திங்கள், 6 டிசம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...06/12/10


பருப்பொருள்களோட 'ஜடத்தன்மை' பத்தின நியூட்டன் விதி நம்ம எல்லாருக்கும் தெரியும். நெட்டுரு போட்டாவது படிச்சி பரிச்சை எழுதி இருப்போம். எனக்கு இந்த ஜடத்தன்மை ரொம்ப அதிகம். போட்டது போட்டபடி கெடப்பேன். திடீர்னு வெளிலருந்து வர்ற அழுத்தம் தாங்க முடியாம ஓட ஆரமிப்பேன். இந்த கட்டுரைத் தொடரை வாராவாரம் எழுதலாம்னுதான் ஆரம்பத்துல நெனச்சேன். எங்க... நாந்தான் ஜடமாச்சே! சரி... சுயபுராணம் போதும்... விஷயத்துக்கு வருவோம்.

1) ரெண்டு நாளு முன்னாடி கூகிள் பஸ்ஸுல குழலி அண்ணன் ஒரு மேட்டரைப் போட்டாரு... ஜீனியர் விகடன்ல வந்த கட்டுரை "வைமேக்ஸ் பூதம்". அப்புறம் சாட்ல புடிச்சி என்னண்ணே விஷயம்னு கேட்டா அவர் சொல்ற கதை பெரிய வயித்தெரிச்சல்ங்க. நம்ம மந்திரிங்க, ராசாங்க எல்லாம் முழு மாட்டை கொம்போட முழுங்கி இருக்காங்க. அப்பத்தான் எனக்குப் புரிஞ்சது இது 'வெறும்' ஒண்ணே முக்கா லச்சம் கோடி மேட்டர் இல்ல... அதையும் தாண்டிப் 'புனிதமானது' அப்டீன்னு. யப்பா சாமீ... இந்த அரசியல் வாதிப் பயலுங்க கட்டுற வெள்ளை உடுப்புக்குப் பின்னாடி இவ்ளோ அழுக்கு இருக்கா?!

அட்ரஸே இல்லாத கம்பெனிக்கெல்லாம் வைமேக்ஸ் டெண்டர் கொடுத்துருக்காங்க... அட்ரஸ் இல்லாத கம்பெனி யாருக்குச் சொந்தம்னு கேட்டா அங்கதான் சப்பணம் போட்டு ஒக்காந்துருக்காங்க ராசாமாருங்க. அடிக்கிறது கொள்ளைன்னு முடிவு பண்ணியாச்சு...அப்புறம் என்ன அவனுக்குப் பங்கு இவனுக்கு பங்குனு நொண்ணை மாதிரி.. நம்மளே கம்பெனிய ஆரமிப்போம்..நம்மளே டெண்டர் எடுப்போம்.. நம்மளே ராசாங்கத்த நடத்துவோம்! எதிர்க்கட்சிக்காரன் கேள்விகேட்டா அவன் வாயிலயும் ஒரு 'கட்டை'ச் சொருவு. நல்லாருக்குய்யா டெக்னிக்கு! அமைதிப்படை படத்துல ஒரு வசனம் வரும் "நம்ம கட்சிக்கு நாந்தான் தலைவரு! நீதான் பொதுச் செயலாளரு! ஒரு பயலுக்கும் ஒரு போஸ்டிங்கும் கொடுக்கப்படாது... எதுத்துக் கேள்வி கேட்டான்னா கட்டம் கட்டி உஸ்ஸு... மன்னிப்புக் கடிதம் குடுத்தான்னா இஸ்ஸு... 'உஸ்ஸு..இஸ்ஸு இதான்பா நம்ம நாட்டு அரசியலே!"

"நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு எட்டாடு கேக்குமாம்!"

2) கிட்டத்தட்ட பதினஞ்சி நாளா டெல்டா மாவட்டங்கள் பூரா அடைமழை. பொத்துகிட்டு ஊத்துது. கண்ணுக்கெட்டின தூரம் வரை வயலே தெரியல ஒரே தண்ணிக்காடா கெடக்கு. வயல்ல பணத்தையும் ஒழைப்பையும் கொட்டுனவன்லாம் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு ஒக்காந்துருக்கான். ஒருநேரம் அடைமழை... எல்லாத் தண்ணியும் கடலுக்கு சமர்ப்பணம்... இன்னொரு நேரம் சொட்டுத்தண்ணி இல்ல. எச்சிகூட ரெண்டு சொட்டுக்கு மேல ஊறாது.

ஊதாரியாத் திரியற எல்லாரும் பிச்சைக்காரனாத்தான் ஆவணும். இயற்கை கொடுக்குற மழையை எப்ப நாம சேமிச்சி வெச்சிருக்கோம்? ஒரு நாட்டுல மூணுல ஒரு பங்கு நீரும், மூணுல ஒரு பங்கு காடும் இருந்தாத்தான் அந்த நாடு சுபிட்சமா இருக்க முடியும்... ஆனா நம்ம நாட்டுல வெறுமனே மக்கள்தொகைப் பெருக்கத்தைக் காரணம்காட்டி காடுகளையும் ஏரிகளையும் அசுரன் அண்டா வாயத் தொறந்து முழுங்குற மாதிரி முழுங்கிட்டோம். மக்களோட குடியிருப்புக்கள் எல்லாத்தையும் அடுக்குமாடிக்கட்டடங்களா மாத்தி மத்த இடங்களை நீரும் காடும் நிறையச் செய்தாத்தான் இனி மனுசப்பய ஜீவிக்க முடியும்... தனித்தனி வீடுங்குறதுல்லாம் இனி சாத்தியப்படாது.

நீர்வள மேலாண்மைங்குறது எவ்ளோ முக்கியமானது... அதைச் சரியா கையாள்றப்போ எவ்ளோ பெரிய மாற்றங்கள் இருக்கும்னு கொஞ்சம் யோசிங்க... வீணாப்போற மழைத்தண்ணியெல்லாம் அங்கங்க தடுப்பணை கட்டி சேமிச்சா எப்டி இருக்கும்? ராஜஸ்தான்ல ராஜேந்தர் சிங் அப்டீங்குற மனுஷன் இதைச் சாதிச்சி காட்டி இருக்கார்... கூடுதல் தகவல் வேணுங்கிறவங்க இந்த ரெண்டு தளங்களையும் பாருங்க.

http://ramyanags.blogspot.com/2005/10/blog-post_30.html

http://www.tarunbharatsangh.org/

வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்

இது அவ்வைக் கெழவியோட பாட்டுங்க

3)  செல பேரு மூஞ்சை எத்தனை வருசமானாலும் மறக்க முடியாதுங்க... நாஞ்சொல்றது நடந்து ஒரு இருவது வருசம் இருக்கும்... எங்க வீட்டுக்குப் பக்கத்து தரிசு நெலத்துல ஒரு குரூப்பு வந்து தோல்பொம்மைக்கூத்து நடத்துனாங்க. அவங்கள அப்போ பாக்குறப்ப ரொம்ப வித்தியாசமா இருக்கும்... அதுல தலைமையா இருந்த அந்த தம்பதிகளுக்குள்ள இருந்த நெருக்கம், மத்த மனுசங்ககிட்ட அவங்க காட்டுன அன்பு, அவங்க கூடாரத்துல நான் சாப்புட்ட கருவாட்டுக் கொழம்பு... எதுவும் இன்னும் மறக்கல. எளிமையான மனுசங்ககிட்டதான் அன்பு ததும்பி இருக்கும்னு சொல்லுவாங்க... அது சத்தியமான உண்மை.

மயில்ராவணன் கதை, நல்லதங்காள் கதை எல்லாம் நான் அந்தக் கூத்துல பாத்து தெரிஞ்சிகிட்டதுதான்...கூத்து பாத்துட்டு சேக்காளிப் பசங்களோட எல்லாம் சேந்து நாங்களே மயில்ராவணனாவும் இந்திரசித்தாவும் வெளையாடுனது எல்லாம் 'பசுமை நிறைந்த நினைவுகளே'. நேத்து அந்தத் தம்பதிகளைப் பாத்தேங்க.. தோல்பொம்மையெல்லாம் இப்ப இல்லையாம். எல்லாத்தையும் ஒழிச்சிக் கட்டிட்டு கட்டடக்கூலி வேலைக்கு போறாங்க.

ரத்தமும் சதையுமா இருந்த பல கலைகளை தொலச்சிட்டு சினிமாங்குற மாயபிம்பத்துக்குப் பின்னாடி ஓடிகிட்டு தட்டையான மனுசங்களா நாம மாறி மாமாங்கம் ஆச்சுங்க. பள்ளிக்கோடத்து புள்ளைங்களைக் கூட சொந்தக் கற்பனைக்கு வழியில்லாம குட்டைப்பாவாடை கட்டி குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட உட்டு 'ஆண்டுவிழா' நடத்திட்டு இருக்கோம்... சமுதாயம் வெளங்கும்ங்கிறீங்க?

"வர வர மாமியா கழுத போலானாளாம்... கழுதையும் தேஞ்சி கட்டெறும்பு ஆனிச்சாம்"

4) எரிமலைய எச்சி துப்பி அணைக்க முடியுமா என்ன?! விடுதலைப்போராட்டங்கள் எப்பவும் அதனோட இலக்கை அடையாம முடியறதில்லீங்க... இது தெரியாம லச்ச லச்சமா மக்களைக் கொன்னுபோட்டு ஒரு போராளி இயக்கத்தை அழிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிடும்னு மெதப்புல திரிஞ்ச ராஜபக்க்ஷே லண்டன்ல இருந்து பின்னங்கால் பிடரில அடிக்க திரும்பி ஓடி இருக்காரு. புலம்பெயர் தமிழ்மக்களைக் கையெடுத்து கும்புடத் தோணுது. அதே சமயம் ஒரு ஏக்கமும் வருது. தமிழ்நாட்டு ஜனங்க எப்ப சீரியல்ல இருந்தும் டாஸ்மாக்ல இருந்தும் விடுதலை அடையப்போறாங்கன்னு... மக்களை ஒரு மாதிரி போதை அடிமையா ஆக்கி வெச்சிருக்குற நம்ம நாட்டு அரசியல் எப்போ முடிவுக்கு வரும்?

“And as we let our own light shine, we unconsciously give other people permission to do the same” - Nelson Mandela

5) சமீபத்துல ஒரு கட்டுரையில ஒரு சுவாரஸ்யமான புதிர்க்கதை படிச்சேன். பிரபஞ்சன் எழுதினது... நம்மோட பழங்கதை மரபைப் பத்தின கட்டுரை. நம்ம கிராமப்புற இலக்கியங்கள்ள நிறைய சுவாரஸ்யமான விஷயம் இருக்குங்க... நகரங்கள் மாதிரி கிராமங்கள்ல காதலர்கள் அவ்ளோ சுலுவா சந்திச்சிப் பேசிக்க முடியாது. நெறைய திட்டம் போட்டு கஷ்டப்பட்டு சாடைமாடையா பேசிவெச்சி.... பாக்கப்போறப்ப ஏதாச்சும் சின்ன எடஞ்சல் வந்து நின்னுடும். அப்புறம் மறுபடி பழைய குருடி கதவத் தொறடி கதைதான்.

இந்தக் கதையில காதலன் காதலியப் பாத்து "உன்னைத் தனியா பாக்கணும்டி... எங்க பாக்குறது எப்பிடி பாக்குறது"ன்னு கேக்குறான். அவளுக்கும் மனசு ஆசையில கெடந்து அடிச்சிக்குது ஏக்கத்துல... இறுக்கத் தழுவி அணைச்சி ஒரு முத்தம் கொடுத்துக்கிட்டா அது ரெண்டு வருசத்துக்கு தாங்குமே? ஆனா ஊரு மக்களுக்குத் தெரிஞ்சா பொழப்பு நாறிடுமே? ரெண்டு பேருமே சாடையா பேசிக்கிறாங்க... அதான் இந்தப் பாட்டு...

"ஒரு மரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன்-
“பெண்ணே உன் வீடு எங்கே?”
“பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே.”
“நான் எப்போ வரட்டும்.”
“இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த
பிறகு வந்து சேர்."

என்ன அர்த்தம்னு கொஞ்சூண்டு மூளையக் கசக்கி யோசிங்க... பாக்கிய அடுத்த வாரம் பேசிக்குவோம்.

6) கடேசியா எப்பவும்போல ஒரு கவிதை. நரன் எழுதினது:

பிரசவ வார்டு
---------------------
மருத்துவமனை பிரசவ வார்டில்
பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்
ஈனும் வலியில்
"அம்...மா" வென அலறியது
பெண் எறும்பொன்று
அதே வார்டில்
பிள்ளைப் பெற்றிருந்தவளை
பார்க்க வந்திருந்தவர்கள்
எடுத்து வந்திருந்த பாட்டிலில்
ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
சில எறும்புகள்
பிள்ளைத்தாச்சிக்கென ...
பிள்ளைத்தாச்சிக்கென .

இவரோட மத்தக் கவிதைகளையும் படிக்கணும்னா இங்க போங்க

http://narann.blogspot.com/

10 பேரு கிடா வெட்டுறாங்க:

வானம்பாடிகள் சொன்னது…

தூள்! புதிர் வேற தூக்கம் போயிடுமே:))

philosophy prabhakaran சொன்னது…

எழுத்து நடை அருமை...

ஜோதிஜி சொன்னது…

எறும்பு கவிதை இன்னும் ஒரு வாரமாவது மனதிற்குள் இருந்து கொண்டு பிறாண்டிகொண்டேயிருக்கும்.

அப்புறம் முடிந்தால் எம் ஏ தமிழ் எடுத்து கொஞ்சம் படிக்காலாமே?

வரப்பு படித்து மறந்து போய் பக்கத்து வீட்டு சாக்கடைக்குழி தான் கண்களுக்கு தெரியுது. ராசா போடு கலக்குற கலக்கல்ல கண்ணுலேர்ந்து நீர் வரது. இதற்கும் அடைமழைக்கும் சம்மந்தம் இல்லை.

காரணம் நேந்து சுடச்சுட பஜ்ஜி.

Rathi சொன்னது…

"வைமேக்ஸ் பூதம்" பற்றி படிச்சதும்,

"White collar crimes in suites are considerably higher than street crimes" என்று நான் படிச்சது ஞாபகத்துக்கு வருது.

பார்வையாளன் சொன்னது…

”என்ன அர்த்தம்னு கொஞ்சூண்டு மூளைக் கசக்கி யோசிங்க”

எங்களுக்கு இருப்பது கொஞ்சூண்டு மூளைனு நீங்களே சொல்லிட்டீங்களே..
இதை வைத்து எப்படி யோசிப்பது? நீங்களே சொல்லிடுங்க

கும்மி சொன்னது…

//"ஒரு மரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன்-//

சாமரம் வீசிப் போகிறவன். மற்ற மரங்கள் தெரியவில்லை.

//பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே.”//

ஓட்டை, கண் அல்லது மதகு என்று ஏதொவொன்று வரும்.

//இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த
பிறகு //

வார்த்தைகளுக்கான வேறு பொருளில் வரும் என்று தோன்றுகின்றது. ஆனால், ஒன்றும் தெரியவில்லை.

ஹேமா சொன்னது…

கவிதை மட்டும்தான் மனசில நிக்குது !

காமராஜ் சொன்னது…

விந்தை இவ்வளவையும் ஒரே தட்டில் வைத்தால் எப்படி ருசிப்பது.மயில்ராவணன் கருவாட்டுக்குழம்பு,அந்யோன்யம். அழகு விந்தை. அதையே பெரிய்ய போஸ்ட்டா போடுங்க அசத்தலான சிறுகதையாகிடும்.

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

//
நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு எட்டாடு கேக்குமாம்
//
:(........

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?

Related Posts with Thumbnails