செவ்வாய், 30 நவம்பர், 2010

ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி! - பகுதி 2

"சொல்கிறார்கள்:

'கிளியின் கூட்டைத்
திறந்துவிடு'

முரண்படுகிறேன்...

'உடைத்துவிடு'.

- காசி ஆனந்தன்

2006 இல் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப்போர் மெல்ல மெல்ல அதன் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் அது பெரியளவு சலனத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஈழத்தின் கிழக்குப்பகுதி சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்ப்ட்டு பிறகு "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில் வடக்கு மாகாணத்தின் மீதான ஆக்கிரமிப்புப்போர் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலுங்கூட தமிழகம் எவ்வித சலனங்களும் இன்றியே இருந்தது. பூநகரி வீழ்ந்த 2008 ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் ஈழத்தின் பொதுமக்கள் உயிரிழப்பு பற்றிய தகவல்கள் ஊடகங்களின் வாயிலாக தமிழக மக்களைப் பரவலாகச் சென்றடையத் தொடங்கின.

பூநகரித் தளம் வீழ்ந்தபோது நான் மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்களோ என்ற ஐயம் எனக்குள் தலைதூக்கத் துவங்கியது. ஆனால் 2000 மாவது ஆண்டில் ஆனையிறவுப் பெருந்தள முற்றுகைப்போரில் புலிகள் காட்டிய கற்பனைக்கெல்லாம் விஞ்சிய வீரம் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தது. பூநகரியில் புலிகளின் பின்வாங்கல் யுத்தோபாயத் தந்திரங்களின் பாற்பட்டது என உறுதியாக நம்பத் தொடங்கினேன். பூநகரி வீழ்ந்த மிகச்சில வாரங்களுக்குள்ளாகவே கிளிநொச்சி முற்றுகை தொடங்கியது.

மிகக் கடுமையான ராணுவ முற்றுகைக்கு மத்தியில் மேதகு பிரபாகரன் அவர்களது மாவீரர்தின உரையாற்றல் நிகழ்ந்தது. அவரது மாவீரர்தின உரையை உலகமே உற்றுநோக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான் கவனித்தவரை ஏராளமான இளைஞர்கள் அந்த வருடத்தைய மாவீரர்தின உரையை மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். நானே எனது நண்பர்கள் சுமார் 20-30 பேருக்கு பிரபாகரனது 2008 ஆம் ஆண்டு மாவீரர் உரையினை இணையதளம் மூலமாக அனுப்பி வைத்திருந்தேன்.

அந்த சமயங்களில் என் சொந்த கிராமத்தில் இருந்து தினசரி 5 தொலைபேசி அழைப்புக்களாவது எனக்கு வரும்... "டேய் மாப்ள... என்னடா ஆச்சி இன்னைக்கி? நம்மாளுவ ஏதாச்சும் அடிச்சானுவளா? எப்படியும் நம்மாளுவ செயிச்சிருவானுவள்லடா? ஒனக்கு எப்டிடா தோணுது?" அவர்கள் குரலில் ஒரு எதிர்பார்ப்பும் பரிதவிப்பும் இருக்கும். உரையாடலின் இறுதியில் நிச்சயம் ஒரு வாசகம் இருக்கும். "நீ வேணா பாரேன் மாப்ள... நம்மாளுவ லேசுப்பட்டவனுவோ இல்ல... கண்டிப்பா ஏதோ ஒரு ஐடியாவோடத்தாண்டா இருக்கானுவோ! திருப்பி அடிக்கிற அடியில சிங்களப்பயளுவோ கொழும்பு போயித்தான் எட்டிப்பாப்பானுவோ" இப்படியாக...

நம்பிக்கையின் ஆறுதலும், பரிதவிப்பின்  ஆற்றாமையுமாக நாட்கள் நகரத் தொடங்கின. பூநகரித் தளத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாளொன்றுக்கு சுமார் 18 மணி நேரங்களை நான் இணையத்திலேயே கழிக்கத் தொடங்கினேன். ஆயிற்று... புத்தாண்டின் துவக்கத்திலேயே கிளிநொச்சி வீழ்ந்தது என்ற செய்திகள் இணையத்தில் மின்னத் தொடங்கிய சில விநாடிகளிலேயே அந்த எழுத்துக்கள் மெல்ல என் விழிகளில் இருந்து மறையத் தொடங்கின... வழிந்து கொண்டிருந்த நீர்ப்படலம் என் விழிகளில் இருந்து காட்சியை மறைக்கத் தொடங்கியது. என் கிராமத்தில் இருந்து அலைபேசிய நண்பன் கதறி அழத் தொடங்கினான். என்னால் பேச இயலவில்லை. அன்று இரவு என் மனம் பல்வேறு திசைகளில் அலைபாய்ந்திருந்தது.

போரின் நேரடி பாதிப்புகள் ஏதுமற்ற எங்களுக்கே இப்படியென்றால் போரின் வலியுணர்ந்த ஈழத்தின் சகோதரர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இப்போது கற்பனை செய்து பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தீ... ஒவ்வொன்றும் புதுப்புது வெடிகுண்டாய்... மக்கள் பிணங்களாய் கொத்துக் கொத்தாய் சாயும் வலிசுமந்த செய்திகளைத் தாங்கிய தமிழகத்தின் தினசரிகளைத் தொடவே அச்சமாக இருந்தது.

ஒவ்வொரு தமிழனுக்கும் ஈழம் தொடர்பான ஆதங்கம் இருந்தது. இந்தப்போர் நின்றுவிடக் கூடாதா என்று ஒவ்வொரு வீட்டிலும் ஏக்கம் ததும்பி இருந்தது. தமிழர்களின் நெஞ்சில் இருந்த அந்த ஆதங்கமும் ஏக்கமும் மிக எளிதாய் ஒரு பெரும் போராட்டமாய், புயலாய் மாற்றப்பட்டிருக்க முடியும். ஆனால் தமிழகத்தின் காட்சி ஊடகங்களின் துரோகமும் சுயநலமும் ஈழப்போராட்டத்தின் மற்றெந்த துரோகத்தையும்விட எள்ளளவும் குறைந்ததல்ல. தினகரன் அலுவலக எரிப்பையும், அதற்கு முன் கலைஞரின் கைதையும் மணிக்கு நூறுமுறை ஒளிபரப்பி ஆதாயம் தேடிக்கொண்ட சன் டிவி ஈழம்பற்றி மறந்தும்கூட மூச்சு விட மறுத்தது. இன்றளவும் சன் டிவியின் துரோகம் அதற்கான தண்டனையை அனுபவிக்காமலேயே இருந்து வருகின்றது. சன்னின் அயல்நாட்டுப் பார்வையாளர்களில் பெரும்பான்மையான ஈழத்தமிழர்களில் எத்தனை பேர் சன் டிவியையும் அதன் சினிமாத் தயாரிப்புக்களையும் புறக்கணித்திருக்கின்றனர்? 'எந்திரனு'ம் இன்னபிற சன் வெளியீடுகளும் இலங்கையிலும் ஏனைய அயல்நாடுகளிலும் ஈழத்தமிழர்களால் ஆதரிக்கப்பட்டுத்தானே வெற்றியடைந்திருக்கின்றன? சன் மட்டுமல்ல ஜெயா, விஜய், ராஜ் உள்ளிட்ட அத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகளுமே ஈழம் தொடர்பான செய்திகளைப் புறக்கணித்தே வந்தன. சன் டிவி ஆளுங்கட்சி ஊடகம். அதன் புறக்கணிப்பு இயல்பானதே. 'ஈழத்தாய்' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜெயா டிவி ஏன் புறக்கணித்தது? நடுநிலைத் தொலைக்காட்சி எனப்பீற்றிக்கொள்ளும் விஜயும் ராஜும் ஏன் புறக்கணித்தன? ஜெயலலிதாவுக்கு ஈழத்தின் மேல் என்றும் பெரிதாய் அக்கறை ஏதும் இருந்ததில்லை. மாறாக ஒரு வெறுப்புத்தான் நிரம்பி இருந்தது. அது பார்ப்பனீயத்தின் வெறுப்பு. இதே பார்ப்பனீய உயர்சாதி வெறுப்பு பின்னாளில் வ்ட இந்திய ஊடகங்களின் மூலமாக மே மாதம் மூன்றாம் வாரத்தில் அப்பட்டமாக பல்லிளித்தது.

இதோ தனக்குள் ஒரு எரிமலையினைச் சுமந்தபடி விடிகிறது ஜனவரி 29. மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் வளாகத்தில் மிகத் தெளிவான ஒரு மரணசாசனத்தை விநியோகித்தபடி ஈழத்தின் தீயை தன்மேல் சுமந்து எரியத் தொடங்கினான் முத்துக்குமார். ஒற்றைத் தீக்குச்சிக்காய்க் காத்திருந்த தமிழக இளைஞர்கூட்டம் சட்டெனப் பற்றிக்கொள்ளத் தொடங்குகின்றது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய இளைஞர்படை பொங்கி வழியும் அணையென ததும்பிக் கொண்டிருந்தது. ஒரு செங்கல் உருவப்பட்டால் போதும். இந்திய அரசின் துரோக சாம்ராஜ்ய மாளிகை சீட்டுக்கட்டுபோல சரிந்துவிழத் தொடங்கும் வேளையில் வழக்கம்போல தமிழக அரசியல் நரிகள் ஊளையிடத் தொடங்கின.

தனது உடல் ஆயுதமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முத்துக்குமாரின் கனவுக்கும் சேர்த்தே மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த துரோகத்தைப்பற்றிய மிகத்தெளிவான கட்டுரையை இயக்குனர் ராம் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார் பாருங்கள்... முத்துக் குமாரனின் இறுதி ஊர்வலம் - எனது சாட்சியம் - இயக்குநர் ராம்.

முத்துக்குமாரின் உடலம் எரிந்துபோன எட்டாம்நாள் என் அலுவலகத்துக்கு வந்தான் பதினெட்டு வயது நிரம்பிய இளமீசை அரும்பிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். அவனது விழிகளில் இருந்தது தமிழரின் எதிர்காலம்...

(... பயணம் தொடரும்)

12 பேரு கிடா வெட்டுறாங்க:

Bibiliobibuli சொன்னது…

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சண் டிவியையும் தமிழ் திரைப்படங்களையும் வெற்றியடைய வைப்பதை சுட்டிக்காட்டிய உங்களுக்கு என் நன்றிகள். வேலைத்தளத்தில் இருப்பதால் அதிகம் எழுத நேரமில்லை. பிறகு தொடர்கிறேன்.

ஜோதிஜி சொன்னது…

ராசா ஊடகங்கள் ஏன் இந்தஇனப் போராட்டத்தை முழுமையாக வெளியே கொண்டு வரவில்லை என்பதை மற்றவர்கள் போலவே உணர்ச்சி பூர்வமான பார்வையிலும், இங்குள்ள தலைவர்களை, மற்ற ஊடகங்களை பெயர் குறிப்பிட்டும் எழுதியிருப்பது சற்று ஆச்சரியம் மற்றும் வருத்தம்.

இதுவொரு பிழையான வாதம்.

இது குறித்து என்னுடைய புத்தகத்தில் வருகின்ற சில தகவல்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு தொழில் தர்மம் உண்டு என்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது இறுதியில் லாபம் என்று ஒரு வட்டத்திற்குள் தான் வந்து நிற்கும். இது ராஜா டிவி என்றாலும் ஜோ டிவி என்றாலும் நிதர்சனம் இது தான்.

ஜோதிஜி சொன்னது…

மேலும் தொலைக்காட்சி ஊடகங்களின் பெரும்பான்மையான வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமை சார்ந்த விசயங்கள் மற்றும் சாட்டிலைட் சம்மந்தப்பட்ட உரிமங்கள், அது குறித்து இந்த இடத்தில் சொல்லப்பட முடியாத விசயங்கள் பலவற்றையும் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் ஒவ்வொரு நிறுவனமும் வெளிநாட்டு ஒலி ஒளி பரப்பு என்பது முக்கியமானது. தமிழ்நாட்டு பார்வையாளர்களைப் போலவே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் அதற்கான உரிமைகளை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்

ஜோதிஜி சொன்னது…

இது போன்ற விசயங்களில் முதன்மையாக இருப்பவர் யார் தெரியுமா? ஒருதமிழர்?

பெயர் ஆனந்த கிருஷ்ணன். மலேசியா தமிழர். ஆனால் இவரை வளர்த்து ஆளாக்கி தங்களது பினாமியாக வைத்திருப்பது சீனா. இவரைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் ஊடகங்கள் இவரை எதிர்த்துக் கொள்ள பைத்தியமா புடித்துருக்கும்?

இது தான் முக்கிய காரணம். சில விசயங்களை மேலோட்டமாகத்தான் இந்த இடத்தில் சொல்ல முடியும். காரணம் நானும் உன்னைப் போலத்தான் நம் ஊடகங்களை குற்றமாக நினைத்துக் கொண்டுருநதேன். கால்சதவிகிதம் தான் இங்குள்ள அரசியல் நிலைப்பாடு. ஈழம் தொடர்பான கடைசி இரண்டு வருடங்களில் நடந்த முக்கால் வாசி நிகழ்வுகள் சர்வதேச அரசியலில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் எப்படி விரும்பினார்களோ அப்படித்தான் கடைசி வரைக்கும் நடந்தது. இதில் ஒருஆச்சரியம் என்னவென்றால் இது அத்தனையையும் பழமாக மாற்றிக் கொண்டவர் மகிந்த ராஜபக்ஷே

அப்படியென்றால் நம் தலைகளும், தமிழர்களும், புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருந்தவர்களும் என்ன செய்தார்கள்?

ரதி ஹேமா சொல்லுங்க சொல்வார்கள்?

vinthaimanithan சொன்னது…

ஜோதிஜி, உங்கள் விளக்கம் போதுமானதாகவும், நிறைவாகவும் இல்லை. அல் ஜஸீராவுக்கும் சேனல் 4 க்கும் இல்லாத தடைகள் சன் நெட்வொர்க்குக்கு மட்டும் எங்கிருந்து முளைத்தன?

சரி விடுங்கள்! பெயரளவுக்காவது இந்த ஊடகங்கள் ஈழத்தின் அவலங்களைக் காட்சிப்படுத்தவில்லையே?

நிச்சயம் இந்த தமிழகக் காட்சி ஊடகங்களுக்காக எவ்விதத்திலும் வக்காலத்து வாங்க முடியாது என்பதே என் துணிபு.

ஜோதிஜி சொன்னது…

அடப்போங்கய்யா பதில் அடித்து முடித்த போது இங்கே எல்லாமே புட்டுக்கிட்டு போகுது

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

நண்பர் ராஜராமனுக்கும், உங்கள் பதிவிற்கு நன்றி.

காலங்கள் தோறும் பேசுவோம்., வெல்லும்வரை.

தமிழன் என்பதால் நாம் ஈழத்தை ஆதரிக்கவில்லை., அந்த ஈழம்தான் நமக்கு அதிகாரத்திற்கு அல்லாமல் வாழும் உரிமைக்காக உலகில் போராடும் இனங்களின் நியாத்தை எமக்கு புரியவைத்து மனிதனாக்கியது. ஆகவே., சக மனிதனாக போராடும் ஒரு இனத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்.


எல்லோருக்கும் பொதுவான பூமியில் ஒரு இனத்தின் வாழ்விட உரிமைகள் பறிக்கப்படும்போது எந்தவொரு கருத்துசாயமும் பூசிக்கொள்ளாத நியாமான மனிதன், பாதிக்கப்படுகிற எந்த இனத்திற்காகவும் குரல் கொடுக்க வேண்டும். அப்போது மெச்சப்படுகிற அவனுடைய குணாதிசயம்... அதுவே., அந்த பாதிப்பு அவனுடைய இனத்திற்கு என்றபோது அப்போது எழுகிற கண்ணீரை (ஊருக்கெல்லாம் அழுத அவன் கண்கள் அவனுக்காக அழுதபோது ) அதை குற்றம் என்று சோ, ஹிந்து ராம் போன்ற சாத்தான்கள் இழிவுசெய்கின்றன. நம் மேதாவி வர்க்கமும் அவர்களுக்கு ஏற்ப பொய்நடுநிலைத்தன்மை நியாயம் பேசி வழக்கம்போல் தன் இருப்பிற்கு உலகை சுரண்டுகிறது. நாமும் அரசியல் சார்போடு இருந்தால் நம்கருத்தையும் மீறி நம் வாதம் வெற்றிபெற பொய்களை நியாப்படுத்த முயன்று எதிரிகளுக்காக நாம் தோற்றுபோவோம்



உடகங்களில் எழுத்து இன்று தர்மம் இல்லை.

உண்மையில் இன்றைய பத்திரிகைகள் யாருடைய சிந்தனைகளை, வெளிப்பாடுகளை, மனக்குமுறல்களை, தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுகின்றன ?

மக்களுடையதா? நிருபர்களுடையதா?
ஆசிரியருடையதா....?

இல்லை.,


இதில் எதுவுமே இப்போதைய பெரும்பாலான பத்திரிகைகளின் அளவுகோல் இல்லை.

யதார்த்தத்தில் அவை., தனிப்பட்ட சில முதலாளிகளின்- அதாவது பணம் மட்டுமே குறிக்கோள் உடைய, அப்பத்திரிகையின் நிறுவனர் என தன்னை அடையாளப்படுத்திகொள்ளும் ஒரு வணிகரின் சொந்த விருப்பு வெறுப்புகளின்,சாதக பாதக அளவீடுகளின் லாப நஷ்ட கணக்கீடு.

ஆளும்தரப்பின் பிரச்சார துண்டறிக்கை என தன் நிலையை மாற்றிக்கொண்டு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஏற்ப அவர்களின் அடிபொடிகளாக மாறி தன் விளம்பர வருவாயை, சலுகைகளை மட்டும் பாதுகாத்து கொள்ள கடைபிடிக்கிற குறுகிய தந்திரம் மட்டுமே அவை கடைப்பிடிக்கும் பத்திரிக்கை கொள்கை.


சில ஏடுகள் மட்டுமே ஈழப்போரில் நியாத்தின் பக்கம் தன் பாதையில் வழுவாமல் நின்றன.
தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் தனிப்பட்ட முறையில் புலிகளின் செயல்பாடுகளில் கருத்து வேறுப்பட்டிருந்தாலும் ஈழப்போரில் சத்தியத்தின் பக்கம் நின்றே நம் மக்களுக்காக அழுது எழுதினார். அதுபோலவே விகடன் பக்கபலமாய் அரசைஉதறி துணை நின்றது. பலர் நக்கீரன் ஏட்டைப்போல் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் நாடகம் நடத்தினர்.


நாம் பிரிவற்று நிற்போம் நம் உறவுகளின் பக்கம்

Bibiliobibuli சொன்னது…

ஜோதிஜி முதலில் ஈழ அவலங்களை தமிழக ஊடகங்கள் தமிழக ஊடகங்கள் தமிழ்நாட்டு தமிழர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பது தான் ராஜாராமன் சொல்வது.

//தமிழ்நாட்டு பார்வையாளர்களைப் போலவே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் அதற்கான உரிமைகளை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்//

இது மெகா சீரியலுக்கும், சினிமாவுக்கும் பொருந்தும். இங்கே கேட்கப்படுவது ஏன் ஈழத்தமிழன் செத்துக்கொண்டிருக்கும் போது தமிழக ஊடகங்கள் வாழாதிருந்தன என்பது தான். அது நிச்சயம் வருத்தத்திற்குரியது.

புலம்பெயர்ந்த தமிழன் எதுவுமே செய்யாதிருந்தால் அழிவு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அத்தோடு, இனிமேல் தமிழ்நாட்டின் எந்தவொரு சினிமாவையோ அல்லது நெடுந்தொடரையோ கூட புலத்தின் எந்த தமிழனும் "வெளிநாட்டு உரிமை" வாங்கமாட்டான் அல்லது பார்க்கமாட்டான் என்று உடும்புப்பிடியாய் நின்றிருந்தால் கொஞ்சமேனும் யோசித்திருப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழன் இந்த விடயத்தில் "சூடு சொரணை" அற்ற ஜென்மங்கள். இதென்ன பிரமாதம் இன்னும் இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு எத்தனயோ மாற்றீடுகள் இருந்தும் ஏன் அந்த மாற்றீடுகளை வாங்குவதில்லை என்று கேளுங்கள் ஆயிரம் நொட்டை காரணங்கள் சொல்வார்கள். திருந்தாத ஜென்மங்கள்.

எனக்குத்தெரிந்து தமிழகத்தில் "மக்கள் தொலைக்காட்சி" தங்களால் இயன்றதை செய்தார்கள் என்பது பாராட்டுக்குரியது. சண் டிவி மலை என்றால் மக்கள் தொலைக்காட்சி மடு இல்லையா, ஜோதிஜி. ஏன் அந்த சின்ன நிறுவனங்களால் செய்ய முடிந்ததை மற்றைய முன்னணி தமிழக ஊடகங்கள் செய்யத்தவறின??

//ஜோதிஜி, உங்கள் விளக்கம் போதுமானதாகவும், நிறைவாகவும் இல்லை. அல் ஜஸீராவுக்கும் சேனல் 4 க்கும் இல்லாத தடைகள் சன் நெட்வொர்க்குக்கு மட்டும் எங்கிருந்து முளைத்தன? //

Well said.

ஹேமா சொன்னது…

மீண்டும் மீண்டும் கிளறிப் பார்ப்பது வலியாக இருந்தாலும் மனதின் வலுக்கூடுகிறது இப்படியான பதிவுகள்.படம் !

ஜோதிஜியும் ரதியும் கருத்துக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.என் மனம் சொல்லுமளவிற்கு எழுதத் தெரியவில்லை.
என்றாலும் தமிழ்நாட்டுச் சாதரண மக்களுக்கு இருக்கு உணர்வு அரசியல்வாதிகளுக்குள் இல்லை.

சில சாதாரண மக்களும் நாங்கள் ஏதோ ஆடம்பரமாக வெளிநாடுகளில் வாழ்கிறோமென்றும் சொல்கிறார்கள்.ஒருவர் சொன்ன வார்த்தை..."ஏன் பனையடியில்தானே கக்கா இருந்தீங்களே.இப்போ மொடேர்ன் டொய்லட்டில்தானே இருக்கிறீங்க" என்றார்.எங்கள் வாழ்வு இதுவா?

இலங்கை அரசால் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறோம் அவமானப்படுத்தப்படுகிறோம் என்பதை அறியாமல்.
இப்போதைய நிலைமைகூட முன்னைவிட மோசமாய் இருக்கிறதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரிய நியாயம் இல்லைத்தானே !

Bibiliobibuli சொன்னது…

ஹேமா,

ஈழம் பற்றிய வலி புரிந்துகொள்ளப்பட்டாலும், இல்லாவிட்டாலும் இனிமேல் வரலாற்றில் ஈழமும் தமிழனும் அழிந்து கொண்டிருந்த போது புலம்பெயர் தமிழன் ஏன் வாழாதிருந்தான் என்கிற வரலாற்றுபழி எங்கள் மீது சுமத்தப்பட்டுக்கொண்டே தான் இருக்கப்படப்போகிறது.

நாங்கள் விரும்பாத எந்த விடயத்துக்கும், செயலுக்கும் எப்போதுமே "பழிசுமத்த" ஒருவரை தேடுவோம் இல்லையா. ஈழம் பற்றிய நிலையில் இப்போது அதற்கு நாங்கள், புலம்பெயர் தமிழர்கள், பழிசுமத்தப்படுகிறோம், அவ்வளவுதான்.

ஈழம் பற்றிய முடிவு எங்களுக்கு வேண்டுமானால் எதிர்பாராத நிலைகுலைவையும், பாதிப்பையும் உண்டாக்கலாம். ஆனால், சர்வதேசமும் இதுதான் முடிவென்று தீர்மானம் பண்ணிய பின் தான் கள்ளமெளனம் சாத்தித்தார்கள். எங்கள் அழிவை வேடிக்கை பார்த்தார்கள். இன்னும் அதையே தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழனிடம் விடுதலை உணர்வு இருக்கும்வரை நாங்கள் தோற்கமாட்டோம். யாரோ சொன்னது போல், "விழ விழ எழுவோம்". நிச்சயம் ஒருநாள் தலை நிமிர்வோம்.

Unknown சொன்னது…

//சன் மட்டுமல்ல ஜெயா, விஜய், ராஜ் உள்ளிட்ட அத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகளுமே ஈழம் தொடர்பான செய்திகளைப் புறக்கணித்தே வந்தன.//
உண்மை தான் .. தமிழனுக்காக குரல் கொடுக்க என்ன தயக்கம்..

Unknown சொன்னது…

"சொல்கிறார்கள்:

//'கிளியின் கூட்டைத்
திறந்துவிடு'

முரண்படுகிறேன்...

'உடைத்துவிடு'.

- காசி ஆனந்தன்//

விடுதலையின் உண்மையான வேட்க்கை..
கவிஞருக்கு எங்கள் வந்தனங்கள்..

Related Posts with Thumbnails