திங்கள், 10 ஜனவரி, 2011

எழுதிக் கிழித்து...'இலக்கியம்' படைத்து...

நான் பாட்டுக்கு சிவனே என்று விரலுக்கு வந்ததைக் கிறுக்கிக் கொண்டு திரிந்திருந்தேன். கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து நான்கைந்து கதைகளையும் எழுதித் தொலைக்க ஆளாளுக்கு என்னைப் 'படைப்பாளி' ரேஞ்சுக்கு ஏற்றிவைக்க என்பாடு திண்டாட்டம்...! எதை எழுதத் துவங்கினாலும் இது நம்ம ரேஞ்சுக்கு(?!) சரியா வருமா என்றெல்லாம் யோசிக்கத்துவங்க அங்கேதான் சனியன் சம்மணம் போட்டு உட்காரத் தொடங்கினான். கொஞ்சநாள் இடைவேளைக்கு அப்புறம் ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால்... ம்கூம்... மலச்சிக்கல் வந்தவன் போலாகிவிட்டேன்.

தொடர்ச்சியான வாசிப்பு என்பது தரமான எழுத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பது இந்தநாட்களில் தெளிவாகவே புரிந்தது. இருப்பதை வைத்துக் கொஞ்சநாள் ஜல்லியடிக்கலாம்...நீடித்திருப்பது கடும் உழைப்பினைக் கோரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

என்னதான் எழுதலாம் என்று குழம்பிக்கொண்டே இருந்தேன். பேசாமல் ஏதாவது 'அநியாயத்தைக்' கண்டு 'பொங்கலாமா'? என்றால் வெறுமனே இண்டர்நெட்டில் உட்கார்ந்து 'பொங்க' கூச்சமாய் இருக்கிறது. கவிதை கிவிதை....? மூச்! நினைத்தாலே கைநடுங்க ஆரம்பித்து விடுகின்றது. ஆபத்துக்குப் பாவமில்லை... சுயசரிதையைக் கொஞ்சம் உல்டா செய்து கதை எழுதலாம் என்று நினைத்தால் கனவிலும் வந்து கையில் குச்சியோடு மிரட்டுகிறார் கேஆர்பி.செந்தில். என்ன கொடுமையடா இது? ஒரு தமிழ்ப் பதிவனுக்கு வந்த சோதனை???

என்ன ஆனாலும் சரி... இன்று முடிந்தவரை முக்கிப் பார்த்துவிடுவது என்று தீர்மானம்! ஆழிசூழ் உலகெலாம் நம்முடைய தமிழை மாந்தக் காத்திருக்க(?!), எழுத்து வறண்டுபோக நானென்ன ராமநாதபுர மாவட்ட ஏரிகுளமா? என்ற ரோஷம் ஊற்றெடுக்க ஒருவழியாய் உட்கார்ந்தாயிற்று!

சரி... இன்று ஏதும் 'இலக்கியம்' படைக்கவேண்டாம் பேசாமல் அரசியல் விமர்சனக் கட்டுரை எழுதி விடுவோம்! இருக்கவே இருக்கு இட்லி உப்புமா ரேஞ்சில் ஸ்பெக்ட்ரம் ஊழல்! கொஞ்சம் தேசம் பற்றிய அக்கறை... கொஞ்சம் கருணாநிதிக்குத் திட்டு, நீரா ராடியா டேப்பில் இருந்து ஒரு நாலுவரி, கனிமொழியைப் பெற்றெடுத்த ராஜாத்தியின் ஆங்கிலப்புலமை பற்றி கொஞ்சூண்டு எள்ளல்... அடடா! மணக்க மணக்க மசாலா அரசியல் விமர்சனம் ரெடி! ஆனால் ரேஷன் கடை அரிசிச் சோற்றுக் கல் போல டான்சியும், ஹர்ஷத்மேத்தாவும், போஃபர்சும் இன்னபிற 'சாதனை'களும் நினைவில் முட்டின. சரி விட்டுத் தள்ளுவோம்! சரி போகட்டும்... தி.மு.க வைத் திட்டி இறும்பூது எய்தும் நிலை நமக்கு வேண்டாம். அம்மா தி.மு.க வை விமர்சிக்கலாம் என்று பார்த்தால் எதிர்க்கட்சிகளைத் திட்டுவது ஃபேஷன் இல்லையாம்!

ஒருபுறம் பார்த்தால் கேஆர்பியார் ரொம்ப தீவிரமாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். அரசியல் நிலவரங்களை மிகவும் துயரம் சுமக்கும் வரிகளில் எழுதி 'எங்கே போகிறது இந்தியா?' என்று கேட்கும்போது எனக்கு என்னமோ தமிழ்சினிமாவின் செண்டிமெண்ட் ஊற்றுக்களான அம்மாக்கள் நினைவுக்கு வருகிறார்கள். (பண்டரிபாய் நல்ல சாய்ஸ்... இல்லையா?!) யார் கண்டது? போகிற போக்கில் நாளைபின்னே கரைவேட்டியெல்லாம் கட்டி ஃப்ளக்ஸ் போர்டுகளில் கையசைப்பார்போலத் தெரிகிறது. நானும் என் பங்குக்கு "பரவக்கோட்டை தந்த பாரிவள்ளலே! தஞ்சைத் தரணியின் நெஞ்சத்து நாயகனே" என்றெல்லாம் ரெடிமேட் ஃப்ளக்ஸ் போர்டு வாசகங்களுடன் தயாராகிவிட்டேன்.

இப்படியாக விபரீதமாக யோசித்துப் பயந்துபோனதில், தமிழ்ப் பதிவனாக இருப்பதற்குப் பேசாமல் ஊர் மளிகைக்கடையில் "புண்ணாக்கு அரைக்கிலோ... புடலங்காய் முக்காக்கிலோ" என்று பொட்டலம் கட்டப்போய்விடலாம் என்று முடிவெடுத்தபின் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது கிடைத்ததய்யா ஒரு பொக்கிஷம்!

ஆளாளுக்குப் பதிவுலகத்தில் இலக்கியம் வளர்த்தலை ஏதோ முயல் வளர்த்தல், காடைகௌதாரி வளர்த்தல் கணக்காய்ப் பேசிக் கொண்டிருக்க அலர்ஜி அதிகமாகிப்போய் கொஞ்சம் பின்னோக்கித் தேடியதில் அகப்பட்டது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

நாயக்கமன்னர்களின் காலத்தில் தொகுக்கப்பட்ட இந்த நூலிலுள்ள பாடல்கள் மிக எளிமையாய் மனதுக்குள் புகுந்து கொள்கின்றன. நிறைய கருத்துக்கள் வியப்பும் உவப்பும் அளிக்கின்றன. அதேபோல ஆணாதிக்கத்தினை வெளிப்படுத்தும் பாடல்களுக்கும் பஞ்சமில்லை.

யதார்த்த வாழ்க்கையின் நெறிகளை, நியாயங்களை நன்றாகவே உணர்த்துகின்றது விவேகசிந்தாமணி. பெரிய அளவிலான சிடுக்குப்பிடித்த சொற்கள் இல்லை. எதுகைமோனை, ஓசைநயத்துடன் செவிக்கும் சிந்தைக்கும் இனிமையாக இருக்கின்றன. ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன்... உலகத்தில் பயன் தராத ஏழு விஷயங்களைப் பட்டியலிடுகிறது ஒரு பாடல்...

நம்முடைய கஷ்டகாலத்தில் நமக்குத் துணையாய் இருக்காத பிள்ளைகள், பசித்த நேரத்தில் கிடைக்காத உணவு, தாகம் எடுத்த நேரத்தில் கிடைக்காத தண்ணீர், குடும்பத்தின் வறுமை நிலையை அறியாமல் அல்லது கவலை இல்லாமல் மனம்போன போக்கில் செலவுகளைச் செய்து வாழும் பெண்கள், தகுந்த நேரங்களில் தவிர்த்து மற்ற நேரங்களில் தனது கோபத்தை அடக்கிக் கொள்ளத் தெரியாத அரசன், தனக்கு வித்தைகற்றுத் தரும் ஆசிரியனின் அறிவுரைகளை மதித்து நடக்காத மாணவன், பாவங்களைப் போக்காத புண்ணியதீர்த்தம் இவை ஏழும் உலகத்தில் பயனற்றுப்போனவை என்கிறது இந்தப்பாடல்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.

இந்த நூலை முழுமையாகப் படிக்க : http://library.senthamil.org/344.htm

10 பேரு கிடா வெட்டுறாங்க:

Rathi சொன்னது…

அட!!!! அந்த கடைசிப்பாட்டு என் பாட்டி ஈழத்தில் இருந்தபோது அப்பப்போ படிக்க கேட்டிருக்கிறேன். இங்கே ஒருநாள் பாட்டியைப் பார்க்கும் போது கலாய்க்க வேணும்.

Anbu சொன்னது…

பொருட் பாலை விரும்புவார்கள் காமப்பால் இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்று இல்லார்
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவார்.

உலகம் இப்படித்தான் இருக்கு இன்றும்...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அரசியல்வாதியா? நானா?
யோவ் உன் லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு..

விவேக சிந்தாமணி பத்தி ஒழுங்கா எழுதுறத விட்டுட்டு என்ன கிண்டல் பண்றது ஒரு தீவிர இலக்கியவியாதியான நீங்க தமிழுக்கு செய்யுற துரோகம்...

ஹேமா சொன்னது…

செந்தில் இனி விந்தையாரை மிரட்டாதீங்க.
பாவம்.சரியாத்தானே எழுதியிருக்கார்.அந்தக் கடைசிப் பாட்டே போதும்.

ஜோதிஜி சொன்னது…

ஒவ்வொரு முறையும் நம்முடைய தமிழ் இலக்கியங்கள், அது செல்ல வேண்டிய தூரம், இன்றைய நிலைமை போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று கோர்வையாக பார்க்கும் போது சற்று வருத்தமாக இருக்கும். புறநானூறு அகநானூறு என்றால் இன்று பள்ளியில் உள்ள குழந்தைகளில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? படித்து என்ன ஆகப் போகின்றது என்ற வியாக்கியானம் வெடுக்கென்று வரும். கற்றுணர்ந்த தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர்கள் மூழ்கி முத்தெடுத்து இது போன்ற விசயங்களை சுவைபட கூறுகிறார்களோ?

இதில் ரதி ஒரு பாட்டை எடுத்துக் கொடுத்துருங்காங்க. ஆனால் அல்லல்போம் இந்த பாட்டை சீர்காழி குரலில் பலமுறை கேட்டுள்ளேன். ராசா நீ சொல்லித்தான் இந்த சீவக சிந்தாமணிக்குள் இருப்பது தெரிகின்றது.

மொத்தத்தில் எல்லாமே மறந்து போச்சு.

அப்புறம் ஏன் பெரிசா எழுதலைன்னு கேட்டதுக்கு மனக்குரங்கு நேற்று முழுக்க வேறு சில விசயங்களில் மாறிப் போக, மறுபடியும் அடம்பிடிக்க, அத்தனையும் கொட்டிக் கவிழ்த்து கடைசியில் தெகா தெளிவான சரியான எதிர்மறை விமர்சனத்தையும் கொடுத்து விட்டார்.

காமராஜ் சொன்னது…

ஸ்பெக்ட்ரம் நல்லா இருக்கு.கவிதை விவேக கவைதை
நல்ல நினைவூட்டல்.

கோநா சொன்னது…

படித்துச் சிரித்தேன், ha, ha...

கவிதை காதலன் சொன்னது…

//ஆளாளுக்குப் பதிவுலகத்தில் இலக்கியம் வளர்த்தலை ஏதோ முயல் வளர்த்தல், காடைகௌதாரி வளர்த்தல் கணக்காய்ப் பேசிக் கொண்டிருக்க //

ஹா..ஹா... ரசித்து சிரித்தேன்.....

பெயரில்லா சொன்னது…

இனியவை பொங்கட்டும்..
இனிதே துவங்கட்டும்...
பொங்கலோ! பொங்கல்!!

ஜோதிஜி சொன்னது…

ராசப்பா

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

இந்த வருடம் வழி கிடைக்க வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails