புதன், 1 டிசம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி! - பகுதி 3


உன் கனவில்
          பாம்பு
          துரத்துகிறது
          நீ
         ஓடுகிறாய்...

குறவன் கனவில்
         அவன்
         துரத்துகிறான்
         பாம்பு
         ஓடுகிறது...

வீரம்
         தொழிலாக்கு.

- காசி ஆனந்தன்

"நல்லாருக்கீங்களாண்ணே! ரொம்ப தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணி குடுங்க" என்றபடி என் அலுவலகத்தில் நுழைந்த அவன் பெயர் வேலவன். வயது சுமார் 19. என் கிராமத்தைச் சேர்ந்தவன். ஒருவகையில் உறவுமுறையுங்கூட.

"என்னடா வேலவா? நீ சென்னையிலயா இருக்க? இத்தன நாளு எனக்குத் தெரியாம போச்சே! என்னடா பண்ற இங்கிட்டு?"

"ஆமாண்ணே! இங்கனதான் ஒரு மெடிக்கல் ஷாப்புல வேலைக்குச் சேந்து ஆறு மாசமாச்சி.மாசம் ரெண்டாயிரம் சம்பளம், ரூமு கொடுக்குறானுவோ. நம்ம வக்கீலு பாரதிண்ணேதான் ஒங்க நம்பர் குடுத்து போயி பார்றான்னு சொன்னாரு. இதுல உங்களுக்கும் ஒரு காப்பி கொடுத்துட்டு போலாம்னு ஓடியாந்தேன்"

அப்போதுதான் அவன் கையில் இருந்த பார்சலைப் பார்த்தேன். பிரதியெடுக்கப்பட்டு சிறுநூல் வடிவில் இருந்த முத்துக்குமாரின் மரணசாசனம். அவனது சம்பளத்தில் கணிசமான அளவு செலவழித்து அவன் அந்தப் பிரதிகளை எடுத்து அவனுக்குத் தெரிந்த நண்பர்கள் ஒவ்வொருவரையும் தேடித்தேடிச் சென்று கொடுத்து வருகிறான். இத்தனைக்கும் அவனது குடும்பத்திற்கு அவனது வருமானம்தான் மிகப்பெரும் ஆதாரமாக இருந்தது. அதில் ஒரு பகுதியைச் செலவிட்டு... என் கண்கள் லேசாகக் கசிந்தன.

நான் பார்த்து வளர்ந்த வேலவனைப்பற்றி எனக்குள் இருந்த சித்திரம் கலையத் துவங்கியது. அவன் பேசி நான் பார்த்ததில்லை. அதிர்ந்துகூட நடக்கமாட்டான். ஏறக்குறைய அவன் ஒரு வாயுள்ள ஊமை என்றே அதுவரை நான் எண்ணி இருந்தேன். ஆனால் இன்று...?

ஈழத்தின் வரலாற்றில் இருந்து தமிழகத்தின் மொழிப்போர், இந்திய வரலாறு, ஏகாதிபத்திய அரசியல், உலக விடுதலைப்போராட்டங்கள் என அவன் அதிவேகத்தில் வீழும் அருவியாய் இருக்க நான் தாங்கும் பாறையானேன்.

அவன் பேசிக்கொண்டே இருந்ததை நான் ஆச்சர்யமாகப் பார்த்தேன். நான் பேசாதிருந்ததை அவன் ஆச்சர்யமாகப் பார்த்தான்.

ஏறத்தாழ ஊமையாய் இருந்த வேலவனை உலக விடுதலைப்போராட்டங்களின் வரலாற்றைப் பேசவைத்தது எது? ஈழம் !

பொறியியலும் இன்னபிற உயர்தொழில்நுட்பப் படிப்புக்களும் படித்த இளைஞர்களை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்களின் வீடுதேடிச்சென்று காலில் விழுந்து "காங்கிரஸுக்கும் சிதம்பரத்துக்கும் ஓட்டுப் போடாதீர்கள்" என்று மன்றாட வைத்தது எது? ஈழம்!

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்களை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கவைத்து அவர்களைக் கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்கும் நிலையை உருவாக்கியது எது? ஈழம்!

இன்னும்...இன்னும்... ஏராளமான தமிழக இளைஞர்கள் மனம் கொதித்து செய்வதறியாமல் "என்ன செய்யப்போகிறோம் எம் இனத்துக்கு?" என்று ஏங்கித் தவித்தனர். "உங்களுக்குக் கிடைத்த உன்னதத் தலைவன்போல எங்களுக்குக் கிடைக்கவில்லையே!" என்ற முத்துக்குமாரின் வரிகள்தான் அவர்களின் உள்ளக்குரலாய் இருந்தது. ஆம்! ஒரு உணர்ச்சிப்பூர்வமான பட்டாளத்தை வழிநடத்தவும், அதன் ஆற்றலை ஒருங்கிணைக்கவும் தமிழகத்தின் தலைவர்கள் தயாரில்லை. மாறாக வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த ஈழ உணர்வினைக் களப்பலியாக்கவே அவர்கள் விரும்பினர்.

காங்கிரஸை எதிர்க்கிறேன் என்ற பெயரில் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்!" என்ற அபத்தமான கோஷமும் எழுந்தது. இருபத்தைந்து வருட ஈழப்போராட்டத்தையும் விடுதலைப்போரில் வித்தாகிப்போன மாவீரர்களையும் இழிவுபடுத்தும் வண்ணம் "நான் ஜெயித்தால் ஈழம் அமைத்துத் தருவேன்" என்று வாய்ச்சவடால் அடித்த ஜெயலலிதாவைப் புலம்பெயர் சமூகம் கூட "ஈழத்தாய்" என்று புகழ்ந்தது. "போரென்றால் அப்பாவி மக்களும் சாகத்தான் செய்வார்கள்" என்று அம்மையார் உதிர்த்த முத்து, பாவம் 'செலக்டிவ் அம்னீஷியா' (வார்த்தை உபயம் நன்றி : ஜெயலலிதா) வால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்துக்கு மறந்துபோனது!

இந்த சமயத்தில் இந்திய அரசியலமைப்பைப் பற்றியும் சிலவார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மாநில அரசு என்பது ஏறத்தாழ கங்காணி வேலைக்கு ஒப்பானதுதான். அதைத்தவிர வேறு அதிகாரங்கள் ஒரு மாநில அரசுக்குக் கிடையாது. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளிலோ பாதுகாப்புத் தொடர்பான முடிவுகளிலோ ஒரு மாநிலக் கட்சி அல்லது மாநில அரசாங்கம் தலையிடுவதை ஒருபோதும் டெல்லிதர்பார் அனுமதித்ததில்லை. டெல்லிதர்பார் என்பது வெறுமனே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய அரசியல்கட்சிகளால் மட்டும் நடத்தப் படுவதில்லை. அது ஒரு சூதாட்டக்களம்! அங்கு மிகப்பெரும் முதலாளிகளும் அரசியல் தரகர்களும் கோலோச்சும் மாயதர்பார் அது! அதன் வெளியுறவு, நிதி, பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் அனைத்தும் இம்மாதிரியான முதலாளிகள் மற்றும் தரகர்களின் நலனையே முதன்மையாகக் கருதி எடுக்கப்படுகின்றன. இம்மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும்போது, கொள்கைகள் நிர்ணயிக்கப்படும்போது ஒரு மாநிலக் கட்சி அல்லது அரசின் அழுத்தம் என்பது கால்தூசுக்குக்கூட மதிக்கப்படாது.

எனவே வெறுமனே தி.மு.க வையும் கருணாநிதியையும் மட்டுமே குற்றம் சாட்டுவதென்பது குருடன் யானையைப் பார்த்த கதைக்கு ஒப்பானது. அவரது ஆட்சியை எப்போது கவிழ்க்கலாம் என்று சுற்றிலும் நிற்கின்ற ஒரு கூட்டம்... அதனிடம் இருந்து ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள அவர் எத்தகைய ஆட்காட்டி வேலைக்கும், சமரசத்துக்கும் சித்தமாய் இருந்தார். அவர் மட்டும் ஆட்சிக்குப்பதிலாக தமிழ், தமிழர் என்று பேசும் வைகோவையும் ராமதாஸையும் திருமாவளவனையும் ( இவர் இன்று காங்கிரசில் சரணாகதியாகி தன் "அடங்க மறு; அத்துமீறு; திமிறி எழு; திருப்பி அடி!" என்ற கோஷத்துக்கு புதிய பொருள்படைத்து நிற்கிறார் என்பது வேறு!) ஓரணியில் கொண்டுவர முயற்சி செய்திருந்தால்? வைகோவோ அல்லது ராமதாஸோ கருணாநிதிக்கு எதிரான தமது சொந்தப் பகையைக் கைவிட்டு "வாருங்கள் கலைஞரே! போராட்டத்தை முன்னடத்திச் செல்லுங்கள்! உமக்கு முன்னே நின்று உம்மை எதிர்ப்போருக்கு நாங்கள் முகம் கொடுக்கிறோம்!" என்று முதல் கரத்தை நீட்டி இருந்தால்? ஜெயலலிதாவோடு சேர்ந்து தமிழர் தேசியத்தை ஆதரித்தது எப்படி இருந்ததென்றால் ராஜபட்சேவுடன் இணைந்து ஈழப்போராட்டத்தை நடத்துவது போல...!

இவர்கள் யாருக்கும் நிஜத்தில் தமிழ் இனத்தின் மீதான அக்கறை இருந்திருந்தால் தமது அரசியலை மட்டும் முன்னிறுத்தி மக்களைப் பகடைக்காயாக்கி இருக்க மாட்டார்கள்.

ஈழம் என்ற ரோம் பற்றி எரிந்தபோது தமிழக அரசியல் நீரோக்கள் தேர்தல் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். தம்மை வழிநடத்தும் தலைவனின்றி திசை சிதறி, மனம் சிதறி, இலக்கு சிதறிக் கிடந்தார்கள் தமிழக இளைஞர்கள். இன்னும் நல்ல தலைமைக்கான வெற்றிடம் தமிழகத்தில் அப்படியேதான் இருக்கின்றது. வெற்றிடம் நிரப்பும் முயற்சியில் ஸ்டண்ட் நடிகர்களுக்கும் நப்பாசை!

மொழிப்போர் காலத்தில் தமிழ் இளைஞர்களுடையே இருந்த இன எழுச்சி மீண்டும் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அரும்பி இருந்த காலகட்டத்தில் அதனை வழிநடத்தும் தலைமையின்றி எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது. கருணாநிதி மட்டும் துரோகியல்ல. தமிழ், தமிழர் என்று பேசிக்கொண்டு எல்லாவற்றையும் தேர்தலுக்காக அடகுவைத்த அனைத்து தமிழக அரசியல்வாதிகளுமே துரோகிகள்தாம். அவர்கள் ஈழத்துக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை. தமிழகத் தமிழருக்கும் சேர்த்தே துரோகமிழைத்தனர். ஒரு இனத்தின் உணர்வெழுச்சி காயடிக்கப்பட்டது. அவர்கள் மிகத் தந்திரமாக ஏற்கனவே பின்னப்பட்டிருந்த பொருளாதாரத் தேடலுக்கான அன்றாடப் போராட்டம், நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய வலைகளில் சிக்கவைக்கப் பட்டிருந்தனர். அவர்க்ளைத் தேர்தல் சந்தையில் விலைமாடுகளாக்குவது எளிதான விஷயமாகவே முடிந்தது.

நாடகத்தின் இறுதிக்காட்சி நெருங்கியது. மேமாதம் பதிமூன்றாம் தேதி கடைசிக்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டு திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்டிருந்த இறுதிக்காட்சி அரங்கேற்றப்பட்டது. ஒருலட்சம் பிணங்கள் விழுந்தன. ஆறுகோடிப் பிணங்கள் அழுதன!

மேமாதம் பதினெட்டாம் தேதி விடிய விடிய அழுதுதீர்த்த உணர்வுள்ள தமிழர்கள் விடிந்ததும் அன்றைய வயிற்றுப்பாட்டுக்காய் அரக்கப்பரக்க ஓடத் தொடங்கினர்!

(கொஞ்சம் அழுகைக்குப்பின்.... தொடரும்!)

24 பேரு கிடா வெட்டுறாங்க:

Rathi சொன்னது…

சகோதரம் வாயடைத்துப்போனேன்.

Rathi சொன்னது…

எங்களுக்காய் அழ ஆறு கோடிப்பேர் இருந்தும் ஏன் அனாதைகளாய் ஆனோம் என்கிற கோபம், இயலாமை, கண்ணில் ஈரம் மட்டுமே மிஞ்சுகிறது.

ஹேமா சொன்னது…

நான் பதிவு போட்டதுமே வந்து பார்த்து அழுதுவிட்டு ஒன்றுமே சொல்லமுடியாமல் போய்விட்டேன்.அடுத்த பதிவு பார்க்கும் தைரியம் !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thodarungkal...

ஹரிஸ் சொன்னது…

கனமான பதிவு..

//ஒருலட்சம் பிணங்கள் விழுந்தன. ஆறுகோடிப் பிணங்கள் அழுதன!//

நெஞ்சை தொட்ட வரிகள்..

ஜோதிஜி சொன்னது…

இதற்குப் பெயர் தான் ஆழ்ந்த அக்கறையான புரிந்துணர்வு. ஒரு பிரபல எழுத்தாளர். தற்போது ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் தன்னுடைய வலைதளத்தில் எழுதிய வார்த்தைகள் என் மனதில் இன்னமும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எத்தனை நித்ர்சனம்.

கலைஞரை குற்றம் சாட்டிய ராமதாஸ் தன்னுடைய மகனின் மந்திரிப்பதவியை கடைசி நாள் வரைக்கும் அடைகாத்து தன்னுடைய ஈழ ஆதரவை வெற்றிகரமாக காட்டிக்கொண்டார்.

பெயரில்லா சொன்னது…

//ஒருலட்சம் பிணங்கள் விழுந்தன. ஆறுகோடிப் பிணங்கள் அழுதன!//

இன்னமும் அழுது கொண்டே இருக்கின்றோம். விடியலை நோக்கி./

பார்வையாளன் சொன்னது…

எதுவும் பேச , எழுத முடியவில்லை

shortfilmindia.com சொன்னது…

:((

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

மிகச் சிறந்த பதிவை தொடர்ந்து எழுதியிருக்கிறீர்கள் தம்பி .. உங்களுக்கு என் வந்தனங்கள்...

பெயரில்லா சொன்னது…

ஒருலட்சம் பிணங்கள் விழுந்தன. ஆறுகோடிப் பிணங்கள் அழுதன!

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

முதலில் என் வணக்கங்கள் வந்தனங்கள் இந்த தொடர் பதிவை எழுதுவதற்க்கு!! ////ஈழம் என்ற ரோம் பற்றி எரிந்தபோது தமிழக அரசியல் நீரோக்கள் தேர்தல் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். தம்மை வழிநடத்தும் தலைவனின்றி திசை சிதறி, மனம் சிதறி, இலக்கு சிதறிக் கிடந்தார்கள் தமிழக இளைஞர்கள். இன்னும் நல்ல தலைமைக்கான வெற்றிடம் தமிழகத்தில் அப்படியேதான் இருக்கின்றது.///
இம்ம் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.ஈழம் வரும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது.நல்ல பதிவு...

THOPPITHOPPI சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
THOPPITHOPPI சொன்னது…

கவிதையுடன் தொடக்கம் அருமை

//////இன்னும் நல்ல தலைமைக்கான வெற்றிடம் தமிழகத்தில் அப்படியேதான் இருக்கின்றது. வெற்றிடம் நிரப்பும் முயற்சியில் ஸ்டண்ட் நடிகர்களுக்கும் நப்பாசை!///////

டைவ் அடிக்க தெரிந்தவன்தான் அரசியல்வாதி

vanathy சொன்னது…

உங்கள் இடுகைக்கு நன்றி.விரக்தியிலும் வேதனையிலும் சில ஈழத்து உறவுகள் குறைகள் கூறலாம் ஆறு கோடிக்கும் மேலான தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்தும் எங்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்று நம்மில் சிலர் வருந்துகின்றனர் தமிழ் நாட்டு மக்கள் தமது எழுச்சியையும் ஆதரவையும் காட்டினார்கள் ஆனால் அதனை சரியான முறையில் வழி நடத்த அவர்களுக்கு சரியான தலைவர்கள் இருக்கவில்லை என்பதே உண்மை.
தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான DMK,ADMK ஆதரவு இல்லாதபோது (கடைசி நேரத்தில் தேர்தலில் வெல்வதற்காக ஜெயலலிதா ஈழம் பற்றி பேசியதும் கடலில் மூழ்கி சாக இருந்தவன் சிறு துரும்பை பற்றிக் கொண்டு கரையேற நினைத்த மாதிரி நாமும் அதை நம்பியதும் பழைய கதை.)
மக்கள் ஆதரவு இல்லாத சிறிய கட்சிகளும் அதன் தலைவர்களும் எத்தனை தான் உணர்ச்சி வசப்பட்டு பேசினாலும் பலன் ஒன்றும் இல்லை.தற்போதைய சூழ்நிலையில் அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டியது ஈழத்தமிழர்கள் ,தமிழ் நாட்டுத்தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் எல்லோருடையதும் கடமை.

-வானதி

தஞ்சாவூரான் சொன்னது…

ஒருலட்சம் பிணங்கள் விழுந்தன. ஆறுகோடிப் பிணங்கள் அழுதன!

அர. பார்த்தசாரதி சொன்னது…

நன்றி நண்பா - நல்ல பகிர்வு , அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்

ஜெயந்தி சொன்னது…

நம் கண் முன்னே சோக சரித்திரத்தை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். மூன்று இடுகைகளையும் மொத்தமாய் படித்தேன். சம காலத்தில் வாழ்ந்த அனைத்து தமிழர்களின் நெஞ்சிலும் இந்த நினைவுகள் நீங்காமல் இருக்கும்.

வானம்பாடிகள் சொன்னது…

உண்மையாய் வெட்கி நிற்பவர்களின் மனவுணர்வை பூச்சின்றி வெளிப்படுத்தியமைக்கு வந்தனம் ராஜாராமன்.

விந்தைமனிதன் சொன்னது…

இந்த இடுகையை முதலில் ஒரே பகுதியில் எழுதிவிடலாம் என்று எண்ணித் தொடங்கினேன். ஆனால் இது தன்போக்கில் வளர்ந்து செல்கிறது. இது எப்போது தன்னை நிறுத்திக் கொள்ளும் எனத் தெரியவில்லை. அடுத்த பகுதியில் முடிந்துவிட்டால் மகிழ்வேன். இதனை எழுத எனக்கு நேர்மறைத் தூண்டுதலாய் இருந்த ரதியக்காவை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறேன்.

சகோதரி ஹேமாவும், நண்பர் பார்வையாளனும் நெகிழ்ந்து பின்னூட்டம் இட்டிருக்கின்றார்கள்.

தோழி வானதி மிகத் தெளிவான நறுக்குத் தெறித்தாற்போன்ற கருத்தினை விட்டுச் சென்றுள்ளார்.

Unbiased பார்வை இருப்பதாகப் பாராட்டியிருக்கிறார் ப்ரிய ஜோதிஜி. எப்போதும் என் அருகே இருந்து என்னை நெறிப்படுத்தும் என் அண்ணன் கேஆர்பி செந்தில் அவரது பாணியில் கருத்தை உரைத்துள்ளார்.

உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இத்தொடரை வாசித்துத் தங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்திருக்கின்றனர் சகோதரி ஜெயந்தி, மதிப்பிற்குரிய வானம்பாடிகள் பாலா அய்யா, நண்பர்கள் தொப்பிதொப்பி, நந்தா ஆண்டாள்மகன், தஞ்சாவூரான், ரமேஷ்-ரொம்ப நல்லவன் சத்தியமா, ஹரிஸ், என் ப்ரிய நண்பன் பார்த்தசாரதி ஆகியோர்.

மிகச் சுருக்கமாக தன் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார் நண்பர் கேபிள்சங்கர்.

முகம்காட்டாமல் உணர்ச்சிகாட்டிச் சென்றிருக்கிறார்கள் இரண்டு நண்பர்கள்.

துக்கவீட்டின் உணர்வில் இருப்பதால் நன்றி சொல்லத் தோன்றவில்லை. என் மனம் நெகிழ்ந்த வந்தனங்கள்

ராஜ நடராஜன் சொன்னது…

சொல்ல வந்து சொல்லாமல்.....

நிலாமதி சொன்னது…

ஒரு இனத்தின் வலி இன்னமும் வடுக்களாய் உள்ளன....ஒவ்வொரு தமிழனும் பிரவாகம் எடுத்தால் தான் முடியும் .இது அணையப்போகும் நெருப்பல்ல

வானம் சொன்னது…

கிளிநொச்சி வீழ்ச்சிக்குப்பிறகான ஒவ்வொரு ஈழச்செய்தியும்,காணொளியும் கண்களில் கண்ணீரை நிரப்புகிறது. கண்ணீர் சில கணங்களுக்கு பிறகு குறைந்துவிடுகிறது எப்போதும்போல.ஆனால் கோபம் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. விடுமுறைக்கு ஊருக்குப்போனால் கரைவேட்டி கட்டிய மனிதர்களிடம், அவர் சொந்தக்காரராக இருந்தாலும் சினேகமாக சிரிக்கமுடியுமா என்று தெரியவில்லை.
இந்த ஓட்டுப்பொறுக்கிகள் தமிழர்களுக்கு தலைவர்களாக இருந்தது தலைகுனிவு என்றால் இத்தனை பேரழிவுக்குப்பின்னும் தலைவர்களாகவே தொடர்வது கேவலத்திலும் கேவலம்.

...........enthisai.......... சொன்னது…

"ஒருலட்சம் பிணங்கள் விழுந்தன. ஆறுகோடிப் பிணங்கள் அழுதன!"

Related Posts with Thumbnails