வியாழன், 14 ஏப்ரல், 2011

களங்களை இழக்கலாம்; யுத்தத்தை அல்ல!



ஒருவழியாக முடிந்தேவிட்டது பதினான்காவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள். இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும் நம்மை ஆளப்போவது நரிகளா இல்லை ஓநாய்களா என்று தெரிந்துகொள்ள! இந்த சட்டப்பேரவைத்தேர்தலின் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் சரி. அடுத்த ஐந்தாண்டுகளில் உண்மையான இன உணர்வும், மொழிப்பற்றும் கொண்டவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய ஒரு கண்ணோட்டம் :

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்று ஒரு பழமொழி உண்டு. தமிழுணர்வாளர்கள் பல்வேறு திசைகளில் சிதறிக்கிடப்பதை துரோகிகளும் எதிரிகளும் தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டனர். அனைத்துத் தமிழுணர்வாளர்களாலும் மதிக்கப்படும் தலைவரான வைகோ இந்தத் தேர்தல் களத்தில் அப்புறப்படுத்தப்பட்டார். ஈழச்சொந்தங்களை அரவணைத்திருக்கவேண்டிய திமுக கட்சி இன்று இனவுணர்வு, சுயமரியாதை எல்லாம் இழந்து எந்த காங்கிரஸை வேரறுக்க அந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ அந்த காங்கிரஸின் பாதாரவிந்தங்களே சரணம் என்று சரணடைந்துவிட்டது. பாலிவினைல் போர்டுகளின் புகைப்படங்களில் மட்டுமே மீசை முறுக்கித்திரியும் திருமாவளவனும் திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸின் முகாமுக்குள் அடைக்கலமாகிவிட்டார்.

பார்ப்பனத்தாரகை ஜெயலலிதா சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் திடீர் 'ஈழத்தாயாக' அவதரித்துப் பார்த்தார். அந்தத் தேர்தலுக்குப்பின் அந்த அவதாரம் பல்லிளித்துப்போனது. ஆனாலும் துரோகிகளை ஒழித்துக்கட்டினால் எதிரிகளுக்கு முகம் கொடுப்பது எளிதாக இருக்கும் என்ற வியூகத்தில் ஒரு பகுதி தமிழுணர்வாளர்கள் இந்தத் தேர்தலிலும் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். "பிரபாகரனைத் தூக்கில் போடு" என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயாவை ஆதரிப்பதுதானா தமிழுணர்வு என்று எதிர்த்தரப்பு கேலிபேசத் தொடங்கியது. தாங்கவியலா மனவலியுடனேயே தமிழுணர்வாளர்கள் திமுகவை வீழ்த்தும் ஆயுதம் ஜெயாதான் என்ற யதார்த்தக்கசப்பை விழுங்கிக்கொண்டு களத்தில் நின்றனர்.

ஆகக்கூடி தேர்தல் தேர் தெருவெல்லாம் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தேவிட்டது. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இனி வழக்கம்போலவே பழைய காட்சிகள் புத்தம்புது ஈஸ்ட்மென் கலரில் மீண்டும் அரங்கேற்றம் செய்யப்படும். மீனவர்கொலைகளும், தமிழர்களின் வாழ்வியல் சூறையாடப்படுதலும் சிந்துபாத்தின் கன்னித்தீவுக்குப் போட்டியாக தினம்தினம் தொடரும். ஆள்வோரின் 'அலகிலாத் திருவிளையாடல்களில்' நாளொரு ஊழலும், பொழுதொரு லஞ்சலாவண்யமும் நடந்தேறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இந்தத் தேர்தலில் தமிழுணர்வு, இனப்பற்று இவற்றை முன்னிறுத்திப் போராடிய தமிழுணர்வாளர்களுடைய பணி இனிதான் துவங்குகின்றது. கலை, பண்பாடு, அன்றாட வாழ்வியல் என எல்லாவகைகளிலும் நம்மைச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் கும்பலுக்கு ஒரு முடிவுரை எழுதும் பணி!

மறுமலர்ச்சி திமுகவானாலும் சரி, 'நாம் தமிழர்' இயக்கமானாலும் சரி, நெடுமாறன், தியாகு, தாமரை, பெரியார் தி.க, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சி, மே பதினேழு இயக்கம் என்று பல்வேறு பெயர்களில் பல்வேறு திசைகளில் பயணப்படும் தமிழுணர்வாளர்கள் இப்போதுமுதல் ஒருங்கிணைக்கப்படவேண்டும்.

இவர்கள் ஒவ்வொரு இயக்கத்தின் கொள்கைகளும், வழிமுறைகளும் முரண்படலாம். தேர்தல் அரசியலில் ஈடுபடும் இயக்கமாக ஒன்று இருக்கும்; தேர்தல் மறுப்பு அரசியல் செய்யும் இயக்கமாக ஒன்று இருக்கும்; பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புரை செய்வதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமாக ஒன்று இருக்கும்; மார்க்சிய அரசியலைப் பேசுவதாக ஒன்று இருக்கும்; பெரியாரையும், மார்க்சையும் இணைத்துச் செயல்படும் இயக்கம் ஒன்று இருக்கும்; இன அழித்தொழிப்புக்கு ஆளான ஈழச் சொந்தங்களின் இழிநிலைக்கு நியாயம் கேட்பதாக ஒன்று இருக்கும்!

ஆறுகள் பிறக்கும் இடமும், நிலமெல்லாம் செழிக்கச்செய்து பயணப்படும் பாதைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் ஒன்று சேர்வது ஒரே கடல்தான். இயக்கங்களின் கொள்கைகளும், நடைமுறைகளும், போராட்டமுறைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இவர்களின் முதலும் முக்கியமுமானதான இலக்கு தமிழர் வாழ்வு, தமிழர் நலன் என்பதாகவே இருக்கின்றது. ஆனால் நெல்லிக்காய் மூட்டையாக சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழுணர்வாளர்களும் ஒரு கூட்டமைப்பின்கீழ இணையவேண்டும். ஒரு இயக்கம் இன்னொன்றுக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லை. ஆனால் பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயல்திட்டம் அமைத்துச் செயல்படவேண்டும்.

இன்றைய நாடாளுமன்ற சனநாயக அரசியலில் தேர்தலின்மூலம் அதிகாரத்துக்கு வருவது என்பது தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது. மக்களின் அங்கீகாரத்துக்கு அதுவே சிறந்த மற்றும் ஒரே வழியாக இருக்கின்றது. எனவே அனைத்துத் தமிழுணர்வாளர்களின் கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் யாராலும் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கவேண்டும்.

தமிழினத்தின்மேல் காலங்காலமாகத் தொடுக்கப்பட்டுவரும் பண்பாட்டு அழிப்புத் தாக்குதலை, இப்போது பார்ப்பனீயத்தோடு சேர்ந்து உலகமயமாக்கலும், ஏகாதிபத்தியங்களும் மிகத்தீவிரமான அளவில் செய்து வருகின்றன. எதிரிகளின் ஒருங்கிணைவு வலுவாக இருக்கின்றது. அதற்கெதிரான விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழனிடமும் ஏற்படுத்தவேண்டும். எமது கலைகளும், வாழ்வியலும், குன்றாத பண்பாட்டுவளங்களும் மீட்டெடுக்கப்பட்டு செழுமைப்படுத்தப்பட வேண்டும்.

நாள்தோறும் நம்முன்னே நிற்கின்றன புதிய புதிய போராட்டங்கள்! எதிர்கொள்ளும் வலிமையும், நட்புச் சக்திகளுடனான ஒருங்கிணைப்பும் இல்லாவிட்டால் நாம் இனிவரப்போகும் காலங்களிலும் 'புல்லுக்கு மட்டுமே நீர்பாய்ச்ச' வேண்டிய பரிதாபகரமான நிலையில் இருப்போம்.

தோழர்களே! இந்தத்தேர்தலில் தமிழுணர்வாளர்களின் போராட்டம் விழலுக்கிறைத்த நீரென மாறலாம்! வெற்றியின் பலன்களை வீணர்கள் ருசிக்கலாம்! ஆனால்...

இரண்டாம் உலகப்போரின்போது வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன வாசகத்தை நான் நினைவுபடுத்துகிறேன்...

"நாம் களங்களை இழக்கலாம்! யுத்தத்தை அல்ல!"

11 பேரு கிடா வெட்டுறாங்க:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

////
இரண்டாம் உலகப்போரின்போது வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன வாசகத்தை நான் நினைவுபடுத்துகிறேன்...

"நாம் களங்களை இழக்கலாம்! யுத்தத்தை அல்ல!"///

போர்களம் களம் மாறலாம்..
போர்கள்தான் மாறுமா..?

rajamelaiyur சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள்
புத்தாண்டு வாழ்த்துகள்

Unknown சொன்னது…

தமிழகத்தில் ஜன நாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு பண நாயகம் தலைவிரித்தாடிய இந்த தேர்தல் தமிழனின் தன்மான உணர்வை குழிதோண்டி புதைத்தும் விட்டது.

தன்னை தமிழர்களின் ஒட்டு மொத்த தலைவனாக அடையாளப்படுத்த முயற்சிக்கும் கருணாநிதி தலைமையிலான கட்சியும்,

ஈழப்போரில் பின்புலமாக இருந்து தோள்கொடுத்த எம்.ஜி.ஆரின் கட்சியை கைப்பற்றி தமிழனுக்கு எதிராக எப்பொதும் குரல் கொடுக்கும் ஜெயலலிதா கட்சியும்,

இல்லாத ஒரு மாற்று சக்தியை உருவாக்குவோம்..

ஜோதிஜி சொன்னது…

மும்மையில் ஒரு பீகாரி தாக்கப்பட்டு விட்டான் என்றவுடன் நிதிஷ் குமார் மற்றும் லல்லு இருவரும் உருவாக்கிய ஆர்ப்பாட்டம்.

உடனடியாக மத்திய அரசு திரும்பி பார்த்தது.

சீக்கியர்களின் போராட்டம்......... ஜெகதிஷ் டைட்லர் பட்ட பாடுகள்.

இந்திரா காந்தி இறந்த போது சீக்கியர்கள் அடைந்த துன்பங்கள்........

மன்மோகன் சிங், சோனியா இருவரும் பொற்கோவிலுக்குள் சென்று கேட்ட மன்னிப்பு.

ஆஸ்திரேலியாவில் படிக்கும் வடக்கத்திய மாணவர்கள் தாக்கப்பட்டவுடன் நம்ம மோடி உருவாக்கிய.....................

இதில் எழுதப்பட்ட வாசகங்கள் கோர்வையில்லாமல் இருக்கலாம்.
காரணம் தமிழர்களுக்கு மேடைப்பேச்சில் மட்டுமே கோர்வை பிடிக்கும், வார்த்தை ஜாலம் பிடிக்கும், இலவசம் பிடிக்கும், கவர்ச்சி பிடிக்கும்.. சிவப்பு தோலுடா என்ற நிறம் பிடிக்கும். இதற்கு மேலாக திரைப்பட மயக்கம் ரொம்பவே பிடிக்கும்.

பிடிக்காத ஒன்று. இனம்,மொழி போன்ற வார்த்தைகள் பிடிக்காது. ஒரு வேளை இது பற்றி பேசினால் நக்கல் செய்ய பலருக்கும் பிடிக்கும்.

sathyakumar சொன்னது…

விந்தை மனிதா உம்மை கண்டு வியக்கிறேன் ........என் மனதில் உள்ளதை எப்படி நீ படித்து எழுதினாய்? இதுதான் ஒரே அலைவரிசை (2g அல்ல) என்பதோ... எல்லா தமிழ் உணர்வாளர்களும் ஒன்றாக வேண்டும்! முதலில் நாம் ஒன்றாவோம் அறிமுகமவோம் ........மிக்க மகிழ்ச்சி ....வாழ்த்துக்கள் .....சத்திய குமார் ருவாண்டா .

sathyakumar சொன்னது…

""தமிழுணர்வு, இனப்பற்று இவற்றை முன்னிறுத்திப் போராடிய தமிழுணர்வாளர்களுடைய பணி இனிதான் துவங்குகின்றது. கலை, பண்பாடு, அன்றாட வாழ்வியல் என எல்லாவகைகளிலும் நம்மைச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் கும்பலுக்கு ஒரு முடிவுரை எழுதும் பணி!

மறுமலர்ச்சி திமுகவானாலும் சரி, 'நாம் தமிழர்' இயக்கமானாலும் சரி, நெடுமாறன், தியாகு, தாமரை, பெரியார் தி.க, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சி, மே பதினேழு இயக்கம் என்று பல்வேறு பெயர்களில் பல்வேறு திசைகளில் பயணப்படும் தமிழுணர்வாளர்கள் இப்போதுமுதல் ஒருங்கிணைக்கப்படவேண்டும்.

இவர்கள் ஒவ்வொரு இயக்கத்தின் கொள்கைகளும், வழிமுறைகளும் முரண்படலாம். தேர்தல் அரசியலில் ஈடுபடும் இயக்கமாக ஒன்று இருக்கும்; தேர்தல் மறுப்பு அரசியல் செய்யும் இயக்கமாக ஒன்று இருக்கும்; பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புரை செய்வதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமாக ஒன்று இருக்கும்; மார்க்சிய அரசியலைப் பேசுவதாக ஒன்று இருக்கும்; பெரியாரையும், மார்க்சையும் இணைத்துச் செயல்படும் இயக்கம் ஒன்று இருக்கும்; இன அழித்தொழிப்புக்கு ஆளான ஈழச் சொந்தங்களின் இழிநிலைக்கு நியாயம் கேட்பதாக ஒன்று இருக்கும்!

ஆறுகள் பிறக்கும் இடமும், நிலமெல்லாம் செழிக்கச்செய்து பயணப்படும் பாதைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் ஒன்று சேர்வது ஒரே கடல்தான். இயக்கங்களின் கொள்கைகளும், நடைமுறைகளும், போராட்டமுறைகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இவர்களின் முதலும் முக்கியமுமானதான இலக்கு தமிழர் வாழ்வு, தமிழர் நலன் என்பதாகவே இருக்கின்றது""

விந்தை மனிதா உம்மை கண்டு வியக்கிறேன் ........என் மனதில் உள்ளதை எப்படி நீ படித்து எழுதினாய்? இதுதான் ஒரே அலைவரிசை (2g அல்ல) என்பதோ... எல்லா தமிழ் உணர்வாளர்களும் ஒன்றாக வேண்டும்! முதலில் நாம் ஒன்றாவோம் அறிமுகமவோம் ........மிக்க மகிழ்ச்சி ....வாழ்த்துக்கள் .....சத்திய குமார் ருவாண்டா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"நாம் களங்களை இழக்கலாம்! யுத்தத்தை அல்ல!"
யுத்தங்கள் ஓய்வதில்லை.
த்மிழ்ப் புத்தண்டு வாழ்த்துக்கள்.

Bibiliobibuli சொன்னது…

ராஜாராமன், களம் சரி.... முதலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் விழ்ப்புணர்வு வந்தாலே போதாதா. ஒரு காங்கிரசை வீழ்த்தவே ஊரூராக சீமான் தொண்டை வத்திப்போக பேசவேண்டியிருக்கு.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

அருமையான கட்டுரை.

CEN Mark சொன்னது…

தமிழ் நாட்டில் இயக்கங்கள் பல, பல கருத்துருவில் இயங்கினாலும் அவற்றை ஒருங்கே, ஒரு அலைவரிசையில் கொண்டு வருவது சற்று சிரமமான காரியம். தமிழன், தமிழ் இனம் என்று கூறிக்கொள்ளும் அவர்கள், மறைமுகமாக சாதியை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இவர்கள் கையில் அதிகாரம் போய்சேர்ந்தால், சுதந்திரத்திற்குப பிறகு இஸ்லாம் மதத்தினருக்கு நேர்ந்த கதிதான் சாத்திய ஆதிக்கம் இல்லாதவர்க்கு ஏற்படும்.

திரு கருணாநிதியின் ஆதிக்கம் ஊழல் நிறைந்ததா அல்லவா என்பது இப்போதைய பிரச்சினை அல்ல. இன்றைய சூழலில் அதிகாரத்தை முன்னெடுத்து செல்ல அவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
முதலில் நாம் இணைவோம். பின்னர் இருக்கும் அதிகாரத்தை மாற்றவோ, கருத்தொற்றுமையை ஏற்க செய்வதையோ பற்றி சிந்திக்கலாம்.

சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்க நடவடிக்கைகள், ஆக்கபோர்வமாக அமைய எனது வாழ்த்துகள்.

க.நா.

CEN Mark சொன்னது…

தமிழன் என்ற இன அடையாளத்தால் மட்டும் நாம் பெருமை படவோ ஒன்றிணையவோ முடியாது. முதலில் நம்மிடையே நம்மை வளப்படுதுவதர்க்கான நீண்ட கால திட்டங்கள் தேவை. சும்மா அரசியல் வாதிகளை பொது கூட்டத்தில் வசை பாடுவதாலோ, தரக்குறைவாக விமர்சிப்பதாலோ எதிர் விளைவுகள் அல்லது இயக்கப்பின்னடைவுகள் தான் ஏற்படும்.
1 நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாய் இருக்கிறோம். முதலில்
அதிலிருந்து விடுபட வேண்டும்.
2 . சமுக பணியாற்ற தாமாக முன்வர வேண்டும்.
3 . சமுக பாதுகாப்பிற்கு சட்ட வரையறுக்குள் நின்று, போராட, இயங்க
வேண்டும்.
4 . இயக்க நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடம் கையேந்துவதையோ,
முறையற்ற வழிகளை பின்பற்றுவதையோ முதலில் நிறுத்த
வேண்டும்.
5 . ஒரு செயலின் விளைவு தவறாகிப்போனால், தார்மிக பொறுப்பை
அடுத்தவர் மீது சுமத்தாமல் சம்பத்தப்பட்டவர்கள் தட்டிக்கழிக்காமல்
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
6 . தலைமை என்பது உயர்ந்த பொறுப்பு, அது வழி நடத்தவும்,
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவும்தான் என்பதை உணரவேண்டும்.
7 . சிதறிக் கிடக்கும் குழுக்களை ஒன்றிணைக்கவும், ஒருமித்த
கருத்துக்களை தொடர்ந்து பரிமாறிக்கொள்ளவும் முயலவேண்டும்
8 . தமிழ் மொழி வளர்ச்சி, இன மேம்பாடு, சாதி அழித்தல்,
பொருளாதார சமுத்துவம், அனைவருக்கும் கல்வி,வேலை வாய்ப்பு,
உழைப்பவனுக்கே புகலிடம்.

(தொடரும்)

Related Posts with Thumbnails