"போராளிகள்
செத்துக் கொண்டிருக்கும்
மண்" என்றார்கள்
என் மண்ணை.
திருத்தினேன்
"போராளிகள்
பிறந்து கொண்டிருக்கும்
மண்".
- காசி ஆனந்தன்
செத்துக் கொண்டிருக்கும்
மண்" என்றார்கள்
என் மண்ணை.
திருத்தினேன்
"போராளிகள்
பிறந்து கொண்டிருக்கும்
மண்".
- காசி ஆனந்தன்
அது 1990. நான் ஐந்தாம் வகுப்பில். அன்று மதியம் விளையாட்டுத்திடலில் விளையாடிய பொழுது... விர்ரென்ற சத்தம் காதைப்பிளந்தது. தலைக்கு மேலே ஒரு ஐம்பது அறுபது விமானங்கள் அம்புக்குறி வடிவத்தில் அணிவகுத்து வடக்குநோக்கி விரைந்துகொண்டிருந்தன. எனக்கு பயம் தாங்கவில்லை. என் நண்பன் உற்சாகமாகக் கத்தினான்
"இந்த ஏரோப்ளேன் எல்லாம் பிரபாகரன் அடிச்சி தொரத்தினவை... தோத்தாங்குளி... பயந்து ஓடிவாரானுவோ!" . என் நண்பனின் தந்தை என் பள்ளி ஆசிரியருங்கூட. அவர் வீட்டில் அன்றாடம் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அடித்துத் துவைத்துக் காயப்போடப் படும். நண்பனுக்கு கேள்விஞானத்தால் வந்த அறிவு!
"எலேய்! யார்ரா அது பிரபாகரன்? அவன் என்ன இத்தினி ப்ளேனையும் அடிச்சி வெரட்டுற அள்வுக்கு என்ன பெரிய்ய்ய சாமியா?"
என்னைப் புழுபோலப் பார்த்த நண்பன் சொன்னான்
"அய்யே! இதுகூட உனக்குத் தெரியாதா? நம்ம சினிமால எல்லாம் அர்ச்சூனு, விசியாந்து எல்லாம் டூப்பு போட்டுத்தான் எல்லாரையும் அடிப்பானுவளாம்... பிரபாகரன் நெசமாவே ஒத்தக்கையால அம்பது பேர அடிப்பானாம்... போடா போ... இதெல்லாம் தெரியாம ஸ்கூலுக்கு வந்துட்ட"
எனக்குக் கொஞ்சம் அவமானமாகவே இருந்தது.. 'சார்' இடம் போய் "யாரு சார் பிரபாகரன்? உங்க புள்ளைக்கு மட்டும் எல்லாம் சொல்லிக் கொடுக்குறீங்க? நாந்தான க்ளாசுல ஃபர்ஸ்ட்டு மார்க்கு... எனக்கும் சொல்லிக் கொடுங்க" என்றேன்.
எங்கள் சார் என் தலையில் லேசாகத் தட்டியபடிச் சிரித்தவர் சொல்ல ஆரம்பித்தார்.
ஈழமும் பிரபாகரனும் எனக்கு அறிமுகமானது அப்போதுதான்... சங்கரன் வாத்தியாருக்கு நன்றி!
நான் பிறந்தது 1980 ஆம் ஆண்டு முற்பகுதியில்... தமிழ்நாடு முழுதும் ஈழ அலை சுனாமி போல அடித்துக் கொண்டிருந்த ஆண்டுகள் அவை. காற்று வெளியெங்கும் ஈழத்தின் ஈரப்பதமே நிரம்பி இருந்தது. அதுவும் நான் பிறந்து வளர்ந்த பகுதி வேதாரண்யம்... இன்றுவரை இந்திய சரித்திரத்தில் இரண்டுமுறை முக்கிய இடம்பெற்ற ஊர்!
எங்கள் ஊர்ப் பெரியவர்கள் எல்லார் வாயிலும் தினமும் உச்சரிக்கப்படும் பெயராக பிரபாகரன் என்ற பெயர் இருந்தது. என் அப்பா அப்போது கோடியக்கரை- அகஸ்தியம்பள்ளி பகுதியில் ரயில்வேயில் வேலைபார்த்து வந்தார். அவர் சொல்லும் கதைகளையும் கூர்ந்து கேட்க ஆரம்பித்தேன்.
அப்புறம் தினத்தந்தியில் வரும் ஈழச் செய்திகளும் என் ஆர்வத்துக்குத் தீனிபோடத் தொடங்கின. அன்றையபொழுதில் தமிழக மக்களைப் பொறுத்தவரை ஈழப்போராளிகள் எல்லாருமே விடுதலைப்புலிகள்தான்... பிரபாகரன் தான்...!
கொஞ்சம் கொஞ்சமாக பிரபாகரன் பற்றிய பிம்பம் என் மனதில் வரையப்பட்டுக் கொண்டே வந்தது... அவன் மிகப்பெரிய வீரன்! அவனை யாராலும் தோற்கடிக்க முடியாது! அவனுடைய துப்பாக்கியில் இருந்து மின்னல்வேகத்தில் குண்டுகள் சீறிப்பாயும்! எப்போதும் ஒரு புயல்போலச் சுழன்றுகொண்டே இருப்பான்... இப்படியாக...!
அப்போது எங்கள் ஊரில் மகாபாரதக் கதை திரௌபதி கோயில் திருவிழாவில் பதினெட்டு நாட்கள் தொடர்ச்சியாகப் பாடப்படும்... நானும் விடிய விடியக் கதைகேட்பேன். கதைசொல்லி அபிமன்யூவைப் பற்றியும் அர்ஜூனனைப் பற்றியும் பாடும்போது நான் பிரபாகரனை உருவகம் செய்துகொள்வேன். பிரபாகரன் என்பவன் எப்படியெல்லாம் சண்டை போடுவான் என்று கற்பனை செய்துபார்ப்பது எனக்கு முக்கியப் பொழுதுபோக்கானது.
1991 மே மாதம். இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் அரங்கம் தகித்துக் கொண்டிருந்தது. பொதுவாகவே தமிழக மக்களுக்கு நேரு குடும்பத்தின் மீதான அபிமானம் அதிகம். காங்கிரஸை அடித்து விரட்டிய திராவிட அரசியல் தமிழக மக்களின் மூச்சில் கலந்திருந்தாலும், பெரியாரின் பாரம்பரியத் தொடர்ச்சியை அவர்கள் நெஞ்சில் நிறுத்தி இருந்தாலும் நேரு குடும்பத்தின் மீதான பற்றினை அவர்கள் அரசியலில் இருந்து தனித்துப் பார்க்கக் கற்றிருந்தனர்.
21.05.1991.
இந்திய மற்றும் ஈழச் சரித்திரங்களின் வரலாற்றுப் பக்கங்களில் இன்னுமோர் கறுப்பு தினமாகிப் போனது! ( அது கறுப்பு தினம்தானா என்பது மிக ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்... அதனை வேறொரு இடுகையில் பார்ப்போம்) தமிழ்நாடெங்கும் தி.மு.க காரர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். என் தெருவில் இருந்த திமுக தேர்தல் பணிமனையை அடித்து நொறுக்கித் தீவைத்த கும்பலில் பதினோரு வயதுச் சிறுவனான நானும் ஒருவன்!
மெல்ல மெல்ல ஜனங்களின் மத்தில் விடுதலைப்புலிகளைப் பற்றிய பேச்சு குறைந்தது. ஒரு அச்சம் நிலவத் தொடங்கியது. ஆனால் அவர்களின் அடியாழத்தில் ஈழம் எப்போதும் உறங்கிக்கொண்டே இருந்தது... எனக்கும்தான்!
தமிழகமேடைகளில் இடியாக முழங்கத் தொடங்கியது ஒருகுரல்! ஏதென்ஸ் தொடங்கி, இங்கர்சால், ஃப்ரான்ஸ், வாஷிங்டன் பிரகடனம் என்று உலக அரசியலையும் வரலாற்றையும் குழைத்து ஒரு காட்டாறாய் மேடைகளில் தமிழைப் பாயவிட்ட அந்தக் குரல் வைகோவினுடையது!வைகோவின் இன்றைய அரசியல் பலவாறு விமர்சிக்கப்படலாம். ஆனால் அவர் தமிழக இளைஞர்களின் நெஞ்சத்தில் மூட்டிய கனல் மிகப்பெரிது! யாராலும் மறுக்க முடியாதது.
எனக்குள்ளும், என் நண்பர்களுக்குள்ளும் ஈழத்தை மீண்டும் தட்டியெழுப்பியவர் அவர்தான்!. நாங்கள் மீண்டும் பற்றியெரியத் தொடங்கினோம். ஈழம் எங்களுக்குக் குளிரில் கதகதப்பாகவும், வெயிலில் சாரலாகவும், தாகத்தில் அமிர்தமாகவும் ஆனது.
2001 ஜூலை. கொழும்பு கட்டுநாயக விமானதளத் தாக்குதல் தமிழகப் பத்திரிகைகளிலெல்லாம் முதல்பக்கச் செய்தியானது. அன்று என் கல்லூரி நண்பர்களிடம் விடியவிடிய விடுதலைப்புலிகளைப் பற்றி கதாகாலட்சேபம் நடத்தியதே என் வேலையாகிப் போனது.
நான் மட்டுமல்ல, என்னையொத்த தமிழக இளைஞர் கூட்டம் முழுதுக்கும் விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் கனவுநாயகர்களாகவே இருந்தார்கள்.
காலம் றெக்கைகட்டிப் பறந்தது! நான்காம் ஈழப்போர் பிறந்தது!
....(பயணம் தொடரும்)
12 பேரு கிடா வெட்டுறாங்க:
படிச்சிட்டு வாறன்.
பலே! தொடருங்கள் ராஜாராமன்
//வைகோவின் இன்றைய அரசியல் பலவாறு விமர்சிக்கப்படலாம்.//
அதேதான் இன்று ஈழத்தமிழர்கள் கருத்தும். அவரது அரசியல் சார்புநிலை கடந்தும் ஈழத்தமிழர்களால் நேசிக்கப்படுபவர்.
ஈழத்துடனான தமிழக உறவின் நீட்சியை உங்கள் அனுபவத்தின் மூலம் மேலும் தெரிந்து கொள்ள ஆவலாயுள்ளேன்.தொடருங்கள்.
அருமை...
தொடருங்கள்
தொடருங்கள்! நன்றாக செல்கிறது!
தம்பி... 1984, 1985 வாக்குல நம்மூரு பள்ளிகூடத்துக்கு எல்லாம் வந்து ஈழத்த பத்தி படம் எல்லாம் காட்டியிருக்காவோ....கொடி வித்துருக்கோவ...காலண்டர் எல்லாம் ....
மதுக்கூர்ல நிறைய புலிகள் வந்து தங்கி இருந்தாவோ...!!! பள்ளிகூடத்துல பிரபாகரன் படம் போட்ட லேமினேசன் காலண்டர் வாங்கி...தெய்வத்தோட தெய்வமா வச்சிருந்தேன்...இது 1989ல....1991 வரைக்கும் எவ்வள்வோ விசய்ஙக்ள் தேங்கி கிடக்கு மனசுகுள்ள...
சின்ன பயலுவளா இருக்குமோதே .. மனசுக்குள்ள ஹீரொவா ஏறி உக்காந்துகிட்ட மவராசன்...! வேதாரண்யத்த்கு ஆளுவொளுக்கு நிறைய விசியம் தெரியும் அம்பி.....
உன் கட்டுரைய படிச்ச்சுபுட்டு.. அஞ்சாப்பு படிச்சப்ப இருந்த காலத்துக்கு மனசு பறந்து போயிடுச்சி.....
காத்துக்கிடக்கேன் தம்பி அடுத்த பாகத்துக்கு....! நம்மூரு நடை செம....!
நானும் நானும் வந்துடேன்... சீச்சிரம் அடுத்த பகுதி போடுங்க...
dheva's commands super
ஈழம் என்கிற சொல்லே வலியாகிப்போயிருக்கிறது.
என்றாலும் ஆவல் விந்தையாரே !
எப்பொழுது பின்னூட்டமிடலாமென்ற காத்திருப்பில் இங்கே.
///தமிழகமேடைகளில் இடியாக முழங்கத் தொடங்கியது ஒருகுரல்! ஏதென்ஸ் தொடங்கி, இங்கர்சால், ஃப்ரான்ஸ், வாஷிங்டன் பிரகடனம் என்று உலக அரசியலையும் வரலாற்றையும் குழைத்து ஒரு காட்டாறாய் மேடைகளில் தமிழைப் பாயவிட்ட அந்தக் குரல் வைகோவினுடையது!வைகோவின் இன்றைய அரசியல் பலவாறு விமர்சிக்கப்படலாம். ஆனால் அவர் தமிழக இளைஞர்களின் நெஞ்சத்தில் மூட்டிய கனல் மிகப்பெரிது! யாராலும் மறுக்க முடியாதது./// இதை நானும் உணர்ந்திருக்கிறேன்.1993ல் தமுக்கம் மைதானத்தில் மதிமுகாவின் முதல் தேர்தல் கூட்ட்த்தில் அடைமழையிலும் விடாமல் தொடர்ந்த வைகோவுடனான எனது பயணம் இன்றும் தொடர்கிற்து.ஒரு நல்ல தலைவரை தமிழகம் இழ்ந்து கொண்டு இருக்கிறது...
புரியாத வயதில் இது வெறும் செய்திகள்
தெரிந்து கொள்ள உருவான சமயத்தில் சொந்த வாழ்க்கைக்கான போராட்டங்கள்.
உணர்வோடு பார்க்கத் தொடங்கிய காலத்தில் திருமண நிர்ப்பந்தங்கள்.
வாழ்வின் ஏற்றத்தாழ்வில் உருண்டு புரண்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த போது புத்தகங்கள் தான் உதவியது.
எழுதிப் பார்க்கலாமே என்று இறங்கிய போது தான் நான் வாழ்ந்து வந்த வாழ்க்கையின் சுயநலமும் இந்த இனத்திற்காகவே வாழ்ந்தவர்களின் பொதுநலமும் புரிந்தது.
எது புரிந்தாலும் அறிந்தாலும் விடைகள் தேடும் கேள்விகள் மட்டும் ஆயிரமாயிரம் உண்டு.
ஆனால் எல்லா சமயத்தில் உருவான வலிகள் என்பதும் மட்டும் இன்றும் கூட மனதிற்குள் வலியை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.
கருத்துரையிடுக