புதன், 22 டிசம்பர், 2010

பதிவர் பா.ராவும் ஒரு தோழியும்...


அடடா... பதிவு போட்டு நாளாச்சுன்னு யோசித்துக் கொண்டிருந்தபோது தோழியின் எண் செல்ஃபோன் திரையில்...

வேறொன்றுமில்லை... என் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நான் அடிக்கடி ஸ்டேட்டஸ் மெஸேஜை மாற்றிக் கொண்டிருப்பேன். நான் ரசித்தவற்றை நண்பர்களும் ரசிக்க...

இன்று பதிவர் பா.ராவின் கவிதை ஒன்றை எடுத்துப் போட்டிருந்தேன்.

கவிதை என்றவுடன் ஞாபகம் வருகிறது. தமிழகத்தில் மொத்தம் ஆறுகோடிக் கவிஞர்கள் இருக்கிறார்களாம். "பெண்ணே! உன் கண்ணில் தெறித்த மின்னலில் குருடனானேன்" என்கிற ரீதியில் 'அகநானூறு' படைத்து, "ஏ! இளைஞனே... எழுந்திரு! எதிர்காலம் உன் தோள்களுக்காய்க் காத்திருக்கிறது" (எந்த பஸ்டாப்புலன்னு தெரியல!) என்று 'புறமும்' பாடி கவிதைவடித்த களைப்பில் குப்புறடித்துத் தூங்கும் கவிஞர்களின் இம்சை இருக்கிறதே! அய்யய்யய்யய்யோ....!

இரண்டு நாள்களுக்குமுன் ஒரு 'கவிஞ' நண்பரை எதிர்பாராதவிதமாகப் பார்க்க நேரிட்டது. தன் ஊர்ப்பெயரைப்போட்டு ...........கவிஞர் என்ற அடைமொழியுடன் மிடுக்காகத் திரிவார்... பின்னே? கவிஞரில்லையா...கம்பீரம் குறையக்கூடாதாம்!!! "தம்பி! என் கவிதை ஒன்று ........ இதழில் பிரசுரமாகி இருக்கிறது... பாருங்களேன்" என்றபடி தனது தோள்பையில் கையை விட்டார். எனக்கென்னவோ பாம்பு கீரி வித்தை காட்டுபவன் பாம்பை வைத்திருக்கும் கூடைக்குள் கையை விடும் காட்சி நினைவுக்கு வந்துபோனது. ஒரு சிறுவர் இதழை எடுத்து நீட்டினார் "இதுல பாருங்க தம்பி..." என்றபடி... கவிதை என்ற வடிவத்தைக் கண்டுபிடித்த படுபாவியைச் சபித்துக் கொண்டே வாசித்தேன்... அந்தக் கொடுமையை என்ன சொல்ல...

"ஆனாவுக்கு அடுத்து ஆவன்னா
அவளுக்கு வெச்ச பேரென்னா..' என்று நீண்டது அந்தக் 'கவிதை'.

இன்னும் சில கவிஞர்கள் இருக்கிறார்கள்... "பாலைநிலத்தின் கானல்வெயிலில் ஊர்ந்துகொண்டிருக்கும் பச்சைப்பாம்பின் தடமறியத் தொடரும் பீலைகாய்ந்த விழியின்..." என்று ஆரம்பித்தால் படித்துமுடித்தபின் ஒரு ஃபுல் மக்டெவலை மடமடவெனக் கவிழ்த்த எஃபெக்ட் கிடைக்கும்.

ஆனால் பச்சைக்குழந்தை கொடுக்கும் முத்தம் மனசுக்குள் போய் 'பச்சக்' என்று ஒட்டிக்கொள்வது போன்ற கவிதைவரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் பா.ராஜாராம். பிறந்த குழந்தை விழிகள் விரிய உலகத்தை முதல்முறை பார்ப்பதுபோலவே காணும், உணரும் எல்லாவற்றையும் வியந்து, நெகிழ்ந்து அன்பு வழிய வழியச் சொட்டும் கவிதைகளை எழுதுபவர். "நல்லாருக்கீங்களா மக்கா" என்ற வார்த்தைகள் இவர் உச்சரிக்கும்போது மட்டும் தனித்த நெகிழ்வுடன் தொனிக்கும்.

இவரது கவிதைகளில் ஒன்றைத்தான் என் ஸ்டேட்டஸ் மெஸேஜில் அப்டேட் செய்திருந்தேன்...

"முதுகிற்குப் பின்புறம்
மறைகிற குழந்தைகளை
முன்னிழுத்து
"சித்தப்பாடா " என்று
கண்ணீருடன்
சிரிக்கிறார்கள் காதலிகள்"

வந்தது வினை... தோழியின் ஃபோன் வடிவத்தில்...

"அதென்ன எதுக்கெடுத்தாலும் பொம்பளைங்களைக் குறைசொல்றதே உங்களுக்குப் பொழப்பா போச்சு? ஏன் ஆம்பிளைங்க மட்டும் யோக்கியமா" என்று படபடவெனப் பொரிந்தவர் "நான் இப்போ எழுதி அனுப்புறேன்...ஒழுங்கு மரியாதையா இதையும் சேத்து உன் ஸ்டேட்டஸ் மெஸேஜ்ல போடு" என்று சற்றேறக் குறைய மிரட்டியவர் இரண்டு கவிதைகளை எழுதி அனுப்பினார். ஏற்கனவே பதிவுக்கு மேட்டர் தேடிக் கொண்டிருந்தவனுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் வந்து வாயில் விழுந்த கதையாகிப்போனது. ஸோ... பதிவாவேப் போட்டாச்சு!

1)"காதலியுடன் சாலையை
அளக்கும் போது
எதிர்ப்படும் உறவினரிடம்
தோழி என்றோ
சகோதரி என்றோ
அறிமுகப்படுத்துகிறார்கள்
கூச்சமின்றி."

2)"விரல்பிடித்து
குழந்தையுடன்
நடைபயிலும் போது
முறுவலித்து
கடந்து போகும்
காதலியை
அத்தையென அறிமுகஞ்செய்கிறார்கள்
முன்னாள் காதலர்கள்."

பின்குறிப்பு: தலைப்பு எதுவும் விவகாரமாகத் தெரிந்தால் பழிபாவம் அனைத்தும் தமிழ்ப் பத்திரிகைகளுக்கே போய்ச்சேரும். சூம்பிப் போன விஷயத்துக்கெல்லாம் சுனாமி ரேஞ்சுக்குத் தலைப்பு வைத்துப் பரபரப்பாக்கும் வித்தை கற்றுக்கொடுத்தது அவர்கள்தானே?!

21 பேரு கிடா வெட்டுறாங்க:

தமிழ் உதயம் சொன்னது…

காதலும், காதலை சார்ந்த கவிதைகளும் என்று அழகில்லாமல், அர்த்தமில்லாமல் போய் இருக்கின்றன. தோழியின் கவிதையும் நன்றாக உள்ளன.

Anbu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Anbu சொன்னது…

உங்க தோழி எழுதுன ரெண்டாவது கவிதை என்னைச் சுட்டுவதுபோலவே இருக்கு!
பதிவின் முக படத்தில் உள்ள "Believe in yourself" ன்னு மனச தேத்திக்கிறேன்.
அருமை.
நன்றி.... தோழிக்கு.

பின் குறிப்பு : உடனே போன் பண்ணி யாருன்னான்னு கேக்கபடாது

பெயரில்லா சொன்னது…

:)
nice

ஜோதிஜி சொன்னது…

ரொம்பவே ரசித்தேன். இந்த கவிதை படுத்தும் பாடுகள் சில சமயம் என்னை தாக்குது ராசா. ஹேமா போட்டிக்கு தேர்ந்தெடுத்த தலைப்பு பல முறை நினைத்துப் பார்த்த ஒன்று. ரதியார் மட்டும் இந்த கவிதை களத்தில் இறங்காமல் இருக்கும் மர்மத்தை என்ன இதில் எழுதி வைக்கப் போகிறார்கள் என்று வந்து பார்க்கின்றேன்.

இந்த முறை எழுத்து நடை சொன்ன விதம் கழுவித் துடைத்த மொசைக் தரையில் ஜாலியாக உருளும் சுகம்.

பார்வையாளன் சொன்னது…

மிகவும் ரசித்தேன்

Rathi சொன்னது…

//ரதியார் மட்டும் இந்த கவிதை களத்தில் இறங்காமல் இருக்கும் மர்மத்தை என்ன இதில் எழுதி வைக்கப் போகிறார்கள் என்று வந்து பார்க்கின்றேன்.//

நாம தான் படிச்சிட்டு நகர்ந்து போய்ட்டே இருக்கம்ல. எதுக்கு என்னைய வம்புக்கு இழுக்கிறீங்க.

வலைச்சரம் சொன்னது…

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

ஹேமா சொன்னது…

எதுக்கும் பாரா அண்ணா ஊர்ல இருந்து வரட்டும்!

ரோஸ்விக் சொன்னது…

சித்தப்பு பாராவின் கவிதை ரசனை!
ஆமா, தோழியைப் பத்திதானே இடையில் சில பத்திகளில் திட்டி எழுதியிருக்கீங்க... அப்புறம் அவங்களை சமாதானப்படுத்த அவங்க கவிதையை கீழ சும்மா சேர்த்துவிடுறது.... விந்தைமனிதனப்பா நீர்!!

அப்பாடா காலையிலே கொர்த்துவிட்டாச்சு.... :-)))

சே.குமார் சொன்னது…

சித்தப்பா பாராவின் கவிதை, தோழியின் கவிதை 2ம் ரசனை!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஆமா! யாருங்க அந்த பெண் தோழி? .. சும்மா டவுட்டு...

Rathi சொன்னது…

//ஆமா! யாருங்க அந்த பெண் தோழி? .. சும்மா டவுட்டு..//

ஒ... அப்ப தோழியின் அறிமுகத்துக்குத் தான் இந்தப்பதிவா!:)))

பா.ராஜாராம் சொன்னது…

தலைப்ப பார்த்துட்டு மிரண்டுட்டேன் மக்கா. :-)

தோழியின் இரண்டு கவிதைகளையும் பார்க்கிற போது "சரிதான் அந்த பக்கமும் 'நம்ம' கேசுகள் இருக்கிறார்கள் போல" என ஆறுதலாக இருந்தது. :-))

உங்கள் குரல் கேட்டதில் மிகுந்த சந்தோசம். நன்றி பாஸ்!

விந்தைமனிதன் சொன்னது…

பின்னூட்டமிட்ட சனங்களுக்கு வந்தனம். அடிக்கடி நம்ம ப்ளாக்ல வந்து நீங்கல்லாம் குந்தணும்.

@ரோஸ்விக் - என்ன ஓய்! நம்ம மொகலெச்சணத்துக்கு ஒத்த தோழி கெடைக்கிறதே பெரிசுன்னு சொல்றீரோ? இது வேற ஒரு தோழிங்காணும்!

@கேஆர்பி - நீங்க பாட்டுக்கு கமுக்கமா கொளுத்திப்போட்டுட்டு போயிட்டீங்க... ரதியக்கா வந்து கேப்புல கெடா வெட்றாங்க பாருங்க!

@ரதியக்கா - அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையக்கா

@பா.ராஜாராம்- சித்தப்பூ!

ஒரு விஷயம் கவனிச்சியளா?

உங்க கவிதை

"கண்ணீருடன்
சிரிக்கிறார்கள் காதலிகள்"

அப்டீன்னு முடியுது... அதாவது ஆம்பிளைங்க 'காதலி'ங்குறத மறக்குறதில்ல... எப்பவுமே அந்தக்காதல மனசுக்குள்ளதான் வெச்சிட்டு இருக்காங்க. ஆனா தோழியோட கவிதையப் பாருங்க

"அத்தையென அறிமுகஞ்செய்கிறார்கள்
முன்னால் காதலர்கள்."

'முன்னாளா'ம்!!! பதவி இறக்கம்!!! அத்தோட மறந்துடுவாங்க... பாருங்க!

ஜீ... சொன்னது…

தோழிகள் இப்படியெல்லாம் கவிதை எழுதுகிறார்களா? சூப்பர்!!! :-)

Rathi சொன்னது…

//'முன்னாளா'ம்!!! பதவி இறக்கம்!!! அத்தோட மறந்துடுவாங்க... பாருங்க//

உங்க தோழி சரியாத்தான் சொல்லியிருக்காங்க,

//"அதென்ன எதுக்கெடுத்தாலும் பொம்பளைங்களைக் குறைசொல்றதே உங்களுக்குப் பொழப்பா போச்சு?//

வாழ்க தோழி :))

இங்கே பல ஆண்களை பெண்களா "முன்னாள்" ஆக்கிறாங்க??? "எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி...." என்று அவங்களாவே "முன்னாள்" பட்டத்தை வாங்கி கட்டிக்கொள்கிறார்கள்.இந்த லட்சணத்தில் "முன்னாள்" என்பது உங்களுக்கெல்லாம் கசந்தால், toooooooooooo.. bad, sooooooooooo.... sad. :))

விந்தைமனிதன் சொன்னது…

ஆத்தீ! என்னது இது ருத்ர ஸாரி.. காளி தாண்டவம் :)))))

அட சும்மானாச்சுக்கும் சொன்னேன்ங்க்கா.

//எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி....// இது இப்போ ஓல்டு ஃபேஷன்ங்க்கா! மலர்கள் இப்பல்லாம் சகட்டுமேனிக்குப் பட்டாம்பூச்சிகளா மாறி செறகடிக்குதுங்களாம்... தர்மமிகு சென்னை :)))

Rathi சொன்னது…

எதுக்கெடுத்தாலும் பெண்கள் விடயத்தில் சிலர் சென்னை, திருப்பூர் என்று ஆரம்பித்துவிடுவது போல் தெரிகிறது. :)))

//மலர்கள் இப்பல்லாம் சகட்டுமேனிக்குப் பட்டாம்பூச்சிகளா மாறி செறகடிக்குதுங்களாம்..//

எத்தனை நாளைக்குத்தான் கூட்டுப்புழுவாய் நசுங்கிச் சாவது. மாறட்டுமே....!!! இயற்கை எப்போதுமே தன்னை சமநிலையில் தக்கவைத்துக்கொள்ளத்தான் முயற்சிக்கும், மனிதன் என்ன தகிடுதத்தம் செய்தாலும். இதுக்கு பெண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.

ஏஞ்சாமி ஒங்களுக்கு இவ்ளோ காண்டு :))))

ஆமினா சொன்னது…

நல்லா இருக்கு

கோநா சொன்னது…

பழைய காதலியையோ, காதலனையோ பார்க்கும் போது யப்பா... great escapenu ஒரு விந்தையான பீலிங் கூட வரலாம் விந்தை மனிதன்.

Related Posts with Thumbnails