சனி, 20 நவம்பர், 2010

தீச்சுமக்கும் விழிகள்


நெருப்பைச் சுமக்கும் கருப்பை
பாரதியின் தாய்க்கு மட்டுமல்ல...
முத்துக்குமாரா!
உன் தாய்க்கும்தான்.

நீ ரௌத்திரம் பழகியதில்
கருகிப்போயின
பலரது முகமூடிகள்

கொஞ்சம் விழிதிறந்து பார்!

தேசிய வரைபடத்தில்
சில கிழிசல்கள்...
ஒட்டுப்போட முயலும்
ஓட்டுக்கோமாளிகள்

காதைக் கிழிக்கும்
ஜெய்ஹிந்த் கோஷம்...
மெல்லத் தேய்கிறது
உரிமைப்போரின் கீதம்

உணர்வினை விற்று
உணவு வாங்கும் கூட்டம்...
ஓலமிடுகிறது
தமிழனின் தொன்மை.

நரிகளின் கூட்டம்
ஒரு புலியின் சவம்
பார்த்து நடுங்கின.

புலிகளின் கூட்டமோ
நரிகளின் ஒப்பாரிக்கு
மயங்கிய கொடுமை...
ஒப்பாரியாய் 'ஜனகனமண'

சொந்தச் சோதரர்கள்
துயரத்தில் சாதல்கண்டும்
அந்திக்கு பின்தொடரும்
காரிருளாய் மனம் இருண்டு
சிந்திக்கும் திறனிழந்த
'செந்தமிழ்' மாக்களை நீ
நிந்தித்தே எரிந்துபோனாய்!

இன்னும் கனிந்து கொண்டிருக்கின்றது
எம் கண்களுக்குள்
நீ மிச்சம் வைத்த தீ!
ஆகுதியாய் முளைப்பார்கள்
முத்துக்குமார்கள்
என்றென்றும்!

நவம்பர் 19 : மாவீரன் முத்துக்குமார் பிறந்ததினம்

(நெருப்பைச் சுமக்கும் கருப்பை - நன்றி வைரமுத்து)

12 பேரு கிடா வெட்டுறாங்க:

எஸ்.கே சொன்னது…

அனல் தெறிக்கும் கவிதை!
மாவீரன் முத்துக்குமார் அவர்களுக்கு வீர வணக்கம்!

காமராஜ் சொன்னது…

தமிழகத்தை உலுக்கிய பெயர்.நினைக்க வைத்த விந்தை வணக்கம்.

vasu balaji சொன்னது…

நினைவுறுத்தியமைக்கு நன்றி. முத்துக்குமாருக்கு வணக்கம்:(

Unknown சொன்னது…

நெஞ்சைச் சுட்ட வைர வரிகள்.

Bibiliobibuli சொன்னது…

வைரமுத்துவிடம் கடன் வாங்காமல் சொந்தாமாகவே எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

ஒரேயொரு முத்துக்குமார் எங்களுக்காய் எரிந்தது போதும். இனி யாரும் "ஆகுதியாய் முளைக்க" வேண்டாம்.

தமிழகம் அறிவால் எழட்டும்.

உமர் | Umar சொன்னது…

தீச்சுமக்கும் விழிகளுக்கு வீரவணக்கம்.

ஹரிஸ் Harish சொன்னது…

கரும்புலி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்..

தமிழ் உதயம் சொன்னது…

உன் வீரமும், தியாகமும் வீண் போகாது.

ஜோதிஜி சொன்னது…

வைரமுத்துவிடம் கடன் வாங்காமல் சொந்தாமாகவே எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

Unknown சொன்னது…

மாவீரன் முத்துகுமாருக்கு என் வீரவணக்கம்...

ஹேமா சொன்னது…

மாவீரர் வாரமும் வருகிறது.
இந்த மாவீரனுக்கும் ஈழம் சார்பாக வீர வணக்கம் !

THOPPITHOPPI சொன்னது…

அருமையான வரிகள்

Related Posts with Thumbnails