சனி, 9 அக்டோபர், 2010

அத்திரிபாச்சா கொழுக்கட்டை - கிராமத்துக்கதைகள் 2



மாரிக்கண்ணு சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் கிறுக்குப்புடிச்ச பய. பள்ளிக்கோடம் போவயிலயே பச்சப்பாம்ப புடிச்சி அதோட வாயக்கட்டி டவுசர் பாக்கெட்டுல திணிச்சிட்டு போயி வாத்தி வீட்டுப்பாடம் கேக்குறப்ப அவருமேல தூக்கிப்போட்டுட்டு ஓடியாந்தவன். ஊருக்குள்ளாற இருக்குற எளந்தாரிப்பயலுவள்லயே இவங்கிட்ட மட்டும்தான் கன்னிப்பொண்டுவளும், கல்யாணமான பொண்டுவளும் தாயக்கட்ட, பல்லாங்குழி வெளையாட சேக்காளி தேடுறதும்.... பயலுக்கும் திங்கிறதையும் தூங்குறதையும் உட்டா வேற வெவரமும் தெரியாதா... பொண்டுவளுக்கு கிண்டல் பண்ணி பொழுதுபோக்க ஒரு ஆம்பிளைப்பய அசடனா வந்து மாட்டிக்கிட்டா கேக்கவா வேணும்!

ஆச்சு... அவனுக்கும் வார ஆவணி வந்தா இருவத்தெட்டு வயசு! கூட இருக்குற பொண்டுவ பூரா அவன 'ஏண்டா இன்னம் கல்யாணம் பண்ணல?'ன்னு கேட்டு தொளச்சி எடுத்துட்டாளுவ. இவனுஞ் சளைக்காம 'ஏங் கல்யாணம் பண்ணனும்?'னு எதிர்க்கேள்வி கேக்க, சும்மா உட்ருவாளுவளா பொண்டுவ?!

"எலே! கல்யாணம் கட்டுனாத்தாண்டா ஒன்னையும் ஊருல குடித்தனக்காரனா மதிப்பானுவ! ஒம்பொண்டாட்டிக்காரியோட அம்மாப்பா வெளையாட்டெல்லாம் வெளையாடலாம். அவ ஒனக்கு துணிமணி கசக்கி போடுவா. வெதவெதமா வாய்க்கு ருசியா சமச்சிப்போடுவா" அப்டீன்னு ஏத்தி உட்டாங்க பொண்டுவள்லாம்!

அவளுவ சொன்னதுல இவனுக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா மண்டையில ஏறினிச்சி! "பொண்டாட்டி வெதவெதமா சமச்சிப்போடுவா!" எவ்ளோநாளுதான் அம்மாக்காரி வெக்கிற புளிக்கொழம்ப மட்டும் தின்னுட்டு கெடக்கிறது! அம்மாக்காரிய போட்டு நச்சரிக்க ஆரமிச்சான் மாரிக்கண்ணு.

அம்மாவும் புள்ளயும் பொண்ணுதேட ஆரம்பிச்சாவ. கிறுக்குபயளுக்கு எவம் பொண்ணு குடுப்பான்? ரெண்டு பேரும் ஊரெல்லாஞ்சுத்தி, ஒடம்பெல்லாம் வத்தி கடேசியா கண்டுபுடிச்சாங்கய்யா ஒரு பொண்ண. வசதிவாய்ப்புக்கு வழி இல்லன்னாலும் பொண்ணு புது வெங்கலக்கொடமாட்டம் நல்லா அம்சமா அமஞ்சா.

மாரிக்கண்ணும் ஒருவழியா கல்யாணம் கட்டி குடும்பம் நடத்த ஆரமிச்சான். கொஞ்சங்கொஞ்சமா கிறுக்குத்தனமெல்லாங் கொறஞ்சிட்டு. ஊட்டுக்கு வந்த மவராசியும் கட்டுசெட்டா குடும்பத்த நடத்துனா. ஊருல அவனவன் நாக்கு செத்துப்போயிக் கெடக்க மாரிக்கண்ணு ஊட்டுல மட்டும் தெனத்துக்கும் மீனுங்கருவாடுமா மணக்க ஆரமிச்சது.

அந்த சமயத்துலதான் ஒருநா மாரிக்கண்ணு கைக்காரியமா சந்தக்கி போனான். சந்த நடக்குறது மாமியா ஊரு. ஊட்டுக்கு வந்த மாப்பிளைய நல்லா கவனிக்கனுமேன்னு மாமியாக்காரியும் வெதவெதமா பலகாரம் பண்ணி விருந்து வெச்சா. அதுல ஒரு பலகாரம்தாம்யா கொழுக்கட்ட. கொழுக்கட்ட ருசியில பய கிறுகிறுத்துப்போயிட்டான். ரொம்பவும் தின்னா மாமியா ஊட்டுல மரியாதை போயிருமே! நாக்க அடக்கிக்கிட்டு "போயிட்டு வாரேனத்த" சொல்லிட்டு கெளம்புனவன் கொழுக்கட்ட பேர மறக்காம கேட்டுக்கிட்டான் மாமியாகிட்ட. வார வழி முச்சூடும் 'கொழுக்கட்ட, கொழுக்கட்ட'ன்னு மந்திரிச்சி உட்ட கோழியாட்டம் முணுமுணுத்துக்கிட்டே வந்தான். பேரு மறந்துட்டா சிக்கலாயிடுமே!

ஊட்டுக்குப்போனவொடனெ பொண்டாட்டிய கொழுக்கட்ட பண்ணச்சொல்லி திங்கணும்னு பய குறுக்குவழியப்புடிச்சி நடக்க ஆரமிச்சான்.வார வழியில ஆறடி அகலத்துல வாய்க்க ஒண்ணு குறுக்கால ஓடினிச்சி. எப்பிடிடா தாண்டுறதுன்னு பய பேமுழி முழிச்சிட்டு இருந்தப்ப பின்னாடி வந்த ஒருத்தன் வாய்க்கால பாத்துட்டு அப்பிடியே ரெண்டடி மறுபடியும் பின்னுக்குப் போயி தம்கட்டி அப்டியே வேகமா ஓடியாந்து " ஏ!அத்திரிபாச்சா ஐலசா"ன்னு கத்திகிட்டே ஒரே தாவு. வாய்க்கால தாண்டிட்டான்.

'அட இது நல்ல ஐடியாவா இருக்கே!'ன்னு யோசிச்ச நம்மாளும் அப்பிடியே தாவுனான் 'அத்திரிபாச்சா ஐலசா' சொல்லிகிட்டே! தாவுனவன் 'கொழுக்கட்ட'ய மறந்துட்டான்.

ஊடுபோயி சேந்ததுமே பொண்டாட்டியக் கூப்புட்டு "அடியேய்! எனக்கு ஒடனே அத்திரிபாச்சா ஐலசா பண்ணிக்குடுடின்னு கேக்க அவ என்னடாது.. இதுவரைக்கும் கேள்விப்படாத அயிட்டமா இருக்கேன்னு யோசிச்சிட்டே அப்பிடி ஒண்ணு இல்லீங்கன்னு சொன்னா. இவனும் இதம்பதமா சொல்லிப்பாத்தான். அவ கொழம்பிப்போயி "அதெல்லாம் எனக்கு பண்ணத் தெரியாது...போய்யா"ன்னுட்டா. இவன் கடுப்பாயி பக்கத்துல கெடந்த கம்ப எடுத்து பொண்டாட்டிய உரி உரின்னு உரிச்சிட்டான்.

அந்த நேரம் பாத்து உள்ளவந்த பக்கத்து ஊட்டு பொம்பள "ஏய்யா! உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு... இவள போட்டு இந்த அடி அடிக்கிறே"ன்னு கேக்க இவனும் நடந்த கதெய வெலாவரியா சொல்ல, "அடப்பாவி மனுசா! சாப்புடுற விசயத்துக்காய்யா இந்த அடி அடிப்ப... பாருய்யா! இவ ஒடம்பு பூரா எப்பிடி வீங்கி இருக்கு பாரு... கொழுக்கட்ட கொழுக்கட்ட மாரி"ன்னா.

மாரிக்கண்ணு அப்டியே எம்பி ஒரு குதி குதிச்சி சொன்னானாம் "ஆங்! அதேதாங்க்கா! அதேதான் எனக்கும் வேணும்"னு

16 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

கொழுக்கட்டை கதை நவராத்திரி ஸ்பெசலா ..? பிரமாதம் ...

Anbu சொன்னது…

ஜி, ரொம்ம்ப பழய கதை இருந்தலும் ரொம்ப நாள் கழித்து படிக்கும் போது நல்லா இருக்கு. ஆமாம் இத எதுக்கு சொன்னிங்க. கே.ஆர்.பி.செந்தில் அய்யா சொன்ன மாதிரி நவராத்திரி ஸ்பெசலா ..?

மதுரை சரவணன் சொன்னது…

s i heard it form my grandma. thanks for sharing.

ஜோதிஜி சொன்னது…

ம்ம்ம் பெருந்தலைகள் லைக்கி பகிர ஆரம்பித்து விட்டார்கள். ஆத்ததததததததா எங்க ராசா பிரபல்யம் ஆயிட்டாருருருருருருருருருருரு

படம் அட்டகாசம். அப்புறம் எழுத்து? மேலே உள்ள வரிகள்.......

ஜோதிஜி சொன்னது…

இன்னும் ஊருக்கு கௌம்பாம என்ன இது அக்கிரமம். வேனும்ன்னா நம்ம ஆற்காட்டு ஐயாவுக்கு ஒரு கடுதாசி தரட்டா.......

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

அத்திரபாட்சா கொழுக்கட்டைன்னு எங்க ஊருல நிறைய தடவ சொல்லியிருக்காங்க, நான் ஏதோ அதத்த்றாங்க போல இருக்கு அப்படின்னு நிணைச்சிக்கிட்டு இருப்பேன். இப்பதான் உண்மை தெரியுது. தெளிவாக சொல்லி புரிய வச்சதுக்கு நன்றிகள் விந்தை மனிதா

vinthaimanithan சொன்னது…

//இன்னும் ஊருக்கு கௌம்பாம என்ன இது அக்கிரமம். வேனும்ன்னா நம்ம ஆற்காட்டு ஐயாவுக்கு ஒரு கடுதாசி தரட்டா....... //

எங்க ஜோதிஜி! "நாம ரயில்ல ஏறினா நம்ம கெரகம் எஞ்சின்ல ஏறி போவுது"ன்னு என்னோட கிராமத்து நண்பன் ஒருத்தன் அடிக்கடி சொல்லுவான்...(அவன் இன்னொரு சொலவடையும் சொல்லுவான்... சொன்னா என்னை ஆளாளுக்கு வெளக்கமாத்தாலயே போடுவாங்க!) ஹ்ஹ்ம்ம்ம்.... திங்க கெழம மத்தியானத்துக்கு மேலதான் கெளம்ப முடியும்போல! ஆனா திங்க கெழம எதிர்பாக்குற விஷயம் கைக்கு வந்துடும்... என்ன பண்ணலாம்னு ஒரு யோசன சொல்லுங்களேன்!

vinthaimanithan சொன்னது…

//ம்ம்ம் பெருந்தலைகள் லைக்கி பகிர ஆரம்பித்து விட்டார்கள். ஆத்ததததததததா எங்க ராசா பிரபல்யம் ஆயிட்டாருருருருருருருருருருரு//

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!

ஏய்! நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான்!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

பழைய கதையா இருந்தாலும் இப்ப கேக்குறதுக்கு நல்லாருக்கு..

நேசமித்ரன் சொன்னது…

நல்லா இருக்கு

Bibiliobibuli சொன்னது…

//பொண்டுவளுக்கு கிண்டல் பண்ணி பொழுதுபோக்க ஒரு ஆம்பிளைப்பய அசடனா வந்து மாட்டிக்கிட்டா கேக்கவா வேணும்!//

அப்பிடிங்களா? :)

கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. ரவுடியானதிற்கு வாழ்த்துக்கள்.

எஸ்.கே சொன்னது…

அருமை!

Unknown சொன்னது…

நடை நல்லாருக்குங்க... வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

என்னடா தலைப்பே ஒருமாதிரி இருக்குன்னு உள்ளவந்த மேட்டர் இதுதாதானா? அருமை,கிராமத்து மொழி நடை இன்னும் சிறப்பாக இருந்தால் இதைவிட நன்றாக இருக்கும் என்ற உணர்வு எனக்கு.

ஜெயந்தி சொன்னது…

சின்ன வயசுல கேட்ட கதை. திரும்பவும் படித்தது மகிழ்ச்சியளித்தது.

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்குங்கோ

Related Posts with Thumbnails