள் சொல்லச் சொல்ல கனி தானாகவே மேலேறும்.... ஒட்டிக்கொள்ளும்" கண்ணன் திரௌபதியை ஓரக்கண்ணால் பார்த்து லேசாய் சிரித்துக்கொண்டே சொன்ன கணத்தில் புரிந்து போனது அவளுக்கு 'இது தனக்கு வைக்கப்பட்ட சோதனை' என்று. சிந்தனையில் ஆழ்ந்தாள்.

யுதிர்ஷ்டிரன் மெல்ல வாய்திறந்தான்.

"நாடுநகரம் ஆளவேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை கண்ணா!...."

மீதி ஐவரும் லேசாய்த் திடுக்கிடத் தொடர்ந்தான்... " நான் ஜெயிக்கவேண்டாம்.... எது தர்மமோ அது எப்போதும் ஜெயிக்க வேண்டும்"

'தர்மம்.... நீயா யுதிர்ஷ்டிரா தர்மம் பேசுவது! ஒரு பெண்ணின் காதலை வலுக்கட்டாயமாய் வரவழைத்த நீயா?' திரௌபதி மனதில் தீ லேசாக சாம்பல் விலக்கி எட்டிப் பார்த்தது.

பீமன் சொன்னான் " பரந்தாமா! என்றும் நான் பிறன்மனை வேண்டேன். பிறர்வசை வேண்டேன்! பிறர் துயர் என் துயராகக் கொள்ளவே விரும்பினேன்!"

திரௌபதி புன்னகைத்தாள்

அடுத்து அர்ஜூனன்...

"மானமே எமக்கு என்றும் உயிர் கண்ணா! மானம் துறந்து வாழ்வதை நான் என்றும் ஈனமாய்க் கருதுவேன்" என்றான்

" எத்தனை செல்வம் இருப்பினும் எத்தனை பலம் இருப்பினும், கல்வியின், ஞானத்தின் நிழல்படாதோரை என்றும் மதியேன் நான்" என நகுலனும்,  "அன்னையின் வார்த்தை, அனைத்துக்கும் மூலமான ஞானம், துணைநிற்கும் தர்மம், என்றும் பிறர்மேல் காட்டும் தோழமையே உருவான கருணை, மனைவிபோலும் தாங்கிநிற்கும் சாத்வீககுணம், நம்மை அந்திமத்தில் காப்பாற்றும் மகனைப் போன்ற வலிமை இவை ஆறுமன்றி வேறேதும் நான் உறவாக எண்ணுவதில்லை கிருஷ்ணா!" என்று சகாதேவனும் முடித்தார்கள்.

கண்ணன் திரௌபதியிடம் திரும்பினான். திரௌபதி மனதில் தீ சடசடவென எரியத் தொடங்கியது.

"பலசாலிகளும், ஞானவான்களும், அன்பு மிக்கவர்களுமான ஐவரைக் கணவராகப் பெற்ற நான் அவர்கள் நன்மைதவிர வேறேது நினைக்கப்போகிறேன் கண்ணா?"

பழம் அசையாதிருந்தது.

பரந்தாமன் புன்னகைத்தான். "ஏன் கிருஷ்ணை... பொய் சொல்கிறாய்" வார்த்தைகளை கனமாக இறக்கினான்.

திரௌபதியின் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மெல்லக் கணவர்மார்களைப் பார்த்தாள். லேசாய்ப் பெருமூச்சும், குரூரமும் கலந்தெழ மெல்ல... மெல்ல வார்த்தைகளை எண்ணிக் கோர்க்கத் துவங்கினாள். தீ பரவியது... வடவாமுகாக்கினியாய்....

"ஐந்து கணவன்மார்களும் என் ஐந்து புலன்கள் போலத்தான் அண்ணா! ஆனாலும் மனிதர் ஆறாம் அறிவை நாடி ஏங்குவதுபோல என் மனமும் ஆறாவதாய் ஒருவனுக்காய் ஏங்குகிறதே.... என்ன செய்வேன்?!"

கிருஷ்ணன் சிரிக்கத் தொடங்கினான்... அண்டமதிர...

அண்ணண்தம்பி ஐவரும் சிலையாகினர்....அவர்களது ஆண்மையின் கர்வம் செத்திருந்தது...

அதன்பின் திரௌபதியைத் தொடும்போதெல்லாம் அவர்கள் இறந்து இறந்து உயிர்ப்பிக்கப்படுவதே விதிக்கப்பட்டதானது.
*************************************************

25 பேரு கிடா வெட்டுறாங்க:

vasu balaji சொன்னது…

ம்ம்ம். பிரமாதம். எத்தனை உணர்ச்சி. எத்தனை ஆழம். சபாஷ்.

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு அண்ணே!

Bibiliobibuli சொன்னது…

WOW!! எப்படியெல்லாம் சிந்தித்து எழுதுகிறீர்கள். சிறந்த எழுத்து. ஓர் பெண்ணின் மனதை, உணர்வை அதன் வலியை அழகாய் படம் பிடித்து காட்டுகிறது.

//ஒழுங்கின்மையின் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே... சுதந்திரத்தின் வீச்சினை பரப்பிக்கொண்டே...//
நான் ரசித்த வரிகள்.

அது சரி, இதுக்கு ஏன் எதிர்மறை வாக்களித்திருக்கிறார்கள், புரியவில்லை.

மணிஜி சொன்னது…

fantastic.....

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

பெருமையாக இருக்கிறது நண்பா
வாழ்த்துக்கள்

எஸ்.கே சொன்னது…

இது உங்கள் கற்பனையோ அல்லது செவிவழிக் கதையோ, ஆனால் தங்கள் நடை நன்றாக உள்ளது. ஏதோ எழுதும் பலரிலிருந்து தங்கள் நடையில் பல ரசிக்கத்தக்க விசயங்கள் இருக்கின்றது.

Unknown சொன்னது…

புதுமைபித்தன் ...

Unknown சொன்னது…

////ஒழுங்கின்மையின் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே... சுதந்திரத்தின் வீச்சினை பரப்பிக்கொண்டே...///அருமையான வரிகள்.மிக சிறந்த எழுத்து.

pichaikaaran சொன்னது…

controversial subject.. but well written,,

vinthaimanithan சொன்னது…

கூழாங்கல் உருட்டி விளையாடும் சிறுவனைப் போல மனம்போன போக்கில் எழுத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கின்றேன். இவ்வளவு தூரம் என்னைத் தட்டிக் கொடுத்து என்னை மேலும் முன்னோக்கி உந்தும் என் ப்ரிய நெஞ்சங்களுக்கு நன்றி. வேறேதும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு!

vasan சொன்னது…

எஸ்ராவின் 'உப‌ பாண்ட‌வ‌ம்' போல‌ ந‌டை, ஆனால். முன்பின்னாய்(சூரிய‌க்குழந்தை க‌ர்ணன் புறப்பு அவள‌ரியாதாது) கதை அலைகிற‌து. அது ச‌ரி யார‌ந்த‌ ஆறாம‌வ‌ன்? பீம‌ன் தான் அவ‌ளுக்கு மிக‌ப் பிரிய‌மான‌வ‌ன் என‌ ப‌டித்திருக்கிறேன். புராண‌ப் புனைவு அருமை, விந்தை ம‌னித‌ன்.

vinthaimanithan சொன்னது…

விமர்சனத்துக்கு நன்றி வாசன்!
"ஐம் புலன்களும்போல் ஐவரும் பதிகள் ஆகவும் இன்னம் வேறு ஒருவன் எம் பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும், இறைவனே! எனது பேர் இதயம்: அம் புவிதனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால் நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள்"

இவ்வரிகளில் வரும் எம்பெருங் கொழுநன் என்ற வார்த்தைக்கு கர்ணன் என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.

அடுத்து சுயம்வரத்தில் பாஞ்சாலியை வென்று அழைத்து வந்தவன் அர்ஜூனன் தான். எனவே அவன்மேல்தான் அவளுக்கு முதல்காதல் இருக்கும் என்பது என் யூகம்... நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்.

bogan சொன்னது…

great.I also think arjun is her favorite.

ஜோதிஜி சொன்னது…

அது சரி, இதுக்கு ஏன் எதிர்மறை வாக்களித்திருக்கிறார்கள், புரியவில்லை.

ரதி நம்ம ராசா பிரபல்யம் ஆயிட்டார்ன்னு அர்த்தம்.

நான் ரொம்ப பாராட்ட மாட்டேன்.

ஆனால் என்னை பாராட்ட வச்சுருவீயோன்னு ரொம்ப பயமாயிருக்கு.

இதுதான் என்னுடைய பாராட்டு.

vinthaimanithan சொன்னது…

//நம்ம ராசா பிரபல்யம் ஆயிட்டார்ன்னு அர்த்தம்.
// :)))))

கொஞ்சம் மேல அண்ணாந்து ஹிட் கவுண்டரை பாத்துட்டு இதை சொல்லுங்க... 70 ஐ தாண்டல...

Bibiliobibuli சொன்னது…

//ஆனால் என்னை பாராட்ட வச்சுருவீயோன்னு ரொம்ப பயமாயிருக்கு. //

ராஜாராமன், சவால். "நானு ராசாவோட விசிறி" ன்னு ஜோதிஜியை சொல்லவைங்க. Yes, you can.

vinthaimanithan சொன்னது…

//Yes, you can. //

yes, i can அக்கா!

ALHABSHIEST சொன்னது…

"கண்ணில் கண்டதெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ளும் நாகரீகவான்களின் புத்தியை காட்டுக்கு வெளியேயே கழற்றிவைத்து வரக்கூடாதா?"
சுழற்றி அடிக்கிறது.

ஜோதிஜி சொன்னது…

கொஞ்சம் மேல அண்ணாந்து ஹிட் கவுண்டரை பாத்துட்டு இதை சொல்லுங்க... 70 ஐ தாண்டல...

ஏலேய் கிறுக்கு பய மவனே ஹாலிவுட் பாலா சொன்னது தான் எனக்கு இப்ப ஞாபகத்திற்கு வருது. இந்த பட்டை கவுண்டரு செட்டியாரு இதையெல்லாம் விட்டு வெளியே வா ராசா. இது போன்ற விசயங்களை என்னால் எழுத முடியாதது மட்டுமல்ல நினைத்தே பார்க்க முடியாது. ஒரே வார்த்தையில் பாலாசி அய்யா சொல்லியிருக்கிறத பார்த்தாயா?

இந்த ஹிட் பார்த்து கண்வலிக்காமல் அடுத்து இதே மாதிரி வேறொரு தளத்தில் கொடுக்க முயற்சி செய் ராசா.

ஜோதிஜி சொன்னது…

ராஜாராமன், சவால். "நானு ராசாவோட விசிறி" ன்னு ஜோதிஜியை சொல்லவைங்க. Yes, you can.

என்ன ரதி. பயபுள்ள தான் இப்பே பாசக்கயிற்றால் கட்டு போட்டு வச்சுருக்காப்லேயே. இதுக்கு மேலே விசிறி பேன் வேறு வேண்டுமா?

என்னை விட பலரை விட பல மடங்கு திறமை இருக்கு ராசாவிடம்.

என்ன இப்ப பயபுள்ள கொஞ்சம் கொளப்பத்துல இருக்குராப்ல. சீக்கிரம் இன்னும் சிறப்பான விசயங்கள் வரும் வரவேண்டும்.

சரிதானே ராசா.

Anbu சொன்னது…

ஜி, யராவது தெரியாம பட்டன மாத்தி அழுத்தி இருப்பாங்க, விடுங்க.

ரொம்ம்ப நல்லா இருக்கு....

Anbu சொன்னது…

"கூழாங்கல் உருட்டி விளையாடும் சிறுவனைப் போல மனம்போன போக்கில் எழுத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கின்றேன்."

இதுவும் நல்லாதான் இருக்கு!

vinthaimanithan சொன்னது…

//என்ன ரதி. பயபுள்ள தான் இப்பே பாசக்கயிற்றால் கட்டு போட்டு வச்சுருக்காப்லேயே. இதுக்கு மேலே விசிறி பேன் வேறு வேண்டுமா?//

ஆஹா.... ஆஹா!

//என்ன இப்ப பயபுள்ள கொஞ்சம் கொளப்பத்துல இருக்குராப்ல. சீக்கிரம் இன்னும் சிறப்பான விசயங்கள் வரும் வரவேண்டும்.//

கண்டிப்பா ஜோதிஜி!

அப்புறம் அன்புவுக்கும் நன்றி!

விமலன் சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு.

ஜெயந்தி சொன்னது…

உங்கள் எழுத்து அற்புதமாய் இருக்கிறது. படிக்கவும் விறுவிறுப்பாய் இருக்கிறது. இவர்கள் ஐவருக்கு முன்பே கர்ணனைத்தான் அவள் காதலித்திருப்பாள். நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

Related Posts with Thumbnails