வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஆலமரத்துக் கலைச்செல்வி - (கிராமத்துக் கதைகள்: 5)


நெறமாச புள்ளத்தாச்சி அடிமேல அடியெடுத்து வெச்சி நடக்குறமாரி மெல்லமா நடந்துபோற ஆறு, காத்துகிட்ட செல்லமா கதெ பேசி தலையாட்டிச் சிரிக்கிற நெல்லுகருதுங்க,  தலையத் தலைய ஆட்டிக்கிட்டு மணிச்சத்தம் எழுப்பிட்டுப் போற வண்டிமாடுங்க, வைக்கலயும் புல்லையும் தின்னுப்புட்டு சாஞ்சி படுத்துக்கிட்டே அச போடுற பசுமாடுக மாதிரி சிறுவயசு நெனப்பயெல்லாம் கண்ணுமுழி சொருவ பேசிச் சிரிச்சிக்கிட்டே பொழுதத் தள்ற கெழடுகட்டைங்க, மல்லியப்பூ வாசமும் சீட்டித்துணி தாவணியுமா கருவண்டுமாரி கண்ணை உருட்டிக்கிட்டே திரியிற கன்னிப்பொண்டுவ...

கெராமம்னாலே எல்லாருக்கும் மனசுக்குள்ளாற அழகா வந்துபோற சித்திரம் இதாங்க. ஆனா கெராமங்களுக்குள்ளாற இன்னொரு மொகமும் இருக்கு. எதுத்தாப்புல வார உருவங்கூடத் தெரியாத அளவுக்குப் பேயிற மார்கழிமாசப் பனியிலயும் தீட்டுக்காரப் பொண்டுவ வீட்டுக்கு வெளியிலதான் படுக்கணும்னு சட்டம் பேசுறதும், விழுந்த பல்லுகூட சரியா மொளைக்காத எட்டு வயசு வாண்டு நாப்பத்தஞ்சி வயசு ஆம்பளையப் பாத்து "எலேய் முனியா! இங்ஙன வாடா!"ன்னு மட்டுமருவாதி இல்லாமக் கூப்புடுற அளவு சாதிக் கோராமையும் கெராமத்துக்கு மட்டுமே சொந்தமானதுங்க.

எங்கூருல ஒதுக்குப்பொறமா இருந்திச்சி அந்த ஆலமரம். தாலியறுத்த பொம்பிளை கூந்தல விரிச்சிப்போட்டுட்டு அழுவுறமாரி அது கெளைங்களை ஆட்டி காத்துல 'ஓ'ன்னு எரைச்ச போட்டுட்டே இருக்கும். அதோட கெளையில எல்லாம் சின்னச் சின்னதா வேட்டியில கட்டித் தொங்க உட்டுருக்குற பையிங்களும் ஆடிட்டு இருக்கும். ஊருல மாடுங்க கன்னு போடுறப்ப வார நஞ்சுக்கொடிய அந்த மாரி வேட்டித் துணியில கட்டித் தொங்க உட்ருப்பாங்க. அந்த ஆலமரத்தடிதான் என்னைமாரி பொட்டுபொடுசுங்க வெளையாடுற எடம். உச்சிப்பொழுதுல ஆலமரத்தடிக்குப் போனா கலைச்செல்வி புடிச்சிக்குவான்னு சொல்லி பயமுறுத்தும் எங்க பெரியம்மா.  கலைச்செல்விக்கு சின்னப்பசங்கன்னா கொள்ள ஆசையாம். கிட்டப்போனா உடவே மாட்டாளாம். கலைச்செல்விக்கு பயந்துக்கிட்டே நாங்க ஆலமரத்தடிக்கு உச்சிவேளயில போவமாட்டோம்.

ஒருநா நா ஏம்பெரியம்மாட்ட "அதாரு பெரியம்மா கலைச்செல்வி? அவ ஏன் சின்னப்பசங்கள புடிச்சிக்கணும்? எனக்கு அவ கதெ சொல்லு"ன்னு கேட்டேன். பெரியம்மா சொன்ன கதெ ஒரு பாரதக்கதெ. ரத்தமும்  கவிச்சியும் அழுவையும் ஆத்தாமையுமான கதெ. கதய சொல்றப்பவே பெரியம்மா கண்ணுலருந்து தண்ணி தாரதாரையா ஊத்த ஆரமிச்சிச்சி:

செல்லமுத்துத் தேவரு பண்றதென்னவோ மாட்டுத்தரகு வேலதான். ஆனா ஆளப்பாத்தா ஆறடி ஒசரத்துல கருந்தேக்கு மரத்துல செதுக்குன செலமாரி இருப்பாரு. ரெண்டுபக்கமும் ரெண்டு நட்டுவக்காளிய நட்டுவெச்சமாரி திருக்கிகிட்டு இருக்குற மீசை. ஏத்திச் சீவுன தல, மேலுக்கு சட்டை போடாம எட்டுமொழவேட்டிய மட்டும் கட்டி அதுக்குமேல சிங்கப்பூரு பெல்ட்டப் போட்டு இறுக்கி இருப்பாரு. நெஞ்சில இருக்கு மசுர வெலக்கிப்பாத்தா நாலணா பெரிசுக்கு ஒரு மச்சம் இருக்கும். அந்த மச்சமும் கலைச்செல்வியுந்தான் அவரோட அதிர்ஷ்டத்துக்குக் காரணம்னு அடிக்கடி சொல்லிக்குவாரு. காலங்காத்தால எந்திரிச்சி கொல்லைக்கு போயிட்டு வந்து குளிச்சிமுழுவி வந்து துன்னூத்துப்பட்டய போட்டுக்கிட்டு வெங்கலக் கூம்பா நெறெய பழையசோத்துல எருமைத்தயிர ஒரு சொம்பு ஊத்திப் பெசஞ்சி பச்சமொளகாயும், சின்ன வெங்காயமும் கடிச்சிக்கிட்டே சாப்புட்டு முடிச்சி தரகு யாவரத்துக்குக் கெளம்புனாருன்னா பொழுது சாஞ்சி வாரப்ப கையில காசும் வாயில சாராயமுமாத்தா வந்து சேர்வாரு.

கலைச்செல்வி பாக்குறதுக்கு அபிஷேக ஆராதன பண்றதுக்கு முன்னாடி இருக்குற அம்மன் செல மாரியே இருப்பா. நல்லா கருகருன்னு காக்காப்பொன் நெறம் அவளுக்கு. கருப்புல அழகுக் கருப்பு எழவுக்கருப்புன்னு ரெண்டு வெதம் இருக்கு. இவ கருப்பு அழகுக்கருப்பு. குளிச்சிட்டு தலதொவட்டாம கூந்தல விரிச்சிபோட்டுட்டு, பாவாடைய ஏத்தி மக்குட்டு கட்டிக்கிட்டு நின்னான்னா பாக்குறவங் கண்ணெல்லாம் கடமடையில ஓடுற காவேரி கணக்கா விரிஞ்சி இருக்கும். "ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சது ஆண்டவன் கணக்கு"ன்னு ஒரு சொலவடை சொல்லுவாங்க. ஒவ்வொரு மனுசனுக்கும் ஆண்டவன் நல்லதக் குடுத்துருக்குற மாரியே கெட்டதையும் சேத்துதாங் குடுத்துருக்கான். கலைச்செல்விக்கு ஆண்டவங் குடுத்தது சாதகத்துல ஏழுல செவ்வா. கல்யாணம் பண்ணத் தோதா ஒரு மாப்புளயும் கெடைக்கல. அவ அப்பாரு ஊரெல்லாஞ்சுத்தி ஒடம்பெல்லாம் வத்தி சல்லடபோட்டு சலிச்சிப் பாத்தும் ஒரு பய சிக்கல. அவரும் சாராயங் குடிச்ச நேரம்போக மத்த நேரமெல்லாம் சாதகத்த தூக்கிச் சொமந்து வெறுத்துப்போயி "இனி இந்த சனியனுக்கு நா மாப்ள பாக்க மாட்டேன். கெடந்து அழியட்டும்"னு சொல்லிட்டு சாதகத்தயும் தூக்கி வீசிட்டாரு. ஆச்சு அந்த பொரட்டாசியோட அவளுக்கும் வயசு இருவத்தொம்போது.

கலைச்செல்வி எப்பவும் சின்ன வயசு வாண்டுப் பயலுவளோடயே வெளையாண்டு சிரிச்சிக்கிட்டு இருந்தவ மெல்லமெல்ல ஒடுங்க ஆரமிச்சா. அவளையொத்த பொண்டுவ பூரா கையில் ரெண்டு வயித்துல ஒண்ணுன்னு சொமந்துட்டு இருக்குறப்ப அவ மட்டும் வெறும் வயித்த தடவிட்டு ஏங்கி அழுதுட்டு இருப்பா. ராப்பொழுது அவளுக்கு மட்டும் தவக்களைய முழுங்கவந்த பாம்புமாரி தெம்பட ஆரமிச்சிச்சி. அணைச்சிக்க ஒரு கையும் சாஞ்சிக்க ஒரு மடியும் இல்லையே அப்டீங்குற ஏக்கத்துல அவ ஒடம்பும் எளைக்க ஆரமிச்சது. காலாகாலத்துல கல்யாணம் ஆவாத பொண்ணுவளுக்கு மனசுக்குள்ளாற எரியிற வேதன பாதின்னா ஊருல இருக்குற மக்க மனுச வார்க்குற வார்த்தயில எரியறது மீதி. அவளும் ஊரு ஒலகத்துல ஒரு சாமி உடாம வேண்டிக்கிட்டா. வெள்ளி,செவ்வா ஆனா துர்க்கையம்மங் கோயில்ல வெளக்கேத்தி வெச்சி "எனக்குன்னு பொறந்த மவராசன எங்கண்ணுல காட்டுடி தாயே"ன்னு கண்ணுகசிய வேண்டிக்குவா. அப்பிடி ஒருநா கோயில்ல வெளக்கேத்தப் போறப்பதா அவனப் பாத்தா கலைச்செல்வி.

அவம்பேரு அறிவழகன். பேருக்கேத்தமாரியே அறிவுல அழகன். பாழாப்போன சேரியிலப் பொறந்தா அவம் அவதாரமே ஆனாக்கூடத்தான் மக்கமனுசங்க மதிக்க மாட்டாங்களே? நடராசனே கெதின்னு மனசுருகுன நந்தனாரக்கூட நெருப்புல எரிச்சித்தானே நாயனார்னு சேத்துக்கிட்டாங்க? பள்ளச்சேரியில இருந்து சிம்னி வெளக்குல படிச்சி மெல்ல மெல்ல காலேசி பக்கம் எட்டிப்பாத்தவன் அறிவழகன். தாம்படிச்சது தன்னோட மக்களுக்காவணும்னு கெவுருமெண்டு வேல கெடச்சிம் போவாம சேரிப்புள்ளங்கள கூப்புட்டு வெச்சி "படிங்கடா! படிச்சாத்தாண்டா நமக்கெல்லாம் விடிவுகாலம்"னு சொல்லி படிப்புச் சொல்லிக் குடுத்துட்டு இருக்குற மவராசன்... அவந்தான் கலைச்செல்விக்கும் மவராசங்கிறது ஆண்டவங் கணக்கு.

"என்ன சின்னம்மா நல்லாருக்கீங்களா? ஏம் ஒருமாரி களப்பாவே திரியிறீங்க?"ன்னு சம்பிரதாயமா அறிவழகன் கேட்டவொடனேயே கலைச்செல்வி கண்ணுல ரெண்டு சொட்டு தண்ணி எட்டிப்பாத்திச்சி. அனுசரணையா, ஆதரவா ஒரு சொல்லு கேட்டு எவ்ளோ நாளாச்சி?
"ம்... இருக்கேன் அறிவு"ன்னு சொல்லிட்டு நவுந்தா கலைச்செல்வி. இந்தக் காதல் இருக்கே... திருட்டுப்பூனமாரி மனசுக்குள்ளாற நமக்குத் தெரியாமலயே வந்து ஒக்காந்துக்கும். திருட்டுப்பூன வாரதும் தெரியாது சொம்புல இருக்குற பாலக் குடிக்கறதும் தெரியாது. எல்லாம் முடிஞ்சப்புறம் லபோதிபோன்னு கத்திக்கூப்பாடு போட்டு என்ன பிரயோசனம்? கலைச்செல்வி மனசுல கொஞ்சநாளா அறிவழகன் வாரதும் போறதுமா இருந்தான். "நல்லாருக்கீங்களா"ன்னு கேட்ட ஒத்த வார்த்த கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரமிச்சிச்சி. அப்பப்ப பாத்துக்கிறதும் பேசிக்கிறதுமா இருந்தாங்க. இப்பல்லாம் ராத்திரில கலைச்செல்வி தனியாத் தூங்குறது இல்ல. தலவாணிய அறிவழகனா நெனச்சிக் கட்டிப்புடிச்சிக்கிட்டுதான் தூங்குறது. பேச்சுல ஆரமிச்ச காதல்ல வயசு நெருப்பப் பத்தவெக்க மாட்டுக்கொட்டாயி, வாய்க்காக்கரெ, வைக்கப்போருன்னு அப்பப்ப கட்டிக்கிட்டு பத்தி எரிய ஆரமிச்சாங்க ரெண்டுபேரும்.

மனசுபூரா காதல் நெறஞ்சி வழிஞ்சதுல நாளுகணக்க மறந்துட்டா கலைச்செல்வி. தின்ன சோறு செரிக்காம விடியகாத்தால ஒருநா வாந்தி எடுத்தப்பதா கலைச்செல்விக்கு நெஞ்சு திக்குன்னிச்சி. தலகுளிச்சி மூணுமாசம் ஆச்சி.பயத்துல மனசு கெடந்து அடிச்சாலும் ஒரு ஓரத்துல சின்ன சந்தோசம் அவளுக்கு... 'அறிவழகனோட குட்டி சீவன் இப்ப ஏம் வயித்துக்குள்ளாற'ன்னு. நெளிஞ்சி கொழஞ்சி கன்னஞ் செவக்க அறிவுகிட்ட மெல்லமா சேதியச் சொன்னா. ராப்பூரா யோசிச்சான் அறிவு.நாலாம் நாள் காலையில கலைச்செல்வி ஆசயா வளத்த பசுங்கன்னுக்குட்டி அவளக் காணாம கத்திக்கிட்டு இருந்திச்சி.பாடஞ் சொல்லிக்குடுக்குற அறிவைக் காணாம சேரிப்பசங்க நாவப்பழம் பறிக்கப் போயிட்டாங்க.ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு கணக்குப் போட்ட ஊருக்காரங்க சேதியப் புரிஞ்சிக்கிட்டாங்க.சல்லடபோட்டுச் சலிச்சாலும் காத்துல கரைஞ்ச கற்பூரம் கைக்கு மறுவடி வருமா?

நாலுமாசம் போனிச்சி. ஒருநா ஊருக்குள்ளாற ஒரே பரபரப்பு. செல்லமுத்துத் தேவரோட பங்காளி வகையறாக்காரன் ஒருத்தன் செதம்பரத்துக்கு சாமி கும்புடப் போனவன் நடராசரப் பாத்ததோட இல்லாம கடத்தெருவுல கலைச்செல்வியயும் அறிவழகனயும் பாத்துட்டான். ஊருல சாதிக்காரங்ககிட்ட தகவலச் சொல்லி மெல்லமா வலைய விரிச்சானுவோ. மீனு ரெண்டும் சிக்குனவொடனே அள்ளிப்போட்டுட்டு வந்துட்டானுவோ. வார வழியிலயே ஊரு எல்லையில அய்யனாரு கோயில் ஓரமா அறிவழனக் கட்டிப்போட்டு அடிச்சே கொன்னு போட்டானுவோ.

கலைச்செல்விய ஊட்டுக்குக்கொண்டாந்து அவ ஆயா அப்பங்கிட்ட ஒப்படச்சி "பள்ளப்பய கரு நம்ம சாதியில பொறக்கபடாது. ஒம்பொண்ண நீயே கொன்னுடுன்னு சொல்லிட்டு வெளியிலயே நின்னுக்கிட்டானுவ. கலைச்செல்வி அழுது மொறையாறி ஆறாப் பெருகுனா. கையெடுத்துக் கும்புட்டா. "அய்யா! என்ன உட்ருங்கய்யா"ன்னு அவ அப்பன், பெத்த தாயாரு, சித்தப்பம் பெரியப்பன்னு ஒவ்வொருத்தங் கால்லயும் உழுந்து கெஞ்சுனா. ஒருத்தனும் மனசு எரங்கல. அம்மாக்காரி மடியோட சேத்துவெச்சி அழுத்திப் புடிச்சிக்க அப்பங்காரன் அவ வாயத் தொறந்து பாலிடாயில ஊத்துனான். கக்குனது பாதி, உள்ள போனது பாதின்னு மறுபடியும் அழுது கெஞ்சுனா கலைச்செல்வி. "எனக்காவ இல்லன்னாலும் எங்கொழந்தைக்காவயாவது என்ன உசுரோட உட்ருங்க சாமீ"ன்னு சொல்லிக் கதறுனா. "சாதி மானத்த வாங்கிட்டியேடி சனிப் புடிச்ச முண்ட. பள்ளப்பய புள்ளயாடி ஒனக்குக் கேக்குது?"ன்னு சொல்லி அவ வயித்துல எட்டி மிதிச்சான் அவ பெரியப்பன். "அந்த அளவுக்கு .......... அரிப்பெடுத்துத் திரிஞ்சா சாதிக்காரனா பாத்துப் படுக்க வேண்டியது தானடி?"ன்னு கேட்டு தலமுடியப் புடிச்சி இழுத்து அறஞ்சான் தாய்மாமன். மருந்து மயக்கத்துலயும், அடி தாங்க முடியாமயும் கண்ணுமுழி சொருவுனிச்சி கலைச்செல்விக்கு. அப்பிடியே தரதரன்னு இழுத்துட்டுப்போயி அடுக்கி வெச்சிருக்குற கருவக்கட்டைங்கமேல படுக்கவெச்சி கொஞ்சூண்டு மண்ணெண்ணெய ஊத்திக் கொளுத்தி உட்டான் ஒண்ணு உட்ட அண்ணங்காரன். நெருப்பு சூட்டுல மயக்கந்தெளிஞ்ச கலைச்செல்வி "அண்ணே என்னக் கொன்னுடாதண்ணே"ன்னு அலற ஆரமிச்சா. அவ தலயிலயே கட்டையால ஒரு போடு போட்டான் அண்ணங்காரன். அப்பிடியே சுருண்ட உழுந்த கலைச்செல்வி முழுசா எரிஞ்சி அடங்குனா. மறுநா காலையில மிச்சம்மீதி இருந்த சாம்பல், எலும்பயெல்லாம் கொண்டுபோயி ஊருக்கு ஓரமா இருந்த ஆலமரத்தடியில குழி தோண்டிப் பொதச்சாங்க சொந்தக்காரவங்க.

அப்பயில இருந்து ஆலமரத்தடிக்கு வெளையாட வார வாண்டுப் பசங்க, துள்ளிக்கிட்டு ஓடியாற கன்னுக்குட்டிங்க எல்லாத்தையும் கலைச்செல்வி புடிச்சிக்கிறான்னு ஊருக்குள்ளாற பலமான பேச்சு அடிபட்டிச்சி.

கலைச்செல்வி செத்துப்போன ரெண்டாவது வாரம் சேரியில செல்லத்தேவரு ஊட்டுல பண்ணையம் பண்ணிக்கிட்டு இருந்த நொண்டியன் மருமவளுக்கு ஆம்பிளப்புள்ள பொறந்திச்சி. அது நெஞ்சில நாலணா பெரிசுக்கு மச்சம் இருந்திச்சி.

20 பேரு கிடா வெட்டுறாங்க:

Anbu சொன்னது…

பத்த வெச்சிட்டியே பரட்டை!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எங்கூர்லயும் இப்பிடி ஒரு வெசயம் நடந்திருக்கு... சாதிய பாகுபாட்டுல இதெல்லாம் நடக்குது.. அப்புறம் கடேசில இக்கு வச்ச மாறி வெசயங்களும் நடக்கத்தான் செய்யுது..

வானம்பாடிகள் சொன்னது…

யப்பா. அங்கன இங்கன செய்தியா படிச்சதுன்னாலும் நேருல பார்த்தாமாதிரி இருக்கு. சபாசு

நேசமித்ரன் சொன்னது…

ம்ம் நடத்து ராசா :)

ஜோதிஜி சொன்னது…

நிஜமாகவே சிலிர்த்து விட்டது ராசா.

இது போன்ற பல விசயங்கள் "கேட்ட பார்த்த புரிந்து கொண்டு" மனதிற்குள் உள்ள விசயங்கள் ஏராளம். ஆனால் நிகழ்வுகளை உன் அளவுக்கு தைரியமாக எழுதுவேனா என்பது எனக்கு சந்தேகம் தான் ராசா.

ஆச்சரியத்துடன் ?

பார்வையாளன் சொன்னது…

நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய எழுத்து

அர. பார்த்தசாரதி சொன்னது…

எல்லாம் நல்லா இருக்குடே , கதை அருமையா இருந்தாலும் , தைரியமா சாதி பேர்கள நீ எடுத்திருக்ககூடாது, சம்பந்தப்பட்ட மக்களோட அவல நிலமைய சொன்னாலும் , இது இன்னொரு எடுத்துக்காட்டா ( நீங்க எல்லாம் எங்க அடிமைகதான ) ஆயிருமோ ன்னு தான் பயம் . நல்ல படைப்பு , நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

நன்றி!

தஞ்சாவூரான் சொன்னது…

முதலுக்கு பெண்ணடிமைத்தனம். ரெண்டாவதுக்கு, ஆணாதிக்கம். எல்லா சாதிகள்லயும் இது நடந்துகிட்டுதான் இருக்கு.

ஒரு ஊர்ல ஆண்டானா இருக்குற சாதி இன்னொரு ஊர்ல அடிமயா இருக்கு.இந்த மாதிரி ரெண்டு ஊர்கள்லயும் நடக்கும். ஊருக்கு ஊர் மெஜாரிட்டியப் பாத்து யாருக்கு அவமானம்னு முடிவு பண்ணிக்க வேண்டியதுதான்...

அமெரிக்கா மாதிரி, பணத்தின் பின் பறப்போம். ஜாதிகளை மறப்போம்!!

"உழவன்" "Uzhavan" சொன்னது…

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.. சூப்பர்.

கோமாளி செல்வா சொன்னது…

//விழுந்த பல்லுகூட சரியா மொளைக்காத எட்டு வயசு வாண்டு நாப்பத்தஞ்சி வயசு ஆம்பளையப் பாத்து "எலேய் முனியா! இங்ஙன வாடா!"ன்னு மட்டுமருவாதி இல்லாமக் கூப்புடுற அளவு சாதிக் கோராமையும் கெராமத்துக்கு மட்டுமே சொந்தமானதுங்க.//

உண்மைதாங்க ., இந்த விசயங்கள் மட்டும் இல்லைனா கிராம வாழ்க்கை வாய்ப்பே இல்லை .!அவ்வளவு அருமையா இருக்கும் .. ஆனா என்ன பிரச்சினை அப்படின்னு பார்த்தா அடுத்தவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசிப் பழகின பிறகு இப்படி யாரவது மத்தவங்கள பேசும்போதே ரொம்ப கஷ்டமா இருக்கும் ..!!

கோமாளி செல்வா சொன்னது…

//கருந்தேக்கு மரத்துல செதுக்குன செலமாரி இருப்பாரு. ரெண்டுபக்கமும் ரெண்டு நட்டுவக்காளிய நட்டுவெச்சமாரி திருக்கிகிட்டு இருக்குற மீசை. ஏத்திச் சீவுன தல, மேலுக்கு சட்டை போடாம எட்டுமொழவேட்டிய மட்டும் கட்டி அதுக்குமேல சிங்கப்பூரு பெல்ட்டப் போட்டு இறுக்கி இருப்பாரு//

நீங்க சொல்லுறதே ஆள கற்பனை பண்ணுற மாதிரி இருக்கு , ரொம்ப அழகான நடை ..!!

கோமாளி செல்வா சொன்னது…

வாய்ப்பே இல்லைங்க .! கடைசி பத்தி படிக்கும் போது அந்தப் பொண்ணு என்ன விட்டுருங்க அப்படின்னு கதருனதப் பத்தி எழுதினது ஐயோ உண்மைலேயே எனக்கும் உடம்பு சிலிர்ப்பா இருந்து கண்ணுல தண்ணி வர மாதிரி இருந்துச்சு ...! இதுக்கு மேல எனக்கு எப்படி சொல்லுறது அப்படின்னு தெரியல .!!

ஹேமா சொன்னது…

கொஞ்சம் வழக்குத் தமிழ் புரிவதற்கு நேரமெடுத்தாலும் புரிந்துகொண்டேன்.இது கதையா நடந்த நிகழ்வான்னு இருக்கு.மனசுக்கு மதிப்பே இல்ல.என்ன மனுசங்க !

Rathi சொன்னது…

//கருப்புல அழகுக் கருப்பு எழவுக்கருப்புன்னு ரெண்டு வெதம் இருக்கு.//

என்ன, கருத்துருவாக்கமா? ஏன் இப்பிடி கதாசிரியரே! கதையில் நிறையவே உவமைகள் சற்றே சலிப்பை தருகிறது.

கதையில் சாதியை விட ஆண் உடைத்தால் மண்குடமா என்கிற ஒப்பீடு தான் ஞாபகத்திற்கு வருகிறது. இது போன்ற கதைகள் இன்னும் நடக்கிறதென்றால்... sorry.

பிரபு . எம் சொன்னது…

ரொம்ப அருமையான எழுத்து...
அழுத்தமான கதை...
ஆழமான பதிவு...
அருவருப்பான சமுதாயம்..

சர்வோத்தமன் சொன்னது…

எழுத்தாளர் ராஜராமன் அவர்களே....தொடருங்கள்..

பெயரில்லா சொன்னது…

ரொம்ப அருமையான எழுத்து...
அழுத்தமான கதை...
ஆழமான பதிவு...
அருவருப்பான சமுதாயம்..

பெயரில்லா சொன்னது…

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


அனைவரும் வருக !

சேக்காளி சொன்னது…

நல்லாருக்கு.

Related Posts with Thumbnails