ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி! - இறுதிப் பகுதி

அகதி வாழ்வில்
அருவருப்பொன்றும்
அவ்வளவாயிருந்ததில்லை…
வாயுள் சலங்கழித்த
சமாதானச்சிப்பாயின் மூத்திரப்போக்கியை
கடித்தெடுக்க முடியாத
இயலாமையை விட...
-சக்கரவர்த்தி

ஒரு ஈழக்கவிஞனின் இந்தக் கவிதையைத் தட்டச்சும்போது என் விரல்கள் நடுங்குகின்றன. எனக்கு முன்னே என் இனம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் பாரம் என்னை அழுத்துகிறது. கைகால் இருந்தும் முடவனாய், செவியிருந்தும் செவிடனாய், விழியிருந்தும் ஊமையாய் ஆனோமே என்ற குற்ற உணர்ச்சி ஒரு கம்பளிப்பூச்சியாய் என்மேல் ஊர்கிறது.

கிளிநொச்சி நகரம் வீழ்த்தப்பட்டது என்ற செய்தி உலகத்தமிழரின் உள்ளங்களில் இடியாக விழுந்தது. உலகம் முழுதும் வாழ்ந்திருக்கும் தமிழர்கள் கிளர்ந்தெழுந்தனர். தமிழகத்திலும் நாளொரு போராட்டமும் பொழுதொரு ஆர்ப்பாட்டமுமாய் ஒவ்வொரு விடியலும் ஆட்சியாளர்களுக்கு நெருப்பை மடியில் கட்டிக்கொண்டதைப்போல விடிந்தது. மொழிப்போர் காலத்துக்குப் பிறகு தமிழன் சுரணை பெற்ற காலகட்டமாய் 2009 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்கள் இருந்தன.

தமிழகத்தில் ஈழத்தின் கொடூரங்களை சட்டங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் சளைத்துவிடாமல் பிரச்சாரம் செய்தவர்களை இந்த சமயத்தில் நன்றியோடு நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். நான் குறிப்பிடுவது எவ்வித தேர்தல் லாபநோக்குமின்றி இன உணர்வினையும் மனித நேயத்தையும் மட்டும் நெஞ்சில் சுமந்திருந்தவர்களைப்பற்றி மட்டுமே. தீவிர இடதுசாரி இயக்கமான ம.க.இ.க மற்றும் அதன் துணை அமைப்புக்கள், பெ. மணியரசனின் தமிழ்தேசியப் பொதுவுடைமைக்கட்சி, பெரியார் திராவிடர் கழகம், அய்யா நெடுமாறன், இன்றைய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான், தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு, அவரது துணைவியாரும் கவிதாயினியும் ஆன தாமரை மற்றும் இன்னும் ஏராளமான சிறு சிறு இயக்கங்கள், இவர்களையன்றி எந்தத் தலைமையுமின்றிக் களத்தில் சுழன்ற தமிழகக் கல்லூரி மாணவர்கள் குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் இவர்களெல்லாம் ஊண் உறக்கம் மறந்து ஆற்றிய களப்பணி காலத்தின் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட வேண்டியது! கல்லூரி மாணவர்களின் அயராத உழைப்பாலும், சீமான் போன்றோரின் சீற்றம் மிகுந்த உரைகளாலுமே சிவகங்கையில் சிதம்பரமும், ஈரோட்டில் இளங்கோவனும் 'தலையால் தண்ணி குடிக்க' வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தேர்தல்வரை நாடகம் நடத்திக் கொண்டிருந்த இந்திய ஏகாதிபத்தியம் கடைசிகட்ட வாக்குப்பதிவு முடிந்ததுமே தன் முகமூடியைக் கழட்டி வீசியது. அடுத்த தேர்தலுக்குள்தான் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்களே! தனது கோரப்பற்களை விரித்து அது விழுங்கத் துவங்கியது மனிதமாண்புகளையும் மண்டை ஓடுகளையும்! எலும்புக்குவியலுக்குள் நசுங்கிச் செத்தது காந்தியத்தின் கடைசி அத்தியாயம்!

மே 18 ஆம் தேதி. பிணந்தின்னி வட இந்திய ஊடகங்கள் பிரபாகரனுடையது எனப்படும் ஓர் உடலத்தைக் காட்டி அகோரிகளைப் போலக் கூத்தாடின. பார்த்திருந்த தமிழரின் கண்ணீர் அன்று மட்டும் சிவப்பாய்ப் பொங்கியது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றதை தமிழகத் தமிழர் ஈழத்துக்குச் செய்த துரோகமாகவே சித்தரிக்க்கின்றனர். இல்லை... ஈழத்தின்மீதான தமிழக மக்களின் அனுதாபம் என்றும் 'சீஸரின் மனைவி' போல சந்தேகத்துக்கு இடமில்லாத ஒன்று. ஆனால் மக்கள் இனத்துரோகிகளுக்கு மாற்றாக ஜெயலலிதாவை நம்பத் தயாரில்லை என்பதே உண்மையானது. மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது முத்துக்குமாரின் உடல் மட்டுமல்ல; ஈழ ஆதரவுத் தமிழக அரசியல்வாதிகளின் மேலான நம்பிக்கையும்தான்.

ஈழப்படுகொலை முடிந்த மூன்றாம் நாளே பதவிக்காக அரசியல்பேரம் துவங்கியது 'தமிழினத் தலைவரின்' திமுக. அடுத்த தேர்தலுக்கு 'ஈழம்' பேசினால் போதும், அதுவரை ஓய்வு என்று கொடநாடு பயணப்பட்டார் ஜெயா. 'நீலச்சாயம் வெளுத்துப்போன' கதை தெரியாமல் கட்டுரைத்தொடர் எழுதத் தொடங்கினார் அண்ணன் திருமா. 'சுகாதாரம்' பறிபோன துக்கத்தில் முடங்கிப்போனார் தமிழர் பண்பாட்டுக்காவலர் மருத்துவர் அய்யா. உணர்வுள்ள மிச்சத் தமிழனும் நிதர்சனத்தின் வீரியம் தாங்காமல் நெடுந்தொடர்களுக்காய்க் கண்ணீர்ச் சுரப்பிகளை 'ஓவர்டைம்' செய்ய ஆரம்பித்தான். ஆக... முடிந்தது தமிழகத்தின் ஈழத்தாக்கம்...

இல்லை... முடியவில்லை. ஈழம் ஒரு எரிமலையைப்போல் எங்கள் நெஞ்சில் உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றது... மேலே பூத்திருக்கும் சாம்பல் ஊதப்பட்டு உணர்வெனும் காற்று வீசியடிக்கும் பொழுதிற்காய்க் காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த இறுதித்தீர்ப்பு நாளில் அரியணைகள் தூக்கி எறியப்படும்... மண்ணுக்குள் புதைந்திருக்கும் எம் மாவீரர்கள் மறுபடியும் உயிர்ப்பார்கள் என்ற நம்பிக்கை என் நெஞ்சில் என்றும் இருக்கின்றது. ஏனெனில் விடுதலைப்போராட்டங்கள் இறந்துபோனதாக வரலாறு என்றுமே பதிவு செய்ததில்லை.

ஈழத்தின் மக்கள் ஒன்றும் ஆனிப்பொன் கட்டிலும் அம்சதூளிகா மஞ்சமும்,அறுசுவை விருந்தும் கேட்டுப்போராடவில்லை. அவர்கள் போராடியது சுயமரியாதை கெடாத வாழ்வுக்கும், சுதந்திரமான காற்றுக்கும். அதற்காகவே இன்றுவரை அவர்கள் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் சர்வதேசங்களும் மனிதத்தின் மொழிமறந்து ஆண்டுகள் ஆயிற்று. இந்தச் செவிட்டுச் சர்வதேச நாடுகளின் செவிகள் துப்பாக்கிகளின் மொழியை மட்டுமே கேட்கப் பழகிவிட்டன. ராணுவச் சமநிலையை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தபோதுதான் சர்வதேசம் ஈழம் என்றொரு தேசம் இருப்பதை ஏறிட்டுப் பார்த்தன.

துப்பாக்கியின் மொழியைப் பேசத் தெரிந்த பிரபாகரா... எங்கே இருக்கிறாய் நீ?

களமாடி வீழ்ந்த
எம் தோழர்களே!
உம் உடலங்களைக்
கொடுங்கள்
ஒற்றைத் தீக்குச்சியாக...
நமுத்துப்போன நம்
மக்களின் நெஞ்சில்
உணர்வைத் தீமூட்ட...

(தொடர் முற்றும்... தேடல் தொடரும்)

12 பேரு கிடா வெட்டுறாங்க:

ஹேமா சொன்னது…

"உயிர்த்தெழுவான் கரிகாலன்"...கேட்பவர்களுக்கு எரிச்சல் தரும் வார்த்தைதான்.உண்மை என்று மூளை சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள அவகாசம் தேவை எங்களுக்கு.

தலைமுறைகள் மாறினாலும் இலட்சியங்களை நோக்கி நடக்க சில நம்பிக்கை தரும் வார்த்தைகளும், எண்ணங்களும் தேவைப்படுகிறது எங்களுக்கு.அதிலொன்றுதான்
"தம்பி" என்கிற வார்த்தையும்.

தாய்மொழியைக் காப்பாற்றினால் தாய்மொழி தங்களைக் காப்பாற்றும் என்பதற்கு யூத இனத்தவர்கள் ஒரு தக்க எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.சாதி,மத,கட்சி வேறுபாடுகளால் சிதறிக் காணப்படும் தமிழர்களை ஒரே கட்டுக் கோப்பான ஒற்றுமை உள்ள இனமாக மாற்றும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.

தமிழால்தான் தமிழரை முன்னேற்ற முடியும்.உலக அரங்கில் அனைத்து அறிவியல் தொழில் நுட்பப் புலங்களிலும் தமிழை முன்னிறுத்த முயற்சி பெருக வேண்டும்.தமிழைக் காப்பாற்றினால் தமிழே தமிழர்களைக் காப்பாற்றும்.

Bibiliobibuli சொன்னது…

ராஜாராமன்,

Great job. இது கூட ஓர் வரலாற்று பதிவு தான். ஆனால், திடுதிப்பென்று முடிந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

இந்தப்பதிவை படித்ததும் எனக்குப்பிடித்த ஈழத்துப்பாடகர் பொன். சுந்தரலிங்கம் பாடிய,

"என் இனமே... என் சனமே...

..........

மண்ணை என்றும் நேசிப்பவன்...

அதற்காய் மரணத்தையே சுவாசிப்பவன்...." என்கிற பாடல் ஞாபகம் வந்தது.

ஹேமா, ராஜாராமனின் பதிவு மட்டுமல்ல உங்கள் விமர்சனம் கூட அற்புதம்.

http://www.youtube.com/watch?v=iP6ZK7MhLBk&feature=related


http://www.youtube.com/watch?v=e7cAFm36JC0

எஸ்.கே சொன்னது…

அற்புதம்! அற்புதம்!

vinthaimanithan சொன்னது…

நன்றி ஹேமாவுக்கு...உங்கள் பின்னூட்டம் நீங்கள் ஒன்றிப்போனதை உணர்த்துகிறது.

ரதியக்கா... உண்மைதான். இந்தத் தொடரை நானே வலிந்து முடித்துக் கொண்டேன். உறைந்திருந்த புண்ணைக் கீறினாற்போல எழுதும்போது அந்த நினைவுகளின் அழுத்தம் என்னால் தாங்க இயலவில்லை.

சொல்லப்போனால் இந்தத் தொடர் குறைந்து இன்னும் பத்து அத்தியாயங்களாவது நீண்டிருக்க வேண்டும்... இந்தியாவின் கபடத்தனத்தின் பின்னணி, சர்வதேச ஏகாதிபத்திய அரசியல் சித்து விளையாட்டுக்களின் மைதானமாக ஈழம் இருந்தது,தமிழகத் தமிழரின் எதிர்காலச் செயல்பாடுகள், விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான கேள்விகள் என...

ஆனால் எழுதுமளவு மனப்பக்குவமும் வலிமையும் இன்னும் கைகூடவில்லை. எனவே மீண்டும் சிறிது காலத்துக்குப் பின் நிச்சயம் தொடர்வேன்

ஹரிஸ் Harish சொன்னது…

நீங்கள் முதல் பத்தியில் சொன்னதை போல குற்ற உணச்சி எனக்கும் இருக்கிறது..நான் என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை,,,

மிக நல்ல பதிவு...

ஜோதிஜி சொன்னது…

ரதியக்கா... உண்மைதான். இந்தத் தொடரை நானே வலிந்து முடித்துக் கொண்டேன்.


அக்காவும் தம்பியும் என்ன ரெண்டு பேரும் விளையாட்டு காட்டுறீங்களா?2009 ஏபரல் முதல் முதல் மே வரைக்கம் உள்ள விசயங்களே 1000 பக்கங்கள் எழுத முடியும்.

மறுபடியும் வர்றேன்.

பவள சங்கரி சொன்னது…

நல்ல பதிவுங்க....தொடருங்கள். நன்றி.

நாமக்கல் சிபி சொன்னது…

/
மே 18 ஆம் தேதி. பிணந்தின்னி வட இந்திய ஊடகங்கள் பிரபாகரனுடையது எனப்படும் ஓர் உடலத்தைக் காட்டி அகோரிகளைப் போலக் கூத்தாடின. பார்த்திருந்த தமிழரின் கண்ணீர் அன்று மட்டும் சிவப்பாய்ப் பொங்கியது./

:((

நாமக்கல் சிபி சொன்னது…

/இல்லை... முடியவில்லை. ஈழம் ஒரு எரிமலையைப்போல் எங்கள் நெஞ்சில் உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றது... மேலே பூத்திருக்கும் சாம்பல் ஊதப்பட்டு உணர்வெனும் காற்று வீசியடிக்கும் பொழுதிற்காய்க் காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த இறுதித்தீர்ப்பு நாளில் அரியணைகள் தூக்கி எறியப்படும்... மண்ணுக்குள் புதைந்திருக்கும் எம் மாவீரர்கள் மறுபடியும் உயிர்ப்பார்கள் என்ற நம்பிக்கை என் நெஞ்சில் என்றும் இருக்கின்றது. ஏனெனில் விடுதலைப்போராட்டங்கள் இறந்துபோனதாக வரலாறு என்றுமே பதிவு செய்ததில்லை./

நல்லதொரு நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள்! நன்றி

vasu balaji சொன்னது…

இது முன்னோட்டம் கூட இல்லை ராஜாராமன். தொடருங்கள்.

தமிழ்போராளி சொன்னது…

தலைவர் வருவார். அவருக்கு பின்னால் நாமும் அடுத்தகட்ட ஈழப்போருக்கு தயாராகுவோம். வென்றெடுப்போம் தமிழீழத்தை..

pichaikaaran சொன்னது…

முடித்தது தவறு

Related Posts with Thumbnails