வியாழன், 25 நவம்பர், 2010

தேவதைச்சாத்தான்கள்

"சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
........................................
........................................
........................................"

மனம் புயல்காற்றில் தெறித்து வானமெங்கும் சிதறிக்கிடக்கும் மேகத்துணுக்குகளைப்போல துண்டு துண்டாய் சிதறிக் கிடக்கின்றது. பி.சுசீலா வழிந்தோடும் துயரத்தை, தனித்திருப்பதன் வேதனையை மெல்ல கீதமிசைத்துக் கொண்டிருக்கிறார். எங்கோ தொலைத்த வாழ்வின் கணங்களைப் பரணில் இருந்து தூசுதட்டப்பட்ட பழைய புகைப்படம்போல ஏக்கத்துடன் மீட்டிக் கொண்டிருக்கிறேன். தைமாசக் காவேரிபோல மெல்லமாய் அசைந்து நகர்கிறது வாழ்க்கை.

எப்போதும் பலவண்ணம் காட்டிச் செல்லும் கலைடாஸ்கோப்பில் தெரிகின்றது வாழ்வின் தரிசனம். கறுப்பு, பழுப்பு, ரத்தச்சிவப்பென மாறிமாறிச் சுழலும் வர்ணங்களால் திருடப்பெற்றுக் கொண்டிருக்கும் விழியின் நிறமறி செல்கள்.

தொலைபேசியின் ஒலிவாங்கி வழியவிட்ட கண்ணீர் ஒரு கடலாய்ப் பெருக்கெடுத்துத் துரும்பாய் மாற்றித் தன்னுள் சுழற்றுகிறது. கண்ணீர் ருசித்து, கண்ணீர் புசிக்கும் நீர்வாழ்த் தாவரமாகிவிட ஏங்குகிற மனசு... எப்போதும் மந்தையில் இருந்து விலகிய குட்டிதானே மனம்நிறைத்துக் கொண்டிருக்கின்றது?

கதறிக் கதறி வறண்ட ஆட்டுக்குட்டியின் நாவு, துரோகத்தின் காயத்தில் இருந்து கசியும் மீதமிருக்கும் குருதியை சப்புக்கொட்டத் துவங்கும் இராப்பொழுதில் செவியைத் துளைத்துக்கொண்டு அப்போஸ்தலர்களின் போதனை....

கனவினை மீறி நீளும் கற்பனைக்கரங்கள் துழாவித் திரிகின்றன தனக்கான ப்ரியங்களை!

காட்சியைப் பறித்துப்போயின கள்சுரக்கும் கண்கள்! இலவம்பஞ்சின் மென்மை இல்லாதிருக்கும் சூன்யம் இறக்கிப் போகிறது பாறாங்கல்லை! தானே தனக்குக் கல்லறையாய், தானே தனக்கு மீளுயிர்ப்பாய், தானே தனக்கு ஆதிசேஷனாய்!

புரோமிதியஸின் நெருப்பு உள்ளமெரிக்கும் வித்தை பழகியது எப்போது? தேவதைச்சாத்தான்களின் விரல்களினின்று நீளும் நகங்களின் கூர்முனையில் கருணையும் மரணமும்...!

11 பேரு கிடா வெட்டுறாங்க:

Rathi சொன்னது…

என்னாச்சு திடீரென்று........??

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தேவா பதிவ படிக்கிற மாதிரியே இருக்கு...

ஹேமா சொன்னது…

மனதின் பாரங்கள் குறைக்கும் உங்கள் எழுத்து !

Rathi சொன்னது…

//தேவா பதிவ படிக்கிற மாதிரியே இருக்கு.//

:)))

Balaji saravana சொன்னது…

முதல் இரண்டு பின்னூட்டங்களை வழிமொழிகிறேன்...

காமராஜ் சொன்னது…

ஒரு அழகிய கவிதை எதார்த்தங்களுடன் பின்னி பின்னி. ஆஹா விந்தை ( பேரென்னய்யா) கத கதன்னு இருக்கு படிக்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தேவா பதிவ படிக்கிற மாதிரியே இருக்கு... hehe

rajasundararajan சொன்னது…

தேவதைச்சாத்தான் என்பதே துல்லியமான தரிசனம் என்று தோன்றுகிறது. தேவதை / சாத்தான் என்று பிரித்துப் பார்ப்பது அரைகுறை ஞானம் - பூவோ தலையோ ஒருமித்துக் காணாமல் நாணயத்தின் முழுமை கூடாது என்றும்.

தேவதைச்சாத்தான் நம் கருத்துக்கண் பட்ட பின் தேவதை குறித்த கூடா ஏக்கமும் சாத்தான் உடன்வரும் தவிர்க்க முடியாமையும் தெளிய, துக்கம் அறுபடல் கூடும். உங்களுக்கும் ஆகும்.

சிறந்த மொழிநடை! இன்னொருவரை இழுத்து ஒப்பிடுகிறார்கள், அப்படி இல்லை என்று கருத்தையும் கணக்கில் எடுக்கிறேன்.

THOPPITHOPPI சொன்னது…

கதறிக் கதறி வறண்ட ஆட்டுக்குட்டியின் நாவு, துரோகத்தின் காயத்தில் இருந்து கசியும் மீதமிருக்கும் குருதியை சப்புக்கொட்டத் துவங்கும் இராப்பொழுதில் செவியைத் துளைத்துக்கொண்டு அப்போஸ்தலர்களின் போதனை....
///////

வரிகள் ஒவ்வொன்றும் அருமை

ஜோதிஜி சொன்னது…

rajasundararajan said...

பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்.

எஸ்.கே சொன்னது…

அருமை! அருமை!

Related Posts with Thumbnails