சனி, 25 டிசம்பர், 2010

காற்றைக்குடிக்கும் தாவரமாகிக் காலம் கழிப்போமோ...?

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்
            - தமிழ்விடுதூது
முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் பேற்றியனாய் பேறு பெற்ற தமிழினத்தின் சிறுதுளியாய் காலக்கடலில் மிதந்துவந்த நான் பதிவுலகம் என்ற மெய்நிகர் உலகின் சிற்றுறுப்பாய் உலவத் துவங்கி ஓராண்டும் ஒரு திங்களும் முடிந்த தருணத்தில் எனது நூறாவது பதிவை எழுதத் துவங்கி இருக்கிறேன். மனம் ததும்பிக் கொண்டிருக்கின்றது! மறுபுறம் விசித்துக்கொண்டும்...

ஏனோ சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், நெகிழ்ந்துகொள்ளவும்...

2008 ஆம் ஆண்டின் ஜூன் மாதவாக்கில்தான் நான் தமிழ் வலைப்பக்கங்களைத் தேடிப்படிக்கத் தொடங்கினேன்... ஈழம் தொடர்பான செய்திகளைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கு இலத்தினரியல் ஊடகங்கள் வரப்பிரசாதமாக இருந்தன. தமிழ் இணையப்பக்கங்களின் தொடர்ச்சியாய் வலைப்பூக்களும் அறிமுகமாயின. வலைப்பூக்களில் எனக்கு முதல் அறிமுகம் கேபிள்சங்கருடையதும், யுவகிருஷ்ணாவினுடையதும்... பிறிதொருநாள் பெரியார் பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது கூகிளில் 'ராமசாமி' என்று உள்ளிட்டுத் தேடிக் கொண்டிருந்தபோது வந்து விழுந்தவற்றுள் 'ராமசாமி அத்தியாய'மும் ஒன்று. "என்னடா இது? வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என்று போய்ப்பார்த்தேன். அதனைப் படித்தபோது என் கிராமத்துப் பெரிசு ஒன்று வேப்பமரநிழலில் உட்கார்ந்து ஆற அமர வாழ்வை அசைபோட்டு நிதானமாகக் கதைசொல்லிக் கேட்பதுபோன்ற உணர்வு உண்டானது. ஏனோ மனதுக்கு நெருக்கமாய் உணர்ந்தேன். யார் இவர் எனப் பார்த்தபோது கேஆர்பி செந்தில் என்றிருந்தது. இடம் தி.நகராம்! "அட! நம்ம ஏரியா!" என்றெண்ணியபடி ஒரு மெயிலைத் தட்டினேன்.

வாழ்க்கையில் சில உறவுகள் பூக்கின்ற விநாடிகள் அவை நிகழும்போது மிகவும் இயல்பாக, எதேச்சையாக எந்த தனித்தன்மையையும் வெளிக்காட்டாமல் நிகழும். அவை தனக்குள் வாழ்வின் புதிய சில கதவுகளை, பாதையின் திறப்புகளைத் தாங்கியபடி ஆலமர விதையினைப் போன்று சாதாரணமாக நம்மைக் கடந்துசெல்லும். முதன்முதலில் நான் அவரிடம் "நான் உங்களை அண்ணான்னு கூப்பிடலாமா?" என்று கேட்டபோது அஸ்வினிதேவர்கள் ததாஸ்து என்று சொல்லியது எனது காதுகளில் விழவில்லை...

அந்த நேரத்தில் நவம்பர் மாதத்தில்தான் நான் எனது வலைப்பூவைத் தொடங்கி இருந்தேன். நானும் வலைப்பதிவன் என்று தெரிந்தபின் நெருக்கம் கூடுதலானது. பின் எனது வலைப்பூவுக்கு மிகப்பெரிய க்ரியா ஊக்கி அவர்தான்.

அடுத்தடுத்து கேபிள்சங்கர், மணிஜி, வினவு தோழர்கள், அப்துல்லா அண்ணன், ஜோதிஜி, தேவா, நேசமித்திரன், ரதியக்கா, வழக்கறிஞர் சாமித்துரை, குழலி, பாலபாரதி என்று நட்புக்கள் மொட்டுவிரிய மெல்லமெல்ல மணம்பரப்பத் தொடங்கியது என் வலைப்பூ. ஆரம்பகாலத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருந்த நான் கொஞ்சங்கொஞ்சமாக எனது வலைப்பூவுக்கென ஒரு வடிவத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். இமையோரம் துளிர்க்கும் ஈரம் என் இந்த நண்பர்களுக்காக...

என்றாவது ஒருநாள் என எழுதிக் கொண்டிருந்த என்னை எதிர்மறையில் தூண்டி அநேகமாக தினம் ஒரு பதிவு எழுதும் வீரியத்தை எனக்குத் தந்து பிரிந்த என் கண்மணிக்கும்...

இலக்கேதும் இன்றி இந்தப் பதிவுலகத்துக்கு வந்தேன். இப்போது எனக்கென சில நோக்கங்களை மையப்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது... பதிவுலகம் பல சமயங்களில் எரிச்சலையும், சலிப்பையும் தந்தாலும்கூட இது ஒரு கட்டற்ற, தனிமனிதனின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும், அதிகாரத் தூண்களுக்கு எதிரான புரட்சிகரக் கூறுகளைக் கொண்டே பயணிக்கிறது. இங்கு நானும் சில விதைகளைத்தூவிச் செல்லலாம். காலவெள்ளத்தில் எதிர்நீந்தி நிற்கும் சில நினைவுகளை ஆவணப்படுத்திப் போகலாம்.வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைப் போலவும், கைப்பேசிகளைப் போலவும், கணிணியும் இணையமும் முழுக்க முழுக்கப் பரவலாகும்போது இணையத்தின், வலைப்பூக்களின் பலம் கற்பனையை விஞ்சிநிற்கும் என்பது வெறும் கணிப்பல்ல!

இணையத்தில் கிடைக்கும் தமிழ்நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும், இலக்கியப் புதையல்களும் என்னை மலைக்கவைக்கின்றன. இதழியலாளர் பாலபாரதியிடம் ஒருநாள் ஒரு சங்கப்பாடல்பற்றிக் கேட்டபோது அவர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கத்தையும், இன்னும் மதுரைத்திட்டம் போன்ற பக்கங்களையும் அறிமுகம் செய்வித்தார்.இன்னும் இன்னும் இணையத்தில் தமிழ் தனது எல்லைகளை விரித்துக்கொண்டே செல்கிறது.

இதோ நூறைத் தொட்டுவிட்டேன்... ஆனால் எனை இணையத்தில் படிக்கவும் எழுதவும் தூண்டிய என் இனம் வீழ்ந்து கிடக்கிறது... லெமூரியா தொடங்கித் தனது வேர்களையும் விழுதுகளையும் உலகெங்கும் பரப்பி உலகின் தலைமக்களாய்த் திகழ்ந்திருக்கவேண்டிய ஓர் இனம் தனது விழிகளில் மாத்திரம் ஜீவனை நிரப்பியபடி வீழ்ந்து கிடக்கிறது. லட்சக்கணக்கான ரத்தசொந்தங்கள் ஜீவமரணப் போராட்டத்தில் இருக்க, இங்கு நெடுந்தொடர்களிலும், நீர்த்துப்போன அரசியலிலும், குத்தாட்ட சினிமாக்களிலும், கும்பி கழுவும் பொருளாதாரப் போராட்டத்திலும் மூழ்கித் தனது சுயநினைவிழந்து கிடக்கின்ற தமிழ்நாட்டுச் சமூகம்... தன்னை வழிநடத்த ஒரு மேய்ப்பனின்றி...

ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்கள் என்றும் மந்தைகளாகவே இருந்துவிடமாட்டார்கள். துளிகள் இணைந்து கங்கையெனப் பெருகும். அதன் வெள்ளத்தில் கசடுகள் அடித்துச் செல்லப்பட்டு என் இனம் எழுந்துநிற்கும். இணையத் தமிழில் இணைந்து மேலெழும் இச்சமூகத்தின் பயணத்தில் மெல்லமெல்ல எல்லாவகை மக்களும் இணைந்து சமுத்திரமாக விரியும். இந்தப் பொழுதில் எனக்கு வேறேதும் எழுதத் தோன்றவில்லை. என் இரவுகளில் என்னைக் கனக்கவும், கரைக்கவும் செய்யும் ஒரு பாடலை இங்கு இணைக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் நெஞ்சங்கள் சற்றே நிதானித்து இந்தப் பாடலைச் செவிமடுக்க வேண்டுகிறேன்.

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம்தின்னும் கிளியோ
பிணம்தின்னும் கழுகோ
தூதோ முன்வினைத் தீதோ
களங்களும் அதிரக் களிறுகள் பிளிற
சோழம் அழைத்துப் போவாயோ
தங்கமே என்னைத் தாய்மண்ணில் சேர்த்தால்
புரவிகள்போலேப் புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை அதுவரை....

தமிழர்காணும் துயரம் கண்டு
தலையைச் சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒருநாள் விடியும் என்றே
இரவைச் சுமக்கும் நாளே அழாதே
நூற்றாண்டுகளின் துருவைத் தாங்கி
உறையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே அழாதே!

20 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

//இணையத் தமிழில் இணைந்து மேலெழும் இச்சமூகத்தின் பயணத்தில் மெல்லமெல்ல எல்லாவகை மக்களும் இணைந்து சமுத்திரமாக விரியும்//
true!

pichaikaaran சொன்னது…

மனதை தொட்ட எழுத்து...

உங்களை போன்றோரை பார்க்கும்போது தமிழினம் குறித்த நம்பிக்கையும் , உற்சாகமும் பிறக்கிறது ..

மென்மேலும் எழுத , சாதிக்க வாழ்த்துக்கள்

Bibiliobibuli சொன்னது…

ம்ம்ம்ம்.... நூறைத்தொட்டதுக்கே இவ்ளோ உணர்ச்சி அலைகளா!!! இன்னும் நீங்கள் தொடவேண்டிய தூரம் நிறைய இருக்கு.

இந்தப்பாட்டு இது இடம்பெற்ற திரைப்படம் வெளிவரும் முன்பே இங்கே தமிழ் வானொலிகள் ஒலிக்கத்தொடங்கிவிட்டிருந்தன. ஆனால், ஒரேயொரு வருத்தம் யார் யாரோவின் கதைகளை படமாக்கும் தமிழ்த்திரையுலகம் சொந்த இனத்தின் அவலத்தை எப்போது இந்த உலகத்திற்கு சொல்லப்போகிறது.

உங்கள் கவிதை ஒன்றை கனேடிய தமிழ்வானொலி ஒன்றில் கேட்டேன். சந்தோசம்.

மேலும் வாழ, வளர வாழ்த்துக்கள்.

Anbu சொன்னது…

மென்மேலும் எழுத, வாழ, வளர, சாதிக்க வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே...

vasu balaji சொன்னது…

வாழ்த்துகள்

ஜோதிஜி சொன்னது…

உங்கள் கவிதை ஒன்றை கனேடிய தமிழ்வானொலி ஒன்றில் கேட்டேன். சந்தோசம்.

இது எப்ப ராசா? சொல்லவே இல்லையே?

ஜோதிஜி சொன்னது…

மனம் ததும்பிக் கொண்டிருக்கின்றது! மறுபுறம் விசித்துக்கொண்டும்...

இது போன்ற வார்த்தைகள் படிப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் நானும் இதுபோன்ற வார்த்தைகளை கோர்த்த போது பதிப்பக மக்கள் சொன்னது

யோவ் எழுதுவது மத்தவங்களுக்கு புரிய. உன் இலக்கியத்தை எல்லாம் எழுதி பரண் மேலே பத்திரமாக வைத்துக் கொள் என்றார்கள்.

ஜோதிஜி சொன்னது…

திரும்பவும் சொல்கின்றேன்.

வலைபதிவுகளின் உன்னைப் போன்று தமிழை தமிழாக நேசிப்புடன் வாசிக்க தகுந்த மாதிரி எழுதுபவர்கள் மிகக்குறைவு. உன்னுடைய ஆராய்ச்சி மனப்பான்மை, கருத்துக்களை எடுத்துக் கொடுக்கும் விதம் எப்போதும் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஆனால் அதை புரிந்த மாதிரி தெரியவில்லை.

அடிக்கடி ஈ மொய்க்கவில்லையே என்ற கவலை வந்து விடுகின்றது.

ரொம்பவே பெருமைப்படுகின்றேன். நூறு என்ற எண்ணிக்கைக்காக அல்ல. இது போன்ற எழுத்துக்களை கவிதைகளை என்னைப் படிக்க வைத்ததற்காக.

வாழ்த்துகள் என் தஙக ராசா.

ஆயிரம் பிறைகள் பார்க்க ............. வேண்டுகின்றேன்.

செந்தில் வந்து கோடிட்ட இடத்தை நிரப்புவார். இல்லாவிட்டால் ஸ்விஸ் கவிதாயினி வருகை தந்து வாழ்த்துரை தருவார்.

ரதி ராசாவின் கவிதையை ஒலிபரப்பிய கனடா வானொலி குறித்து இதில் தெரிவிக்கவும்.

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

என்னமோ போடா , நீயும் கடசியில ஒரு ----------

vinthaimanithan சொன்னது…

தமிழில் பின்னூட்டமிடும் வசதியை இணைத்திருக்கிறேன். சரியாக வேலைசெய்கின்றதா என்றுபார்க்க இந்த பின்னூட்டம்...

Bibiliobibuli சொன்னது…

Unicode Testing 1...2...3....:)))

ம்ம்ம்... வேலை செய்கிறது. முதலில் இதைத்தான் பாவித்துக்கொண்டிருந்தேன். இப்போ பாவிப்பதில்லை. அதனால் குறில், நெடில் அடிக்கும் போது கொஞ்சம் சிரமப்படுகிறேன்.பழ்கிவிடும் என்று நம்புகிறேன்.

நான் திரையை மட்டுமே பார்த்து தட்டச்சு செய்பவள். :)))

Unknown சொன்னது…

வாங்கி கொடுத்த சரக்கு சரியா வேலை செய்யுது...

Philosophy Prabhakaran சொன்னது…

நூறுக்கு எமது வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran சொன்னது…

தாய் தின்ற மானனே பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும் நண்பரே...

Philosophy Prabhakaran சொன்னது…

/* மண்ணே */

ஹேமா சொன்னது…

வாழ்த்துகள் விந்தையாரே.இன்னும் இன்னும் எழுதுங்கள்.இந்தப் பாடல் எப்போ கேட்டாலும் அப்படியே மனதை நிறுத்தி அழவைக்கும் !

பா.ராஜாராம் சொன்னது…

வாழ்த்துகள் மக்கா!

என்ன அருமையான தலைப்பு! மணிஜியிடம் பேசிக் கொண்டிருந்த போது உங்களை பற்றி தனியாக சிலாகித்தார். சும்மா ஆடுமா மணிஜி குடுமி! :-)

உணர்ந்தேன்!

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

உங்கள் கம்பீரம் தொடர வாழ்த்துக்கள்..

ரோஸ்விக் சொன்னது…

நான் ரசிக்கும் எழுத்துகள், பெரும்பாலும் ஆமோதிக்கும் கருத்துகள், சிறப்பான தமிழ், அன்பான நட்பு எல்லாம் எனக்கு இங்கு கிடைக்கிறது. தொடரட்டும். இன்னும் சிறக்கட்டும்.

இலக்கியத்துல உங்க அளவுக்கெல்லாம் எனக்கு (ஆர்வம்)_____ இல்லை. :-))

Related Posts with Thumbnails